Sunday, August 28, 2011

தற்போது சின்னத்திரையில் ....காணத்தவறாதீர்கள்!


Are bhaiyo...... khana khane ke baad ek film break to banta hi hai.................

Enjoy most romantic, most suspenseful, most terrific , most terrible and most expensive film ever................Please response
Hi..........An interesting movie is running house - full in India .........
Havent you seen or heard about it...........better watch it during the weekend................

Starring 


Hero :- Manmohan Singh


Heroine :- Sonia Gandhi


Supporting Hero :- Suresh Kalmadi, A Raja  


Supporting Heroine :- Kanimozhi


Main Villain: - Anna Hazare


Supporting Villain: - Baba Ramdev


Script By :- Pranab Mukherjee


 Comedy Role :- Kapil Sibal & P Chidambaram


Friendly Appearance:- Dig Vijay Singh


Characterless actor: Sharad Pawar


Item Girl : Main Dancer:- Mayavati


Action:- Delhi Police



Banking Partners:- Madhu Koda , Laloo Prasad yadav & Hasan Ali


Guest appearance: Ajmal Kasab & Afzal Guru


 Financed By: - POOR TAXPAYERS OF INDIA


கடந்த ஒரு வார காலமாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்த இப்படம் வசூலில் உலக சாதனையை படைத்துவிட்டதால் இனியும் இப்படத்தை ஓடவிட்டால் அது ரசிகர்களிடம் அலுப்பை ஏற்படுத்தும் என்பதால் இன்றைய (28.08.2011) காலைக் காட்சியோடு முடிக்கப்பட்டது. எனினும் முழுப்படத்தைக் காணத் தவறியவர்களுக்காக அதன் பிளாஷ்பேக் காட்சிகள் தற்போது சின்னத்திரைகளில்…….

ஹசாரே குழுமம் இனி எந்த நேரத்திலும் அடுத்த அதிரடி காமெடிப் படத்தைத் திரையிடலாம். எதற்கும் ரசிகர்கள் தயாராய் இருப்பது நல்லது.
 
மேலே உள்ள கருத்து மட்டுமே என்னுடையது. மற்றவை நேற்று எனக்கு மின்னஞ்சலில் வந்தவை. உங்களோடு பகிர்கிறேன்.

Saturday, August 27, 2011

'தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!'


"கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும்,பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார். உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார். ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. 

பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில் திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.

திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல்,வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள். 

இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.

இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்."

இந்த கட்டுரை இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்தது. வலைப்பக்கங்களில் ஏற்கனவே இது இருக்கலாம். இது குறித்து நான் அதிகம் விளக்க வேண்டியதில்லை. மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்திற்காக நடத்தப்படும் பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. எல்லாம் தெரிந்த பிறகும் மக்கள் இதற்கு பலியாவது ஏன்? தெரியப்படுத்தி இவர்களுக்கு புரிய வைப்பதற்காக நான் இதை வலைப்பூவில் பகிரவில்லை. 

பரிசுத் தொகை ரூ.55 000 தான் இவர்களை சுண்டி இழுப்பதற்குக் காரணம். ஒரு ஐந்து நிமிடங்கள் போனால்கூட ரூ.50 தானே போகும். ஆனால் கிடைப்பதோ ரூ.55 000 மாச்சே. ஆசை யாரைத்தான் விட்டது? உழைக்காமல், கஷ்டப்படாமல் திடீர் பணக்காரணாகத் துடிக்கும் மனப்போக்குதான் மக்கள் இதை நாடுவதற்குக் காரணம். இத்தகைய மனநிலை ஒரு கு மனநிலை. (this is criminal mind state). 

"குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்" என்பது சரியாகப் படவில்லை. மாறாக தமிழர்களே அதிகமாக கிரிமினல் மயமாகி வருகிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. பணத்தாசை வெறியைத் தூண்டும் இச்சமூகக் கட்டமைப்பு நீடிக்கும் வரை, பொருளாதார நெருக்கடிகள் தொடரும் வரை இத்தயை மோசடிகளும், மக்கள் கிரிமினல் மயமாவதும் தொடரத்தான் செய்யும். 

தொடர்புடைய பதிவுகள்:

Tuesday, August 23, 2011

சூரியன் நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்!

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் வெளியே செல்லமாட்டேன் என்று அன்னா அசாரே போல சாமான்யன் அடம் பிடித்தால் அனுமதிப்பார்களா? சிறையிலேயே பேட்டி கொடுப்பதும், அதை வீடியோக்களில் பதிவு செய்வதும், அதன் பிறகு ஊடகங்களில் வெளியிடுவதும் போன்ற வசதிகள் பிறருக்கும் நீட்டிக்கப்படுமா?  சட்டத்தையே மீறிவிட்டு நல்ல சட்டம் கொண்டு வருவேன் என்பதுதான் காந்தி காட்டிய வழியா?

டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் 250 பேர், பதினைந்து டிரக்குகள், ஆறு எர்த் மூவர்களைக் கொண்டு இரவோடு இரவாக ராம்லீலா மைதானத்தை அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் அன்னா அசாரேவுக்கு அரசாங்கமே சீர் செய்து சுத்தப்படுத்தி கொடுத்ததைப் போல பிறருடைய போராட்டங்களுக்கும் செய்து தருவார்களா?

ஜன் லோக்பால்காரர்களின் போராட்ட வடிவங்கள் கிரேசி மோகனின் நாடக பாணி நகைச்சுவையையும், மானாட மயிலாட பாணி கோரியோ கிராபர்களின் நடன வடிவமைப்பையும் விஞ்சுகின்றனவா?  மேற்கண்ட போராட்ட வடிவங்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள்,  கிரிக்கெட்டில் இந்தியா உலகக்கோப்பையை வென்ற போது நடத்தப்பட்ட அணிவகுப்புகள் மற்றும் இந்தியா பொக்ரானில் அணு குண்டு சோதனை செய்த போது நடத்தப்பட்ட கொண்டாட்டங்களிலிருந்து இரவலாகப் பெறப்பட்டவைகளா?

பட்டியானால் வாடிய மக்களின் பசியாற்ற ஏசுநாதர் மீன்களை பல்கிப் பெருக்கியது போல தற்போது நடத்தப்படும் போராட்டத்தில் ஆயிரங்களில் கூடுவோரை பல லட்சங்களில் ஊடகங்கள் பல்கிப் பெருக்கிக் காட்டுவதேன்?

"இந்தியாதான் அன்னா அன்னாதான் இந்தியா!"

நர்மதா அணைக்காக அப்புறப்படுத்தப்பட்டு வாழ வழியற்று நிற்கக்கூட இடமின்றி போராடுவோர் மக்களில்லையா? போபால் விஷவாயுப் படுகொலையில் பாதிக்கப்பட்டோர் மக்களில்லையா? நொய்டாவிலும்- புனேயிலும்- ஹரியானாவிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் தங்களுக்கு வாழ்வளித்த நிலத்தை உரிய நட்ட ஈடு இன்றி கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மக்களில்லையா? மராட்டியத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மக்களில்லையா?

பழங்குடிகளுக்கு எதிராக நடத்தப்படும் காட்டு வேட்டைக்கு எதிராகவோ சிங்கூர்-நந்திகிராம்-லால்கர்-போஸ்கோ போன்ற இடங்களிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போராடுவோர் இந்தியர்கள் இல்லையா? கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தில் நியாயம் ஏதும் இல்லையா?   "இந்தியாதான் அன்னா அன்னாதான் இந்தியா" என முழங்குவோரும் மேற்கண்ட மக்கள் போராட்டங்களை ஏன் கண்டு கொள்ளவில்லை?

அன்னா ஒரு சனாதனியா?

ஒவ்வொரு கிராமத்திலும் சேவைத் தொழில் செய்யக்கூடிய தோட்டி- வண்ணான்-அம்மட்டன் என சாதிக்கொருவன் கண்டிப்பாக இருக்கவேண்டும்;  இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழில் அடிப்படையிலான வேலைகளையும் கடமைகளையும் முறையாகச் செய்தால் கிராமம் தன்னிறைவு பெறும் என்பது காந்தியின் கொள்கை; இப்படித்தான் அன்னா அசாரேவின் சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் கடைபிடிக்கப்படுகிறதாமே? 

முன்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய இளைஞர்கள்தான் அன்னா அசாரேவிற்குப் பின்னால் அணிதிரள்கிறார்களாமே? ஜன் லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4 00 000 டாலர் மதிப்புக்கு போர்டு பவுண்டேசன் மூலம் பணம் வந்ததாமே?  ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சில கார்பரேட் நிறுவனங்கள் தற்போது நடக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு நிதி உதவி செய்கின்றனவாமே?

