இதோ,
மழைக்காலம் வரப்போகிறது
எழுது!
கருக்கும் மேகங்களை
சாரலை தூரலைப் பற்றி,
பருவ மழை காலங்களில்
புயலால் கொந்தளிக்கும்
ஆழ்கடலைப் பற்றி,
தத்தளிக்கும் பாய் மரங்கள் படகுகள் பற்றி,
ஆளுயர அலைகள் பற்றி
எழுது!
கொட்டித் தீர்க்கும்
பெருமழை பற்றி
பெருக்கெடுக்கும்
பெருவெள்ளம் பற்றி
நிரம்பி வழியும்
ஏரிகள் குளங்கள்
அணைகள் பற்றி
எழுது!
புதுப் புனலில்
நீந்திக் களிக்கும்
மீன் குஞ்சுகள் பற்றி,
அவற்றை
முந்தானையில்
ஏந்தி மகிழும்
கன்னியரைப் பற்றி
கொத்திச் செல்லக்
கரையில் காத்திருக்கும்
பறவைகள் பற்றி
ஏன் கண்ணடிக்கும்
காளையர் பற்றிகூட
எழுது!
பருவ மழை முடிந்து
பனிக்காலம் தொடங்கும்
தைமாத மேகங்களின்
நளினம் பற்றி,
இலைகளில் தளிர்களில்
மலர்களில் படியும்
பனித்துளிகள் பற்றி,
மார்கழிக் குளிரில் மலரும்
டிசம்பர் பூக்கள் பற்றி
எழுது!
சித்திரையில்,
சுட்டெரிக்கும் சூரியனின்
வெக்கை பற்றி,
கோடை மழையின்
மண்வாசம் பற்றி
நாசி குளிர
எழுது!
துளிர்க்கும்
செடிகள் கொடிகள் பற்றி,
அதில் முகிழ்க்கும்
மொட்டு மலர்கள் பற்றி,
தேன் குடிக்க
வட்டமிடும் வண்டுகளின்
ரீங்கார ஒலி பற்றி
எழுது!
கூவும் குயில்களை
தோகை விரித்தாடும் மயில்களை
துள்ளி ஓடும் கவரி மான்களை
பிளிரும் யானைகளை
சீறும் சிங்கங்களை
கன்று காளைகளை
ஆடுகளைக் கோழிகளை
ஏன்,
நாய்கள் நரிகளைப் பற்றிகூட
எழுது!
கற்பனை
ஊற்றெடுக்க எடுக்க
இயற்கையில் கொட்டிக் கிடக்கும்
எது பற்றியும்
எழுது!
ஒரு வேளை
கற்பனை வளம்
வறண்டு போனால்
கவலைப்படாதே!
கைகொடுக்க
ஓராயிரம் கவிஞர்கள் உண்டு!
உவமைகள் கிட்டவில்லை என்றாலும்
எதுகை மோனைகளை மட்டும் விட்டு விடாதே!
நீதான் கவிஞனாச்சே?
ஆனால்,
மறந்தும் எழுதி விடாதே!
மக்களின் பாடுகளை
மகளிரின் துன்பங்களை
தொழிலாளர்களின் துயரங்களை விவசாயிகளின் வேதனைகளை வேலையின்மையின் அவலங்களை
ஒருபோதும் எழுதி விடாதே!
எழுதும் போது
கவனம் தேவை!
மனித வாழ்வின்,
துன்பங்கள் துயரங்களுக்கான வேதனைகளுக்கான
வேர்களைப் பற்றி மட்டும்
மறந்தும் எழுதி விடாதே!
ஆம்!
நீ கவிஞன் என்பதை
மறந்து விடாதே!
ஊரான்
பாரதிதாசன் "ஏறெடுத்தேன் கவி ஒன்று எழுதென்று சொன்னது வான் பாடலை ஒத்துள்ளது. இன்னலில் உள்ள மக்களளை துயர் துயர் தான் அன்ன ய யாவிலும் முன் வந்து நிற்பதாக..எழுதி இர இருப்பார்..
ReplyDelete