Monday, February 23, 2015

நேற்று வரை காதலையே காதலித்தாய்! இன்று மட்டும் காதல் கசப்பதேன்?

காதல் இல்லை என்றால் ……. 
ஆட்டனத்தி – ஆதிமந்தி இல்லை
ரோமியோ - ஜுலியட் இல்லை
சகுந்தலை - துஷ்யந்தன் இல்லை
லைலா - மஜ்னூ இல்லை
மும்தாஜ் - ஷாஜஹான் இல்லை
கிளியோபட்ரா - மார்க் அண்டனி இல்லை
அம்பிகாபதி - அமராவதி இல்லை
தேவதாஸ் - பார்வதி இல்லை
உதயணன் - வாசவதத்தை இல்லை
மாதவி - கோவலன் இல்லை
சிலம்பில்லை - சிலப்பதிகாரமில்லை
வள்ளி இல்லை - முருகன் இல்லை
காதற் சிறப்புரைக்கும் 133-ஆம் அதிகாரம் இல்லை
இலக்கியங்கள் இல்லை - காவியங்கள் இல்லை!

காதல் இல்லை என்றால் ……. 
போரில்லை - வீரமில்லை
கதைகள் இல்லை - நாடகங்கள் இல்லை
நாவல் இல்லை - கவிதை இல்லை
ஓவியம் இல்லை – சிற்பமில்லை
குயில் இல்லை – ஓசை இல்லை
பாடல் இல்லை - இசை இல்லை
ஆட்டமில்லை - பாட்டமில்லை!

காதல் இல்லை என்றால் ……. 
விசுவநாதன் - ராமமூர்த்தி இல்லை
அடிமைப் பெண்ணும் - ஆயிரத்தில் ஒருவனும் இல்லை
ஸ்ரீதர் இல்லை – காதல் சினிமா இல்லை
சாம்பார் இல்லை – சாவித்திரி இல்லை
சிவாஜி இல்லை – பத்மினி இல்லை
எம்.ஜி.ஆர் இல்லை – சரோஜாதேவி இல்லை!

காதல் இல்லை என்றால் ……. 
பாலசந்தரும் – அவள் ஒரு தொடர் கதையும் இல்லை
பாரதிராஜாவும் - பதினாறு வயதும் இல்லை
மயிலுமில்லை - ஆவாரம் பூவுமில்லை
வைரமுத்து - வாலி இல்லை
இசையும் - இசைஞானியும் இல்லை
‘நானொரு சிந்து! காவடிச் சிந்து!’ ராகம் ஏதுமில்லை
சிவகுமாரைத் தேடும் அன்னக்கிளி இல்லை
கமல் இல்லை – வாழ்வே மாயமில்லை
கார்த்திக் - ராதா இல்லை; கடலின் அலைகள் இல்லை
மோகன் இல்லை - அருக்கானி இல்லை
சினிமா இல்லை - சின்னத்திரை இல்லை!

காதல் இல்லை என்றால் ……. 
'எவர் கிரீன்' 80 இல்லை
'சன் டி.வி' - 'விஜய் டி.வி' இல்லை
மான் இல்லை – மயில் இல்லை
கலா 'மாஸ்டர்' – 'கெமிஸ்ட்ரி' இல்லை

காதல் இல்லை என்றால் ……. 
வானம் இல்லை - மேகமில்லை
நிலவில்லை - குளிரில்லை
மலை இல்லை - நதி இல்லை
மலர் இல்லை - வாசமில்லை
தேனில்லை – வண்டில்லை
தென்றலில்லை - மூச்சுக் காற்றின் பரிசமில்லை
மொத்தத்தில்-
ஊன் இல்லை - உயிரில்லை
நீ இல்லை - நான் இல்லை
ஏன்! இவ்வையகமே இல்லை!

காதல் உனக்கு கசப்பதேன்?
மேலே பார்!
நேற்று வரை 
காதலையே காதலித்தாய்.
இன்று மட்டும் காதல் உனக்கு கசப்பதேன்?

