“மனித உடலின் 50%
நரம்புகளும், 50% குருதிக்
குழாய்களும் நமது கால்களில்தான் உள்ளன; கால்களின் தசை நார்கள் வலுவாக இருந்தால் இதயம்கூட பலமாய்
இருக்கும்;
முதுமையில் வரும் எலும்பு முறிவையும், மூளைச் சிதைவையும் தடுக்க வேண்டுமானால் அன்றாடம் நட; எறும்புகள் உன்னை மொய்க்காமல் இருக்க ஆண்டு முழுக்க நட; முதுமையில் நீ முடங்காமல் இருக்க முடிந்த மட்டும் நட” என நேற்று இரவு தூங்குவதற்கு முன்
படித்த வாட்ஸ்அப் செய்தி என்னை உருத்திக் கொண்டே இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஒரு சிறு விபத்துக்குப் பிறகு, நான் நடப்பது
முற்றிலுமாக நின்று போனது. கடந்த இரண்டு நாட்களாக இரவில் மூன்று நான்கு முறை சிறுநீர் கழிக்க எழுந்ததால், ஒரு வேளை எறும்புக்கு இறையாகிறோமோ என்ற அச்சம் ஒருபுறம்; 'சே! சே! இந்த வயதில் அதெல்லாம் இருக்காது, இது ஃபெஞ்சல் படவாவின் வேலையாய் இருக்கலாம்' என்று சமாதானம் அடைந்தாலும், நாளைமுதல் நடப்பது என முடிவுக்கு வந்தேன்.
'ஃபெஞ்சல் கடந்திருக்குமா?' என ஆறு மணிக்கு எழுந்து
பார்த்தபோது தூறிக் கொண்டிருந்தது.
கூகுகளைத்
தட்டினேன்.
ஃபெஞ்சல்
சென்னைக்கும் கோவைக்கும்,
விழுப்புரத்திற்கும் திருப்பதிக்கும் இடையில் வட்டமடித்து மையம் கொண்டிந்தது.
'புயலோ மழையோ, காகங்கள் கூட காலையில் முடங்குவதில்லையே?
நமக்கென்ன குறைச்சல்' என எண்ணியவாறு கையில் குடையுடன் நடக்கத் தொடங்கினேன்.
குடியிருப்பு வளாகத்தின் இரண்டாவது பெருந்தெருவைக் கடந்து, வழக்கமான பாதையில் கிழக்கு நோக்கி நான்காவது குறுக்கில் நடக்கலானேன்.
தார்ச்சாலை முடிந்து, சிமெண்ட் சாலையில்
நடந்த போது, சாக்கடை அடைப்பினால் மறிக்கப்பட்டு சாலையை நிறப்பி மழை நீர் ஓடிக்கொண்டிருந்ததால், அதே பாதையில் தொடர்ந்து நடப்பது உசிதம் அல்ல என வேறு பாதையில் நடையைத் திருப்பினேன்.
குடியிருப்புப் பகுதிக்குள், சாலை ஓர மரங்களின் சரகுகள் ஆங்காங்கே சாலையில் அப்பி இருந்ததைப் பார்த்த போது இது ஒன்றும் பெருமழை அல்ல என்பதைப் புரிய வைத்தது.
சென்னை செல்லும் சாலையின் இடப்புறம் பைபர் கேபிள் புதைக்கத் தோண்டப்பட்ட பள்ளங்களில் கலங்கலான மழைநீர் சேர்ந்திருந்தது. இரு பைபர் கேபிள் சுருள்கள் பதிக்கப்படுவதற்காகக் காத்திருந்தன.
கதிரவன் கூட கடும் புயலின் சீற்றம் கண்டு, சற்றே தயங்கி நின்றாலும், மதுப்பிரியர்களும், மாமிசப் பிரியர்களும் ஒரு போதும் மலைத்து நிற்பதில்லை.
டிவிஎஸ் மற்றும் ஹோண்டா ஷோரூம்களுக்கு எதிரில் ஞாயிறானால் முளைக்கும் இரு மீன்கடைகளில் கட்லா, பாறை, இறால் என வகை வகையான மீன்கள், தொடர்
தூறுலுக்கிடையிலும் பிரியமானவர்களுக்காகக் காத்துக் கிடந்தன.
அடுத்து, இடப்புறம் இருந்த ஆசிரமத்தில் தங்கிப் படிக்கும் சிறார் மாணவர்கள் சிலர், மண்வெட்டி பாண்டையும் கொண்டு வாசலில் தோண்டப்பட்ட பைபர் கேபிள்
பள்ளங்களை மண் அள்ளிக் போட்டு சமன்படுத்திக் கொண்டிருந்தனர். படிக்க வந்த மாணவர்களை இப்படி வேலை செய்யச் சொல்லலாமா என்று கேள்வி மட்டும் என்னைக் குடைய தொடர்ந்து நடந்தேன்.
அடுத்த சில அடி தூரத்தில், வீட்டில் சேரும் குப்பைக் கழிவுகளை பாலிதின் பைகளில் அடைத்து வந்து, இருசக்கர வாகனத்தில் வரும் வேகத்தில் சாலை ஓரம் வீசிச் செல்வதால், வயிற்றைக் கழுவ அதில் ஏதும் இருக்குமா என நாய்கள் பிறாண்ட, தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சிகளில்
ஆங்காங்கே சிலரின் உடலில் ஒட்டி இருக்கும் கந்தல்களைப் போல, மழை ஈரத்தில் நசித்துப் போய்
சாலையின் ஓரங்களில் குப்பை கூளங்கள் அப்பிக்கொண்டு அருவெறுப்பாய் காட்சி அளித்தன.
சற்றே கடந்து, இடப்புறம் திரும்பி, மகளிர் கல்லூரி பின்புறமுள்ள அனந்தலை சாலையில் சென்ற போது, அடர் புதர்களுக்கு
முன்னால் தோண்டப்பட்டு எப்பொழுதும் துர்நாற்றத்தைப் கிளப்பும் நகரக் கழிகள் புல்டோசரால் மண் கொண்டு மூடப்பட்டிருந்தன.
அதற்குப் பின்னால் பராமரிப்பின்றி
கிடக்கும் குளக்கரையையொட்டி, அது ஈமக்கிரியை நடக்கும் இடம் என்பதால் இடவசதிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருந்தன. புதர்கள் அப்புறப்படுத்தப் பட்டிருந்தாலும்,
கீழே பழுப்பு, மேலே பச்சை நிற நீண்ட கவுன் அணிந்த பருவ மங்கையைப்போல ஒற்றைப் பனை ஒன்று ஒய்யாரம் காட்டி நின்று கொண்டிருந்தது.
அதையும் தாண்டிச் சென்றபோது, அவ்வப்பொழுது பெய்த மழையில் செழித்து வளர்ந்த புல் பூண்டுகள், அதன்
ஆயுட்காலம் நெருங்குவதால் நேற்று பெய்த மழையின் பாரம் தாங்காமல் மண் நோக்கி வளைந்து நின்றன.
வயோதிகம் வந்த பிறகு, என்னதான் ஊட்டம் கொடுத்தாலும், அவற்றிற்கு ஆயுள் குறைவுதான் என்பதை வளைந்து நின்ற புதர்கள் உணர்த்தின. புதர்களை உற்று நோக்கியபோது என்றோ சாலை ஓரம் வீசப்பட்ட குப்பை மூட்டைகள் புதர்களுக்கிடையில் ஒளிந்திருந்தன.
அதையும் கடந்து சென்ற போது எப்பொழுதும் நெல் விளையும் கழனிக் காடுகள்
சில ஆண்டுகளாய் புல் முளைத்து,
நேற்று பெய்த மழையின் நீரை உள்வாங்கி தளும்பி நின்றன.
நகர விரிவாக்கத்தில் வயல்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆங்காங்கே முளைத்திருக்கும் சில
வீடுகளுக்குள் தளும்பும் நீர் நுழையாமல் இருக்க, அவசர கதியில் தோண்டப்பட்ட சிறு வாய்க்கால்
வழியாக தளும்பும் மழை நீர் பள்ளத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது.
சாலையின் நடுவே மழை நீர் ஓடுவதால், நான்
திரும்பிய அதே சாலையின் மறுமுனையில் நின்று பார்த்தேன். முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால் பின்னோக்கி
பழையபடி நடக்கத் தொடங்கினேன். இந்தச்
சாலையின் நடுவில்தான் சாக்கடை நீர் போக வழி இன்றி, ஒரு எளிய குடியானவனின் வீட்டைச் சுற்றி தேங்கி நின்றதால், அந்த வீட்டின் இருபக்கச் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து, வீடே சிதலமடைந்து கிடக்கிறது. 'யாரு எக்கேடு கெட்டுப்
போனால் என்ன? யாருக்கு என்ன நட்டம் வந்தால் என்ன? முடிந்தவரை சுருட்டுவோம்' என்பவர்கள் உள்ளூர் நிர்வாகத்தில் இருப்பதனால்தான் இப்படி ஊர்கள் பாழ்பட்டு நாறிக் கிடக்கின்றன.
வீடு திரும்பி, குடையை மடக்கி ஷீவைக் கழற்றி பெஞ்ச்சில் உட்கார்ந்த போது உடல் வேர்த்திருந்தது. வியர்வை என்ற நண்பன் துணைக்கு இருக்கும் போது எறும்பென்ன, எவரால்தான் நம்மை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த வேலைக்கு ஆயத்தமானேன்!
ஊரான்
No comments:
Post a Comment