நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளம்!
கேரளா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நாயர் டீ
கடை, மூனாறு உள்ளிட்ட எழில் மிகு தேயிலைத் தோட்டங்கள், கொச்சி உள்ளிட்ட அழகிய
கடற்கரை நகரங்கள், நேந்திரம்
சிப்ஸ், கதக்களி, மகாபலி, ஓணம், அன்றைய ராதா-அம்பிகா முதல் இன்றைய கும்கி லட்சுமி
மேனன் வரையிலான கேரள நாட்டிளம் பெண்டிர், இறுதியாக முல்லைப் பெரியார். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று, ஐயங்காளி!
உங்களுக்குத் தெரியுமா! நூறு
ஆண்டுகளுக்கு முன்புவரை புலையர்கள் தூய்மையான ஆடைகளை உடுத்தக் கூடாது; கற்கள் மற்றும் மரத்தினால் ஆன ஆடைகளைத்தவிர வேறு
துணி ஆடைகளையோ, தங்கநகை
ஆபரணங்களையோ அணியக்கூடாது; திருவனந்தபுர நகர
வீதிகளில் நுழையவோ நடக்கவோ கூடாது; மாட்டு வண்டிகளில்
(அன்றைய பிளஷர் கார் போல!) பயணம் செய்யக் கூடாது; பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயிலக் முடியாது என்ற நிலைதான் இருந்தது. கேரளாவில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட
சாதிகளில், ஒரு சில தீண்டத்தகாத
சாதிகளில் ஒன்றுதான் புலையர் சாதி.
ஆச்சரியமாக இருக்கிறதா? இன்று கல்வியில், இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத்
திகழும் கேரளாவின் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில், அதாவது ஒரு நூறு ஆண்டுகளுக்கு
முன்பு இப்படித்தான் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா?
1893 ஆம் ஆண்டு ஒரு
நாள் வெள்ளை வெளேர் சட்டையுடன், தோள்மீது படிந்த துண்டு
மற்றும் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சாட்டையைச் சுழற்றியவாறு திருவனந்தபுரம்
வீதிகளில் மாட்டு வண்டியில்
கம்பீரமாய் ஒருவன் பயணம் செய்கிறான். நாயர் சாதி ஆண்களும், பெண்களும் மட்டுமே பயணிக்கக் கூடிய காலத்தில், நாயர் அல்லாத முப்பது வயதே ஆன இளைஞன்
ஒருவன் பயணிக்கிறான்.
பொது வெளியில் எங்கெல்லாம் புலையர் சாதி மக்கள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்ததோ
அங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டிக் கொண்டு தனது நடைபயணத்தைத் தொடங்குகிறான்
1863 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28 அன்று பிறந்த ஐயங்காளி
என்ற போராளி.
1898 இல், அரளமூடு சந்தையை நோக்கி பலராமபுரம் சாலியர்
தெருவில் நடைபயணம் நுழைந்த போது, ‘தடையை மீறி
புலையர்கள் உள்ளே நுழைவதா?’ என ஆத்திரம் கொண்ட ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் தொடுக்கின்றனர். இந்தத் தாக்குதல் புலையர்களால்
முறியடிக்கப்பட்ட பிறகே, பொதுப் பாதையை அவர்களால் பயன்படுத்த முடிந்தது.
இதன் விளைவாக சாலியர் கலவரம் என்றழைக்கப்படும் இந்தப் போராட்டம் திருனந்தபுரத்தை
ஒட்டி உள்ள கழக்கூட்டம், கனியபுரம்
உள்ளிட்ட பகுதிகளிலும் பரவுகிறது.
பொதுப் பாதையில் நடப்பதற்கான உரிமை கேட்டு, ஐயங்காளி அவர்கள் மேற்கொண்ட
இந்தப்போராட்டத்தின் விளைவாக 1900 ஆம் ஆண்டு முதல்,
புலையர்கள் பொது இடங்களில் நடப்பதற்கான சூழ்நிலை உருவானது.
கல்விக்கான போராட்டம்
ஐயங்காளி அவர்களின் போராட்டம் இதோடு நிற்கவில்லை. புலையர்கள் கல்வி பயில பொதுப்பள்ளிகளில் அவர்களை சேர்க்கக்
கோரி அரசிடம் முறையிடுகிறார். ஒரு முறை மாணவர்களை அழைத்துக் கொண்டு
பள்ளிக்கூடத்திற்குள் நுழைகிறார். பிறகு, தானே புலையர்களுக்கான
பள்ளி ஒன்றைத் திறக்கிறார். ஆதிக்கச் சாதியினர் இதைக் கடுமையாக
எதிர்த்ததோடு, முதல் நாளே அவரது பள்ளியை எரிக்கின்றனர்.
பொதுப் பள்ளியில் புலையர்களை சேர்க்கவில்லை என்றால், ஆதிக்கச் சாதியினரின் நிலங்கள் தரிசாக விடப்பட்டு, அதில்
களைகள் மட்டுமே முளைக்கும் என்கிற போர்ப் பிரகடனத்தை அறிவிக்கிறார்
ஐயங்காளி.
அதுவரை, புலையர்களின் உழைப்பில் உண்டு வாழ்ந்த ஆதிக்கச் சாதிக் கும்பல் அரண்டு
போகிறது. இதன் விளைவாக புலையர்களை
பொதுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்வதற்கான அரசாணை ஒன்றை ஆங்கிலேய அரசு வெளியிடுகிறது. இதற்கும் ஆதிக்கச் சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த
போதும்,
1910 மற்றும் 1914 ஆகிய ஆண்டுகளில் அரசாணைகளை வெளியிட்ட பிறகே,
புலையர்கள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
புலையர்கள், பொதுச் சாலைகளைப் பயன்படுத்த, தூய்மையான ஆடைகளை
அணிய, பொதுப் பள்ளிகளில் கல்வி பயில, “கல்லுமல சமரம்” என்று
அழைக்கப்படும் பேரெழுச்சி 1915 இல் நடைபெற்றது.
தூய ஆடை அணியக்கோரி போராட்டம்
கற்கள் மற்றும் மரத்தினால் ஆன ஆடைகளைக் தவிர துணி உள்ளிட்ட வேறு ஆடைகளை
புலையர் பெண்கள் அணியக்கூடாது
என்றிருந்த தடையை உடைக்க, அவற்றையும்
தூக்கி வீசுங்கள் என ஒரு கூட்டத்தில் அறைகூவல் விடுக்கிறார் ஐயங்காளி. இதை அறிந்த ஆதிக்கச் சாதியினர் புலையர்கள்
நடத்திய கூட்டத்தில் தாக்குதல் நடத்தியதோடு, புலையர்களின் வீடுகளையும் தீயிட்டு
எரிக்கின்றனர். இதற்கு எதிராக, பேரணிகள், வேலை நிறுத்தங்கள், ஒத்துழையாமை
இயக்கம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொள்கிறார் ஐயங்காளி.
மகாத்மா ஐயங்காளி
மகாத்மா காந்தி கேரள மண்ணில் கால் பதிப்பதற்கு முன்பாகவே, ஒடுக்கப்பட்ட சாதி மக்களை விழிப்புணர்வு
செய்ததில் ஒரு அழியாத் தடத்தை ஏற்படுத்தியதால்தான், ஐயங்காளி, “மகாத்மா ஐயங்காளி” என
அழைக்கப்படுகிறார். அதன்பிறகுதான்
காந்தி மகாத்மாவாகிறார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1911 முதல் தொடர்ச்சியாக
25 ஆண்டுகள் திருவிதாங்கூர்
அசெம்ளிக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் ஐயங்காளி என்பது இங்கே
குறிப்பிடத்தக்கது.
ஐயங்காளியை தவிர்த்துவிட்டு கேரள வரலாற்றை எழுத முடியாது. அதனால்தான் திருவனந்தபுரத்திலுள்ள “பழை விக்டோரியா
ஜூப்ளி டவுன் ஹால்” பெயர், “மகாத்மா ஐயங்காளி ஹால்” என 2019 முதல் அழைக்கப்படுகிறது. கேரள ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம், 2010 முதல் ஐயங்காளி
பெயரில் அழைக்கப்படுகிறது. 1980 இல் ஐயங்காளி
அவர்களின் சிலையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
எந்த சனாதன சக்திகள் ஐயங்காளிகளை அன்று அடக்கி ஒடுக்க முனைந்ததோ, அதே சனாதன சக்திகளின் பிரதிநிதியான
நரேந்திர மோடி, இன்று, ஐயங்காளிகளுக்குப் புகழாரம் சூட்டுகிறார். எச்சரிக்கை! சனாதன மீட்டுருவாக்கம் நடைபெறும் இன்றைய சூழலில் ஓராயிரம் ஐயங்காளிகள்
இன்று தேவைப்படுகிறார்கள்! சனாதனிகளை வீழ்த்த!
ஊரான்
THE PRINT ஆங்கில ஏட்டில் Keshav Padmanabhan அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை.
https://theprint.in/theprint-profile/ayyankalis-bullock-cart-ride-changed-caste-dynamics-in-kerala/1734496/?amp