சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்!
· ✓ சென்னை ஆதம்பாக்கம் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
· ✓வேலூரில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த தற்காலிகக் கடைகள் அகற்றம்-வியாபாரிகளுடன் தள்ளுமுள்ளு
· ✓வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
· ✓ஆரணியில் பரபரப்பு! டி.எஸ்.பியை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் - ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
· ✓ஊட்டி: நடைபாதைக் கடைகள் அகற்றம்-சிறு வியாபாரிகள் புலம்பல்!
· ✓புதுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே சாலையோரக் கடைகள் அகற்றம்
· ✓மார்த்தாண்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இவை, சென்னை முதல் கன்யாகுமரி வரை சாலையோர சிறு வணிகர்கள் மீது சமீபத்தில் தொடுக்கப்பட்ட தாக்குதல்களில் ஒரு சில. சாலையோரக் கடைகள் பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகச் சொல்லிதான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மாநகராட்சி - நகராட்சி - பேரூராட்சி மற்றும் வட்ட-மாவட்ட நிர்வாக அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறையினர் என ஒரு பெரும்படையே இந்தத் தாக்குதல்களை சாலையோர அப்பாவி சிறுவணிகர்கள் மீது நடத்தி வருகிறது.
இந்தச் சாலையோரக் கடைகளால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருவதாகவும், அதன் அடிப்படையில்தான் இந்தக் கடைகள் அகற்றப்படுவதாகவும் காரணம் சொல்கின்றனர் அரசு அதிகாரிகள். மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்களுக்கு சாலையோரக் கடைகள் இடையூராக இருப்பதாக மருத்துவமனை வளாகங்களையொட்டி கடை வைத்துள்ள சாலையோர சிறு வணிகர்கள் மீது குற்றம் சுமத்தப் படுகிறது.
சாலையோர சிறு வணிகர்களின் கடைகளை அகற்றுவது ஏதோ போது நலனுக்கானது போல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் உருகி உருகி செய்திகள் வெளியிடுகின்றன. இதைப் பார்க்கின்ற பொது மக்களும், தங்களுக்கு அரசு நல்லது செய்வதாகக் கருதுகின்றனர்.
அச்சத்தில் சாலையோர வணிகர்கள்
அன்றைய வருவாய்க்கு முதலீடாகப் போட்டுள்ள சிறு வணிகர்களின் அற்ப சொற்ப பொருட்களை பொக்கலைன் இயந்திரங்கள் துவம்சம் செய்து லாரிகளில் ஏற்றும் அட்டூழியம் குறித்தோ, எதிர்ப்புக் குரல் எழுப்பும் சாலையோர சிறு வணிகர்களை காவல் துறையினர் வரைமுறையின்றி காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்துவது குறித்தோ, சாலையோர வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை காவல் துறையினர் மிகக் கேவலமாகத் திட்டுவது குறித்தோ இந்த ஊடகங்கள் வாய் திறப்பதில்லை.
பல இடங்களில் உள்ளூராட்சி அலுவலர்களும், காவல் துறையினரும் சாலையோர சிறு வணிகர்களிடம் அன்றாடம் மாமுல் வாங்கிக் கொண்டு கடைகளை நடத்துவதற்கு அனுமதிக்கின்றனர். அப்பொமுது மட்டும் இந்தக் கையூட்டுக்காரர்களுக்கு பொது மக்களின் நலன் கண்ணுக்குத் தெரியாது போலும்.
எந்த நேரத்தில் பொக்கலைன் வண்டி வரும் அல்லது லத்தியொடு காக்கிச் சட்டைகள் வரும் என்கிற அச்சத்தோடுதான் சாலையோர சிறு வணிகர்களின் அன்றாடப் பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றல்ல, நேற்றல்ல. இது நீண்ட நெடியப் பிரச்சனை.
சாலையோர வணிகம் குறித்து நீதிமன்றங்கள் என்ன சொல்கின்றன?
