படிப்பறிவு வளர்ந்துள்ளது. வசதிகள் அதிகரித்துள்ளது. பல ஊர்களையும் நாடுகளையும் சுற்றி வரும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நடை, உடை, பாவனை, நாகரிகம் இப்படி எத்தனையோ மாற்றங்கள்.
எட்டு முழ வேட்டியையும் பதினாறு கஜம் புடவையையும் பெட்டிக்குள் முடக்கியாச்சு. பாரம்பரியம் என்று சொல்லி அவற்றோடு யாரும் மல்லுக்கட்டத் தயாரில்லை. வசதிக்கேற்ப மாறிக்கொள்வதில் தவறேதும் இல்லைதான்.
ஆனால் ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள்.
ஒன்றைச் செய்யவில்லை என்றால் எதுவும் கெடுதல் வராது என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். இப்படி கைவிடப்பட்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏராளம்.
ஒன்றைச் செய்யவில்லை எனில் எங்கே கெடுதல் வந்து விடுமோ என்ற அச்சத்தில், அது அவசியமா இல்லையா என்ற பரிசீலனைக்கேச் செல்லாமல் பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை கைவிட அஞ்சுகிறார்கள். இவை அவசியமில்லை என்ற புரிதல் இருந்தாலும் பிறர் என்ன சொல்வார்களோ என்று சமூகத்திற்கு அஞ்சி சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கிறார்கள்.
மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கான காரணம் தெரியாமலும், காரணம் தெரிந்தாலும் அவற்றை எதிர் கொள்கிற துணிவின்மையாலும்தான் பல்வேறு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இன்ப துன்பங்களுக்கான காரணங்களை சடங்குகள் சம்பிரதாயங்களில் தேடுகின்றனர். இன்றைய உலகமயச் சூழலில் சிக்கல்கள் மேலும் அதிகரித்து வருவதால் பல புதிய சடங்குகளும் சம்பிரதாயங்களும் தோன்றியவண்ணம் உள்ளன.
எனவே, தான் செய்வது அவசியமானதுதானா என்பதை ஆய்வுக்குளாக்கி, அது தனக்குத் தேவைதானா என்பதை பரிசீலித்தால் சடங்குகளும் சம்பிரதாயங்களும் காணாமல் போகும். அவசியனானவை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றை கடைபிடிப்பது தவறா எனக் கேள்வி கேட்கலாம். ஒன்றை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமா? உண்மையை, அவசியத்தை உணர்ந்து கொண்டால் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இடமேது?
மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்புவரை உடன் தொடர்வது உறவுகளா அல்லது சடங்குகள் சப்பிரதாயங்களா? சடங்குகள் சப்பிரதாயங்களுக்காக உறவுகளையே உதறித்தள்ளும் பலரையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக திருமணத்தையொட்டி கடைபிடிக்கப்படும் சடங்குகள் சப்பிரதாயங்களே மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
இவற்றைப் பற்றி அலசலாமா?
தொடரும்.....
ஊரான்.