Friday, May 17, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 8


நால் வர்ண சாதிய அமைப்பு முறை, அதில் உயர்ந்த சாதி - கீழான சாதி என்கிற சாதியப் படிநிலை, அச்சாதி படிநிலைக்கேற்ப சாதியத் தீண்டாமை, உணவுத் தீண்டாமை, மொழித் தீண்டாமை, மக்களை மடமையில் ஆழ்த்தும் ஜாதகம் – ஜோதிடம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை உள்ளடக்கியதுதான் பார்ப்பனியம் என முந்தைய தொடர்களில் பார்த்தோம்.

வர்ணாசிரமக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கினாலோ, சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பேசினாலோ, சாதியத் தீண்டாமை - உணவுத் தீண்டாமை - மொழித் தீண்டாமை உள்ளிட்ட அனைத்து வகையான தீண்டாமைகளுக்கு எதிராக போராடினாலோ இவை எல்லாம் இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாக சித்தரித்து போராடுபவர்களை இந்து மத விரோதிகள் என முத்திரை குத்துவது பார்ப்பனியத்தின் நடைமுறை. பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் போது, அடக்கு முறை மற்றும் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமாகவும், பொய் – புனைசுருட்டு - நயவஞ்சகம் - சூழ்ச்சிகள் மூலமாகவும், நீதி மன்றம் மற்றும் அரசுகளின் துணையோடும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பார்ப்பனர்கள் எப்போதுமே முயற்சித்து வருகின்றனர். இத்தகைய முயற்சிகளின் மூலமாகத்தான் பார்ப்பனியம் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.

மிகச் சாதாரண மக்களைக்கூட தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக இந்து மதக் கடவுளர்களையும் – நம்பிக்கைகளையும் இணைத்து பல்வேறு கட்டுத் கதைகளை அவ்வப் பொழுது அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றனர். அதற்கான சமீபத்திய எடுப்பான உதாரணம்தான் சேதுக் கால்வாய்த் திட்டத்தை முடக்குவதற்கான ‘இராமர் பாலம்’ என்கிற கட்டுக் கதை.

பார்ப்பனியத்தின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வாலி வதத்திலும், ஏகலைவன் கட்டை விரலிலும் நாம் தேட வேண்டியதில்லை; சு.சாமி - சோ.சாமி போன்றோரின் கருத்துக்களையும் நடைமுறைகளையும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்!

பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் பார்ப்பனர்களுக்கு கௌதம புத்தரைப் பிடிக்காது; அம்பேத்கரைப் பிடிக்காது; பெரியாரைப் பிடிக்காது; மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் பகுத்தறிவாளர்களைப் பிடிக்காது; தமிழர்கள் தங்களுக்கான மொழி - பண்பாட்டு உரிமைகள் பற்றிப் பேசினால் பிடிக்காது; கோவில் கருவறையில் தமிழ் நுழைவது பிடிக்காது; அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது பிடிக்காது; சமூகரீதியாக இழிவுபடுத்தப்பட்டு, கல்வி - வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்கட்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தருவது பிடிக்காது; பொதுவுடமைச் சமுதாயம் கோரும் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது. மொத்தத்தில் பார்ப்பனியத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குப் பிடிக்காது. காரணம் மேற்கண்டவை அனைத்தும் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி பலவீனப்படுத்தக் கூடியவை; வீழ்த்தக் கூடியவை.

மக்களுக்கான சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் ஆகிய அடிப்படையான ஜனநாயகக் கோட்பாடுகளை நால் வர்ணக் கோட்பாடுகள் மறுக்கின்றன. பார்ப்பனியத்தின் நால் வர்ணக் கோட்பாடுகளும் இந்து மதக் கோட்பாடுகளும் வேறு வேறானவை அல்ல என்பதால்தான் இந்து மதத்தை பார்ப்பன சனாதன மதம் என்றே பெரியாரும், அம்பேத்கரும் வரையறுக்கின்றனர்.

விதிவிலக்காக ஒரு சில பார்ப்பனர்களைத் தவிர பெரும்பாலான பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தை கடைபிடிப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் பார்ப்பனர்களாய்ப் பிறந்ததனாலா? அல்லது பார்ப்பனியக் கருத்துகளில் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதனாலா? அதே போல பிற சாதியினர் பலரும் பார்ப்பனியத்தை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம்?

பார்ப்பனர்களைப் பற்றி மட்டுமல்ல ஒவ்வொரு சாதியினரைப் பற்றியும் அச்சாதிக்கே உரிய குணமாக சில குணங்களை அடையாளப்படுத்தி அச்சாதியைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிற கருத்து மக்களிடையே பரலமாக நிலை பெற்றிருக்கிறது. ஒருவரின் ஒரு குறிப்பிட்ட குணத்தை வைத்து அவர் அச்சாதியைச் சார்ந்தவர், அதனால்தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என பிறர் கூறுவதை இன்றளவும் நாம் கேட்க முடிகிறது. சுருக்கமாகச் சொன்னால் அச்சாதியில் அவர் பிறந்ததனால்தான் அவர் அத்தகைய குணங்களைக் கொண்டுள்ளார் என்பதுதான் மக்களின் பார்வையாக இருக்கிறது. இவ்வாறு பார்ப்பதில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எத்தகைய குணங்கள் - அடையாளங்கள் பிறப்பின் அடிப்படையில் அமைகின்றன? எத்தகைய குணங்கள் - அடையாளங்கள் வளர்ப்பின் அடிப்படையில் வளர்கின்றன? இவற்றில் மாறுதலுக்குள்ளாகும் குணங்கள் - அடையாளங்கள் எவை?

தொடரும்......





பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7


4 comments:

  1. பார்ப்பனியத்தை ஒழிக்கிறேன்னு பொறந்த அத்தினி பயலுங்களும் அந்த பாப்பான் காலுலதான் போயி உழுந்தானுங்க....ஈ.வே.ரா, மணி(யம்மை) யைக் கல்யாணம் பண்ணீக்கிறதுக்கு பாப்பான் (ராஜாஜி ) காலுலதான் போயி உழுந்தாரு ..கரணாநிதி, வீரரரரமணிணிணி எல்லாரும் தன்னோட சொத்து கணக்கு வழ்க்கு பாக்குறதுக்கு பாப்பானத்தான் ஆடிட்டரா வச்சிகிட்டானுங்க, பகுத்தறிவு குஞ்சு அதான் கருணாநிதியோட அக்கா மவன் மாறன் தன்னோட மவனுக்கு ( தயா நிதி ) ஐயங்காரு பொண்ணத்தான் கல்யாணம் பண்ணீ வச்சான் தெரியுமா........?????????இதெல்லாம் ஏம்ப்பா????????????????????????????????????????????

    ReplyDelete
    Replies
    1. கருத்து கூறியமைக்கு நன்றி!

      பார்ப்பனியம் குறித்த தங்களின் கருத்து என்ன? அது தேவையா இல்லையா? என்பதுதானே இங்கு விவாதப் பொருள். அது குறித்த தங்களின் நிலை என்ன என்பதைக் கூறாமல் 'அவன் இப்படிச் செய்தான், இவன் இப்படிச் செய்தான்' என அங்கலாய்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

      மேலும் "இதெல்லாம் ஏம்ப்பா????????????????????????????????????????????" என ஒருமையில் விளிப்பதிலும் ஆதிக்கம் எனும் பார்ப்பனியம் ஒளிந்திருக்கிறது என்பதையாவது உணர்ந்தால் சரி!

      Delete
  2. பெரியாரை திராவிட கழகத்திலே பலர் எதிர்த்தனர், அதனால பார்ப்பனருக்கு ஏன் பெரியாரை பிடிக்கனும் அதை அவர் எதிரும் பார்க்கலை....இன்னும் இதே கதை எவ்வளவு நாள் தான் சொல்வீங்களோ....

    ReplyDelete
    Replies
    1. இந்து மதம் நீடிக்கின்ற வரை பார்ப்பனியம் இருக்கும். பார்ப்பனியம் இருக்கின்ற வரை சாதியம் இருக்கும். சாதியம் இருக்கும் வரை உங்களைப் போன்ற ஆதிக்கச் சாதியினர் ஆதிக்கம் செலுத்துவர். அதுவரை - கதைகள் அல்ல - இந்த நிஜங்கள் தொடரும்.

      Delete