Monday, November 21, 2011

கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?

பொதுவாக வெளியூர் பயணம் சென்றால் அவ்வூர் எதற்குப் பெயர் பெற்றது என்பதை அறிந்து அதை வாங்கி வந்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பது இன்றும் நம் வழக்கத்தில் உள்ள ஒன்று. திருநெல்வேலி அல்வா என்றாலே 'பாவ்லோ' கூற்றுப்படி நாவில் ஊறும் எச்சிலை யாரால்தான் நிறுத்தமுடியும்? 

திருவில்லிபுத்தூர் பால்கோவா, நாக்பூர் சோன்பப்டி, லோனேவாலா கடலை மிட்டாய், கிருஷ்ணன் கோவில் கொய்யா, ஆக்ரா பூசனிக்காய் அல்வா, நாக்பூர் ஆரஞ்சு, திண்டுக்கல் பன்னீர் திராட்சை, சந்தவாசல் வாழைப்பழம், திருப்பதி லட்டு, சேலம் மாம்பழம், பன்ருட்டி பலா, மணப்பாறை முருக்கு, ஊட்டி வறிக்கி, அய்தராபாத் பேப்பர் ஸ்வீட், சிம்லா ஆப்பிள், கொல்லிமலை அண்ணாசி, கொடைக்கானல் பேரிக்காய் என இவற்றிற்கு இவ்வூர்கள் புகழ் பெற்றுள்ளதால் அவ்வூர்களுக்குச் சென்று வெறுங்கையோடு திரும்ப முடியுமா? என்னப்பா திருநெல்வேலிக்குப் போயிட்டு அல்வா வாங்காம சும்மா வந்திட்டியே என உறவினர்களும் நண்பர்களும் கேட்காமல் விட மாட்டார்கள். 

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன் முறையாக இராசபாளையம் சென்றிருந்தேன். இராசபாளையம் நாய் புகழ் பெற்றது என்பதால் அதையா வாங்கி வரமுடியும்? பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஒரு இனிப்புக் கடையைப் பார்த்தேன். விறகு மிலார்களைப் போல குவிக்கப்படிருந்த காராசேவும், ஆள் உயரத்துக்கு சுருட்டி அடுக்கப்பட்டிருந்த வெள்ளை நிற தேன்மிட்டாயும் என்னை மிகவும் கவர்ந்தன. இந்த ஊரின் சிறப்பு என்னவென்று வினவினேன். தேன்மிட்டாய் என்றார்கள்.  விலையோ மிகக் குறைவு. ஒரு கிலோ முப்பது ரூபாய்க்கும் குறைவுதான். ஒரு கிலோ வேண்டும் என்றேன். உடனே பெரிய பனை ஓலைக் கூடை ஒன்றை எடுத்தார்கள். எடை போட்டபிறகு தேன்மிட்டாயை பக்குவமாய் கூடைக்குள் அடைத்தார்கள். என் கையிலோ கூடுதலாக இன்னுமொரு சுமை என்றாலும் புதிதாய் ஒரு தின்பண்டத்தை வாங்கிச் செல்கிற மகிழ்ச்சியில் அது சுமையாகத் தெரியவில்லை. கூடவே சொஞ்சம் மிலார்களையும், தேன் குழலும் வாங்கிக் கொண்டேன். திருச்சிக்குத் திரும்பி வரும் போது, வரும் வழியில் திருவில்லிபுத்தூர் பால்கோவாவையும், கிருஷ்ணன் கோவில் கொய்யாவையும் வாங்கிக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. இருக்காதா பின்ன! ஒரே நேரத்தில் மூன்று சிறப்புகளையும் வாங்கிவிட்டேனே!

'பாலிதின் கேரி பேக்'

அப்படி வாங்கிய பொருள் எதற்கும் அன்று 'கேரிபேக்' இல்லை என்பது மற்றுமொரு சிறப்பு. ஆனால் இன்று ஐந்து ரூபாய்க்கு 'ஐஸ்கிரீம்' வாங்கினாலும் அதற்கும் ஒரு பாலிதின் கேரி பேக். இப்படி எதற்கெடுத்தாலும் கேரிபேக் என எங்கும் குவிந்துவிட்டதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் கேட்டை விளக்க வேண்டிய அவசியமில்லை. அன்று தேன்மிட்டாய் ஒழுகி துணியெல்லாம் பாழாகிவிடுமோ என அச்சப்பட்டேன். அது உடனடி பாதிப்பு என்றாலும் துணியை துவைத்த பிறகு பாதிப்புக்கு முடிவு ஏற்பட்டு விட்டது. ஆனால் இன்று பாலிதின் கேரிபேக்குகளில் அடைத்துக் கொடுப்பதால் உடனடி பாதிப்பு ஏதும் இல்லை. பாதுகாப்பாக பொருளை எடுத்து வருகிறோம். ஆனால் பாலிதின் கேரிபேக்குகளால் ஏற்படும் எதிர்கால பாதிப்பு மனித குலத்திற்கே சவாலாய் உருவெடுத்து வருகிறது. அதனால்தான் கேரிபேக்குகளை தடை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுக்கிறோம்.

பல்வேறு நச்சு ஆலைகளால் பலருக்கு உடனடி வேலை வாய்ப்புகள் கிடைத்தன-கிடைக்கின்றன. ஆனால் அவற்றால் ஏற்படும் எதிர்கால பாதிப்பு சுற்று வட்டாரத்தையே வாழ இலாயக்கற்றதாக மாற்றிவருகிறது. பிரிட்ஜ் உள்ளிட்ட சில சொகுசுப் பொருட்கள் இன்று நமக்கு உடனடி சுகத்தை அளிக்கின்ற அதேவேளையில் ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றுவதால் அவற்றைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் என்கிறோம். ஏன்? ஓசோன் ஓட்டையாகிவிட்டால் எதிர்காலத்தில் மனித இனம் வாழ இலாயக்கற்றதாக இப்புவி மாறி விடும் என்பதால் புவி வெப்பமயமாவதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்கிறோம்.

'மம்மி' நாயகன் வருவானா?

உடனடித் தேவையா அல்லது எதிர்காலப் பாதுகாப்பா? எது முதன்மையானது என்று பரிசீலித்தால் மனித குலத்தைக் காக்க வேண்டும் எனில் மேற்கண்ட கோரிக்கைகள் நியாயமானதே. இப்படித்தானே கூடங்குளத்தையும் பார்க்க வேண்டும்.

மின்சாரம் நமக்குத் தேவைதான்.மறுப்பதற்கில்லை.அதற்கு மாற்று வழிகளைத்தான் தேட வேண்டும். ஒரு முப்பது ஆண்டு காலத்திற்கோ அல்லது நாற்பதாண்டு காலத்திற்கோ கூடங்குளம் அணு உலை மின்சாரத்தைக் கொடுக்கும். அதுவரை பூகம்பமோ அல்லது சுனாமியோ வராது என்றே நம்புவோம். ஆனால் நாற்பதாண்டுகள் கழித்து ஆலையில் வேலைசெய்த ஊழியர்களும் அதிகாரிகளும் இலட்சங்களைச் சம்பாதித்துக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்று 'செட்டில்' ஆகிவிடுவார்கள்.  ஆனால் கூடங்குளம் மக்கள் எங்கே செல்வார்கள்?

புதைக்கப்பட்ட மனிதன் ஒருமுறையோ அல்லது அதிகப்படியாக மூன்று முறையோதான் 'உயிர்த்தெழுவான்'. இது சமய நம்பிக்கை. கூடங்குளத்தில் நியூட்ரான் என்கிற எமனை இன்று வேண்டுமானால் நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைக்கலாம் அல்லது எமனை அடக்க மாடரேட்டர்களை ஏவலாம். ஆனால் புதைக்கப்ட்ட பிறகு ஒரு முறையல்ல, ஓராயிரம் முறையல்ல, ஒன்று-இரண்டாய்,இரண்டு-நான்காய்,நான்கு-பதினாறாய், பதினாறு-இருநூற்று ஐம்பத்தாறாய்,இருநூற்று ஐம்பத்தாறு-அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்று முப்பத்தாறாய்.... எனப் பல்கிப் பெருகி கோடி கோடியாய் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை விழுங்க அன்று மாடரேட்டர்கள் இருக்கமாட்டார்கள். இத்துக் கொண்டு வரும் சுவற்றின் ஓட்டைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறப் போகும் நியூட்ரான் எமன்களை வெட்டி வீச 'மம்மி' நாயகன் வரப்போவதில்லை?

கோடிக்கணக்கில் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை எதிர்கொள்வதா அல்லது அவற்றைக் கருவிலேயே அழிப்பதா என்பதே கூடங்குளம் மக்களின் இன்றைய போராட்டம்.

Wednesday, November 16, 2011

சாலை பயங்கரவாதம்! (Road Terrorism)

சமீபத்தில் எனது உறவினர் ஒருவர் குடி போதையில் இரு சக்கர வண்டி ஓட்டிச் சென்றபோது சாலையில் முன் சென்ற மிதி வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த அடிபட்டு முதலில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, விபத்தின் தீவிரம் கருதி பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க்பட்டார். தலையில் அடிபட்டுள்ளது என்றாலே ஸ்கேன் உள்ளிட்ட முக்கியமான பரிசோதனைகளைச் செய்யாமல் விடுவது பிற்காலத்தில் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலாகிவிடும்.

தலையில் அடிபட்டிருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் முன்று நாட்களுக்கு பரிசோதித்த பிறகே அச்சப்படும்படியான பாதிப்பு இல்லை என்கிற முடிவுக்கு மருத்துவர்களால் வரமுடிந்தது. இதற்காக சுமார் நாற்பதாயிரம் ரூபாய் செலவானது. உறவினர்களின் ஆதரவு இருந்ததால் மிகச் சாதாரண ஒப்பந்தத் தொழிலாளியால் இத்தகைய சிகிச்சையை பெற முடிந்தது. நாற்பது ரூபாய்க்கு அடித்த குவார்ட்டரால் நாற்பதாயிரமும் போச்சு,  நாற்பதாண்டு காலம் ஈட்டிய நற்பெயரும் போச்சு.

ஓட்டுநர் உரிமமும் வண்டிக்கான காப்பீடும் முறையாக இருந்தால் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து சிகிச்சைக்குத் செலவான தொகையை பெற்றுவிட முடியும். வண்டியில் ஏற்பட்ட சேதாரத்துக்கும் இழப்பீடு பெறமுடியும். ஆனால் விபத்து நடந்தபோது இவர் போதையில் இருந்ததால் மருத்துவர்கள் தங்களது அறிக்கையிலும் அதைக் குறிப்பிட்டுவிட்டதால் இழப்பீடு தொகை பெறுவதற்கு இயலாமல் போய்விட்டது. இப்படி இழப்பீடு தொகை பெற முடியாமல் பொனவர்கள் மிகச் சிலரே.

இழப்பீடு கிடைக்காது என்பதால் இந்த விபத்துக்கு முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை. இப்படி ஒரு சில காரணங்களுக்காக பல விபத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் பதிவாகும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

உயிரைக் காக்கும் தலைக்கவசம்

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகிறார்கள். தலையில் பலத்த காயம் அடைபவர்களில் சுமார் 70%  பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். தலைக்கவசம் அணிந்தால் இதில் பாதிபேர் உயிர் பிழைக்க முடியும் என்றாலும் அதை பலரும் அலட்சியப்படுத்துகிறார்கள். சுயநினைவு உள்ளவர்களே தலைக்கவசத்தை அலட்சியப் படுத்தும் போது போதைக்கு அடிமையானவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

வார இறுதி நாட்களிலும், பிறந்த நாள் - திருமணம் போன்ற மகிழ்சிக்குரிய நாட்களிலும்,  சாவு - காரியம் உள்ளிட்ட துயர நிகழ்ச்சிகளிலும் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதும், அதிலும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் (முன்பு ‘ரவுண்ட்ஸ்’ என்று சொன்னதை இப்போது ‘கட்டிங்’ என்று சொல்கிறார்கள்), தற்போது வழக்கமாகி விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு மது குடிப்பவர்களில் இளைஞர்களுக்கு மட்டுமே இரத்தத்தில் கலக்கும் ஆல்கஹாலின் அளவு அதிகமாம்.

“ஜாலிக்காக” தொடங்கும் இந்தக் குடிப்பழக்கம் மெல்ல மெல்ல “உனக்கு நான் சளைத்தவன் அல்ல” என்ற போட்டா போட்டியில் மொடாக் குடியில் போய் நிறுத்துகிறது.  சுமார் 30 முதல் 40  வயதுப் பெண்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக மருத்துவரை நாடிவருவதும் அதிகரித்துள்ளது. வசதிபடைத்தோர், குறைந்த வருவாய் மற்றும் வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டுத் தனியாக வாழும் பெண்கள் என மூன்று வகையான பெண்கள் இதில் அடங்குவர். அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தின் அபாய அறிகுறி இது.

சாலை பயங்கரவாதத்தால் பலியாவோர்

சாலை விபத்துகளால் இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு பலியாவோர் எண்ணிக்கை 130000  என உலக சுகாதார நிறுவனம் (WHO)  கூறுகிறது. இது சீனாவைவிட அதிகமாம். 

