Friday, June 17, 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?....தொடர்ச்சி

எனது உடல் உருவத்தையும் கரிய நிறத்தையும் வைத்து இவன் நமது சாதிக்காரனாய் இருப்பானோ என கருதிக் கொண்டு வணக்கம் வைப்போரும் அல்லது இவன் அந்த சாதிக்காரனோ எனக் கருதி, கண்டு கொள்ளாமல் இருப்பதும் என இரு வேறு மக்கள் பிரிவினரை நான் அன்றாடம் பார்க்கிறேன். நான் யாருடைய ஆளு எனத் தெரியாமலேயே 'நம்ம ஆளுதான்' என எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு நபரைப் பற்றி என்னிடம் அறிய வைக்க ஒரு சிலர் முயலவும் செய்கிறார்கள். இரு வேறு சாதிகளைச் சார்ந்தவர்கள் அச்சாதிப் பெண்களுக்கு வரன் பார்க்கவேறு சொல்வார்கள். மேற்கண்ட இரு தரப்பாருமே அவ்வாறு முயல்கிறார்கள்.  நான் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. நான் அவர்களின் சாதிக்காரனா என்பதே அவர்களுக்குக் கவலை.

இதுவரை வணக்கம் வைத்தவன் நான் அவனது சாதிக்காரன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு வணக்கத்தை நிறுத்திவிடுகிறான். இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தவன் நான் அவனது சாதிக்காரன் எனத் தெரிந்து கொண்ட பிறகு வணக்கம் வைக்கத் தொடங்குகிறான்.முன் பின் அறிமுகமே இல்லாதவன் தனது மகனுக்குத் திருமணம் என அழைப்பிதழ் கொடுக்கிறான். நான் குழம்பிப் போகிறேன். நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இதைப் பகிர்ந்த போது, தெரியவில்லை என்றாலும் தங்களது சாதிக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுப்பது என முடிவெடுத்து அவ்வாறு ஒவ்வொரு சாதிச் சங்கத்தினரும் திட்டமிட்டு செய்வதாகச் சொன்னார்.

ஒருவர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்தால் உறவினர்கள்கூட ஒரு சிலர் சில காரணங்களுக்காக கோபித்துக் கொண்டு வராமல் இருப்பார்கள். ஆனால் தனது அலுவலகத்தில் ஆயிரக் கணக்கானோர் பணிபுரிந்தாலும் அதில் தனது சாதிக்காரர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இதுதான் இன்று அலுவலகங்களில் நடுத்தர வர்க்க மக்களிடம் காணப்படும் சாதித் தீட்டு. படித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். இச்சாதியத் தீட்டுதான் அலுவலக ஊழியர்களிடம் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பனர்களில் ஐயர், ஐயங்கார், பட்டர், தீட்சிதர் என்றும்; முதலியார்களில் செங்குந்தர், துளுவ வேளாளர், அகமுடையர் என்றும்; நாயுடுகளில் கவரா, கம்மவா என்றும்;  முக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையர் என்றும் உட்பிரிவுகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரும் எந்த உட்சாதிப் பிரிவும் பிற உட்சாதிக்குள் குடும்ப உறவு எதையும் வைத்துக் கொள்வதில்லை.  அதாவது ஒரு செங்குந்த முதலியார் அகமுடைய முதலியாரிடம் சம்பந்தம் செந்து கொள்ள மாட்டார். குடும்ப உறவுகளில் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்றாலும் அலுவலகங்களில் "நம்ம ஆளு" என்கிற கருத்தியலில் ஒன்றுபடுகிறார்கள்.

இவர்களுக்கிடையில் குடும்ப உறவு கிடையாது.பிறகு எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? படிநிலையில் தங்களின் சாதிக்கு மேலே இருக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராக பிற சாதியினர் ஒன்றுபட்டால் அதில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். ஆனால் பார்ப்பனர்கள் எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? தங்களுக்கு மேலே யாரும் வந்துவிடக்கூடாது என்பது பார்ப்பனர்களின் கவலை. இதே கவலைதான் ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் ஒரு சிலர் சில இடங்களில் ஆளுமைக்கு வந்துள்ளனர். இந்த ஆளுமையைத்தான் பிற உயர் சாதியினரால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் தனது வாய்ப்பை தாழ்த்தப்பட்டவன் தட்டிப் பறித்துவிட்டதாகத்தான் பிற உயர் சாதிக்காரன் நினைக்கிறான். அரசு வகுத்திருக்கிற கொள்கை மற்றும் சட்டங்களின்படிதான் ஒரு தாழ்த்தப்பட்டவன் கல்வியைப் பெறுகிறான்; வேலைவாய்ப்பைப் பெறுகிறான்; பதவி உயர்வு பெறுகிறான். இதற்கு சம்பந்தப்பட்ட தாழ்த்தப்பட்டவன் எப்படி பொறுப்பாக முடியும்? தனிப்பட்ட முறையில் அவன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வது எந்த வகையில் நியாயமாகும்? அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாயப்பு என்பதை உத்தரவாதப் படுத்தாத அரசின் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது கோபம் கொள்வது கோழைத்தனமல்லவா!

பார்ப்பனர் உள்ளிட்ட பிற ஒடுக்கும் சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து வகையான சதி வேலைகளையும் அரங்கேற்றுகின்றனர். துறைத் தலைவராகவோ, நிறுவனத் தலைவராகவோ, தொழிற்சங்கத் தலைமைக்கோ தாழ்த்தப்பட்டவர்கள் வந்துவிடக்கூடாது என்பதே இவர்களின் கவலை. உயர் சாதியினர் அனைவரும் ஒன்றாகக்கூடி தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கேவலமாகப் பேசி அவர்களுக்குள்ளேயே கிண்டலடித்துக் கொள்வார்கள். 'கவர்மெண்ட் ஐயர்' என்றும் 'கோட்டா' என்றும் 'மேற்படி' என்றும் பேசும் இவர்களது பேச்சு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுப்பதற்கு ஏதுவானது.

தரமான கல்வி கிடைக்காத கிராமப்புற மாணவனின் திறமை, நகர்ப்புற மாணவனைவிட குறைவாகத்தானே இருக்கும்.  இதை ஏற்றுக் கொள்ளும் உயர் சாதியினர் காலம் காலமாக கல்வி மறுக்கப்ட்ட தாழ்த்தப்பட்ட முதல் தலைமுறை மாணவர்கள் சற்றே திறமை குறைவானவர்களாக இருப்பது மட்டும் எப்படி குற்றமாகும்? இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட ஊழியர்களை 'ஜீரோ ' என்றும் 'வேஸ்ட்' என்றும் மிகக் கேவலமாகப் பேசுவது அன்றாடம் அலுவலகங்களில் நடக்கிறது.  இப்படி தாழ்த்தப்பட்டவர்களை இழிவு படுத்தும் செயல் அவர்களை எட்டாமல் இல்லை.

இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை தண்டணையிலிருந்து காப்பாற்ற தங்களுக்கு வேண்டிய உயர் அதிகாரிகளின் தயவை நாடுகின்றனர் சாதிச் சங்கத்தினர். என்ன இருந்தாலும் "நம்ம ஆளு" இல்லையா என சப்பைக் கட்டு கட்டுகின்றனர். தனது சாதிக்காரன் என்றால் தாராளவாதமும், பிற சாதிக்காரன் என்றால் கறார் தன்மையும் என்பது இன்று அலுவலகங்களில் காணக்கூடிய ஒரு கேடு கெட்ட நடைமுறை. இத்தகைய சாதிப் பற்றுதான் அலுவலகங்களில் நடைபெறும் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை ஒழிப்பதற்கு மிகப் பெரிய தடையாக நிற்கிறது. ஐம்பது ரூபாய் கையூட்டு வாங்கிய கடை நிலை ஊழியன் பிற சாதிக்காரன் என்றால் கையும் களவுமாக பிடிபடுகிறான். ஆனால் இலட்சக் கணக்கில் கையூட்டு பெற்ற தனது சாதிக்காரனை காப்பாற்றுவதற்கு சென்னை முதல் டெல்லி வரை படை எடுக்கிறார்கள்.

கற்பழிக்கும் காமுகனைக்கூட காப்பாற்ற சாதி எனும் ஆயுதத்தை இவர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

நீதியும் நியாமும் இந்கே சாதியச் சாக்கடையில் மூழ்கடிக்கப்படுகிறது. இந்தச் சாதியப் போர்வையை பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் முதல் தாழ்த்தப்பட்ட சாதியனர் வரை அனைவருமே பயன்படுத்துகின்றனர். பிற உயர் சாதியினர் பயன்படுத்தும் போது கண்ணுக்குத் தெரியாத சாதியப் போர்வை, தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தும் போது மட்டும் பிற சாதியனரின் கண்களுக்கு 'பவர்' கண்ணாடி போடாமலேயே தெரிகிறது. உயர்சாதிக்காரன் தவறு செய்யலாம், தாழ்ந்த சாதிக்காரன் செய்யக்கூடாது என்கிற நால்வர்ணக் கோட்பாடுதான் இங்கே கோலோச்சுகிறது. இப்படிச் சொல்வதனால் தாழ்த்தப்பட்டவர்களின் தவறுகளுக்கு நான் சப்பைக்கட்டு கட்டுவதாக நினைக்க வேண்டாம். தவறுகளைக் காண்பதில்கூட சாதியப் பார்வை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே இதைக் கூறுகிறேன். மற்றபடி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனபதே எனது கருத்தும்.

கிராமமோ நகரமோ தீண்டாமை இன்னும் அகலவில்லை. தன்மையில்தான் மாறுபடுகிறது.

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
.............................முற்றும்

7 comments:

  1. நல்ல அலசல், தேவையான அலசலும்கூட
    /*இடஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் ஒரு சிலர் சில இடங்களில் ஆளுமைக்கு வந்துள்ளனர். இந்த ஆளுமையைத்தான் பிற உயர் சாதியினரால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் தனது வாய்ப்பை தாழ்த்தப்பட்டவன் தட்டிப் பறித்துவிட்டதாகத்தான் பிற உயர் சாதிக்காரன் நினைக்கிறான்*/
    இதில் கொடுமை என்னனா அதில் பயன் பெற்றவர்கள் கூட இட ஒதுக்கிட்டை இழிவாக பேசுவதுதான். அப்படி பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள் போல.
    இட ஒதுக்கிடு என்பது எதோ இன்றுதான் வந்ததுபோல் குத்திக்கிறது இந்த பார்ப்பன கூட்டம், மனுதர்மம், வேத புராணங்கள் என எல்லாவற்றிலும் இவர்கள்தான் உயரந்தவர்கள்போல் எழுதி மக்களை எமாற்றி சமுதாயத்தில் தங்களை உயர்ந்தவர்களாக அடையாளபடுத்திகொண்டார்கள்.

    /*தாழ்த்தப்பட்ட ஊழியர்களை 'ஜீரோ ' என்றும் 'வேஸ்ட்' என்றும் மிகக் கேவலமாகப் பேசுவது அன்றாடம் அலுவலகங்களில் நடக்கிறது. இப்படி தாழ்த்தப்பட்டவர்களை இழிவு படுத்தும் செயல் அவர்களை எட்டாமல் இல்லை.*/
    சாதி அடிப்படையில் தன் மிது விழும் வசவுகளை எதிர்க்க அவர்களுக்கு சிறுவயது முதல் பகுத்தறிவை கற்பிக்க வேண்டும், வெறும் கோயில்களுக்கு கூட்டி செல்வதால் பயன் ஒன்றும் இல்லை.
    என் தனிபட்ட கருத்து;
    பளார்
    அடிக்கிற மாதிரி ஒரு பார்வை அடங்கவில்லை என்றால்
    ஒங்கி ஒரு அடி, இது நமக்காக இல்லை அடுத்து இதுபோல் எவனிடமும் பேசமாட்டான்

    /*பார்ப்பனர் உள்ளிட்ட பிற ஒடுக்கும் சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து வகையான சதி வேலைகளையும் அரங்கேற்றுகின்றனர்*/
    குறிப்பா பார்பனர்கள் தாழ்த்தபட்ட மக்களுக்கு மட்டும் எதிரானவர் அல்ல தமிழ் மொழிக்கும் எதிரானவர்களே.
    இல்லை என்றால் நம் தமிழ் நாட்டில் இருந்துகொண்டே தமிழை கோவில்களில் அனுமதிக்க முடியாது என்று சொல்வார்களா, அப்பபறம் மக்கள் எல்லோரும் 10அடி தள்ளியிருந்துதான் சாமி கும்பிடவேண்டும், ஏதோ இவர்கள் இனம் மட்டும்தான் சாமியின் அருகில்
    செல்ல அனுமதிக்கபட்டவர்கள் போல அதனால்தான்
    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசு சட்டத்தை இந்த பார்ப்பன கூட்டம் எதிர்க்கிறது

    ReplyDelete
  2. படிக்காத கிராமத்தவன் நான் இன்ன ஆளு என்று கூறி
    அடுத்தவர்சாதியை தெரிந்து கொள்கிறான்.ஆனால்
    படித்தவன் அவனிலும் கேடான வழிமுறைகளை பயன்படுத்தி அடுத்தவன் என்ன சாதி என்று தெரிந்து கொள்கிறான்.சாதியைப்பற்றி தெரிந்த பின்னரே அடுத்த நடவடிக்கையில் இறங்குறான்

    ReplyDelete
  3. பயோடேட்டா: ஊரான்...

    http://bloggersbiodata.blogspot.com/2011/06/blog-post_18.html

    ReplyDelete
  4. ஊரான் இதில் உள்ள பல வரிகளை எடுத்துப் போட்டு பாராட்டத் தோன்றுகிறது. அப்பட்டமான உண்மைகளை கொண்டு வடித்த இந்த பதிவுக்கு என் வணக்கமும் வாழ்த்துகளும்.

    நாகரிகம் கருதி அப்பட்டமாக சில விசயங்களை எழுத தயங்கி செல்கின்றேன்.

    ReplyDelete
  5. உண்மை உண்மை!
    என்னதான் படித்திருந்தாலும், விமானத்தில் ஏறி அமெரிக்கா சென்றாலும், ஊர் பேர் சொல்றத வச்சே, 'நம்ம ஆளு', என்று சொல்லும் நபர்கள் இன்னமும் நிறைய பேர் நம்மிடையே இருக்கிறார்கள்!

    கல்லூரியில் சில நண்பர்கள் மட்டும் குழுவாகச் சுற்றித் திரிந்ததன் விளக்கம் சென்னைக்கு வந்த பிறகே எனக்குப் புரிந்தது! இங்கே, சாதி இன்னும் ஆழமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

    ReplyDelete
  6. வடநாட்டில் சாதாரணமாக சாதி பெயரையும் பின்னால் போட்டுகொள்கிறார்கள். ஆனால், இந்த அளவு சாதிவெறி இல்லை என்று சொல்கிறார்கள். காரணம் தெரியவில்லை. சிந்திக்க வேண்டிய பதிவு

    ReplyDelete