மாத்திரை அளவு எவ்வளவு என்பதை ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுக்கு
உட்படுத்தி உறுதி செய்து கொள்கிறேன். காலை எழுந்தவுடன் முதலில் தைராக்சின், ஒரு
மணி நேரம் கழித்துதான் வேறு எதையும் உண்பது என நாட்கள் இயல்பாய் கடந்து செல்கின்றன.
இந்த ஒழுங்கை இதுவரை நான் மீறியதில்லை. நாம் இயல்பாய்
இருந்தால் இயங்குவதும் எளிதுதானே?
எப்பொழுது நமது உடலில் இயல்புக்கு மாறான உணர்வுகளும் செயல்பாடுகளும்
(altered
sensations and functions) தெரிகின்றதோ, அது நோய்க்கான எச்சரிக்கை என்பதை
உணர்ந்து, உரிய மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஹோமியோபதி உணர்த்தும் எளிய பாடம் இது.
வழக்கம் போல, வாய் கொப்பளித்து தைராக்சின் எடுத்துக் கொண்டு
தோட்டத்திற்குள் சென்றேன். கிராமங்களுக்குச் சென்றாலும் நான் சும்மா இருப்பதில்லை. செடிகள் வளர்ப்பது, களை எடுத்து பராமரிப்பது உள்ளிட்ட
தோட்ட வேலைகள் எனக்கு இயல்பானதாய் மாறிப் போகும்.
பழைய மரங்களில் பப்பாளிக் காய்கள் பெருத்துத் தொங்கின. புதிய
செடிகள் பூக்கத் தொடங்கின.
பழைய கொய்யாவில் காய்கள் தாங்காமல் கிளைகள் தரையைத் தொட்டன. புதுக் கொய்யாவோ புதிதாய்க் காய்த்தது. திங்கத் திங்கத் தெவிட்டியது போக எஞ்சியவை
பழுத்து விழுந்தன மீண்டும் முளைக்க.
பப்பாளி பிஞ்சுச் செடியின் இலைத் தண்டுகள் பச்சிளங் குழந்தையின் குருத்தெலும்பு போல இருப்பதால் முட்டி மோதி வளர முயற்சிக்காது. கொய்யா
மரத்தடி நிழலில் முளைத்த பப்பாளி ஒன்று, கொய்யாவின் முரட்டுக் கிளைகளைத் தவிர்த்து,
அடுத்தவர் நிழலில் இருந்தால் நிற்கதிதான் என்பதையும் உணர்ந்து கதிரவனைத்
தேடி வளைந்து நெளிந்து வளரக் கற்றுக் கொள் என்பதை சொல்லாமல் உணர்த்தியது.
உன்னால் முடியும் என்றால் தடைகளைத் தகர்த்து முன்னேறு என்பதை
அதற்குப் பக்கத்திலேயே முளைத்த சீதாச் செடியோ கொய்யாக் கிளைகளின் ஊடே ஊடுருவி வானத்தை
நோக்கி வளர்ந்து காட்டி பாடம் எடுத்தது.
யாருக்காகவும் காத்திராமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்பதைப்போல
அதுபாட்டு வளர்ந்து நின்றன முருங்கைச் செடிகள். நீர் பற்றாக்குறையால் முன்பு வளர்ச்சி குன்றி தயங்கி நின்ற வாழை மரங்கள், பருவ மழையின் அரவணைப்பில் பக்கத்தில் பிள்ளைகளையும்
பெற்றிருந்தன.
இரண்டாண்டுகள் வளர்ந்த சில தென்னம் பிள்ளைகளின் குருத்துகள்
நோய்தாக்கி துண்டாய் விழுந்த போது துக்கம் தொண்டையைக் கவ்வியது. மீண்டும்
துளிர்க்கும் என சிலர் ஆறுதல் கூற, தேவையான மருந்தைப் தெளித்து காத்திருக்கிறோம் அவை
மீண்டும் துளிர்பதைக் காண.
பப்பாளி, கொய்யா, முருங்கை உள்ளிட்ட
சில செடிகள் தின்று துப்பியவை அல்லது கழிவாய் வீசியவை. ஆனாலும் அவை விழுந்த இடத்தில் மீண்டும் முளைத்து காய் கனிகளைக் கொடுத்து,
‘ஏய் முட்டாளே, என்னைக் குப்பை என்று வீசாதே,
முடிந்த மட்டும் என்னை மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடு, நான்
உனக்காக மீண்டும் வருவேன்’ என்று பாடம் நடத்துகின்றன.
பல்வேறு செடிகள் மரங்கள் அருகருகே வளர்ந்தாலும், ஒன்று
செழிப்பாகவோ அல்லது வளர்ச்சி குன்றியோ இருந்தாலும், இவை மனிதர்களைப் போல பொறாமைப் படுவதோ
அல்லது நேருக்கு நேர் பொது வெளியில் மோதிக் கொள்ளவதோ, மனிதச் சாதிகளைச் போல வேற்றுமை பாராட்டுவதோ கிடையாது. மண்ணுக்கடியில் இவை நீரைத் தேடி வேர்
பரப்புமே ஒழிய, பக்கத்துச் செடியை ஒழித்துக் கட்ட ஒருபோதும் முனையாது.
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment