Monday, December 2, 2024

திருவண்ணாமலை மண் சரிவு: கலிகாலம் எனும் மாய்மால மயக்கம்! - 2

திருவண்ணாமலையில் காடுகளையும், மலைகளையும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டது ஸ்டாலின் ஆட்சி காலத்தில் மட்டுமா

இதற்கு முன்பு எடப்பாடி, ஜெயலலிதா, கலைஞர், அண்ணாதுரை, காமராசர், ராஜாஜி, நீதிக்கட்சி, வெள்ளைக்காரன், முகலாயர்கள் ஆட்சிக் காலங்களில் திருவண்ணாமலையில் காடுகள் ஆக்கிரமிக்கப்படவில்லையா? வரலாற்றைப் புரட்டாமல் இதற்கு விடை காண முடியாது.

திருவண்ணாமலை ஒன்றும் சங்ககால நகரம் அல்லவே? தொண்டை மண்டலத்தைச் சார்ந்த நரிநாட்டில், நவிர மலையைத் தலைமையிடமாகக் கொண்டு நன்னன் ஆண்டதாக பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் எனும் பொ.ஊ இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சங்க இலக்கியம் பேசுகிறது.‌ இந்த நவிர மலை கடலாடி பருவதமலையா அல்லது எமது மட்டவெட்டு கிராம மலையா அல்லது செங்கம் ஜவ்வாது மலையா என்கிற ஆய்வுகள் ஒரு புறம் இருக்க, அது திருவண்ணாமலை அல்ல என்பது மட்டும் உறுதி.
 

சங்ககாலத்தில் இல்லாத கோவில்கள், பக்தி இயக்கம் பரவிய போது பல்லவர் ஆட்சிக் (பொ.ஊ: 7 ஆம் நூற்றாண்டு) காலத்தில்தான் தமிழ்நாட்டில் தோன்றத் தொடங்கின. அதைத் தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகரப் பேரரசு காலத்தில் நாயக்கர்கள், சம்புவராயர்கள், முகலாயர்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்கள் எனப் பலரும் திருவண்ணாமலையை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தில்
ஆட்சி புரிந்துள்ளனர்
பொ.ஊ: 9 ஆம் நூற்றாண்டில்தான் 
திருவண்ணாமலையில் சிவனுக்கும் கோவில் அமைத்து சிவனை அருணாசலேஸ்வரனாக்கி உள்ளனர்பக்தி இயக்க காலத்தில் தேவாரம், திருவாசகம் என பாடிக் குவித்தனர்.
 
யார் பெரியவன் என்பதில் பிரம்மனுக்கும் திருமாலுக்கும் எழுந்த சர்ச்சையில், சிவனின் அடியைக் காணப் புறப்பட்ட திருமால் வராகனாக பூமியைப் பல ஆண்டுகள் குடைந்தும் அடியைத் காணமுடியாமல் திரும்பி வர, பிரம்மனோ முடியைக்கான வான் நோக்கிச் செல்ல, சிவனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவைக் கொண்டு, தான் சிவனின் முடியைக் கண்டதாக பிரம்மா சொல்ல, இருவரின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்தச் சிவனையே அண்ணாமலையாக்கி அரோகரா என்றனர்.
***
புயலைச் சமாளிக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வரைக் கேள்விக் கணைகளால் தொடுக்கும் எவர் ஒருவருக்கும், நெருப்புப் பிழம்பாய்த் தோன்றிய எல்லாம் வல்ல தென்னானுடைய சிவன் இந்த மண்சரிவை ஏன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்று மட்டும் கேட்கத் தோன்றுவதில்லை.

கல்லைக்கூட பொன்னாக்கும் வித்தை கற்ற கற்குவாரி கழுகளின் பார்வை பட்டால், ஒரே இரவில் அண்ணாமலையையே அதோகதியாக்கி விடுவார்கள். என்ன, கிரிவலத்தில் கொட்டும் காசே போதும் என்று கழுகுகள் கருதுவதால் இப்போதைக்கு அமைதி காக்கின்றன.

