Tuesday, April 28, 2015

டொக்குச் சாலைகளும் குவார்ட்டர் கடைகளும்!

பேருந்துகள், லாரிகள், வாடகைக் கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், சிறு லோடு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர்கள், மெக்கானிக் ஷாப் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இருசக்கர வாகன உரிமையாளர்கள் என வாகனம் தொடர்புடையவர்கள் அனைவரும் ஏப்ரல் 30 அன்று மோடி அரசுக்கு எதிராக அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
வாகனப் பதிவு, வாகனங்களுக்கான தகுதிச் சான்று (எப்.சி), வாகனங்களுக்கான சாலை வரி வசூல், ஓட்டுநர் உரிமம், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வாகனம் தொடர்பான செயல்பாடுகள் இதுவரை அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
மாநில அரசுகளிடமிருக்கும் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதோடு தனியார் முதலாளிகள் இத்துறையில் நுழைவதற்கு வழிவகை செய்கிற நோக்கத்தோடு “சாலை பாதுகாப்பு மசோதா 2014” என்கிற சட்ட மசோதா ஒன்றை கொண்டு வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் என்ன நடக்கும்?
ஓட்டுநர் உரிமம் பெற எழுத்துத் தேர்வு. தேறினால் மட்டுமே ஓராண்டு கழித்து உரிமம் வழங்கப்படும்.
வாகனத் தயாரிப்பாளர்களே - அதாவது கார்பரேட் முதலாளிகளே - இனி வாகனப் பதிவை மேற்கொள்வார்கள்.

இருபது கோடி ரூபாயும் 15 ஏக்கர் நிலமும் வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்த முடியும். இவ்வளவு முதலீடு போடுபவன் பயிற்சிக் கட்டணம் எவ்வளவு வாங்குவான்? வண்டி ஓட்டியாவது பிழைக்கலாம் என எண்ணுவோருக்கு இனி ஆப்புதான்.

ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற தற்போது ஆகும் செலவு சுமார் ரூ.4000/= இனி அது 25000/= ரூபாயாக உயரும்.
ஒரு ஆட்டோவை பழுது பார்த்து தகுதிச் சான்று பெற தற்போது ஆகும் செலவு சுமார் ரூ.10000/= இனி அது 30000/= ரூபாயாக உயரும்.
வாகனங்களை இனி சாலை ஓர மெக்கானிக் கடைகளில் பழுது பார்த்தால் அது செல்லாது. அங்கீகரிக்கப்பட்ட வாகன உற்பத்தியாளர்களின் மெக்கானிக் ஷாப்புகளில் பழுது பார்த்தால் மட்டுமே வாகனங்களுக்கு சான்றளிக்கப்படும். வெளிப்படையாகச் சொன்னால் கார்பரேட் கம்பெனிகள் சான்றளித்தால் மட்டுமே உங்கள் வண்டி ஓடும். இல்லை என்றால் பேரீச்சம் பழம்தான்.
சிறு சிறு வாகன விதி மீறலுக்கான தண்டத் தொகை இனி பல மடங்கு உயரும்
ஒவ்வொறு விதி மீறலும் புள்ளி அடைப்படையில் கணக்கிடப்பட்டு 12 புள்ளிகள் பெறுபவர் ஓராண்டு சிறைக்குச் செல்ல வேண்டும். மீண்டும் 12 புள்ளிகள் பெற்றால் 5 ஆண்டு சிறை மட்டுமல்ல அவரது ஓட்டுநர் உரிமமும் காலியாகிவிடும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியே வந்தால் கார்பரேட் கம்பெனிகளில் வண்டி தொடைக்கலாம்.
ஆட்டோக்கள் மட்டுமல்ல இனி எந்த வாகனமும் இதிலிருந்து தப்ப முடியாது.
இரு சக்கர வாகனங்களுக்கும் இனி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச் சான்று (எப்.சி).
இப்படி இன்னும் பலப்பல அம்சங்கள் “சாலை பாதுகாப்பு மசோதா 2014” ல். எல்லாமே கார்பரேட்டுகள் கொழுக்கவே!
மசோதாவின் அம்சங்கள் எல்லாம் நல்லாத்தானே இருக்கு. இது நடைமுறைக்கு வந்தால் விபத்துக்கள் நடக்காது என நீங்கள் நினைக்கலாம். டொக்குச் சாலைகளும் குவார்ட்டர் கடைகளும் இருக்கும் வரை உங்கள் உயிருக்கு மட்டுமல்ல ஓட்டுநர் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. 
கார்பரேட்டுகள் இதை எல்லாம் சேவை நோக்கிலா செய்வான்? அவனுக்குத் தேவை பணம். அவன் பிடுங்கும் ஒவ்வொரு ரூபாயின் சுமையும் இறுதியில் பொது மக்களின் முதுகில்தான் ஏற்றப்படும்.

தொடர்புடைய பதிவு:

சாலை பயங்கரவாதம்! (Road Terrorism)

Saturday, April 25, 2015

நாம் நம்மைப் பற்றி எப்போது பேசப் போகிறோம்?

கடந்த பத்து மாதங்களாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை நாம் எதைப் பற்றி அதிமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்?

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பற்றிப் பேசுகிறோமா? 

நோக்கியா போன்ற ஆலைகள் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார்களே! அது பற்றி பேசுகிறோமா?

ஆலை விபத்துகளால் ஆன்றாடம் பலியாகும் தொழிலாளர்கள் பற்றி பேசுகிறோமா?

படித்த இளைஞர்கள் வேலை தேடி அலையும் அவலம் பற்றி பேசுகிறோமா?

பெருகி வரும் கல்விக் கட்டணங்கள் பற்றி பேசுகிறோமா?

அதிகரித்து வரும் நோய்கள் பற்றியோ அதற்கான மருத்துவச் வசதிகள் மற்றும் செலவு குறித்தோ பேசுகிறோமா?

ஒருபக்கம் கடும் வறட்சி! குடிநீருக்கே மக்கள் அல்லல்படும் துயரமான சூழலில். காலிக் குடங்களுடன் ஆங்காங்கே தாய்மார்களின் போராட்டம் நடக்கிறதே! அதைப்பற்றி பேசுகிறோமா?

பருவம் தவறி பெய்த மழையால் வடஇந்திய மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து பேசுகிறோமா?

பெரும் கடன் சுமையில் சிக்கி மீளமுடியாமல் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி பேசுகிறோமா?

பருவ காலத்தில்கூட மழை பொய்த்து விடுகிறது. ஆனால் தமிழக வீதிகளில் எப்பொழுதும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் சாராயம் பற்றியோ, இந்தச் சாராயத்தால் அன்றாடம் தாய்மார்களின் தாலி அறுக்கப்படுவது பற்றியோ பேசுகிறோமா?

வாழ்வாதாரத்திக்காகப் போராடும் மக்கள் மீது ஏவப்படும் காவல்துறையின் அடக்குமுறைகள் பற்றி பேசுகிறோமா? 

இப்படி மக்கள் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகள் பற்றி பேசாமல்..........

கோட்சே பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்

பகவத் கீதையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்

சமஸ்கிருதம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்

மாட்டிறைச்சி பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்
.
கிருஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

மசூதிகள் ஆன்மீகத் தலங்கள் இல்லை என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்துப் பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

தாலி பற்றியும் பூணூல் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மக்களின் நலன் புறம்தள்ளப்பட்டு பார்ப்பனர்களின் நலனை மட்டும் முன்னெடுக்கும் தற்போதைய இந்துத்துவவாதிகளின் ஆட்சி தொடருகிறவரை நாம் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்போம்!

Tuesday, April 21, 2015

அதானிக்கும் கும்பிடு! அகோரிக்கும் கும்பிடு!

அங்கே அதானிக்கு கும்பிடு போட்டவர் கோட்டையைப் பிடித்தார். 

இங்கே அகோரிக்கு கும்பிடு போடுபவர் எதைப் பிடிக்கப் போகிறாரோ!



பேஷ்! பேஷ்!! நன்னாயிருக்கு இந்தியாவின் பெருமையும் பாரம்பரியமும்!

Saturday, April 18, 2015

அடுத்த ஒலிம்பிக்ஸில் உசேன் போல்ட்டுக்கு ஆப்பு!

ஒரு பக்கம் 10 இலட்ச ரூபாயில் கோட்டு அணிந்து இந்தியாவின் செல்வச் செழிப்பை உலகெங்கும் பறைசாற்றும் இந்தியர்களின் வழிகாட்டி. 
மறுபக்கம் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் “இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்வியல் முறை” என நம் பாரதப் பெருமையை நிலைநாட்டும் இந்துக்களின் வழிகாட்டிகள். 


பெண்கள் கண்ணிமாக உடையணிய வேண்டும்  என ஒரு பக்கம் உபதேசம்.
கண்ணியமாக உடையணிந்துள்ள பெண்கள் முன்னிலையில் அம்மணமாய் அருள்பாலிக்கும் ஆன்மீக ஆண்கள் மறுபக்கம். 


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த முறை கோப்பை கிடைக்காவிட்டால் என்ன? அடுத்த ஒலிம்பிக்ஸில் ”உசேன் போல்ட்டுக்கு ஆப்பு! அம்மண ஓட்டத்தில் நமக்கே தங்கம்!” என ஆர்ப்பரிக்கும் அகோரிகள்.



இதுதான் புனிதம் என்பதோ!

Saturday, April 11, 2015

உலகம் சுற்றும் வாலிபனும் பண்டிட் தேசமும்!

·   பிரான்சிடமிருந்து 36 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்.

குடிநீருக்கே மக்கள் அல்லாடும் நிலையில் மக்கள் போராடினால் அவர்கள் மீது குண்டு போடவா இந்த போர் விமானங்கள்?

·10 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது.

பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் மீன்வளத்தைக் கொள்ளையடிக்க பச்சைக் கொடி.

·  மின்சாரத்தை மிச்சப்படுத்த பௌர்ணமி அன்று மின்விளக்குகளை அனைத்துவிட வேண்டும். பெட்ரோலை மிச்சப்படுத் மாதத்தில் ஒரு நாள் சைக்கிள் ஓட்ட வேண்டும்.

நாங்கள் மிச்சப்படுத்தினால்தானே நீங்கள் உலகம் சுற்றும் வாலிபனாய் 317 கோடி ரூபாயில் உல்லாசமாய் உலா வர முடியும்!

·         நிலம் கையகச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நிலமில்லாத 30 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கேட்கிறவன் கேனையன் என்றால் கேப்பையில்கூட நெய் வடியத்தானே செய்யும்!

·  ஏழை மக்களுக்கு வீட்டு வசதிகளை வழங்கும் “இந்திரா ஆவாஸ் யோஜனா” திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி 54 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைத்துள்ளது - பீகார் அரசு குற்றச்சாட்டு.

சுவடே இல்லாமல் காங்கிரசின் அடையாளங்களைத் துடைக்கும் வேலைகளில் இதுவும் ஒன்றோ!

·    கான்வென்ட் பள்ளிகள் இந்து மதக்கலாச்சாரத்தை பயிற்றுவிப்பதில்லை; ஆகையால் அந்தப் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை பெற்றோர் அனுப்பக் கூடாது. – கோவா அமைச்சர்.

 கான்வென்ட்டுக்கு அனுப்பாதே! மாடு மேய்க்க காட்டுக்கு அனுப்பு! அப்பதான் கோமிய உற்பத்தி அதிகரிக்கும்! குடிக்க, கொப்பளிக்க, கக்கூஸ் கழுவ என சகல தேவைகளுக்குமான கோமிய உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் இந்து கலாச்சாரம் தழைத்தோங்க வழி வகை செய்ய முடியும்!

·     தமிழ் மொழியின் மூலம்தான் இறைவனைப் புரிந்து கொள்ள முடியும். தமிழ் இல்லை என்றால் இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது. நம்ப மட்டுமே முடியும். – பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி.

தமிழே கூடாது என சிதம்பரம் உள்ளிட்ட கார்பரேட் கோவில்களில் உங்க ஆளு போர்க் கொடி உயர்த்துகிறானே! அங்கே சென்றால் கடவுளை உணர முடியாது என ஒப்புக் கொள்ளலாமா?

·         பா.ஜ.க ஆட்சியில் குஜராத்தில் மதக் கலவரங்கள் குறைந்தள்ளன.

கலவரக்காரன் குஜராத்திலிருந்து வெளியெறிய பிறகு மதக் கலவரங்கள் குறையத்தானே செய்யும்!

·         அம்பானிக்கும் சாமான்யனுக்கும் ஒரே அணுகுமுறை.

அடடா! இதுவல்லவோ சமதர்ம சமுதாயம். கம்யூனிஸ்டுகளெல்லாம் கட்சியை கலைத்து விட்டு காவியில் கரைந்துவிடலாம் போலிருக்கே!

·         காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனிக் குடியிருப்பு.

சப்தமில்லாமல் இந்துக்களை (=பார்ப்பனர்கள்) மட்டுமே கொண்ட பண்டிட் தேசம் உதயமாகிறதோ!

·   கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த தொடக்கக் கல்வி - யுனெஸ்கோ பாராட்டு.

கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டை குட்டிச்சுவராக்கியது காங்கிரசு என கூப்பாடு போட்டு விட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று வெட்கமில்லாமல் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கான ஆய்வறிக்கையை வாங்கும் போது பல்லிளிக்கிறார்களே! 

·   சுப்பிரமணியன் சுவாமி "விராட் ஹிந்துஸ்தான் சங்கம்' என்னும் புதிய ஹிந்துத்துவ அமைப்பை, தொடங்கினார்.இந்த அமைப்பானது அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட ஹிந்துத்துவக் கொள்கைகளை, இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பாடுபடும்.

நாட்டில் இனி கலவரங்களுக்கு பஞ்சமிருக்காது

Friday, April 10, 2015

திருப்பதி படுகொலை: காட்டுமிராண்டிகளின் மாபாதகச் செயல்!

திருப்பதி படுகொலை: காட்டுமிராண்டிகளின் கொடூரத் தாக்குதல் காட்சிகள்!


Thursday, April 9, 2015

இந்தியா ஜனநாயக நாடா? வெட்கக் கேடு!









 

சொல்லிக் கொள்ளப்படும் எத்தனையோ சட்டங்கள், வழிகாட்டும் நெறிமுறைகள் இவை எதையும் காவல் துறையும் இராணுவமும் மயிரளவுக்குக்கூட மதிப்பதில்லை என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் செம்மரம் வெட்டியதாக திருப்பதி அருகில் தமிழகத்தைச் சேர்ந்த இருபது பேர் படுகொலை செய்யப்பட்ட கோர நிகழ்வு.

இந்தியா ஜனநாயக நாடா? வெட்கக் கேடு!

Monday, April 6, 2015

அதளபாதாளமும் மன்மத ஆண்டும்!

14.04.2015 அன்று உத்திராயண புண்ணிய காலத்தில் வசந்த ருது, செவ்வாயக்கிழமை,, கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி திதி அவிட்ட நட்சத்திரம் 2 ம் பாதம், மகர ராசி, சுபநாம யோகம், பத்திரை கரணம், சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், நண்பகல் 01.50 மணிக்கு கடக லக்னத்தில் கும்ப நவாம்சத்தில் பிறக்கிறதாம் தமிழ் ஆண்டுகளில் இருபத்தொன்பதாக வரும் மன்மத ஆண்டு.

“வெளி நாடுகளில் குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் நமது நாட்டின் கௌரவம் உச்ச கட்டத்தை எட்டிவிடும். இரும்பு, தாதுப் பொருட்கள் நிலக்கரி சிமெண்ட் போன்ற தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். நீதித்துறையில் உன்னதமான மாற்றங்கள் நிகழும். ஆணவத்தால் தலைக்கனம் பிடித்திருந்தவர்களும் பகல் வேஷம் போடுபவர்களும் அதளபாதாளதிற்குத் தள்ளப்படுவார்கள்” என சென்னையைச் சேர்ந்த சோதிடர் கே.சி.எஸ். ஐயர் என்பவர் ஆண்டுப்பலன் கணித்துள்ளார். (வெள்ளிமணி / தினமணி / ஏப்ரல் 03 2015)

இதை ஒரு சோதிடனின் கணிப்பாக மட்டும் ஒதுக்கிவிட முடியாது. இது பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகர் என்ற முகமூடியோடு அறிமுகமாகி இன்று பா.ஜ.க பிரமுகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராமசுப்பிரமணியன் என்பவரின் கூற்றும் கே.சி.எஸ். ஐயரின் கணிப்பும் வேறு வேறு அல்ல.

