Wednesday, August 29, 2012

மகாபலி இனி வரமாட்டார்!

உயிரற்ற ஓணம் பண்டிகையைக் கண்டு துவண்டு போன மகாபலி சக்ரவர்த்தி!

ஓணம் பண்டிகையின் இன்றைய தன்மை குறித்து திரு C.V.சுகுமாரன் (email: lscvsuku@gmail.com) என்பவர் 26.08.2012 அன்று இந்து நாளேட்டில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்.

“அன்புள்ள வாசகர்களே,

முன்பொரு காலத்தில் கேரளாவின் சக்ரவர்த்தியாக விளங்கிய மகாபலி பேசுகிறேன். ஆண்டுக்கு ஒரு முறை நான் கேரளாவுக்கு விஜயம் செய்யும் மற்றுமொரு ஓணம் நெருங்கி விட்டது. நான் ஒரு பேராசை பிடித்த மன்னன் அல்ல. நான் ஒரு இளிச்சவாயன் என்பதால் கீழ்லோகத்திற்குள் தள்ளப்பட்டேன். மகாவிஷ்ணு குள்ளனாக ‘வாமன’ அவதமாரம் எடுத்து மூன்றடி மண்ணை பிச்சையாகக் கேட்டான். நானும் கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் மகாவிஷ்ணு விஸ்வரூபமெடுத்து முதல் அடியிலேயே மொத்த பூமியையும் அளந்தான்; இரண்டாம் அடியை சொர்க்கத்தில் அளக்க மூன்றாம் அடியை அளக்க இடம் இல்லாததால் எனது தலையைக்காட்ட அவனும் என் தலைமீது முன்றாவது அடியை வைத்து அழுத்த நான் கீழ்லோகத்திற்குள் தள்ளப்பட்டேன். நான் கீழ்லோகத்திற்கு தள்ளப்படும் தருவாயில் ஏதாவது வரம் வேண்டுமானால் கேள் என்றான் விஷ்ணு. ஆண்டுக்கொரு முறை என் அன்பிற்குறிய மக்களை சந்திக்க மட்டும் வரம் கொடு என்றேன். அவனும் கொடுத்தான். அன்றிலிருந்து நான் கேரளாவிற்கு விஜயம் செய்வதை ஒரு தேசியத் திருவிழாவாகவே எனது மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதுவே ஓணம் பண்டிகையாகும்.

கடந்த காலங்களில் எனது மக்களை சந்திக்க ஓணத்திற்காக நான் காத்திருப்பேன். அன்று அறுவடையின் வாசனையை உணர முடிந்தது. பூத்துக் குலுங்கும் செடிகளையும் கொடிகளையும் பார்க்க முடிந்தது. எங்கு நோக்கினும் ஒய்யாரமாய் பறக்கும் தும்பிகள். தேனீக்களின் ரீங்கார ஓசை மற்றும் பறவைகளின் இசைக் கோலங்களை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் பொது இடத்தில் ஒன்று கூடுவார்கள். தங்களின் வீட்டு வாசலில் மலர்களால் பூக்களம் அமைத்து என்னை வரவேற்பார்கள். கால்நடைகளுக்குக்கூட அவர்கள் தனியொரு ஓணம் வைத்திருந்தார்கள். சுற்றுச்சூழல்கூட என்னை அன்பாக வரவேற்பதில் தன்னை இணைத்துக் கொண்டது.
செடிகளிலும் கொடிகளிலுமிருந்து சிறுவர்கள் மலர்களைப் கொய்து வருவார்கள். அதைக்கொண்டு எனக்கு விதவிதமன வடிவங்களில் பூக்களம் அமைப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து வகுப்பு மற்றும் சாதி சனங்களும் ஒன்றுகூடி கொண்டாடும் விழாதான் ஓணம் பண்டிகை. சந்தைக்கும் விழாவிற்கும் எந்தத் தொடர்பும் அன்று கிடையாது. ஓணசத்யா என்கிற அறுசுவை விருந்துக்குத் தேவையான அனைத்து வகைக் காய்கறிகளும் தங்கள் வீடுகளிலேயே விளைவித்துக்கொண்டனர்.

விவசாயம் புறக்கணிக்கப்பட்டு அனைத்தையும் சந்தையில் வாங்கிக் கொள்ளும் போக்கும் மக்கள் ஒன்றுகூடி ஐக்கியப்படுவதும் மெல்ல மெல்ல காணாமல் போவதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. இன்று தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு பன்னாட்டு வர்த்தகர்களின் விளம்பரங்களைப் பார்த்து ஓணத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். சுற்றுச்சூழலை பாழ்படுத்திவிட்டு காசு மேல் காசு சேர்ப்பதில் குறியாய் உள்ளனர். அடிப்படையில் ஓணம் ஒரு அறுவடைத் திருவிழா என்பதை மறந்துவிட்டனர். பாரம்பரிய விவசாயம் அவர்களுக்குத் தேவையானதை அதிகபட்சமாக அளித்திருந்த போதிலும் அது அவர்கள் பணம் குவிக்க உதவவில்லை போலும்.

காணாமல் போன நெல்லும் மலர்களும்!

இயற்கையோடு இயைந்த தன்னிறைவை ஒழித்துவிட்டு அதிக மணம் ஈட்ட அலைகிறார்கள். அவர்கள் கொய்வதற்கு இன்று பூக்கள் இல்லை; அறுவடை செய்ய நெல்வயல்கள் இல்லை; ஆனால் இவைகள் அனைத்தையும் வாங்க அவர்களிடத்தில் பணம் கொட்டிக் கிடக்கிறது. பற்றிப் படரும் நுகர்வுக் கலாச்சாரத்தை எங்கும் பார்க்க முடிகிறது; சந்தைகளின் ஆதிக்கம் இல்லாத மக்கள் ஒன்றுகூடும் சூழல் நிறைந்த ஓணம் இல்லாதது கண்டு நான் வாடி வதங்குகிறேன்.

பணத்தைக் கொட்டி மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பூக்களங்களைத்தான் இன்று பார்க்க முடிகிறது. செடிகளிலும் கொடிகளிலிமிருந்து பறிக்கப்பட்ட தும்பா, முக்குட்டி, மந்தாரம், துளசி போன்ற உள்ளுர் மலர்களைக் கொண்டு மிக எளிமையான வடிவத்தில் அமைக்கப்படும் பூக்களங்களை நான் பெரிதும் விரும்புவேன்.

இன்று ஓணத்தையொட்டி ஆண்கள் அனைவரும் சாராய – பிராந்தி கடைகளுக்கு முன்பாகக் கூடுகிறார்கள். போதையேற்றிக் கொண்டு ஓணத்தைக் கொண்டாடி என்னைக் கேவலப்படுத்துகிறார்கள். முன்பு மக்கள் ஒன்றுகூடி விளையாடுவார்கள். ஆனால் இன்று பிளாஸ்டிக் பாட்டில்களும் சாராய பாட்டில்களும் சிதறிக் கிடக்கின்றன. மக்கள் பொதுவாக ஒன்று கூடுவதற்குப் பதிலாக போதை ஏற்றிக் கொள்வதற்காக நான்கைந்து பேர் அவர்களுக்குரிய இடத்தை தேர்வு செய்து அங்கே ஒன்றுகூடுகிறார்கள்.

சாராயத்தின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்றாலும் நான் ஒருபோதும் எனது மனக்களிடம் போதைப்பழக்கத்தை வளர்க்கவில்லை. சாராயத்தை வருவாய்கான ஒரு ஆதாயமாக இன்றைய அரசாங்கங்கள் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. மக்களின் நலனைக் குட்டிச்சுவராக்கிவிட்டுதான் அவர்கள் அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டுமா? வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்ட உங்களது அபிவிருத்தித் திட்டங்களால்  எமது மக்கள் நற்பண்புகளை இழந்ததோடு மட்டுமன்றி அவர்கள் வாழ்வில் நிம்மதியையும் இழந்தார்கள். இன்று எமது மக்கள் வசதிபடைத்தவர்களாக மாறியபோதும் அவர்கள் கூடிவாழும் கோடி நன்மையை இழந்தார்கள். உண்மையிலேயே அவர்கள் தங்களை வறியவர்களாக்கிக் கொண்டார்கள்.

பெண்களுக்கு இடமில்லை

பெண்களும் மற்றும் இளம் வயதுப் பெண்களும் பொது இடங்களில் இருக்கும் போது பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் அச்சப்படுவதை நான் பார்க்க முடிகிறது. எல்லாவிடங்களிலும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். எனது மக்கள் தங்களது உரிமைகள் குறித்து மிகவும் விழிப்போடு இருக்கிறார்கள். ஆனால் கடமைகள் என்று வரும்போது பாராமுகமாய் இருப்பது வேதனையளிக்கிறது. பெண்களைப் பொருத்வரை அவர்களுக்கு எந்த உரிமையும் உரிய இடமும் கிடையாது. ஆண்கள்  அவர்களை பொது இடங்களில் ஆபாசமான வார்த்தைகளால் நாகூசும்படி பேசுகிறார்கள். கேவலமாக நடத்துகிறார்கள்.

பொது சுகாதாரம் எங்கே?

முடைநாற்றமடிக்கும் குப்பைகளும் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் எங்கும் சிதறிக்கிடப்பதைப் பார்க்க முடிகிறது. பொது இடங்களில் ஆண்கள் மூத்திரமடிக்கிறார்கள். சுத்தமான கிராமச் சாலைகளின் ஓரங்களில் கோழிக் கழிவுகளும் பிளாஸ்டிக் பைகளும் கொட்டப்படுகின்றன. “நிர்மல் கிராமப் பஞ்சாயத்து உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்கிற விளம்பரப் பலகையின் அடியிலேயே இதுதான் நிலமை.  எல்லா நிர்மல் பஞ்சாயத்துகளிலும் என் மூக்கைத் தொடுவது முடைநாற்றம்தான். மக்கள் தங்கள் வீட்டுக் கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் திணித்து அதை அப்படியே சாலைகளில் வீசிவிடுகிறார்கள். ஒரு காலத்தில் சுகாதாரமாகத் திகழ்ந்த எனது கிராமங்கள் இன்று எப்படி இருக்கின்றன என்று பார்த்தீர்களா?

