Friday, August 17, 2018

இது என்ன புதுசா பார்ப்பன நீதி மன்றம்!


பெண்கள் மீதான துன்புருத்தல்கள், இந்துத் திருமணங்கள், சொத்து மற்றும் பணம் கொடுக்கல் - வாங்கல் உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் இந்துக்களுக்கிடையில் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்த்து வைக்க 15.08.2018 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் முதலாவது பார்ப்பன நீதி மன்றம் ஒன்று அகில பாரதிய இந்து மகா சபாவினரால் தொடங்கப்பட்டுள்ளது. .

இந்து மகா சபாவின் தேசிய உதவித் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா,
அதனுடைய தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே என்பவரை பார்ப்பன நீதி மன்றத்தின் முதல் நீதிபதியாக நியமனம் செய்துள்ளார்.


பண்டிட் அசோக் ஷர்மா (வெள்ளை தாடி)  பூஜா ஷகுன் பாண்டேவை பார்ப்பன நீதி மன்றத்தின் முதல் நீதிபதியாக நியமனம் செய்கிறார். 

பார்ப்பனர்களால் தொடங்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு இந்து நீதி மன்றம் (Hindu Court) என்று பெயராம்.

எல்லோருக்கும் ஒரே அரசியல் சாசன சட்டம்தான் இருக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கான தனி ஷரியத் சட்டம் மற்றும் ஷரியத் நீதி மன்றங்கள் இருக்கக்கூடாது என இவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்களாம். அரசிடமிருந்து தங்களுக்குச் சாதகமாக முடிவு எதுவும் வராததால் இந்த பார்ப்பன நீதி மன்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்களாம். அது சரி! இது ஏட்டிக்குப் போட்டியானது எனில் இந்த பார்ப்பன நீதி மன்றங்களால் இஸ்லாமியர்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. மாறாக அது இந்துக்களைத்தானே கடித்து குதரப் போகிறது.

இந்த நீதி மன்றத்திற்கான விதிமுறைகளை வரும் அக்டோபர் 2 அன்று வெளியிட உள்ளார்களாம். நவம்பர் 15 ந் தேதி ஐந்து நீதிபதிகளை நியமிக்க போகிறார்களாம்.

தற்போது இந்துக்களை சாதியின் அடிப்படையில் பிளவுபடுத்தி ஆட்சி நடக்கிறதாம். அதனால் பார்ப்பன நீதி மன்றங்கள் மூலம் இந்துக்களை ஒன்றுபடுத்தப் போகிறார்களாம். இவர்கள் தனிச் சிறைச் சாலைகளையும் உருவாக்கப் போகிறார்களாம். இவர்களது நீதி மன்றங்களில் அதிக பட்ச தண்டணை மரண தண்டனையாக இருக்குமாம்.

இந்தியாவில் உள்ள சிவில் நீதி மன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் நிலுலையில் உள்ளதால் ஏழைகளால் நீதியைய் பெற முடியவில்லையாம். இந்த பார்ப்பன நீதி மன்றங்கள் விரைவாகவும் மலிவாகவும் நீதியைப் பெற்றுத் தருமாம்.

ஷரியத் சட்டம் குறித்து நமக்கு மாறுபட்ட கருத்து இருந்த போதிலும் இஸ்லாமியர்களுக்கு தனி ஷரியத் சட்டம். இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்கள் விசாரனை செய்து தீர்ப்பு வழங்குகிறார்கள்.

ஆனால் இங்கு,

கோவில்கள்தானே பார்ப்பனர்களின் உயர் நீதி மன்றங்கள். மனுவின் சாதிச் சட்டங்கள்தானே அங்கு கோலோச்சுகிறது. 

தொடர்புடைய பதிவு:


Tuesday, August 7, 2018

கலைஞர் கடைசி அசுரனா?


இவன் வேதம் கூறும் நியதிகளையும், நெறிமுறைகளையும் ஒதுக்கித் தள்ளினான். மனுஸ்மிருதியின் விதிகளுக்கு விரோதமாக  செயல்பட்டான். இவனது ஆட்சியில் வேத நூல்களைக் கற்க தடை விதித்தான். இவன்தான் ஹரிவம்சம் எனும் நூலில் சொல்லப்ட்டுள்ள வீணா என்கிற அரசன்.

