புரட்டாசி, மானாவாரிக் கடலையின் அறுவடைக் காலம். அதிகாலை இருட்டு கலைவதற்குள், கடலைச் செடிகளைப் பீராய்ந்து குவியல் குவியலாய்க் குவித்திருக்க வேண்டும்.
கொல்லையில் அதிக ஈரம் என்றால், செடியோடு மண் அப்பி வரும். பிறகு கடலையைப் பறிப்பதற்கு நாம் பாடாய்ப்பட வேண்டி வரும். போதுமான ஈரமின்றி மண் காய்ந்திருந்தால், பிடுங்கினால் செடிகள் சிணுங்கி, காய்கள் மேல் வர மறுக்க, வெற்றுச் செடிகளே கைகளில் மிஞ்சும். அதனால், மண்ணின் ஈரப்பதம் பார்த்து செடிகளை லாவகமாய் இழுக்க வேண்டும்.
செடி பிடுங்க, வரப்பின் இந்தப்பக்கம் குனிந்தால், நிமிரும் போது அடுத்த வரப்பில்தான் நிமிர வேண்டும். அதற்குள் ஒரு சாலையை காலி செய்து, அடுத்த சாலைக்குத் தாவவேண்டும். இடையிடையே கைகளில் சிக்கும்
சுக்கான் செடிகளில் மென்மஞ்சளாய் கண்களில் படும் சுக்காம் பழங்களை வாய் கல்விக் கொள்ளும். லேசான கசப்புடன் கூடிய ஒரு குட்டி வெள்ளரி வகை அது.
பத்தடி இடைவெளியில், வரிசைகட்டி வனப்பாய் வளர்ந்து நிற்கும் துவரைச் செடிகள்தான் இந்தச் சாலைகளின் எல்லைகள். மொச்சை கூட சாலைகளாய் விரிந்து நிற்கும். காராமணியும், பச்சைப் பயரும் சாலைகளாய் ஏற்கனவே காய்த்து முடித்து முதுமை தட்டி முடிந்திருக்கும்.
காலைச் சூரியனின் கதிர்கள் மேனியை துளைத்த போதும் கடலைச் செடிகளோ கைகளில் தாண்டவமாடும். இடது கை செடிகளை எடுக்க, வலது கையோ கடலை மணிகளை கொத்தாக திருவிக் கொய்க்க, ஒட்டியுள்ள மண்ணெல்லாம் மடியில் விழ அத்துனை
காய்களும் வலப்பக்கம் குவியும். தப்பிய ஓரிரு காய்களும் விரல்களில் தஞ்சமடையும்.
பொழுது சாய்வதற்குள், பிடுங்கியச் செடிகளில் இருந்து கடலைகளைப் பறித்து பிரித்தால்தான் வேலை சுளுவாகும். இல்லையேல் சுட்டெரிக்கும் வெயிலில் செடிகள் காயக்காய காய்களைப் பறிப்பது கடினமாகிவிடும்.
கஞ்சியோ, கூழோ இருப்பதைக் கொண்டு பசியாற்றி வேலையைத் தொடர வேண்டும். ‘கண்ணா லட்டு திங்க ஆசையா?’ என்பது போல கடலை திங்க யாருக்குத்தான் ஆசை வராது. ஆனாலும் காய்கள் கூடைக்குள்தான் விழுமே ஒழிய வாய்க்குள் போகாது.
வெயில் ஏற ஏற, முதலில் முந்தானைகளும்,
கைக்துண்டுகளும் தலையைக் காக்க, பிறகு
துவரைச்சாலையின் நிழல் சற்றே காக்க, ஓலைகளும் கீற்றுகளும்கூட சில சமயம் கைகொடுக்க, காய்களைப் பறிக்கும் கைகள் பரபரத்துக்குக்
கொண்டே இருக்கும்.
இது புரட்டாசி அல்லவா?, ‘பொன்னுருகக் காயும் மண்ணுருகப் பெய்யும்’ என்பதற்கிணங்க கருமேகம் மேலெழ, எந்நேரமும் மழை வரலாம் என்பதால் படி எடுத்து வருவார் கொல்லைக்காரர்.
ஆறுபடி சாக்குப் பையில் விழ, ஒரு படி கூடையில் விழ இதுவே பறிப்போரின் கூலியாய்ச் சேரும். சில இடங்களில் இது எட்டுக்கு ஒன்று என்றுகூட இருப்பதுண்டு. உழைப்புக்கு ஏற்ப கூலியை கூடையில் எடுப்போரும் உண்டு, சாக்குப் பையில்
சுமப்போரும் உண்டு. சொந்தமாகக் கொல்லை இல்லாதவர்களுக்கு சில நாட்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு என்பதனால் ஓராண்டுக்குத் தேவையான கடலையைச் சேகரிக்க முடிந்தமட்டும் உழைப்பார்கள்.
கூலியைச் சுமப்பவர்
வீடு நோக்கிச் செல்ல, கடலை மூட்டைகளைச் சுமக்கும்
கழுதைகள் செட்டியார் வீடு நோக்கிச் செல்லும். இன்று மேம்பட்ட
சாலைகளில்கூட வண்டிகள் கவிழும் பொழுது, அன்று கழுதைகள் மட்டும் நேர்த்தியாய் மூட்டைகளைச்
கொண்டு சேர்க்கும்.
மாலை நேர மழைக்குமுன், இவற்றையெல்லாம் செய்யவில்லை என்றால் சில சமயங்களில் பெருமழையில் கடலைகள் பாழாய்ப் போகும். இப்படித்தான் வேளாண் குடிகளுக்குப் புரட்டாசி கழிகிறது.
ஆனால், புரட்டாசி வந்தாலே பலரையும் சனி பிடித்தாட்டுகிறது. நேற்றுவரை கறியைக்
குதறியவன் இப்போது ஒரு பொழுது என்கிறான். ஒரு பக்கம் புரட்டாசியில் சைவம் மேன்மை என்கிறான், மறுபக்கம் அதே புரட்டாசியைப் பீடை
என்று, சதிகாரர்களின் சதிக்குப் பலியாகி வீழ்ந்து கிடக்கிறான்.
புரட்டாசி பீடை என்று மழை பொழியாமல் இல்லை, இலைகள் துளிர்க்காமல் இல்லை, மலர்கள் மலராமல் இல்லை, பயிர்கள் விளையாமல் இல்லை, காற்று வீசாமல் இல்லை, சூரியன் சுடாமல் நிறுத்திக் கொள்வதில்லை. எல்லாம் நடக்கும் பொழுது நீ மட்டும் புரட்டாசியை பீடை என்று பிதற்றுவதேன்?
ஊரான்
No comments:
Post a Comment