தேசிய நெடுஞசாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகள், கிராமப்புறச் சாலைகள் என மொத்தம் இந்தியச்சாலைகளின் நீளம் சுமார் 33 இலட்சம் கிலோமீட்டர்கள். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்தான். பெருப்பாலான விபத்துகள் நடக்கின்றன. அதாவது சுமார் 194754 கிலோமீட்டர் நீளச்சாலைகளில் ஆண்டுக்கு 130000  பேர் மடிகின்றார்கள் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒருவர் இறக்கிறார் என்றாகிறது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக – இதில் இளைஞர்களே அதிகம் - கடந்த ஆண்டு கோவையில் மட்டும் பதிவான வழக்குகள் 2003. இந்த ஆண்டில் 4000 ஆக அதிகரித்துள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) தெரிவித்துள்ளார். பெரும்பாலான விபத்துகள் குடி போதையினால் நடந்தாலும் ஆயுள் காப்பீடு பெறவேண்டும் என்பதற்காக அவை மறைக்கப்படுகின்றன.

வாகனங்களின் சீற்றத்தால் குருதியில் தோய்ந்து மரணக்காடாய் இன்று காட்சியளிக்கின்றன இந்தியச் சாலைகள்.

ஒவ்வொரு விளைவிற்கும் (effect) பல காரணிகள் இருக்கக்கூடும்.  அதன் காரணிகளைக் கண்டறிந்து முக்கியக் காரணிகளில் தொடங்கி ஒவ்வொன்றாகக் களையும் போதுதான் தவறுகளைத் தவிர்க்க முடியும். ஐப்பானிய அறிஞர் இஷிகாவாவின் மீன் எலும்புக்கூடு வரைபட (fish bone diagram or ishikawa diagram) அணுகுமுறை இதைத்தான் வலியுறுத்துகிறது.

சாலை விபத்துகள் எதனால்?

சாலை விபத்துக்கள் அதிகரிக்கக் காரணம் என்ன? பராமறிக்கப்படாமல் இருக்கும் சாலைகளாலா? பராமரிக்கப்படாத வாகனங்களாலா? அந்நியன் படத்தில் விக்ரம் அம்பி கண்டுபிடித்த தரம் குறைந்த ‘பிரேக் ஒயர்’ போன்ற உதிரிப்பாகங்களாலா? குடி போதையில் வாகனம் ஓட்டுவதாலா? வாழ்க்கைத் துன்பங்களைச் சோகமாகச் சுமந்து கொண்டு கவனக் குறைவாய் வாகனம் ஓட்டுவதாலா? எதிர்பாராத ஒன்று தனக்குக் கிடைத்ததால் ஏற்பட்ட களி மகிழ்ச்சியில் (ecstasy) தன்னை மறந்து வாகனம் ஓட்டுவதலா? தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதாலா? சாலை விதிகளை மீறுவதாலா? சாலையில் திரியும் விலங்குகளாலா?

சாலை பாதுகாப்பு வாரங்கள் கடைபிடிக்கப்பட்டு மக்களுக்கு சாலை விதிகள் போதிக்கப்பட்டு வருகின்றன. மதுக் குடியர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் விபத்துகள் குறைந்த பாடில்லை. அதிகரித்த வண்ணம் உள்ளன. அப்படியானால் விபத்துகளுக்கு முக்கிய பங்காற்றும் காரணிகள்தான் எவை?

சாலை விபத்துகளின் ஊற்றுக்கண்

எனது பார்வையில் இங்கே சொல்லப்பட்ட அனைத்துமே காரணிகளாக இருந்தாலும் இரண்டு காரணிகளே பிரதான பங்காற்றுகின்றன. ஒன்று குடி போதையில் வண்டி ஓட்டுவது. அடுத்தது பராமரிக்கப்படாத மற்றும் விரிவுபடுத்தப்படாத சாலைகள். இவைகளைச் சரி செய்யாமல் பெரிய அளவில் சாலை விபத்துகளைக் குறைத்துவிட முடியாது. பராமரிக்கப்படாத சாலைகளுக்கு பொறுப்பு அரசாங்கம்தான் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றில் கட்டடப் பொறியியில் பிரிவில் பணியாற்றியப் பெண் விரிவுரையாளர் ஒருவருக்கு தமிழக பொதுப்பணித்துறையில் பொறியாளர் வேலை கிடைத்தது. இரண்டு இடத்திலும் ஒரே ஊதியம்தான் என்றாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலால் – நிறைய சம்பாதிக்கலாமே - பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பொறுப்பேற்கிறார். இரண்டாவது நாளிலேயே திரைப்படங்களில் வரும் வில்லனின் அடியாட்கள் போல சிலர் இவரது அலுவலகத்துக்கு வந்து ஒப்பந்த வேலைகள் முடிந்ததாக கோப்புகளில் கையெழுத்திட வேண்டும் என்கின்றனர். இவரோ வேலைகள் நிறைவேறியதை சோதிக்காமல் கையெழுத்திட முடியாது என்கிறார். அவர்கள் கொடுத்த நெருக்குதலில் மன உளைச்சலுக்கு ஆளாகி ‘அப்பப்பா… இந்த வேலையே வேண்டாம்’ என உதறித்தள்ளிவிட்டு மீண்டும் விரிவுரையாளர் பணிக்குத் திரும்புகிறார். சாலை பராமறிப்பிற்கு ஒதுக்கப்படும் தொகை அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்களால் இப்படி சுருட்டப்படும் போது  சாலைகள் மட்டும் எப்படி செம்மையாக இருக்கும்?

நெடுஞ்சாலைகளில் தாகம் தீர்க்கத் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ, போதை ஏற்றிக் கொள்ள மதுக்கடைகளும் மோகம் தீர்க்க முந்தானைகளுமே விரிக்கப்பட்டுள்ளன. மோகம் தீர்ப்பதால்தான் சாலையோர ஓட்டல்களெல்லாம் மோட்டல்களாக பெயர் மாற்றம் பெற்றனவோ!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் டாஸ்மாக் மதுவின் மதிப்பு மட்டும் ரூ 1500 கோடிக்கு மேல். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ1924 கோடிக்கு மது விறபனையாகி சாதனைபடைத்துள்ளது. தமிழகத்தில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்களின் எண்ணிக்கை சுமார் 3 கோடி பேர். இதில் குழந்தைகள், சிறுவர்கள் என பாதி பேரைக் கழித்துவிட்டால் மீதி 1½ கோடி ஆண்களில் 80% பேர் அதாவது சுமார் ஒரு கோடி ஆண்கள் குடிக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு குடி மகனும் மாதத்திற்கு சுமார் 2000 ரூபாயை குடிக்காக செலவழிக்கிறான் என்றாகிறது. கள்ளச் சந்தையில் விற்பனையாகும் மது இதில் சேராது.  மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதேயொழிய குறைந்த பாடில்லை. இப்போது உயர்ரக மதுக்கடைகள் வேறு வந்து கொண்டிருக்கின்றன.

வீதி எங்கும் மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு மக்களை போதையில் ஆழ்த்தினால் விபத்துகள் ஏன் நடக்காது? இங்கே குடிப்பவன் குற்றவாளியா? ஊற்றிக் கொடுக்கும் சிப்பந்தி குற்றவாளியா? கடைவிரித்து விற்பவன் குற்றவாளியா? விற்பனைக்காக உற்பத்தி செய்யும் முதலாளி குற்றவாளியா? இவை எல்லாம் முறையாக நடப்பதை உறுதி செய்யும் அதிகாரி குற்றவாளியா? மதுக்கடைகளை நடத்துவதற்கு கொள்கை முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும் அரசாங்கம் குற்றவாளியா? அரசுக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் குற்றவாளியா? குடியின் ஊற்றுக்கண் எது? அரசாங்கமா அல்லது குடிப்பவனா?

“குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்” என்கிற உபதேசங்களெல்லாம் எடுபடுகிறதா என்ன? வள்ளுவன், காந்தியின் உபதேசங்களையே உதாசீனப் படுத்தியவன் அரசின் அறிவுரைகளால் மட்டும் மாறிவிடுவானா? உபதேசங்களால் மாற்றங்கள் நிகழாது. குடியின் ஊற்றுக்கண்ணை அகற்றாதவரை சாலைகளில் மரண ஓலங்கள் மறையாது.

Thursday, November 10, 2011

பாலும் பசுவதையும்!

”தமிழகத்தில் பசு வதையைத் தடுப்பதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் இந்து வழக்குரைஞர்கள் முன்னணியில் இடம் பெற்றுள்ள வழக்குரைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்”

”வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவது தொடர்கிறது. இதைத் தடுக்க வழக்குரைஞர்கள் சரியான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்”

புதன் கிழமை (09.11.2011) அன்று வேலூரில் ”இந்து வழக்குரைஞர் முன்னணியை” தொடங்கி வைத்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

ஏதோ ஒரு கட்சிக்காரன் வந்தான். ஒரு சங்கத்தைத் தொடங்கினான், என்று இதை மிகச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.

குஐராத்தில் பசுவதை தடைச்சட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. பசுவைக் கொன்றால் சிறைவாசம் உறுதி. ஏற்கனவே இருந்த ஓராண்டு சிறை தண்டனையால் பசுக்கொலையை தடுக்க முடியவில்லையாம். அதனால் சிறை தண்டனையை ஏழு ஆண்டுகளாக்கிவிட்டார்கள். கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போதே மசோதா தயாராகிவிட்டது. இதை செயல்படுத்தக் கோரி போராட்டம் எல்லாம் நடத்தி இருக்கிறார்கள் இந்து மதவெறியாளர்கள்.

எது வதை?

இந்து முன்னணி, பாரதிய ஐனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து மத அமைப்புகள் மட்டும் பசு வதையைத் தடுக்க முணைப்பு காட்டுவதேன்? பசு இந்துக்களின் தெய்வமாகக் கருதப்படுவதாலா? அல்லது உயிர் வதைக் கூடாது என்பதாலா? பசுவைக் கொல்லக் கூடாது என்பவர்கள் ஏன் எருது வதையை எதிர்ப்பதில்லை?

கொல்வது மட்டும்தான் வதையா? கொடுமைப்படுத்துவது, இம்சிப்பதெல்லாம் வதையில் சேராதா? “ஏண்டா போட்டு வதைக்கிற?” என்றுதானே நம்மை மற்றொருவர் இம்சிக்கும் போது கேட்கிறோம். எனவே வதை என்பதை இம்சித்தல் அல்லது கொடுமைப்படுத்துதல் என்றும் பொருள் கொள்ளலாமே!

உயர் சாதிக்காரன் கீழ்சாதிக்காரர்களை வதைக்கிறான். பணக்காரன் ஏழைகளை வதைக்கிறான். முதலாளி தொழிலாளியை வதைக்கிறான். மாமியார் மருமகளை வதைக்கிறாள். காவல் துறை மக்களை வதைக்கிறது. ஜெயா அரசு மக்கள் நலப் பணியாளர்களை வதைக்கிறது. ஆப்கானை வதைத்து ஈராக்கை வதைத்து-லிபியாவை-வதைத்து தற்போது ஈரானை வதைக்கத் திட்டம் போட்டு வருகிறது அமெரிக்கா.

ஆளுமையையும், அதிகாரத்தையும், சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டே இப்படிப்பட்ட மனித வதைகள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

இப்படி அன்றாடம் அரங்கேறி வரும் மனித வதைகளைக் கண்டு கொள்ளாதவர்கள் பசுவதையை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்? பசுக்களை இந்துக்கள் புனிதமாகக் கருதுவதால் கொல்லக் கூடாது என்கிறார்களா? இஸ்லாமியர்கள் பசுக்களைக் கொன்று தின்கிறார்கள் என்பதற்காக எதிர்க்கிறார்களா? உயிர்களைக் கொள்வது பாவம்-உயிர் வதை பாவம் என்பதற்காக பசு வதையை எதிர்க்கிறார்களா?

காந்தியும் ஆட்டுப் பாலும்

“பால் சாப்பிடுவதை விட்டதற்கு மிக முக்கியமான நோக்கம் ஆன்மீகமானதேயாகும்” என்று காந்தி கடைபிடித்த ஆன்மீகம் கருதி பசு வதை கூடாது என்கிறார்களா?

“எருமைகளின் (அவைகளும் பசுக்கள்தானே) மடிகளிலிருந்து கடைசி சொட்டுவரையிலும் பாலைக் கறந்து விடுவதற்குக் கல்கத்தாவில் மாட்டுக்காரர்கள் அனுசரித்த கொடிய முறைகள் என் மனக் கண்முன் காட்சியளித்தன; மாமிசம் எவ்விதம் மனிதனின் உணவல்லவோ, அதேபோல மிருகங்களின் பாலும் மனிதனின் உணவாக இருப்பதற்கில்லை.” என்று காந்தி சொன்னாரே அத்தகைய கொடுமை கூடாது என்பதால் பசுவதை கூடாது என்கிறார்களா?

“நீங்கள் பால் சாப்பிட்டாலன்றி உங்கள் உடம்பு தேறும்படி செய்வது என்னால் முடியாது” என்று மருத்துவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கடைசி வரை பசுவின் பாலைத் தொடவில்லை காந்தி. “சத்தியாகிரகப் பேராட்டத்தை நடத்த வேண்டும் என்று எனக்கு இருந்து வந்த தீவிர ஆர்வம், நான் உயிரோடு இருக்க வேண்டும் என்ற பலமான ஆசையை என்னுள் உண்டாக்கிவிட்டது” என்று காந்தி உயிருக்காக சத்தியத்தைக் கைவிட துணிகிறார்.

“நான் விரதம் எடுத்துக் கொண்ட போது பசுவின் பாலும், எருமைப் பாலுமே என் எண்ணத்தில் இருந்தனவென்றாலும், அதன் இயற்கையான பொருளின்படி, எல்லா மிருகங்களின் பாலும் அதில் அடங்கியதே. மேலும், பால், மனிதனின் இயற்கையான ஆகாரம் அல்ல என்ற கருத்து எனக்கு இருக்கும் வரை, எந்தப் பாலையும் நான் சாப்பிடுவது சரியே அல்ல, இவைகளெல்லாம்அறிந்திருந்தும் ஆட்டுப் பால் சாப்பிடச் சம்மதித்தேன். உயிரோடு இருக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி, சத்தியத்தினிடம் கொண்ட பற்றைவிடப் பலமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது”  என காந்தி பின்னாளில் சத்தியத்தைக் கைவிட்டார்.

காந்தியின் பல்டி

“அதனால்தான் நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, … பசுப்பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது.  பசுப்பாதுகாப்பு என்பதில் கால்நடை வளர்ப்பு, பசுவின் இனத்தைச் சிறந்ததாக்குவது, காளை மாடுகளை ஜீவகாருண்யத்துடன் நடத்துவது, சிறந்த முறையில் பால் பண்ணைகளை அமைப்பது ஆகியவைகளையும் அடக்கியிருக்கின்றன என்பதே என் அபிப்பிராயம்” என்று காந்தி பின்னாளில் பால் பண்ணைகளுக்காக குரல் கொடுக்கிறார். உயிரே போனாலும் பரவாயில்லை என்று பசுவின் பாலைத் தொடாதவர் பிறகு யாருக்காக பால்பண்ணைகளை அமைக்கக் கோருகிறார்?

காந்தியின் இந்த தலைகீழ் மாற்றம் ஏன் நடந்தது? யாருக்காக நடந்தது? இங்கேதான் பார்ப்பனர்களின் சூழ்ச்சி அடங்கியுள்ளது. வேத காலத்தில் பார்ப்பனர்கள் மாமிசம் உட்கொண்டார்கள், அதுவும் பசு மாமிசம்தான் அவர்களின் பிரியமான உணவு என்பதற்கான ஆதாரங்கள் வேதங்களிலும் மனுஸ்மிருதியிலும் காணக்கிடந்தாலும் இன்று மட்டும் அவர்கள் பசுவை ஏன் தெய்வமாகக் கருதுகிறார்கள்? உயிர்க் கொலையை எதிர்த்த பௌத்தம் செல்வாக்கு பெற்றதால் தாங்களும் செல்வாக்கு பெற வேண்டி மாமிசத்தைக் கைவிட்டு சைவத்துக்கு மாறியவர்கள் பார்ப்பனர்கள். மாமிசத்தைக் கைவிட்ட பிறகு உணவுக்கு என்ன செய்வது? விவசாயம் தெரியாது, மந்திரம் ஓதி பிழைப்பதைத்தவிர வேறு வேலைகள் எவுதும் தெரியாது. எப்படி பிழைப்பது?  எதைத்தின்பது? என்கிற இக்கட்டான நிலையில்தான் அவர்கள் பாலைத் தேர்வு செய்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பால் இல்லாமல் அவர்கள் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஏழ்மையும் மாட்டுக்கறியும்

மற்றொரு பக்கம் அடிமைகளாக நடத்தப்பட்ட மக்கள் வறுமை காரணமாக உணவுக்காக மாடுகளைக் கொன்று அதன் கறியை உட்கொண்டு உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். பசுக்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டால் பார்ப்பனர்களுக்கு பால் பற்றாக்குறை ஏற்படுமே? அதனாலேயே பால் கொடுக்கும் பசுக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த உண்மையைச் சொன்னால் எடுபடாது என்பதால் பசு புனிதமானது என்கிற கருத்தை பரப்பியிருக்க வேண்டும். அன்று பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்களாக அறியப்பட்டார்கள். பின்னாளில் மற்றவர்களும் இந்துக்களாக ஏற்கப்பட்டதால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தெய்வமாக இருந்த பசு பொதுவில் இந்துக்களின் தெய்வமாகக் விரிவாக்கப்பட்டிருக்கவேண்டும். இதில்தான் காந்தியும் வீழ்ந்திருக்க வேண்டும்.

இது ஏதோ அனுமானம் அல்ல. பழைய வரலாற்றின் எச்சங்களை இன்றும் காண முடியும். இன்று பால் இல்லாமல் பிறர் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் பார்ப்பனர்களால் உயிர் வாழ முடியாது. எனவே பார்ப்பனர்களின் தேவையிலிருந்து எழுந்ததுதான் பசுப்பாதுகாப்பு. மாட்டுக்கறி ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் உணவாக இன்றும் நீடிப்பது வரலாற்றின் எச்சம்தானே!

இராம.கோபாலனின் உள்நோக்கம்

பசுவதையை உண்மையியே எதிர்ப்பவர்கள் என்றால் ஒரு கல்லூரி நிர்வாகத்தால் (http://hooraan.blogspot.com/2010/12/blog-post_24.html) பசுக்கள் கொல்லப்பட்டபோது இவர்கள் எங்கே போனார்கள்? எதிர்த்து ஏன் கேள்வி கேட்கவில்லை? பணக்காரன் பசுவைக் கொன்றால் பரவாயில்லை. ஆனால் ‘பறையன்’ பசுவைக் கொள்வதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘பறையனாவது’ மடி வற்றிய பசுவைத்தான் கொள்கிறான். ஆனால் இங்கே பணக்காரன் பால்சுரக்கும் பசுக்கைளையல்லவா கொன்றிருக்கிறான்.

தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் கெடுவதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் இதைவிட மிக மோசமாக இராணிப்பேட்டையில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பண்மடங்கானது. இராணிப்பேட்டை சிப்காட்டில் அமைந்துள்ள திருமலை கெமிக்கல்ஸ் (இது ஒரு பார்ப்பனருக்குச் சொந்தம்), அல்ட்ரா மைரைன், கமார் கெமிக்கல்ஸ், மல்லாடி போன்ற ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுற்றுவட்டாரத்திலுள்ள புளியந்தாங்கல், புளியங்கண்ணு, அவரக்கரை, இராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள ஏரி குளங்களை பாழாக்கியதோடு நிலத்தடி நீரையும் பாழாக்கி விவசாயத்திற்கும், குடிப்பதற்றும் பயன்படாத நிலைக்கு ஆளாக்கிவிட்டன. இத்தகைய நீரைக் குடிக்கும் பசுக்கள் உள்ளிட்ட கால் நடைகளும் இனம் புரியா நோய்களுக்கு ஆளாகி இறந்து போகின்றன. இங்கேயும் பசுக்கள் கொல்ப்படுகின்றன. இவை எல்லாம் இராம கோபாலனுக்குத் தெரியாதா என்ன?. இத்தகைய ஆலைகளால்தான் சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்களில் உலகிலேயே இராணிப்பேட்டை இரண்டாம் இடத்தில் உள்ளது.


மேற்கண்ட இரு கோரிக்கைகளிலும் மக்கள் நலன் என்பதைவிட இஸ்லாமியர்களின் மீதான காழ்ப்புணர்ச்சியிலிருந்து வைக்கப்பட்டதும் அதையொட்டி மத மோதலுக்கு வித்திடுவதும்தான் இராம.கோபாலனின் நோக்கமாக இருக்கமுடியும். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தோல் ஆலைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை என்பதும், தாழ்த்தப்பட்டவர்கள் மாட்டுக்கறி உண்கிறார்கள் என்பதைவிட பசுக்கள்/மாடுகள் இஸ்லாமியர்களுக்காகவே வெட்டப்படுகின்றன என்பதும்தானே இவர்களது வாதம்.

தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை தடுத்த நிறுத்த கோரிக்கை வைக்கும் இராம் கோபாலன், திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மைரைன், கமார் கெமிக்கல்ஸ், மல்லாடி போன்ற ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைத்திருந்தால் அதில் நேர்மை இருந்திருக்கும். இந்து முன்னணியிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?