மானிடப் பிறப்பின் மேன்மையைப் பறைசாற்ற “அரிது! அரிது! மானிடராய்ப்
பிறத்தல் அரிது!” என்று பாடினாள் ஔவைப் பாட்டி ஆனால் “அரிது! அரிது! ஜாதகம்
பார்க்காமல் திருமணம் செய்யும் ஒரு இந்துவைக் காண்பதும், நல்லது கெட்டதுகளுக்கு
ஜோசியம் பார்க்காத ஒரு இந்துவைக் காண்பதும் அரிது!” என்றல்லவா இன்று பாட வேண்டியுள்ளது.
திருமணம் ஆகவேண்டிய வயதில் திருமணமாகவில்லை என்றாலும்,
திருமணத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியம் இல்லை என்றாலும், குழந்தைக்குப் படிப்பு
சரியாக வரவில்லை என்றாலும், படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த
வேலை பறிக்கப்பட்டுவிட்டாலும், வருவாய் போதாமல் கடனில் மூழ்கினாலும், விவசாயமோ –
தொழிலோ அதில் நட்டம் ஏற்பட்டாலும், திடீரென விபத்துக்குள்ளானாலும், நோய்வாய்ப்பட்டு
படுத்துவிட்டாலும் அதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக பரிசீலிக்காமல் தனக்கு ‘ஏழரையில்
சனி’ இருக்கிறது எனவும், தற்போது ‘கெட்ட தசை’ நடக்கிறது எனவும்தான் இந்த
இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் நம்பிக்கொண்டிருக்கிறான் நமது இந்துச் சகோதரன்.
சனியின் பிடியிலிருந்தும், கெட்டதசையிலிருந்தும் விடுபடுவதற்கு
எண்ணிலடங்கா சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் கடைபிடித்துப் பார்க்கிறான். பரிகாரங்களையும் செய்து பார்க்கிறான். எதையும்
விடுவதில்லை. ஆனாலும் அவனால் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடிவதில்லை. ஜாதகம்,
ஜோசியம் பார்க்கும் இந்த ‘கெட்ட தசை’ நமது இஸ்லாமியச் சகோதரனையும், கிருஸ்தவ
பிரதரையும்கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் இந்தியாவின் சாபக்கேடு. அவ்வளவு ஏன்?
பிரச்சனைகளுக்கான காரணங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான
ஆற்றல் இல்லாத போது தனது இயலாமையின் காரணமாக பகுத்றிவாளன்கூட இதற்குப் பலியாகிவிடுகிறானே!
ஏதோ ஒருவனுக்கு மட்டும் மேற்கண்ட பிரச்சனைகள் என்றால் அவனை மட்டுமே
வைத்து பரிசீலிப்பதை ஒரு வாதத்துக்காக வேண்டுமானால் போனால் போகட்டும் என
வாலாவிருந்துவிடலாம். ஆனால் ஒட்டு பொத்த மனிதர்களும் மேற்கண்ட பிரச்சனைகளை
எதிர்கொள்ளும் போது அதற்கான காரணங்களை நமது சமூகத்தில் நிலவும் அரசியல்,
பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு நிலைமைகளை பரிசீலித்து அதற்கான
காரணங்களை கண்டறிந்து தீர்ப்பதற்கல்லவா முயல வேண்டும்.
ஏன் ஒருவனால் தனது பிரச்சனைகளுக்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக
பரிசீலிக்க முடிவதில்லை? இரண்டே இரண்டு காரணங்கள்தான். ஒன்று அறியாமை. மற்றொன்று
இயலாமை. பெரும்பாலும் பலருக்குக் காரணம் தெரிவதில்லை. அப்படியே காரணம் இன்னதென்று
தெரிந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான ஆற்றல் இன்மை. இந்த இரு பலவீனங்களே அவனை ஜாதகம்
மற்றும் ஜோசியத்தை நம்புவதற்கும், சடங்குகள் சம்பிரதாயங்களை கடைபிடிப்பதற்கும் இட்டுச்
செல்கிறது. அப்படினால் அவன் இதைத் தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கிறானா? அல்லது
பிறர் வழிகாட்டுவதால் அவ்வாறு செய்கிறானா?
நம் மக்கள் எப்பொழுதுமே இளகிய, பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள்.
