மக்களோடு மக்களாய் வாழ்ந்து அவர்களின் பாடுகளை படைப்பாக்கும் இராணிப்பேட்டை
வசூரைச் சேர்ந்த,
ஈமம், சேங்கை, மடவளி, ஜிகிட்டி, நீவாநதி, உள்ளிட்ட நாவல்கள்,
ஊர்ப் பிடாரி, சாவடி, பாலி, பரவெளி, பிணங்களின் கதை, உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள்,
என பல்வேறு படைப்புகளைத் தந்த, கவிப்பித்தன்
அவர்களை வாலாசா வல்லவன் அவர்களும் நானும் 05.10.2024 அன்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்து
உரையாடினோம்.
இதுவரை அவரை நான் வாசித்ததில்லை என்றாலும் இன்று அவர் எனக்குப் பரிசாகக் கொடுத்த 'பிணங்களின் கதை'யே என்னை அவருடன் பிணைக்கும் இழையானது.
எந்த வட்டார வழக்கை இலக்கிய உலகம் இழிவாகக் கருதியதோ, அதே வட்டார வழக்கில் எழுதப்பட்ட அவரது படைப்புகள் இன்று பலராலும் பேசப்படுகிறது. அவரது படைப்புகள் கற்பனையில் ஊற்றெடுப்பதல்ல, மாறாக இயற்கையாய் பொழியும் மழையைப் போல வாழ்க்கையின் அனுபவங்களே படைப்பாய் மலர்கிறது.
நம் மூதாதையர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியாததால்தானே 'இருக்கிறது' என்பதை "கீது" என்றார்கள். இப்படி - ஒய்ங்கா, பூட்ச்சி, போயிகினு, அயகா, அய்தது, இசுக்கறாம்பாரு, குட்தானுங்க, மேய்ச்சிகினு, மீங்கினமாதிரி, கொயந்த,
என பலப் பல.
இதுவே பழக்கமும் வழக்கமுமாகி படித்த நாமும், இன்றும் அதற்குள் உழன்று கொண்டிருக்கிறோம். வடார்க்காடு வட்டார மொழியை ஏளனமாய் பார்ப்போரின் செவுட்டில் அரையுங்கள், இது எம் குற்றமல்ல; எமக்குக் கல்வியை மறுத்த பாதகர்களின் சதி என்று!
‘பிணங்களின் கதை'களைப் புரட்டினேன். "புதிய தரிசனம்", முதல் கதையே வடார்க்காட்டு வழக்கு மொழியில் பட்டிக்காட்டைப் படம் பிடித்துக் காட்டியது.
வாத்தியாருக்கு வாழ்க்கைப்பட்டு பட்டணத்திலிருந்து பட்டிக்காட்டுக்கு வந்த சங்கீதா, அன்றாடம் காலையில் தன்னைக் கண்கொட்டாமல் பார்க்கும் மனநலம் குன்றிய முனியம்மாவின் தாய்மை உணர்வின் பின்னணியை உணர்ந்து, இறுதியில் ஒருநாள் முனியம்மாவின் பாதந்தொட்ட போது, அவளது ஸ்பரிசத்தால் சங்கீதாவின் கண்களில் நீர் கோர்த்ததைப்போல, வாசகனின் கண்களிலும் நீரைக் கசிய வைக்கிறார் கவிப்பித்தன்.
வாத்தியாருக்கு வாழ்க்கைப்பட்டு பட்டணத்திலிருந்து பட்டிக்காட்டுக்கு வந்த சங்கீதா, அன்றாடம் காலையில் தன்னைக் கண்கொட்டாமல் பார்க்கும் மனநலம் குன்றிய முனியம்மாவின் தாய்மை உணர்வின் பின்னணியை உணர்ந்து, இறுதியில் ஒருநாள் முனியம்மாவின் பாதந்தொட்ட போது, அவளது ஸ்பரிசத்தால் சங்கீதாவின் கண்களில் நீர் கோர்த்ததைப்போல, வாசகனின் கண்களிலும் நீரைக் கசிய வைக்கிறார் கவிப்பித்தன்.
பேருந்துப் பயணத்தின் போது வாந்தி எடுக்கும் ஒரு குழந்தையை அருவெறுக்கும் ஒரு பயணி, அரவணைக்கும் ஒரு பயணி என இரு வேறு எதிர் குணம் கொண்ட மனிதர்களை "மாய பிம்பங்கள்",
சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளம் தலைமுறையினரின் நிலையை "தலைமுறைகள்",
இரவு நேரங்களில் மணல் திருடுவதற்குச் சாதகமாக, பேய்க் கதைகளைக் கட்டமைக்கும் மணற்கொள்ளையர்களை "நடுநிசிக் காட்டேரிகள்",
தனது மகன் முறை தவறி பிறந்தவன் என்பதை அறிந்திருந்தும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் மீது பாச மழை பொழியும் ஒரு தந்தையை "கொண்டுப்புளி",
குடும்பமே வெறுக்கும் ஒரு குடிகாரத் தந்தையைக் காக்க கடன் வாங்கி மருத்துவம் பார்க்கும் ஒரு பொறுப்பு மிக்க மகனை "எட்டிமரம்",
காமக் கண்கொண்டு மகளிரை நோக்கும் ஆண்களை "தெருநாய்கள்",
நகைகளை மாட்டி, பொது இடங்களில் பகட்டுக் காட்டி, பின் பறிகொடுத்துப் பரிதவிக்கும் நகைப் பித்தர்களை "பின்கட்டு",
உழைப்புக்கு ஏற்ற சன்மானம் இல்லை என்பதைக்கூட அறியாமல் ஊருக்காக உற்சாகமாக உழைக்கும் சேரி மக்களின் கோல்காரன் பற்றி "கோல்மாத்து" ,
உலகிலேயே முதல் பறையனாய் பிறந்து, முதலில் பூணூல் தரித்து, அரிச்சந்திர மகாராஜனையே அடிமையாக்கிய வம்சம் என பிணங்களைப் புதைப்பதும் எரிப்பதும் பெருமைக்குரிய தொழில் என பெருமை பேசும் சேரி மக்களைப் பற்றி "பிணங்களின் கதை" என வேறு வேறு கருப்பொருளைக் கொண்ட பதினைந்து தலைப்புகளில் சிறுகதைகளைப் பதிவு செய்கிறார் கவிப்பித்தன்.
கவிப்பித்தன் சொல்லும் சம்பவங்கள் அன்றாடம் நடப்பவைதான், ஏதோ ஒரு வகையில் தெரிந்தவைதான் என்றாலும் அவைகளை இலக்கிய நயத்தோடு எழுத்தாக்கி கொடுக்கும் பொழுது, அவை மக்களின் மனங்களில் ஊடுருவுகிறது. நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை கழித்துக் கட்ட, அது வாசகனைத் தூண்டுகிறது. அதனால்தானே, என்றோ எழுதப்பட்ட அய்யன் வள்ளுவனின் "திருக்குறள்" இன்றும் போற்றப்படுகிறது.
நமக்குத் தொடர்பே இல்லாத, கற்பனை புராணக் கட்டுக்கதைகளை நம்பி இதுவரை ஏமாந்தது போதும். இனி நமக்குத் தெரிந்த, நம் மக்களின் வாழ்வியல் கதைகளை நமக்காகப் படைப்போம்.
இராணிப்பேட்டை, பெல் வளாகத்தில் நான் வசித்தபோது பொன்னை ஆற்றில் (நீவாநதி) கால் நனைத்திருக்கிறேன், ஆனால் நீந்தியதில்லை. பெருவெள்ளமாய் பீறிட்டுப் பாயும் கவிப்பித்தனின் 'நீவாநதியில்' நீந்துவதற்காகக் காத்திருக்கிறேன்.
முற்றும்.
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
Correctly said sir.🙏
ReplyDelete