கவுத்தி வேடியப்பன் மலைகளைக் குடைந்து கனிம வளங்களைக் கொள்ளையடிக்க அதானிகள் காத்துக் கொண்டுள்ளனர். அதற்கான எட்டு வழிச் சாலையும் தயாராகிவிட்டால் அருகில் உள்ள அண்ணாமலையின் அடியைத்தொட வராகனைப் போல திக்குமுக்காடாமல் 'டனல் போரிங் மெஷினால்' (TBM) ஒரு நொடியில் அண்ணாமலையையே பனாலாக்கி விடுவார்கள்.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும் இருந்ததாகவும், தற்போது கலியுகத்தில் அது கல் மலையாக இருப்பதாகவும், 260 கோடி ஆண்டுகள் பழமையான மலையை, சிவன் கதையோடு கோர்த்துக் கொண்டார்கள்நெருப்பு மலையாக இருந்த போது யாரும் நெருங்கி இருக்க மாட்டார்கள். சரி. அதன் பிறகு மாணிக்க மலையாக, தங்க மலையாக இருந்த பொழுது யாரும் வெட்டி எடுத்துச் செல்லவில்லையா? எப்படி கல் மலையாக இன்றும் அப்படியே நிற்கிறது என்று நமக்கும் கேட்கத்தான் தோன்றுகிறது.

ஏதாவது தப்பா நடந்தா "கலி முத்திப் போச்சு" என்கிறார்கள். கலிகாலம் என்றாலே கெட்ட காலம் என்றுதான் மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அப்படித்தான் புராணங்கள் சொல்கின்றன. கலிகாலம் தொடங்கி இன்றுவரை 5125 ஆண்டுகள் ஆச்சாம். கலிகாலம் முடிய இன்னும் 4 26 875 ஆண்டுகள் ஆகுமாம். என்ன பெரு மூச்சு வருதா? எப்ப கலி முடியறது? எப்ப நமக்கெல்லாம் பொற்காலம் பொறக்கறது? 

பாருங்க, கலியுகம் தொடங்கிய பிறகு உருவான குப்தர் ஆட்சி (பொ.ஊ: 4-6 ஆம் நூற்றாண்டு) பொற்காலமின்றாங்க. 'லேடி', 'டாடி' ஆட்சிகூட பொற்கால ஆட்சினு சொல்றவங்களும் இருக்காங்களே? அப்ப கலிகாலம் மலை ஏறிப் போச்சானு நீங்க கேக்கிறது புரியுதுங்க. அது ஆள்றவங்களப் பொருத்து அமையுமுங்கோ!

***
ரமண மகரிஷி, விசிறி சாமியார், நித்தியானந்தா, மூக்குப் பொடி  என குடும்ப வாழ்வைத் தொடர இயலாதவர்கள் சாமியாராகி அண்ணாமலையில் அடைக்கலமானார்கள்

1989 இல் திருவண்ணாமலை, மாவட்டத் தலைநகரமானதால் நகரம் விரிவடைய, அதே நேரத்தில் கிரிவலமும் பிரபலமாகி பலமடைந்தது. கிரிவலத்தைப் பிரபலப்படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர்கள் வியாபாரிகளே. இருக்காதா பின்ன? கூட்டம் கூடினால் காசு கொட்டுமில்ல.
 
இது எங்களுக்கான சாமி என சொந்தம் கொண்டாடி இன்று ஆந்திரக்காரர்கள் அலை அலையாய் படை எடுத்து வருவதால் கூட்டம் அலைமோதுகிறது. உழைத்து உண்ண விரும்பாத சில சோம்பேறிகள் சாதுக்கள் என்ற போர்வையில் அருளாசி தருகிறேன் என்ற பெயரில் யாசித்துப் பிழைப்பு நடத்தும் தலமாகவும் இது இன்று மாறிப்போனது.
 
அண்மையில் காலமான மூக்குப்பொடி சாமியார், தங்களது ஹோட்டல்களுக்குள், கடைகளுக்குள் வரமாட்டாரா என்று காத்திருந்த வியாபாரிகளும் தங்களது வியாபாரம் பெருக இத்தகைய சாதுக்களை 'கப் அண்ட் சாசரில் ஃபில்டர் காபி' கொடுத்து வரவேற்று வளர்த்து விட்டனர். ஒரு முறை நான், ஒரு ஓட்டலில் காலை வேளையில் உணவருந்திக் கொண்டிருந்த பொழுது, திடீரென உள்ளே நுழைந்த இந்த மூக்குப்பொடியை ராஜமரியாதையோடு உபசரித்தார் கல்லாப் பெட்டியில் இருந்தவர். பொடியையும் இவரே வாங்கிக் கொடுத்தார் என்றால் பாருங்களேன்? முனிவர்தான் முற்றும் துறந்தவராச்சே, பொடி மட்டும் அவரிடம் எப்படி இருக்கும்? மூக்குப் பொடியின் தும்மல் பட்டாலே வியாபாரம் ஓஹோவென்று நடக்குமாம். அப்படி ஒரு நம்பிக்கை அங்கு விதைக்கப்பட்டிருக்கிறது.
 
நிற்க, சாதுக்கள் போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளதால் கிரிவலப் பக்தர்களைப் பாதுகாக்க சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப் போகிறதாம் ஸ்டாலின் அரசு. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் போல, சாதுக்கள் மறுவாழ்வு திட்டம் ஒன்றைத்  தொடங்குவதை விடுத்து கணக்கெடுப்பதால் யாருக்கு என்ன பயன்? சமூக விரோதிகள் என சந்தேகத்திற்குரியோர் காவியிலிருந்து 'சிவில்' உடைக்கு மாறுவதைத் தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை.
 
சும்மா கிடந்த மலை அடிவாரத்தில் ஒரு கோவிலைக் கட்டி, உச்சியிலே தீபத்தை ஏற்றி, அதற்கு ஒரு புராணப் புரட்யையும் உருவாக்கி, கிரிவலம் போனால் வாழ்க்கையில் எல்லா வளமும் கிட்டும் எனக் கதைகட்டி, பல்வேறு பிரச்சனைகளில் உழலும் அப்பாவி பக்தர்களை மலையை நோக்கி ஈர்க்க வைத்து, ஊரையே ஒரு வியாபார நகரமாக்கி, திருவண்ணாமலைக்குச் சென்றால் எதைச் செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி நகரை நோக்கி மக்கள் குடியேற, அதன் விளைவாக மலைகளிலும் கான்கிரீட் காடுகள் முளைக்கின்றன.
 
சுற்றுச் சூழலை நாசமாக்கும் இது போன்ற சட்டவிரோத குடியேற்றங்களுக்குத் தெரிந்தே இதுவரை அனுமதி வழங்கிய, தொடர்ந்து அனுமதி வழங்கும் அனைவருமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள்தான். சம்பந்தப்பட்ட பேராசைக்கார மக்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களே!

மலைகளில் கொட்டும் மழை நீர்
ஓடைகளில் உருண்டோடி, பின் ஓடைகள் ஒன்று கலந்து ஆறாய் பெருக்கெடுக்கும். என்றோ பெய்த கனமழையால் உருவான ஓடைகளின் தடங்கள் இன்றும் கூட எல்லா மலைகளிலும் செங்குத்து நீள்பள்ளங்களாய் எடுப்பாய் காட்சி தருகின்றன. 

ஓடைகளை மறித்தோ அல்லது ஓடைகளை ஒட்டியோ  வீடுகளைக் கட்டினால் அவை அடித்துச் செல்லப்படுவதை அந்த சிவனே நினைத்தாலும் தடுக்க முடியாது.
பிரம்மனோ பெருமாளோ, சிவனோ சக்தியோ இவர்கள் எல்லோரையும்விட தான்தான் பலசாலி என்பதை வருணன்தானே அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறான். ஆற்றல்மிகு வருணனை அதாவது இயற்கையை வணங்கினால்கூட ஒரு வகையில் அது பொருள் உள்ளதாய் இருக்கும் போல.

அண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில்  கூறியுள்ளபடி 
காடுகளையும் மலைகளையும் ஆறுகளையும் ஏரிகளையும் சாலைகளையும் இரயில் பாதைகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கோவில்களை அப்புறப்படுத்தாமல், திருவண்ணாமலை சோகங்களுக்கு முடிவேது

இறுதியாக ஒன்று, கலிகாலம் எனும் மாய்மால மயக்கம் தெளிந்தால்தான், சோகங்களின் வேர்களையாவது (root cause) தொட முடியும். 

முற்றும்
 
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

திருவண்ணாமலை மண் சரிவு: கலிகாலத்தின் விளைவா? -1

அண்மையில் வீசிய ஃபெஞ்சல் புயல், தமிழ்நாட்டில் சில இடங்களைப் புரட்டி போட்டுள்ளது. அதில் ஒன்று திருவண்ணாமலை. மலையில் மண் சரிவு ஏற்பட்டு மலையடிவாரத்தில் வசித்த ஏழு பேர் புதையுண்டு மாண்டு போயுள்ளனர். அது ஒரு பேரிழப்புதான்.

இதையொட்டி தொலைக்காட்சிகளில் காரசாரமான விவாதங்கள் நடைபெறுகின்றன. பக்தி என்ற பெயரில் கண்டவர்கள் எல்லாம் இன்று முறையற்று கிரிவலம் செல்வதால்தான், அந்த சிவனே நம்மை சோதிக்கிறார் என்று ஒரு பக்தர் பத்து நிமிடக் காணொளி ஒன்றில்  மெய்யுருகப் பேசுகிறார்.


முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சியினர் கரித்துக் கொட்டுகின்றனர்
 
திருவண்ணாமலை என்றால் முன்பெல்லாம் கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்றுவார்கள். அடிவாரத்தில் கோவிலில் வழிபாடு செய்வார்கள். அம்புட்டுதான் அன்றைய பக்தி.
 
20 மைல்களுக்கு அப்பால், நேர் வடமேற்கு திசையில் அமைந்துள்ள எங்கள் கிராமத்திலிருந்து மாலை ஐந்து-ஆறு மணி வாக்கில் திருவண்ணாமலை உச்சியையே பார்த்துக் கொண்டிருப்போம். சிறிய மெழுகு வர்த்தி ஜூவாலை போல அலைபாயும் மலை உச்சி தீபத்தைப் பார்த்துவிட்டுதான் எங்கள் கிணற்று மேட்டில் கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்குத் தீபம் ஏற்றுவோம். அதெல்லாம் என் நினைவில் நிழலாடும் எனது இளமையின் பக்திக் காலம்.
 
ஒரு மலை இருக்கிறது என்றால் அதைச் சுற்றி தரைக்காடுகள் இருக்கும். திருவண்ணாமலையில் அத்தகையத் தரைக்காடுகள்,
காஞ்சி சாலைக்கும் செங்கம் சாலைக்கும் இடையில், மலையின் பிற்பகுதியில்:இருந்தன
அதையொட்டி நிலங்களுக்குச் செல்வதற்கான பாதையும் கிராமங்களுக்குச் செல்லும் பாதையும் மட்டுமே இருந்தன. காடுகளைப் பாதுகாக்க காடுகளின் வெளிவட்டத்தையொட்டி வனக்காவலர்கள் செல்வதற்கான பாதை இருக்கும். அதை 'லைன்' என்று சொல்லுவார்கள்.
 
அனுமதி இல்லாமல் லைனைத் தாண்டி காடுகளுக்குள் செல்வதே சட்டப்படி குற்றம். காடுகளுக்குள் மாடுகளை மேய்த்தால், வனக்காவலர்கள் அவற்றையெல்லாம் சுற்றி வளைத்து ஓட்டி வந்து பட்டிக்குள் அடைப்பார்கள். அடைக்கப்பட்ட மாடுகளை மீட்க அலையாய் அலைய வேண்டி வரும். அப்படிப்பட்ட ஒரு பட்டி கீழ்பாலூரில் இருந்தது. மாடுகளைப் பட்டியில் அடைக்காமல் இருக்க விவசாயிகளிடமிருந்து வேர்க்கடலையை மூட்டையாகக் கேட்டு வாங்கிச் செல்வார்கள் வனக்காவலர்கள். 
 
காடுளையொட்டி உள்ள மக்கள்தான் உண்மையான வனக்காவலர்கள்; அவர்களை மீறி வேறு யாரும் காடுகளுக்குள் செல்ல முடியாது.
அப்படி இருக்க, 'மாடுகளை மேய்ப்பதற்கு எங்களுக்கு முழு உரிமை உண்டு, நீங்கள் எதற்கு வேர்க்கடலை கேட்கிறீர்கள்' என்று நான் தகராறு செய்ததும் உண்டு. அதற்காக 1975 வாக்கில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, எனது படிப்பையே ஒழித்து விடுவேன் என்று ஒரு வனக்காவலர் என்னை மிரட்டியதும் நினைவில் உண்டு.
 
செங்கத்திலிருந்து சாத்தனூர் செல்லும் சாலையில் கல்தாம்பாடி கூட்டுச்சாலையில் இருந்து அரியாகுஞ்சூர் என்ற ஊருக்கு பல ஆண்டுகளாக காட்டுவழி ஒத்தையடிப் பாதைதான். கால மாற்றத்திற்கு ஏற்ப வண்டிகள் செல்வதற்காக, சாலை அமைக்க கிராம மக்கள் முயன்ற போது, அந்தச் சாலை வன எல்லைக்குள் வருவதாகச் சொல்லி தடை செய்தது வனத்துறை. இது நடந்தது வெள்ளைக்காரன் காலத்தில் அல்ல; ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்புநம்ம வெள்ளையம்மா ஆட்சிக் காலத்தில்தான்.
 
திருவண்ணாமலை நகரின் முன் பகுதியில் குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் கோயில் இருக்கும் இடம் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று கான்கிரீட் காடுகள்தான் உள்ளன. காட்டையும் காணோம். 'லைனை'யும் காணோம். 

பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க பதிவேடுகளைப் புரட்டுவதைப் போல, திருவண்ணாமலை வனத்தின் 'லைனை'  மீட்டெடுக்க வரலாற்றின் ஏடுகளைப் புரட்டினால் திருவண்ணாமலையில் பாதி காங்கிரீட் காடுகளை அகற்ற வேண்டி வரும்.
 
பொதுவாக, பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மலைகளில் மண் சரிவுகளாலும், தரைப் பகுதியில் மழை வெள்ளம் குடியிருப்புகளைச் சூழ்ந்து கொள்வதாலும்தான் இழப்புகள் ஏற்படுகின்றன. பெருக்கெடுக்கும் பெருவெள்ளம் ஆறுகளையும் ஏரிகளையும் குளங்களையும் வயல்வெளிகளையும்தான் நாடிச் செல்லும். இது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அவ்விடங்களை மனிதர்கள் ஆக்ரமித்துக் கொண்டு அங்கே குடியிருப்பதால் வெள்ளத்தில் தவிக்கிறோம் என்று உதவிக்கு அழைக்கிறார்கள். உண்மையில் வெள்ளம் இவர்களைச் சூழந்ததா இல்லை, இவர்கள் வெள்ளத்தைச் சூழ்ந்திருக்கிறார்களா?
 
வனங்களும் மலைகளும், விலங்குகளுக்கும் தாவரங்களுக்குமானது. காடுகள் செழித்து வளர வேண்டிய இடத்தில் நாம் காங்கிரீட் காடுகளை அமைத்துக் கொண்டோம். பெருமழை என்றால் மலைகள் ஊறி பாறைகள் உருண்டு மண் சரியத்தான் செய்யும். இதுவும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்றுதான். நிலச்சரிவு  மக்களை நோக்கி வந்ததா அல்லது மக்கள் நிலச்சரிவை நோக்கிச் சென்றார்களா என்றுதான் இங்கும் கேட்கத் தோன்றுகிறது.
 
