சுயசாதிப்
பற்று
அரசின்
உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் இருப்பதால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பதவி
உயர்வில் தங்கள் சாதியினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதற்காகத்தான்
பிற சாதியினர் பார்ப்பனர்களை எதிர்க்கிறார்களே ஒழிய பார்ப்பனியத்தை ஒழிப்பதற்காக
அல்ல. பார்ப்பனர்களைப் போலவே பிற சாதியினரும் அத்தகைய உயர் பதவிகளுக்கு வந்த பிறகு
தங்கள் சாதியினருக்கே முன்னுரிமை தருகின்றனர். பார்ப்பனரோ பிற சாதியினரோ, இவர்கள் தங்கள்
சாதிக்காரர்களை மேலே கொண்டு வருவதற்காக சகல தில்லு முல்லுகளையும்
கடைபிடிக்கின்றனர்.
அரசு
மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும், ஏன் தனியார் நிறுவனங்களிலும் கூட இதுதான்
நடைமுறை. ஓராண்டு ‘அப்ரண்டிஸ்’
பயிற்சியாளர்களைத் தேர்வு செய்வதில்கூட இதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. ஒரு பக்கம்
நீதி – நியாயம் பேசிக் கொண்டே மற்றொரு புறம் அதற்குப் புறம்பாகத்தான் நடந்து
கொள்கின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால்தான்
வேலை “வாய்ப்பில் ‘பேக்லாக்கை’ நிரப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை அமுல்
படுத்து” என தாழ்த்தப்பட்டோர் நலச்சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன. நெறிமுறைகளுக்கு
முரணாக பார்ப்பனர்கள் தங்களது சாதிக்காரர்களுக்கு சலுகை காட்டுவது மட்டும் பார்ப்பன
புத்தி என்றால் பிறசாதிக்காரர்கள் தங்களது சாதிக்காரர்களுக்கு இதே போன்று நெறிமுறைகளுக்கு
முரணாக சலுகை காட்டுவது பார்ப்பனிய புத்தியாகாதா? இல்லை என்றால் இந்த புத்திக்கு
என்ன பெயர்?
ஒவ்வொரு
சாதியினரும் பல விசயங்களில் தங்களின் சுயசாதிப் பற்றை கெட்டியாகப் பிடித்துக்
கொண்டுதான் பிற சாதியினரை வசைபாடி வருகின்றனர். இது பார்ப்பனியத்தின் மற்றொரு
அம்சம். சமூகத்தின் மீது எவ்வித அக்கறையும் இல்லாதவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது
ஆச்சரியத்துக்கு உரியதல்ல. ஆனால் பார்ப்பனியத்துக்கு எதிரானவர்களாக தங்களைக்
காட்டிக் கொண்டு சமூக நீதிக்காகப் போராடுவதாக சொல்லிக் கொள்ளும் தமிழினவாதிகள், 'தலித்'தியவாதிகள், பெண்ணியவாதிகள், திராவிடவாதிகள், போலிப் பொதுவுடமைவாதிகள் என பலரும்
தங்களது சொந்த வாழ்க்கையில் பார்ப்பனியத்தின் அம்சங்களை கடைபிடித்துக் கொண்டுதான்
இருக்கின்றனர்.
இடதுசாரி
அரசியலில் தீவிரத்தன்மையுடன் இருக்கும் ஒரு நண்பர், ‘செம்மலர்’ என தனது மகளுக்கு
பெயர் சூட்டியவர் இன்று ‘திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரத்திம் அமிர்தயோகம் கூடிய
சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள்ளாக மிதுன லக்கினத்தில்’தான்
தனது மகளுக்கு திருமணத்தை செய்து முடிக்கின்றார்.
சேரிகளை
ஆக்கிரமிக்கும் பார்ப்பனியம்
முன்பெல்லாம்
பார்ப்பனர்களை அழைக்காமல்தான் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது குடும்ப நிகழ்சிகளை
நடத்தி வந்தனர். ஆனால் இன்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவது முதல் இறப்பிற்குப்
பிறகு செய்யப்படும் காரியம் வரை பார்ப்பனர்களை அழைத்து வந்து சடங்குகள்
சம்பிரதாயங்களை நடத்துவது அதிகரித்து வருகிறது. இது கிராமங்களில் வேண்டுமானால் தற்போதைக்கு
இல்லாமல் இருக்கலாம். ஆனால் நகர்புறங்களில் இன்று இது மிகச் சாதாரணமாகிவிட்டது. பார்ப்பனியம்
மெல்ல மெல்ல சேரிகளையும் ஆக்கிரமித்து வருகிறது.
மொத்தத்தில்
ஐயர் முதல் அருந்ததியர் வரை பகுதியாகவோ அல்லது முழமையாகவோ பார்ப்பனியம் வேர்
பிடித்து நிலைபெற்றுள்ளது. ஒட்டு மொத்தத் தமிழனும் பார்ப்பனியத்தில்
ஐய்க்கியமாகிவிட்ட பிறகு ‘தமிழன் என்றொரு இனமுண்டு. தனியே அதற்கொரு குணமுண்டு’ என்பது இன்றைக்குப் பொருந்துமா எனக்
கேட்கத் தோன்றுகிறது. அதற்காக பார்ப்பனியம் தமிழனின் பிறவிக்குணம் என வரையறுத்துவிட
முடியுமா என்ன?
தொடரும்.....
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர்-1
உங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/
ReplyDeleteஅழகுபடுத்த லிங்க் கொடுத்தமைக்கு நன்றி! முயற்சிக்கிறேன்.
ReplyDelete