அது ஓங்கி வளர்ந்த பெருங்காடு. அந்தக் காட்டிற்குள் நுழையும் போது நம்மை அறியாமலேயே நமது கண்கள் விரிந்து விடும். வகை வகையான மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் என பரந்து விரிந்த காட்டைக் காண நாலா பக்கமும் நம் கண்கள் சுழலும். பார்த்ததையே மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். ஆனால் இந்தக் காட்டை பார்க்கவே நமது கண்கள் கூசும். பாதி மூடிக் கொண்டு ஓரக்கண்ணால், ஒற்றைப் பார்வையுடன்தான் இந்தக் காட்டில் நுழைய முடியும். அக்கம் பக்கம் எட்டிப் பார்ப்பது அபாயகரமானது.
அந்தக் காட்டில் சிறகடிக்கும் பறவைகளும், வண்ண வண்ணப் பூச்சிகளும் எழுப்பும் ரீங்கார ஓசைகள் நம் காது மடல்களை இதமாய் வருடிச் செல்லும். பூத்துக் குலுங்கும் மலர்களின் வாசத்தை உள்ளிழுக்க நாசித் துவாரம் போதாது என்பதால் நம்மை அறியாமலேயே வாய் பிளந்து நிற்போம். உடன் வந்தவர் குரல் கொடுக்கும் வரை எத்தனை நேரம் வாய் பிளந்து நின்றோம் என்பதே தெரியாது. ஆனால் இந்தக் காட்டில் நுழையும் போதே கட்டை விரலும், ஆட்காட்டி விரலும் கூட்டணி அமைத்துக் கொண்டு மூக்குத் துளையை அடைக்க முற்படும் போதே பற்கள் இறுகி தொண்டைக் குழியும் ஒட்டிக் கொள்ளும். இந்தக் காட்டின் வாசம் மூக்கைத் துளைத்து குடலைப் புரட்டி வாந்தி எடுப்பதற்குள் காட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். இல்லை எனில் எந்த உறவுகளைப் பார்க்கச் சென்றோமோ அந்த உறவுகள் நம்மைப் பார்க்க மருத்துவ மனை நோக்கி வர நேரிடும்.
அந்தக் காட்டில் முட்களும், கற்களும் நமது கால்களை பதம் பார்த்து விடலாம் என்பதால்தான் காலணி தேவைப்படுகிறது. இல்லை எனில் வெறுங்காலால் நடப்பதே சுகமானது. அதுவும் ஈர மண்ணில் நடக்கும் போது பாலில் ஊறிய பிஸ்கட்டின் மென்மையை உணர முடியும். ஆனால் இந்தக் காட்டில் காலணி இல்லாமல் நடக்க முயற்சிப்பது தற்கொலை முயற்சியே. காலணி இருந்தால் கூட சில நேரங்களில் ஆளையே கவிழ்த்து விடும். திருடர்கள் ஜாக்கிரதை என்பதைப் போல காலணிகள் ஜாக்கிரதை என எழுதி வைப்பது நலம் பயக்கலாம்.
அந்தக் காட்டில் வழுக்கி விழுந்தால் மண்ணைத் தட்டி விட்டு பயணத்தைத் தொடரலாம். ஆனால் இந்தக் காட்டில் வழுக்கி விழுந்தால் பயணம் அதோ கதிதான்.
அந்தக் காட்டில் புலி, சிங்கம், கரடி, யானை, குரங்கு, முயல், பன்றி, மான், பாம்பு என வித விதமான மிருகங்கள் - விலங்குகள் உண்டு. அவற்றில் சில ஆபத்தானவை என்றாலும் ஆயுதம் கொண்டு நம்மை தற்காத்துக் கொள்ளலாம். இந்தக் காட்டிலும் மிருகங்கள் உண்டு. மஞ்சளாய், வெள்ளையாய் நெளியும் கொழுத்த புழுக்களை பார்த்த மாத்திரத்திலேயே நம் நெற்றிப் பொட்டு தானே சுறுங்கும். நம் உதட்டின் ஈரத்தை ஈர்ப்பதற்கு படை எடுக்க அணி வகுத்து நிற்கும் பருத்த ஈக்களும், தடித்த கொசுக்களும் நம்மை அச்சுறுத்தும். இந்தக் காட்டு மிருகங்கள் வடிவத்தில் சிறிதென்றாலும் சற்று நேரத்தில் நம்மை கிலி கொள்ள வைத்து விடும்.
அந்தக் காட்டில் மிருகங்கள் பெய்யும் மூத்திரத்தால் காடு செழிக்கும். மரங்கள் வான் முட்ட ஓங்கி உயர்ந்து வளரும். ஆனால் இந்தக் காட்டில் மனித(மிருகங்கள்)ர்கள் பெய்யும் மூத்திரத்தால் தாவரங்கள் பட்டுப் போகும். நெடிதுயர்ந்த இலுப்ப மரத்தின் வேர் நூறு அடி ஆழத்தில் ஒளிந்திருந்தாலும் தேடிப் பிடித்து கருவறுக்கும் ஆற்றல் மனித மூத்திரத்திற்கு உண்டு. வீட்டின் கேட்டையும், நாட்டின் எல்லையையும் காக்கும் இரும்புக் கம்பிகளே இத்துப் போகும் போது காங்கிரீட் காடுகள் மட்டும் தப்புமா என்ன?
அந்தக் காட்டில் வானம் பொழிந்தால் எட்டுத் திக்கும் மண் வாசம் வீசும். இந்தக் காட்டில் மண்ணைத் தொடும் முன் ஒரு வாடையும், மண்ணைத் தொட்டபின் மற்றொரு வாடையும், நனைந்த மண் காய்ந்த பிறகு புதியதொரு வாடையும், குட்டையில் தேங்கி புழுக்கள் நெளியும் போது மற்றொரு வாடையும் என மூத்திரத்திற்குத்தான் எத்தனை எத்தனை வாடைகள். பேஷினோடு இணைக்கப்பட்ட குழாய் இல்லாததால் பாதி மூத்திரம் நம் முழங்காலை நனைத்திருப்பது அப்போது தெரியாது. பேண்ட் காய்ந்த பிறகு வரும் வாடையைத் தேடும் போதுதான் நம் முழங்கால் நனைந்தது நினைவுக்கு வரும். நினைவாற்றல் அற்றவர்களையும் ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும் வல்லமை இந்த வாடைக்கு உண்டு.
அந்தக் காடுகளுக்குள் நுழையக் கட்டணம் ஏதுமில்லை. பயணச் செலவு மட்டும்தான். ஆனால் இந்தக் காடுகளே கட்டணக் காடுகள்தானே! இந்தக் காடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் ஆடை நனைந்து விடுமோ என்கிற அச்சத்தில் பேருந்திலிருந்து இறங்கி அவசர அவசரமாக அருகில் உள்ள சுவற்றின் ஓரமாய் ஒதுங்கினால் “மிருகங்கள் மட்டுமே இங்கே….- என்கிற வரவேற்பு அர்ச்சனையால் வெளியேர முனைந்த மூத்திரம் கூட வற்றி விடுகிறது. ஆத்திரத்தை அடக்கலாம். ஆனால் மூத்திரத்தை அடக்க முடியுமோ! என்ன செய்ய? இதுதானே இந்தியா!
ஏழை – நடுத்தரவாசிகளே இந்தக் காடுகளில் அடிக்கடி சிக்குபவர்கள். மேட்டுக் குடி மகிழுந்துக்காரர்கள் இந்தக் காட்டில் கால் வைப்பது அரிது என்பதால் இதன் அருமை பெருமைகள் அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது; புரியாது.
ஆண்களுக்கு கூச்சமில்லை. எங்கு வேண்டுமானாலும் மூத்திரம் போவார்கள். நின்றபடியே போவதால் மூத்திரத் தொற்று (urinary infection) தாக்குதல் நடத்த கால தாமதமாகலாம். ஆனால் பெண்களின் பாடோ பெரும் பாடு. இவர்கள் உட்கார்ந்தே போவதால் மூத்திரத் தொற்றின் அதிரடித் தாக்குதல் உடனே தொடங்கும்.
