Wednesday, 19 July 2023

மாங்கனியில் சாதியப் புழுக்கள்!

மாங்கனி - 
'சீசன்' முடியும் காலம்,
நேற்று,
ஐந்து கிலோ வாங்கினேன்,
பார்க்க
அழகாய்த்தான் இருந்தது.
மினுமினுப்பைப் 
பார்த்தேனே ஒழிய
தொட்டுப் பார்க்கவில்லை.
விளைவு,
அறுக்க அறுக்க 
புழுக்கள் நெளிந்தன!

மீதி 
மூன்று கிலோவை 
திருப்பிக் கொடுத்தேன்!
"ஏங்க இப்படி?" என்றேன்!
எமக்கு மட்டும் 
எப்படித் தெரியும் என்றார்!
அவர் வியாபாரி
அப்படித்தானே பேசுவார்!
'உமக்கு மூளை எங்கே போனது?'
உள் மனது முணுமுணுத்தது.


சாதி கூட 
சிலருக்கு
அழகாய்த்தான் தெரியும்
மாங்கனி போல,
அதை அறுக்காதவரை!
குறுக்கும் நெடுக்குமாக
வகுத்துச் பார்,
அங்கே
ஓராயிரம் 
சாதியப் புழுக்கள் 
நெளிவது தெரியும்!

நெளியும் புழுக்களை 
சுமக்கும் கனிகளை
வீசத் தெரிந்த நீ,
சாதியப் புழுக்களைக்
காக்கும் மாங்கனியை 
என்ன செய்யப்......?
சீசன் முடியப் போகிறது 
விரைந்து முடிவெடு 
இல்லையேல் 
நீயும்
நெளிவாய்
புழுவாய்!

ஊரான்

Saturday, 15 July 2023

பெருந்தலைவர் காமராசர் ஏன் நினைவு கூறப்பட வேண்டும்?

சங்க காலம், சனாதன காலம் தொடங்கி அதன் பிறகு மன்னர் ஆட்சி, அந்நியர் ஆட்சி எனத் தொடர்ந்து, இன்றைய மக்களாட்சிக் காலகட்டம் வரை பல்வேறு புலவர்களையும், மன்னர்களையும், தலைவர்களையும் நாம் நினைவு கூர்ந்து வருகிறோம். அவ்வாறு நாம் நினைவு கூறும் போது, அவர்களுடைய நேர்மறை மற்றும் எதிர்மறை உள்ளிட்ட இரண்டு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இன்றைய காலகட்டத்திற்கு எது தேவையோ அதை மக்களிடையே உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை நினைவு கூர்வதில் ஏதேனும் பொருள் இருக்க முடியும்.

மாறாக, தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்குதல் என்கிற அளவுக்கு மட்டும் நிறுத்திக் கொண்டால் அவர்களுடைய கருத்துக்கள் எதுவும் மக்களிடையே போய்ச் சேராது; மாறாக அது ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாகவே கடந்து போகும்.

*****
அனைத்து மதத்தினர், அனைத்துச் சாதியினர், அனைத்துக் கட்சியினராலும் பெருந்தலைவர் என்று போற்றப்படும் முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சர் திரு.கு.காமராசர் அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் எங்கும் பல்வேறு கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்ததோடு, இந்திய அரசியலை நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஆளுமையாக காமராசர் அவர்கள் இருந்ததனால் அவரை காங்கிரஸ் கட்சியினர் கூடுதல் மரியாதையோடு நினைவு கூறுகின்றனர். 

கடந்த 30 ஆண்டுகளாக, தமிழகத்தில் சாதிய அரசியல் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிய பிறகு அனைவருக்குமான தலைவர்கள் எல்லாம் தங்களுடைய சாதிக்கான தலைவர்களாக சுருக்கப்பட்டு வருகின்றனர். அப்படித்தான் காமராசரையும் நாடாராக சுருக்கி விட்டார்கள். இதை சாதிய அரசியலின் உச்சம் என்றுகூட சொல்லலாம். 

*****
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசாபேட்டை பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழா நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இசைச்செல்வர் சீனி சம்பத் அவர்களின் பாடல்களோடு தொடங்கிய நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு. முனிரத்தினம் அவர்கள் வந்த பிறகு, அவரும் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் அவர்களும் சிறிது நேரம் உரையாற்ற, அதன் பிறகு பள்ளி சிறுவர்களுக்கு நோட்டு பேனா வழங்கி, அன்னதானம் வழங்கி நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மட்டும் காமராசரின் சாதனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உள்ளிட்ட சனாதன சக்திகள் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய அரசியல் சூழலில், காமராசரைக் கொண்டு சனாதன சக்திகளை சம்மட்டியால் அடிக்கும் வகையில் காமராசரின் நேர்மறை கருத்துக்களை மக்களிடையே பதிவு செய்யும் போதுதான் அது காமராசருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்.





மூணு கதர் வேட்டிச் சட்டைகள் மற்றும் 150 ரூபாய் சொச்சப் பணம்; இதுதான் காமராசர் இறந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்து. காசு பணம் என்று கோடிகளில் புரளும் இன்றைய அரசியல்வாதிகளை ஒப்பிடுகையில் காமராசர் உண்மையிலேயே ஒரு ஏழைப் பங்காளன்தான்; மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பெரும் தொழிலதிபராக இருப்பவர்களை வாழும் காமராசர் என்று வாய்கூசாமல் மேடையில் புகழும்போது அது காமராசரையே இழிவுபடுத்துவதாக அமைந்துவிடுகிறது. 

*****
மகாரத்தனா ஆலைகளில் ஒன்றான BHEL பாய்லர் ஆலை காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் திருச்சியில் தொடங்கப்பட்டது. தவிர, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் (NLC), சென்னை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஊட்டியில் இந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் ஆலை என அரசுத் துறை ஆலைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட எண்ணற்ற தமிழ் நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்தது.

1917 லெனின் தலைமையில் ரஷ்ய நாட்டில் ஏற்பட்ட சோஷலிச புரட்சி, அதைத் தொடர்ந்து லெனின் ஆட்சிக் காலத்திலும், ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலும் ஏற்படுத்தப்பட்ட பொதுத்துறைகளினால் அபார வளர்ச்சி கண்ட ருசிய நாட்டின் கொள்கைகளைத்தான் இந்தியாவிலே நேருவும் கடைபிடித்தார். அதன் தாக்கத்தினால்தான் இந்தியாவில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டன.

12 மகாரத்னா, 12 நவரத்னா, 12 மினிரத்னா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டு மிக வெற்றிகரமாக செயல்பட்டு வந்தன. உலகமயம் தாராளமயம் தனியார் மையம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் 1990 களின் தொடக்கத்தில் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கிய காலம் தொட்டு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்கிற நடைமுறை அமுலுக்கு வந்தது. 

ஆலைகளை நடத்துவது, அதாவது தொழில் செய்வது ஆட்சியாளர்களின் வேலை அல்ல; ஆட்சியை நடத்துவது அதாவது நிர்வாகம் செய்வது மட்டுமே ஆட்சியாளர்களின் வேலை என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட சனாதனக் கும்பல் ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு, வாஜ்பாய் காலத்திலும் அதைத் தொடர்ந்து மோடி காலத்திலும் பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாகத் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன அல்லது மூடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்று வந்த எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொண்டு விட்டது பாஜக அரசு. இப்பொழுது எஞ்சி இருப்பது கோவணம் மட்டுமே, அதாவது ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே. மீண்டும் ஒரு முறை சங்பரிவாரக் கும்பல் ஆட்சிக்கு வருமேயானால், எஞ்சியிருக்கிற கோவணமும் உருவப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தப்படுவோம். 




காமராசர் கடைப்பிடித்து வந்த பசுவதைத்  தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு, சாதியக் கட்டமைப்பைப் பலகீனப் படுத்தும் சோசலிச சமத்துவக் கோட்பாட்டுக்கு ஆதரவு உள்ளிட்டவைகளால் காமராசர் மீது ஆத்திரம் கொண்ட சனாதனக் கும்பல் 1967 ஆம் ஆண்டு டெல்லியில் காமராசர் தங்கியிருந்த வீட்டுக்குத் தீ வைத்து அவரைக் கொலை செய்த முயன்றது என்பதை மனதில் கொண்டு, ஆட்சி அதிகாரத்திலிருந்து சங்பரிவாரக் கும்பலை அப்புறப்படுத்தவும், கருத்தியல் தளத்தில் இந்தக் கும்பலுக்கு எதிராகக் களமாடவும் நாம் உறுதி ஏற்பது ஒன்றுதான் காமராசருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

ஊரான்

Tuesday, 4 July 2023

சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள்!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரம் அருகே கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இடுப்பாடுகளில் சிக்கி ஐந்து தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். 8 அடிக்கு மேல் சுற்றுச்சுவரின் உயரம் இருக்கக் கூடாது என விதி இருந்தும் இந்தக் கல்லூரியில் 10 அடி உயரத்திற்கு கட்டப்பட்டதால்தான் சுவர் இடிந்துள்ளதாகத் தெரிய வருகிறது. விதி மீறலில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே சரியான சட்ட நடைமுறையாகும்.


2019 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலர் பலியானபோது அது குறித்து எழுதப்பட்ட கட்டுரையை இங்கே மீள் பதிவு செய்கிறேன். தற்போதைய கோயம்புத்தூர் சுற்றுச்சுவர் படுகொலையைப் புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும்.

******
மீள் பதிவு:
06.12.2019

சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள்!

கிராமம் என்றால் காலனி அல்லது சேரிகள் ஊருக்கு வெளியே இருக்கும். தாழ்த்தப்பட்டவர்களே இங்கு வசிக்கின்றனர். நகரம் என்றால் ‘சிலம்’ (Slum) அல்லது குடிசைப் பகுதிகள் இருக்கும். கிராமங்களில் வாழவழியற்று நகரில் தஞ்சம் புகுந்தவர்கள் வாழுகின்ற பகுதிதான் ‘சிலம்’. இங்கும் ஆகப்பெரும்பான்மையாக தாழ்த்தப்பட்டவர்களும், வறுமையால் பிழைப்பு தேடி நகரம் வந்த ஒருசில இடைநிலைச் சாதியினருமே வசிக்கின்றனர்.



மனு தரும சாஸ்திரத்தின் வரையறையின்படி, கிராமங்களில் சேரிப் பகுதி ஊரிலிருந்து தள்ளியே இருப்பதால் உயர்சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களும் அருகருகே வசிப்பதற்கான சூழல் கிடையாது. எனவே அங்கு இந்த சுற்றுச்சுவர் பிரச்சனை பெரிதாக எழுவதில்லை என்றாலும் சேரிகளையொட்டி ஆலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை அமைப்பது என்பது தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சுவர் பிரச்சனையும் எழுகிறது. ஆனால் நகரங்களில் ஆற்றோரங்களோ ஒதுக்குப்புறங்களோதான் ஏழைகளின் வாழ்விடங்கள். தனது வீட்டையொட்டி ‘சிலம்’ இருப்பதால் எவ்வளவு உயரத்துக்கு சுற்றுச்சுவரை உயர்த்தலாம் என கேள்வி எழுப்புகிறார். ஒரு மேட்டுக்குடி கனவான். ஆனால் இவரது வீட்டருகே ‘சிலம்’முக்குப் பதிலாக, இவரைப் போன்றே மற்றொரு மேட்டுக்குடி இருந்தால் அவருக்கு இத்தகைய கேள்வி எழுவதில்லை.

‘சிலம்’ என்றால் சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏன் எழுகிறது? சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிப்பது, பாதுகாப்பு நலன் கருதி அல்ல; மாறாக அருகில் வாழுபவர்கள் சேரி மக்கள் என்கிற தீண்டாமை கண்ணோட்டமே முக்கியப் பங்காற்றுகிறது. மேட்டுப்பாளையமும் இதற்கு விதிவிலக்கல்ல.

மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அப்பாவி மக்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சுற்றுச்சுவர் அருகே குடிசைகள் அமைத்ததால்தான் உயிரிழப்பு எனக் கதைப்போரும் உண்டு. சுற்றுச்சுவரையொட்டி நடைபாதையோ அல்லது சாலையோ இருந்தால் அதில் செல்வோர் பாதிக்கப்படமாட்டார்களா? அல்லது சுற்றுச்சுவர் கட்டும் போதோ அல்லது கட்டிய பிறகோ பழுதுபார்க்கும் வேலை நடைபெறும் போது அச்சுவர் இடிந்து விழுந்தால் அப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? எப்படி இருந்தாலும் சுற்றுச்சுவர் என்றால் அதில் பாதுகாப்பு அம்சம் மிக முக்கியமானது.

கருங்கல்லிலேயே கட்டப்பட்டிருந்தாலும் 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பலாமா? எவ்வளவு உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பலாம்? எத்தகையை கட்டுமானப் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சுவர் எழுப்பலாம்? இவற்றை வரைமுறைப்படுத்த சட்டங்களும் அவற்றைக் கண்காணிக்க அதிகாரிகளும் கிடையாதா? என்கிற கேள்வியே இங்கு முதன்மையானது.

வீடு உள்ளிட்ட கட்டடங்கள் எனில், சுற்றுச்சுவரின் உயரம் அதிகபட்சம் 1.5 மீட்டர் அதாவது 5 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேல் உயர்த்த வேண்டும் என்றால் கூடுதலாக 0.9 மீட்டர் அதாவது 3 அடி உயரத்துக்கு திறந்த வகை சுற்றுச்சுவரை சிறப்பு அனுமதி பெற்று அமைத்துக் கொள்ளலாம். திறந்த வகை என்பது கம்பிகளைக் கொண்டு அல்லது வேறு பொருட்களைக் கொண்டோ அமைப்பது; கற்களைக் கொண்டு அல்ல. ஆக ஒரு சுற்றுச்சுவரின் உயரம் மேற்கண்ட இரண்டையும் சேர்த்து 2.5 மீட்டர் அதாவது 8 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்கிறது
இந்தியத் தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) உருவாக்கிய தேசிய கட்டிடக் குறியீடு (National Building Code 2016). BIS என்பது இதற்கு முன்னர் ISI என்று அழைக்கப்பட்டு வந்தது.

தேசிய கட்டிடக் குறியீடு என்பது ஒரு விரிவான கட்டிடக் குறியீடு, இது நாடு முழுவதும் கட்டிட கட்டுமான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. பொதுப்பணித் துறைகள், பிற அரசு கட்டுமானத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

கட்டிட வடிவமைப்பு, கட்டுமானப் பொருட்கள், பாதுகாப்புத் தேவைகள், பிளம்பிங் வேலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இக்குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 1970-ல் உருவாக்கப்பட்ட இக்குறியீடு பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு கடைசியாக 2016-ல் வெளியிடப்பட்டது.

துணை மின்நிலையங்கள், மின்மாற்றி நிலையங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பள்ளி-கல்லூரி கட்டடங்கள் மற்றும் விடுதிகள், பொதுப்பயன்பாட்டுக் கட்டடங்கள் போன்ற இடங்களில் சுற்றுச்சுவரின் உயரத்தை 2.4 மீட்டர் அதாவது 8 அடி வரை உயர்த்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்கிறது தேசிய கட்டிடக் குறியீடு. ஆக எத்தகையக் கட்டடமாக இருந்தாலும் 8 அடிக்கு மேல் சுற்றுச்சுவர் எழுப்புவது விதி மீறலாகும். மேற்கண்ட விதியை மீறுவோர் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது தேசிய கட்டிடக் குறியீடு.

விதியை மீறி 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பி 17 பேர் படுகொலைக்குக் காரணமான மேட்டுப்பாளையம் கட்டட உரிமையாளர் மற்றும் இந்த விதிமீறலை அனுமதித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அரசு அதிகாரிகள் அனைவருமே இங்கு கொலைக் குற்றவாளிகள்.

மேட்டுப்பாளையங்கள் இனியும் நிகழக்கூடாது எனில் 8 அடிக்கு மேல் எழுப்பப்பட்டுள்ள சுற்றுச்சுவர்களை, அது எத்தகைய கட்டடமாக இருந்தாலும், அது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டிருந்தாலும் உடனடியாக இடித்துத்தள்ளுவோம்; இற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பையும் சேர்த்து.

– ஊரான்

Wednesday, 28 June 2023

நெஞ்சைப் பிளக்கிறதே!

ஜூன் மாதத்திலும்...
கடல் போல் காட்சியளிக்கும் ஏரி,
புது மண்ணின் அரவணைப்பில்
புதுப் பொலிவு பெற்ற ஏரிக்கரை,
தென்மேற்கிலிருந்து வீசும் மெல்லிய பூங்காற்று, 
கண்ணைக் குளிர வைக்கும் எழில்மிகு மலைத் தொடர், 
கடலின் பேரலையில் தள்ளாடிக் தவழும் பெருங் கப்பலைப் போல...
காற்றலையால் எழும் ஏரி நீரின் மெல்லலையில் 
தள்ளாடிக் தவழும் நீர்ப்பறவைகள்,
இதழ் விரித்து மலர்ந்திருக்கும் அல்லி மலர்கள்,
பெருமீன்கள் நீரின் ஆழத்தில் ஓய்வெடுக்க, 
சிறு குஞ்சுகளோ மேலெழுந்து நீந்திக் களிக்க,
காலை நேர வேளையிலே...இவை மனதை வருடினாலும்
கரையின் இருமருங்கிலும் சரிந்து 
குவிந்து கிடக்கும் 
சாராய பாட்டிகள்...
நெஞ்சைப் பிளக்கிறதே!

தமிழ்மணி

குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், மட்டவெட்டு, அத்திமூரான் கொட்டாய் ஏரிக்கரை.















Thursday, 8 June 2023

பிறவிக் குணம்: அறிவியலா?

கை, கால்கள், கண், காது, மூக்கு, குரல் வளம் உள்ளிட்ட உறுப்புகள் தொடர்பான உடல் கட்டமைப்பு (body constitution) மட்டுமே பிறப்பால், பரம்பரையால் ஓரளவுக்குத் தீர்மானிக்கப்படுபவை.  இவை கூட உணவு முறை மற்றும் உடல் உழைப்பு, வாழுகின்ற தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப மாற்றத்திற்குரியவை.

ஆனால், மனம் குணம் நடத்தை சார்ந்த பண்புகளை ஒரு மனிதன் வாழுகின்ற குழுச் சூழல், அவன் பெறக்கூடிய கருத்தியல் ரீதியிலான உள்ளீடுகளே தீர்மானிக்கின்றன. 

ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் பிறந்த கையோடு எடுத்துச் சென்று அந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அக்குழந்தை  அறியாமலேயே வேறு ஒரு சாதிக் குடும்பத்தில் வளர்த்து வந்தால் அந்தக் குழந்தை எத்தகையப் பண்புகளை, நடத்தையை, குணத்தைப் பெற்றிருக்கும்?

தான் வாழ்கின்ற சூழலுக்கு ஏற்பதான் ஒவ்வொரு மனிதனும் தனக்கான பண்புகளை, நடத்தையே, குணத்தைப் பெறுகின்றான். இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து ஒரு தொடர் கட்டுரையையே நான் எழுதி இருக்கிறேன்.

எனவே, பிறப்பால் ஒருவரின் குணத்தை, பண்பை நடத்தையை, தீர்மானிப்பது அறிவியலுக்குப் புறம்பானது. 

ஊரான்


தொடர்புடைய பதிவுகள்