பூவிருந்தவல்லிக்கு திடீரென இன்று ஒரு
குறும் பயணம். பேருந்து நிலையத்தில் கால் பதித்த போது
சென்ற ஆண்டு ஜனவரியை நினைவு படுத்தியது. ஆங்காங்கே தேங்கி நின்ற மழை நீரும், கோமாதாக்களின்
கழிவுகளும் எச்சரிக்கை மணி எழுப்ப, சேர்ந்திருந்த சிறுநீரை இறக்கிவிட்டு, நான் சந்திக்க
வேண்டியவர் வர தாமதமாகும் என்றதனால் சற்றே இளைப்பாற அவர் சொன்ன இடம் சென்றேன். அவ்விடம் பேருந்துகள் நிற்குமிடம் மட்டுமல்ல வாழ வழியற்றோரின் வாசஸ்தலம்
என்பதையும் புரிந்து கோண்டேன்.
பூவிருந்தவல்லியிலே கோரைப் புல்லும் தாராக்கட்டைகளுமா
முளைத்திருக்கு, கோமாதாக்கள் நற்சாணம் தள்ள? நாம் வீசியெறியும் மிச்சங்களும் கூழ் படிந்த காகிதங்களும்
அவைகளின் அன்றாட உணவாய்
இருக்கும் போது மனிதக் கழிவை விட
மட்டமாய்த்தானே வெளியே தள்ளும், கழிசலாய். துப்புரவுப் பணியாளர்களுக்கு இது பெரும் சுமையன்றோ? கோமாதாக்களை
போற்றுவோர் ஒரு நாள் 'டூட்டி' பார்த்தால் தெரியும் வேதனை என்னவென்று?
மணி பத்தைத் தொட்டது. பசி வயிற்றைக் கிள்ள, பேருந்துகள் வெளியே வரும் 'கார்னர்' கடையில் இட்டிலி நான்கு, வடை ஒன்றை வடகறியோடு உள்ளே இறக்கினேன். எவ்வளவு
என்றேன்? கம்மிதான், இருபத்தைந்து என்றனர். ஏழைகள் நுழையும் இடமல்லவா? அதற்கு மேல் என்றால் அங்கெல்லாம் யார்தான் நுழைவர்?
பக்கத்துக் கடையின் தேநீர்
தொண்டைக்குள் இதமாய் இறங்க, ‘டைம்ஸ் ஆஃப் இன்டியாவை’ லேசாய்ப் புரட்டினேன். "What caused downpour?" என வினா எழுப்பி அது லா நினோவின் நர்த்தனம் என்றது.
லா நினோவும், எல் நினோவும் வழக்கமானவைதான், 'டவுன் போர்' ஒன்றும் அதிசயமல்லவே? "What caused stagnation?" எனத் தலைப்பிட்டிருந்தால், வடிகால் இன்றி சிறு மழைக்கே சென்னை மிதக்கும் அவலம் ஒருவேளை உரைப்பவர்களுக்கு உரைத்திருக்குமோ என எண்ணியவாறு தாள்களைப் புரட்டினேன்.
இரண்டாம் உலகப் போரின் இரண்டாயிரம்
தியாகிகளுக்கு இரண்டு ஆண்டுகளாய் மோடியின் மெத்தனத்தால் ஓய்வூதியம்
கிடைக்கப் பெறாமல் கடந்த ஆண்டில் மட்டும் 176 பேர் மரணித்த செய்தி கண்டு, மாடுகளுக்கான அரசில் இது
ஒன்றும் அதிசயமல்லவே என மேலும்
புரட்டினேன்.
பசுவை வதைத்தால் ஏழு ஆண்டு வரை சிறை எனும்
காவிகளின் கட்டளைக்கு கர்நாடகக் கவர்னர் கண்ணசைத்தச் சேதியைக் கண்டு இங்கே
கோமாதாக் கழிசலில் கால் வைத்தால் பரலோகம் நிச்சயமாச்சே? இதைத் தடுக்க இங்கு சட்டம் ஏதும் உணடோ? என எண்ணியவாறு வந்த வேலை முடிந்து ஊர் திரும்பினேன்.
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்