சாராய நெடி, குன்றுகளாகக் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளிலிருந்தும் வெளியேறும் முடைநாற்றத்தை சுவாசிக்கவும் மற்றும் நுகர்வுமயமாகிப்போன ஓணத்தையும் காண நான் வரவேண்டுமா சொல்? எல்லாவற்றையும் கடைகளிலேயே வாங்கி நுகர்வுக்கலாச்சாரத்திற்கு ஆட்பட்ட மக்கள் கொண்டாடும் ஓணத்தைக் காண நான் விரும்பவில்லை. மக்களை ஐய்கியப்படுத்தும் தம்மையை இழந்த, உயிரற்ற ஓணத்தைக் காண நான் விரும்பவில்லை. வர்த்தக சூதாடிகளால் கட்டுப்படுத்தப்படும் ஓணத்தில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை.


இப்படிக்கு

உங்களின்
மகாபலி
கேரளாவின் முன்னாள் சக்ரவர்த்தி  
கீழுலுகம்.”

*****

இதன் மீதான எனது பார்வை.....

ஆரியர்களால் கொன்றொழிக்கப்பட்ட மகாபலி சக்ரவர்த்தி!

”மகாபலி சக்கரவர்த்தி இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஓரு அரக்க அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். இந்து புராணங்களின்படி இவர் பக்த பிரகாலதனின் பேரன் ஆவார். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டு முதல் இரண்டடியால் பூமியையும், வானத்தையும் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து பூமியில் அமிழ்த்தி அவரை வதம் செய்தார். மகாபலி வாமனரிடம் தான் ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு (கேரளா) மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளே ஓணம் பண்டிகையாக கேரளா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.தமிழ்விக்கிப்பீடியா

இது மகாபலி சக்ரவர்த்தியைப் பற்றிய புராணக்கதை.

இப்படிப்பட்ட புராணக்கதைகள் தென் இந்தியாவில் பல உள்ளன. குடித்தலைவன் முதல் மகா சகக்ரவர்த்திவரை யாரெல்லாம் ஆரியர்களின் வருகையை / ஆதிக்கத்தை எதிர்த்தார்களோ அவர்களெல்லாம் ஏதாவதொரு வகையில் சதிக்குள்ளாக்கப்பட்டு ஆரியர்களால் கொன்றொழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆரியர்களை எதிர்த்த இம்மண்ணை ஆண்ட மூதாதையர்களெல்லாம் அரக்கர்கள் என சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களது தலைவர்கள் ஆரியர்களால்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்து விட்டால் அது ஆரியர்களி்ன் இருப்புக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பதால்தான்  இத்தகைய படுகொலைகளை மூடிமறைத்து கடவுளே அவதாரம் எடுத்து அரக்கர்களை அழித்ததாக புனை கதைகளை உருவாக்கி அதை மக்கள் ஏற்குமளவுக்கு நம்ப வைத்துள்ளார்கள். இத்தகைய கதைகளில் ஒன்றுதான் தீபாவளி நரகாசுரன் புராணக்கதையும்.

வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டையில் அந்தணர்களை துன்புறுத்திய கஞ்சனன் என்கிற அரக்கனை ஈஸ்வரன் விஸ்வரூபம் எடுத்து அவனது தலையை கொய்து போட்டானாம். தலை விழுந்த இடம் சீக்கராஜபுரமாம். (சீக்கராஜபுரம்) வலது காலை திருகிப் போட்டானாம். அது விழுந்த இடம் வடகாலாம் (வடகால்). அதேபோல இடது கால் விழுந்த இடம் தெங்காலாம் (தெங்கால்). இது லாலாப்பேட்டையின் தலபுராணம். கஞ்சனனுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அவ்வூர் மக்கள் விழா எடுக்கிறார்கள்.

இப்படி ஊருக்கு ஊர் ஒரு தலபுராணம் இருக்கத்தான் செய்கிறது.

இத்தகைய படுகொலைகளைக் கண்டு ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக மக்கள் விழா எடுப்பதுதான் கேவலத்திலும் கேவலம்.

ஊரான்


Monday, August 27, 2012

பொறாமை!


பழனியப்பனுக்கு வயது 54. சென்னை-கொரட்டூரில் உள்ள தனியார் காகித உற்பத்தி ஆலையில் பணிபுரிபவர்அம்பத்தூருக்கு அருகில் உள்ள கருக்கு கிராமத்தில் தனது மனைவி நாகவள்ளியுடன வசித்து வருகிறார். நாகவள்ளிக்கு வயது 50. முப்பது வயதிலேயே விவாகரத்து வாங்கிக் கொண்ட மகள் ராஜேஸ்வரியும் இவர்களோடுதான் தங்கியுள்ளார்.

சென்னைவாசி என்றாலும் பழனியப்பனுக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. சென்னையின் விலைவாசியோபோக்குவரத்து நெரிசலோஜெயாவின் பேருந்து கட்டண உயர்வோ இவரது வெறுப்புக்குக் காரணமில்லை. நிரந்தரமான வருவாய் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. நிம்மதியைத் தேடி இவர் அடிக்கடி கோவில் கோவிலாக வெளியூருக்கு யாத்திரை சென்றுவிடுவார்.

பக்தி முத்தியதாலோ அல்லது ஆன்மீக நாட்டத்தாலோ இவர் யாத்திரை செல்வதில்லை. பக்கத்து வீட்டுக்கார்களுடன்  தனது மனைவி அடிக்கடி சண்டை போடுவதை சகிக்க முடியாமல்தான் பழனியப்பன் யாத்திரை சென்றுவிடுகிறார்

இப்படி ஒரு முறை யாத்திரை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாரோ இல்லையோ தனது சண்டைக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என வலியுத்துகிறார் நாகவள்ளி. அதற்கு பழனியப்பன் மறுக்கிறார். அது மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர் தனது மனைவி மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது பழனியப்பனும் உடன் சென்றதாகத் தகவல். அதனால் ஆத்திரம் அடைந்த நாகவள்ளி கணவனைத் திட்டித் தீர்க்கிறார்

பழனியப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஆத்திரமடைகிறார். வீட்டில் இருந்த கடப்பாரையால் மனைவியின் மண்டையைப் பிளக்கிறார். பலத்த அடிபட்ட நாகவள்ளி சற்று நேரத்தில் மாண்டு போகிறார். பிறகு தனது மகள் ராஜேஸ்வரியையும் பழனியப்பன் கொலை செய்கிறார்

இது கதையல்ல. சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம்.

இங்கே கொலை செய்கிற அளவுக்குச் செல்வது அசாதாரணமானதுதான். ஆனால் அக்கம் பக்கத்து வீட்டாருடன் சண்டை என்பது இச்சமூகத்தில் மிகச் சாதாரணமானது.

இத்தகைய சண்டை-சச்சரவுகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது பொறாமை

"Neighbour's envyOwner's Pride" இது ஒனிடா (ONIDA) நிறுவனத்தின் பிரபலமான விளம்பரம். அதாவது ஒனிடா நிறுவனத்தின்  தொலைக்காட்சி உள்ளிட்ட எந்தப் பொருளை ஒருவர் வைத்திருந்தாலும் அது "அண்டை வீட்டுக்காரரின் பொறாமை; (பொருளின்) சொந்தக்காரரின் பெருமை" என பறை சாற்றிக் கொள்ளலாம் என்பது அதன் பொருள்.

இந்தப் பொறாமை அண்டை வீட்டாரோடு நிற்பதில்லை.

Neighbour என்ற ஆங்கிலச் சொல்லிற்கு -
அயலவர்
அருகிலுள்ளவர்
அக்கம் பக்கத்திலுள்ளவர்;
அண்டை வீட்டார்
அடுத்திருப்பவர்
அடுத்த தெருவினர்;
பக்க ஊரினர்
அண்டை நாட்டினர்
என சென்னை பல்கலைக்கழக "ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்" பொருள் கூறுகிறது.

இதில் அண்டை மாநிலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இதே Neighbour க்கு அதே சொற்களஞ்சியத்தில்
நட்புணர்ச்சியுடையவர்:
பாசமுடையவர்
பாசத்துக்குரியவர்
என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் Neighbour யாராக இருந்தாலும் நட்போடும், பாசத்தோடும் இருக்க வேண்டும் என பொருள் கொள்வதே பொருத்தமானதாக இருக்க முடியும்.
பாசத்தோடும் நட்போடும் பழக வேண்டியவர்களை ஒனிடா வந்து பொறாமை கொள்ள வைத்துவிட்டதோ!  ஆனால் ஒனிடா பொருள் இல்லாத போதும் பொறாமை குடி கொண்டுள்ளதே,  அண்டை வீட்டாருடன் சண்டை சச்சரவுகள் நீடிக்கின்றனவே! என்ன காரணம்?

மண்ணும் – நீரும், விதைத்திருக்கிற நெல்லும் ஒன்றே ஆனாலும் அண்ணனின் நிலத்தில் அதிக விளைச்சல் என்றால் தம்பிக்குப் பொறாமை.

தான் வளர்க்கும் பசு சினைகூட பிடிக்காத போது பங்காளியின் பசு இரண்டு கன்றுகளை ஈன்றால் அங்காளிக்குப் பொறாமை.

கோயில் - குளம் எனச் சுற்றித் திரிந்தாலும் தன் வயிற்றில் ஒரு புழு - பூச்சிகூட தங்காத போது நாத்தனாருக்கு மட்டும் பத்து மாதத்தில் அழகியக் குழந்தை - அதுவும் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மதனிக்குப் பொறாமை.

நேற்றுவரை நட்பாய் இருந்த பள்ளித் தோழன் திடீரென தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான். இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்திருந்தாலும் பள்ளிக்கூட நட்பை விடாமல் தொடர்ந்தவர்கள். இருவருக்குமே வேலை கிடைக்காத வரை நட்பு தொடர்கிறது. ஒருவனுக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டால் மற்றவனுக்கு பொறாமை. பள்ளிக்கூட நட்பும் அத்தோடு முடிவுக்கு வருகிறது.
ஒரே படிப்பு; ஒரே நிறுவனத்தில் வேலை. ஆனால் பதவி உயர்வில் தன்னை மிஞ்சும் சக ஊழியன் மீது பதவி உயர்வு கிடைக்காதவனுக்குப் பொறாமை.

வேலைக்குச் சேர்ந்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் சொந்தமாய் ஒரு வீடு இல்லையே என ஏங்கிக் கொண்டிருக்கும் ஆலை ஊழியருக்கு வேலைக்குச் சேர்ந்த மூன்றே ஆண்டுகளில் உடன் பணிபுரியும் சக தொழிலாளி சொந்தமாய் ஒரு வீடு வாங்கி விட்டால் சொந்த வீடு கனவு காணும் ஆலைத் தொழிலாளிக்குப் பொறாமை.

தனது மகன் நாற்பது மதிப்பெண்கள் பெறுவதற்கே திண்டாடும் போது பக்கத்து வீட்டுப் பையன் எண்பது மதிப்பெண்கள் எடுத்தால் அவன் மீது நாற்பது மதிப்பெண்கள் பெற திண்டாடும் மாணவனின் தாய்க்குப் பொறாமை.

தான் ஒருதலையாய் காதலிக்கும் கல்லூரி மாணவி வேறு ஒருவனை நேசிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவன் மீது இவனுக்குப் பொறாமை.

‘அழகாய்’ இருக்கும் சக மாணவி மீது ‘அழகில்லாத’ கல்லூரி மாணவிக்குப் பொறாமை.

கேசவர்த்தினிகளைத் தேய்த்துத் தேயத்து கூந்தலை வளர்க்க முயன்று தோற்றுப் போனவர்கள் நீண்ட கூந்தல் உள்ளவர்களைப் பார்த்து பொறாமை.

மீசை வளராத காளைகளுக்கு அரும்பு மீசைக்காரனைப் பார்த்தால் பொறாமை.

தங்களது தெருவுக்கு கிடைக்காத சாலை-மின்விளக்கு-ரேசன் கடை-குடிநீர்க் குழாய் உள்ளிட்ட வசதிகள் அடுத்தத் தெருக்காரனுக்கு கிடைக்கும் போது வசதிகள் கிடைக்காத தெருக்காரனுக்குப் பொறாமை.

பொங்கல் விழாவையொட்டி தங்களது ஊரில் நடந்த கபடிப் போட்டியில் அடுத்த ஊர்க்காரர்கள் கோப்பையைத் தட்டிச் சென்றால் போட்டி நடத்திய ஊர்க்காரர்களுக்கு கோப்பையை தட்டிச் சென்ற ஊர்க்காரர்கள் மீது பொறாமை.

அண்ட வந்த அடுத்த மாநிலத்துக்காரன் வசதியில் தன்னை விஞ்சும் போது மண்ணின் மைந்தனுக்குப் பொறாமை.

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றுவிட்டால் பாகிஸ்தான் மீது இந்தியனுக்குப் பொறாமை.

பொறாமை என்று வந்துவிட்டால்……

சளித்தொல்லையால் அவதிப்படும் பக்கத்து வீட்டுக் குழந்தையின் இருமலும் தும்மலும் கூட இவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

எங்கோ இருந்து காற்றில் மிதந்து வரும் தலைமுடிகூட இது மேல்வீட்டுக்காரி வேண்டும் என்றே நம்மீது போட்டது என முடிவு செய்து கீழ் வீட்டுக்காரி மேல்வீட்டுக்காரியை சண்டைக்கு இழுக்கிறார்.

பள்ளத்தை நோக்கி வழிந்தோடும் மழை நீர் தன்வாசல் பக்கம் எப்படி வரலாம் என பக்கத்து வீட்டுக்காரரை சண்டைக்கு இழுப்பவர்களும் தெருவுக்குத் தெரு இருக்கிறார்கள்!

காற்றில் கரைந்து காணாமல் போகும் அடுப்புப் புகைகூட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தன்னை காரணமாக வைத்து சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.

மேல் வீட்டுக்காரனின் பிஞ்சுக் குழந்தையின் மெல்லிய காலடிகள்கூட கீழ் வீட்டுக்காரனுக்கு பேரிடியாய் எதிரொலிக்கிறது.

தற்செயலாய் கை தவறி விழும் தேனீர்க் குவலையின் ஓசைகூட கீழ்வீட்டுக்காரனின் காதுகளை செவிடாக்கி விட்டதாக மாடியில் குடியிருப்பவனிடம் கூப்பாடு போடுகிறான்.

எங்கு நோக்கினும் பொறாமை…..

அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, மாமியார்-மருமகள், நாத்தனார்கள் என எந்த உறவையும் இந்தப் பொறாமை விட்டு வைக்கவில்லை.

பக்கத்து வீடு - எதிர் வீடு,  மேல்வீடு - கீழ்வீடு, அடுத்த தெரு - அடுத்த ஊர், அண்டை மாநிலம் - அண்டை நாடு என சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது இந்தப் பொறாமை.

பாமரன் முதல் படித்தவன் வரை,  ஏழை முதல் பணக்காரன் வரை, சிறுவர் முதல் முதியவர் வரை இப்படி ஆண் - பெண் பால் வேறுபாடின்றி எங்கும் இந்தப் பொறாமை வியாபித்திருக்கிறது.

பள்ளி - கல்லூரி மாணவர்கள்,  தொழிலாளி - முதலாளி, அதிகாரி - ஊழியர், விவசாயி - வியாபாரி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது இந்தப் பொறாமை.

இப்படி அயலவர்அருகிலுள்ளவர்அக்கம் பக்கத்திலுள்ளவர்; அண்டை வீட்டார்அடுத்திருப்பவர்அடுத்தத் தெருவினர்; அடுத்த ஊரினர்அண்டை நாட்டினர் என யாராக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்வது ஆகப் பெரும்பாலானோரிடம் நிலவுகிறது. இத்தகையப் பொறாமை மனதளவில் மட்டும் நில்லாமல் சண்டை - சச்சரவுகளுக்கு இட்டுச் செல்கிறது.

இத்தகைய பொறாமையின் காரணமாக பக்கத்து வீட்டுக்கார்களுடன்  தனது மனைவி அடிக்கடி சண்டை போடுவதை சகிக்க முடியாமல்தான் பழனியப்பன் தனது மனைவி நாகவள்ளியை கொலை செய்கிறார்.

பொறாமைக்கு ஆட்படாதவர்கள் சொற்பமே. ஆகப் பெரும்பாலானோரை ஆட்டிப் படைக்கும் இந்தகையப் பொறாமை குணம் மக்களிடையே எப்போதிருந்து குடி கொண்டிருக்கிறது?

கலி முத்திவிட்டது; அதனால்தான் கேடுகளும் அதிகரித்துவிட்டன என்று பேசுவதை இன்றும் நாம் கேட்க முடிகிறது. பழங்காலத்தில் அதாவது கலி முத்தாத காலத்தில் குற்றங்கள் குறைவாக நடந்தன; இன்று அவைகள் அதிகரித்துவிட்டன என்பதுதான் அதன் பொருள். பழங்கால புராணங்களையும், நீதி போதனைகளையும்,  மதக் கோட்பாடுகளையும் புரட்டினால்தான் எது உண்மை என்பது விளங்கும்.

மகாபாரதத்தில் பொறாமை

பொறாமை குணம் பல்வேறு தீய செயல்களுக்கும் பல்வேறு குற்றங்களுக்கும் அடிப்படையான காரணமாக இருக்கிறது. “புள்ளத்தாச்சியப் பாத்து புள்ள இல்லாதவ தன் வயித்த உலக்கையால் இடித்துக் கொள்வாளாம்”  இது இன்றும் கிராமப்புறங்களில் நிலவும் பிரபலமான வழக்கு மொழி. பொறாமையின் ஒருவகை வெளிப்பாடு இது. இவளுக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக அடுத்தவள் பிள்ளை பெறுவதைப் பார்த்து ஏன் உலக்கையால் தன் வயிற்றை இடித்துக் கொள்ள வேண்டும்? இந்த எண்ணம் எதனால் வருகிறது? யார் இப்படி எல்லாம் செய்யச் சொல்லி தூண்டினார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

பாண்டு மன்னன் தன் மனைவி குந்தியுடன் வேட்டையாட வனத்திற்குச் செல்கிறார். சில காலம் அவர்கள் காட்டிலேயே வேட்டையாடி வருகின்றனர். அஸ்தினாபுரத்தில் ஆட்சி செய்து வரும் திருதராட்டிரனின் மனைவி கருவுற்றிருந்தாலும் இரண்டு ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை. அதே வேளையில் வனத்தில் இருந்த குந்திக்கு குழந்தை பிறக்கிறது. இதைக் கேள்விப்பட்டு பொறாமை கொண்ட காந்தாரி தன் வயிற்றை ஓங்கி குத்துகிறாள். அப்பொழுது தன் வயிற்றிலிருந்து மாமிசப் பிண்டம் ஒன்றை பெற்றெடுக்கிறாள். இந்தப் பிண்டத்திலிருந்துதான் துரியோதனன்,  துச்சாதனன் என அண்ணன் தம்பிகள் நூறு பேர் வந்தார்கள் என்பது தனிக்கதை.

இளவரசனாக வேண்டும் என்பது துரியோதனனின் ஆசை. ஆனால் வயதில் மூத்தவன் தருமன். அவனே அப்பதவிக்கு உரியவன். அதனால் தான் இளவரசனாக முடியாது என்பதாலும் பீமன் முரடனாக இருப்பதாலும் இவர்கள் மீது துரியோதனன் வெறுப்பையும் பொறாமையையும் வளர்த்து வந்தான்.

ஒரு குறிப்பிட்ட நாளில் தருமனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறான் திருதராட்டிரன். பாழடைந்து கிடக்கும் காண்டவப் பிரஸ்தம் அவனுக்கு ஒதுக்கப்படுகிறது. பிறகு காண்டவப் பிரஸ்தம் புதுக்பிக்கப்பட்டு இந்திரப் பிரஸ்தம் எனும் புதிய பெயர் பெற்று மிளிர்வதைக் கண்ட கௌரவர்களுக்கு பாண்டவர்கள் மீது வெறுப்பும் பொறாமையும் உருவெடுக்கலாயின.

வில்வித்தை கற்பதற்கு கீழ்சாதிக்காரனுக்குத் தகுதி கிடையாது என துரோணாச்சாரியால் ஏகலைவன் விரட்டப்படுகிறான். ஆனால் எப்படியாவது வில்வித்தை கற்க வேண்டும் என்கிற ஆவலால் துரோணாச்சாரி பாண்டு மற்றும் திருததாட்டிரனின் புதல்வர்களுக்கு கற்றுக் கொடுப்பதை மறைவிலிருந்து பார்த்தே கற்றுக் கொண்ட ஏகலைவனின் திறமை கண்டு பொறாமை கொண்ட துரோணாச்சாரி ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சணையாகப் பெற்றுக் கொண்டு அவனை முடமாக்குகிறான்.

பாண்டவர்களை ஓர் ஆண்டு வனத்திற்கு அனுப்ப துரியோதனன் செய்த சதித்திட்டத்திற்கு திருதராட்டிரன் அனுமதி வழங்கியதே பாண்டு புதல்வர்கள் மீது திருதராட்டிரன் வைத்திருந்த பொறாமையே காரணம்.

இராமாயணத்தில் பொறாமை

கோசல நாட்டு ‘சக்ரவர்த்தி’ தசரதனுக்கு 350 மனைவிகள் இருந்ததாக கதைகள் சொல்கின்றன. அவர்களில் கௌசல்யாவுக்கு இராமனும் கைகேயிக்கு பரதனும் சுமித்ராவுக்கு இலட்சுமணன்-சத்ருக்கன என்கிற இரட்டையர்களும் பிள்ளைகள். இராமனுக்கு முடிசூட்டப்படக்கூடாது என்று பொறாமை கொண்ட கைகேயி தசரதனிடம் வரங்களைப் பெற்று இராமனை வனவாசத்திற்கு அனுப்பியதால் தனது மகன் பரதனுக்கு முடிசூட்டப்படுகிறது.

பொறாமை படைத்துள்ள தம்பி ஒருவன் நெருக்கடியான நேரத்தில் ஆக்கம் படைத்துள்ள தன்னுடைய அண்ணாவை  அடியோடு கவிழ்த்து விடுகிறான். விபீடணா, இப்பொழுது உன்னைச் சிதைத்துவிட எனக்கு இயலும். ஆயினும் உடன் பிறந்தவன் என்னும் ஒரே காரணத்தை முன்னிட்டு உன்னை நான் விட்டுவிடுகிறேன். என் காட்சியினின்று இக்கணமே மறைந்துபட்டுப்போ” இது இராவணன் விபீடணனைப் பார்த்துக் கூறியது.

இந்துக்களின் இதிகாசங்களாப் போற்றப் படும் இராமயணமும் மகாபாரதமும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இறுதி வடிவம் பெற்றதாகத் தெரிகிறது. இராமயணமும் மகாபாரதமும் நடந்த கதைகளா அல்லது கற்பனைகள் கலந்து புனையப்பட்ட கதைகளா என்கிற வாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் இவற்றில் சொல்லப்பட்டுள்ள பொறாமை உள்ளிட்ட பல கருத்துகள் அன்றைய சமூத்தில் நிலவியவை என்பதை நாம் கருத்தில் கொள்வதே இங்கு முக்கியம்.

பௌத்தத்தில் பொறாமை

இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாச கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள பொறாமை குணம் அன்றைய சமூகத்தில் நிலவியவை என்பதை முன்னறே கண்டோம். அதேபோல பொளத்த இலக்கியங்களிலும் இத்தகைய பொறாமை மக்களிடையே நிலவியதைக் காணமுடிகிறது.

பேராசை, பகைமை, மயக்கம், செருக்கு, பொறாமை முதலிய தீய மனப்பான்மைகளை பௌத்த ஓவியக்கலைகளில் காணமுடிகிறது. பௌத்த ஓவியக்கலையில் இந்தக்காட்சிகளை ஓவியர்கள் அற்புதமாக வரைந்திருக்கிறார்கள். 

வள்ளுவத்தில் பொறாமை

பொறாமை இல்லாமல் வாழ்வதே சிறந்த ஒழுக்க நெறி எனவும்,

பொறாமை இல்லாமல் இருப்பதே பெரிய பேறு எனவும்,

பொறாமைப் படுவது தனக்கே தீங்கைத் தரும் எனவும்,

அறிவுடையோன் பொறாமை கொண்டு அறன் அல்லாதவற்றைச் செய்யமாட்டான் எனவும்,

பொறாமைதான் ஒருவனுக்கு மிகப் பெரிய பகை எனவும்,

பிறருக்குத் தரும் பொருளைக் கண்டு பொறாமைப் படாதே எனவும்,

பிறர் ஆக்கங் கண்டு பொறாமைப்பட்டால் அது உன்னை வறியவனாக்கிவிடும் எனவும்,

பொறாமை என்கிற பாவி உன்னை நரகத்தில் தள்ளிவிடும் எனவும்,

பொறாமைப் படுபவனின் செல்வமும் - பொறாமையற்றவனின் வறுமையும் / துன்பமும் எதனால் என ஆராயப்படும் எனவும்,

பொறாமைப்பட்டால் பெருமையடைய முடியாது எனவும்

அழுக்காறாமை என்கிற தலைப்பில் வள்ளுவன் பொறாமை குறித்து பேசியுள்ளதைப் பார்க்கும் போது பௌத்தத்தைத் தொடர்ந்து சமணம் கோலோச்சிய காலத்தில் அதாவது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மக்களிடையே நிலவிய பொறாமை குணம் எந்த அளவுக்கு குடிகொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பைபிளில் பொறாமை:

“ஈசாக்கு பயிர்த்தொழில் மூலம் நூறு மடங்கு அறுவடை செய்து செல்வத்துக்கு மேல் செல்வம் சேர்த்து பெரும் செல்வந்தராகியதைப்பார்த்து பெலிஸ்தியர் அவர் மீது பொறாமை கொண்டனர். ஈசாக்கின் தந்தை அபிரகாம் காலத்தில் தோண்டிய கிணறுகளையெல்லாம் பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்துவிட்டனர்.” (தொடக்க நூல்: 26: 12-15)

“சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?” (நீதி மொழிகள்: 27: 4)

‘மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு, ஆகியவற்றைச் செய்யத்தூண்டும் தீய எண்ணெங்கள் வெளிவருகின்றன.” (மாற்கு: 7:21-22)

“வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக!” (கலாத்தியர்: 5:26)

”உங்கள் உள்ளத்தில் பொறாமையும், மனக்கசப்பும், கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம், உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம்” (யாக்கோபு: 3:14)

”ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால், எல்லா வகையான தீமையையும் வஞ்சகத்தையும் வெளிவேடம், பொறாமை, அவதூறு ஆகிய யாவற்றையும் அகற்றுங்கள்;” (பேதுரு: 2 1-3)
திருவிவிலியம் நெடுகிலும் இப்படி பொறாமை பற்றி ஏராளமான வசனங்கள் வருகின்றன. கி.மு 2000 லிருந்து கி.பி 95 வரையிலான காலகட்டத்தில் கிருத்தவம் பரவிய மத்திய தரைக்கடலையொட்டிய நாடுகளில் மக்களிடையே நிலவிய பொறாமை குறித்து நாம் அறிய முடிகிறது. இயேசுநாதரும் அதன்பிறகு வந்த பல்வேறு நற்செய்தியாளர்களும் இப்பொறாமை குணத்தை விட்டொழிக்குமாறு மக்களுக்கு போதித்தனர்; இன்றளவும் போதகர்கள் போதித்து வருகின்றனர்.

குர்ஆனில் பொறாமை

மற்றொருவன் தன்னைவிட அறிவாளியாக இருப்பதைப் பார்த்தோ அல்லது அவன் தன்னைவிட வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தோ பொறாமை கொள்வது அல்லாவின் ஏற்பாட்டில் குறைகாண்பதாகும் எனவும், பொறாமை கொள்வது நல்வழிப் பெறுவதையும் தடுத்துவிடும் எனவும், பொறாமை கொள்பவனின் தீங்கைவிட்டு அல்லாவிடம் பாதுகாப்புத் தேடுவது குறித்தும் பல்வேறு வசனங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபிய சமூகத்தில் மக்களிடையே பொறாமை குணம் நிலவியதை குர்ஆன் வசனங்கள் உறுதி செய்கின்றன.   

பொறாமை குறித்து விவேகானந்தர்

பகை, பொறாமை, ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்! என்று விவேகானந்தர் குறிப்பிடுவது தற்காலத்திலும் பொறாமை குணம் நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

உபதேசங்களால் பொறாமை அகலுமா?

புராண இதிகாச காலந்தொட்டு இன்று வரை பொறாமை குணம் மக்களிடையே வேரூன்றி உள்ளது. இந்து – பௌத்தம் - கிருத்தவம் – இஸ்லாம் உள்ளிட்ட மத போதனைகளாலும், திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களாலும் பொறாமை குணத்தை மக்களிடமிருந்து விரட்ட முடியவில்லை.

பொறாமை குணம் ஒரு குறிப்பிட்ட தனிமனிதனின் உள்ளத்திலிருந்து தானாக உருவாகும் குணம் அல்ல; பேராசை, பொறாமை, சோம்பல், உழைப்பில் வெறுப்பு ஆகிய அருவருக்கத்தக்க கெட்ட குணங்கள் உழைப்பாளி மக்களை தொற்றிக் கொள்ளச் செய்தது பூர்ஷ்வா சமுதாயம்தான் - அதாவது சொத்துடமைச் சமுதாயம்தான் என்பதை "நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்" என்கிற நூலில் மாக்ஸிம் கார்க்கி அவர்கள் அழகாக சுட்டிக்காட்டுகிறார். எனவே ஏற்றத்தாழ்விற்கு வழி வகுக்கும் சொத்துடமைச் சமுதாயம் நீடிக்கும் வரை பொறாமை குணமும் நீடிக்கும். உபதேசங்களால் பொறாமை குணத்தை ஒழிக்க முடியாது என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. மாறாக ஏற்றத்தாழ்வான இச்சொத்துடமைச் சமுதாயத்தை மாற்றியமைக்கும் போராட்டத்தினூடாகத்தான் பொறாமை குணத்தையும் மக்களிடமிருந்து அகற்ற முடியும்.

----------------------------------------------
குறிப்பு: "அண்டை வீட்டுக்காரரின் பொறாமை!" என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட கட்டுரையை கடைசி பாராவில் சில திருத்தங்களைச் செய்து மறு வாசிப்பிற்காக இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

ஊரான்