இவன் ஒரு பலம் கொண்ட மன்னன். இவனே ஒரு பலசாலி என்பதால் பார்ப்பனர்களின் ஆலோசனைகளை கேட்க மறுத்தான். இவன்தான் மகாபாரதம், ஆதிபருவத்தில் குறிப்பிடப்படும் புரூவரன் என்கிற மன்னன்.

இவன் பார்ப்பனர்களின் வேத மந்திரங்களை ஏற்க மறுத்தான். இவன் புரூவரனின் மகன். இவன்தான் மகாபாரதம், உத்யோகப் பருவத்தில் சொல்லப்பட்டுள்ள நகுஷன் என்கிற மன்னன்.

இவன் பார்ப்பன ரிஷி வசிட்டருடன் முரண்பட்டதால் சாபத்திற்குள்ளாகி கொல்லப்பட்டவன். இவன்தான் விஷ்ணு புராணித்தில  சொல்லப்ட்டுள்ள நிமி என்கிற அரசன்.

வேதங்கள் கூடாது என்பதனால் இவனது ஆட்சியில் வேத பாட்சாலைகள் கிடையாது. இவன்தான் வாமண புராணத்தில் சொல்லப்படும் கேரள மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட மகாபலி சக்ரவர்த்தி. சும்மா விடுவார்களா பார்ப்னர்கள்? சூழ்ச்சியால் மகாபலியை ஒழித்துக் கட்டினார்கள்.

பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ள இரணியன் என்கிற இரணிய கசிபு. இவன் பிரகலாதனின் தந்தை. இவன் பார்ப்பனர்களை எதிர்த்த ஒரு மாபெரும் அரசன். நரசிங்க அவதாரம் மூலம் இவனையும் கொலை செய்தனர் பார்ப்பனர்கள்.

இலங்கைக்கே அதிபதியாக இருந்த இராவணனைக் கொன்றார்கள். இப்படி பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட மன்னர்களின் பட்டியல் மிக நீளமானது.

மன்னர்களின் ஆட்சிகள் எல்லாம் ஒன்றும் பொதுவுடமை ஆட்சிகள் அல்ல. இவர்களது ஆட்சி காலத்திலும் மக்கள் பல்வேறு அரசியல்-பொருளாதார பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்திருப்பார்கள். மன்னரும் அவரது குடும்பமும் செல்வச் செழிப்போடு சுகபோகமாக வாழ்ந்திருப்பார்கள்.

இவர்கள் மாபெரும் சக்ரவர்த்திகளாக, மன்னர்களாக, அரசர்களாக கோலாச்சிய போதும் இவர்களை ஏன் அசுரர்களாக, அரக்கர்களாக அதாவது இழிவானவர்களாக புராணங்கள் அடையாளப்படுத்துகின்றன? இவர்களது ஆட்சிக் காலத்தில் மக்கள் தும்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார்கள் என்பதற்காகவா? அல்லது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தை ஏற்க மறுத்ததற்காகவா?

பார்ப்பனர்களை வணங்காமையால் பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் உள்ளிட்ட நாட்டை ஆண்ட சத்திரியர்கள் அனைவரையும் மூன்றாம் வர்ணத்திலிருந்து நான்காம் வர்ணமான இழிவான சூத்திர நிலைக்கு தகுதி இறக்கம் செய்கிறான் மனு. (மனுஸ்மிருதி 10 - 43, 44).


யாரெல்லாம் வேதங்களையும், பார்ப்பன இந்து மதத்தின் வர்ணாசிரம தத்துவங்களையும் கேள்விக்குள்ளாக்கினார்களோ, அவர்களெல்லாம் அசுரர்கள் என இழிவு படுத்தப்பட்டார்கள். சதி மற்றும் நயவஞ்சகத்தால் கொன்றொழிக்கப்பட்டார்கள். புத்தரில் தொடங்கி பல்வேறு மன்னர்கள் ஈடாக அதைத் தொடர்ந்து பசவன்னர், மகாத்மா பூலே, பெரியார், அண்ணா, அம்பேத்கர், கௌரிலங்கேஷ்நரேந்திர தபோல்கர்கோவிந்த் பன்சாரேஎம்.எம்.கல்புர்கி, என்கிற இந்த அசுரர்களின் பட்டியல் மிக நீளமானது. இந்த வரிசையில் இதோ இன்னுமொரு அசுரன். யாருடைய மரணத்தை பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்களோ, யாருடைய மரணம் பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அவர் நிச்சயம் அசுரர்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு இது இறுதி மகிழ்ச்சி அல்ல!