உறவினர் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என பிற்பகல் ஒன்றரை மணிக்குப்
பேசிக் கொண்டோம். இரண்டரை மணிக்கு நகரப் பேருந்து வந்து விடும். அரை கிலோ
மீட்டர் தூரத்தில் பேருந்து நிறுத்தம். காலையிலிருந்து தோட்ட
வேலை செய்ததால் குளித்து, பின் உடைமாற்றி பகல் உணவையும் முடித்தபிறகு, நகரப் பேருந்தைப் பிடிப்பது குதிரைக் கொம்புதான் என்பது தெரிந்தும் முயற்சியை
மட்டும் கைவிடவில்லை.
அடிக்கடி இருசக்கர வாகனங்கள் செல்லும் வரப்புப் பாதை, சற்றே கீழ்அழுந்தி 'U'-வாகி குறுகி
விட்டதால், கால் இடறாமல் நடந்து கடப்பது எளிதல்ல. ஐந்து வரப்புகளைக் கடந்து நெடுஞ்சாலைக்கு வந்தோம். பேருந்தைப் பிடிக்கும் முயற்சி பயனற்றுப் போனதால் பங்கு தானியில் கெஜல்நாயக்கன்பட்டி
சென்றடைந்தோம்.
அன்றாடம் அலைபேசியில் நலம் விசாரிக்கும், எழுபதைக் கடந்த அன்புத்
தோழர் ஒருவரை எதிர்பாராத விதமாக அங்கு சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காத
தோழமைகளையும், நட்புகளையும்,
உறவுகளையும் சந்திக்கும் போது எழும் குதூகலம் என்னுள்ளும் எழுந்தது.
கோப்புப் படம்
அடுத்தப் பேருந்துக்கு இன்னமும் ஒருமணி நேரம் இருந்ததால், முதியோர்கள் சந்திக்கும் மூட்டுவலிக்கு ஆவாரம்பூ தேநீர் குறித்து எழுந்த பேச்சுகளுக்கிடையில், ஒரு காலத்தில்
நக்சல்பரி அரசியலின் முகமாயத் திகழ்ந்த திருப்பத்தூர், இன்று
முடங்கிக் கிடப்பதைக் கவலையோடு அவர் பகிர்ந்த போது, தனது உடல் நலனைவிட சமூக நலன் மீதான அவரது அக்கறை இன்னமும் இம்மி அளவும் குறையவில்லை
என்பதை உணர்த்தியது.
ஞாயிறு என்பதால் நான்கு மணிக்கு வரவேண்டிய பேருந்து, வருமா வராதா
என்ற குழப்பத்திற்கிடையில் ஒருவழியாய் வந்து சேர்ந்த பேருந்தில் பயணமானோம். நெடிதுயர்ந்த தென்னைகளையும், பசுமைதோய்ந்த மாமரங்களையும், புதிதாய் முளைத்து வெளிர்பச்சை
இலைபரப்பி படர்ந்திருக்கும் கொள்ளுக் கொல்லைகளையும் பார்த்துக் கொண்டே கிராமப்
சாலைகளில் பயணிப்பது ஒரு அலாதி சுகம்தானே! அந்தத் தோழரின் கிராமத்தைக் கடந்த போது ஏதோ ஒரு இன்ப சிலிர்ப்பு என்னுள் ஏற்பட்டது. எனக்கு மட்டுமா? இந்த அனுபவம் பலருக்கும் ஏற்படும்தானே? இப்படி ஊர்கள்கூட நம் உள்ளத்தில் இடம்பிடித்து விடுகின்றனவே! இதுதான் நேசத்தின் பிரதிபலிப்போ?
அரைமணி நேரத்தில் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டை அடைந்தோம். புதிதாய் தளிர்விடும் மழலையைக்
கண்டு தாய் சேய் நலம் விசாரித்தோம்.
குன்றுகளை ஒட்டி அமைந்துள்ள குக்கிராமம் என்றாலும் குடியிருப்புகள்
நகரை நினைவூட்டின. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சீதா மரங்களைத் தவிர குன்றின் மீது
இருந்த பாறைகள்கூட வெளியில் தெரியும் அளவுக்கு கிட்டத்தட்ட பொட்டலாய் இருந்த காடு, இன்று அடர்காடாய் மாறி இருந்தது.
கிராமக் கட்டமைப்பும்,
வேளாண் உற்பத்தி முறையும் வெகுவாய் மாறிப்போனதால் விறகுக்கோ,
ஏர் கலப்பை, தூலம் தூண் கழிகளுக்கோ காடுகளுக்குச்
செல்ல வேண்டிய அவசியம் இன்று இல்லாமல் போனதால், வனங்கள் எல்லாம்
வனப்பு காட்டுகின்றன.
ஒரு காலத்தில் உழவனுக்கு உதவிய வனங்கள், இன்று வேளாண் குடிகளுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகள், மயில்கள், பன்றிகளின் உல்லாசபுரியாய் மாறிவிட்டன. தவிர அரசு வளர்த்த கருவேல மரங்கள் காட்டை ஆக்கிரமித்து பாதையை மறித்துக் கொண்டதால்
சீதாக் காய்களைக்கூட பறிக்க முடியாமல் பலரின் வாழ்வாதாரமும் முடங்கிப் போயின என்றார் எமது உறவினர்.
இருட்டத் தொடங்கி விட்டது. விடைபெற்றுக் கொண்டு, காலியாக வந்த நகரப் பேருந்தில்
பயணமானோம். உடன் வந்த இருவருக்கும் கட்டணமில்லை, எனக்கு ரூ.16.
கிராமச் சாலை,
பிறகு கிருஷ்ணகிரி – வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை,
மீண்டும் கிராமச் சாலை என இருட்டு வேளையில் இளங்குளிர் காற்று முகத்தை வருட, முகப்பு ஒளிக்கதிர் இருட்டை விலக்கி பாதை காட்ட,'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலாய்'
நெளிந்து வலையும் சாலைப் பயணம், 'என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது'.
அரைமணி நேரம் கழித்தும் எங்களைத் தவிர வேறு யாரும் ஏறவில்லை. நான் கொடுத்த
16 ரூபாய்க்கு ஒரு பேருந்தை இருபத்தைந்து கிலோமீட்டருக்கு இயக்குவது
அறிவுடமையா? இது எப்படி அரசுக்குக் கட்டுப்படியாகும் என்ற எண்ணம்
என்னுள் ஓட, இடையில் ஒரு சிலர் ஏற,
மொத்தம் ஆறு பெண்கள் நான்கு ஆண்களுடன் ஏழரை மணிக்கு திருப்பத்தூரை அடைந்தது நகரப் பேருந்து.
அண்மையில், நகரம் மாவட்டத் தலைநகரமானதனால்தானோ என்னவோ ஆடை விரும்பிகளின் அவா போக்க அலென்
சோலியும், பீட்டர் இங்லேண்டும் முளைத்திருந்தன. வீடு செல்வதற்கான
அடுத்தப் பேருந்துக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்ததால், ‘டானா’வால் சிதைந்து போன ஐப்பசியில், அடைமழைக்குப் பதிலாய், இளம் பனிமழையின் மென்குளிர் மேனியில் படற, சூடாய் ஒரு தேநீரை
தொண்டைக்குள் இறக்கி, பின்பு எட்டு மணிக்குக் கிராமம் செல்லும்
நகரப் பேருந்தில் பயணமானோம்.
முப்பது கிலோமீட்டர் தூரத்திற்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், இருசக்கர வாகனம் வைத்திருப்போர்
பெரும்பாலும் நகரப் பேருந்துகளில் பயணிப்பதில்லை. இருசக்கர வாகனம்
இல்லாதோர், வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதல்ல என்ற நிலையில் உள்ள
முதியோர், உழைக்கும் மகளிர், பள்ளி கல்லூரி
மாணவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே பெரும்பாலும் நகரப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
நகரத்தில் வேலை பார்த்துவிட்டு கிராமங்களை நோக்கிச் செல்வோரை நகரப்பேருந்துகளே இரவு நேரங்களில் சுமந்து செல்கின்றன. மாலை நேரத்தில் கிராமங்களிலிருந்து நகரம் நோக்கி வருவதற்கானத் தேவை இல்லை என்பதனால்தானே முன்பு வந்த பேருந்து காலியாக இருந்தது. இந்த எளிய உண்மையை உணராமல் நான் போட்ட தப்புக் கணக்கை பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தியது கிராமம் செல்லும் இந்தப் பேருந்தில் நிரம்பி வழிந்தக் கூட்டம். ஆம்,
நகரப் பேருந்துகளும் அதில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயணம் என்பதும் எளியோரை
ஏற்றி விடும் ஒரு ஏற்பாடென்பதை உணர்ந்தவாறு இரவு ஒன்பது மணிக்கு இல்லம் சேர்ந்தோம்.
ஊரான்
அருமையான கிராமத்தை மனக்கண் முன் கொண்டு வந்த பதிவு. கிராமத்து மகளீர் நகரை தொடவும் பாதுகாப்பான போக்குவரத்து நகர பேருந்து. மகளீர் கட்டணம் இல்லா பேருந்து ஒரு சிறு ஆறுதல்.
ReplyDeleteநன்றி
ReplyDelete