பார்ப்பனியம்
பிறவிக் குணமா?
இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது.
முதலில் பார்ப்பனியம் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டால்தான் மேற்கண்ட
கேள்விக்கான விடையைத் தேடுவது சரியாக இருக்கும்.
பார்ப்பனர்கள் ஐயர், ஐயங்கார் உள்ளிட்ட பல்வேறு சாதிகளைச்
சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒற்றை
அடையாளத்துக்குள் அடங்கி விடுவர். இவர்களிடையே நிலவும் உணவுப் பழக்க வழங்கங்கள்,
உடை உள்ளிட்ட இதர அலங்காரங்கள், பேசும் மொழிநடை, வணங்கும் கடவுள்கள், கொண்டாடும்
பண்டிகைகள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளை வைத்துப் பார்க்கும் போது பிற சாதி
மக்களிடமிருந்து இவர்களை நாம் மிக எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். தற்போது
ஒரு சில இடங்களில் சில பார்ப்பனர்களை அவ்வாறு அடையாளம் காண்பதில் சற்று சிரமம்
இருந்தாலும் தங்களது நடத்தையால் விரைவிலேயே அவர்களும் அம்பலப்பட்டுப் போகின்றனர்.
இவர்களின் மூதாதையர்கள் வகுத்து, வகைப்படுத்தி, நடைமுறைப்படுத்திய வர்ண
சாதி அமைப்பு முறையில் இவர்களே பிற சாதி மக்களைவிட பிறப்பால் உயர்ந்தவர்கள் என்கிற
நினைப்பும், கல்வி அறிவிலும், திறமையிலும் இவர்களே முதன்மையானவர்கள் என்கிற
திமிரும் இவர்களை விட்டு இன்னமும் அகன்று விடவில்லை. மன்னர் காலம் தொட்டு இன்றைய
உலகமய காலம் வரை அதிகாரமுள்ள அதி உயர் அரசுப் பதவிகளில் பார்ப்பனர்கள் அமர்ந்து
கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்ற அதே நேரத்தில் மற்றவர்களை எப்பொழுதும்
தங்களுக்குக் கீழாக வைத்துக் கொள்வதற்காக சட்டங்களை வகுப்பதிலும், பொருளாதாரக்
கொள்கைகளை தீர்மானிப்பதிலும், இவற்றிற்குக் குறுக்காக வரும் எவரையும் அடக்கி
ஒடுக்குவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். தங்களது நிலையை தக்கவைத்துக்
கொள்வதற்காக இவர்கள் மாயாவதி முதல் மோடி வரை, மூப்பனார் முதல்
அம்பானி வரை உள்ள ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கங்களோடு கூட்டு
சேர்வதற்குத் தயங்குவதே இல்லை.
ஒடுக்குமுறையின் மூலமாக மட்டும் பிறரை எப்போதும் அடக்கி வைக்க
முடியாது என்பதால்தான் கருத்தியல் ரீதியாக முடக்குவதற்கு ரிக், யஜுர், சாம, அதர்வன
ஆகிய நான்கு வேதங்கள், விஷ்ணு புராணம் உள்ளிட்ட பதினெட்டு வகை புராணங்கள், ஆறு வகை
சாஸ்திரங்கள், மனுஸ்மிருதி உள்ளிட்டு பத்து வகை ஸ்மிருதிகள், இராமாயணம் - மகாபாரதம்
என இரண்டு இதிகாசங்கள், சங்கரனின் அத்வைதம் உள்ளிட்டு ஆறு வகை தத்துவங்கள், பத்து வகையான
உபநிடதங்கள் மற்றும் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை என ஏராளமானவற்றை உருவாக்கி
வைத்துள்ளனர். இவை தவிர மச்ச அவதாரம் முதல் கல்கி அவதாரம் என பத்து அவதாரப் புருஷர்களும்,
பொய்கை ஆழ்வார் முதல் திருமங்கையாழ்வார் வரை பனிரெண்டு ஆழ்வார்களும், கண்ணப்ப
நாயனார் – திருமூலர் உள்ளிட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களும் என ஏராளமானோர்
தோன்றி சனாதன தர்மத்திற்கு வலு சேர்த்துவிட்டுச் சென்றுள்ளனர்.
பார்ப்பனர்கள் போதிக்கின்ற தத்துவத்திற்குப் பெயர் சனாதன தர்மம்.
அதாவது நால்வர்ண தர்மம்.
பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன். தோளிலிருந்து
பிறந்தவன் சத்திரியன். தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன். கால் பாதத்திலிருந்து
பிறந்தவன் சூத்திரன். இவைதான் நான்கு வர்ணங்கள். மனிதர்களை நான்கு பிரிவுகளாக்கிவிட்டனர்
பார்ப்பனர்கள். இந்த நான்கு பிரிவினரின் உரிமைகளையும் கடமைகளையும் பற்றிக்
கூறுவதுதான் நால் வர்ண தர்மம். அதுவேதான் சனாதன தர்மம் அல்லது பார்ப்பன தர்மம். அவர்களுக்காக
வகுத்த தர்மத்தைத்தான் அனைவருக்குமான தர்மமாக்கி அதை இந்து தர்மம் என அழைக்கின்றனர்.
தற்போதுள்ள சாதிகளை வைத்து இந்த நான்கு வர்ணங்களை எப்படி அடையாளம்
காண்பது?
ஐயர், ஐயங்கார் போன்ற பார்ப்பனர்கள்தான் முதல் வர்ணமாகிய பிராமணர்கள். இந்தியா முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்ப்பன சாதிகள் உண்டு. இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் குருமார்கள்.
சம்புவராயர் போன்ற வன்னியர்கள், தீரன் சின்னமலை போன்ற கொங்கு வேளாளக்
கவுண்டர்கள், பெரும்பிடுகு முத்தரையர் போன்ற முத்தரையர்கள், வீரபாண்டிய
கட்டபொம்மன் போன்ற நாய்க்கர்கள் இவர்களெல்லாம் இரண்டாம் வர்ணமாகிய சத்திரியர்களில்
அடங்குவதாக இவர்கள் தங்களைக் கருதிக் கொள்கின்றனர். இவர்களில் சிலர் ஒரு காலத்தில் மன்னர்கள் மற்றும் போர் வீரர்களாக இருந்தவர்கள்தான்.
வணிகத்தில் ஈடுபடும் செட்டியார்கள் மற்றும் முதலியார்கள் போன்ற
பிரிவினர் தங்களை வைசியர்களாகக் கருதிக் கொள்கின்றனர்.
நாவிதர், வண்ணார் போன்றோர் பிற சாதியினருக்கு சேவை செய்வதால் மனுதர்மப்படி இவர்களை சூத்திர வர்ணமாக வகைப்படுத்த முடியும்.
மேற்கண்ட நான்கு வர்ணத்தாரிடையே கலப்பு ஏற்பட்டதன் விளைவாக நான்கு
வர்ணத்தாரிடமிருந்து விலக்கி வைக்கபட்ட பிரிவினரை பஞ்சமர்கள் என்று அழைத்தார்கள்.
இவர்களே இன்று தாழ்த்தப்பட்டவர்களாக அறியப்படுகின்றனர். உரிமைகள் எதுவும்
இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவர்களுக்குத்தான் அரிஜனங்கள் என நாமகரணம்
சூட்டினார் காந்தி.
பார்ப்பனர்கள் எப்பொழுதும் தங்களை பார்ப்பனர்களாகத்தான் கருதிக் கொள்கின்றனர். ஆனால் பிற சாதியினர் ஒவ்வொருவரும் தங்களை சத்ரியர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள படாத பாடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் என்னதான் மாடாய்க் கத்தினாலும், விந்திய மலைக்குத் தெற்கே உள்ள சத்திரியர்கள் வேதங்களை மறுத்து பார்ப்பனர்களுடைய ஆலோசனைகளை கேட்காததால் அவர்கள் அனைவரையுமே அன்றைக்கே சூத்திர நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறான் மனு. அது மட்டும்மல்ல, தற்பொழுது நடப்பது கலியுகம் என்பதால் கலியுகத்தில் பார்ப்பனர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என்று பார்ப்பனர்கள் வரையறுத்து விட்டனர்.
பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் என்னதான் தாங்கள் சத்திரியர்கள் என்று கூப்பாடு போட்டாலும் பார்ப்பனர்களின் தர்மப்படி அனைவருமே சூத்திரவாள்தான். சுப்பிரமணியசாமி போன்றவர்கள் அடிக்கடி இதை நினைவு படுத்திக் கொண்டே இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத பிற சாதியினருக்கு இது மண்டையில் ஏறுவதே இல்லை.
உற்பத்திக் கருவிகளின் கண்டுபிடிப்பு அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழில்
வளர்ச்சியின் காரணமாக பல்வேறு தொழில்களைச் செய்பவர்கள் இன்று எல்லாச் சாதிகளிலும் இருந்தாலும்
சாதிய முறையிலும் சாதிகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளிலும் எந்தவித மாற்றமும்
ஏற்பட்டுவிடவில்லை.
சாதிக்கும் நால்வர்ண தர்மத்துக்கும் தொடர்பேதுமில்லை; சாதியை பார்ப்பனர்கள்
தோற்றுவிக்கவில்லை என வாதிடுவோரும் உண்டு. அப்படியானால் இந்து மதத்தில் இத்தனை
வகையான சாதிகள் எங்கிருந்து வந்தன? எப்போது வந்தன? இந்தச் சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள்
எப்படி தோன்றின? இதற்கெல்லாம் மனுஸ்மிருதியிலேயே மனு பதிலளித்துவிட்டான்.
‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ (கீதை:4:13) மூன்று
வேதங்களும் நானே (கீதை:9:17) என தாங்கள் படைத்ததை கிருஷ்ணன் படைத்ததாகக்கூறி நம்ப
வைக்கின்றனர் பார்ப்பனர்கள். ஆண்டவனைக் கைகாட்டிவிட்டால் இவர்கள் உருவாக்கியதை கேள்விக்குள்ளாக்குவதே
தெய்வக் குற்றமாகிவிடுமே! உலகில் உள்ள அனைத்து மதவாதிகளும் தங்களின்
தத்துபித்துகளை ஆண்டவனைக் காட்டிதான் ஏய்த்து வருகின்றனர்.
தொடரும்.....
பார்ப்பனியம் பிறவிக் குணமா? ... பகுதி-1