சாலையோரங்களில் சிறு வணிகம் செய்வதன் மூலம் கிடைக்கும் சிறு வருவாயைக் கொண்டு கௌரவத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கு முயற்சி செய்யும் சாலையோர சிறு வணிகர்கள் தங்களது தொழிலை இந்தியாவெங்கும் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகளில் மும்பை உயர்நீதி மன்றம், டெல்லி உயர்நீதி மன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றம் சாலையோர சிறு வணிகர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
காவல் துறையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்களது கூடுதல் வருவாய்க்காக சாலையோர சிறு வணிகர்களை துன்புறுத்துவதையும் அவர்களது பொருட்களை தூக்கி வீசி சேதப்படுவதையும் நீதிமன்றங்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளன.
தான் விரும்பிய ஒரு தொழிலையோ அல்லது வணிகத்தையோ மேற்கொள்வது இந்தியக் குடிமகனுக்கு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1)(g) வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தலாமே ஒழிய, சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை மறுக்கக் கூடாது என நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்த வழிகாட்டுதலுக்குப் பிறகுதான் சாலையோர சிறு வணிகர்களை பாதுகாப்பதற்கான “சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” என்கிற சட்டத்தை நடுவண் அரசு கொண்டு வந்தது. The Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act 2014. இதைத் தொடர்ந்து இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான திட்டம் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு 2015-ம் ஆண்டு வகுத்துள்ளது. The Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Scheme and Rules 2015.
சட்டமும் திட்டமும், நடைமுறை விதிகளும் கொண்டு வந்து ஆண்டுகள் சில உருண்டோடிவிட்டன. ஆனாலும், காவல் ஆய்வாளர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை இப்படி ஒரு சட்டம் இருப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. உண்மையிலேயே இப்படி ஒரு சட்டம் இருப்பது அவர்களுக்குத் தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா என்பது நமக்குத் தெரியவில்லை.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அடுக்கம்பாறை என்ற இடத்தில் வேலூர் மாவட்ட மருத்துமனை 2004-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அம்பொழுது முதலே, அப்பகுதியில் சாலையோர சிறு வணிகர்கள், சாலையோரங்களில் சிறு வணிகம் செய்து வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் பழங்களை இச்சிறு வணிகர்களிடமிருந்தே பெற்று வருகின்றனர். இச்சிறு வணிகர்கள் அப்பகுதியில் கடைகள் வைக்கக்கூடாது என பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம், கனியம்பாடி காவல்துறை உதவியுடன் அடிக்கடி கடைகளை அகற்றுவதும், சிறுவணிகர்கள் அதற்கு எதிராகப் போராடுவதும் ஒரு தொடர்கதையாகவே நீடிக்கிறது.
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ஐ சுட்டிக்காட்டி தரைக்கடை மற்றும் தள்ளுவண்டிக் கடைகளை காலி செய்யச்சொல்லி ஏழு நாள் அவகாசம் கொடுத்து பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சாலையோர வணிகர்களுக்கு 14.08.2018 அன்று அறிவிப்பு ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறது.
சாலையோர வணிகம் என்பது ஆக்கிரமிப்பு அல்ல, இதற்குத் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பொருந்தாது; மாறாக “சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” என்கிற சட்டம்தான் இதற்குப் பொருந்தும். எனவே இச்சட்டப் பிரிவு 22-ன் படி நகர வணிகக் குழு (Town Vending Committee) ஒன்றை அமைக்க வேண்டும். அதன் பிறகு, இந்தக் குழு, சட்டப் பிரிவு 3-ன் படி அங்குள்ள சாலையோர வணிகர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவரை யாரையும் கடை நடத்தும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தக் கூடாது; மேலும் எங்கே விற்பனை செய்யலாம் (Vending Zone), எங்கே விற்பனை செய்யக் கூடாது (Non Vending Zone) என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப சாலையோர வணிகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அரசு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும், இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் “தாய்-சேய்” திட்டம். “நெடுஞ்சாலை விரிவாக்கம்”, “மருத்துவமனை வளாகம்” என பொருத்தமற்ற காரணங்களைக் கூறிக்கொண்டு காவல் துறை உதவியுடன் அதிரடியாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் அடுக்கம்பாறையில் செயல்பட்டு வந்த சாலையோரக் கடைகள் ஆகஸ்டு மாத இறுதியில் அப்புறப்படுத்தப்பட்டன.
தொடரும் அரச பயங்கரவாதம்
காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் எவரும் சாலையோர சிறு வணிகர்களை துன்புறுத்தவோ அல்லது அவர்களது கடைகளை அப்புறப்படுத்தவோ கூடாது என இச்சட்டம் (பிரிவு 27) அவர்களுக்கு கடிவாளம் போட்டாலும் அதை மயிரளவுக்குக்கூட மதிப்பதில்லை என்பதுதான் நடைமுறை.
அன்றாட பிழைப்பு நடத்தும் சாலையோர வணிகர்கள் பத்து நாட்களாக எந்தத் தொழிலும் இல்லாமல் வறுமையில் வாடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட பிறகு, சாலையோர வணிகர்கள் குழு ஒன்றை அமைத்து முறைப்படுத்தும்வரை பழைய நிலையையே தொடரலாம் என கோரிக்கை முன்வைத்ததையொட்டி மீண்டும் சாலையோர சிறு வணிகர்கள் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தங்களது கடைகளை நடத்தி வந்தனர்.
இந்தச் சூழலில் 08.09.2018 அன்று காலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி, மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியுமின்றி, கனியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜன் என்பவர் கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லி சாலையோர வணிகர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளார். இரு வணிகர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பெண்களைத் தகாத சொற்களால் வசைபாடியுள்ளார். சட்டத்துக்குப் புறம்பாக, ஒரு ரௌடியைப் போல நடந்து கொண்ட கனியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜனை கைது செய்யக்கோரி வேலூர் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் (DIG) சாலையோர வணிகர்கள் சங்கம் சார்பில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் நாகராஜனின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், சாலையோர சிறு வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 11.10.2018 அன்று வேலூர் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதே போன்று, 03.05.2018 அன்று அடுக்கம்பாறை சாலையோர சிறு வணிகர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய அப்போதைய கனியம்பாடி காவல் ஆய்வாளர் பாண்டியனின் அடாவடித்தனத்தை சாலையோர சிறு வணிகர்கள் தங்களது வீரமிக்கப் போராட்டத்தால் முறியடித்துள்ளனர்.
தெருவோரம் கடை விரிக்கும் இவர்கள் யார்? இதற்கு முன்னர் இவர்கள் எங்கிருந்தார்கள்? நீரின்றி வெடித்துக் கிடக்கும் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். ஆலைக்கழிவுகளால் மலடாகிப்போன மண்ணைக் கைவிட்டு ஓடி வந்தவர்கள். நம்பியிருந்த நெசவும், கைத்தொழிலும் கைவிட்டதால் கால்வயிற்றுக் கஞ்சிக்காக நகரத்திற்குத் துரத்தப்பட்டவர்கள். உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் ஓர் அங்கமே!.
இவர்கள் தங்களது வயிற்றுப்பாட்டுக்காக சாலையோரங்களில் நடத்தும் சிறு வணிகத்தில், நகரை நோக்கி வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையும் உள்ளடங்கியுள்ளது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?
“சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” அமுல்படுத்தப்பட்டாலொழிய அடுக்கம்பாறை மட்டுமல்ல இந்தியாவெங்கும் உள்ள சாலையோர சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமில்லை.
இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கான
களப் போராட்டத்தில், சாலையோர சிறு வணிகர்களுக்கு தோள் கொடுப்பதே பொது மக்கள் அவர்களுக்குச்
செய்யும் கைமாறாகும்.
தொடர்புடையவை:
No comments:
Post a Comment