Wednesday, November 20, 2024

ஒழுக்கக்கேடர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாமா?

"திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி வேலு மற்றும் அவரது சகோதரர் மூர்த்தி இவர்கள் இருவரது வீட்டுக்கு இடையே உள்ள பொதுப் பாதையைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டப் பகையால் வேலுவை அவரது அண்ணன் மகன் மணிகண்டன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்திருக்கிறான்.”

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்கிற விவசாயிக்கு இரண்டு மனைவிகளாம். அவருக்கு 35 சென்ட் விவசாய நிலம் உள்ளதாம். விவசாயி இறந்துவிட்டதால் அவரின் விவசாய நிலத்தை இரண்டாவது மனைவியின் இரண்டு மகன்களும் போலி வாரிசுச் சான்றிதழ் பெற்று, அந்த நிலத்தை அபகரித்துக் கொண்டதால், முதல் மனைவியின் வாரிசுகள் அந்தப் போலி வாரிசுச் சான்றிதழை இரத்து செய்யக்கோரி சாலை மறியல் செய்து ஒரு பெண் தீக்குளிக்கவும் முயற்சி செய்திருக்கிறாம்.”
 
மேற்கண்டவை 20.11.2024 அன்று இந்து தமிழ் திசை நாளேட்டில் வந்த செய்திகள்.
 

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி, வேறு ஒரு நபருடனான தனது கூடா நட்பிற்கு கணவனும் மகனும் இடையூறாக இருந்ததால் இருவரையும் கொலை செய்த குற்றத்திற்காக இராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அவளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளதாம்”.
 
ஓசூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் ஆனந்தகுமார் என்கிற ஒரு குமாஸ்தாவின் மனைவியான ஒரு பெண் வழக்கறிஞருக்கும், அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியும் கண்ணன் என்கிற வழக்கறிஞருக்கும் தவறான நட்பு இருந்ததால், நீதிமன்ற வாயிலேயே கண்ணனை அறிவாளால் வெட்டியுள்ளார் ஆனந்தகுமார். இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.”
 
இவை 21.11.2024 அன்று இந்து தமிழ் திசை நாளேட்டில் வந்த செய்திகள்.
 
நாளேடுகளையும், தொலைக்காட்சி ஊடகங்களையும் புரட்டிப் பார்த்தால் எங்கும் பொய்யும், பித்தலாட்டமும், ஏமாற்றும், சீரழிவும், ஒழுக்கக்  கேடுகளும், அடிதடியும், கொலையும் என முடை நாற்றம் வீசுகிறது.
 
இரு குடும்பங்களுக்கு இடையில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களைப் பார்க்கின்ற, கேள்விப்படுகின்ற அனைவருமே மிகச் சாதாரணமாக அவைகளைக் கடந்து சென்று விடுகிறோம்.
 
சொத்துத் தகராறு, பண மோசடி, ரியல் எஸ்டேட் மோசடி, கூடா நட்பு உள்ளிட்ட முறைகேடுகள் மற்றும் தனிப்பட்ட ஒழுக்கக் கேடுகள் தொடர்பான தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர் வழக்கறிஞராகவோ, அரசியல்வாதியாகவோ, அரசு ஊழியராகவோ அல்லது ஆசிரியராகவோ இருந்தால் அந்தந்தத் துறையைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தன் சாதிக்காரன், மதத்துக்காரனானாலும் இதுதான் நிலைமை. 

தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாதுதான். ஆனால், ஒழுக்கக்கேடர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கு முன்பு ஓராயிரம் முறை யோசிக்க வேண்டாமா

ஒழுக்கம் உயிரைவிடச் சிறந்தது என்றான் வள்ளுவன். ஒழுக்கக்கேடர்கள் மட்டுமல்ல ஒழுக்ககேடர்களுக்குக் குரல் கொடுப்பவர்களும் உயிரற்றவர்கள் என்பது புரிந்தால் சரி!
 
ஊரான்

Tuesday, November 19, 2024

மருத்துவர் மீதான கத்திக்குத்து: பெருகிவரும் 'லும்பன் பண்பாடு'?

தனது தாயாருக்குத் தவறான சிகிச்சை அளித்ததாகக் கருதிய ஒரு இளைஞன், ஒரு மருத்துவரைக் கத்தியால் குத்திய சம்பவம் குறித்த விவாதம், தெலுங்கு பேசும் மக்கள் பற்றி, ஒரு நடிகையின் சர்ச்சைப் பேச்சால் மடைமாற்றப்பட்டு விட்டது.

ஆட்கள் பற்றாக்குறை மற்றும் பணிச்சுமை காரணமாக, மருத்துவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் என்று மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டிப்பவர்கள் கருதுகின்றனர்.


அடுத்தத் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதைத்தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத எதிர்கட்சிகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூப்பாடு போடுகின்றன.

ஆளுகின்ற அரசு எதுவாயினும், அதற்கு எதிராகப் பேசுவதுதான் அரசியல் என்று கருதும் சில முற்போக்காளர்கள், இது மருத்துவக் கட்டமைப்பின் மீதான தாக்குதல் என மார்க்சிய முலாம் பூசி கத்திக் குத்தை நியாயப்படுத்துகின்றனர்.

அவலங்கள் எங்குதான் இல்லை?

அரசுப் பள்ளிக் கல்லூரிகளில் படிப்புத் தரமாக இல்லை என்று கருதும் நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினர், கான்வெண்டுகளையும், தனியார் கல்லூரிகளையும்தான் நாடுகின்றனர். ஏழை எளிய மக்கள் இதுவாவது கிடைக்கிறதே என்று அரசுப் பள்ளிக் கல்லூரிகளில் திருப்தி அடைகின்றனர். தரமான கல்வியை அரசே தரவேண்டும் என்று எத்தனைக் குரல்கள் எழுகின்றன?

கெட்டுக் குட்டிச்சுவரான ஊராட்சி நகராட்சிகளின் செயல்பாடுகளால் ஊரே கெட்டு நாறினாலும், மூக்கை பொத்திக் கொண்டு வாழப் பழகிக் கொண்டோமே ஒழிய கெட்ட நாற்றத்திற்கு எதிராக நாம் சீற்றம் கொள்கிறோமா?

பிறப்பு-இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை நாடும் பொழுது, நம் 'பாக்கெட்டி'லிருந்து பணத்தை அரசு ஊழியர்கள் உருவும் பொழுது, நமது ஆத்திரத்தை அடகு வைத்துவிட்டுத்தானே வெளியே வருகிறோம்.

வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசு ஒதுக்கும் நிதியை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக, 
கிணற்றைக் காணோம்கதையாக கபளீகரம் செய்வதை அறிந்தாலும் நாம் அமைதியாகத்தானே இருக்க விரும்புறோம்!

அரசுக் கட்டமைப்பை மேலும் சீர்குலைக்கும் ஒப்பந்த முறை

மருத்துவம் மட்டுமல்ல, கல்வி, வேளாண்மை, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டமைப்புகளும், அது தோன்றிய காலத்திலிருந்தே கெட்டுச் சீரழிந்து மக்களுக்கு எதிராகத்தான் இருந்து வருகின்றன. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவை மேலும் மேலும் சீரழிந்து வருகின்றன. மருத்துவம், துப்புறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அயலகப் பணி (out sourcing) என்ற வகையில் ஒப்பந்த முறைக்கு (contract) மாற்றப்பட்டு விட்டதால், ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டு, மிகக் குறைந்த ஊதியத்தில் அவர்கள் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர்.

மருத்துவச் சேவை உள்ளிட்ட சில துறைகளில் மிகக் குறைந்த ஊதியத்திற்குப் பணியாற்றக் கூடியவர்கள் ஒப்பீட்டளவில் திறமை குறைவானவர்களாக இருப்பதால் சேவையின் தரமும் குன்றித்தான் இருக்கும். அரசுக் கட்டமைப்பு சீர்குலைந்து போவதற்கு இந்த ஒப்பந்த முறை மிக முக்கியக் காரணியாக இருக்கிறது. 

தரமற்ற சாலைகள், பாலங்கள், கட்டடங்கள், கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள், சிறு மழைக்கே சிதிலமாகிப் போவதற்குக் காரணம் மேற்கண்ட பணிகள் அனைத்துமே ஒப்பந்த முறையில் நிறைவேற்றப்படுவதால்தான். ஒப்பந்த முறை என்பதே கொள்ளையடிப்பதற்கான ஒரு வழிமுறைதானே ஒழிய திட்டங்களை அதற்குரிய தரத்துடன் நிறைவேற்றுவதற்கான ஒன்றல்ல. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என்கிற இந்த முக்கூட்டு கும்பல் ஒரு முடிச்சவிழ்க்கும் கூட்டம் என்றால் அது மிகையல்ல. ஆட்சிகள் மாறினாலும் இந்தக் கும்பலின் களவாணித்தனம் மட்டும் மாறுவதே இல்லை. 

ஒப்பந்த முறை பல்வேறு துறைகளில் தொடர்ந்து புகுத்தப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் எல்லா துறைகளுமே மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். ஒப்பந்த முறையை ஒழித்துக் கட்டாத வரை அவலங்கள் தொடரவே செய்யும்.

யார்தான் இங்கே யோக்கியர்கள்

அதிகாரிகளும், 
அரசியல்வாதிகளும்
லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு முடிந்தவரை பணத்தைச் சுருட்டிக்கொண்டு வாழ்க்கையில் தாங்கள்முன்னேறுவதைமட்டுமே ஒரே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

நேற்று வரை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளால் தனிப்பட்ட முறையில் வஞ்சிக்கப்பட்டு ஆத்திரம் கொள்ளும் ஒருவன், தான் ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது ஒரு அரசு ஊழியராகவோ மாறும் பொழுது, எதைக் கண்டு ஆத்திரம் கொண்டானோ அதையேதான் இவனும் செய்ய முற்படுகிறான்.

முறைகேடாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புக் கிட்டாதவர்கள் மட்டுமே இங்கே தங்களை நல்லர்களாகக் காட்டிக்கொள்ள முடிகிறது. வாய்ப்புக் கிட்டியவுடன் முடிந்தவரை காசு பார்ப்பதையே கடமையாக்கிக் கொள்கின்றனர்இதுதான் கள எதார்த்தம். சொத்துடமைச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் பண்பாட்டு உளவியல் இதுதான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் யார்?

அரசோடு தொடர்புடைய துறைகளில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் அடுத்தவர் சொத்தை ஆட்டயப் போடுவது, வாங்கியப் பணத்தைக் திருப்பித் தராமல் ஏமாற்றுவது, வேலை செய்யும் இடத்தில் முறைகேடு மற்றும் நம்பிக்கைத் துரோகம் செய்வது, கட்டப் பஞ்சாயத்து மூலம் பிணக்குகளுக்கு நீதியை நாடினாலும் - காசு பார்ப்பது, ரியல் எஸ்டேட் மோசடி, வரதட்சணை என ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அநீதியின் அணியில்தானே இருக்கிறார்கள். காசு, பணம், துட்டு யாரைத்தான் விட்டு வைக்கிறது? வன்மம் இல்லாத குடும்பத்தையோ, தெருவையோ, ஊரையோ இன்று நம்மால் பார்க்க முடிகிறதாஇவை எல்லாம் சமூகக் கட்டமைப்பின் அவலம் இல்லையா

மேற்கண்ட அவலங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது எது? சொத்துதானே? சொத்தை அடைவதற்காகத்தானே இத்தனை அட்டூழியங்கள்.

சேவை குறைபாடு

மருத்துவச் சேவையில் ஏற்படும் குறைபாட்டைச் சொத்துடமையோடு தொடர்புபடுத்துவது சரியா என்று நீங்கள் கேட்கக் கூடும்.  கட்டமைப்பு வசதி குறைபாடுகளால் சேவைக் குறைபாடு ஏற்படுகிற அதே வேளையில், தனிப்பட்ட நபர்களின் தன்னலம் காரணமாகவும் ஏற்படுகிறது. இந்தத் தன்னலம் பொருளாதாரம் சார்ந்ததாகவோ அல்லது அங்கீகாரம் சார்ந்ததாகவோகூட இருக்கக்கூடும். 

கட்டமைப்பு குறைபாடுகளால் உரிய முறையில் சேவை செய்ய முடியவில்லை என்றால், கட்டமைப்பு வசதி கோரி, சேவை செய்கிறவர்கள் குரல் எழுப்ப வேண்டும். இருப்பதை வைத்துக் கொண்டு ஒப்பேற்ற முயன்றால் சேவை குறைபாட்டிற்கு அவர்களும் பொறுப்பானவர்கள் ஆகிறார்கள்.

பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதற்காகத் தங்களது கடமையைச் சுருக்கிக் கொள்வோரும் உண்டு. பதவி உயர்வு என்பது அளிப்பதோடு மட்டுமன்றி அது கூடுதல் ஊதியம் என்ற வகையில் பணத்தோடும் தொடர்புடையது. மேலும் எங்கே கையூட்டு கிடைப்தற்கு வாய்ப்பு இல்லையோ அங்கெல்லாம் சேவைக் குறைபாடுகளைப் பார்க்க முடியும்.

கத்திதான் தீர்வா?

அரசு மற்றும் சமூகக் கட்டமைப்பு நெருக்கடியினால் பாதிக்கப்படுகின்ற ஒவ்வொருவரும் கத்தியைக் கையில் எடுத்துத் தன் கண்முன்னே உள்ள நபரைத் தாக்குவதன் மூலம் தனது ஆத்திரத்தை வேண்டுமானால் தணித்துக் கொள்ளலாம். இப்படித்தான் பலரும் நடந்து கொள்கின்றனர். முன்பின் யோசிக்காமல் செய்யும் ஒரு வகை 'லும்பன்' பண்பாடு இது. 

இதன் விளைவுதான் நாட்டில் இன்று நாம் காணும், கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்த கணவன் படுகொலை-மாமியார் படுகொலை, திருமணம் செய்ய மறுத்த பெண் ஆசிரியர் படுகொலை, சொத்துத் தகராறில் தந்தை படுகொல-அண்ணன் தம்பிகளுக்கு இடையில் வெட்டுக் குத்து போன்ற பல்வேறு வன்முறைகள். 

அநீதியை ஓரங்கட்டி, நீதிக்காகவே வாழுவோர் எத்தனை பேர்? இவர்களைப் பட்டியலிட்டால், எந்த அரசியல் பின்னணியும் இல்லாத ஒரு சிலரும் மற்றும் பொதுவுடமை கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு களப்பணியில் ஈடுபடும் மிகச் சிலரும் மட்டுமே பட்டியலில் இடம் பிடிப்பர். இங்கும்கூட தொழிலாளர்களுக்கான சங்கம் என்ற பெயரில் சந்தா வசூல் செய்து ஏப்பம் விடுவது மற்றும் தொழிலாளர்கள் பணிபுரியும் முதலாளிகளிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் கையூட்டுப் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களின் நலனை அடகு வைப்பது போன்ற செயல்களில் சில தொழிற்சங்கத் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். 

எல்லா மனிதர்களையும் சொத்து என்கிற பேய் பல்வேறு வடிவங்களில் பிடித்தாட்டுகிறது. கடுமையான சட்டங்கள் மூலமாகவோ, ஒழுக்க நெறிகளை மற்றும் ஆன்மீகத்தைப் போதிப்பதனாலேயோ மனிதர்களை பிடித்தாட்டும் இந்தப்பேயை விரட்டவே முடியாது.

நமது நாடு வளமான நாடுதான். ஆனால் இந்த வளம் எல்லோருக்கும் பயன்படுவதைவிட முறைகேடாக வாழுவோருக்கு மட்டுமே பயன்படுகிறது.

எனவே, நிலம், வீடு, தங்கம் உள்ளிட்ட வளங்களை, சொத்துக்களை அரசுடமையாக்கு, தனிநபர் பணப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்து, உழைப்பவனுக்கு மட்டுமே வாழ உரிமை வழங்கு, உழைக்காமல் உண்டி வளர்க்கும் சோம்பேறிகளை உலகத்தை விட்டே விரட்டு என்பதைத் தவிர இந்த சமூக அவலங்களுக்கு வேறு நிரந்தரத் தீர்வு உண்டா

இந்தக் கட்டமைப்பில் இது சாத்தியமில்லை எனில் புதிய கட்டமைப்பை நோக்கித்தானே பயணிக்க வேண்டும்?

நல்லதொரு அரசு மற்றும் சமூகக் கட்டமைப்பு இருக்குமேயானால் மக்களுக்கும்-இயற்கைச் சீற்றங்களை தவிர-பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. ஒருவேளை மருத்துவரைத் தாக்கிய அந்த இளைஞனின் தாயைப் போல யாரேனும் நோய்வாய்ப்பட்டால் சிறந்த மருத்துவச் சேவையும் கிடைக்கும். இதற்குக் கத்தி ஒருபோதும் உதவாது.

ஊரான்

Tuesday, November 12, 2024

ஆறறிவு மனிதனும் ஓரறிவு தாவரமும்!

ஒரு நாள் காலையில் ஆலையின் பிரதான வாயிலிலிருந்து அலுவலகம் சென்றபோது பாதி வழியில் சற்றே கிறுகிறுப்பாகவும் சோர்வாகவும் இருந்ததால் மருத்துவரை சந்தித்தேன். போதிய அளவு தைராய்டு சுரக்காததன் விளைவு இது என்பதை குருதி ஆய்வு உறுதி செய்ததால் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக தைராக்சின் எடுத்து வருகிறேன்.

மாத்திரை அளவு எவ்வளவு என்பதை ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தி உறுதி செய்து கொள்கிறேன். காலை எழுந்தவுடன் முதலில் தைராக்சின், ஒரு மணி நேரம் கழித்துதான் வேறு எதையும் உண்பது என நாட்கள் இயல்பாய் கடந்து செல்கின்றன. இந்த ஒழுங்கை இதுவரை நான் மீறியதில்லை. நாம் இயல்பாய் இருந்தால் இயங்குவதும் எளிதுதானே?

எப்பொழுது நமது உடலில் இயல்புக்கு மாறான உணர்வுகளும் செயல்பாடுகளும் (altered sensations and functions) தெரிகின்றதோ, அது நோய்க்கான எச்சரிக்கை என்பதை உணர்ந்து, உரிய மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஹோமியோபதி உணர்த்தும் எளிய பாடம் இது.

வழக்கம் போல, வாய் கொப்பளித்து தைராக்சின் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குள் சென்றேன். கிராமங்களுக்குச் சென்றாலும் நான் சும்மா இருப்பதில்லை. செடிகள் வளர்ப்பது, களை எடுத்து பராமரிப்பது உள்ளிட்ட தோட்ட வேலைகள் எனக்கு இயல்பானதாய் மாறிப் போகும்.

பார்த்தீனியம்

முன்பு ஊன்றிய மா, தென்னை, பப்பாளி உள்ளிட்ட செடிகள் எல்லாம் செழித்து வளர்ந்திருந்தன. கூடவே பார்த்தீனியம் உள்ளிட்ட களைகளும் மண்டிக் கிடந்தன. மற்ற களைகளைக் கூட மெதுவாய் அகற்றலாம், ஆனால் பார்த்தீனியத்தை மட்டும் தேடித்தேடி கருவறுப்பேன். அது முளைக்கும் போது கண்ணுக்குத் தெரியாது. பயிர்களை விலக்கிப் பார்த்தால் பாவமாய்த் தோன்றும். முளையிலேயே பிடுங்கி எறியவில்லை என்றால் பயிர்களுக்கிடையில் துருத்திக் கொண்டு, தான்தான் இங்கே உயர்ந்தவன் என்று தலையை நீட்டி தளதளவென்று தழைத்து வளரும். இப்பொழுதாவது விழித்துக் கொண்டு அழிக்காமல் விட்டால், அதன் 'வெண்ணிறப்' பூக்கள் விதையைப் பரப்பி கொல்லைகளை எல்லாம் கொலைக்களமாக்கும். வெள்ளையாய் இருப்பவை எல்லாம் நல்லவை என்று நான் எப்போதும் ஏமாறுவதில்லை,

பழைய மரங்களில் பப்பாளிக் காய்கள் பெருத்துத் தொங்கின. புதிய செடிகள் பூக்கத் தொடங்கின.


பப்பாளி

பழைய கொய்யாவில் காய்கள் தாங்காமல் கிளைகள் தரையைத் தொட்டன. புதுக் கொய்யாவோ புதிதாய்க் காய்த்தது. திங்கத் திங்கத் தெவிட்டியது போக எஞ்சியவை பழுத்து விழுந்தன மீண்டும் முளைக்க.

பப்பாளி பிஞ்சுச் செடியின் இலைத் தண்டுகள் பச்சிளங் குழந்தையின் குருத்தெலும்பு போல இருப்பதால் முட்டி மோதி வளர முயற்சிக்காது. கொய்யா மரத்தடி நிழலில் முளைத்த பப்பாளி ஒன்று, கொய்யாவின் முரட்டுக் கிளைகளைத் தவிர்த்து, அடுத்தவர் நிழலில் இருந்தால் நிற்கதிதான் என்பதையும் உணர்ந்து கதிரவனைத் தேடி வளைந்து நெளிந்து வளரக் கற்றுக் கொள் என்பதை சொல்லாமல் உணர்த்தியது.

நெளிந்து வளரும் பப்பாளி

உன்னால் முடியும் என்றால் தடைகளைத் தகர்த்து முன்னேறு என்பதை அதற்குப் பக்கத்திலேயே முளைத்த சீதாச் செடியோ கொய்யாக் கிளைகளின் ஊடே ஊடுருவி வானத்தை நோக்கி வளர்ந்து காட்டி பாடம் எடுத்தது.

யாருக்காகவும் காத்திராமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்பதைப்போல அதுபாட்டு வளர்ந்து நின்றன முருங்கைச் செடிகள். நீர் பற்றாக்குறையால் முன்பு வளர்ச்சி குன்றி தயங்கி நின்ற வாழை மரங்கள், பருவ மழையின் அரவணைப்பில் பக்கத்தில் பிள்ளைகளையும் பெற்றிருந்தன.

இரண்டாண்டுகள் வளர்ந்த சில தென்னம் பிள்ளைகளின் குருத்துகள் நோய்தாக்கி துண்டாய் விழுந்த போது துக்கம் தொண்டையைக் கவ்வியது. மீண்டும் துளிர்க்கும் என சிலர் ஆறுதல் கூற, தேவையான மருந்தைப் தெளித்து காத்திருக்கிறோம் அவை மீண்டும் துளிர்பதைக் காண.

பப்பாளி, கொய்யா, முருங்கை உள்ளிட்ட சில செடிகள் தின்று துப்பியவை அல்லது கழிவாய் வீசியவை. ஆனாலும் அவை விழுந்த இடத்தில் மீண்டும் முளைத்து காய் கனிகளைக் கொடுத்து, ‘ஏய் முட்டாளே, என்னைக் குப்பை என்று வீசாதே, முடிந்த மட்டும் என்னை மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடு, நான் உனக்காக மீண்டும் வருவேன்என்று பாடம் நடத்துகின்றன.

பல்வேறு செடிகள் மரங்கள் அருகருகே வளர்ந்தாலும், ஒன்று செழிப்பாகவோ அல்லது வளர்ச்சி குன்றியோ இருந்தாலும், இவை மனிதர்களைப் போல பொறாமைப் படுவதோ அல்லது நேருக்கு நேர் பொது வெளியில் மோதிக் கொள்ளவதோ, மனிதச் சாதிகளைச் போல வேற்றுமை பாராட்டுவதோ கிடையாது. மண்ணுக்கடியில் இவை நீரைத் தேடி வேர் பரப்புமே ஒழிய, பக்கத்துச் செடியை ஒழித்துக் கட்ட ஒருபோதும் முனையாது.

உற்றறிதலைத்தவிர வேறெதுவும் அறியாத, பிரதிபலன் ஏதும் எதிர்பாராத ஓரறிவு தாவரங்கள் ஆறறிவு மனிதனுக்குப் பாடம் புகட்டுகின்றன.

முற்றும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

மனக் களைப்பும் தூக்கமின்மையும்!

மனக் களைப்பும் தூக்கமின்மையும்!

நெளித் தகடுகளால் வேயப்பட்ட கூரை பனிமழையில் உறைந்து கிடந்தது. பத்து மணிக்குப் படுத்தால் அலாரம் வைத்தாற் போல ஐந்து மணிக்கு எழுவது அறுபதுகளைக் கடந்தவர்களுக்கு இயல்புதானே?


குறுக்குக் கழியில் தொங்கிய மின்விசிறி கூரையின் குளிர்ச்சியை சால்வைக்குள் லேசாய் நுழைத்து, மேனியைத் தொடுவதை  விழித்த பிறகுதான் உணர முடிந்தது. இது பனிக்காலம் இல்லைதான். என்ன செய்ய? மழை வரவில்லை என்பதற்காக மார்கழி காத்திருக்குமா என்ன?  

