"1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது, இவரைத் தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்."
2011 ஆண்டு, பிப்ரவரி மாதம் சாமியார்கள் குறித்த எனது கட்டுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டேன்.
தற்போது பங்காரு அடிகளார் மறைந்து விட்ட நிலையில், அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால் அவரது மறைவு குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பங்காரு அடிகளார்
ஒரு நபர் சமூகத்தில் பிரபலமடைந்துவிட்டால், அவரது கடந்த காலத்தையும் மறந்து, அவரது தொழில் இரகசியத்தையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல மக்கள் பழகிக் கொண்டு விட்டார்கள். தொடக்க காலத்தில் கொலைக் குற்றசாட்டுக்கு ஆளான பங்காருவும் இதில் அடக்கம்.
பெண்கள் சூத்திரர்களுக்கு ஒப்பானவர்கள், மாதவிடாய் பெண்கள் தீட்டுக்குரியவர்கள் என்று எந்த சனாதன இந்து மதம் பெண்களை இழிவுபடுத்தி ஓரங்கட்டியதோ, அதே இந்துப் பெண்களை நேரடியாக பூஜை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் பங்காரு அடிகளார் இந்து மதத்தில் ஒரு 'புரட்சியை' ஏற்படுத்தினார் என்பதனால் அவரை ஏன் ஆதரிக்கத் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. பங்காரு அடிகளாருக்கு முன்பிருந்தே எண்ணற்ற குல தெய்வங்களுக்கு பெண்கள் பூஜை செய்வது நடந்து கொண்டுதான் இருந்தது; தொடர்ந்து நடக்கவும் செய்கிறது.
மக்களின் உளவியலைப் புரிந்து கொண்டவர்கள்தான் சாமியார்களாக வளர முடிகிறது. அந்த வகையில் வட மாவட்டங்களில் குறிப்பாக வன்னியர் சாதிப் பெண்களின் உளவியலை நன்றாகப் புரிந்து கொண்ட பங்காரு அடிகளார் அதை அறுவடை செய்து கொண்டார்.
பூஜை செய்கிற பெண்கள், தாங்கள் சனாதனத்திற்கு எதிராகச் செயல்படுகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது; பங்காருவும் அத்தகைய எண்ணத்தோடு பெண்களை பூஜையில் ஈடுபடுத்தவில்லை. அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருந்திருக்குமேயானால் சங் பரிவார கும்பலுக்கு எதிராக தன்னுடைய பக்தர்களை வளர்த்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்ததாகச் சான்றுகள் இல்லை. மாறாக, வன்னிய சாதி மக்கள் சங் பரிவாரக் கும்பல் பக்கம் சாய்ந்து வருவதுதான் மிச்சம். இதில் அன்புமணியின் பங்கும் உண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது.
ஏராளமான கல்வி நிறுவனங்களைத் தொடங்கி, அதன் மூலம் எண்ணற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி-மருத்துவச் சேவையை செய்துள்ளார் என்றும் பங்காருவைப் புகழ்கின்றனர். இது உண்மை என்றாலும்கூட அவரால் இதை எப்படிச் செய்ய முடிந்தது என்பதை பரிசீலிக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கல்வி-மருத்துவம் வழங்க வேண்டியது அரசினுடைய கடமை. அதை ஒரு சாமியார் செய்கிறான் என்பதற்காக நான் வெட்கப்பட வேண்டுமே ஒழிய பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஏழை எளிய மக்கள் அன்றாடம் பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதிலிருந்து விடுபட வேண்டுமானால், ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மூடநம்பிக்கைகள் அவர்களிடைய ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. தங்களது துன்ப துயரங்களுக்கு நிரந்தரமானத் தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு காணிக்கைகளை அள்ளிக்கொண்டு சாமியார்களை நோக்கி ஓடுகிறார்கள் அப்பாவி மக்கள். அங்கே, சாமியார்களின் உண்டியலும் தொந்தியும் பெருகுகிறது. மனதை மட்டும் நிறைத்து கொண்டு பக்தர்கள் வீடு திரும்புகிறார்கள்; வந்த பிறகு மீண்டும் அதே வாழ்க்கை.
ஒவ்வொரு முறையும் தனக்குத் துன்ப துயரம் நேரும் பொழுது, மீண்டும் மீண்டும் சாமியார்களையும் கோவில்களையும் நோக்கி ஓடுகிறார்கள். ஆனால், அவர்களின் துன்ப துயரங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. மாறாக, ஆழமான மூடநம்பிக்கைகள் மேலும் மேலும் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. மக்களின் மூடநம்பிக்கைகள்தான் சாமியார்களின் மூலதனம். மூடநம்பிக்கைகள் பெருகப் பெருக மூலதனமும் பெருகத்தானே செய்யும். அப்படித்தான் கோடிக்கணக்கிலே பங்காருவிடம் சொத்துக்கள் குவிந்தன.
மக்களின் சிந்தனை மட்டத்தை எவன் உயர்த்துகிறானோ அவனது மரணத்தைத்தான் பேரிழப்பாகக் கருத முடியும். பரோபகாரியாக இருப்பதனால் மட்டும் ஒருவன் போற்றுதலுக்கு உரியவனாகிவிட மாட்டான்.
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்