Thursday, February 13, 2014

சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?

16 - வது மக்களவைத் தேர்தல் திருவிழா நெருங்குகிறது.

“வாங்க சார்! வாங்க!

ஒண்ணு வெச்சா பத்து!!

பத்து வெச்சா நூறு!!!

வாங்க சார்! வாங்க!!!!”

என கூவிக் கொண்டிருக்கின்றன பரிவாரங்கள்.

‘இளம் தாமரை’ என திருச்சியில் கடை விரித்தார்கள். ‘கடல் தாமரை’ என ராமேஸ்வரத்தில் கடை போட்டார்கள். வண்டலூரிலும் டேரா அடித்தார்கள். சக்கரத்தை சுழற்றிவிட்டு எவனாவது காசு வைப்பானா என கடை விரித்து காத்துக்கிடக்கின்றனர்.
 
சாதி வெறி முகத்தில் வழியும் ஈஸ்வரன்கள். சில்லரை பொறுக்குவதற்காகவே தோளில் தொங்கும் துண்டை தரையில் விரிக்கும் கலிங்கப்பட்டி காளைகள். புறம்போக்கிலேயே புது நீதி கண்ட நீதியரசர்கள். கேடிக்கு கார் ஓட்டும் கோடி வேந்தர்கள் என ஒரு சில சில்லரைகள் மட்டுமே கடை பக்கம் சென்றுள்ளனர். காடுவெட்டி  தைலாபுர தடியன்கள்கூட பரிவாரக்கடை ஓனர் எடுப்பாய் இருக்கிறான் என்று சொல்கிறார்களே ஒழிய இன்னமும் கடை அருகில் செல்லவில்லை. இவர்கள் வைக்கும் சில்லரைக் காசு மொத்தத்தையும் சேர்த்தால்கூட கல்லா கட்டா முடியாது என்பதால்  கேப்டனுக்காக உரக்க உரக்க கூவுகின்றன பரிவாரங்கள்.
சாதாரணக் கடைக்காரன் கூவுவதைப் போல கூவினால் கடை பக்கம் பசை உள்ளவர்கள் வரமாட்டார்கள் என்பதற்காக கூவுவதெற்கென்றே தனியாக ஒரு ஆளையே நியமித்துள்ளனர். அவன் அடுக்கு மொழியில் அள்ளித் தெளிக்கும் புள்ளிவிரக் கணக்குகள் பேரருவியாய் கொட்டுவதைப் பார்த்தாலே ஒரு முறை காசு வைத்துப் பார்க்கலாமே என எண்ணத் தோன்றும். அவன் கூவுவதில்தான் எத்தனை ஒரு நேர்த்தி. பரிவாரக்கடையில் போணி மட்டும் சிறப்பாக நடந்து விட்டால் அருவிக்காரன் காட்டில் பனியாரத்துக்குப் பஞ்சம் இருக்காது.
 
“தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கோபாதாபங்களை வெளிக்காட்டக்கூடிய யதார்த்தமான மனிதர். மற்ற அரசியல்வாதிகளைப் போல அவருக்கு நடிக்கத் தெரியாது” என காமெடி நடிகன் ஆசை காட்டுகிறான்.
 
“பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க உறுதியாக இணையும்” என தே.மு.தி.க நிச்சயம் எட்டிப்பார்க்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பொன்னார்.
 
”தி.மு.க கூட்டணியில் இணைவதே தே.மு.தி.க வுக்கு நல்லது” என அருள் வாக்கு கொடுக்கிறார் திருமா. “காங்கிரசுக்கு நெருக்கமான கட்சி தே.மு.தி.க”  என ஆசை காட்டுகிறார் ஞானதேசிகன். தங்களது கடை பக்கம் கேப்டனை ஈர்க்க மற்ற கடைகாரர்கள் கொடுக்கும் வரமும் கேப்டன் காதில் விழாமலா போகும்.
 
கேப்டன் சிக்கினால் கொத்தாக அள்ளிவிடலாம் என நாக்கில் ஜொள்ளு ஒழுக கூவி வருகின்றனர். ஆனால் கேப்டனோ  திருவிழாவில் போடப்பட்டுள்ள கடைகள் அனைத்தையும் பார்த்து விட்டுத்தான்   எந்தக் கடைக்குச் செல்வது என்பதை முடிவு செய்ய முடியும் என்பது போல “கூட்டணி விசயத்தில் அவசரப்பட மாட்டேன்” என பேசிக் கொண்டே பரிவாரக் கடையை எட்டிக்கூட பார்க்காமல் மற்ற கடைகளை நோட்டமிட செல்வதைப் பார்த்து இப்போது பரிவாரக் கடைக்காரன் உச்சஸ்தாயில் கத்த ஆரம்பித்து விட்டான்.
 
ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திவிட்டு இப்போது டெல்லிக்கு படை எடுப்பதால் தே.மு.தி.க கட்சிக்கு என்ன கொள்கை என்பது அந்தக் கட்சித் தலைவருக்கே  தெரியாது என கேப்டன் மீதே மண்ணை வாரி தூற்றுகிறான் பரிவாரக் கடைக்காரன். “தி.மு.க வுடன் இணைந்தால் தே.மு.தி.க காணாமல் போய்விடும்” என பைந்தமிழில் சாமியாகிறான்.
 
கலர் கலராய் பலர் கடை விரித்துள்ளனர். இதில் தங்களது கடை மட்டும் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இவர்கள் கடையில் எல்லாமுமே காவி மயம்தான்  கோடையின் தாக்கம் இப்போதே தெரியத் தொடங்கி விட்டதால் இவர்களின் காவிகூட தற்போது சற்றே வெளுக்கத் தொடங்கிவிட்டது. போதாக் குறைக்கு ஆம் ஆத்மிகாரன் வேறு இந்தியா முழுக்க கடை போடப் போவதாக மிரட்டுகிறான். கூட்டுறவு கடை போட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் மூன்றாம் அணியினர். இதுவெல்லாம் நடக்கும் பட்சத்தில் கேப்டனுக்கு இட்ட சாபம் பலிக்கிறதோ இல்லையோ,  முழுக் கோடையில் பரிவாரங்களின் காவி வெளுக்காமல் இருந்தால் சரி! கல்லா கட்டவில்லை என்றாலும் கடையாவது மிஞ்சும். 
 
தொடர்புடைய பதிவுகள்:
 
 

Sunday, February 9, 2014

எச்சரிக்கை: கல்விக் கொள்ளையர்கள் கடை விரிக்க வருகிறார்கள்!


அன்று

தன்னைப் போல ஏர் - மாடு - கலப்பை என தனது மகனும் விவசாயம் செய்து துன்பப்பட வேண்டாம் என நினைத்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆரணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகனை 1970 வாக்கில் ITI பிட்டர் படிப்பு படிக்க வைத்தார்.

அப்ரன்டிஸ் பயிற்சியாளர் வேலைக்கு ஆள்பிடிக்கும் கலையை அன்றே கற்று வைத்திருந்த சென்னை அண்ணா சாலையிலும், செம்பியத்திலும் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தில் ITI படித்த அம்மாணவன் பயிற்சியாளராகச் சேர்ந்து ஓராண்டு கசக்கி பிழியப்பட்டு நிரந்தரம் செய்ய முடியாது என விரட்டப்படுகிறார். பிறகு சில ஆண்டுகள் கழித்து நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்து சுமார் முப்பந்தைந்து ஆண்டுகாலப் பணி முடித்து சமீபத்தில்தான் ஓய்வு அவர் பெற்றார்.

இன்று

ஏழை எளிய விவசாயிகள் தங்களது பிள்ளைகளை ITI அல்லது டிப்ளமோ படிப்பு படிக்க வைக்கிறார்கள். படிக்கும் போதே வளாக நேர் காணல் மூலம் ஆட்களை அள்ளிச் செல்கின்றனர் தனியார் ஆலை முதலாளிகள். பையனுக்கு வேலை கிடைத்து விட்டது என்கிற மகிழ்ச்சியில் திளைக்கிறது குடும்பம். பட்ட கடனை அடைத்து விடலாம், எத்தனை காலம்தான் கூரைவீட்டில் குடியிருப்புது? இனி சொந்தமாக மெத்தை வீடொன்றை கட்டிக் கொள்ளலாம் என பெற்றோர்கள் மனக்கணக்கு போடுகின்றனர்.

ஆயிரம் கனவுகளோடு ஆலைகளில் பயிற்சியாளர்களாக சேர்கிறார்கள் அம்மாணவர்கள். நம்பிக்கைக்குரிய வகையில் கடினமாக வேலை செய்தால் நிரந்தரமாக்கிக் கொள்வார்கள் என்கிற பொய்யான வாக்குறுதிகளை நம்பி தங்களது ஆற்றல் அனைத்தையும் கொட்டி அந்த நிறுவனத்திற்காக உழைக்கிறார்கள். ஓராண்டு பயிற்சி முடிந்த பிறகு 'போய் வா' என அந்நிறுவனம் கதவை மூடிக் கொள்கிறது. வேலை தேடி மீண்டும் வேறு ஆலைகளின் கதவுகளைத் தட்டினால் அங்கேயும் பயிற்சியாளர் பணிதான். இங்கேயும் ஓராண்டுதான். மீண்டும் கதவு இழுத்து மூடப்படுகிறது. பிறகு மற்றுமொரு ஆலை. மீண்டும் அதே பயிற்சியாளர் பணி. இம்முறையும் கதவு மூடப்படுகிறது.

மாதம் ரூ.3000 த்திலிருந்து ரூ.5000 வரை பயிற்சியாளர்களுக்கு தரப்படுகிறது. இது மாதச் சம்பளம் அல்ல. ஸ்டைபண்ட். இதில் பெரும் பகுதியை நடுவண் அரசே கொடுக்கிறது.

மூன்றாண்டுகளில் தனது ஆற்றல் அனைத்தையும் தனியார் நிறுவன முதலாளிகளிடம் இழந்துவிட்டு சக்கையாய் துப்பப்பட்ட இத்தகைய இளைஞர் கூட்டம் லட்சக் கணக்கில் பெருகிவிட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவால் முன்பு போல பொதுத் துறை அரசுத் துறை நிறுவனங்களும் கடந்த பல ஆண்டுகளாகவே வேலைக்கு ஆள் எடுப்பதில்லை.

மீண்டும் பிழைப்பு தேடி

பிழைப்புக்கு என்ன செய்வதென்று புரியாமல் மீண்டும் தனது கிராமங்களுக்கே திரும்புகின்றனர். இனி அப்பன் தொழிலையாவது செய்யலாமென்றால் மழை இல்லை; கிணறு - ஆறு – ஏரி - அணைகளில் நீரில்லை; விவசாயம் இல்லை; விவசாயம் செய்தாலும் விளைவித்த பொருளுக்கு கட்டுப்படியான விலை இல்லை. மொத்தத்தில் வருவாய் இல்லை.

வயதோ முப்பதைத் தொடவிருக்கிறது. திருமணம் செய்து வைக்கலாம் என்றால் வீடு - வாசல் இல்லை, வேலை இல்லை என பெண் தர தயங்குகிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள். ITI மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களின் நிலை இதுதான். இன்று பட்டி தொட்டி எங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டதால் இவர்களின் பட்டியலில் தற்போது BE பட்டதாரிகளும் சேர்ந்து விட்டார்கள்.

ஆசை வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை

கடந்த மூன்று ஆண்டுகளில் வளாக நேர்காணல் மூலம் 40% மாணவர்கள் நேரடி வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். 20% பேர் உயர்கல்வி பயிலச் சென்றுள்ளனர். 10- 20% மாணவர்கள் தொழில் முனைவோராகிவிட்டனர் (அதாவது முதலாளிகளாகிவிட்டனர்). 10% மாணவர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று விட்டனர்.”

ஒரு தனியார் பொறியில் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலையின் துணைவேந்தர் சமீபத்தில் அள்ளித் தெளித்த புள்ளி விவரங்கள் இவை.

ஆண்டு தோரும் பொறியியல் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்களில் வெறும் 10% மாணவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பினை பெறுவதற்கான தகுதியைப் (employability) பெற்றுள்ளனர் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். வேலை கிடைத்தாலும் ஏன் இந்த வேலையில் சேர்ந்தோம் என்கிற விரத்திக்கு ஆளாகி வேலையை விட்டு ஓடும் நிலையில்தான் பலரும் முதலாளிகளால் கசக்கி பிழியப்படுகின்றனர்.

இவர்கள் தவிர மற்றொரு சாரார் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான தகுதியை மேலும் வளர்த்துக் கொள்ளவே மேற்படிப்பை மேற்கொள்கின்றனர். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இனி கிடைக்காது, மேற்படிப்பு படிக்க பொருளாதார வசதியும் போதாது என்பதால் படித்த படிப்புக்கு தொடர்பு இல்லை என்றாலும் ஏதாவதொரு தொழிலைத் தேர்வு செய்து 'முன்னேற' வேறு சிலர் முயல்கின்றனர். ஆனால் தொழில் முனைவோராக முயன்ற இவர்களில் பலர் தற்கொலைக்கு முயலும் அவலம் எத்தனை பேருக்குத் தெரியும்?
 
'மெய்ட் சர்வண்ட்' வேலையில் பட்டதாரிப் பெண்கள்

பட்டம் பெற்ற பல பெண்கள் வேலைக்காக காத்திருப்பதில்லை. காதல் - கீதல் செய்து விடுவாளோ என்கிற பயத்தில் படிப்பு முடியும் முன்பே சொந்த சாதியில் ஒரு மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து குடும்பம் எனும் ஆலையில் ‘நிரந்தர’ வேலை ஒன்றிற்கு பெற்றோர்களே உத்தரவாதம் செய்து விடுகிறார்கள். படிக்கும் போதே வேலை. இதுவும் ஒரு வகையில் வளாக நேர்காணல்தானே!. வேலை என்னவோ ‘மெயிட் சர்வண்ட்’ வேலைதான். ஆனால் டெசிக்னேஷனோ ‘ஹவுஸ் ஒய்ஃப்’. இத்தகைய வேலை வாய்ப்பினை பெற்ற பட்டதாரிப் பெண்கள் முதல் 40% த்தில் அடங்குவர் போலும்!

தனியார் மயம்தாராளமயம்உலகமயக் கொள்கையின் விளைவால் ஆட்குறைப்பு - ஊதிய வெட்டு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள பலர் தங்களது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவே படாத பாடுபடுகின்றனர்.

10 % சதவிகித மாணவர்கள் மட்டுமே பயன் பெறுகின்ற ஒரு கல்விக்காக 90% மாணவர்கள் ஏமாற்றப்படவும், கல்விக் கொள்ளையர்கள் தங்களது பைகளை நிரப்பிக் கொள்ளவுமே மேற்கண்ட புள்ளி விரவங்கள் உதவக் கூடும்.

ஆசை வார்த்தைகளைக் கண்டு மோசம் போவதை விட நம் வாழ்வு மோசமாவதற்கான காரணத்தைக் களைய முற்படுவோம்!

Friday, February 7, 2014

இதுவா பொது அமைதி?

·         அனுமதியின்றி மது விற்பனை: இளைஞர் கைது
·        மூன்று செம்மரங்கள் வெட்டிச் சாய்ப்பு
·         பைக் திருட்டு: இளைஞர் கைது
·         மணல் கடத்தல்: இளைஞர் கைது
·         மின் கம்பி திருட்டு
·         பேனர் கிழிப்பால் மோதல்: நான்கு பேர் காயம்
·         மூதாட்டி மர்மச் சாவு
·         மதுக்கடையில் தகராறு: ஒருவர் காயம்
·         சாராயம் விற்பனை: இளம் பெண் கைது
இது 2014 ஜனவரி மூன்றில் தினமணி ஏட்டின்  கிரைம் செய்திகள்.

·         தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாக பராமறிக்கப்படுகிறது.

இது 2014 ஜனவரி நான்கில் தினமணி ஏட்டில் வெளியான தமிழக அரசின் அறிவிப்புச் செய்தி.

·         நில அபகரிப்பு வழக்கு: தந்தை, இரு மகன்கள் கைது

·         தாய், மகள் திடீர் மாயம்

·         ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

·         பொறியாளர் மீது தாக்குதல்: இருவர் கைது

·         ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு

·         மணல் லாரி மோதி தொழிலாளி சாவு

·         விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

·         பெண் காவலர் கழுத்து நெறித்துக் கொலை

இது 2014 ஜனவரி ஏழில் தினமணி ஏட்டின்  கிரைம் செய்திகள். 

தற்போது குற்றச் செய்திகளுக்காக ஒரு தனி பகுதியையே தினமணி ஒதுக்கி இருக்கிறது. இவை தமிழகத்தில் எட்டு நகரங்களிலிலிருந்து வெளியாகும் தினமணியில் ஒரு நகரிலிருந்து மட்டுமே வெளியான செய்திகள் மட்டுமே. இச்செய்திகள்கூட காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு வரட்பட்ட அங்கிருந்து கசிந்த ஒரு சிறு துளிகள் மட்டுமே.

பிற ஏழு நகரங்களிலிருந்து வெளியாகும் தினமணியின் கிரைம் செய்திகளையும், தினத்தந்தி, தினகரன், தினமலர், மாலைமலர், மாலைமுரசு, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்டு உள்ளிட்ட ஏனைய செய்தி ஏடுகளில் வரும் கிரைம் செய்திகளையும், தொலைக்காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட பிற ஊடகங்களில் வெளியாகும் கிரைம் செய்திகளையும் தொகுத்துப் பாருங்கள் தமிழகத்தின் அவலம் புரியும்.
 
மூன்றுக்கும் ஏழுக்கும் நடுவில் மட்டுமே இந்த நிலை என்றால் 365 நாட்களுக்கும்?
 
அதுவும் காவல் துறையின் கவனத்திற்கு வராத குற்றங்களையும் சேர்த்து கணக்கிட்டால் நாளேடுகளில் பக்கங்களும் போதாது. நாளேடுகளும் போதாது. 
 
இந்த லட்சணத்தில் தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாக பராமறிக்கப்படுகிறதாம்.