வெள்ளைக்காரன் வந்தான். குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களைக் கண்டான். அவன் ஓய்வெடுக்க உச்சியில் மாளிகைகளை அமைத்தான். சூடு தணிக்கத் தேயிலைத் தோட்டங்களையும் அமைத்தான். அவன் போன பிறகு நாமும் ஓய்வெடுக்க மலைகளுக்கு ஓடுகிறோம். வாழ்வாதாரத்திற்காகப் பலரும் மலைகளில் அடைக்கலமானோம். அதன் விளைவை கடந்த ஆண்டு வயநாட்டில் பார்த்தோம்.
 
தற்போது திருவண்ணாமலை மலைச்சரிவில் சிக்கியவர்களின் வீடுகள்கூட மலை அடிவாரத்தில்தான் உள்ளன. இவர்கள் எதற்காக மலையில் வீடுகளைக் கட்டினார்கள்? இதற்கு எப்படி ஆட்சியாளர்கள் அனுமதி கொடுத்தார்கள்? ஒரு காலத்தில் கேட்பாரற்று பொட்டலாய்க் கிடந்தத் திருவண்ணாமலையை நோக்கி இன்று மக்கள் அலை அலையாச் செல்லக் காரணம் என்ன? திருவண்ணாமலை நகரம் மலைகளை நோக்கியும் விரிவடைவது ஏன்? மேலே என்ன தேயிலைத் தோட்டமா இருக்கு? தீபம் ஏற்ற ஒரு கொப்பரையைத் தவிர வேறென்ன இருக்கு? அருணாச்சலேஸ்வரர் கோயில் எப்படி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டது? அதற்குக் காரணமானவர்கள் யார்? மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற அனுமதி கொடுத்தவர்கள் யார்? வனங்களையும் மலைகளையும் ஆக்கிரமிப்பது சுற்றுச்சூழல் கேடுகளில் வராதா?
 
அடுத்து பார்ப்போம்
 
தொடரும்
 
ஊரான்

Sunday, December 1, 2024

நட! முதுமையில் முடிந்த மட்டும் நட!

மனித உடலின் 50% நரம்புகளும், 50% குருதிக் குழாய்களும் நமது கால்களில்தான் உள்ளன; கால்களின் தசை நார்கள் வலுவாக இருந்தால் இதயம்கூட பலமாய் இருக்கும்; முதுமையில் வரும் எலும்பு முறிவையும்மூளைச் சிதைவையும் தடுக்க வேண்டுமானால் அன்றாடம் நட; எறும்புகள் உன்னை மொய்க்காமல் இருக்க ஆண்டு முழுக்க நட; முதுமையில் நீ முடங்காமல் இருக்க முடிந்த மட்டும் நட என நேற்று இரவு தூங்குவதற்கு முன் படித்த வாட்ஸ்அப் செய்தி என்னை உருத்திக் கொண்டே இருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஒரு சிறு விபத்துக்குப் பிறகு, நான் நடப்பது முற்றிலுமாக நின்று போனது. கடந்த இரண்டு நாட்களாக இரவில் மூன்று நான்கு முறை சிறுநீர் கழிக்க எழுந்ததால், ஒரு வேளை எறும்புக்கு இறையாகிறோமோ என்ற அச்சம் ஒருபுறம்; 'சே! சே! இந்த வயதில் அதெல்லாம் இருக்காது, இது ஃபெஞ்சல் படவாவின் வேலையாய் இருக்கலாம்' என்று சமாதானம் அடைந்தாலும், நாளைமுதல் நடப்பது என முடிவுக்கு வந்தேன்.


'ஃபெஞ்சல் கடந்திருக்குமா?' என ஆறு மணிக்கு எழுந்து பார்த்தபோது தூறிக் கொண்டிருந்தது. கூகுகளைத் தட்டினேன். ஃபெஞ்சல் சென்னைக்கும் கோவைக்கும், விழுப்புரத்திற்கும் திருப்பதிக்கும் இடையில் வட்டமடித்து மையம் கொண்டிந்தது.

'புயலோ மழையோ, காகங்கள் கூட காலையில் முடங்குவதில்லையே? நமக்கென்ன குறைச்சல்' என எண்ணியவாறு கையில் குடையுடன் நடக்கத் தொடங்கினேன்.
 
குடியிருப்பு வளாகத்தின் இரண்டாவது பெருந்தெருவைக் கடந்து, வழக்கமான பாதையில் கிழக்கு நோக்கி நான்காவது குறுக்கில் நடக்கலானேன். தார்ச்சாலை முடிந்து, சிமெண்ட் சாலையில் நடந்த போது, சாக்கடை அடைப்பினால் மறிக்கப்பட்டு சாலையை நிறப்பி மழை நீர் ஓடிக்கொண்டிருந்ததால், அதே பாதையில் தொடர்ந்து நடப்பது உசிதம் அல்ல என வேறு பாதையில் நடையைத் திருப்பினேன்.
 
குடியிருப்புப் பகுதிக்குள், சாலை ஓர மரங்களின் சரகுகள் ஆங்காங்கே சாலையில் அப்பி இருந்ததைப் பார்த்த போது இது ஒன்றும் பெருமழை அல்ல என்பதைப் புரிய வைத்தது.
 
சென்னை செல்லும் சாலையின் இடப்புறம் பைபர் கேபிள் புதைக்கத் தோண்டப்பட்ட பள்ளங்களில் கலங்கலான மழைநீர் சேர்ந்திருந்தது. இரு பைபர் கேபிள் சுருள்கள் பதிக்கப்படுவதற்காகக் காத்திருந்தன.
 
கதிரவன் கூட கடும் புயலின் சீற்றம் கண்டு, சற்றே தயங்கி நின்றாலும், மதுப்பிரியர்களும், மாமிசப் பிரியர்களும் ஒரு போதும் மலைத்து நிற்பதில்லை.
 
டிவிஎஸ் மற்றும் ஹோண்டா ஷோரூம்களுக்கு எதிரில் ஞாயிறானால் முளைக்கும் இரு மீன்கடைகளில்  கட்லா, பாறை, இறால் என வகை வகையான மீன்கள், தொடர் 
தூறுலுக்கிடையிலும் பிரியமானவர்களுக்காகக் காத்துக் கிடந்தன.
 
அடுத்து, இடப்புறம் இருந்த ஆசிரமத்தில் தங்கிப் படிக்கும் சிறார் மாணவர்கள் சிலர், மண்வெட்டி பாண்டையும் கொண்டு வாசலில் தோண்டப்பட்ட பைபர் கேபிள் பள்ளங்களை மண் அள்ளிக் போட்டு சமன்படுத்திக் கொண்டிருந்தனர். படிக்க வந்த மாணவர்களை இப்படி வேலை செய்யச் சொல்லலாமா என்று கேள்வி மட்டும் என்னைக் குடைய தொடர்ந்து நடந்தேன்.

அடுத்த சில அடி தூரத்தில், வீட்டில் சேரும் குப்பைக் கழிவுகளை பாலிதின் பைகளில் அடைத்து வந்து, இருசக்கர வாகனத்தில் வரும் வேகத்தில் சாலை ஓரம் வீசிச் செல்வதால், வயிற்றைக் கழுவ அதில் ஏதும் இருக்குமா என நாய்கள் பிறாண்ட, தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சிகளில் ஆங்காங்கே சிலரின் உடலில் ஒட்டி இருக்கும் கந்தல்களைப் போல, மழை ஈரத்தில் நசித்துப் போய் சாலையின் ஓரங்களில் குப்பை கூளங்கள் அப்பிக்கொண்டு அருவெறுப்பாய் காட்சி அளித்தன.
 
சற்றே கடந்து, இடப்புறம் திரும்பி, மகளிர் கல்லூரி பின்புறமுள்ள அனந்தலை சாலையில் சென்ற போது, அடர் புதர்களுக்கு முன்னால் தோண்டப்பட்டு எப்பொழுதும் துர்நாற்றத்தைப் கிளப்பும் நகரக் கழிகள் புல்டோசரால் மண் கொண்டு மூடப்பட்டிருந்தன. அதற்குப் பின்னால் பராமரிப்பின்றி கிடக்கும் குளக்கரையையொட்டி, அது ஈமக்கிரியை நடக்கும் இடம் என்பதால் இடவசதிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருந்தனபுதர்கள் அப்புறப்படுத்தப் பட்டிருந்தாலும், கீழே பழுப்பு, மேலே பச்சை நிற நீண்ட கவுன் அணிந்த பருவ மங்கையைப்போல ஒற்றைப் பனை ஒன்று ஒய்யாரம் காட்டி நின்று கொண்டிருந்தது
 
அதையும் தாண்டிச் சென்றபோது, அவ்வப்பொழுது பெய்த மழையில் செழித்து வளர்ந்த புல் பூண்டுகள், அதன் ஆயுட்காலம் நெருங்குவதால் நேற்று பெய்த மழையின் பாரம் தாங்காமல் மண் நோக்கி வளைந்து நின்ற

வயோதிகம் வந்த பிறகு, என்னதான் ஊட்டம் கொடுத்தாலும், அவற்றிற்கு ஆயுள் குறைவுதான் என்பதை வளைந்து நின்ற புதர்கள் உணர்த்தின. புதர்களை உற்று நோக்கியபோது என்றோ சாலை ஓரம் வீசப்பட்ட குப்பை மூட்டைகள் புதர்களுக்கிடையில் ஒளிந்திருந்தன.
 
அதையும் கடந்து சென்ற போது எப்பொழுதும் நெல் விளையும் கழனிக் காடுகள் சில ஆண்டுகளாய் புல் முளைத்து, நேற்று பெய்த மழையின் நீரை உள்வாங்கி தளும்பி நின்றன.
 
நகர விரிவாக்கத்தில் வயல்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆங்காங்கே முளைத்திருக்கும் சில வீடுகளுக்குள் தளும்பும் நீர் நுழையாமல் இருக்க, அவசர கதியில் தோண்டப்பட்ட சிறு வாய்க்கால் வழியாக தளும்பும் மழை நீர் பள்ளத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது.

சாலையின் நடுவே மழை நீர் ஓடுவதால், நான் திரும்பிய அதே சாலையின் மறுமுனையில் நின்று பார்த்தேன். முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால் பின்னோக்கி பழையபடி நடக்கத் தொடங்கினேன். இந்தச் சாலையின் நடுவில்தான் சாக்கடை நீர் போக வழி இன்றி, ஒரு எளிய குடியானவனின் வீட்டைச் சுற்றி தேங்கி நின்றதால், அந்த வீட்டின் இருபக்கச் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து, வீடே சிதலமடைந்து கிடக்கிறது. 'யாரு எக்கேடு கெட்டுப் போனால் என்ன? யாருக்கு என்ன நட்டம் வந்தால் என்னமுடிந்தவரை சுருட்டுவோம்' என்பவர்கள் உள்ளூர் நிர்வாகத்தில் இருப்பதனால்தான் இப்படி ஊர்கள் பாழ்பட்டு நாறிக் கிடக்கின்றன.

வீடு திரும்பி, குடையை மடக்கி ஷீவைக் கழற்றி பெஞ்ச்சில் உட்கார்ந்த போது உடல் வேர்த்திருந்தது. வியர்வை என்ற நண்பன் துணைக்கு இருக்கும் போது எறும்பென்ன, எவரால்தான் நம்மை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த வேலைக்கு ஆயத்தமானேன்! 

ஊரான்