Tuesday, December 31, 2019

2020 - எழுந்து நில்!

2019 விடை பெற்று 2020 வந்து விட்டது. இது ஆங்கிலப் புத்தாண்டு,  நம்மை அடிமைப் படுத்தியவன் புகுத்தியது, இதை நாம் ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேள்வி எழுப்புவோரும், தமிழருக்குப் புத்தாண்டு சித்திரையே என்போரும் உண்டு. பிறப்பில் தொடங்கி இறப்பையும் நினைவூட்டி அனைத்திலும் நீக்கமற நிறைந்து விட்ட ஆங்கிலப் ஆண்டுக் கணக்கை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது. பழைமையை மட்டும் சுமந்து வரும் சித்திரை, தமிழரின் புத்தாண்டு இல்லை என்றாலும் ஆரியப் பண்பாட்டை தமிழன் உதறாதவரை சித்திரைக்கும் நித்திரை இல்லை.
கடைகளில் கழிக்கப்பட்டவை புதியனவாய் நம் இல்லங்களில் புகுவதுதான் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்றாகி விட்டது. கழித்தவனின் கல்லாப்பெட்டிகளை பெற்றவனின் மணிபர்சுகள் நிரப்புவது வாடிக்கையாகி விட்டது. ஆண்டுப் பலன் தொடங்கி அன்றாட இராசிபலன் வரை அலசுகின்ற அரை அறிவாளிகளுக்கு ஆண்டு முழுக்க கொண்டாட்டம்தான். ஆனால் புத்தாண்டு பிறக்கிற போது வாழ்க்கைச் சுமையோடு வயது ஒன்று கூடுவதைத்தவிர வேறெதையும் கண்டதில்லை பலர்.

இனி வரும் வாழ்க்கை வளமாய், நலமாய், இனிமையாய் அமைய வேண்டும் என்கிற ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடாய்தான் பலரின் புத்தாண்டு வாழ்த்துகள் அமைகின்றன. ஏக்கப் பெருமூச்சுக்கு முடிவு கட்ட வேண்டாமா? எழுந்து நில்!

ஊரான்

Sunday, December 29, 2019

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?.....தொடர்-1

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக தமிழகத்தில் எடப்பாடி கும்பலிடம் தமிழகம் சிக்கிய பிறகு பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிக்கும் சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டது. இதனால் பெரியார் மறைவுக்குப் பிறகு சற்றே உறங்கிக்கிடந்த பகுத்தறிவு - சுயமரியாதை குறித்த விவாதங்கள் இன்று தீவிரமடைந்துள்ளன. இதன் விளைவை சகல துறைகளிலும் காண முடிகிறது.

வீடு, தெரு, ஊர், அலுவலகம், நாடு, ஊடகம் என எங்கு பார்த்தாலும் சாதி-மதம் குறித்து பேச்சாகத்தான் இருக்கிறது. வாட்ஸ்அப் குழுக்களிலும், முகநூலிலும் நண்பர்களிடையே இது குறித்து மயிர் பிளக்கும் விவாதங்கள் நடக்கின்றன. முகநூல் நட்பாவது முகம் பார்த்திராத நட்பு. முகநூல் வட்டத்திலிருந்து ஒருவர் விலகினால் பெரிதாக நட்டம் ஏற்படப் போவதில்லை. ஆனால் வாட்ஸ்அப் குழு நட்பு மிக நெருக்கமானது. பெரும்பாலும் முகம் பார்த்துப் பழகிய வட்டம். நேற்றுவரை சுக துக்கங்களில் இரண்டரக் கலந்த நட்பு. சாதி-மதம் சார்ந்தப் பதிவுகளால் இந்த நட்பு வட்டமே இன்று அதகளப்படுகிறது. இதனால் நேற்றுவரை முகம் பார்த்துக் கொண்டவர்கள் இன்று முதுகைக் காட்டி நகர்கிறார்கள். அரசியல் கருத்துக்களும் சர்ச்சையில் சிக்குவதால் நடையின் வேகம் சற்றே கூடுகிறது.

பொதுவாக சாதி-மதம்-அரசியல் சார்ந்தப் பதிவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தங்களது நட்பைத் தக்கவைத்துக் கொள்ளவே இவர்கள் முயலுகின்றனர். தான் சாதி-மதம் பார்ப்பதில்லை என்றும், அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் நட்புடன் பழகுவதாகவும்தான் பலரும் தங்களைக் கருதிக் கொள்கின்றனர். இவர்கள் கருதுவது சரிதானா? இல்லை என்பதைத்தான் இன்றைய சமூக நடப்பு காட்டுகிறது. கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, பதவி உயர்வு, காதல்-சாதி மறுப்புத் திருமணங்கள்,  வழிபாட்டுரிமை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இதைக் காண முடிகிறது. ஒரு வரியில் சொன்னால் சாதியும் மதமும், அதையொட்டிய உயர்வு – தாழ்வு – பொறாமை - பகைமை எண்ணங்கள் பலரது வாழ்வில் இரத்தமும் சதையுமாக ஒன்று கலந்து விட்டன.

கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றார்கள்தூண்களையும் உடைத்துப் பார்த்தோம், துரும்மையும் கிள்ளிப் பார்த்தோம், கடவுளைத்தான் காணமுடியவில்லை. ஆனால் சாதியும் மதமும் அங்கிங்குகெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறது.

தமிழர் வாழ்வில் சாதி இல்லை, மதம் இல்லை என்கின்றன சங்க இலக்கியங்கியங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவனின் வாக்கு அதை உறுதி செய்கிறது. பிறகு தமிழனின் வாழ்வில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதியும் மதமும் எப்படி ஊடுருவியது? சாதி – மதம் மட்டுமல்ல அதைச் சார்ந்த சடங்குகளும், சம்பிரதாயங்களும், நம்பிக்கைகளும் மனித வாழ்வில் எப்படி ஒன்று கலந்தன? சனாதன தருமம் என்றால் என்ன? இதற்கு எது அடிப்படை? இவற்றை எல்லாம் யார் போதித்தது? இது குறித்துதான் இந்தத் தொடரில் பேசவிருக்கிறோம்.


ஊரான்


தொடரும்

Thursday, December 12, 2019

அடுத்த நூறு ஆண்டுகளில் மெரினா இருக்குமா?


அண்ணா பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழா 04.12.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. உறவினர் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதால், நானும் அந்நிகழ்வில் ஒரு பார்வையாளராகப் பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழக நூலகக் கட்டடத்தில் உள்ள அரங்கத்தில் அவ்விழா நடைபெற்றது. 1,251 மாணவர்கள் நேரில் அழைக்கப்பட்டிருந்ததால், அந்த அரங்கம் அவர்களுக்கே போதுமானதாக இல்லை. உடன் வந்த உறவினர்கள் விழாவைக்கான அரங்கத்திற்கு வெளியே திரை அமைத்திருந்தார்கள். அந்த இடமும் நெருக்கடியாக இருந்ததால் கூட்டம் அலைமோதி முண்டியடித்துக் கொண்டுதான் திரையில்கூட நிகழ்ச்சியைக் காண முடிந்தது.
திரையில் பட்டமளிப்பு விழா

1,251 பேருக்கு ஆளுநர் நேரில் பட்டம் வழங்கினார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் 71 பேருக்கு மட்டுமே தனது கையால் பட்டம் வழங்கினார். இதில் வேடிக்கை என்னவென்றால் விழா முடிந்த பிறகு, ஏற்கனவே மொத்தமாக தங்கள் கைக்கு வந்துவிட்ட பட்டத்தை துணை வேந்தர் சூரப்பாவின் கையில் கொடுத்து, அவர் கையால் பட்டம் பெறுவது போல புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சிலர். இதைப் பார்த்த போது துணைவேந்தரே இவர்களுக்கு நேரில் பட்டமளிப்பது போன்றதொரு பிம்பத்தை மட்டுமே ஏற்படுத்தியது. 71 பேர் மட்டுமே நேரில் பட்டம் பெறும் ஒரு நிகழ்ச்சியில் போக்குவரத்து, தங்குமிடம், உணவுக்கு என பெரும் தொகையை செலவு செய்து ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு ஏன் வரவேண்டும்?

அண்ணா நினைவிடம்
சரி! செய்த செலவுக்கு மெரினாவுக்காகவாவது சென்று வரலாம் என அங்கு சென்றோம். முதலில் அண்ணா நினைவிடத்தையும், அதற்கு உள்ளேயே ஒரு ஓரமாக மிகச்சிறிய இடத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தையும் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். எனக்கு தி.மு.க வோடு அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகளும், முரண்களும் இருந்தாலும் கலைஞர் நினைவிடத்தின் அருகில் நான் சென்ற போது என்னை அறியாமலேயே என் கண்கள் சற்றே கலங்கின. பார்ப்பனர்கள் ஒருவனை மூர்க்கமாக  எதிர்க்கிறார்கள் என்றால், அவனும் ஏதோ ஒரு வகையில் உன் தோழனே என ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்குள்ள கலைஞரின் பொன் மொழிகள் சிலவற்றை உற்று நோக்கிய போது “மூளை! மூளை! அவ்வளவும் மூளை!” என ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி தன்னுடன் வந்தவர்களுடன் பேசிக் கொண்டது, கலைஞர் மிக ஆழமாகவே மக்கள் மனிதில் இடம் பிடித்துள்ளார் என்பதை உணர்த்தியது!
கலைஞர் நினைவிடம்
வெளியே வந்த பிறகு எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்றோம். அங்கு பராமறிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. வெளியில் இருந்து பார்த்த போது ஜெயலலிதாவின் நினைவிடம் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்படுவதைக் காண முடிந்தது. அண்ணா - கலைஞர் நினைவிடத்தையும், எம்ஜி.ஆர் – ஜெயலலிதா நினைவிடத்தையும் பிரிக்கும் வகையில் தடுப்புச்சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அண்ணாவும் கலைஞரும் அண்ணன் - தம்பி போலவும், (உடன் பிறந்தவர்கள் இல்லை என்றாலும் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகளாகத்தானே கருதப்படுகின்றனர்) எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கணவன் - மனைவி போலவும் (அங்கு வைக்கப்பட்டிருக்கும் WAY TO DR.MGR & AMMA SAMADHI என்ற அறிவிப்பைப் பார்க்கும் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது) ஒரு தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இது என்ன பங்காளிகளைப் பிரிக்கும் தடுப்புச் சுவரா? இல்லை கலைஞர் சமாதியை மிதித்தவன் நேராக ஜெயலலிதாவின் சமாதியை மிதித்துவிடக்கூடாது என்பதற்கான தீண்டாமைச் சுவரா? அண்ணா, கலைஞர், எம்ஜி.ஆர், ஜெயலலிதா நால்வருமே தமிழக முதல்வராக இருந்தவர்கள்தானே! பிறகு எதற்காக இந்த தடுப்புச்சுவர்?
ஜெயலலிதா நினைவிடம்

அண்ணா - எம்ஜி.ஆர் - ஜெயலலிதா மூவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் அவர்களது நினைவிடத்தின் பிரம்மாண்டத்தையும், கலைஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் அவரது நினைவிடத்தின் அமைப்பையும், பார்த்த போது
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்!”
என்கிற எம்.ஜி.ஆரின் “என் அண்ணன்” திரைப்படத்தில் வரும் கவிஞர் கண்ணதாசனின் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா!" எனத் தொடங்கும் பாடலில் உள்ள வரிகள்தான் நினைவுக்கு வந்தது.


எம்ஜி.ஆர் நினைவிடம்
மெரினாவில் சமாதிகளே கூடாது என்பதுதான் எனது கருத்து. இருப்பவற்றையும் இடித்துத்தள்ளி, சமாதிகளுக்கு முடிவுகட்டவில்லை என்றால், நாற்பது ஆண்டுகளில் நான்கான சமாதிகள் அடுத்த நூறு ஆண்டுகளில் பதினான்காகும். அப்பொழுது மெரினாவும் புதைக்கப்பட்டிருக்கும்.

மெரினா என்றால் கடலில் கால் நனைக்காமலா? “யாரும் கடலில் இறங்க வேண்டாம். கடல் நீரில் கால் நனைக்க வேண்டாம். நனைத்தால் நோய் தொற்று வரும்!” என மெரினாக் காவல் நிலையம் எச்சரித்திருந்ததாக கேள்விப்பட்டோம். அருகில் சென்ற போது கடலிலிருந்து வீசிய கெட்டநாற்றம், இந்த எச்சரிக்கை உண்மைதான் என்பதைப் புரிய வைத்தது. ‘கடலில் பெருங்காயம் கலப்பதைப் போல’ என்கிற சொலவடை இங்கே பொய்யாக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் சென்னை நகரின் மொத்தக் கழிவும் வங்கக்கடலில் சங்கமித்ததால் வந்தக்கேடு இது. கழிவுநீரைக்கூட சுத்திகரிக்கும் ஆற்றலற்ற அரசு கட்டமைப்பு நீடிக்கும்வரை கடல் கன்னிகள் கலங்கப்படுவதை யார்தான் தடுக்க முடியும்?

மெரினா
கடற்கரைக்கு வந்துவிட்ட பிறகு இளைப்பாறாமலா? மணற்பரப்பில் இரண்டறக் கலந்திருந்த குப்பைக் கூலங்கள் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகளின் கழிவுகள் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் நீண்ட நேரம் நடந்த களைப்பைப் போக்க சிறது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஜல்லிக்கட்டின் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு ஊர் திரும்பினோம்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்