அன்னா அசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ்சோடு தொடர்பு இருந்ததாமே? மராட்டியத்தின் ராஜ் தாக்கரேவையும், குஜராத்தின் மோடியையும் அன்னா அசாரே புகழ்தாராமே?அப்படியானால் இவரது போராட்டத்திற்கு சங்பரிவாரத்தின் ஆதரவு உண்டா? எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்க்கும் போது ராம்தேவ், ரவிசங்கர் போன்ற பிரபல சாமியார்களும் மற்ற பிற ஏனைய சாமியார்களும் அன்னாவுக்குப் பின்னால் நிற்பது ஏன்?

அரசியல்வாதிகள்தான் ஊழல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் அன்னா அசாரேவின் ஆட்கள் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை?

இன்று ஜன் லோக்பாலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட திரைத்துறையினர் அரசுக்கு முறையான கணக்குக் காண்பித்து அதற்குரிய வரியை அரசுக்கு செலுத்துகிறார்களா? இதுவரை செய்யவில்லை என்றால் லோக்பால் வந்த பிறகு இனி செய்வார்கள் என்று நம்பலாமா? தற்போது நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வோரில் அரசு அதிகாரிகள் யாரேனும் இருக்கிறார்களா? அப்படி இருப்பவர்கள் இதுவரை இலஞ்ச ஊழலே செய்யாதவர்களா?

இப்படி அன்னா அசாரேவின் போராட்டப் பின்புலம் குறித்து கேள்விகள் நீள்கின்றன........

மேற்கண்டவாறு கேள்விகள் கேட்பது போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சி மற்றும் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு கேட்கப்பகிறது என்றால் கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றனவே!

ஊழல் ஒரு சட்டப் பிரச்சனையா?

ஜன் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக அன்னா அசாரே நடத்தும் போராட்டம் இரண்டாவது சுதந்திரப் போராட்டமா? ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிடுமா? ஏற்கனவே இருக்கின்ற ஊழல் ஒழிப்புச் சட்டத்தாலோ அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தாலோ ஊழலை ஏன் ஒழிக்க முடியவில்லை? அந்தச் சட்டங்கள் குறைபாடுடையவைகளா? அவற்றில் மேலும் திருத்தம் செய்தால் ஊழல் ஒழிந்துவிடுமா? நடுவண் அரசு கொண்டு வர உத்தேசித்திருக்கும் லோக்பால் மசோதா குறைபாடுடையதா? அன்னா அசாரேவின் ஜன் லோக்பால் எந்த வகையில் நடுவண் அரசின் லோக்பாலைவிட சிறந்தது? 

தற்போது உள்ள அமைப்பில் ஊழலுக்கு எதிராக கொடுக்கப்படும் புகார்கள் மீது காவல் துறையும்,நடுவன் புலனாய்வுப் பிரிவும் நேர்மையாகச் செயல்படவில்லையா? லோக்பால் மசோதா நிறைவேறிய பிறகு அதை அமுல்படுத்த அமைக்கப்படும் அமைப்பின் அதிகாரம் என்ன? இந்த அமைப்பும் நேர்மையாகச் செயல்படும் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? இந்த அமைப்பு தவறு செய்தால் அதை யார் தட்டிக் கேட்பது? தன் பெண்ணின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவதற்காக கலால் பிரிவுக்கு மாற்றல் வேண்டி தவம் இருக்கும் காவலர்களும், இலஞ்ச ஒழிப்பு துறை மற்றும் நடுவன் புலனாய்வுப் பிரிவினர் மீதே ஊழல் புகார்களும் மலிந்துவிட்ட இந்நாட்டில் லோக்பால் அமைப்பு மட்டும் தவறு செய்யாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கீழமட்ட அரசு அலுவலர் முதல் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறையினர், பிரதம மந்திரி என அனைவரையும் லோக்பாலின் கீழ் கொண்டுவரும் போது கார்பரேட் நிறுவனங்கள், ஊடகத்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அன்னா அசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவின் கீழ் ஏன் கொணடு வரப்படவில்லை? டாடா, ரிலையன்ஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்களுக்கு ஊழலில் தொடர்பில்லையா? ஒரு பிட்டு செய்தி போடுவதற்கே கவரை எதிர்பார்க்கும் ஊடகத்துறையினருக்கு ஊழல் என்றால் என்னவென்றே தெரியாதா? உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கில் பணம் திரட்டும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நேர்மையான முறையில்தான் நிதி திரட்டுகின்றனவா? இவர்கள் தவறே செய்வதில்லையா? 

ஊழல் என்பது வெறும் சட்டப் பிரச்சனையா? அல்லது நிதி முறைகேடு மற்றும் இலஞ்சம் மட்டுமா? அல்லது ஏற்றத்தாழ்வான நமது சமூக அமைப்பில் அன்றாடம் நடக்கும் பணத்தின் மூலமானதொரு சமூகப் பரிமாற்றமா? பெரு நகரங்களில் போலிசாருக்கு கப்பம் கட்டிவிட்டு நடைபாதைகளில் விற்பனை செய்து வரும் நடைபாதை அல்லது தரைக்கடை விற்பனையாளர்கள் இனி லோக்பால் பிரதிநிதிகளுக்கும் சேர்த்து கப்பம் கட்ட வேண்டுமா?

கிராம அலுவலரில் தொடங்கி நடுவண் அரசின் துறைச் செயலாளர்கள் வரை அவர்கள் இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை தண்டிக்க நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இலஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் இலஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் வழி இருந்தும் இவர்களின் இலஞ்ச ஊழலை ஏன் ஒழிக்க முடியவில்லை?

ஜன் லோக்பால் வந்து விட்டால் மேல்மட்ட ஊழல்கள் மட்டும் ஒழிக்கப்படுமா? அல்லது கிராம நிர்வாக அலுவலர் வரை நடக்கும் இலஞ்ச ஊழலும் சேர்ந்தே ஒழிக்கப்படுமா? குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழில் தொடங்கி வளர்ந்து வாழ்ந்து மடிந்த பிறகு பெறப்படும் இறப்புச் சான்றிதழ் பெறும் வரை கொட்டப்படும் இலஞ்சம் இனி இருக்காதா?

லோக்பால் வந்துவிட்டால் இனி இலஞ்ச ஒழிப்புச் சட்டமும் அரசு நடத்தைவிதிகளில் இலஞ்சம் ஊழல் தொடர்பான விதிகளும் தேவைதானா? அவைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா? லோக்பாலை அமுல்படுத்த தனி அமைப்பு கொண்டுவந்த பிறகு இலஞ்ச ஒழிப்புத் துறை தேவைதானா? அதை கலைத்து விடலாமா?

லோக்பால் மசோதா மூலம் ஒருசிலர் கையில் அதிகாரத்தைக் குவிப்பது அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கச் சொன்ன மகாத்மா காந்தியின் சிந்தனைக்கு எதிரானதில்லையா? காந்திய சிந்தனைக்கு எதிரான கருத்தை முன்வைத்துக் கொண்டே தன்னை காந்தியவாதி என்று அன்னா அசாரே சொல்லிக் கொள்வது சரிதானா?

ஜன் லோக்பால் ஒரு கருப்புச் சட்டமா?

ஜன் லோக்பால் மூலம் இலஞ்ச ஊழல் பேர்வழிகள் மீது மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது தனக்குப் பிடிக்காத நேர்மையான ஒரு அதிகாரியை பழிவாங்க நினைத்தால் லோக்பாலின் கீழ் மாட்டிவிட்டு அவரை அலைக்கழிக்க விட்டு வேடிக்கை பார்க்கலாமா? அப்படியானால் இது ஒரு கருப்பு மசோதாவாகவும் செயல்படுமா? அப்படி நேரும் போது அரசு ஊழியர்கள் அதிகாரிக்கு ஆதரவாகவும் லோக்பாலுக்கு எதிராகவும் போராட மாட்டார்களா?

லோக்பாலின் கீழ் புகார் கொடுத்தால் புகார் கொடுப்பவர் தன்னைப் பற்றி தெரிவிக்க வேண்டியதில்லை என்றால் புகாரின் நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாகிறதே? புகார் ஏதும் இன்றி நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்பானதா இது? ஒரு வேளை புகார் கொடுத்தவர் இன்னார்தான் என்று ஏதோ ஒரு வழியில் வெளியே அதாவது ஊழலில் மாட்டிக் கொண்டவனுக்குத் தெரிந்துவிட்டால் புகார் கொடுத்தவனை யார் காப்பாற்றுவார்கள்? இன்று அப்படித்தானே ஊழலைக் கண்டுபிடித்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்,  அதுபோல நடக்காது என்பதற்கு லோக்பாலில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதா?

இலஞ்ச ஊழல் என்பது தனிநபர் சார்ந்த ஒன்றா அல்லது சமூகம் சார்ந்த ஒன்றா? தனிநபர்கள் திருந்திவிட்டால் இலஞ்ச ஊழல் ஒழிந்து விடுமா? அல்லது திருந்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டால் இலஞ்ச ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடுமா?

ஊழலின் ஊற்றுக் கண் எது? ஊற்றுக் கண்ணை அடைக்காமல் மேல் பூச்சு மட்டும் பூசிவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா?அதிகார வர்க்கமும் முதலாளிகளும்தான் ஊழலின் ஊற்றுக் கண் என்கிறார்களே, அப்படியானால் முதலாளிகள் இருக்கும் வரை ஊழலும் இருக்குமா?

இப்படி ஏராளாமான ஐயங்கள் எழுப்பப்பட்டாலும் அதற்குரிய பதில் கிடைக்காவிட்டாலும் எப்படியோ ஊழல் ஒழிய வேண்டும் என்றல்லவா வேடிக்கை பார்க்கும் பாமரன் நம்புகிறான். இந்த நம்பிக்கை நாளை வீண் போகுமானால் யார் மீது நம்பிக்கைத் துரோக வழக்குத் தொடுப்பது?

இப்படி ஐயங்கள் நீள்கின்றன..... ஜன் லோக்பால் வந்து விட்டால் ஊழல் உண்மையில் ஒழிக்கப்பட்டு விடுமா? அப்படி நிகழ்ந்து விட்டால் ஞாயிறு நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்.


தொடர்புடைய பதிவுகள்:
தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?
http://hooraan.blogspot.com/2011/05/blog-post_14.html
காணிக்கை இல்லை என்றால் காரியம் கைகூடாது!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_13.html
யாருக்கும் வெட்கமில்லை!
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_24.html
பம்புசெட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு: ரூ.200 கோடி ...
http://hooraan.blogspot.com/2011/02/200.html



Tuesday, August 2, 2011

சாமியார்களின் வலையில் விழும் பெண்கள்!

இந்து மதத்தை இழிவு படுத்துவதாக நித்தியானந்தா மீது குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி 'தீவிரமாகப்' போராடி வருகிறது. நித்தியானந்தாவை எதிர்த்து யார் போராடினாலும் அவை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. இதற்கெல்லாம் காரணம் நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரம்தான் என்றால் அது மிகையல்ல.  

ஒரு இளம் வயது ஆண், ஒரு இளம் வயது பெண்ணை ஈர்ப்பதென்பது அதிசயமானதல்லதான்.திருமணமாகாதோர் புரியும் காதலும், திருமணமானவர்கள் புரியும் கள்ளக் காதலும் இத்தகைய ஈர்ப்பிலிருந்து வருவதுதான். சரியான காதல் முறைப்படுத்தப் படுவதால் பின்னர் அது சமூக அங்கீகாரத்தைப் பெறுகிறது.  முறைப்படுத்த முடியாத கள்ளக் காதல் சமூக இழிவைத் தேடிக் கொள்கிறது. ஆனால் இளம் வயது நித்தியானந்தா இளம் வயது ரஞ்சிதாவைக் கவர்வது மட்டும் எப்படி அதிசயமாகி விட்டது?. சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் ஒரு சம்பவத்தைப் போன்றதுதான் இவ்விருவரின் ஈர்ப்பும். ஒருசாதாரண சம்சாரி செய்திருந்தால் அதை யாரும் பொருட்படுத்தி இருக்கமாட்டார்கள். ஊடகங்களில் ஒரு நாள் செய்தியாக முடிந்து போயிருக்கும். ஆனால் ஒரு பிரம்மச்சாரி cum பரதேசி செய்ததால்தான் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தொடர் செய்தியாகவும் ஆகிவிட்டது. 

ரஞ்சிதா என்ற இளம் பெண் மட்டுமல்ல, இவரைப் போன்ற ஏராளமான இளம் பெண்கள் நித்தியானந்தா மட்டுமல்ல ஏனைய பல சாமியார்களிடமும் மயங்குறார்கள். மருத்துவ மாணவியை மயக்கிய போலிச்சாமியார்,  இளம் பெண்ணிடம் நகை மோசடி செய்த சாமியார், கருவறையை பள்ளியறையாக மாற்றிய தேவனாதன்கள் என அவ்வப் போது செய்திகள் நம் காதுகளையும் எட்டத்தான் செய்கின்றன.

இளம் வயது பெண்கள் மட்டுமல்ல, பிற பெண்களும் சாமியார்களை அதிகம் நாடுகின்றனர். நாடிய பிறகு சாமியார்கள் இவர்களை நெருங்கி விடுகின்றனர். இளம் பெண்கள் என்றால் இச்சைக்காகவும், முதிர் பெண்கள் என்றால் சொத்துக்காகவும் சாமியார்களால் சூறையாடப்படுகின்றனர். தாங்கள் சூறையாடப்படுவோம் அல்லது சூறையாடப்படுகிறோம் என்பதை அவர்களால் அப்போதைக்கு உணர முடிவதில்லை. எல்லாம் போனபிறகே பதறுகின்றனர். 

பெண்கள், சாமியார்கள் பக்கம் சாய்வதற்கு அவர்களின் பக்தி மட்டும் காரணமல்ல. பொதுவாக இச்சமூகத்தில் பெண்களே அதிக துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாகின்றனர். இத்தகைய துன்ப- துயரங்களிலிருந்து விடுபட முடியாமல் மன அழுத்தத்தால் தவிக்கின்றனர். இந்தத் தவிப்பு தான், ஆறுதலாய் வரும் சாமியார்களின் வார்த்தைகள் பெண்களை சாமியார்கள் பக்கம் இழுக்கிறது. 

ஆண்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. கஞ்சா, சாராயம், குடி, கூத்தி என இதற்கெல்லாம் ஆண்களால் வடிகால் வெட்டிக்கொள்ள முடிகிறது. ஆனால் பெண்களால் இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இப்படிச் சொல்வதால் இத்தகைய வடிகாலை பெண்களும் வெட்டிக் கொள்ளலாம் என நான் கூற வரவில்லை.

எனக்கில்லாத திறமை உங்களிடம் இருந்தால், எனக்கு உங்கள் மீது மதிப்புக் கூடுகிறது. இந்த மதிப்பு நாளடைவில் என்னை உங்களின் இரசிகனாக மாற்றுகிறது. இத்தகைய இரசனை மேலும் தீவிரமடைந்து பக்தியாக வளர்கிறது. இந்த பக்திதான் ரஜினிக்கு பாலாபி ஷேகம் செய்யும் அளவுக்கு ரசிகனை மாற்றுகிறது. பக்தி எனும் பித்தம் தலைக்கேறிய பிறகு, அவன், தான் நேசிக்கும் நபரை கடவுளாக மதிக்கத் தொடங்குகிறான். பிறகென்ன? கடவுளுக்கு எதையும் அற்பணிக்கத் தயாராகிவிடுகிறான். கடவுளுக்கு தொண்டு செய்வதைத்தானே சிறந்தது என நமது மதங்கள் தொடர்ந்து போதித்து வருகின்றன. இப்போது மட்டும் பக்தனை கடிந்து கொள்வதில் பொருளேதுமுண்டா?

சாதாரணமானவர்களைவிட தாங்கள் அறிவாளிகள்,  திறமைசாலிகள் என்பதைக்காட்டி பிறரின் கவனத்தை ஈர்க்க பல நூல்களை சாமியார்கள் படிக்கிறார்கள்.  சமீபத்திய நாட்டு நடப்பை, உலக நடப்பை, மனிதர்களின் துன்ப-துயரங்களை அறிந்து வைத்துள்ளார்கள். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் அறிவை 'அப்டேட்' செய்து கொள்கிறார்கள். சில சாகசச் செயல்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதற்காக புதிய புதிய யுக்திகளைக் கையாள்கிறார்கள். இவைதான் சாமியார்களின் பலம்.

ஒப்பீட்டளவில் ஆண்களைவிட பெண்களை பின்தங்கியவர்களாகவே இச்சமூகம் வைத்துள்ளது. அதிலும், அதிக துன்பங்களுக்கு உள்ளாகும் போது பெண்கள் மேலும் பின்தங்கியவர்களாகி விடுகின்றனர். இந்த அடிப்படைதான் பெண்கள் அதிக அளவில் சாமியார்களை நோக்கி செல்வதற்குக் காரணம்.

மாதவிடாய் என்கிற இயற்கை நிகழ்வை 'தீட்டு' என பட்டம் கட்டியதால் கடவுளுக்கு பூஜை செய்ய அருகதையற்றவர்கள் பெண்கள் என மதக் கோட்பாடு தடைவிதித்தது. அதை உடைத்து பெண்களுக்கும் பூஜை செய்யும் உரிமையை கொடுத்ததால் மேல்மருதவத்தூரில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பூஜை செய்யும் இந்த ஒரு உரிமையின் மூலம் தங்களின் பெரும்பாலான துன்ப துயரங்களை மறந்து 'அம்மா'விடம் சரணடைகிறார்கள் பெண்கள்.

சாமியார்கள் திறமைசாலிகளா?

சில சாமியார்கள் தங்களின் திறமையின் மூலம் மக்களைக் கவர்கிறார்கள். வெறுங்கையில் விபூதி வரவழைப்பது, லட்டு-எலுமிச்சை வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, நாவில்லாத மணியிலிருந்து ஓசை எழுப்புவது என பலப் பல திறமைகளைக் காட்டி புகழின் உச்சாணிக்குச் சென்று பிறகு சில-பல காரணங்களால் உளுத்துப்போன புட்டபர்த்தி சாய்பாபா மற்றும்  பிரேமானந்தாக்களின் கதை இதுதான். இப்படி பிரபலமான ஒருவரின் கதையைப் பார்ப்போம்.  

 குழந்தை பிறக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் கணவனின் குறைபாடா அல்லது மனைவியின் குறைபாடா என இருதரப்பையும் கண்டறிந்து அதற்குரிய மருத்துவத்தை பலர் நாடுவதில்லை. அவ்வாறு செய்தால் தனது ஆண்மைத்தன்மை அம்பலமாகிவிடும் என்கிற அச்சத்தால் பெரும்பாலும் ஆண்கள் அதற்கு ஒப்புக் கொள்வதில்லை. இது அவரது ஆண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிடுமாம். அதனால்தான் மனைவியை பலிகடாவாக்குகிறார்கள். குழந்தை பிறக்கவில்லை என்றால் பெண்களுக்கு மட்டும்தான தோஷம் இருக்குமாம். ஆனால் அத்தகைய தோஷம் ஆண்களுக்கு ஏன் இருக்கக்கூடாது என கேள்வி எழுப்ப யாரும் தயாரில்லை. 

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் முன்பு ஒரு சாமியார் இருந்தார். பிள்ளை வரம் கொடுப்பதில் அன்றைக்கு அவரே இந்தியாவின் முன்னோடி. குழந்தையின்மைக்கான காரணத்தை அறிய மருத்துவரிடம் செல்வதைவிட சாமியார்களிடம் செல்வோர்களே அதிகம். பிள்ளைப் பேறு இல்லாத பெண்ணை இந்தச் சாமியாரிடம் அழைத்துச் செல்வார்கள். அப்பெண்ணுக்கு தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்த பிறகே மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும் என்று கூறிவிடுவார்.  அதற்காக கழுத்தமைப்புடைய ஒரு குண்டு செம்பு, அது நிறையும் அளவுக்கு அரிசி, வெங்காயம் நறுக்குகிற அல்லது பழம் வெட்டுகிற ஒரு கூர்மையான கத்தி இவற்றுடன் சாமியாரைப் பார்க்க வேண்டும்.

பெண்ணை சாமியார் முன் அழைத்துச் செல்ல வேண்டும். அரிசியை செம்பில் கொட்ட வேண்டும். அரிசி நிரப்பப்பட்டுள்ள அந்த செம்பின் நடுவில் கூர்மையான கத்தியைச் சொருகி கத்தியின் கைப்பிடியைப் பிடித்துத் தூக்க வேண்டும்.  தூக்கும் போது கத்தியோடு அரிசியுடன் செம்பும் சேர்ந்து வர வேண்டும். அப்படி வந்து விட்டால் தோஷம் இல்லை என்று பொருள். யார் குத்தித் தூக்கினாலும் முதலில் கத்தி மட்டும்தான் கையோடு வரும். சாமியார் மீண்டும் முயற்சி செய்யச் சொல்வார். முடிவு அதேதான். 

இப்படியாக கத்தியால் குத்தி குத்தி செம்பில் உள்ள அரிசி மெல்ல மெல்ல இருகி கத்தியை இருகிப்பிடிக்கும் அளவுக்குச் செல்லும் போது குத்துவதை நிறுத்தச் சொல்லிவிடுவார். பெண்ணுக்கு தோஷம் இருப்பது உறுதி செய்யப் படும். தோஷத்தை யார் போக்க முடியும்? அதற்கான ஆற்றல் பெற்றவர் சாமியார்தானே! அதை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே குத்தி குத்தி இருகிப் போன செம்பில் உள்ள அரிசியில் கத்தியைச் சொருகித் தூக்குவார். என்ன அதிசயம்? இம்முறை கத்தியோடு செம்பும் சேர்ந்தே வரும். இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா சாமியார் சக்தி படைத்தவர் என்பதற்கு?  இப்பொழுது சாமியார் எதைச் சொன்னாலும் செய்யத் தாயாராகிவிடுகின்றனர். "இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் பெண்ணுக்கு தோஷம் நீக்க வேண்டும். எனவே பெண்ணை ஆசிரமத்தில் விட்டுவிட வேண்டும். உடன் வந்தவர்கள் வெளியில் தங்க வேண்டும்" என்று கூறிவிடுவார்.

இரவு பூஜை நடைபெறும். மறுநாள் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்வார்கள். பத்து மாதம் கழித்து கண்டிப்பாய் குழந்தை பிறக்கும். அங்கு சென்று வந்தவர்களில் ஆகப் பெரும்பாண்மை பெண்களுக்கு குழந்தை பிறக்கிறதே, எப்படி? என ஒரு பெண் மருத்துவருக்கு ஐயம் எழ, அவருக்கும் 'குழந்தை வரம்' கேட்டு அங்கு செல்கிறார். வழக்கமாக நடைபெறும் அனைத்து வழிமுறைகளும் நடைபெறுகின்றன. இரவு நெருங்குகிறது. பூஜை நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். எங்கும் சாம்பிராணி உள்ளிட்ட வாசனை மூக்கைத் துளைக்கிறது. அங்கு செல்வோர் தன் நிலையை இழக்கும் ஒரு சூழல் நிலவுகிறது. பிறகு அரை இருட்டாய் இருக்கும் ஒரு அறைக்குள் தள்ளி விடுகின்றனர்.  திகைத்து நின்றவரின் தோளை வலுவான கரம் ஒன்று பற்றுகிறது. சுதாரித்துக் கொண்ட அவர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் கரங்களுக்குச் சொந்தக்காரனான ஒரு முரடனின் மண்டையைப் பிளக்கிறார். மருத்துவர் அங்கிருந்து தப்பி வந்து அங்கு நடக்கும் அப்பட்டமான வன்புணர்ச்சியை வெளி உலகுக்கு அம்பலப்படுத்துகிறார்.

இப்படி சாமியார்களின் அசாத்தியத் திறமைகளைக் கண்டு மதிகெட்டு மானம் இழப்பதை யார்தான் வெளியில் சொல்வார்கள். வாழ்நாள் முழுக்க மலடிப் பட்டத்தைச் சுமக்கும் இழிவைவிட ஒரு நாள் நடக்கும் இவ்விழிவை மறைப்பதில் தவறேதும் இல்லை என்கிற முடிவுக்கு வருகின்றனர். இதுவே சாமியார்களின் பலமாகவும் மாறிவிடுகிறது.

மக்களை, அதிலும் அதிக அளவில் பெண்களை துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கும் இச்சமூக அமைப்பை மாற்றுவதும், ஒவ்வொரு செயலின் காரண- காரியங்களை அறிந்து கொள்வதும், பொதுவாக மக்கள் தங்களின் அறிவு மட்டத்தை உயர்த்திக் கொள்வதன் மூலம் மட்டுமே இத்தகைய சாமியார்களை ஒழித்துக் கட்ட முடியும்.