Wednesday, January 30, 2013

சோலை மலையும் பத்ம விருதுகளும்!

1947 ல் ஆங்கிலேயன் வெளியேறினாலும் அவனது அரசியல் சாசன சட்டமே ஆட்சிக் கட்டிலில் கோலோச்சியது. அதையே சற்று திருத்தி இந்திய அரசியல் சாசன சட்டமாக பெயர் மாற்றி நடைமுறைக்கு வந்த நாளை 64 வது முறையாக நர்சரி பள்ளி தொடங்கி டெல்லி செங்கொட்டை வரை கொண்டாடி விட்டோம்.

“தாயின் மணிக் கொடி... தாயின் மணிக்கொடி” என்கிற பாடலுக்கு வீர நடை போட்டு சல்யூட் அடித்த பிஞ்சுக் குழந்தைகள்,

“தேச பக்த வீரனே... அணி திரண்டிடு” என எக்காலமிட்டு போருக்கு அழைக்கும் மழலைகள்,

“கல்லெல்லாம் செல செஞ்சான் பல்லவ ராசா” என நளினமாய் நாட்டியமாடி நம் 'பாரம்பரியக் கலைகளை' புரிய வைத்த ஃபிரிகேஜிக் குழந்தைகள்,

“சொர்க்கம் என்பது நமக்கு... சுத்தம் உள்ள வீடுதான்” என ஆடிப்பாடி சாலைகளையும், பேருந்து நிலையங்களையும் அசுத்தப்படுத்தாதீர்கள் என 'புத்திமதி' கூறி புரிய வைத்த பள்ளி மாணவர்கள்,

ராமதாசுக்களும், காடுவெட்டி குருக்களும் நம்மைக் கூறுபோடும் நேரத்தில் இந்திய நாடு என் வீடு...இந்தியன் என்பது என் பேரு என மக்களின் 'ஒற்றுமையை' நிலைநாட்டிட நாட்டியமாடிய உணர்ச்சி பிழம்பான சிறார்கள்,

நான் ஏன் பிறந்தேன்...நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்...” என பாட்டுப்பாடி நாட்டுக்கு நாம் ஆற்ற வேண்டிய 'கடமைகளை' உணர்த்திய குழந்தைகள் என இந்த ஆண்டு களைகட்டியிருந்தது குடியரசு நாள் கொண்டாட்டம்.

இதற்காக ஒரு வாரம் பயிற்சி எடுத்து ஒரு சில நூறு ரூபாயை செலவு செய்து அடுத்தவர்களுக்கு தேசபக்தியை எடுத்துச் சொல்லியாச்சு. மற்றதை இனி அடுத்த ஆகஸ்டில் பார்த்துக்கொள்ளலாம்.

மொத்தத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கும், செலவு செய்த பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த ஒரு நாள் குடியரசு நாள் கொண்டாட்டம் மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

குடியரசு நாள் என்னவென்று தெரியாத ஒரு பாமரன்கூட தொலைக்காட்சி பார்த்தாவது கொஞ்சம் மகிழ்ந்திருப்பான்.

ஆனால் குடியரசு நாளன்று மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் ஒரு கூட்டத்தையும், ஆழ்ந்த வருத்தத்துக்கு ஆளாகும் மற்றொரு கூட்டத்தையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

பத்ம விருதுகள்

குடியரசு நாளையொட்டி பாரதரத்னா, பத்மவிபூசன், பத்மபூசன், பத்மசிறீ என ஐந்து வகையான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது நடுவண் அரசு. கலை, அறிவியல் தொழில் நுட்பம், பொது நிர்வாகம், தொழில் வர்த்தகம், இலக்கியம், கல்வி, கலை இலக்கியம், வியைாட்டு, பொது விவகாரம் போன்ற பிரிவுகளில் சிறப்பான சேவை செய்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

மக்களின் உயரிய பண்புகளை நாசமாக்கி இலட்சங்களையும் கோடிகளையும் சுருட்டும் கோமாளிகளுக்கு கலைச் சேவைக்கான பத்மபூசன் - பத்மசிறீ விருதுகள்; பத்துபேர்கூட கேட்கவில்லை என்றாலும் இறுதி மூச்சுவரை பத்ம விருதுக்காகவே ஒற்றை நாடியை இழுத்துப் பிடித்துப் பாடிக் கலைத்த இசைவிற்பன்னர்களுக்கு கலைச் சேவைக்கான விருதுகள்; தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளையடிக்கும் முதலாளிகளுக்கு தொழில் வர்த்தகப் பிரிவிற்கான விருதுகள்; விளையாட்டையே ஒரு தொழிலாகத் தேர்வு செய்து அதன் மூலம் கோடிகளைக் கண்ட விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத் துறைக்கான விருதுகள் என இந்த விருதுகளின் பட்டியல் வெகு நீளமானது. இந்த ஆண்டு மட்டும் 108 பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

வயலில் பாடுபடும் விவசாயி, உடலை மறைக்க உடை தரும் நெசவாளி, குடியிருக்க வீடு கட்டும் கட்டடத் தொழிலாளி இவர்கள் செய்வதெல்லாம் நடுவண் அரசுக்கு ஒரு தொழிலாகத் தெரியவில்லை போலும்! மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பாடுபடும் இவர்களுக்கு இதுவரை ஏதாவது பத்ம விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றதா?

எல்லோரும் அவரவர் பிழைப்புக்காக உழைப்பதைப் போலத்தான் கலை, அறிவியல் தொழில் நுட்பம், பொது நிர்வாகம், தொழில் வர்த்தகம், இலக்கியம், கல்வி, கலை இலக்கியம், வியைாட்டு, பொது விவகாரம் உள்ளிட்ட பிற துறை சார்ந்தவர்களும் தங்களது பிழைப்புக்காக ஒரு துறையை தேர்வு செய்து கொண்டு வேலை செய்கிறார்கள். மேற்கண்ட துறைகள் விவசாயம், நெசவு, கட்டுமானம் போன்ற துறைகளைவிட மேம்பட்ட துறைகள் கிடையாது. அப்படி இருந்தும் இவர்களின் உழைப்பால்தான் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதாகவும், இவர்கள்தான் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தருவதாகவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

சம்பாதிக்க மட்டும் இத்தகையத் தொழிலை இவர்கள் தேர்வு செய்வதில்லை. மேற்கண்ட விருதுகளைக் குறிவைத்தே சிலர் செயல்பட்டு வருகின்றனர். விருது கிடைத்தால் உழைப்பு வீண்போகவில்லை என புலகாங்கிதம் அடைவதும், கிடைக்கவில்லை என்றால் புலம்பித் தீர்ப்பதும் இவர்களின் வாடிக்கை. கலைக்காகவே, விளைட்டுக்காகவே தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டதாக பீலா விடுவார்கள். யார் இவர்களை அர்பணிக்கச் சொன்னது? தொழில் சரிபட்டு வரவில்லை என்றால் வேறு தொழிலுக்குச் செல்ல வேண்டியதுதானே! இவர்களை யார் தடுத்தார்கள்?

“பொதுவாகச் சொன்னால், சலித்தும் சோம்பிக்கிடக்கின்ற பேர்வழிகளுக்கு விளையாட்டுக் காட்டுவதற்காகப் பலவிதமான விளம்பரம் தரும் பகட்டான காட்சிகளைப் புதிது புதிதாகப் புனைய வேண்டியிருக்கிறது” என மக்களுக்கு எந்தவகையிலும் பயன்படாத கலை - விளையாட்டு உள்ளிட்ட சில துறைகளில் நிகழ்த்தப்படும் சாதனைகள் பற்றி “நான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன்?” என்கிற தனது நூலில் மாக்சிம் கார்க்கி குறிப்பிடுவதை இங்கே நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

குடியரசுத் தலைவர் பதக்கம்

மாநில காவல் துறையிலும் சீர்மிகு பணிக்காக கடலோர காவல் படைத்தலைவருக்கும், சிறப்புப் பணிக்காக குற்றப்பிரிவு தலைவருக்கும் - ஊழல் தடுப்புத் துறைத் தலைவருக்கும் குடியரசுத் தவலவரின் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பதக்கம் வழங்கப்பட்டுள்ளதால் இனி இலங்கை காடையர்களால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படமாட்டார்கள் என்றோ, இனி தமிழகத்தில் நகைக் கொள்ளையோ இன்ன பிற குற்றச் செயல்களோ நடைபெறாது என்றோ, இனி அரசு அலுவலகங்களில் இலஞ்ச - ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றோ நீங்கள் கருதினால் அது உங்களின் நம்பிக்கை; நம்பிவிட்டுப் போங்கள்!

விருது பெறும் விவசாயி சோலைமலை

இத்தகைய கூத்துகளுக்கிடையில் ஒரு ஏக்கரில் சராசரியாக 3800 கிலோ மகசூலுக்குப் பதிலாக புதிய சாகுபடி முறையில் (System of Rice Intensification - SRI) 8272 கிலோ மகசூல் ஈட்டி சாதனை புரிந்த மதுரையைச் சேர்ந்த சோலை மலை என்கிற விவசாயி தமிழக அரசின் ரூ5 இலட்சம் ரொக்கப் பரிசையும் ரூ3500 மதிப்பிலான தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளது ஒரு ஆறுதலான செய்தி. 

SRI முறையில் உற்பத்தி செய்யப்படும் நெல் மிகப் பெரிதாக இருப்பதால் இதை சோற்றுக்காக பயன்படுத்துவது கடினமானதால் மாவாக மட்டமே பயன்படுத்த முடியும். ஒரு காலத்தில் ஐ.ஆர்.எட்டு நெல் பலரின் பசியைத் தீர்த்தது போல இந்தப் புதிய இரகம் உழவனை உய்விக்குமா எனத் தெரியவில்லை. மேலும் இத்தகைய புதிய முயற்சியை யார் உருவாக்கினார்கள்? விதைக்கான மூலம் எது? புதிதாக தமிழக அரசு விவசாயிக்கு பதக்கம் வழங்குவது ஏன்?  இதில் பன்னாட்டு விதை நிறுவனங்களின் பங்கு ஏதேனும் இருக்குமா? என்கிற கேள்விகளும் கூடவே எழத்தான் செய்கிறது?

இருந்தாலும் சோலை மலையின் சாதனை பத்ம விருது பெற்ற  மற்றவர்களின் சாதனைகளை விஞ்சி நிற்கிறது.

Saturday, January 26, 2013

பாலியல் வன்கொடுமையின் ஊற்றுக்கண் எது?

டெல்லி பாலியல் வன்கொடுமையும் அதையொட்டிய வாதப் பிரதிவாதங்களும் இன்னும் ஓயாத நிலையிலும் பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகள் தொடர்கின்றன. நாளேடுகளையும் மற்ற பிற ஊடகங்களையும் பார்க்கும் போது மனித குல வரலாற்றில் இந்நூற்றாண்டுதான் மிகக் கொடிய காட்டுமிராண்டிகளின் காலமாக இருக்குமோ என்கிற அளவுக்கு கேள்விக்கே இடமில்லை என்கிற வகையில் நிமிடந்தோறும்  பாலியல் வன்கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. 

வேத காலந்தொட்டு இன்றைய இணையதள காலம் வரை பெண்களைப் போகப் பொருளாக சித்தரிப்பதில் வடிவங்கள்தான் மாறுபட்டனவேயொழிய தன்மை என்னவோ ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன-இருக்கினறன.

சமீபத்தில் முகநூலில் ஒரு முகவரால் பகிரப்பட்ட படமும் கவிதையும்.

கெஞ்சினேன் வஞ்சியை நெஞ்சிலே கொஞ்சிட !
எச்சமே இல்லையே மிச்சமே வைத்திட !
வஞ்சினால் நெஞ்சையும் பஞ்சனை மறைத்திட ! 
தத்தையோ மெத்தையில் முத்தமே பித்தமாய் !
சத்தமே இல்லையே முத்தமும் பகிர்ந்திட !
கட்டிலும் வீணடி கட்டுடல் கண்டிட !
நாணமும் எப்படி தொட்டிடை இழுத்திட ! 
உன்னிடை நூலடி மன்னவன் படர்ந்திட !
செய்வதும் என்னடி இரவினை நீட்டிட ?
கண்ணமும் முத்தமும் கலந்தே இருந்திட !
வெட்கமும் வேகமும் பிணைந்தே மலர்ந்திட ! 
தொடர்ந்திட அனத்திட இனிமையும் வளர்ந்திட ! 
"
தொடர்வோம்" என்றாள் தொல்லை விரும்பி 
"
மலர்ந்தேன் உனக்காய் வாழ்வின் முட்டும்


இக்கவிதையும் படமும் எத்தகைய எண்ணத்தை வாசகனிடம் ஏற்படுத்தும்?

ஆண்களின் இச்சையை தீர்ப்பதற்காகத்தான் பெண்கள் படைக்கப்பட்டுள்ளார்கள் என்கிற வலுவான கருத்தை வலியுறுத்தியது இந்து மதம். அதற்காகவே கோவில்களில் தேவதாசிகளை (விலை மாதர்களை) நியமித்தார்கள். தேவதாசிகள் கோவில் குருக்களின் இச்சையை தீர்ப்பதற்காக  பொட்டுக்கட்டி விடப்பட்டார்களா அல்லது ஊர் நாட்டாமைகளின் காமத்தை தீர்ப்பதற்காகவா என்கிற ஆய்வுக்கு செல்வது இங்கு நமது நோக்கமில்லை என்றாலும் பெண்ணானவள் ஆணுக்கு சுகத்தைத் தருபவள் என்கிற பெண்ணடிமைக் கருத்தை வலுவாக தோற்றுவித்தது தேவதாசி முறை என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. தேவதாசிப் பெண்ணுக்கு பாலியல் உறவில் ஈடபட விருப்பம் இல்லை என்றாலும் அவள் ஆண்களை மகிழ்வித்தாக வேண்டும். தன் ஆயுள் முழுக்க தேவதாசிப் பெண்கள் ஆண்களால் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு மட்டும் பாலியல் விருப்பம் இருக்கக் கூடாதா? பெண்களின் பாலியல் விருப்பத்தை - இச்சையை  தீர்த்துக் கொள்ள ஆண்களையும் பொட்டுக்கட்டிவிடுவது போன்ற எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்பதிலிருந்து பெண்களை மட்டுமே போகப் பொருளாக சித்தரித்துள்ளார்கள் என்பதை  நாம்  புரிந்து கொள்ள வேண்டும்.

(தேவதாசிகளே நாட்டியக்காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஒடிசாவைச் சேர்ந்த ஒரு தேவதாசி மூதாட்டி)

இவை மட்டுமல்ல பரதம் உள்ளிட்ட நாட்டியங்களை பெண்களுக்காவே உருவாக்கி கோவில்களில் ஆடவிட்டு இரசிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். இதையே இந்து மதத்தின் ஒரு பண்பாடாகவும் வளர்த்தெடுத்துள்ளார்கள். சில சமயங்களில் ஆண்களையும் பரதம் ஆடவிட்டாலும் பரத நாட்டியம் என்னவோ பெண்களை மையமாகக் கொண்டுதான் இன்றும் ஆடப்பட்டு வருகிறது.

இப்படி ஆலயங்களை மையமாகக் கொண்டுதான் பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் கருத்துருவாக்கம் இந்து மதத்தின் மூலம் வளர்க்கப்பட்டுள்ளது. புராணக் கதைகளும், பண்டைய இலக்கியங்களும், நமக்கு சொல்லப்பட்ட சரித்திரக் கதைகளும் இதைத்தான் வலியுறுத்தி வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்றைய திரைப்படங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும், வலைதளங்களும் பாலியல் வக்கிரத்தை ஒரு வெறியோடு  வளர்த்து வருகின்றன. 

அதே வேளையில்  ஆன்மீகம் பேசும் முற்றும் துணிந்த முனிகள் அரங்கேற்றும் காம லீலைகளையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

நித்தியானந்தா - காஞ்சிப் பெரியவாள் போன்ற முனிகளின் காமச்செயல்கள் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் தமிழகம் அறிந்த ஒன்றுதானே! இவர்களின் காமச்செயல்கள் சாமான்யனின் மனதில் பெண்கள் மீதான காம இச்சையை உண்டுபண்ணவில்லை என்று மறுக்க முடியுமா? இத்தகைய முனிகளின் நுனிகளை வெட்டியிருந்தால்கூட அது சமூகத்தில் ஒரு எச்சரிக்கை மணியை எழுப்பி இருக்கும். என்ன செய்ய? ஆன்மீகம் தோன்றிய காலம் தொட்டு இன்றைய நவீன காலம்வரை ஆன்மீகவாதிகளின் கோவணங்கள்தானே  அரசியலையும் தீர்மானிக்கின்றன. கோவணமே கட்டாத சாமிகளின் நுனிகளைத் தொட்டு ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் நிறைந்த இந்தியாவில் இதுவெல்லாம் 'சகஜமப்பா' என்றல்லவா கருத வைக்கிறது.
   


அரசமரத்தடி சாமி அரசல் பரசலாகச் செய்வதை ஐந்து நட்சத்திர விடுதிகளில் (மடாலயங்களில்) கமுக்கமாக முடிக்கிறான் கார்பரேட் சாமி.


(விவோகானந்தர் பற்றி பலவற்றில் எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் நித்தியானந்தாவை வெளிச்சம் போட்டுக் காட்டவே இதைப் பயன்படுத்தியுள்ளேன்)

பெண்களை போகப் பொருளாக பார்க்கும் கருத்துருவாக்கம் தொடங்கிய இடத்திலிருந்துதான் பாலியல் வக்கிரங்களுக்கு முடிவு கட்டுகின்ற போராட்டமும் தொடங்கப்பட வேண்டும்.

Sunday, January 13, 2013

புத்தகக் கண்காட்சி: எதற்காக?


இந்த ஆண்டு 750 அரங்குகள் - 10 இலட்சம் தலைப்புகள் 1 கோடி புத்தகங்கள் - சென்ற ஆண்டு ரூ12 கோடிக்கு விற்பனை என சென்னையில் நடைபெற்று வரும் 36 வது புத்தகக் கண்காட்சி பற்றி தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்படுத்தும் பரபரப்பைப் பார்க்கும் போது எழுத்துலகில் ஒரு மொபெரும் புரட்சி நடப்பதைப் போன்ற ஒரு பிரமிப்புதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கிப் படித்து வந்த நான் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் சென்னை புத்தகக் கண்காட்சியை எட்டிப் பார்க்கிறேன். சென்ற ஆண்டு நான் சில ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்த நூல்களில் கால் பங்கு நூல்களைக்கூட இன்னும் படித்து முடிக்கவில்லை. எனவே வாங்கியதைப் படித்துவிட்டு பிறகு மேற்கொண்டு வாங்கலாம் என நினைத்திருந்தேன். எனவே இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு செல்வதில்லை என முடிவெடுத்திருந்தேன்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் எழுத்தாளர்கள் பாமரன், கமலாலயன், கவிஞர் சல்மா, பதிப்பாளர் காந்தி கண்ணதாசன் ஆகியோர் பங்கு கொண்ட புத்தகக் கண்காட்சி பற்றிய கலந்துரையாடலைப் பார்த்த பிறகு இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதென முடிவெடுத்தேன்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்திலிருந்து

8 கோடி பேர் வாழுகின்ற தமிழகத்தில், ஒரு நூலின் 1200 படிகளை விற்பனை செய்ய ஒரு நூலாசிரியரருக்கு 15 ஆண்டுகளானதாகவும், மக்கள் புத்தகங்களுக்காக செலவிடுவதில்லை, வீடுகளில் படிப்பதற்கு தனி அறை கிடையாது, நூல்களைப் படிப்பதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிப்பதில்லை, இலக்கியம் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை, எழுதியது விற்பனையாகாத போது எழுத்தாளன் சோர்ந்து விடுகிறான் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சல்மா.

“பதிப்பாளனும் ஒரு வியாபாரிதான். புத்தககங்கள் விற்பனையாகாமல் முடங்கிப் போனால் போட்ட முதலை எடுக்க முடியவதில்லை. தீவிர இலக்கியங்கள் விற்பதற்கு புத்தகக் கண்காட்சி பெரிதும் உதவுகின்றன” என்கிற கண்காட்சியின் வியாபார நோக்கத்தை தெளிவு படுத்தினார் காந்தி கண்ணதாசன்.

“கோடிகளில் நூல்கள் விற்பனையாகி என்ன பயன்? எத்தகைய நூல்கள் விற்பனையாகின்றன என்பதே முக்கியம். ஆன்மீக - நியூமராலஜி போன்ற நூல்கள் அதிகம் விற்பனையாகி என்ன பயன்? நூல்களின் உள்ளடக்கமே இங்கு முக்கியம். சரியான நூல்கள் கோடிகளில் விற்பனையாகி இருந்தால் இந்நேரம் புரட்சியே நடந்திருக்கும். ஒரு எழுத்தாளன் மக்களோடு இருக்கும் போது விற்பனை ஒரு பிரச்சனையே இல்லை.  நான் எழுதிய 12 நூல்களும் தேங்கியதே இல்லை” என்பதைச் சொன்னதோடு “சிங்கிள் டீ, லைட் டீ தெரியும், ஆனால் ராயல்டி பற்றி தெரியாது” என பதிப்பகத்தாரின் மோசடிகளையும் போட்டுடைத்தார் பாமரன்.

கேரளத்தைப் போல, சில மேலை நாடுகளைப் போல தமிழகத்தில் நூல்களுக்கு - குறிப்பாக இலக்கியங்களுக்கு அதிக வரவேற்பில்லை என்பதே இந்த விவாதத்தில் மையமாக உணர்த்தப்பட்டது.

இந்த விவாதத்தைப் பார்த்த பிறகு ஒருவன் எதற்காக இவர்கள் எழுதும் நூல்களை வாங்க வேண்டும், எதற்காப் படிக்க வேண்டும் என்கிற கேள்விதான் என்னுள் எழுந்தது. இதற்கான விடையைத் தேடினேன். 2011 ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி கீழைக்காற்று நூல்வெளியீட்டு விழாவில் தோழர் மருதையன் ஆற்றிய உரை நினைவுக்கு வர உரையின் நூல் வடிவத்தை எடுத்துப் படித்தேன்.

எதற்காக?

அதன் பிறகு மேலும் சில ஐயங்கள் என்னுள் எழுந்தன. எதற்காக எழுத்தாளன் எழுத வேண்டும் ஓவியன் எதற்காக வரைய வேண்டும்? கவிஞன் எதற்காகப் பாடல் எழுத வேண்டும்? பாடகன் எதற்காகப் பாட வேண்டும்? பேச்சாளன் எதற்காக சொற்பொழிவாற்ற வேண்டும்? நடிகன் எதற்காக நடிக்க வேண்டும்? இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே சென்றன.

