Sunday, September 29, 2024

விட்டு விடுங்கள்! தாவரங்கள் பூக்கட்டும்!

பருவப் பெண்கள், கணவனோடு வந்த இளம் தாய்மார்கள், வேலைக்குச் செல்லும் மகளிர் என பலரும் பூக்கார அம்மாவிடம் பூ வாங்கிச் சென்றதைப் பார்த்த போது எனக்கு அருகில் இருந்த தேநீர் கடையும் நினைவுக்கு வந்தது.

காலை நேரமானால் ஆண்கள் தேநீர் கடைகளை மொய்க்கின்றனர். பூக்கடைகளை பெண்கள் மொய்க்கின்றனர்.

குளிருக்கு இதமாய் குடிக்க வேண்டிய சுடுநீரில், தற்செயலாய் ஏதோ ஒரு இலை விழ, அது சீனாக்காரனால் தேநீராய் உருவெடுக்க, சிக்காகவும், ருசிக்காகவும் குடிப்பது பழகிப்போனதால் அதுவே இன்று வழக்கமாகிப் போனது.

மரங்களும் செடிகளும் கொடிகளும் பூப்பது இயற்கை. இயற்கையாய் பூத்துக் குலுங்கும் மலர்களின் வண்ணமும் வாடையும் சுண்டி இழுக்க, அவற்றைக் கொய்து, நுகர்ந்து இன்பமுருகிறான் மனிதன். பூக்களை நாடுவது ஒரு இன்ப நாட்டமே! 

பூக்களின் மீதான இன்ப நாட்டத்தால், சங்க காலத்திலேயே பூக்களின் மீது வீழ்ந்தவன், இன்று வரை அதிலேயே புரண்டு கிடக்கிறான். 

மலரோடு மகளிரை ஒப்பிட்டு அன்று பாடத் தொடங்கியவன் இன்றும், ரோஜா மலரே, முல்லை மலர் மேலே, தங்கத் தாமரை மலரே, கூடையில் என்ன பூ என பாடிக் கொண்டிருக்கிறான்.

மலர்கள் மீதான இன்ப நாட்டத்தை மகளிர் மீதும் சாட்டினான். கூந்தலில் பூச்சூடவில்லை என்றால் அமங்களம் என்றான். அச்சம் கொண்ட மகளிர் பூக்களில் வீழ்ந்தனர். பூச்சூடுவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இதனால்தான் பூக்கடைகளைப் பெண்கள் மொய்க்கின்றனர்.

கடவுளின் பெயரால், புலன்களற்ற சிலைகளுக்கும், படங்களுக்கும், மாலையாகச் சூடியதோடு அன்றாடம் அர்ச்சனை செய்வதில் இன்ப நாட்டம் கொண்டான்.  

இதில் பகுத்தறிவாளர்களும் விதிவிலக்கல்ல. மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கும், படங்களுக்கும் மலர் தூவி, மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செய்வதும் ஒருவகையில் இன்ப நாட்டமே.

விளையாட்டுப் போட்டிகளில், தேர்தல்களில், வெற்றி பெற்றோரை வரவேற்க, மலர் தூவி மாலை அணிவித்துப் பாராட்டுவதிலும் ஒளிந்திருப்பது இன்ப நாட்டமே.

தங்களின் அபிமானத் தலைவர்களை வரவேற்க, அவர்கள் குற்ற வழக்குகளில் சிறை சென்று வந்தவர்களானாலும் சரி, வழிநெடுக வண்டிக்கணக்கில் மலர் தூவி வரவேற்கின்றனர்.

உயிரோடு உள்ளவனுக்கு மரியாதை செலுத்துவதற்கு மாலை அணிவிப்பது போல, இறந்தவனுக்கு மரியாதை செலுத்துவதாகக் கருதி பிணத்திற்கும் மலர்மாலை சாத்துகின்றனர்.

பிள்ளையார் சூழி போட்டால்தான் படிப்பு வரும் என்று பழக்கப்படுத்துவதைப் போலத்தான் பூக்கள் பயன்படுத்துவதையும் பழக்கப்படுத்திவிட்டனர். மற்றபடி, மேலே குறிப்பிட்ட வகைகளில் பூக்களைப் பயன்படுத்தவில்லை என்றால் எதுவும் கெட்டுவிடப் போவதில்லை.

