ஆடி மாத திருவிழாக்களின் போதும், தீபாவளியின் போதும் என மிகச்சொற்ப நாட்களில் மட்டுமே கறி தின்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த வழக்கம். இவை தவிர ஏரி மீனும், ஆத்து மீனும் சும்மா கிடைக்கும் போது சமைத்தது போக மீதத்தை கருவாடாக்கி ஆண்டு முழுதும் தேவைப்படும் போது கவிச்சி சாப்பிடுவதும்தான் உழவர்கள் மற்றும் உழைப்பாளிகளின் வழக்கமாய் அன்று இருந்தது.
பரபரப்பாய் பயணிக்கும் அரசு
ஊழியர்களும், ஆலைத்
தொழிலாளர்களும் ஓய்வெடுக்க
ஒரு நாள் ஒதுக்கினால், அதையே
கறி நாளாய் மாற்றிக் கொண்டார்கள் இன்று. ஐம்பது கிராம் கறியை மட்டும்தான் செரிமானத்திற்கு உடல் ஏற்றுக் கொள்ளும் என்றாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தங்களின் வயிற்றை குப்பைத் தொட்டிகளாகக் கருதிக்கொண்டு கறி-முட்டை-மீன் என கிலோ கணக்கில் வயிற்றில் கொட்டுவதை இன்று
வாடிக்கையாக்கிக் கொண்டது நடுத்தர வர்க்கம். இதில் சாராயத்தை வேறு ஊற்றி ஊறவைப்பவர்கள் அதிகரித்து விட்டதால் சாதாரண ஞாயிறுகளிலேயே கவிச்சிக்கு ஏக கிராக்கிதான்.
தற்போது புரட்டாசி நெருங்குவதால், நேற்று ஞாயிற்றுக்கிழமை கறிக்கடைகளிலும், மீன் கடைகளிலும் பெரும் கூட்டம் அலைமோதியது. வஞ்சிரம் ஆயிரம் ரூபாய் ஆனாலும் வாரிச் சென்றார்கள். கிடைப்பதை எல்லாம் ஒரே நாளில் வயிற்றில் கொட்டிவிட்டால், அது ஒரு மாதத்திற்கு அங்கேயே தங்கி இருக்குமா என்ன? ஏன் இந்தப் பதட்டம்? ஏன் இந்த அவசரம்? இனிமேல் கறியோ மீனோ கிடைக்காதா? கிடைக்கும், ஆனால் திங்கக் கூடாதாம். ஏன்? புரட்டாசி புனித மாதமாம். கவிச்சி கூடாதாம். இந்து மத சாஸ்திரம் சொல்கிறதாம். இதை நம்பித்தான் நம் மக்களும் புரட்டாசியில் கவிச்சியை தவிர்க்கிறார்கள்.
சனிக்கிழமைதோரும் ஒரு பொழுது விரதம் இருந்து, பட்டை நாமம் போட்டு அந்தப் பெருமாளை வணங்குவது இப்பொழுதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது.
புரட்டாசி மாதத்தில் கவிச்சியை பாய் திங்கிறான், கிருத்தவன் திங்கிறான். ஆனால் இந்து மட்டும் திங்கக் கூடாதாம். ஏன், ஒரு இந்து புரட்டாசியில் கவுச்சித் தின்னால் கக்கா வராதா என்று கேட்டால் அதற்கு ஒரு அறிவியல் விளக்கம் கொடுத்து நம்மை புல்லரிக்க வைக்கிறார்கள் சாஸ்திர அஞ்ஞானிகள்.
தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வந்து, வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு இடையிலான ஒரு இடைக்காலம்தான் புரட்டாசி மாதம். பகலிலே, 'பொன்னுருகக் காயும், மாலை இரவு நேரங்களில் மண்ணுருகப் பெய்யும்' என்பார்கள். சுற்றுச் சூழல் கேடுகளின் விளைவால் நிகழும் பருவகால மாற்றங்களால் பழமொழிகளே இன்று பழங்கதைகளாய் மாறிவருகின்றன.
புரட்டாசியில் வெயில் அதிகமாக இருக்கும், அதனால் கவிச்சி திங்கக்கூடாது என்கிறான் ஒருவன். இது மழைக் காலம், அதனால் கவிச்சி கூடாது என்கிறான் மற்றொருவன். இப்படி ஆளாளுக்கு புரட்டாசியில் ஏன் கவிச்சி கூடாது என்பதற்கு அறிவியல் வியாக்கியானம் செய்து நியாயப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால், கடும் கோடையான சித்திரையிலும், கடும் மழைக்காலமான ஐப்பசியிலும் கவிச்சித் திங்கிறோமே என யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
வட இந்திய இந்துவுக்கும் இந்தப்
புரட்டாசி பொருந்துமா? அவர்கள் கவிச்சித் திங்காத மாதம் ஏதேனும் உண்டா? புரட்டாசி அவனுக்குப் பொருந்தும் என்றால் அவர்களது தட்பவெப்பம் வேறாக இருக்கும் போது அவனுக்கு எப்படி புரட்டாசி பொருந்தும் எனக் கேட்பதற்கு நமக்குத் தோன்றுவதில்லை. பக்தி
வந்தால்தான் பத்தும் பறந்து போகுதே! பிறகு அறிவு மட்டும்
மண்டையில் குடியிருக்குமா என்ன?
எங்கே புனிதம் பேசப்படுகிறதோ
அங்கே தீட்டும் பேசப்படுகிறது என்று பொருள். அதனால்தான் புரட்டாசியைப் புனிதம் என்றான், ஆடியை, மார்கழியைப் பீடை என்றான். கவிச்சியையும் அவன் தீட்டு என்று கூறி, கவிச்சித் தின்போரை இழிவானவர்களாகச் சித்தரித்தான். இதெல்லாம் அவாளின் ஏற்பாடு என்பதைத் தவிர இதில் ஒரு வெங்காயமும் இல்லை.
சிங்கம் புலி போன்ற சில விலங்குகளைப் போல் எல்லா மனிதர்களுக்கும் ஒரு காலத்தில் புலால் மட்டுமே உணவாக இருந்தது. புலால் உணவு போதுமானதாக இல்லாததால் பயிரிடுதலைக் கற்றுக்கொண்டு மரக்கறி உணவுக்கும் தன்னை
பழக்கப்படுத்திக் கொண்டான் மனிதன். விலங்குகளால் அது இயலாது போனதால் இன்னமும் சில விலங்குகள் புலால் உணவை மட்டுமே நம்பி வாழ்கின்றன.
அதுவரை நாடோடிகளாக வாழ்ந்த மனிதன், உழவுத் தொழில் வளர்ந்த பிறகு, நிலைத்து வாழத் தொடங்கினான். மக்களை நெறிப்படுத்தக் கருத்துக்களையும் நிறுவனங்களையும் உருவாக்கிக் கொண்டான். இதன் வளர்ச்சிப்
போக்கில் புலால் உண்பதை பாவம் என்று கருதினான். அது மக்களிடையே செல்வாக்கு பெற்ற போது, அதுவரை உழவுத் தொழிலை மேற்கொள்ளாமல் புலால் உணவை உண்டு வந்த
நாடோடிக் கூட்டமான ஆரியக் கூட்டம், தானங்கள் மூலம் நிலங்களையும் தானியங்களையும் தனதாக்கிக் கொண்டு, சைவ
உணவுக்குத் தன்னை மாற்றிக்
கொண்டது.
நிலத்தைப் பறிகொடுத்தவர்கள்
கூலியானார்கள். நிலமற்ற கூலி
ஏழைகளுக்கு தானிய உணவு
பற்றாக்குறை ஏற்பட்டதால் கறி
உணவை நோக்கி அவர்கள்
தள்ளப்பட்டனர். செத்த மாடுகளை உரித்து உப்புக் கண்டம் போட்டு பாதுகாத்து வைத்து, உணவுத்
தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்குத்
தள்ளப்பட்டனர். உப்பு கண்ட
நாற்றம் தங்களை தாக்காமல்
இருக்க அவர்களை ஊருக்கு வெளியே கிழக்கு பக்கமாக குடியிருக்குமாறு பணித்தனர். அப்படித்தான் சேரிகள் உருவாக்கப்பட்டன.
புரட்டாசி புனிதத்தோடு தொடர்புடையது. புனிதம் தீண்டாமையோடு தொடர்புடையது. எனவே, புரட்டாசியில் கறி திங்கக் கூடாது என்பது தீண்டாமையோடு தொடர்புடையது. நேற்று வரை கறி தின்றவன், புரட்டாசியில் திங்கவில்லை என்றால் அவன் தீண்டாமையைக் கடைபிடிக்கிறான் என்று பொருள்.
எனவே, வீடுகள் தோறும் கவிச்சி மணம் கமழட்டும். கமழும் இந்தக்
கவிச்சி வாடையில் புரட்டாசி புனிதம் புகைந்து போகட்டும்.
ஊரான்
No comments:
Post a Comment