வாசகனோ, எழுத்தாளனோ, ஓவியனோ, பாடகனோ, பேச்சாளனோ, நடிகனோ இவர்கள் தங்களின் இன்பத்திற்காகவோ, இரசனைக்காகவோ, பொழுது போக்கிற்காகவோ, மகிழ்ச்சிக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, புகழ் பெறுவதற்காகவோ,  இன – மத – மொழி - பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகவோ என சிலவற்றிற்காகத்தான் வாசிக்கவும், எழுதவும், வரையவும், பாடவும், பேசவும், நடிக்கவும் செய்கின்றனர் என்பதை புரிந்து கொண்டேன்.

ஒரு விவாதத்திற்காக ஒரு நுலைப் படிப்பதற்குப் பதிலாக தான் இந்தியா டுடே படித்துக்கொண்டிருந்ததை இன்பத்துக்காகப் படிக்கிறேன் என்பதை ஒரு தோழர் உணர்த்தியதாக மருதையன் தனது உரையிலே சுட்டிக்காட்டுகிறார். நான்கூட நோக்கமின்றி நிறைய படிக்கிறேன். அப்படிப் படிப்பதில் ஒருவித இன்பம் இருக்கிறது. இத்தகைய இன்பத்திற்காகப் படிப்பதில் எவ்விதப் பயனும் இல்லை என்பதே உண்மை.

இன்பத்திற்காக, இரசனைக்காக, பொழுது போக்கிற்காக, மகிழ்ச்சிக்காக, பொருள் ஈட்டுவதற்காக, புகழ் பெறுவதற்காக, இன – மத – மொழி - பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக ஒருவன் செய்கிற செயல் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில்லை.

கடமை

படிப்பது, எழுதுவது, பாடுவது, வரைவது, நடிப்பது, பேசுவது இவைகளை ஒரு கலைஞன் தனது கடமையாகக் கொள்ள வேண்டும். இந்தக் கடமைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இந்த நோக்கம் நடைமுறைக்கானதாக இருக்க வேண்டும். அந்த நடைமுறை சமூகத்தில் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளையும், ஏழ்மையையும், சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் பாதுகாத்து வருகிற அல்லது அவற்றிற்கு காரணமாக இருக்கிற இச்சமூக கட்டமைப்பை மாற்றுவதற்கான புரட்சிகர நடைமுறையாக இருக்க வேண்டும்.

புத்தகக் கண்காட்சியின் பிரமிப்பைக் காணவே நான் இந்த ஆண்டு கண்காட்சிக்குச் சென்று வந்தேன். இலட்சக்கணக்கில் விற்பனையாகும் பகவத் கீதைகளோ, விவேகானந்தரின் போதனைகளோ, காந்தியின் சத்திய சோதனைகளோ, கல்கியின் பொன்னியின் செல்வன்களோ, யோக - தியானக் கலைகளோ, உடல் நல - ஆரோக்கிய நூல்களோ, சுயமுன்னேற்ற நூல்களோ, நியூமராலஜி - பக்தி இலக்கியங்களோ அல்லது உயிர்மை - காலச்சுவடுகளின் 'தீவிர' இலக்கியங்களோ சமூகத்திற்குத் தேவையான பாரதூரமான மாற்றங்கள் எதையும் ஏற்படுத்துவதில்லை. மற்றொருபுறம் சமூகத்தில் கேடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகப் போராடுகின்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல்களும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் - பெண்ணடிமைத்தனத்தையும் அடித்து வீழ்த்துகிற ஆற்றலைத் தரும் பெரியாரின் பேச்சும் - அம்பேத்கரின் எழுத்துக்களும், அதிகரித்து வரும் ஆதிக்கச் சாதிவெறி கொட்டத்தை முட்டி மோதி வீழ்த்த “ஆயிரம் காலம் அடிமை என்றாயே அரிசனன்ணு பேரு வைக்க யாரடா நாயே” போன்ற கோவனின் எழுச்சியூட்டும் பாடல்களும், பன்னாட்டுச் சுரண்டலுக்கு வழிவகுத்து வல்லரசு நாடுகளுக்கு அடிமையாகி வரும் இந்திய நாட்டை மீட்டெடுக்க பகத்சிங்கின் பேச்சும் - எழுத்துக்களுமே இன்றைய தேவை.

இந்த உண்மையை உணர்ந்த காரணத்தால்தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட என்ன செய்யலாம் என்பதை கண்டறியவும் அவற்றை மக்களிடையே எடுத்துச் செல்லவும் துணைபுரிகின்ற நூல்களாகத் தேடிப்பிடித்து வாங்கி வந்துள்ளேன்.

ஒருவன் தன் இரசனையை, பொழுது போக்கை, பொருள் ஈட்டுவதை, புகழ்பெறுவதைத் தாண்டி தனக்கான பிரதி பலன் எதையும் எதிர்பாராத சமூகத்தில் மாற்றம் நிகழுவதற்காக உழைப்பதில்தான் இன்பத்தைக் காணவேண்டும். அதுதான் நிறைவான இன்பமாக இருக்க முடியும்.

Monday, January 7, 2013

சிரிக்க வைக்கிறீங்களா? இல்லை சீரழிக்கிறீங்களா?

மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் திரைப்படத்துறையினருக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் 12.3 சதவீதம் சேவை வரி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இச்சேவை வரி விதிப்புக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சேவை வரி விதிப்பை எதிர்த்து சென்னையில் இன்று (07.01.2013) உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றுள்ளது. ரஜினி முதல் நளினி வரை என நடிகர் நடிகைகள் பட்டாளமும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்..சந்திரசேகரன் முதல் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி என திரைத்துறை முதலாளிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பத்து ரூபாய்க்கு மயிரை மழிச்சாலே சேவை வரி கட்டுவது உட்பட சுமார் 119 வகையான சேவை வரி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா? ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் நீங்கள் சேவை வரி செலுத்த மாட்டோம் என்கிறீர்கள்.


போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொடுத்த பேட்டிதான் கேளிக்கூத்தாக இருந்தது. “உங்களை சிரிக்க வைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியாதே. நாங்க எப்படி பிழைப்பது?” என ஆதங்கப் படுகிறார் நடிகர் விவேக். நீங்கள் திரைப்படங்கள் மூலம் எங்களை சிரிக்க மட்டுமா வைக்கிறீர்கள்? நீங்கள் ஊட்டும் காமத்தால் அன்றாடம் அரங்கேறும் பாலியல் – வன்புணர்ச்சிகளால் எங்கள் தமிழகம் அல்லவா சிரிப்பாய் சிரிக்கிறது.

அது சரி! உங்களுக்கு வேறு தொழில் தெரியாட்டி என்ன? வங்கக் கடலில் முங்கிப்போங்களேன். தமிழகமாவாவது உருப்படும். ஆனால் இதில்கூட ஆபத்து இருக்கிறது. கடலுக்குள் நீங்கள் மூழ்கிப் போனாலும் அங்கே சும்மாவா இருப்பீர்கள்? கடல் கன்னிகளை எல்லாம் துகில் உரித்துவிடுவீர்களே!

வேறு என்ன செய்யலாம்? அப்படியே பஸ்பமாக்கி விண்ணுலகம் அனுப்பலாமா? மண்ணுலக இரம்பாக்களையே துகிலுத்தவர்கள் விண்ணுலக இரம்பாக்களை சும்மாவா விடுவீர்கள்?

ஆமா.. நீங்க கலைச்சேவை செய்வதாகத்தானே அடிக்கடி சொல்லிக் கொள்கிறீர்கள். அதற்காகத்தானே ஆண்டுதோறும் அரசாங்கமும் உங்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. நீங்களே சேவை செய்வதை ஒப்புக் கொண்ட பிறகு சேவை வரி செலுத்த மாட்டேன் என்று போராடுவது செய்கிற தொழிலுக்கே துரோகம் செய்வதாகத் தோன்றவில்லையா?
 
சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும்தான் ஆடை அவிழ்ப்புகளை அரங்கேற்றுகிறீர்கள்.போராட்டத்தில் கூடவா உள்ளாடையை மேலாடையாக்குவது? உங்கள் நமீதாக்களால் “போராட்டம்” கூட முக்காடிட்டுக் கொண்டதே!

ஆல்ககால்கூட சில வேலைகளில் சீக்காளிகளை சீர் படுத்துகிறது. என்பதற்காக ஊரெல்லாம்  ஓடவிட்டால் என்னவாகும் என்பதைத்தான் தமிழகம் அனுபவித்து வருகிறதே!

நீங்கள் அள்ளிக் கொட்டும் குப்பைகளால் “வழக்கு எண்:18/9” போன்ற வைரங்களைகூட புதையுண்டு போகிறதே!.

அப்பா! போதுமடா சாமி! நீங்கள் சேவையும் செய்ய வேண்டாம். சேவை வரியையும் செலுத்த வேண்டாம். எங்கள் தமிழகத்தை குப்பை மேடாக்காமல் விட்டு வைத்தால் போதும். உங்களுக்கு கோடி புண்ணியமாகும்!

Friday, January 4, 2013

அசதியில் தொடங்கி வெற்றியில் முடியும் 2013!


புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்கிற இராசிபலன் கணிப்புகளும் கூடவே வந்துவிட்டன. பழைய ஆண்டு கழிவதிலும் புதிய ஆண்டு வருவதிலும் ஆண்டு எண்ணிக்கை கணக்கைத் தவிர வேறென்ன இருக்கு? வாழ்த்துகள் சொல்வதுகூட ஒரு சம்பிரதாயமாகி விட்டது. இராசிபலன் கணிப்பின்படி எதுவும் நடப்பதுவுமில்லை; வாழ்த்துகிறவாறு எல்லோரும் வாழ்ந்து விடுவதுமில்லை

நாம் மேற்கொள்ளவிருக்கின்ற வேலைகளை முடிக்க நேரம் - நாள் -  வாரம் - மாதம் என காலவரையறை தீர்மானிப்பதைப்போல ஆண்டுகளையும் கணக்கில் கொள்கிறோம். நாம் தீர்மானித்த வேலைகள் காலவரையறைக்குள் நிறைவேறினவா என பரிசீலிப்பதற்கும் புதிய வேலைகளுக்கான காலவரையறைகளை தீர்மானிப்பதற்கும் இந்த நேரக் கணக்குகள் பயன்படுகின்றன. மேலும் ஆண்டொன்று போனால் வயதொன்றும் போகும். இதற்கும் அப்பால் ஆண்டுகளுக்கு என்ன வேலை இருக்கு?

நிலவுகின்ற சமூக அமைப்பு ஏற்படுத்தும் எதிர்காலம் பற்றிய அச்சமே இராசிபலன்களை நம்ப வைக்கிறது. மரத்தடி சோதிடரில் தொடங்கி சோதிட சிகாமணிகள் - பத்திரிக்கை - தொலைக்காட்சி ஊடகங்கள் என இதை வைத்து ஒரு பெருங்கூட்டமே பிழைப்பு நடத்துகிறது. நமது அறியாமையே இவர்களின் மூலதனம். அறியாமையிலிருந்து நாம் விடுபடாதவரை மேற்கண்ட பிழைப்புவாதிகளுக்கு ‘மிதுன இராசிக்காரனைப்போல எப்போதுமே இலாபமும் நன்மையும்தான் பலனாக இருக்கும்; நம்புகின்ற நமக்கோ ரிசப இராசிக்காரனைப்போல நட்டமும் செலவும்தான் பலனாக மிஞ்சும்’.

அசதி
அமைதி
அலைச்சல்
ஆக்கம்
ஆதரவு
ஆதாயம்
ஆர்வம்
ஆரோக்கியம்
இலாபம்
இன்பம்
உதவி
உயர்வு
உழைப்பு
உற்சாகம்
ஓய்வு
கவலை
குழப்பம்
சாதனை
சாந்தம்
சிந்தனை
சினம்
சுபம்
சோர்வு
தனம்
தாமதம்
திறமை
தோல்வி
நட்டம்
நட்பு
நம்பிக்கை
நிம்மதி
நலம்
நற்செயல்
நன்மை
நிறைவு
பக்தி
பகை
பணிவு
பயம்
பரிசு
பரிவு
பாசம்
பாராட்டு
பெருமை
பொறுமை
போட்டி
மறதி
முயற்சி
மேன்மை
வரவு
வெற்றி.....

என சில பல சொற்களை மேசம் முதல் மீனம் வரை உள்ள 12 இராசிக்காரர்களுக்கும் பகிர்ந்து பிய்த்துப்போட்டுவிட்டால் முடிந்தது அவர்களின் இராசிபலன் கணிப்பு. இப்படிப்பட்ட சொற்களில் ஒரே பொருள் தரக்கூடிய சொற்கள் பல இருப்பதையும் நாம் காண முடியும்.

பார்த்தீர்களா? இதில்கூட அசதியில் தொடங்கி வெற்றியில் முடிகிறது. சொற்களைத் தேர்வு செய்வதற்குக்கூட இவர்கள் அறை போட்டு சிந்திப்பார்கள் போல!
  
ஒரே சொல்லில் சொன்னால் அது தினப்பலன். சற்று பொருள் விளக்கம் கொடுத்து ஒரு வாக்கியத்தில் சொன்னால் அது வாரப்பலன். அதையே ஒரு பாராவாக்கி விரித்துக் கூறினால் அது மாதப்பலன். ஒரு பக்க அளவில் கட்டுரையாக்கிக் கொடுத்தால் அதுவே அந்த ஆண்டிற்கான பலன்.

இத்தகைய பித்தலாட்டங்களை புரிந்து கொள்ள நாம் அறைபோட்டு சிந்திக்கவில்லை என்றாலும் முதலில் அசைபோடவாவது முயற்சிப்போமே!

இராசிபலன்கள் குறித்து நான் ஏற்கனவே வெளியிட்ட  சில பதிவுகள் இதோ.  
நன்றி!

ஊரான்