காரண காரியம் தெரிந்தோ தெரியாமலோ, நாம் கடைபிடிக்கிற அன்றாடப் பழக்க வழக்கங்களே பண்பாடாகிறது. அத்தகையப் பண்பாடே பாரம்பரியமாகிறது. இதில் ஏதாவது ஒன்றை கைவிட்டாலோ அல்லது புதிய பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தாலோ ஐயோ! நமது பாரம்பரியம் என்னாவது?’ என்று புலம்பத் தொடங்குகின்றனர் பழம் பெருமை பேசுவோர்.

காலத்திற்கேற்ப பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் நிலவுகின்ற உற்பத்தி முறை - உற்பத்தி உறவுகளுக்கேற்ப மாறவேண்டுமே ஒழிய, பாரம்பரியம் என்ற பெயரால் கடைபிடிப்பது முரட்டுப் பிடிவாதமே. பிடிவாதம், அதிலும் முரட்டுப் பிடிவாதம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைதானே?

உணவுக்கும் மருந்துக்குமான பயன்பாட்டைத் தவிர, தலையில் சூடுவது, சிலைகளுக்கும், படங்களுக்கும், பிணங்களுக்கும், மாலையாக, மலர்வளையமாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்தும் பொருளற்றவை. மக்சீம் கார்க்கி சொல்வது போல அர்த்தமற்ற உழைப்பிலிருந்து மக்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் ஒரு சமூகம் வளர்ச்சி காண முடியாது. அர்த்தமற்ற உழைப்பிற்கு பூக்களின் உற்பத்தி ஒரு எடுப்பான சான்று.

நீர் வளமும், நில வளமும், மனித உழைப்பும் மனிதனின் அவசியத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, இன்ப நாட்டம் உள்ளிட்ட அற்பக் காரணங்களுக்காக 
வீணடிக்கப்படக்கூடாது

பூக்களின் வண்ணங்கள் நம் கண்களில் மிளிரட்டும். அவற்றின் வாசம் நம் நாசிகளை வருடட்டும். விட்டு விடுங்கள் தாவரங்கள் பூக்கட்டும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

ஷேர் ஆட்டோவும் பூக்கார அம்மாவும்!

Friday, September 27, 2024

ஷேர் ஆட்டோவும் பூக்கார அம்மாவும்!

புறவழிச்சாலைகள் வந்த பிறகு பெரும்பாலான ஊர்களுக்குள் தொலைதூரப் பேருந்துகள் நுழைவதே இல்லை. எல்லாம் பைபாஸ்கள்தான்.

வேலூர்-பெங்களூரா, வாணியம்பாடிக்குள் நுழையாது. நல்ல வேளை, வேறு வழி இல்லாததால் ஆம்பூர் மட்டும் தப்பியது.

வேலூர்-சென்னையா, விஷாரம், ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜா-விற்குள் நுழையாது. ஆரணி-சென்னைகூட இராணிப்பேட்டை, வாலாஜாவை ஓரங்கட்டுகிறது.

புறக்கணிப்படும் இந்த ஊர்கள் எல்லாம் என்ன சிற்றூர்களா? எல்லாமே நகராட்சிகள்தான். பல்லாயிரக்கணக்கானோர் வசிக்கும் இவ்வூர்களிலிருந்து, பிற ஊர்களுக்கு அன்றாடம் நூற்றுக்கணக்கானோர் பயணித்தாலும், போகும் போது பைபாசுக்குப் போக வேண்டும், வரும் போது பைபாசில் இறங்கிக் கொள்ள வேண்டும்.  
கோப்புப் படம்

நகரிலிருந்து பைபாசுக்கும் பைபாசிலிருந்து நகருக்கும் போக-வர ஷேர் ஆட்டோக்களை விட்டால் வேறு நாதி இல்லை? பகல் என்றால் இருபது ரூபாயில் முடிந்து விடும். இரவென்றால் அதுவே நூறைத் தாண்டும்.
 
அதே போல, சாலைகள் மேம்படுத்தப்பட்டதால், நகரங்களை இணைக்கும் பேருந்துகள் எதுவும் சிற்றூர்களில் நிற்பதில்லை.
 
முன்பெல்லாம், பள்ளி-கல்லூரி செல்வோர், வேலைக்குச் செல்வோர், கடைகளுக்குச் செல்வோர் என பலரும் பேருந்துகளை நம்பி இருந்ததால் நகரப் பேருந்துகள் கணிசமாக இயக்கப்பட்டன. இன்று இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டதால் சொற்பமானோரே நகரப் 
பேருந்துகளில் பயணிக்கின்றனர். பெருநகரப் பேருந்துகள் இதில் விதிவிலக்கு.
 
அந்த சொற்பமானோரில் பலர், ‘பிங்க்மகளிர் என்பதாலும், மற்றும் வேறு வழியின்றி பயணிக்கும் என்னைப் போன்ற ஒரு சில ஆண்கள் மட்டும்தான் என்பதாலும், நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கும் பேருந்துகளைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டு விட்டனர்.
 
இதனால், நகரிலிருந்து சிற்றூர்களுக்குச் செல்லும் நகரப்பேருந்துகளும் அத்திப் பூக்களாகிவிட்டன. அதனால், இங்கேயும் ஷேர் ஆட்டோக்களைத்தான் நாடவேண்டும்.
 
இப்படித்தான், கடந்தவாரம் ஒரு நாள், கிராமம் செல்வதற்காக ஷேர் ஆட்டோவை நாடினேன். ‘கத்திலி, கந்திலி என ஆட்டோ ஓட்டுநர் கூவிக்கொண்டிருந்தாரே ஒழிய, கூட்டம் சேர்ந்த பாடில்லை. பத்து பேருக்கு மேல் இருந்தால்தான் ஆட்டோ நகரும் என அவர் நங்கூரம் போட்டுவிட்டார்

அரை மணிநேரம் ஆச்சு. ஒவ்வொருவராகச் சேரச்சேர ஏழு பேர் ஆச்சு.  எடுக்க மாட்டாரா?’ என எனக்குள் ஒரு ஏக்கப் பெருமூச்சு!
 
நம்மைக் காக்க வைப்பது டெல்லிக்காரனா, இல்லை இந்த ஆட்டோக்காரரா என்றெல்லாம் யோசிப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லை என்பதால், ‘இதெல்லாம் வேலைக்கு ஆகாதுஎன, சேர்ந்த ஏழுபேரில் நான்குபேர் நடையைக் கட்ட, ‘ஏழு பேர் இருக்கும் போதே எடுத்திருக்கலாமே?’ என ஓட்டுநரிடம் நான் குரல் கொடுக்க, ‘அதெல்லாம் கட்டாதுங்க, டீசல் விக்கிற வெலையில என்றார்.
 
ஒரு மணி நேரமாச்சு. மூத்திரம் வேறு முட்டிக் கொண்டிருந்தது. நகரம் என்றால் நவ துவாரங்களில் சிலவற்றை கட்டுக்குள் வைத்திருக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் பொழப்பு நாரிடும். அதுவும் நரை தட்டியவர்களுக்கு இது ஒரு பெரும்பாடு.
 
ஒரு மணி‌நேரம் கழித்து, ஒரு வழியாய் பத்து பேருக்கு மேல் சேர்ந்த பிறகு ஆட்டோ வேகமெடுத்தது.
 
ஒரு மணி நேரம் எப்படி கழிந்தது எனக்கு? கொஞ்ச நேரம் ஆட்டோவில் உட்கார, கொஞ்ச நேரம் எழுந்து நடமாட, இப்படியாக நேரம் ஓடியதுவந்த உடனேயே அருகில் உள்ள கடையில் ஒரு தேநீரை இறக்கியதால் அடுத்த தேனீருக்கு நாட்டம் இல்லை. நாம் என்ன இளவட்டமா எகிறி விழ, அறுபந்தைத் தாண்டிய பழமாச்சே? அதனால் இதெல்லாம் பழகிப் போச்சு!
 
ஆனாலும், சாலை ஓரம் பூக்கடையில் இருந்த பூக்கார அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
 
தொடரும்.
 
ஊரான்