ஒரு காலத்தில் குமுதம், ஆனந்த விகடன் என
பெட்டிக்கடைகளில் சரஞ்சரமாய் தொங்கும்
வார மாத இதழ்களில் வரும் தொடர்களை, சிறுகதைகளைப்
படித்து ரசிக்க வரிசைகட்டி நின்றது ஒரு இளைஞர் கூட்டம்.
இன்றைய இளைஞர் கூட்டமும் பெட்டிக்கடைகளை மொய்க்கின்றனர், கமுக்கமாய் விற்கப்படும் கஞ்சா-போதைப் பொட்டலங்களில் மயங்கிக் கிடக்க.
இதழ்களின் அட்டைகளிலும், நடுப்பக்கங்களிலும் ஆடுகளைப் போல் தோலுரித்துக்
தொங்கவிடப்பட்ட திரை நட்சத்திரங்களின் மின்னலில்,
மயங்கிக் கிடந்தது அன்றைய இலைஞர் கூட்டம். அது மகளிர் மீதான கண நேர கிரக்கம் மட்டுமே என்பதனால் அடுத்தடுத்த வேலைகளில் அவர்களால் நாட்டம் கொள்ள முடிந்தது. ஆனால் இன்றோ போதையில் சிக்கிய இளைஞர்கள் மதி இழந்து, உடல் நலிந்து எதற்கும் உதவாத நடைபிணங்களாய்
நடமாடுகின்றனர்.
அதனால்தானோ என்னவோ, கோடி பேர் கூடி
வாழ்ந்தாலும் ஆயிரம் பிரதிகளைக் கரை சேர்ப்பதற்குள் ஒரு படைப்பாளிக்கு நாக்கல்லவா தள்ளி விடுகிறது. பிறகு எப்படி இலக்கியம் செழிக்கும்?
இருந்தாலும் ஏதோ ஒரு மூலையில் இலக்கியங்கள் படைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
இலக்கியத்திற்குக் கற்பனை அவசியமென்றாலும் அவை மக்களின் பாடுகளைப் பேச வேண்டுமல்லவா?
ஏழ்மை-வறுமையினாலும், சுரண்டல்-அடக்குமுறைகளினாலும், சாதி-தீண்டாமையினாலும் அல்லல் படுகின்ற மக்களின் பாடுகளை வெளிக்கொணர்வதோடு அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கான முனைப்புகளையும் முன்னெடுக்கின்ற வகையில் இலக்கியப் படைப்புகள் இருக்க வேண்டுமல்லவா?
இலக்கியத்திற்கு எந்த மண், தூரம் என்று
இதுவரை ஒதுக்கப்பட்டு வந்ததோ, அதை உடைக்கும்
வகையில் இன்று,
இராணிப்பேட்டை வசூரிலிருந்து கவிப்பித்தன், ஆம்பூரிலிருந்து
யாழன் ஆதி, பேரணாம்பட்டிலிருந்து அழகிய பெரியவன், லாலாப்பேட்டையிலிருந்து சுகிர்தராணி, வந்தவாசியிலிருந்து வெண்ணிலா, செங்கம்-முன்னூர் மங்கலத்திலிருந்து
ஸ்டாலின் ராஜாங்கம் என எண்ணற்றோர் வடார்க்காட்டு மண்ணிலிருந்து தமிழ் இலக்கிய உலகில் இன்று
வலம் வருகின்றனர். வறண்ட பாலாற்று மணலில் இலக்கியமும் ஊற்றெடுக்கிறது.
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment