சங்க காலம், சனாதன காலம் தொடங்கி அதன் பிறகு மன்னர் ஆட்சி, அந்நியர் ஆட்சி எனத் தொடர்ந்து, இன்றைய மக்களாட்சிக் காலகட்டம் வரை பல்வேறு புலவர்களையும், மன்னர்களையும், தலைவர்களையும் நாம் நினைவு கூர்ந்து வருகிறோம். அவ்வாறு நாம் நினைவு கூறும் போது, அவர்களுடைய நேர்மறை மற்றும் எதிர்மறை உள்ளிட்ட இரண்டு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இன்றைய காலகட்டத்திற்கு எது தேவையோ அதை மக்களிடையே உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை நினைவு கூர்வதில் ஏதேனும் பொருள் இருக்க முடியும்.
மாறாக, தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்குதல் என்கிற அளவுக்கு மட்டும் நிறுத்திக் கொண்டால் அவர்களுடைய கருத்துக்கள் எதுவும் மக்களிடையே போய்ச் சேராது; மாறாக அது ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாகவே கடந்து போகும்.
*****
அனைத்து மதத்தினர், அனைத்துச் சாதியினர், அனைத்துக் கட்சியினராலும் பெருந்தலைவர் என்று போற்றப்படும் முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சர் திரு.கு.காமராசர் அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் எங்கும் பல்வேறு கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்ததோடு, இந்திய அரசியலை நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஆளுமையாக காமராசர் அவர்கள் இருந்ததனால் அவரை காங்கிரஸ் கட்சியினர் கூடுதல் மரியாதையோடு நினைவு கூறுகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளாக, தமிழகத்தில் சாதிய அரசியல் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிய பிறகு அனைவருக்குமான தலைவர்கள் எல்லாம் தங்களுடைய சாதிக்கான தலைவர்களாக சுருக்கப்பட்டு வருகின்றனர். அப்படித்தான் காமராசரையும் நாடாராக சுருக்கி விட்டார்கள். இதை சாதிய அரசியலின் உச்சம் என்றுகூட சொல்லலாம்.
*****
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசாபேட்டை பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழா நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இசைச்செல்வர் சீனி சம்பத் அவர்களின் பாடல்களோடு தொடங்கிய நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு. முனிரத்தினம் அவர்கள் வந்த பிறகு, அவரும் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் அவர்களும் சிறிது நேரம் உரையாற்ற, அதன் பிறகு பள்ளி சிறுவர்களுக்கு நோட்டு பேனா வழங்கி, அன்னதானம் வழங்கி நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.
வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மட்டும் காமராசரின் சாதனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உள்ளிட்ட சனாதன சக்திகள் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய அரசியல் சூழலில், காமராசரைக் கொண்டு சனாதன சக்திகளை சம்மட்டியால் அடிக்கும் வகையில் காமராசரின் நேர்மறை கருத்துக்களை மக்களிடையே பதிவு செய்யும் போதுதான் அது காமராசருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்.
மூணு கதர் வேட்டிச் சட்டைகள் மற்றும் 150 ரூபாய் சொச்சப் பணம்; இதுதான் காமராசர் இறந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்து. காசு பணம் என்று கோடிகளில் புரளும் இன்றைய அரசியல்வாதிகளை ஒப்பிடுகையில் காமராசர் உண்மையிலேயே ஒரு ஏழைப் பங்காளன்தான்; மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பெரும் தொழிலதிபராக இருப்பவர்களை வாழும் காமராசர் என்று வாய்கூசாமல் மேடையில் புகழும்போது அது காமராசரையே இழிவுபடுத்துவதாக அமைந்துவிடுகிறது.
*****
மகாரத்தனா ஆலைகளில் ஒன்றான BHEL பாய்லர் ஆலை காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் திருச்சியில் தொடங்கப்பட்டது. தவிர, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் (NLC), சென்னை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஊட்டியில் இந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் ஆலை என அரசுத் துறை ஆலைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட எண்ணற்ற தமிழ் நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்தது.
1917 லெனின் தலைமையில் ரஷ்ய நாட்டில் ஏற்பட்ட சோஷலிச புரட்சி, அதைத் தொடர்ந்து லெனின் ஆட்சிக் காலத்திலும், ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலும் ஏற்படுத்தப்பட்ட பொதுத்துறைகளினால் அபார வளர்ச்சி கண்ட ருசிய நாட்டின் கொள்கைகளைத்தான் இந்தியாவிலே நேருவும் கடைபிடித்தார். அதன் தாக்கத்தினால்தான் இந்தியாவில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டன.
12 மகாரத்னா, 12 நவரத்னா, 12 மினிரத்னா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டு மிக வெற்றிகரமாக செயல்பட்டு வந்தன. உலகமயம் தாராளமயம் தனியார் மையம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் 1990 களின் தொடக்கத்தில் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கிய காலம் தொட்டு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்கிற நடைமுறை அமுலுக்கு வந்தது.
ஆலைகளை நடத்துவது, அதாவது தொழில் செய்வது ஆட்சியாளர்களின் வேலை அல்ல; ஆட்சியை நடத்துவது அதாவது நிர்வாகம் செய்வது மட்டுமே ஆட்சியாளர்களின் வேலை என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட சனாதனக் கும்பல் ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு, வாஜ்பாய் காலத்திலும் அதைத் தொடர்ந்து மோடி காலத்திலும் பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாகத் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன அல்லது மூடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்று வந்த எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொண்டு விட்டது பாஜக அரசு. இப்பொழுது எஞ்சி இருப்பது கோவணம் மட்டுமே, அதாவது ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே. மீண்டும் ஒரு முறை சங்பரிவாரக் கும்பல் ஆட்சிக்கு வருமேயானால், எஞ்சியிருக்கிற கோவணமும் உருவப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தப்படுவோம்.
காமராசர் கடைப்பிடித்து வந்த பசுவதைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு, சாதியக் கட்டமைப்பைப் பலகீனப் படுத்தும் சோசலிச சமத்துவக் கோட்பாட்டுக்கு ஆதரவு உள்ளிட்டவைகளால் காமராசர் மீது ஆத்திரம் கொண்ட சனாதனக் கும்பல் 1967 ஆம் ஆண்டு டெல்லியில் காமராசர் தங்கியிருந்த வீட்டுக்குத் தீ வைத்து அவரைக் கொலை செய்த முயன்றது என்பதை மனதில் கொண்டு, ஆட்சி அதிகாரத்திலிருந்து சங்பரிவாரக் கும்பலை அப்புறப்படுத்தவும், கருத்தியல் தளத்தில் இந்தக் கும்பலுக்கு எதிராகக் களமாடவும் நாம் உறுதி ஏற்பது ஒன்றுதான் காமராசருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
ஊரான்