Thursday, February 3, 2011

திருப்பூர்: சாயப்பட்டறைகளின் இரட்டைப் படுகொலை!


திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளின் சுற்றுச்சூழல் கேட்டால் மெல்ல மெல்லக் கொலையாகும் மக்கள் ஒரு பக்கம் . அதே சாயப்பட்டறைகளை நம்பி இதுவரை வாழக்கையை ஓட்டி வந்த மக்கள் இனி உயிர் வாழ்வதற்கான உரிமையை இழக்கும் அபாயம் மற்றொரு பக்கம்.  ஒரு வகையில் திருப்பூர் சாயப்பட்டறைகளால் நிகழ்ந்திருக்கும் இரட்டைப் படுகொலை இது.

739 சாயப்பட்டறைகளை இழுத்து மூடவேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதி மன்றம். நேரடி வேலைவாய்ப்பில் உள்ள 35 000 பேரும் மறைமுக வேலைவாய்ப்பில் உள்ள இரண்டரை இலட்சம் பேரும் இந்தத் தீர்ப்பால்  வேலையிழப்பார்கள். மிகை நேரப்பணியுடன் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ.500 வரை சம்பாதித்து 'காஸ்ட்லியான' நகரத்தில் 'சுமாரான' வாழ்க்கையை நடத்தியவர்களின் கதி இனி கேள்விக்குறிதான். பனியன் தொழிலாளர்கள் சங்கத்தின் (AITUC) பொதுச் செயலாளர் தோழர்.கே.பாலாமணி அவர்கள் தனது கவலையை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

739 சாயப்பட்டறைகளை மூடினால் ரூ.1500 முதல் ரூ.2000 கோடி வரை இனி வருவாய் இழப்பு ஏற்படும். ஆண்டுக்கு ரூ. 11 000 கோடிக்கு வணிகம் நடக்கும் திருப்பூர் பின்னலாடைத் தொழிலே நிலைகுலைந்து போகும். இது முதலாளிகளின் கவலை. 

தீர்ப்பு தாமதமாக வந்தாலும், நொய்யல் ஆற்றில் கழிவுகளைக் கலக்கும் சாயப்பட்டறைகளை மூடுவதற்கு தமிழ் நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் விரைந்து செயல்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பதாகவும், வாழ்க்கையை இழந்தாலும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் திருப்பூர், கருர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபையின் தலைவர் ஏ.பி.கந்தசாமி கருத்துக் கூறியுள்ளார்.

மாசடைந்த கழிவு நீரால் 70 000 ஏக்கர் விவசாய நிலம் பாழடைந்ததோடு 1.75 இலட்சம் தென்னை மரங்களும் அழிந்துவிட்டன. மாசடைந்த ஆற்று நீரைக் குடித்ததால் புற்று நோயால் 600 பெண்கள் மாண்டு போயுள்ளனர். ஏராளமான கால் நடைகளும் இறந்துள்ளன. திருமணமான பல தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விட்டது. குழந்தை பாக்கியம் இருக்காது என அஞ்சுவதால் நொய்யல் ஆற்றங்கரையின் 83 பகுதிகளில் வாழும் இளைஞர்களுக்கு பெண் கொடுக்க அஞ்சுகிறார்கள் பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள். 


உயர்நீதி மன்ற உத்தரவையடுத்து இன்று மாலை நிலவரப்படி ஐநூறுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து நாளை முழு அடைப்பு நடத்தப்போவதாக இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக விவசாயிகள் விழி பிதுங்கி நின்ற போது வேடிக்கை பார்த்தவர்கள் இன்று முதலாளிகளுக்காக களத்தில் இறங்கியிருப்பதால் இந்து முன்னணியின் புரவலர்கள் யார் என்பதும் சேர்த்தே அம்பலமாகியுள்ளது. 


கழிவு நீரை குழாய்கள் மூலம் நேரடியாக கடலில் கலப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை அனைத்து சங்க கூட்டுக் குழு முதல்வரை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்போதே அணிசேர்க்கை தொடங்கிவிட்டது. இனி திருப்பூரின் நிலை.....? 

இனி வாழ்வை இழக்கப் போகும் தொழிலாளர்களின் பக்கம் நிற்பதா? அல்லது ஏற்கனவே வாழ்க்கையை இழந்த விவசாயிகளின் பக்கம் நிற்பதா? அல்லது இந்து முன்னணியோடு சேர்ந்து முதலாளிகளின் பக்கம் நிற்பதா? தன்னலப் பார்வை மட்டுமே சமூகத்தில் புரையோடியிருப்தால் அவரவர் பக்கமே நியாம் இருப்பதாகத்தான் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள். இது ஒரு சிக்கலான பிரச்சனை என்பதால் சற்று விரிவாகப் பரிசீலிப்பதே தொலை நோக்கில் நல்ல தீர்வை வந்தடைய உதவும்.

---------------- 

சில ஆண்டுகளுக்கு முன்பு புதியகலாச்சாரம் இதழின் அட்டையில் ஒரு சிறுமியின் படம் வெளியாகியிருந்தது. திருப்பூர் சாயப்பட்டறைகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்த அந்த ஒரு படம் போதுமானது. சில செய்திகள் மூளையில் பதிவாகிவிட்டால் மூளை சிதைந்தாலும் பதிவு சிதையாது என்பது போல அந்தப்படம் இன்றும் என் கண் முன்னால் நிழலாடுகிறது. அந்தப்படம் அருவெறுப்பையும், அனுதாபத்ததையும், சீற்றத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியது.

"திருப்பூர் சாயப்பட்டறைகள்:வண்ணமா-அவலமா?" http://www.vinavu.com/2010/08/30/tiruppur-coloring-industries  என்ற தலைப்பில் ஜோதிஜி அவர்கள் வினவு தளத்தில் எழுதிய கட்டுரை திருப்பூர் சாயப்பட்டறைகளினால் உருவாக்கப்படும் அபாயத்தை ஆதாரங்களோ அலசியது.

சாயக் கழிவு நீர் இல்லாமல் ஆடைகளை தயாரிப்புது ஒன்றுதான் இதற்கு சிறந்த வழி என்பதை தனது நண்பர் நடத்தும் தொழிலை ஆதாரமாக சுட்டிக்காட்டியுள்ளார் ஜோதிஜி. 
"என்னுடைய நண்பர் மற்றவர்களைப் போல  பெரிய முதலீடுகளை முடக்காமல் வௌ்ளையை மட்டும் விருப்பமான தொழிலாக தொடக்கம் முதல் செய்து கொண்டிருக்கிறார். எது நம்மால் முடியாது என்று தெரிகின்றதோ? அதில் நுழையாமல் இருந்தாலே நம்முடைய தொழில் வெற்றி உறுதி என்று என்னை உணர வைத்தவர். சாயக்கழிவு நீரை ஒப்பிடும் போது சலவைப்பட்டறையில் இருந்து வெளிவரும் நீரின் நச்சுத்தன்மை குறைவானதே.  ஊரில் துவைத்துக் கொடுப்பவர்கள் வெள்ளாவி என்று கேள்விப்பட்டு இருப்பீங்களே?  அதைப் போல சற்று கொஞ்சம் நவீனம்".
ஆனால் நடைமுறையில் வண்ண ஆடைகளுக்கே அதிக கிராக்கி என்பதையும் அதே கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"திருப்பூர் ஆடை உற்பத்தியில் வௌ்ளை ஆடைகளை விட வண்ண ஆடைகளுக்குத் தான் அதிக கிராக்கி...” 

அதிக நிறங்களைப் பயன்படுத்தவதால்தான் கழிவு நீர் அதிக நச்சுத் தன்மையடைவதையும் கூறுகிறார்.

"நிறங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் வகை தொகையில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறது. காரணம் விரும்பும் ஒவ்வொரு நிறத்திற்கும் பயன்படுத்தும் சாயத்தின் அடர்த்தி பொறுத்து வெளியாகும் கழிவு நீரில் நச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்".

கிராக்கி (demand) எதற்கு அதிகமோ அதை உற்பத்தி செய்வதுதானே புத்திசாலித்தனம். அதனால் ”ஜீரோ டிஸ்சார்ஜ்” முறையில் தொழில் செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதற்கு அதிக செலவாகும். 

இதையும் ஜோதிஜி அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.
"இதிலும் சிறப்பான பல நிறுவனங்களும் உண்டு. பிரச்சனை வராத காலத்திற்கு முன்பே இதை சமூகப் பிரச்சனையாக பார்த்து ஜீரோ டிஸ்சார்ஜ் என்று சாயத் தண்ணீரை சுத்திகரித்து வெளியே அனுப்பத் தொடங்க இன்று அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட அந்த சாய நீரை இன்று தென்னைகளுக்கு பாய்ச்சும் அளவுக்கு கொண்டு வந்து உள்ளனர்".

ஜோதிஜி அவர்களின் கட்டுரைக்கு பின்னனூட்டமிட்ட பல நண்பர்கள் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்துள்ளனர். நவீன முறையில் "ஜீரோ டிஸ்சார்ஜ்" மூலம் இதற்குத் தீர்வு காணலாம் என பலரும், வெள்ளை ஆடைகளை உடுத்தலாம் என ஒரு சிலரும் கூறியுள்ளனர். "ஜீரோ டிஸ்சார்ஜ்" என்றாலும் அதற்கான கூடுதல் செலவை சுமக்கப் போவது யார்? நிலம் பாழானது போதாது என இப்போது கடலையும் பாழாக்க புறப்பட்டுள்ளனர் சிலர். ஆனால் வண்ண ஆடைகளுக்கு மட்டும் அதிக கிராக்கி ஏன் என்பது குறித்து யாரும் பரிசீலிக்கவில்லை.

வண்ண ஆடைகளுக்கு மட்டும் அதிக கிராக்கி ஏன்? இந்த கிராக்கி யாரால் ஏற்படுத்தப்பட்டது? இக் கேள்விகளுக்கு விடை தேடாமல் சாயப்பட்டறைகளை ஒழிக்கவும் முடியாது. சாயக் கழிவுகளின் பாதிப்பிலிருந்து மக்களை காக்கவும் முடியாது. இதை ஒரு தனி தலைப்பில் பிறகு பார்க்கலாம்.

4 comments:

  1. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. பாழ்பட்ட நிலங்களுக்காக ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை சாயப்பட்டறைகள் செய்தே தீர வேண்டும். அடிப்படைத் தேவைகளான சுகாதாரமான தண்ணீருக்கே பிரச்சினை என்றால் அதை செய்பவர்களை தண்டிப்பதே வழி.

    1.75 லட்சம் தென்னை மரங்களை வளர்க்க முடியாது. 70000 ஹெக்டே நிலத்தையும் பண்படுத்த முடியாது. தொழிலாளர்கள் பிரச்சியை காரணம் காட்டி இதை அனுபதிப்பது தவறு/

    //வண்ண ஆடைகளுக்கு மட்டும் அதிக கிராக்கி ஏன்// இது என்ன கோணம், பிரச்சினைக்கு எந்த சம்பந்தமுமுல்லாமல்? பேசாமல் கோமனம் மட்டுமே அணிய வேண்டும் என்று சட்டம் போட்டு விடலாமா?

    ReplyDelete
  2. நண்பா இப்போது தான் இந்த பதிவைப் பார்த்தேன். ஆனால் ஜீரோ டிஸ்சார்ஜ் என்ற மாயை எந்த அளவிற்கு உண்மை பொய் என்பதை நாளை (4ந்தேதி) வெளிவரும் புதிய தலைமுறை பத்திரிக்கையில் விலாவாரியாக அலசியுள்ளேன். வினவு தளத்திலும் இது குறித்து வெளிவரும். உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

    அமரபாரதி உங்களின் கடைசி வரி என்னை சப்தம் போட்டு சிரிக்க வைத்தது.

    ReplyDelete
  3. சிலவற்றை மனமாற்றத்தின் மூலம் சாதிக்க நினைப்பது அபாயகரமானது. நொய்யல் நதியைப் பொறுத்தவரை வெறும் சாயக்கழிவுதான் பிரச்சனை.

    பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பிரச்சனை உலகலாவியது. வன அழிப்பும் அப்படியே. நுகர்வை கட்டுக்குள் கொண்டுவர உற்பத்தியை கட்டுப்படுத்துவதுதான் வழி.

    அதனால் உருவாகும் வேலையிழப்பை விவசாயத்தை ஊக்குவிப்பதன் வாயிலாக ஈடுகட்டலாம் இல்லையா
    ..

    ReplyDelete
  4. அடிப்படைத் தேவைகள் அல்லாத பிற தேவைகள் பெரும்பாலும் நுகர்வுப் பண்பாட்டின் விளைவாகவே தீர்மானிக்கப்படுகின்றன. நுகர்வுப் பண்பாடு ஒரு வெறியாக வளர்க்கப்பட்டு வருகிறது. இலாப வெறிகொண்டு அலையும் முதலாளிகளும், பெரும் வணிக நிறுவனங்களுமே இத்தகைய நுகர்வுவெறியை வளர்ப்பவர்கள். யார் எக்கேடு கேட்டால என்ன? இலாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்களிடம் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.

    வில்லவன் குறிப்பிடுவதைப்போல சிலவற்றை மனமாற்றத்தின் மூலம் சாதிக்க நினைப்பது அபாயகரமானதுதான். அதாவது தனிநபர்கள் மனம் மாறிவிட்டால் எல்லாம் தானாக மாறும் என்கிற கருத்து. இது நடைமுறை சாத்தியமற்றது. மனமாற்றம் என்பது தனிப்பட்ட நபரின் எண்ணங்களிலிருந்து நிகழ்வதில்லை. புற உலகில் நடத்தப்படும் பேரியக்கங்களும், போராட்டங்களுமே தனிமனித சிந்தனையை தீர்மானிப்பவவை. எனவே சிந்தனை மாற்றம் என்பது போராட்டத்தினூடே நிகழ்பவை. அத்தகைய மாற்றங்களே இன்றைய தேவை.

    சாயக் கழிவு பிரச்சனையோ அல்லது பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பிரச்சனையோ அது உள்ளுர் பிரச்சனையாக இருந்தாலும் உலகளாவிய பிரச்சனையாக இருந்தாலும் உற்பத்தி அடிப்படைத் தேவைக்கானதா இல்லை அவசியமற்ற தேவைக்கானதா என்பதிலிருந்தே தீர்மானிக்கப்பட வேண்டும். வெறும் நுகர்வுக்கான உற்பத்திகள் அனைத்தும் அவசியமற்ற அல்லது அர்த்தமற்ற உற்பத்திகளே. அவைகளை முற்றிலுமாக நிறுத்தவதே சாலச் சிறந்தது.

    மக்களின் அடிப்படைத் தேவைக்கான உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது. அல்லது திட்டமிட்டே குறைக்கப்பட்டு வருகிறது. இவைகளை அதிகப்படுத்துவதன் மூலம் 'உருவாகும் வேலையிழப்பை' ஈடுகட்ட முடியும்.

    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி வில்லவன் அவர்களே.

    ReplyDelete