பா.ஜ.க வினர் சொல்வது கருத்து! சோதிடன் சொல்வது கணிப்பு.!மொத்தத்தில் இருவரும் சொல்வது பா.ஜ.க ஆட்சியை மனதில் வைத்துதான்.

ஒரு பத்து லட்ச ரூபாய் கோட்டாலேயே ஜோட்டால அடிச்ச மாதிரி மேற்கத்திய நாடுகளில் நமது நாட்டின் கௌரவத்தை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்கள். புத்தாண்டு பிறப்பதற்குள்ளாகவே முதல் பலன் பலித்துவிட்டது.

நிரக்கரி சுரங்க ஒதுக்கீடு மற்றும் கனிம வளங்களை கொள்ளையடிக்க அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் மலைகளையும் காடுகளையும் ஏற்கனவே ஏலம் போட்டுவிட்டதால் இரும்பு, தாதுப் பொருட்கள் நிலக்கரி சிமெண்ட் போன்ற தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்பதையும் நம்பலாம். இதனால் ஆதாயம் அடையப் போவது சாமான்யர்கள் அல்ல; அதானிகளும் அம்பானிகளும் என்பதும் உண்மைதான்.

தொழிலாளர் சட்டங்கள் முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் வரை பல்வேறு சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதால் பாதிக்கப்படும் சாமான்யர்கள் நீதி மன்றமே செல்ல முடியாது என்பதால் நீதித்துறையில் உன்னதமான மாற்றங்கள் நிகழும் என்பதையும் நம்பலாம். ஒரு வேளை அடுத்த ஓராண்டுக்குள் இடஒதுக்கீட்டுக்கு ஆப்பு அடிக்கப்பட்டாலும் படலாம். இதை மனதில் வைத்துக் கொண்டுகூட பலன் சொல்லியிருக்கலாம்.

கடைசியாக “ஆணவத்தால் தலைக்கணம் பிடித்திருந்தவர்களும், பகல் வேஷம் போடுபவர்களும் அதளபாதாளதிற்குத் தள்ளப்படுவார்கள்”  என்பது மட்டும் வௌங்கல.

இங்கே ஆணவத்தால் தலைக்கணம் பிடித்தவர்கள் என்று யாரைச் சொல்கிறார்? பகல் வேஷம் போடுபவர்கள் யார்?

இந்த மன்மத ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதால் ஆணவத்தால் தலைக்கனம் பிடித்தவர்கள் - பகல் வேஷம் போடுபவர்கள் அதளபாதாளத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றால் யாரோ சிலருடைய தேர்தல் தோல்வியை மனதில் வைத்துதான் ஐயர் இப்படி சொல்கிறார் என்று புரிந்து கொள்வதா? அப்படியானால் அதளபாதாளத்திற்கு தள்ளப்படப் போவது யார்?

நமக்குத் தெரிந்து ஆணவமும் தலைக்கனமும் பிடித்தவர் என்று பார்த்தால் மக்களின் முதல்வர்தான் இத்தகைய தகுதிகளோடு இருப்பவர். அவர் அதளபாதாளத்திற்குச் செல்ல ஐயர் ஒரு போதும் விரும்பமாட்டார். அப்படியானால் மாறன் சகோதர்களைச் சொல்கிறாரா? பகல் வேஷம் போடுபவர்கள் என்று கலைஞரை மனதில் வைத்து சொல்கிறாரா? இந்த அதளபாதாளத்திற்கு தள்ளப்படுபவர்களை மட்டும் கொஞ்சம் தெளிவுபடச் சொல்லியிருந்தால் வௌங்கியிருக்கும்!

Saturday, April 4, 2015

ஆதார் அட்டையும் மாட்டுக் கோமியமும்!

“மாட்டிறைச்சிக்கான தடையை இந்தியா முழுதும் அமுல்படுத்த மாநில அரசுகளுக்கு மிரட்டல். இனி மான்கறி கிடைத்தாலும் கிடைக்கலாம்; ஆனால் மாட்டுக்கறிக்கு வாய்ப்பே கிடையாது. எச்சரிக்கை: மாட்டுக்கு வயதாகி மண்டையைப் போட்டாலோ அல்லது நோயினால் மண்டையைப் போட்டாலோ மறவாமல் ‘டெத் சர்டிபிகேட்டை’ வாங்க மறவாதீர்கள். என்ன செய்ய? ‘டெத் சர்டிபிகேட்டுக்கு’ கொஞ்சம் செலவாகும்தான். இல்லை என்றால் கம்பி எண்ண வேண்டி வரும்!”

இப்படி எழுதி (http://hooraan.blogspot.in/2015/03/3.html) பத்து நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள்……

மாடுகளின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களையும், அவை தங்களுக்குச் சொந்தமானவை என்பதற்கான உத்தரவாதக் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகர காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இதில் கூடுதலான தகவல் என்னவென்றால் புகைப்படம் எடுக்கும் போது மாட்டின் உரிமையாளரும் உடன் இருக்க வேண்டுமாம்.

பசுவதைத் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இது அவசியமாம். இல்லை என்றால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாதாம்; வதந்திகளைத் தடுக்க முடியாதாம்.

இனி மாடுகளுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்ற அறிவிப்பை விரைவில் எதிர்பார்ப்போம்!

ஆதார் அட்டை பெறுவதற்காக தாசில்தார் அலுவலகங்களில் மாடுகளுக்கான தனி கவுன்ட்டர் திறக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் ஆசாத் நகரில் மாட்டிறைச்சி விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 மாட்டுத் தலைகளும் 150 கிலோ மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் ரூ.10000 அபராதமும் நிச்சயம்.

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் பன்சாரே 82 வயதான ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர். 2015 பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரது வீட்டின் அருகாமையில் வைத்து சுடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 20-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்தச் செய்தியும் இல்லை. ஆனால் மாட்டிறைச்சிக்கோ உடனடி நடவடிக்கை.

மேற்கு வங்கத்தில் 72 வயது கன்யாஸ்திரி பாலியல் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் மாநில அரசின் சி.பி.ஐ விசாரணை கோரிக்கையை நிராகரிக்கும் மத்திய அரசு இனி மாட்டிறைச்சி வழக்குகளில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மத்திய அரசு அலுவலகங்களில் மனித மூத்திரத்தைக் கழுவ மாட்டு மூத்திரம் கிடைக்காமல் போய்விடுமோ எனக் கவலைப்படுபவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

இந்துஸ்தான் பேப்பர் கார்பரேசன், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், எச்.எம்.டி வாட்ச்ஸ், திரிவேணி ஸ்ட்ரக்சர்ஸ், துங்கபத்ரா ஸ்டீல் கார்பரேசன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைந்துவிட்டதாம். ஊழியர்களுக்கான ஊதியம் மட்டும் ஆண்டுதோறும் 10000 கோடி ரூபாய் செலவாகிறதாம். எனவே ஊதியத்தை மிச்சப்படுத்த இந்த ஆலைகளை மூடப்போவதாக மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சர் சித்தேஷ்வர் அறிவித்துள்ளார்.

மாட்டுக்கு பல்லக்காம். மாநிடனுக்கு பாடையாம். இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

தூத்துக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே சுங்கம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு சுங்கம் வசூலிப்பது நிறுத்தப்படுவதாக சுற்றறிக்கை அனுப்பி அஜால் குஜால் செய்துள்ளது மோடி அரசு.

“ராஜீவ்காந்தி, நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தால், அந்தப் பெண் வெள்ளை தோலுடையவராக இருந்திருக்காவிட்டால், காந்கிரஸ் கட்சி அவரது தலைமையை ஏற்றுக் கொண்டிருக்குமா?”

இவ்வாறு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் கிரிராஜ்சிங் பேட்டி கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டது, அதன் பிறகு மன்னிப்பு கேட்டதை வெறுமனே வாய்க்கொழுப்பு என ஒதுக்கிவிட முடியாது. ஆரிய நிறவெறியர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?.

தொடர்புடைய பதிவுகள்: