Saturday, November 21, 2020

வெள்ளையனை நடுங்க வைத்த மைசூர் புலி!

ஆற்காட்டு நவாப், ஹைதராபாத் நிஜாம், புதுக்கோட்டை தொண்டைமான், திருவிதாங்கூர் சமஸ்தானம், மராட்டிய பேஷ்வாக்கள் என பலரும் மண்டியிட்டு அண்டிப் பிழைத்த போது வெள்ளையனை எதிர்த்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமரசமின்றி போராடிய ஒரு மாவீரன். 

'மராத்தியர்கள் அல்ல நம் எதிரி, நிஜாமும் கூட அல்ல நமது எதிரி, இந்த மண் எவ்வளவு எனக்கு உரியதோ அதே அளவு அவர்களும் இதன் உரிமையாளர்களே. இந்த மண்ணுக்கு உறவற்ற பிரிட்டிஷ்காரர்களே நமது பொது எதிரி' என எதிரியை அடையாளம் காட்டியவன். 

உருது, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றவன். 'சீனம் சென்றேனும் ஞானம் தேடு' என்பதற்கிணங்க, நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம், அரண்மனையில் பெரிய நூலகம் என அறிவுப் பசிக்கு வித்திட்டவன்.

தனது காதலி ஒரு சாதாரண படைவீரனின் மகள் என்று கருதாமல் தான் காதலித்த பெண்ணையே மணம் புரிந்து காதலுக்கும் மகுடம் சூட்டியவன்.

பெண்கள் மேலாடை உடுத்தக் கூடாது என்கிற நடைமுறையை ஒழித்துக்கட்டியவன்.

'ஏன் இந்துக்களையும் சமமாக பாவிக்கிறாய்? இஸ்லாமை வளர்ப்பது உன் கடமை அல்லவா?' எனக் கேட்டபோது 'நான் என் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறேன்',  நீங்கள், 'நான் என் மதத்தைச் சார்ந்த மக்களைக் காக்க வேண்டும் என்கிறீர்கள். இந்த மண் என்னுடையதல்ல, அவர்களுடையது. எனது வலிமை பெரியதா? மக்கள் ஒற்றுமை பெரியதா? ஒரு பிரிவினருக்கு அன்பு, மறு பிரிவினருக்கு கடுமை என்பது எப்படி நல்ல முடிவை எட்ட உதவும்? அவர்களை பதவியில் வைத்திருப்பது இராஜதந்திரம் என்றல்ல. அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்பதாலேயே. நான் இந்து கோவில்களுக்கு தாராளமாக உதவுவது  சமநிலை பேணும் ராஜதந்திரம் அல்ல. அவர்கள் பெரும்பான்மையினர். அவர்களுக்கு நான் அரசன். அதற்கு மேல் நானும் அவர்களும் இந்தியர்கள்' என மதமாச்சரியம் பார்க்க கூடாது என்பதை உணர்ந்தவன்.

உயர் பதவிகளில் தனது அரசின் முதலமைச்சராகவும் அந்தரங்கச் செயலாளராகவும் பார்ப்பனர்களையே அமர்த்தி தான் சாதி மதம் பார்க்காதவன் என்பதை நிலைநாட்டியவன்.

சட்டத்திற்குப் புறம்பாக எந்த மனிதனும் தண்டிக்கப்படக்கூடாது என அறிவித்தவன். மரண தண்டனையை ஏற்க மறுத்தவன்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவன். மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்தவன். இளைஞர்களின் நன்னடத்தையும் எதிர்காலமும் மது ஒழிப்புடன் இணைந்தது. மது ஒழிப்புடன் மக்கள் நல வாழ்வும் சமூகப் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டவன். மூடப்பட்ட சாராய ஆலைகளுக்கு இழப்பீடு இல்லை என்று அறிவித்தவன்.

வேளாண்மையையும் தொழில்துறையையும் வளர்ப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தவன்.

விவசாயிகளின் மேம்பாட்டிற்காக வருவாய்ச் சட்டங்களைத் திருத்தியவன். விவசாயி தவறு செய்தால் அதற்கு அபராதமாக பழ மரங்களை வளர்க்கச் சொன்னவன். 

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு அடிக்கல் நாட்டியவன். 'வானம் உள்ளவரை, பசி உள்ளவரை விவசாயிகளுக்கு சலுகை அளிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உணவளிப்பவர்கள்' என்று அறிவித்தவன்.

மதத்தால், ஜாதியால், இனத்தால் ஒருவரை இழிவுபடுத்தி வேறுபாடு வளர்த்தால் அது சட்டத்திற்கு எதிரானது, தண்டனைக்குரியது என அறிவித்து சாதி மத வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தவன்.

தொழில் வணிக முனைவோரை ஊக்குவித்தவன். பன்னாட்டுப் பொருள் விற்பனைக்கான அரசு விற்பனை மையங்களை ஏற்படுத்தியவன்.

வெடி மருந்து தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் காவிரியில் கலந்து மீன்கள் சாவதைக் கண்டு அந்தத் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக நின்றவன்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை அளிப்பதற்காகவே சாலையை செப்பனிடுதல், மரம் வளர்த்தல், ஓய்வு இல்லங்கள் கட்டுதல் எனப் பல்வேறு பணிகளை உருவாக்கி வேலைவாய்ப்பை உத்தரவாதப் படுத்தியவன்.

அரசு ஆடம்பரங்களை, வீண் செலவுகளை முற்றாகக் கட்டுப்படுத்தியவன். கட்டில் மெத்தையைத் துரந்து பாயில் படுத்து உறங்கியவன். ஆடம்பர உடைகளைத் துறந்து போர் வீரனைப் போல வாழ்ந்தவன். அதிகாரிகள் மக்களிடம் வரி வசூலிப்பதில் கடுமை காட்டக் கூடாது என உத்தரவிட்டவன். 

போரின் இறுதிக்கட்டத்தில் தப்பித்து உயிர் வாழ வேண்டும் என மந்திரிகள் ஆலோசனை கூறிய போது, 

'உயிர் உன்னதமானது. ஏனெனில் நாம் அதை ஒரு உன்னத இலட்சியத்திற்காக தியாகம் செய்ய வேண்டும். நம் பெருமைக்குரிய மண்ணை அடிமைப்படுத்த ஒரு கொடிய எதிரி வருகிறான் எனும் போது அதை எதிர்த்து நின்று மரணத்தைத் தழுவுகிறவர்கள் மரணத்தின் பின்னும் வாழ்கிறார்கள். நாடு அவர்களை என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும்' என்ற இலக்கணத்திற்கு ஏற்ப போரில் வீரமரணம் அடைந்தாலும் இன்றும் நம் நினைவில் வாழ்பவன்.

போர் என்பது வெற்றி தோல்வி அல்ல அது வீரத்தின் களம் என்று காட்டியவன்.

இப்படி நீள்கிறது அவனது வாழ்க்கைக் கதை. அவன் மன்னனாக வாழ்ந்திருந்தாலும் ஒரு நவ கால சிற்பியாகக் காட்சியளிக்கிறான். இவனைப் படிக்கப் படிக்க இப்படி ஒருவன் நமக்குக் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கத்தை உருவாக்குகிறான். ஆனால் காவிக் கூட்டமோ இவனைப் படிக்கக் கூடாது என தடை விதிக்கிறது. தடைகளைத் தாண்டி அவன் பலரது நெஞ்சங்களில் ஊடுருவிக் கொண்டுதான் இருக்கிறான். 

வீரத்தின் விளைநிலம், மைசூர் புலி திப்பு சுல்தான் பிறந்தநாள் - நவம்பர் 20 - நினைவாக....

நெகிழ்ச்சியுடன்

ஊரான்

ஆதாரம்: திப்புவின் வாள் நூலிலிருந்து. நூலைக் கொடுத்து உதவிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்களுக்கு நன்றி.