இந்து முன்னணியும் – அர்ஜூன் சம்பத்தும்
ஈஸ்வரன்களும் - ராமதாசன்களும் 
கழுதைப் புலிகளும் - நாய்களும்  
காதல் சமுத்திரத்தில் சாதி வெறி நஞ்சைக் கலப்பதாலா?

எழு கடலிலும் ஆழ்கடலிலும் தேடு!

சிங்கிகளும் - வஞ்ஜிரங்களும்
வவ்வாவும் - சீலாவும்
இறாலும் - சுறாவும்
திருக்கையும் - சங்கராவும்
மத்தியும் - நெத்திலியும்
வாலையும் - கோலாவும்
பாறையும் - சூறையும்
கனவாயும் - கொடுவாயும் 
என
ஏறாளமாய் இருக்க-

அயிரைகள் குரவைகளுக்காக 
சேறு-சகதிகளில் புரண்டது போதும்
குட்டைகளையும் கு'ல'ங்களையும் விட்டேறு!

தொடர்புடைய பதிவுகள்:

அருந்ததியர் முதல் பார்ப்பனர் வரை: வளரும் காதல்

செவ்வாய் கிரகமும் சாதித் தூய்மையும்!

குலநாசம் ஓங்கட்டும்!

காதலற்ற உலகை நோக்கி.....!

Saturday, February 21, 2015

அருந்ததியர் முதல் பார்ப்பனர் வரை: வளரும் காதல்

பறையர்+செட்டியார்
பறையர்+முதலியார்
பார்ப்பனர்+பறையர்
பறையர்+நாடார்
முத்தரையர்+முதலியார்
நாயுடு+அருந்ததியர்
நாயுடு+பறையர்
முதலியார்+மீனவர்(பர்வதராஜகுலம்)
பறையர்+செட்டியார்
வன்னியர்+நாயுடு
வெள்ளாளக்கவுண்டர்+யாதவர்
முதலியார்+பார்ப்பனர்
பிள்ளை+கள்ளர்
நாயுடு+பறையர்
வெள்ளாளக்கவுண்டர்+வன்னியர்
வன்னியர்+பார்ப்பனர்
இஸ்லாமியர்+பறையர்

(ர்-விகுதி:காதல் மறியாதைக்காக; சாதி மறியாதைக்காக அல்ல)

இப்படி நீள்கின்றன கடந்த சில ஆண்டுகளில் எனக்குத் தெரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட இணைகளின் பட்டியல். பெரும்பாலும் இவர்களின் திருமண விழாக்களில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

மேற்கண்ட இணைப்பட்டியலில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிகள் பெண்களைக் குறிக்கும். எ.கா: நாயுடு(பெண்)+பறையர்(ஆண்)

இந்த இணைகள் எல்லாம் நடுத்தர வர்க்க இணைகள். பெரும்பாலும் இவர்கள் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.

முதலில் இருதரப்பிலும் காதல் இணைகளை பிரிக்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் காதலர்கள் உறுதி குலையாமல் இருந்ததால் முறைப்படி பெற்றோர்களால் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில இணைகள் தற்போது ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களாகவும் ஆகிவிட்டனர். இதுவரை எந்த இணையும் பிரிந்ததில்லை. பெற்றோர்கள், உறவினர்களிடமிருந்து இழிசொற்கள்-பழிசொற்கள் வந்தாலும் அவற்றை எல்லாம் துச்சமென தூக்கி எறிவதோடு இழிப்போரையும்–பழிப்போரையும் இடித்துரைத்து வெற்றி காண்கின்றனர்.

சாதி வெறியர்கள் தொடர்ந்து காதலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினாலும், இந்து மதவெறியர்கள் சாதித்தூய்மையைப் பாதுகாத்திட கழுதையாய்க் கத்தினாலும் காதல் மணம் புரிவோர் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகின்றன. இன்றுகூட பறையர்+முதலியார் இணை மணவிழா அழைப்பிதழ் ஒன்று எனக்கு வந்தது.

சமூகத்தின் எதார்த்தமாக காதல் வளர்ந்து வருகின்ற இன்றைய சூழலில் காதலே இல்லாத சமூகம் சாத்தியமா? சாத்தியமென்றால் அச்சமூகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அடுத்த பதிவில் பார்ப்போம்.


தொடர்புடைய பதிவுகள்:

Tuesday, February 17, 2015

செவ்வாய் கிரகமும் சாதித் தூய்மையும்!

வெப்ப மண்டலத்தில் வாழும் நமது நிறம் என்னவாக இருக்க வேண்டும்? நம்மைப் போன்ற வெப்ப மண்டலத்தில் வாழும் எத்தியோப்பியா, நைஜீரியா, சூடான் போன்ற ஆப்பிரிக்க நாட்டு மக்களின் நிறம் இன்றுகூட என்னவாக இருக்கிறது? அதுவே அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்களின் நிறம் எப்படி மாறியது?

இனத்தூய்மை காக்கப்பட்டிருந்தால் நாமெல்லாம் லெமூரியர்களாக இருந்திருப்போம். என்ன செய்ய? லெமூரியாவை கடல் உள்வாங்கிய போது நாம் வடக்கு நோக்கி நகர்ந்திருக்க வேண்டும். இதனால் சற்றே மாறுபட்ட தட்ப வெட்ப சூழலில் வாழ நேரிட்ட போது நமது நிறம் ஓரளவு மாற்றத்தைக் கண்டிருக்க வேண்டும். இதற்குக்கூட சிலநூறு ஆயிரம் ஆண்டுகள் பிடித்திருக்கும்.

அதே வேளையில் உலகெங்கும் இனங்களின் இடப்பெயர்வுகளும் அவைகளுக்குள் ஒன்று கலத்தலும் தவிர்க்க முடியாதவையாக மாறியிருக்க வேண்டும். அதுவும் ஆரியர்கள், அராபியர்கள் உள்ளிட்ட வெண் தோல் இனத்தவர்கள் நம்முடன் கனிசமாக ஒன்று கலந்திருக்க வேண்டும். அதனால்தான் நம்மிடையே இன்று சிவப்பு நிறமும், மாநிறமும் அதிகரித்துள்ளன. நம்மிடையே ‘பாப்பாத்திகள்’ எப்படி தோன்றினார்கள்? ஆங்கிலேயன் ஓராயிரம் ஆண்டுகள் நம்மை ஆண்டிருந்தால் ‘வெள்ளைக்காரிகளை’ நாம் அதிகம் கண்டிருப்போம்’. இன்று அசலான சாதிக்காரன் ஒருவனும் இல்லை. இனக்கலப்பின் விளைவே இன்று நாம் காணும் பல்வேறு சாதிகளும் அதன் உட்சாதிகளும்.  (மனு: 10: 1- 131).

ஊரைத்தாண்டி மட்டுமல்ல மாநிலங்கள் பல கடந்து, நாடுகள் பல கடந்து, கண்டங்கள் பல கடந்து இன்று நம் வீட்டுப் பையனும் பெண்ணும் உலகையே வலம் வரும் இன்றைய உலக மயச்சூழலில் சாதித் தூய்மை பற்றி பேசுகிறீர்களே! இதுவெல்லாம் சாத்தியமா? தன் ஊர்தான் உலகம் என்று வாழ்பவனுக்கு மட்டும் உங்களது சாதித்தூய்மை எடுபடலாம். அதுவும் பக்கத்து ஊர்க்காரன் உங்களது ஊருக்குள் திருட்டுத்தனமாக நுழையாதவரை.

சாதிக்காவலர்களே! கொஞ்சம் செவ்வாய் கிரகத்தை அன்னாந்து பாருங்கள். அங்கே அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பியா உள்ளிட்ட கண்டங்களிலிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு மத-இன-சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் வாழப்போகிறார்கள். இந்தியாவிலிருந்து ஏன் கேரளாவிலிருந்துகூட செவ்வாய்க்குச் செல்கிறார்கள் தெரியுமா?

சாதித்தூய்மை பற்றி பேசும் வன்னியன், தேவன், கள்ளன், நாடான் உள்ளிட்ட இன்ன பிற தமிழ்ச்சாதி இளைஞர்களே! கருப்பாய் உள்ள தமிழ்ப் பெண்களை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு நீங்கள் மட்டும் ஏன் சிவப்பாய் இருக்கும் வெள்ளைப் பெண்களை மட்டும் உங்களது வாழ்க்கைத் துணையாய் தேர்வு செய்கிறீர்கள்? உங்களது வாரிசு அசலான சாதியாய் - கருப்பாய் இருப்பதற்குப் பதிலாக கலப்பாய் இருப்பதையே விரும்புகிறீர்களே! அது ஏன்?

நீங்களே உங்களது சாதித்தூய்மையை காக்க முயலாத போது, காதலால் மட்டும் சாதித் தூய்மை கெட்டுப் போவதாக கூச்சலிடுகிறீர்களே! இது உங்களுக்கே நியாமாகப் படுகிறதா?

காதல் இல்லாத உலகம் சாத்தியமா? அடுத்த பதிவில் பார்ப்போம்.

Monday, February 16, 2015

குலநாசம் ஓங்கட்டும்!

“ஸ்ரீகிருஷ்ணா! கௌரவர்களைக் கொன்றுவிட்டால் குலநாசமாகிவிடும்; குலநாசம் ஏற்பட்டால் அதர்மம் பெருகும்; குலப்பெண்கள் நடத்தை கெட்டுப் போவார்கள்; பெண்கள் நடத்தைக் கெட்டுப் போனால் வர்ணக் கலப்பு உண்டாகிவிடும்; வர்ணக் கலப்பு குலத்தை நரகத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியது; வர்ணக் கலப்பால் சாதி தர்மங்கள் அழிந்து விடும்; குலதர்மங்கள் அழிந்துவிட்டால் நரகவாசம் ஏற்படும்; அதனால் போர் வேண்டாம்!”

என கண்ணனைப் பார்த்துக் கூறிவிட்டு அம்புகளுடன் வில்லை எறிந்துவிட்டு உட்கார்ந்துவிட்டான் அர்ச்சுனன். (பகவத்கீதை 1:37-47).

அதாவது போரில் ஆண்கள் மாண்டு போனால் பெண்கள் கண்டவனோடெல்லாம் கள்ள உறவு வைத்துக் கொள்வார்கள். கள்ள உறவில் பிள்ளைகள் பிறந்துவிட்டால் சாதிக் கலப்பு ஏற்பட்டு சாதி தர்மம் அழிந்து விடும் என்பதே அர்ச்சுனனின் கவலை. அர்ச்சுனன் சத்திரியன் அல்லவா!

சாதி தர்மத்தைக் காப்பதற்காக மிகக் கீழ்நிலையில் உள்ள சூத்திரன் தன்சாதிப் பெண்களை மட்டுமே மனைவியாக்கிக் கொள்ளலாமேயொழிய உயர்ந்த சாதிப் பெண்களை மனைவியாக்கிக் கொள்ளக் கூடாது (மனு:9:157) என்றும், நான்கு வர்ணசாதிகளும் தன் தன் சாதிகளுக்குள்ளேயே மணம் முடிக்க வேண்டும் (மனு: 10:5) எனவும்  விதி வகுத்து வைத்தான் மனு.

என்னதான் விதி வகுத்து வைத்தாலும் வர்ணக் கலப்பை மனுவால் தடுக்க முடியவில்லை.

அதனால்தான் நான்கு வர்ணங்களுக்கிடையில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்குப் (காதல் இன்றி கலப்பு மணம் ஏது!) பிறந்த வாரிசுகளை அனுலோம சாதி, பிரதிலோம சாதி, அந்தராள சாதி, விராத்திய சாதி, பாகிய சாதி எனச் சாதிகளாகப் பகுத்து இவைகளுக்குள் அம்பட்டன், மீனவன், தச்சன், ஒட்டன் உள்ளிட்ட பல்வேறு சாதிப் பிரிவுகளாக மக்களை அடையாளப்படுத்தி அந்தந்த சாதிகளுக்கான தொழிலையும், அவரவர்களுக்கான தர்மங்களையும், வசிக்க வேண்டி இடங்களையும் தீர்மானித்து அதையும் விதியாக்கினான் அனு. (மனு:10:1-131).

பிராமணன், சத்திரியன், வைசியன் உள்ளிட்ட மேல் சாதிப் பெண்களை கீழ்சாதி சூத்திரன் மணம் முடிக்கக்கூடாது என்றான் அன்றைய மனுவாதி.

பார்ப்பனன், முதலியான், பிள்ளையான், கவுண்டன், நாயுடு, ரெட்டி, செட்டி, வன்னியன், கள்ளன், தேவன், நாடான், முத்தரையன், கோனான் உள்ளிட்ட உயர்சாதி வீட்டுப் பெண்களை கீழ்சாதி தாழ்த்தப்பட்டவன் மணம் முடிக்கக் கூடாது என்கின்றனர் இன்றைய மனுவாதிகள்.

அன்று அர்ச்சுனன் பெயரால்  வர்ண சாதிக் கலப்பை தடுப்பதன் மூலம் வர்ண சாதி கௌரவத்தைக் காக்க முயன்றான் மனு.  

இன்று அதே கவலையோடு காதலர் தின எதிர்ப்பு என்ற போர்வையில் காதலை எதிர்ப்பதன் மூலம் சாதிக் கலப்பை தடுத்து தன் தன் சாதிக் கௌரவத்தைக் காக்க மனுவின் வழியில் முயல்கின்றனர் இன்றைய மனுவாதிகள்.

காதலுக்கு எதிராக - சாதிக் கலப்பிற்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளாக கூச்சல் போடும் மனுவாதிகள் சாதிக் கௌரவத்தைக் காத்தார்களா இல்லை சாதிக் கௌரவம் இவர்களை சந்தி சிரிக்க வைத்ததா என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். 

Sunday, February 15, 2015

காதலற்ற உலகை நோக்கி.....!

ஆஸ்திரேலியாவின் புனித வின்சென்ட் வளைகுடா அருகில் அடிலெய்டில் இன்று மாலை ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் விராத்கோலியின் அதிரடியில் உருவான கிரிக்கெட் சுனாமி பசுபிக் கடலைத்தாண்டி இந்தியாவில் மகிழ்ச்சி அலைகளை அள்ளிக் கொட்டியதால் மக்கள் திக்குமுக்காடிவிட்டார்களாம். இந்த அலை ஒரே நொடியில் இந்திய மக்களின் தேசபக்தியை இமயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டதால் இந்த தருணத்தில் தேச ஒற்றுமையை பாதுகாக்கவும் தேசத்தின் பெருமையை நிலைநாட்டவும் தலைவர்கள் வாழ்த்து மழைகளை பொழியத் தொடங்கிவிட்டனர். பாருங்களேன்! கலைஞர்கூட இந்த மகிழ்ச்சி அலையில் மிதக்கும் போது சாமான்யர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

இரண்டு நாட்களாக இந்தியாவை உலுக்கிய காதலர் தினக் கொண்டாட்டங்களும் - எதிர்ப்புகளும்கூட இந்த கிரிக்கெட் சுனாமியில் காணாமல் போய்விட்டனவோ! காதலர் தினக் கொண்டாட்டங்கள் வேண்டுமானால் வருவதும் போவதுமாக இருக்கலாம் ஆனால் எதிர்ப்புகள் மட்டும் எப்போதும் தொடரவே செய்கின்றன. ஏன் எதிர்ப்புகள் மட்டும் தொடர்கின்றன?

காதலை எதிர்ப்பவர்கள் காதலையும் காதல் திருமணங்களையும் எதிர்க்கவில்லையாம். திட்டமிட்ட காதலையும் நாடகக் காதலையும் மட்டும்தான் எதிர்க்கிறார்களாம். அறியாப் பருவத்தில் காதலித்தால் ”எது சரி! எது தவறு!” என்பது தெரியாதாம். 25 வயதுக்கு மேல் பக்குவம் வந்த பிறகு காதலிக்கலாமாம்; படித்துவிட்டு காதலிக்கலாமாம்; வேலைக்குச் சென்று பிறகு வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகும் காதலிக்கலாமாம். ஆனால் அப்படிக் காதலித்தாலும் பெற்றோர் ஒப்புதலின்றி திருமணம் செய்து கொள்ளக்கூடாதாம்?

காதல் திருமணங்களில் 5% மட்டுமே வெற்றி பெறுகின்றனவாம். 95% காதல் திருமணங்கள் தோல்வியில்தான் முடிகின்றனவாம். மணமுறிவு கேட்டு நீதிமன்றங்களை நாடுவோர் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தானாம். காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு கைவிட்டுவிட்டால் கேட்க நாதி இல்லையாம். காதலில் தோற்ற பெண்கள் வயிற்றில் கருவை சுமந்து கொண்டு வாழ வழியற்று தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்களாம். காதலால் சமூகத்தில் பதட்டம் ஏற்பட்டு சமூக அமைதி குலைகிறதாம். 

இவர்கள் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். மனைவியை - குழந்தையை - தாயை - தங்கையை - தகப்பனை - அண்ணனை - அக்காளை - ஆயாவை - நாயை - பேயை - கழுதையை - குதிரையை இப்படி யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் காதலிக்கலாமாம். அதாவது அன்பு செலுத்தலாமாம்; நேசிக்கலாமாம். யாரும் எதிர்க்கப் போவதில்லையாம். இப்படி கேப்பையில் நெய்வடிகிற மாதிரி இவர்கள் பேசுவதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். பார்ப்பனன், முதலியான், பிள்ளையான், கவுண்டன், நாயுடு, ரெட்டி, செட்டி, வன்னியன், கள்ளன், தேவன், நாடான், முத்தரையன், கோனான் உள்ளிட்ட பிற OC-BC- MBC உள்ளிட்ட பிற உயர் சாதிப் பெண்களை தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் காதலித்துவிடக் கூடாது. குலநாசம் - அதாவது சாதிநாசம் ஆகிவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் ஒரே கவலை.

இதை வெளிப்படையாகச் சொல்வதற்குக்கூட அஞ்சும் இந்தக் கோழைகள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு யார் காரணம்? 

அடுத்த பதிவில் பார்ப்போம்.

தொடர்புடைய பதிவுகள்:

விளையாட்டு இரசனைக்கானதா?

Tuesday, February 10, 2015

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

"இப்படம் இன்றே கடைசி அல்ல! இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்றாலும் பிரேமுக்கு பிரேம் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் நிறைந்து இருப்பதால் "பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!" என்கிற திரை ஓவியத்தை அன்றாடம் தொலைக்காட்சி ஊடகங்களில் கண்டு களிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்!"

இப்படி நான் ஜுன் 10 ந் தேதி ”பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!” என்கிற பதிவில் எழுதியிருந்தேன்.

டெல்லி சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இப்படம் சக்கை போடு போடுகிறது. 

இந்த திரை ஓவியத்தின் உச்ச கட்ட காட்சிகள் சில.....


இந்தப் படம் இன்றே கடைசி அல்ல.

சின்னத்திரையை தொர்ந்து காண்க.

உபயம்: அரவிந்த் கேஜ்ரிவால்.


தொடர்புடைய பதிவுகள்:

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!