இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஹுகான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவி இந்த அகிலத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மார்ச் மாதத்திலேயே முதல் கரோனாத் தொற்று கண்டறியப்பட்ட போதும் அதைக் கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மணியடிப்பது, விளக்கு பிடிப்பது, அப்பளம்-கோமியம்- மந்திரம் உள்ளிட்ட கோமாளித்தனமான கூத்துக்களை அரங்கேற்றினார்கள். இதனால் 30 ஆம் இடத்தில் இருந்த இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியதுதான் மிச்சம். ஆனால் தொற்று தொடங்கியபோது முதலிடத்தில் இருந்த சீனா முப்பதாவது இடத்திற்கு சென்றுவிட்டது.
ஆறாவது மாதமாக பொது முடக்கும் தொடர்வதால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஏழை எளிய மக்கள் பட்டினிச்சாவுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கடும் வேதனையில் இருக்கும் மக்கள் மூச்சுக்கூட விடாமல் திணறிக் கொண்டிருக்கும் பொழுது மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். "வேளாண் விலை பொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம்" மற்றும் " பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம்" கொண்டு வந்து சிறு-குறு விவசாயிகளை ஒட்டச் சுரண்டவும், பதுக்கல்காரர்கள் கொள்ளையடிக்கவும் வழி செய்துள்ளார்கள். "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020" என்ற திட்டத்தின் மூலம் காடு, மலைகளை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்க முன் வந்துள்ளார்கள்.
சாத்தான் குளம் நம் கண் முன்னே நிற்கும் போதே காவல்துறையினரையே நீதிபதிகளாக்கும் வகையில் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வரவிருகிறார்கள். "தேசியக் கல்விக் கொள்கை" என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையை முளையிலேயேக் கிள்ளி எறிய எத்தனிக்கிறார்கள்.
நாடும், மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; தங்களின் பணப் பைகள் நிறைந்தால் போதும் என்ற வெறியோடு அரசு அதிகாரிகள் அலைகின்றனர். "இ- பாஸ்" முறையில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல் முறைகேடுகளை உயர் நீதிமன்றமே எள்ளி நகையாடுகிறது.
சிறுகச் சிறுக பணம் சேர்த்து ஒரு வீட்டு மனை வாங்கினால், அதற்குப் பட்டா மாற்றம் பெற முடியவில்லை. குடும்பச் சொத்தைப் பாகப்பிரிவினை செய்தாலும் உரியவர்களுக்கு முறையாகப் பட்டா கிடைப்பதில்லை. சர்வேயர்களுக்குப் பணம் லஞ்சமாகக் கை மாறினல் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் நடக்கிறது. குறிப்பாக இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் காட்டில் பணம் அடை மழையாகப் பொழிகிறது. பணம் தரவில்லை என்றால் பட்டா பெறுவதற்கு நில அளவை கோரி விண்ணப்பித்தால் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கிறார்கள்.
சர்வேயர்களை நாம் நேரடியாக சந்திக்கவே முடியாது. எங்கும் புரோக்கர்களே நிறைந்திருக்கிறார்கள். அதிலும் இதில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
சர்வேயரைச் சந்திக்கச் சென்றால் நகராட்சி சர்வேயர் அலுவலகம் எப்பொழுதும் பூட்டியேக் கிடக்கிறது.
ஜெ.அசேன் உரை
லஞ்சம் வாங்கும் வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 'பிரண்ட்ஸ் ஆப் போலீசை' ஒழித்தது போல, புரோக்கர்களாக செயல்படும் 'பிரண்ட்ஸ் ஆப் சர்வேயர்களை' ஒழிக்கக் கோரியும், பட்டா கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக நில அளவை செய்து பட்டா வழங்கக் கோரியும் 10.08.2020, திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் வாலாசாப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக வாலாஜாவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள "நீதிக்கான குரல்" என்ற அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் "தண்டோராப் போராட்டம்" மிக எழுச்சியோடு நடைபெற்றது.
திரு K.K.ரவி, திரு P.மதன், திரு.D.ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்குரைஞர் பொன்.சேகர் அவர்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்க உரையாற்றினார். சர்வேயர்களின் ஊழல் முறைகேடுகள் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக திரு.ஜானகிராமன் அவர்கள் நன்றி கூறினார்.
பொன்.சேகர் உரை
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த தண்டோரா ஒலி அரசு அதிகாரிகளின் செவிகளை எட்டியிருக்கும்.
போராட்டம் முடிந்த பிறகு பட்டா வழங்குவதில் உள்ள முறைகேடுகளைக் களையக் கோரி மாவட்ட ஆட்சியர், இராணிப்பேட்டை கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வாலாஜா வட்டாட்சியர், வாலாஜா நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது.
வாலாஜாவில் தொடங்கிய இந்த நீதிக்கான குரல் இராணிப்பேட்டை மாவட்டம் முழுதும் ஓங்கி ஒலிக்கட்டும்.
செய்தித் தொகுப்பு
பொன்.சேகர்
வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் மனு
புகார் மனு
நீதிக்கான குரல்
வாலாசாப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டம்
தேதி: 10.08.2020
வாலாஜாபேட்டை
பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
இராணிப்பேட்டை மாவட்டம்
அன்புடையீர் வணக்கம்,
பொருள்: வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா அலுவலக சர்வேயர்களின் நடவடிக்கைகள் குறித்து
தமிழகத்தின் முதல் நகராட்சியும் பழம்பெரும் நகரமுமான வாலாஜா நகராட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அலையவிடும் வகையிலும் நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் நடந்து கொள்வதாக பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன
உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த போதும், நில அளவை செய்து பட்டா வழங்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றது. சர்வேயர் அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடப்பதால் சர்வேயர்களை பொதுமக்கள் அணுக முடியாத சூழலே எப்பொழுதும் நிலவுகிறது. இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே அவர்களை சந்திக்க முடியும் என்ற நிலைதான் உள்ளது விதிகள் எல்லாம் புறம் தள்ளப்பட்டு பணம் லஞ்சமாகக் கை மாறினால் மட்டுமே வேலைகள் நடைபெறுகின்றன. இல்லை என்றால் கோரிக்கைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
உதாரணத்திற்கு,
1. வாலாஜா நகராட்சி, அம்பேத்கர் நகர், வார்டு 2, பிளாக் 30, டவுன் சர்வே நம்பர் 2109 ல் உள்ள இடத்தை சர்வே செய்வதற்கு பாண்டியன் என்பவர் 25.02.2019 அன்றுநகராட்சி அலுவலகத்தில் ரூபாய் 270 பணம் செலுத்தி உள்ளார். (இரசீது எண் 36/ WL2/18-19/0011115). அதன்பிறகு வாலாஜா நகராட்சியில் 21.05.2020 அன்று ரூபாய் 120 பணம் செலுத்தி உள்ளார். ( இரசீது எண் 036/WL2/1/20-21/0000060). ஒன்றறை ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை வீட்டுமனையை சர்வே செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
2. வாலாஜா தாலுக்கா, அம்மன ந்தாங்கல் பஞ்சாயத்து சர்வே எண் 58/2 ல் அடங்கல் மனை எண் 1 ஐ சர்வே செய்ய சுந்தர் என்பவர் மனு செய்து 23.01.2020 அன்று ரூபாய் 80 பணம் செலுத்தி உள்ளார். ஆறு மாத காலம் ஆகியும் இதுவரை சர்வே செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
3. வாலாஜா தாலுக்கா, வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட தேவதானம் ரோடு, ரஜிவ் காந்தி நகர், சர்வே எண் 12/7 ல் (one scheme patta) அரசு ஆவணங்களில் மாற்றங்கள் கோரி 30.11.2015 முதல் பல முறை மனு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்ட 107 பேரில் அரசு ஆவணங்களில் மாற்றங்கள் எதையும் செய்யாமலேயே ஒரு சிலருக்கு மட்டும் போலி பட்டா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இவை சில உதாரணங்கள்தான். விதிமுறைப்படி சர்வேயர்கள் செயல்பட்டு பட்டாவை முறைப்படுத்தாததால் பல குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று அல்லல் பட்டு வரும் அவலம் தொடர்கிறது.
எனவே, இது போன்ற கோரிக்கைகள், புகார்கள் மீது உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுத்து நீதி தர்மத்தை நிலைநாட்டக் கோரி தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
இப்படிக்கு
(வாலாஜா ஜெ.அசேன்)
நீதிக்கான குரல்
வாலாசாப்பேட்டை
முழக்கங்கள்
சர்வேயர்களின் ஊழலைக் கண்டித்து
வாலாஜாவில்
தண்டோராப் போராட்டம்
முழக்கங்கள்
பட்டா மாற்றம் செய்வதற்கு
பகல் கொள்ளை அடிக்கிறான்
நில அளவைத் துறையிலே
லஞ்சப் பணம் குவியுது
தமிழக அரசே தமிழக அரசே
மாவட்ட நிர்வாகமே
பிரண்ட்ஸ் ஆப் போலீஸை ஒழித்தது போல
பிரண்ட்ஸ் ஆப் சர்வேயர்களை ஒழித்திடு
இடைத்தரகர்களை ஒழித்திடு
பூட்டிக்கிடக்குது பூட்டிக்கிடக்குது
எப்போதுமே பூட்டிக்கிடக்குது
சர்வேயர் ஆபீஸ் பூட்டிக்கிடக்குது
திறந்து வை திறந்து வை
சர்வீஸ் ஆபீஸைத் திறந்து வை
பொதுமக்கள் அணுகுவதற்கேற்ப
சர்வையர் ஆபீஸைத் திறந்து வை
தடுத்திடு தடுத்திடு
ரிட்டையர் ஆன அதிகாரிகள்
பட்டா வழங்கும் வேளைகளில்
தலையிடுவதைத் தடுத்திடு
புறம்போக்கு நிலம் என்ன
உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா
கையூட்டு கிடைத்து விட்டால்
பட்டா செய்து கொடுப்பதற்கு?
தாலுக்கா அலுவலகமா
புரோக்கர்களின் கூடாரமா
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
வெளிப்படைத் தன்மைக்காக
உடனடியாக நடவடிக்கை எடு
பறிபோகுது பறிபோகுது
புறம்போக்கு நிலமெல்லாம்
பறிபோகுது பறிபோகுது
அரசு நிலத்தை விற்பதற்கு
சர்வேயர் என்ன வாலாஜா நவாப்பா?
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
புறம்போக்கு நிலத்தையெல்லாம்
சூறையாடும் சர்வேயர்கள் மீது
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
மாவட்ட நிர்வாகமே
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
சுல்தானே சொத்துக்கழும்போது
சுல்தான் குதிரை குலாப்ஜாமுனுக்கழுததாம்
கரோனாவிலே நாம் தவிக்கும்போது
சர்வேயர்கள் நம்மைச் சுரண்டுவது நியாயமா?
இவண்
நீதிக்கான குரல்
வாலாசாப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டம்
10.08.2020
ஊடகங்களில்
தொடர்புடைய பதிவுகள்