ஒருவனுக்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் தங்களுக்குத் தெரிந்த பரிகார வழிமுறைகளை
எல்லாம் சொல்லி வழி காட்டுவார்கள். அவன் பிரச்சனைகளிலிருந்து மீள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அவர்களும் அறியாமையில் இருந்துதான் வழிகாட்டுகிறார்கள் என்பது அவர்களுக்கேத்
தெரியாத போது பிரச்சனைக்கு உள்ளானவன் என்ன செய்வான் பாவம்? அதை நம்பித்தானே
ஆகவேண்டும். போகாத ஊருக்கு வழி காட்டும் இந்த நடைமுறைதான் இன்றைய சமூக எதார்த்தம்.
இந்த எதார்த்தம் எப்படி சாத்தியமானது?
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவன் வெவ்வேறு விதமான பிரச்சனைகளை
எதிர்கொள்கிறான். அவைகளிலிருந்து மீள்வதற்காக சில முயற்சிகளைச் செய்கிறான். ஏதோ ஒரு வகையில் ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்கு வந்தாலும் தான் மேற்கொண்ட முயற்சியால் மட்டுமே அவன்
விடுபட்டதாக நம்புகிறான். அதை பிறறோடு பகிர்ந்து கொள்கிறான். இந்தப் பகிர்வு
அடுத்தவனுக்கு பிரச்சனை வரும் போது அவனையும் செய்யத் தூண்டுகிறது. இப்படியாக
சமூகம் முழுக்க ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை நடைமுறை பரவி விடுகிறது. இந்த
நடைமுறைகளை எல்லாம் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறான். இப்படி
தொகுக்கும் வேலையை ஒரு படித்த கூட்டம்தான் செய்ய முடியும். அப்படி தொகுத்ததை
தனதாக்கிக் கொண்டு அதை வைத்தே பிறருக்கு வழிகாட்டும் வேலையையும் மேற்கொண்டிருக்க
வேண்டும். தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இங்கே பேசப்படுவதில்லை. இங்கே, அது அவனது தலை எழுத்து என்கிற மற்றொரு அபத்தத்தையும் சேர்த்தே பரப்பிவிடுகிறார்கள்.
வழிகாட்டுபவன் எப்பொழுதுமே உயர்ந்தவனாகி விடுகிறான். புகழுக்கு உரியவனாகி
விடுகிறான். போற்றுதலுக்கு உரியவனாகி விடுகிறான் இந்த வழிகாட்டுதலுக்கு தட்சணையாக தனக்குத்
தேவையான தானியத்தையோ, பொருளையோ, பணத்தையோ பெற்றுக் கொள்கிறான். பார்ப்பனர்கள்
மட்டுமே அன்று படித்தவர்களாக இருந்ததால் ஜாதகம் - ஜோசியம் பார்ப்பது, பரிகாரங்களை
பரிந்துரைப்பது, சடங்குகள் - சம்பிரதாயங்களை செய்ய வைப்பது - செய்து வைப்பது அவர்களின் தொழிலாக
மாறியிருக்க வேண்டும். அதனால்தான் இன்று வரை பஞ்சாங்கம் எழுதுவது, ஜாதகம் பார்ப்பது,
பரிகாரங்களை பரிந்துரைப்பது போன்றவைகள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் வசமே
இருக்கிறது. மற்ற சாதியினர்கூட இன்று வருவாய்க்காகவும், புகழுக்காகவும் இத்தொழிலைச் செய்தாலும் அவை எல்லாம் துள்ளியமாக இருக்காது என்கிற கருத்தும் பார்ப்பனர்களால்
பரப்பப்படுகிறது. மற்றவர்கள் போட்டிக்கு வந்துவிட்டால் இவர்களின் பிழைப்பு
போண்டியாகிவிடும் என்பதுதான் இதற்கும் காரணம். கழுதை விட்டையில் முன்விட்டை என்ன?
பின் விட்டை என்ன? முன்விட்டை மட்டும்தான் கழுதையின் விட்டை என்பதுதான்
பார்ப்னர்களின் வாதம்.
மக்களை மடமையில் ஆழ்த்தும் மேற்கண்ட தொழிலை பார்ப்பனர்களே
பிரதானமாகச் செய்வதால் இத்தகைய மடைமைகளை அல்லது மூடநம்பிக்கைகளை பார்ப்பனியம்
என்று அழைப்பதுதானே சரியானதாக இருக்க முடியும்.
தொடரும்....
தொடர்புடைய பதிவுகள்
பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர்-1
உண்மையிலேயே உங்களின் இந்த மொத்த தொடரும் எனக்கு ஆச்சரியம் அளித்தது. ஒரு யோகி போல பிசகாமல் (கரணம் தப்பினால் மரணம் என்கிற விசயம்) எழுதியமைக்கு என் பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி!
Delete