Friday, June 28, 2019

அரசியல் எனக்குப் பிடிக்கும்!


பெல்,  இராணிப்பேட்டை “அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின்” 20- வது சந்திப்பு 22.06.2019 அன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் ச.தமிழச்செல்வன் எழுதிய “அரசியல் எனக்குப் பிடிக்கும்” நூல் குறித்து தோழர் ஆ.கலைவாணன் மற்றும் அழகிய பெரியவன் எழுதிய “தேனீர் மேசை” நூல் குறித்து தோழர் கோ.இளங்கீரன் ஆகியோர் உரையாற்றினர். இருவருமே அந்நூல்களை ஆழமாகப் படித்து வந்து விளக்கினர்.

தோழர் அ.கிருபா வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் பொன்.சேகர் கூட்டத்திற்கு தலைமை ஏற்று நெறிப்படுத்தினார். இறுதியில் தோழர் ரெ.மேகநாதன் நன்றி கூறினார்.

மின்வெட்டு மற்றும் மழையின் குறுக்கீடுகளைப் புறந்தள்ளி திறளான வாசகர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

அழகிய பெரியவனின் தேநீர் மேசையில் 17 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு கட்டுரைதான் தேனீர் மேசை. தனது ஊரான பேரணாம்பட்டு மற்றும் தனது மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் ஆறுகள் குறித்தும் அங்குள்ள மக்கள் குறித்தும் தனது அனுபவங்களை வாசகர்களோடு பகிர்கிறார் நூலாசிரியர்.  நேரடிக் காட்சிப் பதிவுகளை ஏற்படுத்தும் வல்லமை இக்கட்டுரைகளில் மிளிர்கிறது. கட்டுரைகள் எழுதப்பட்ட காலம் குறிப்பிட்டிருந்தால் காலத்தோடு பொருத்திப் பார்க்க உதவியாக இருந்திருக்கும்.

கடினமான அரசியலை மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ச.தமிழ்ச் செல்வனின் அரசியல் எனக்குப் பிடிக்கும் நூல் எழுதப்பட்டுள்ளது. அரசு என்றால் என்ன? அது யாருக்கானது? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. மனித சமுதாய வளர்ச்சிப் போக்கில் அரசு எப்பொழுது தோன்றியது அது யாருக்குச் சேவை செய்தது  / செய்கிறது என்பதை ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் தொடங்கி சோசலிச சமூகம் வரை சுறுக்கமாக அதே வேளையில் புரியும்படி விளக்கி உள்ளார். சமூக மாற்றத்தை விழைவோர் ஒரு தொடக்க நூலாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல் நூல் என்றால் அது மிகை அல்ல.






 
தொடர்புடைய பதிவுகள் 



 
 
 


Saturday, June 15, 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!.......இறுதிப் பகுதி

அதிகாலை மூன்று மணி. சொந்தமெல்லாம் வந்தாச்சு. பசுவும் கன்றும் வண்டியிலே வந்து இறங்கியாச்சு. கணவனும் மனைவியும் வேட்டி புடவை அலங்காரத்துடன் முகூர்த்தத்திற்குத் தயார். ஆம். கணவனும் மனைவியும் இங்கே மீண்டும் ஒரு முறை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். எதுக்கு இதெல்லாம்? உஷ். வாயை மூடு!

எல்லாப் பொருளும் தயாரா என மீண்டும் ஒரு முறை சோதிக்கிறான். ஏதாவது ஒன்று குறைந்தாலும் இந்த நேரத்தில் எங்கே போய் தேடுவது என்பதைவிட அது இல்லாமல் பூஜை செய்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்ச உணர்வு அவனை துரத்துகிறது. பதட்டமடைகிறான். மணி நான்கு ஆகியும் ஐயர் வரவில்லை. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஐயர் வந்த பாடில்லை. மேலும் படபடப்பு. தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவுட் ஆப் கவரேஜ் என்றது அலை பேசி. பதட்டம் மேலும்கூட அக்கம் பக்கம் நிற்பவர்கள்கூட யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. வேர்த்து விறு விறுத்துப் போனது. ஒரு வழியாக ஐந்து மணிக்கு ஐயர் வந்த போது பெரு மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

அக்கினி வளர்க்க செங்கற்களை அடுக்கி அடுப்பை தயார் செய்தார் ஐயர். அடுத்து வாழை இலையை விரித்து அரிசியைப் பரப்பி கழுத்துள்ள பித்தளைக் குவலையை வைத்து அதன் மேல் தேங்காயை குத்தி நிறுத்தி வெற்றிலையோடு குறுக்கும் நெடுக்குமாக நூலால் கட்டுப் போட்டார். நீங்கள் எல்லாம் நூலுக்கு கட்டுப்பட்டவர்கள்தான் என்பதை சொல்லாமல் உணர்த்தியது அவர் போட்ட கட்டு. எடுபிடி வேலைகளுக்கு ஒரு அப்ரண்டிஸ் ஐயரும் உடன் வந்து ஐயரின் ‘தொழிலை’ கச்சிதமாய்க் கற்றுக் கொண்டிருந்தார்.

ஹோம குண்டத்தில் தீ மூட்டினார் ஐயர். தவக்ளா தளதளா தவக்ளா தளதளா என ஐயர் மந்திரம் சொல்ல அதையே இவனும் சொல்ல முயற்சிக்க அடுத்த மந்திரத்திற்குத் தாவினார் ஐயர். அவன் சொல்வது இவனுக்குப் புரியவில்லை. இவன் சொல்வது அவனுக்குப் புரியவில்லை. ஒட்டு மொத்தத்தில் எவருக்கும் புரியாத ஒரு பாஷையில் மந்திரத்தை ஓதி ஆறு மணக்கு ஹோமத்தை முடித்தார். காலை 4-6 மணிதான் ஹோமத்திற்கான நேரம். அதை மீறினால்….பிறகு அண்டகாசுரன்தான்.

பசு கன்று இரண்டையும் வீட்டின் உள்ளே ஓட்டி வந்தனர். சாணியும் போடவில்லை. மூத்திரமும் போக வில்லை. ஏற்கனவே வண்டிப் பயணத்தின் போதே எல்லாவற்றையும் கழிந்திருக்கும் போல. வெளியில் கட்டச் சொல்லி வாயில் எதை எதையோ திணித்தார்கள்.

கணவன்-மனைவி இருவரும் ஜோடியாக அமர்ந்தனர். இருவருக்கும் கல்யாணத்தை செய்து வைத்தார். இதற்குள் ஒரு அரை மணி நேரம் ஓடிவிட்டது. மீண்டும் பசுவையும் கன்றையும் புட்டத்தில் குத்திக் கொண்டே உள்ளே ஓட்டி வந்தனர். சாணி-கோமியம் கான்டிராக்ட் கண்டிஷன் என்பதால் இவற்றைத் தருவது  மாட்டு ஏஜென்டின் கடமை. அய்யய்யோ! மாடு என்று சொல்லி விட்டேனே! ஏதேனும் தோஷம் வந்து விடுமோ! இதற்குப் பரிகாரம் செய்தாக வேண்டுமே!. ஐயருக்கான அடுத்த கலெக்சன் ரெடி.

மணி ஏழை நெருங்கும் நேரம். புட்டத்தில் குத்துன குத்தில் தர்..தர..தர..தர் என பசுவிடமிருந்து கோமியம் கொட்ட அதை ஒரு பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டனர். கோமியத்தோடு தட்தட்டென சாணம் போட ஏதோ பொண்டாட்டி பிரசவித்ததைப் போல பூரிப்படைந்தான் வீட்டுக்காரன். வீடு முழுக்க கோமியம் தெளிக்க முகூர்த்தமும் சரியாய் 7 மணிக்கு முடிந்தது. 6-7 மணிதான் முகூர்த்த நேரம். இதையும் மீறக்கூடாது என்பது பார்ப்பான் வகுத்த விதி. மீறினால்…. அண்டகாசுரன்தான். வீட்டைக் கட்டிப் பார். கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பார்களே. அது இதுதானோ!

வந்தவர்களுக்கு பந்தி பரிமாறப்பட்டது. அட இவ்வளவு காலையிலேவா? என கேட்கக் கூடாது. வாஸ்து பசியோடு காத்துக் கிடக்கிறானல்லவா.
ஒரு வழியாய் கிரகப் பிரவேசம் பேஷா முடிந்தது.

ஏதோ வீட்டைக் கட்டினோமா. குடி போனோமா என்றில்லாமல் எதற்கு இவ்வளவு பூஜை புனஸ்காரங்கள்? இங்கே இரண்டு முக்கியமான நிகழ்வுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒன்று பசுமாட்டை வீட்டிற்கு உள்ளே ஓட்டி வருவது. மற்றொன்று வீடு முழுக்க கோமியம் தெளிப்பது. இவை இரண்டும் தீட்டுக் கழிப்பு நிகழ்வுகள். புது வீட்டில் எதற்காக தீட்டுக் கழிக்க வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த வீட்டைக் கட்டிய தொழிலாளர்களில் சண்டாளர்கள் அதாவது பறையர்கள் இருக்கலாம். வீடு வேலை நடக்கும் போது இவர்களில் யாராவது அங்கு வந்து போயிருக்கலாம். அப்படி அவர்கள் வந்து போனதினாலே வீடு அசுத்தமாகி விட்டது. அதாவது தீட்டாகி விட்டது. இதற்காகத்தான் இந்த நிகழ்வுகள். எனவே மேற்படி முறையில் புது மனை புகு விழா நடத்துவது என்பது ஒரு தீட்டுக் கழிப்பு நிகழ்வே!

இப்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு வகுத்து வைத்த சட்டம். மனு சொல்கிறான்.

“வீடு முதலானவற்றிற்கு சண்டாளச் சாதிகளால் அசுத்தம் நேரிட்ட போது விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணையெடுத்தப்பாற் போடுதல், பசு மாட்டையொருநாள் வசிக்கும்படி செய்தல் இவ்வைந்தினாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது”   (மனு 5-124)

மேற்கண்ட முறையில் கிரகப் பிரவேசம் செய்வது தீண்டாமையை கடைபிடிக்கும் ஒரு வன் கொடுமை. அதற்காக இதை ஏற்பாடு செய்த வீட்டு உரிமையாளரையும் செய்து வைத்த ஐயரையும் ஏன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது?

இன்று இந்தப் பூசை புனஸ்காரங்களை சண்டாளர்களே செய்வதுதான் ஆகக் கொடுமையிலும் கொடுமை.

முற்றும்.

ஊரான்

குறிப்பு: 1. சண்டாளன் என்பவன் தீண்டத்தகாத பறையன் என்கிறான் மனு. சூத்திர ஆணுக்கும் பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்தவன்தான் சண்டாளன் (மனு 10-30)

2. மனு 5-124 மிக ஆழமான, நுட்பமான பொருள் கொண்டது. அதை நடைமுறையில் இன்றும் நாம் காண முடியும். இது குறித்து வேறு ஒரு சமயத்தில் விரிவாகப் பேசலாம்.

3. இந்தக் கட்டுரைத் தொடர் நண்பர் ஒருவரின் இல்லத் திறப்பு விழாவில் உரையாற்றுவதற்காக தயார் செய்யப்பட்டது.

தொடர்புடைய பதிவுகள்:

Thursday, June 13, 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!..... தொடர்-3


மனை வாங்கி, பூமி பூஜை போட்டு, இடைக்கால மின் இணைப்புப் பெற்று, போர் போட்டு, கடைக்கால் எடுத்து, பிளிந்த் போட்டு, சுவர் எழுப்பி, லாப்ட் கட்டி, இங்கே லிண்டில் போட்டு, தளம் அமைத்து, மாடிப்படி அமைத்து, வாசக்கால் ஜன்னல் வைத்து, அவைகளுக்கு கதவுகள் போட்டு, கூடவே செப்டிக் டேங்க் கட்டி, சுற்றுச் சுவர் எழுப்பி, கேட் அமைத்து, ஒயரிங் வேலை முடித்து, தரைக்கு கிரானைட்டோ டைல்சோ போட்டு, பிறகு சுவர்களுக்குப் பட்டிப் பார்த்து, பிரைமர் அடித்து, மீண்டும் பட்டிப் பார்த்து, இறுதி வண்ணம் பூசி–கதவு ஜன்னல்களுக்கும் சேர்த்தே–மின் இணைப்பை நிரந்தரமாக்கினால் வீடு ரெடி. ஆனால் குடி போக முடியுமோ! கூடாது.

மனை வாங்கிய நாள் முதல் வீடு கட்டி முடிக்கப்படும் நாள் வரை இங்கே எத்தனையோ முன் பின் முகம் தெரியா தொழிலாளர்கள் வியர்வை சிந்தி இருப்பார்கள். அவர்களது உழைப்பை நீக்கி விட்டால் அங்கே எஞ்சி இருப்பது வெறும் மண் மட்டும்தான்.

அரையும் குறையுமாக, வெள்ளை அடிக்கும் போதே ஐயரைப் பார்த்து நாள் குறிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை என்றால் சொந்த பந்தம், சுற்றம் நட்பு புடை சூழ எல்லோரையும் அரவணைக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் புரோகிதனுக்கு என்றைக்கு சாத்தியமோ அந்த நாளே உமக்கு ஷேமமான நாள் என்பதால் நீரும் அதற்குத் தலையை ஆட்டி, அட்வான்சை தட்டிலே வைத்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும். முழுமையாக முடித்துவிட்டு கிரகப் பிரவேசம் செய்தால் பார்க்கிறவா கண்ணுட பட்டுடுமாம். ஆகவே குறையா இருக்கும் போதேதான் பிரவேசம் நடத்தனுமாம். குறைப் பிரசவத்தை ஜனங்களே ஏற்கும் போது நீர் ஏனய்யா இடையில் வம்புக்கு வருகிறீர்!

ஐயரைப் பார்த்தாச்சு. நாளும் குறிச்சாச்சு. பதட்டம் தொற்றிக் கொள்கிறது. வீட்டிற்காக உழைத்தவனை அழைக்கிறோமோ இல்லையோ சொந்த பந்தங்களில் ஒருவர்கூட விடுபட்டு விடக்கூடாது. நட்பில்கூட எதுவும் மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போட்ட மொய்யை குறைவில்லாமல் மீட்டெடுக்க வேண்டுமல்லவா?

ஐயர் கொடுத்தப் பட்டியலைக் கடைக்காரனிடம் நீட்டினால் ஒரு சிலவற்றை இல்லை என்கிறான். இருப்பதை வாங்கிக் கொண்டு மற்றவைகளையும் பிற கடைகளில் தேடிப் பிடித்து பேரம் பேசி சொஞ்சம் சில்லரைகளை மிச்சப்படுத்திய தெம்போடு திரும்புகிறான். ஐயருக்கு கட்ட வேண்டியதில் பேரம் பேசியிருந்தாலே சில நூறையாவது மிச்சப்படுத்தியிருக்கலாமே! அப்படி எல்லாம் யோசிக்கவே கூடாது. அதெல்லாம் தெய்வக் குத்தம்.

அன்றைய மாறுவேட போட்டிக்குத் தயாராக வேண்டும் என்பதால் வேட்டி ஒன்றையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டான். பேண்ட்டோடு பூஜை செய்தால் அண்டகாசுரன் பெண்டு எடுத்து விடுவானல்லவா?

மஞ்சள், கும்குமம், மாவிலை, பூசனி, எலுமிச்சை, அரிசி, அகத்திக் கீரை, தேங்காய், மாங்காய், புளி, லொட்டு, லொசுக்கு என பூஜைக்குத் தேவையான அனைத்தும் ரெடி. கன்றும் பசுவும் வேண்டுமே. எங்கே தேடுவது? எப்படி அவைகளை ஓட்டி வருவது? கவலையே வேண்டாம். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும். ஒரு தளமானாலும் அடுக்குமாடி குடியிருப்பானாலும் ஏற்றி இறக்க, சாணம் போட, கோமியம் பேய எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தமாய் ஒரு அமௌண்ட்டை கோமாதா அக்கவுண்ட்டில் சேர்த்துவிட்டால் போதும். அமௌண்ட் கொஞ்சம் அதிகம் என்றாலும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும். கோமாதா இல்லாமல் பூஜை போட்டால் அண்டகாசுரன் சும்மா விடுவானா?

தொடர்புடைய பதிவுகள்

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!......தொடர்-2
அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!


Wednesday, June 12, 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!......தொடர்-2


என்னதான் சொல்கிறது வாஸ்து சாஸ்திரம்?

வீட்டு மனையை 64 அல்லது 81 கட்டங்களாக சதுர வடிவில் பிரிக்க வேண்டுமாம். இந்தக் கட்டங்களில் பல்வேறு தேவர்கள் வசிக்கிறார்களாம் கட்டங்களின் மையப் பகுதிக்குப் பெயர் பிரம்மஸ்தானமாம். இங்கு மட்டும் 45 தேவர்கள் வசிக்கிறார்களாம்.


வடக்கே குபேரனும் தெற்கே யமனும் கிழக்கே ஆதித்தனும் மேற்கே வருணனும் வசிக்கிறார்களாம். ஏற்கனவே தேவர்கள் வசிக்கிற இடத்தில் நாம் எப்படி குடியிருப்பது என கேள்வி எழுகிறதா? கேள்வி எழவே கூடாது. அவர்கள் உங்களுக்கு நன்மை செய்யத்தான் இருக்கிறார்கள். எதை எதை எங்கே வைக்கிறீர்கள் என்பதைப் பொருத்து அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வார்கள். தவறாக வைத்தால் கேடு செய்வார்கள். 


அக்கினி மூலையில் (தென் கிழக்கு) சட்டியை வை என்கிறான் வாஸ்து. அங்கே அடுப்பு வைத்து சமைத்தால்தான் சோறு வேகுமாம். இல்லை என்றால் நீங்கள் வெந்து – நொந்து போவீர்களாம். மேலும் இந்த மூலையில் படுக்கவே கூடாதாம். படுத்தால் தூக்கமே வராதாம்.

உழைத்துக் களைத்தவன் தன் ஆழ்ந்த உறக்கத்தால் ஓடும் ரயிலின் ஓசையையே தனது மூச்சுக் காற்றால் விஞ்சுவது பாவம் அந்த வாஸ்துவுக்குத் தெரியாது போலும். காட்டிலேயும் மேட்டிலேயும் போய்ப் பார். உழைப்பவன் எப்படி உறங்குகிறான் என்று. உறக்கத்திற்கும் மூலை பற்றி பேசுவது மூளையற்றவர்களின் வேலை.

அடுத்து ஈசான மூலையில் (வட கிழக்கு) அண்டாவை வை என்கிறான். எதற்கு? தண்ணீர் நிறப்பத்தான். அங்குதான் நல்ல நீர் வளம் இருக்குமாம். ஆத்தூரிலே வாஸ்துவைக் கேட்டுத்தான் போர் போடுகிறான் ஓராயிரம் அடிக்கு மேலே. பானியைக் காணோம். பவுடர்தான் மிஞ்சியது. எதற்கும் உதவாது என்றாலும் அதைக்கூட உன் வாயுபகவான்தான் அள்ளிச் சென்றான்.

அடுத்து வாயு மூலையில் (வட மேற்கு) நம்மை குந்தச் சொல்கிறான். எதற்கு? அங்கே குந்தினால்தான் வாயு பகவான் தன் பரிவாரங்களோடு வெளியே வருவாராம். இல்லை என்றால் எனிமா கொடுத்து எடுக்க வேண்டி வருமாம். காலையில் சென்னை ரயிலடி ஓரங்களைப் போய்ப் பார். தட தட ஓசையிலும் தடங்கலின்றி தள்ளுகிற உழைப்பாளிக்கு ஏதடா வாயு மூலை?

அடுத்து பித்ரு மூலையில் (தென் மேற்கு) படுக்கையைப் போடனுமாம். அங்கே கூடினால்தான் குழந்தை பாக்கியம் உண்டாம். எல்லாம் பார்த்தவர்கள் பயனேதுமின்றி மருத்துமனை படிக்கட்டுகளில் காத்துக் கிடக்கிறார்கள் எதிர்கால வாரிசுக்காக. ஏதும் பார்க்காதவனுக்கோ ஓலைக் குடிசையிலும் ஒன்றுக்குப் பத்தாய் பெருகுகிறது வாரிசு.

 
படத்தில் உள்ளவாறு வாஸ்து குப்புறப் படுத்தானாம். இதை வைத்து மூலைகளுக்கு நாமகரணம் சூட்டி அதற்கு மேலே பலன்களை ஏற்றுகிறார்கள். கேட்கிறவன் கேனப்பயலா இருக்கிற வரைக்கும் கேப்பையில் நெய் வடியத்தானே செய்யும்.

இப்படி மூலைக்கு ஒரு பலனைச் சொல்லி நம்மை முட்டாளிக்கி, ‘மீறினால்’ என்ன நடக்கும் தெரியுமா? என அச்சமூட்டி தன் ‘நூல்’ பையை நிரப்பிக் கொள்கிறது ஒரு கூட்டம். அச்சமூட்டி பணம் பறிப்பதுதானே திருடர்களின் வேலை. திருடனையை வீட்டிற்கு அழைத்து வந்து அள்ளிக் கொடுக்கிறவன் இருக்கிறவரைக்கும் வாஸ்துவுக்கு மரணமேது!

தொடர்புடைய பதிவுகள் 


அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!


முன்னொரு காலத்திலே அண்டகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானாம். வருவோர் போவோரையெல்லாம் வம்புக்கு இழுப்பதுதான் அவனுக்கு வேலையாம். சண்டை போடாமல் அவனால் சும்மா இருக்க முடியாதாம். ஒரு நாள், சண்டைக்கு யாரும் கிடைக்காததால். சிவனையே சண்டைக்கு அழைத்தானாம். சிவன் என்ன லேசுபட்ட ஆளா. அழிப்பதுதானே அவனது தொழில். அதனால் அண்டகாசுரனோடு சிவன் மோதினானாம். இருவரும் பலமாக முட்டி மோதிக் கொண்ட போது அண்டகாசுரனுடைய நெற்றியிலிருந்து விழுந்த வேர்வைத் துளியிலிருந்து ஒரு கரிய பூதம் தோன்றியதாம். அந்த பூதத்திற்கு வாஸ்து என்று பெயராம்.

அது ஆகோரப் பசி கொண்ட பூதம் என்பதால் அண்டகாசுரனையே விழுங்கி விட்டதாம். பசி அடங்காமல் கண்ணில் பட்டதையெல்லாம் விழுங்கத் தொடங்கியதாம். அடுத்து இருப்பதோ லோகம் மட்டும்தான். இதைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டார்களாம். புதுவீடு கட்டுபவர்கள் சாஸ்திரப்படி வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து சாப்பாடு போட்டால் பூதத்தின் பசியைப் போக்க முடியும் என வழி சொன்னானாம் பிரம்மா. படைப்புக் கடவுள் ஆயிற்றே. அவன் சொல்படிதானே பூதமும் நடந்து கொள்ள முடியும்.

வீடு கட்ட கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரம் பூதத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டு அதுவே வாஸ்து சாஸ்திரம் எனலாயிற்றாம். எனவே புது வீடு கட்டினால் வாஸ்து சாஸ்திரப்படி கட்டி கிரகப் பிரவேசம் செய்து சாப்பாடு போட வேண்டுமாம். வாஸ்து சாஸ்திரத்தை கடைபிடிக்காமல் வீடு கட்டி, பூஜை எதுவும் செய்யாமல் குடிபோனால் பூதத்தின் பசியை எப்படி போக்க முடியும்? அதுவும் குடி போகும் அன்றைக்கு மட்டும்தான் அந்த பூதத்தின் பசியைப் போக்க முடியுமாம்.

தனது சாஸ்திரத்தை மதியாமல், தனக்கு சாப்பாடும் போடாமல் குடி போனால், பசியோடு அலையும் வாஸ்து பூதம் சும்மா விட்டுவிடுமா? கோபத்தில் அந்தக் குடும்பத்திற்கு பல்வேறு தீங்குகளைச் செய்யுமாம் அந்தப் பூதம். வாஸ்து சாஸ்திரத்தை மதியாமல் சாப்பாடு மட்டும் போட்டுவிட்டு குடி போனாலும் தப்பிக்க முடியாதாம். ஏனென்றால் தனது சாஸ்திரத்தை மதியாமல் வீடு கட்டி போடப்படும் சாப்பாட்டை அது சாப்பிடாதாம்.

என்ன இப்பொழுதே பயம் வந்து விட்டதா? வேறு வழி? பார்ப்பன புரோகிதனைத் தேட வேண்டியதுதான். வேறு யாரையும் வைத்து செய்ய முடியாதே. பாப்பானுக்குத்தானே சாஸ்திரம் தெரியும். அதைச் செய்யும் அதிகாரமும் அவனுக்கு மட்டும்தானே உண்டு.

தொடரும்