அந்தக் காடுகள் முதுமலை, ஜவ்வாது மலை, கல்ராயன் மலை, சேர்வராயன் மலை, கவுத்தி மலை, நீலகிரி - ஏலகிரி மலை என தமிழகத்தில் தொடங்கி ஏழுமலை, தண்டகாரண்யா, நியாம்கிரி, விந்திய - சாத்பூரா என படர்ந்து விரிந்து இமயமலையாய் உயர்ந்து நிற்கின்றன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பேருந்து நிறுத்தங்கள் - நிலையங்கள் என கன்யாகுமரி முதல் காசுமீரம் வரை நீண்ட நெடிய அடர்ந்த பெருங்காடுகள் இந்தக் காடுகள். தொடர் வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள், திரையரங்குகள் என இந்தக் காடுகள் பல்கிப் பெருகவேச் செய்கின்றன.
அந்தக் காடுகளிலிருந்து மனிதர்களை விரட்டுகிறார்கள் மன்மோகனின் ஏஜெண்டுகள். கோடிகளைச் சுருட்ட அவர்களுக்குத் தேவை கனிம வளங்கள். ஆனால் இந்தக் காடுகளுக்கோ மனிதர்களை அழைக்கிறார்கள் ஆளும் கட்சியின் ஏஜெண்டுகள். நமது கோவணத்திலிருந்தே இவர்கள் இலட்சங்களைப் பார்ப்பவர்களாயிற்றே!.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தக் காடுகளில் சிறந்ததைத் தேர்வு செய்ய நடுவர்களையும் தாண்டி சிறப்பு வல்லுனர்களை நாடினாலும் போட்டி மிகக் கடுமையானது என்பதால் பொது வாக்கெடுப்புக்குச் செல்வதே சாலச் சிறந்தது. இன்றைய நிலவரப்படி எட்டுத் திக்கும் நாற்றமடித்து பயணிகளை திக்கு முக்காடச் செய்யும் வேலூர் பேருந்து நிலையக் காடுதான் தமிழகத்தின் முன்னணி மூத்திரக் காடாகத் திகழ்வதாக பயணிகள் கருதுகிறார்கள். சுவாசச் காற்றை நுரையீரலுக்குள் அடைத்து வைக்கும் மூச்சுப் பயிற்சி கலையை கற்க வேண்டுமா? ஒரு முறை வேலூர் மூத்திரக்காட்டிற்கு விஜயம் செய்யுங்கள். ஈஷா யோகிகளைத் தேடி நீங்கள் வெள்ளியங்கிரி போக வேண்டிய அவசியமிருக்காது.
நிலத்தடி நீரைக் கொண்டுதான் அவ்வப் பொழுதாவது இந்தக் காடுகளைக் கழுவுகிறார்கள். அந்த நீருக்கும் இனி ‘ரேட்டு’ வைக்கப் போகிறது தேசிய நீர்க் கொள்கை. எலவசனூர் கோட்டையிலேயே இப்போது ஆறு ரூபாய் எனில் இனி கட்டணம் இரட்டிப்பானால் எவனுக்கய்யா மூத்திரம் வெளியே வரும்? தேசிய நீர்க் கொள்கையால் இனி நமது வீடுகளிலும் இந்தக் காடுகள் முளைக்கப் போகின்றன. குடிக்கவே தண்ணீர் இல்லாத போது மூத்திரத்தையா அலச முடியும்?
இந்தக் காட்டில் பெய்யும் மழையில் 95% தண்ணீர் போக மீதி யூரியா, குளோரைடு, சோடியம், பொட்டாசியம் என கனிமங்கள் உண்டு. இக்கனிமங்களை பிரித்தெடுத்தால் தோல் தொழிற்சாலைகள் (tanning), நெசவாலைகள் (textiles), வெடி மருந்து (gun powder) ஆலைகளுக்குத் தேவையான நீரை இந்தக் காடுகளிலிருந்தும் பெற முடியும் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். மாணாக்கர்களுக்கு மூத்திர மேலாண்மை (Urine Management) குறித்து வகுப்பெடுக்க கலாம்கள் வருவார்களா?
தொடர்புடைய பதிவுகள்:
தொடர்புடைய பதிவுகள்: