விடுதலைப் புலிகள் தலைமையில் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் சிங்கள பேரினவாத அரசுப்
படைகளால் மிகக் கொடூரமான முறையில் அழித்தொழிக்கப்பட்டது சமீபத்திய வரலாறு.
பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார், அவர் மீண்டும்
வருவார், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடருவார் என்ற
கூறுவோரும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். பிரபாகரன்
வருகிறாரோ இல்லையோ, விடுதலைப்
போராட்டத்தில் ஈடுபடும் பல்வேறு நாட்டுப் போராளிகளுக்கு
தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்மறை அனுபவங்களையே விட்டுச் சென்றுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சீமான் போன்ற பித்தலாட்டக்காரர்களுக்குத்தான்
தமிழீழ விடுதலைப் போராட்டம் பயன்படுகிறது.
ஒரு விடுதலை இயக்கத்தின் போராட்ட அனுபவங்கள், புதிய தலைமுறையினருக்கு
நேர்மறை அனுபவங்களையும், உத்வேகத்தையும் அளிக்கவல்லதாக இருக்க வேண்டும். இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளி பகத்சிங்கின் ஆங்கிலேயருக்கு
எதிரான ஆயுதப் போராட்ட அனுபவங்களும், லிபியா மீதான இத்தாலி முசோலினின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான உமர்முக்தாரின் கொரில்லாப் போர் முறை அனுபவங்களும், ஆண்டுகள் பலவாயினும்
இன்னமும் பேசப்படுகின்றன.
இளம் வயதில் பகத்சிங்கும், தள்ளாத வயதில் உமர்முக்தாரும், ஆக்கிரமிப்பாளர்களால் தூக்கிலிடப்பட்ட போதும் அவர்களின்
போராட்ட அனுபவங்கள் நம் நாடி நரம்புகளைப் புடைக்கச் செய்கின்றன.
நட்டநடு பாலைவனத்தில், ஒரு சிறிய கொட்டகையில் இத்தாலியப் பிரதிநிதிகளோடு உமர்முக்தார்
நடத்திய சமாதானப் பேச்சு வார்த்தையின் காட்சிகள் கொரில்லா போர் காட்சிகளை விடவும் விஞ்சியது
என்றால் அது மிகையல்ல.
*****
1937- 39 வாக்கில் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதியில், மலை உச்சியில், நெடிதுயர்ந்த அடர்ந்த
மரங்களுக்குக் கீழே அமைக்கப்பட்ட கொட்டகையில்
நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது,
“எங்களில்
யாருக்கும் மனைவி மக்களோ வீடு வாசல்களோ எதுவும் இல்லை. நாங்கள் வாழும் பூமிதான்
எங்கள் வீடு. இங்கு வாழும் மக்கள்தான் எங்கள் குடும்பத்தினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தப் பூமியை விட்டு வெளியேறு மட்டும் முஸ்லீம்களில் ஒரு
பகுதியினராவது அவர்களுக்கு அடிமைப் படாமல் வாழ்ந்தார்கள் என்ற சரித்திரத்தை எழுத எங்கள்
இரத்தத்தை மையாகக் கொண்டிருப்பதே
எங்கள் தொழில். எங்களில் யாரையும் விலைக்கு வாங்க முடியாது. எங்களுடைய பூமி என்று
நாங்கள் எல்லை வைத்துக் கொண்டுள்ள பகுதியில் ஒரு இஞ்ச் அளவில் கூட உங்கள் ஆட்சி
ஒருபோதும் அடியெடுத்து வைக்க முடியாது. நீங்கள் எங்கள் எஜமானர்களாக ஆகும் எண்ணத்தை
கைவிட்டதாக உங்கள் பாராளுமன்றத்தின் மூலம் அறிவிப்புச் செய்து விடுவதே புத்திசாலித்தனம்”
என கர்ஜிக்கிறான் போராளிக் குழுத் தலைவன் இப்பி
ஃபக்கீர்.
நீண்ட நெடிய பேச்சு வார்த்தைக்குப் பிறகு,
“சமாதானத்துக்கு வழி?” என்று கேட்கிறான் பிரிட்டிஷ் தரப்பு ஜார்ஜ் மிலான் பிரபு.
“உங்கள் வழியை
நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் வழியை
நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களை அடிமைப்படுத்த முயற்சிக்காதீர்கள். அது ஒன்றுதான் சமாதானத்திற்கான வழி" என்கிறான் இப்பி ஃபக்கீர்.
ஆம். 1947-இல் பிரிட்டிஷார்
இந்தியாவை விட்டு வெளியேறும் வரை வஜ்ரிஸ்தானை அடிமைப்படுத்த
முடியவில்லை.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில்
கைபர் கனவாயையொட்டி அமைந்துள்ள, இஸ்லாமிய மதத்தைத்
தழுவும் பத்தான் பழங்குடி மக்கள் வாழும் பகுதிதான் வஜிரிஸ்தான்.
பிரிட்டிஷார் வெளியேறிய பிறகு, அப்பகுதி
பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டாலும் பதான்களின் இன விடுதலைக்கான போராட்டமும்
தொடர்ந்தது என்பது பிந்தைய வரலாறு. 1960 இல் இப்பி ஃபக்கீர்
மரணிக்கும் வரை பிரிட்டிஷ் இராணுவமோ அல்லது பாகிஸ்தான் இராணுவமோ அவரை நெருங்கக்கூட முடியவில்லை.
உமர்முக்தாரின் வீரத்தை, “உமர்முக்தார்” திரைப்படம் வெளிப்படுத்தியதைப்
போல, ஏ.எம்.யூசுப் அவர்களின் “இப்பி ஃபக்கீர்” வரலாற்றுப் புதினம்,
இப்பி ஃபக்கீரின் வீரத்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது மிகை அல்ல.
“பரங்கியருக்கு
எதிரான கொரில்லாப் போராட்டத்தை மிக நேர்த்தியாக திரைக்கதை போல் அமைத்து நவீன க்ரைம்
சப்ஜெக்ட் சினிமாவைத் தோற்கடிக்கும் விதமாக பல்வேறுத் திருப்பங்களுடன் இந்த
வரலாற்றுப் புதினத்தை, ஏ.எம்.யூசுப் அவர்கள் படைத்துள்ளார்கள்” என்ற பதிப்பாசிரியரின் கூற்றை மெய்ப்பிக்கிறது இந்த வரலாற்றுப்
புதினம்.
அடிமைத்தனத்தை வெறுக்கும், விடுதலையை
நேசிக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஊடுருவ வேண்டிய வீரன் இப்பி ஃபக்கீர்.
ஊரான்
குறிப்பு: படிப்பதற்கு நூலைத் தந்துதவிய
வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA, அவர்களுக்கு நன்றி.
நூல்: இப்பி ஃபக்கீர்,
ஆசிரியர்: ஏ.எம்.
யூசுப்
விலை: ரூ.90/-
இரண்டாம் பதிப்பு: 2016
நூல் வெளியீடு: புது யுகம்,
84-3, அங்கப்பன் தெரு, மன்னடி,
சென்னை-600 001.
தொடர்புடைய பதிவுகள்