உழைப்பின் களைப்பில் உடல் ஓய்வை நாடினாலும், மனம் இடறினால் உறக்கமும் ஒண்டாது. ஆழ்ந்து உறங்க வேண்டுமென்றால் உடலும் மனமும் பேசும் மொழி ஒன்றாக இருக்க வேண்டுமே?

இது சாத்தியமா? சிரமம்தான். மனைவி மக்கள், உற்றார் உறவினர், பணியிட ஊழியர்கள், பொதுவெளியில் புதுப்புது மனிதர்கள், சமூகப் பிரச்சனையில் தலையிடுவோருக்கு கட்சிக்காரர்கள்-இயக்கத் தோழர்கள் என வாழும் சூழலில்தான் எத்தனை எத்தனை பிரச்சனைகள்? முற்றும் துறந்தவர்கள் எவரும் இல்லையே, இறந்தவர்களைத் தவிர? மனக் களைப்புக்கு ஆளாகதவர் இவ்வுலகில் எவரும் உண்டோ?

மனக் களைப்பைப் போக்கும் ஆற்றலின்மையால்தானே ஆன்மீகம், தியானம் என்கிறான். இவை எல்லாம் கதைக்குவதாது என்பதால்தான் தம் அடிக்கிறான், தண்ணி அடிக்கிறான். தகாத உறவுக்கும் ஆட்படுகிறான்

இப்படி மனக் களப்பைப் போக்க முயன்றவன், உடல் கெட்டு உறவுகளின் வெறுப்புக்கும் ஆளாகிறான்பிறரின் வெறுப்பால் மனக் களைப்பு இரட்டிப்பாகிறது. இறுதியில் கல்லறை உறக்கம் மட்டும்தான் அவனது மனக் களைப்புக்கு முடிவு கட்டுகிறது.

சும்மா இருந்தாலே தூக்கம் வராது இப்பொழுது கைபேசி வேறு அவனைக் கவ்விக் கொண்டதால் கல்லறை தூரமும் குறைந்து கொண்டே வருகிறது. 

சமூகமே கொலைக்களமாய் இருக்கும் போது ஆன்மீகம், தியானம், தம், தண்ணி, தகாத உறவு இல்லாதவன் மட்டும் தப்பிவிட முடியுமா என்ன? இங்கே, ஏதோ ஓர் அளவுக்கு உதவுவது மருத்துவம் மட்டும்தான். மனக் களைப்புக்கு பெரிதாய் மருந்தில்லை என்றாலும், உடல் சிதைவுக்கு உரிய மருந்தை முறையாக எடுத்துக் கொண்டால், கல்லறை உறக்கத்தைத் தள்ளிப் போடலாம்.

குடும்பப் பாரத்தைச் சுமப்பவனுக்கு ஒன்று என்றால், ஓராயிரம் பேர் உதவிக்கரம் நீட்டும் இவ்வுலகில், குடும்பப் பார்த்தைச் சுமந்தவனுக்கு ஓராயிரம் பிரச்சனை என்றாலும், உதவிக்கரம் நீட்ட ஓரிருவர் கிடைப்பதே அரிதிலும் அரிதுதானே? ஒருவேளை அவன் உண்டியல் கணமாக இருந்தால் ஒரு சிலர் உதவக்கூடும்.

நோய் பலவாயினும் எண்பதைத் தொடுவது சாத்தியம்தான் என்றாலும், அறுபதைத் தாண்டிய பலர் உரிய பராமரிப்பின்றி கல்லறை நோக்கி பயணிப்பது‌ அன்றாட நிகழ்வாகிப் போனது. அலுவலக நண்பர்கள், உற்றார் உறவினர், தோழர்கள் என நாம் நேசித்த, நம்மை நேசித்த சிலரின் மரணச் செய்தி, நலமோடு இருப்போரின் மனதையும் கலங்கடிக்கத்தானே செய்கிறது? ஒரு வேளை பாசமும் நேசமும் இல்லை என்றால் மனம் கலங்காமல் இருக்குமோ? இப்படி இருப்போரும் இவ்வுலகில் இருக்கத்தானே செய்கின்றனர்.

தொடரும்

ஊரான்