Friday, September 23, 2011

கரு நாடக மேடையில் பாசமழை பொழியும் பாரதமாதா!

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.50 000 கோடி மதிப்பிலான இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சட்ட விரோதமாக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடத்தப்பட்டுள்ளன.

இம் மூவரும் ஒரே அமைச்சரவையில் அமைச்சர்களாம்.

அவர்கள் உட்காருவதும் உறங்குவதும் ரூ.45 கோடி மதிப்புடைய தங்கத்திலான இருக்கைகள் மற்றும் படுக்கைகளில்தானாம். 

அவர்கள் உறங்கும் அறையில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கும் ரூ.100 கோடி மதிப்பிலான வைரக் கிரீடம்.

ரெட்டி உடன் பிறப்புகளில் ஒருவரான ஜனார்தன ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்குச் சார்த்திய ரூ.40 கொடி மதிப்பிலான வைரம் பதித்த கிரீடம்தான் இது. இது போன்ற ஒன்றுதான் பெல்லாரியில் அவரது இல்லத்தில் இருப்பது. திருப்பதி ஏழுமலையானுக்குக் கிடைத்த எப்போதுமில்லாத மிகப்பெரிய ஜாக்பாட் இதுதானாம். 

நடுவன் புலனாய்வுப் பிரிவு (CBI) கண்டெடுத்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கரண்டிகள்.


பெல்லாரியில் இருக்கும் ரூ.120 கோடி மதிப்பிலான அவர்களது மாளிகை.


பெல்லாரிக்கும் பெங்களூருவுக்கும் மதிய உணவு மற்றும் இரவு விருந்துக்குக்கூட ரெட்டி உடன் பிறப்புக்கள் ஹெலிகாப்டரில்தான் பயணிப்பார்களாம்.


உலகின் அதிநவீன சொகுசுக் கார்கள் ரெட்டி உடன்பிறப்புகளின் வீட்டில் எப்போதும் அணிவகுத்திருக்குமாம்.

பிள்ளைகள் என்னதான் குற்றமிழைத்தாலும் எந்தத் தாய்தான் விட்டுக் கொடுப்பாள்? பாரதத் தாய் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன?

தழைக்கட்டும் தாய்ப்பாசம்!
ஓங்கட்டும் பாரதத்தின் பெருமை.
பாரத் மாதா கி ஜே!

Saturday, September 17, 2011

பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாமா?

"திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது, இறை வழிபாட்டின் ஓர் அங்கம்.

இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.

எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்ரகத்துடன் வாழவைக்கும். தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கும்.  திலகத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும்போது "இதன் மூலம் நான் கடவுளை எப்போதும் மனத்தில் இருத்துகிறேன். இறைத் தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவிப் பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும் நேர்மையும் உண்மையும் நிறையட்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றித் திலகம் லட்சுமிகரமானது என்பர். எனவே குங்குமம் வைக்கும்போது, "ஸ்ரீயை நமஹ' என்றோ, "மகாலட்சுமியே போற்றி' என்றோ சொல்லியபடி வைத்துக்கொள்வது நலம் பயக்கும்."

17.09.2011 தினமணி வெள்ளிமணியில் குமரன் என்பவர் "பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்? என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இது.


"திலகம்,பொட்டு,குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது,  இறை வழிபாட்டின் ஓர் அங்கம்"


மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை என்பது மட்டுமே இங்கே முழு உண்மையாக இருக்க முடியும். இறை வழிபாட்டின் ஓர் அங்கம் என்பதுகூட முழு உண்மை அல்ல.  பொட்டு இல்லாமல் இருந்தால் அமங்கலி என இழிவாகப் பார்ப்பதால்தான் சமூகத்திற்குப் பயந்து பல பெண்கள் ஏதாவது ஒரு பொட்டை வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைத்துக் கொள்ளும் போதுகூட தன்னுடைய முகத்திற்கும், நிறத்திற்கும், அன்று உடுத்தியிருக்கின்ற உடைக்கும், காலில் அணிந்திருக்கும் செருப்புக்கும் பொருத்தமான ஒரு பொட்டைத்தான் பலரும் தேர்வு செய்து வைத்துக் கொள்கிறார்கள். அதுவும் 'ஸ்டிக்கர்' பொட்டுகளே இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இது பொட்டில் பொதிந்திருக்கும் இன்றைய அழகியலின் உளவியல்.
அதனால்தான் முகங்களிற்கு ஏற்ற பொட்டு, எந்த வடிவமான முகத்திற்கு எந்த வடிவ பொட்டு அதாவது சதுர முகம், வட்ட வடிவ முகம், முக்கோண வடிவ முகம், இதய வடிவ முகம் என முக வடிவத்திற்கு ஏற்ப பொட்டை தேர்வு செய்யச் சொல்கிறார்கள்.


நெற்றியில் எட்டனாவை ஒட்டியதைப் போல வைக்கப்படும் குங்குமப் பொட்டுகள் பட்டிக்காட்டின் அடையாளங்கள். உற்றுப்பார்த்தாலும் தெரியாத 'ஸ்டிக்கர்' பொட்டுகள் நவீன காலப் பெண்களின் அடையாளங்கள். இன்றையப் பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டுமா என்ன?

நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் நெற்றிப் பொட்டை குளிர்விப்பதற்கும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுப்பதற்கும் தீய சக்திகள் நம்மை அணுகாமல் இருப்பதற்கும்  தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காப்பதற்கும் பொட்டு பயன்படுகிறது என்பது உண்மையானால் இத்தகைய நன்மைகள் கிடைப்பது நல்லதுதானே. பிறகு ஏன் விதவைகள் பொட்டு வைத்துக் கொள்ளக்கூடாது என இச்சமூகம் தடை போடுகிறது. விதவைகள் மட்டும் இத்தகையப் பயன்களைப் பெறக்கூடாதா?

வெள்ளிமணி கட்டுரை பற்றி " விதவைகளை ஏன் குங்குமம் இடக்கூடாது என்று அவர்களை ஓரங்கட்டுகின்றோம்?"  என்று கார்த்தி என்ற வாசகர் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

பொட்டு வைத்துக் கொள்ளாதவர்கள் சாதனைகள் எதையும் செய்வதில்லையா? அல்லது பொட்டு வைத்தப் பெண்கள் மட்டும்தான் சாதனைகள் புரிகிறார்களா? எதற்காகப் பொட்டுக்கு இத்தனை அறிவியல் சாயம் பூசுகிறார்கள்? நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் பொட்டு முக்கியப் பங்காற்றுகிறது என்பது உண்மையானால் இந்துப் பெண்கள்தானே, அதுவும் பொட்டு வைத்துக் கொள்கிற இந்துப் பெண்கள்தானே அறிவின் உச்சாணியில் இருக்க வேண்டும். 

பொட்டு வைப்பதால் இவ்வளவு பயன் என்றால் ஆண்களும் அதுபோல வைத்துக் கொள்வதில்லையே ஏன்? இந்து மதத்தின் 'பெருமையை' மேலை நாடுகளில் பறைசாற்றிய விவேகானந்தர்கூட பொட்டோடு இருக்கும் படத்தைக் காணமுடியவில்லை. அவர் நெற்றியில் பொட்டு இல்லை என்பதால் அவரிடம் பக்தி இல்லை என்று பொருளாகிவிடுமா?
தீய எண்ணங்கள் எழாமல் பொட்டு பாதுகாக்கிறதாம்.இதை ரஞ்சிதாக்களிடமும் நித்தியாநந்தாக்களிடமும்தான் கேட்க வேண்டும்.

இந்து மதத்தின் அடையாளமாக மட்டுமே தோன்றிய பொட்டு இன்று அழகியலின் ஒரு கூறாக மாறிவிட்டது. பொட்டு வைத்துக் கொண்டால் நீ அழகாய் இருக்கிறாய் என்று ஒருவர் சொல்லிவிட்டால் அந்தப் பொட்டை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். பொட்டு உனக்கு நல்லா இல்லை என்று சொல்லிவிட்டால் அடுத்த கணமே அந்தப் பொட்டு குப்பைத் தொட்டியில் ஒட்டிக் கொள்கிறது. இதற்கு மேலே பொட்டில் ஒரு வெங்காயமும் இல்லை.

மதம் மாறிய கிருத்தவர்களிடம் இந்து மதத்தின் எச்சங்கள் இருப்பதால்தான் அவர்களிடமும் பொட்டு இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

பொட்டு கலைந்துவிட்டால் தாலிக்கு ஆபத்து என்று சொல்லித்தான் பொட்டைப் பாதுகாத்து வருகிறார்களே தவிர பொட்டில் இருக்கும் அதி உயர்ந்த 'அறிவியல் உண்மைகளால்' அல்ல. பேருந்துகளில் ஏற்படும் நெரிசலும், சென்னைப் புழுக்கமும் சேரும் போது கெட்டியாய் ஒட்டிய 'ஸ்டிக்கர்' போட்டுகளே காணாமல் போகும் போது குங்குமப் பொட்டின் கதி என்ன என்பதை எண்ணிப் பாருங்கள்! சென்னையில் ஆகப் பெரும்பான்மையான பெண்கள் பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் விதவையாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாறி வரும் சமூகச் சூழலில் பண்பாட்டு விழுமியங்கள் வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது. "அய்யய்யோ பொட்டு போச்சே" என ஒப்பாரி வைப்பதாலோ அல்லது அதற்கு அறிவியல் சாயம் பூசுவதாலோ அவற்றை பாதுகாக்க முடியாது. பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை. அமங்கலி - சுமங்கலி என மாதர்தம்மை இழிவு செய்யும் பொட்டு இருக்க வேண்டிய இடம் நெற்றியல்ல,  குப்பைத் தொட்டி.

Saturday, September 10, 2011

தமிழ் மொழிச் சிதைவைத் தடுக்க முடியுமா?

"நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது; மொழி சித்திரவதை செய்யப்படுகிறது. காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தாலும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளதே!"

இப்படி தினமணி கதிரில் (11.09.2011) தனது வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளார் கவிக்கோ ஞானச்செல்வன். ஒவ்வொரு வாரமும் தினமணி கதிரில் நான் முதலில் மடிப்பது இவரது "பிழையின்றி தமிழ் பேசுவோம்,  எழுதுவோம்!" என்ற கட்டுரையைத்தான்.

நம்மை அறியாமலேயே நாம் செய்யும் தவறுகளை களைந்து கொள்ள அவரின் கட்டுரைகள் பெரிதும் துணைபுரிகின்றன. இந்தப் பதிவை அவரிடம் கொடுத்தால்கூட வேற்று மொழிக் கலப்பு, இலக்கணப் பிழை என சில-பல குறைகளை மிக எளிதில் பட்டியலிடுவார். 

இட்லி விற்கும் ஆயாகூட இப்பொழுது ஆங்கிலக் கலப்பின்றி பேசுவதில்லை; பேசுவதில்லை என்று சொல்வதைவிட பேச முடிவதில்லை. அப்படியிருக்க கருவறையில் இருக்கும் போதே ஆங்கிலத்தின் ஒலியை சுவாசிப்போரிடம் எப்படித் தமிழை எதிர்பார்க்க முடியும்?.

தொலைக்காட்சிகளில் தமிழ்க்கொலை

தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் பேசும் போது இத்தகைய தவறுகள் நமக்கு குறையாகத் தெரிவதில்லை. ஆனால் பிறர் செய்யும் போது மட்டும் நமக்கு எரிச்சல் வருகிறது. அதிலும் குறிப்பாகத் தொலைக்காட்சி ஊடகங்களில் நடக்கும் மொழிக் கொலையை பார்க்கும் போதும், கேட்கும் போதும் மொழிக் கொலையைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டுவந்து இவர்களை தண்டிக்கலாமே என்றுகூடத் தோன்றுகிறது.

ஆங்கில மொழிக் கலப்பு எந்த அளவுக்குத் தமிழை கலங்களாக்கியிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டுகள் சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. ஆனால் உச்சரிப்பில் நடக்கும் மொழிக் கொலை என்பது மொழியை நேசிப்போரை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது என்பதை மறுக்க முடியாது. அந்த வேதனை சில சமயம் வெறுப்பாக மாறி தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஆவலைக் குறைத்து நம்மை விரத்திக்குள்ளாக்குகிறது. இது ஏதோ இருவருக்கிடையில் நடக்கும் உரையாடல் அல்ல; மாறாக இது கோடிக்கணக்கான மக்களிடம் செல்கிறது. இதுதான் சரியான உச்சரிப்பு எனத் தங்களை அறியாமலேயே கேட்பவர்கள், பார்ப்பவர்களை பிழையான தமிழுக்கு இட்டுச் செல்கிறது.

ல்லிக்கூடம், மன்வாசனை, பாராலுமன்றம், வெட்றிமான், மள்ளிகைப்பூ - இதன் பட்டியல் வெகு நீளமானது - என உச்சரிக்கும் போது இவர்கள் மீது நமக்கு வருகிற எரிச்சல் இருக்கிறதே வங்கக் கடலில் முங்கி எழுந்தாலும் அடங்குவதில்லை. மக்கள் தொலைக்காட்சி உட்பட அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் இதுதான் நிலை. காணொளிகள் மட்டுமல்ல வானொலிகளுக்கும் இது பொருந்தும்.

தெரியாமல் ஒருவர் செய்கிற தவறை பிறர் சுட்டிக் காட்டினாலோ அல்லது தானாக உணர்ந்தாலோ தவறுகளை திருத்திக் கொள்கிறார்கள். ஆனால் வேண்டும் என்று தெரிந்தே தவறு செய்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிதே; மாறாக இத்தகையோருக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தால் மட்டுமே மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. 

ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில் தமிழை இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ படிக்கும் மாணவனிடம் உள்ள தமிழ் அறிவும்; ஊராட்சி- நகராட்சி அரசுப்பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்தை ஒரு பாடமாக படிக்கும் மாணவனிடம் உள்ள ஆங்கில அறிவும் ஒன்றாகத்தான் இருக்கிறது. பிந்தையவர்கள் 'பட்லர் இங்கிலீஸ்' பேசுகிறார்கள்; முந்தையவர்கள் 'மார்வாடி தமிழ்' பேசுகிறார்கள். இதில் யாரை நொந்து கொள்ள? மாணவர்களையா? அல்லது ஆசிரியர்களையா? அல்லது ஆங்கில வழிக் கல்விக்கு அனுப்பிய தமிழர்களையா? 

மொழியா-வேலையா? எது முதன்மையானது?

மக்கள் ஏன் ஆங்கில வழிக் கல்விக்கு ஓடுகிறார்கள்? தமிழில் படித்தால் வேலை கிடைக்காது,  எதிர்காலம் என்னாவது என்கிற அச்சம் அவர்களை ஆங்கில வழிக் கல்வியை நோக்கி இழுத்துச் செல்கிறது. அப்துல் கலாம் எல்லாம் தமிழில் படித்துவிட்டு விஞ்ஞானி ஆகவில்லையா என்றெல்லாம் கேள்வி கேட்பதால் மட்டும் தமிழின் பக்கம் மக்களை ஈர்த்துவிட முடியாது. நான்கூட அன்று ஒரு குக்கிராமத்தில் தமிழ் வழியில் படித்துவிட்டு பின்னர் தலைநகரில் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றவர்களை பின்னுக்குத் தள்ளி முதல் மாணவனாக வந்திருக்கிறேன். இது பழைய கதை. தமிழின் மீதுள்ள பற்றால் எனது பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து அவர்களின் கண்டனங்களையும் சந்தித்து வருகிறேன். 

மொழி மீதான பற்று என்பது ஒரு பக்கம்; எதிர்கால வாழ்க்கைக்கான தேடல் மற்றொரு பக்கம். இதில் இருபக்கமும் நியாயம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஒன்றை விட்டுக் கொடுத்தால் மற்றொன்று பறிபோகிறது. எதை விட்டுக் கொடுப்பது என வரும் போது பலரும் மொழியைத்தான் விட்டுக் கொடுக்கிறார்கள். இது நியாயமானது இல்லை என்றாலும் அதுதானே எதார்த்தம். அப்படியானால் மொழி அழிந்தால்,  சிதைந்தால் பரவாயில்லையா என்கிற கேள்வி எழுகிறது. 

இந்தி படித்தால் தமிழ்நாட்டில் சுண்டல் விற்கலாம்

அன்று இந்தி எதிர்ப்பின் மூலம் எங்களை இந்தி படிக்க விடாமல் தடுத்து விட்டார்கள் என இன்றும்கூட வசை பாடுபவர்கள் இருக்கிறார்கள். இந்தி படித்திருந்தால் நாங்கள் அப்படியாகியிருப்போம்; இப்படியாகியிருப்போம் என அங்கலாய்க்கும் பேர்வழிகளிடம் நான் அடிக்கடி கேட்பது இதுதான். வட இந்தியாவில் பிறந்து இந்தியிலேயே பேசி, இந்தியிலேயே படித்தும் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் இன்று தமிழகம் வந்து பானிபூரி விற்று தமிழன் கொடுக்கும் காசில் வயிற்றைக் கழுவுகிறானே, அவனுக்கு இந்திப் படிப்பு ஏன் உதவவில்லை என்று? 

இந்தியைத் திணிப்பதனால் இந்தி வாழுமே ஒழிய இந்தியைக் கற்றுக் கொண்டவன் வாழ்ந்து விட மாட்டான். ஆனால் இன்று ஆங்கிலத்தை யாரும் திணிக்கவில்லை. திணிக்காமலேயே ஆங்கிலம் ஏன் ஆதிக்கம் செலுத்துகிறது? அதற்குக் காரணம் ஒன்று அது தொழில் மொழியாகவும் (professional language) நடைமுறையில் ஆட்சி மொழியாகவும் (official language) இருப்பதுதான். தொழில் மொழிதான் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. இது ஆங்கிலத்திற்குப் பொருந்தும் என்பது இன்றைய எதார்த்தம். 

தமிழ் மொழிச் சிதைவைத் தடுக்க முடியுமா?

தமிழ் அரைகுறை ஆட்சி மொழியாக மட்டும்தான் இருக்கிறது. அது தொழில் மொழியாகவும் இல்லை. தொழிலில் ஆதிக்கம் செலுத்துகிற மொழியே மக்களிடம் இரண்டறக் கலக்கிறது.  தமிழ் தொழில் மொழியாகவும் முழுமையான ஆட்சி மொழியாகவும் மாறாத வரை தமிழ் மொழியின் சிதைவை யாராலும் தடுக்க முடியாது. இது தமிழுக்கு மட்டுமல்ல பிற மாநில மொழிகளுக்கும் பொருந்தும். மொழிக் கொலைக்காக கண்ணீர் வடிப்பதைவிட தமிழை கோலோச்சும் தொழில் மற்றும் ஆட்சி மொழியாக மாற்றவல்ல ஒரு சமூக அமைப்புக்காக குரல் கொடுப்போம். வேலைவாய்ப்பும் பெருகும்; தமிழும் வாழும்.

ஊரான்