Tuesday, August 29, 2023

கேரளாவை உலுக்கிய ஐயங்காளியின் மாட்டு வண்டிப் போராட்டம்!

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளம்!

கேரளா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நாயர் டீ கடை, மூனாறு உள்ளிட்ட எழில் மிகு தேயிலைத் தோட்டங்கள், கொச்சி உள்ளிட்ட அழகிய கடற்கரை நகரங்கள், நேந்திரம் சிப்ஸ், கதக்களி, மகாபலி, ஓணம், அன்றைய ராதா-அம்பிகா முதல் இன்றைய கும்கி லட்சுமி மேனன் வரையிலான கேரள நாட்டிளம் பெண்டிர், இறுதியாக முல்லைப் பெரியார். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று, ஐயங்காளி!

உங்களுக்குத் தெரியுமா! நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை புலையர்கள் தூய்மையான ஆடைகளை உடுத்தக் கூடாது; கற்கள் மற்றும் மரத்தினால் ஆன ஆடைகளைத்தவிர வேறு துணி ஆடைகளையோ, தங்கநகை ஆபரணங்களையோ அணியக்கூடாது; திருவனந்தபுர நகர வீதிகளில் நுழையவோ நடக்கவோ கூடாது; மாட்டு வண்டிகளில் (அன்றைய பிளஷர் கார் போல!) பயணம் செய்யக் கூடாது; பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயிலக் முடியாது என்ற நிலைதான் இருந்தது. கேரளாவில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சாதிகளில், ஒரு சில தீண்டத்தகாத சாதிகளில் ஒன்றுதான் புலையர் சாதி.
 
ஆச்சரியமாக இருக்கிறதா? இன்று கல்வியில், இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் கேரளாவின் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில், அதாவது ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா?

 
மாட்டு வண்டிப் போராட்டம்

1893 ஆம் ஆண்டு ஒரு நாள் வெள்ளை வெளேர் சட்டையுடன், தோள்மீது படிந்த துண்டு மற்றும் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சாட்டையைச் சுழற்றியவாறு திருவனந்தபுரம் வீதிகளில் மாட்டு வண்டியில் கம்பீரமாய் ஒருவன் பயணம் செய்கிறான். நாயர் சாதி ஆண்களும், பெண்களும் மட்டுமே பயணிக்கக் கூடிய காலத்தில், நாயர் அல்லாத முப்பது வயதே ஆன இளைஞன் ஒருவன் பயணிக்கிறான்.
 
பொது வெளியில் எங்கெல்லாம் புலையர் சாதி மக்கள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்ததோ அங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டிக் கொண்டு தனது நடைபயணத்தைத் தொடங்குகிறான் 1863 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28  அன்று பிறந்த ஐயங்காளி என்ற போராளி.
 
1898 இல், அரளமூடு சந்தையை நோக்கி பலராமபுரம் சாலியர் தெருவில் நடைபயணம் நுழைந்த போது, தடையை மீறி புலையர்கள் உள்ளே நுழைவதா? என‌ ஆத்திரம் கொண்ட ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் தொடுக்கின்றனர். இந்தத் தாக்குதல் புலையர்களால் முறியடிக்கப்பட்ட பிறகே, பொதுப் பாதையை அவர்களால் பயன்படுத்த முடிந்தது.
 
இதன் விளைவாக சாலியர் கலவரம் என்றழைக்கப்படும்  இந்தப் போராட்டம் திருனந்தபுரத்தை ஒட்டி உள்ள கழக்கூட்டம், கனியபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவுகிறது.
 
பொதுப் பாதையில் நடப்பதற்கான உரிமை கேட்டு, ஐயங்காளி அவர்கள் மேற்கொண்ட இந்தப்போராட்டத்தின் விளைவாக 1900 ஆம் ஆண்டு முதல், புலையர்கள் பொது இடங்களில் நடப்பதற்கான சூழ்நிலை உருவானது.

கல்விக்கான போராட்டம்
 
ஐயங்காளி அவர்களின் போராட்டம் இதோடு நிற்கவில்லை. புலையர்கள் கல்வி பயில பொதுப்பள்ளிகளில் அவர்களை சேர்க்கக் கோரி அரசிடம் முறையிடுகிறார். ஒரு முறை மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குள் நுழைகிறார். பிறகு, தானே புலையர்களுக்கான பள்ளி ஒன்றைத் திறக்கிறார். ஆதிக்கச் சாதியினர் இதைக் கடுமையாக எதிர்த்ததோடு, முதல் நாளே அவரது பள்ளியை எரிக்கின்றனர்.
 
பொதுப் பள்ளியில் புலையர்களை சேர்க்கவில்லை என்றால், ஆதிக்கச் சாதியினரின் நிலங்கள் தரிசாக விடப்பட்டு, அதில் களைகள் மட்டுமே முளைக்கும் என்கிற போர்ப் பிரகடனத்தை அறிவிக்கிறார் ஐயங்காளி.
 
அதுவரை, புலையர்களின் உழைப்பில் உண்டு வாழ்ந்த ஆதிக்கச் சாதிக் கும்பல் அரண்டு போகிறது. இதன் விளைவாக புலையர்களை பொதுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்வதற்கான அரசாணை ஒன்றை ஆங்கிலேய‌ அரசு வெளியிடுகிறது. இதற்கும் ஆதிக்கச் சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், 1910 மற்றும் 1914 ஆகிய ஆண்டுகளில் அரசாணைகளை வெளியிட்ட பிறகே, புலையர்கள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
 
புலையர்கள்பொதுச் சாலைகளைப் பயன்படுத்த, தூய்மையான ஆடைகளை அணிய, பொதுப் பள்ளிகளில் கல்வி பயில, “கல்லுமல சமரம் என்று அழைக்கப்படும் பேரெழுச்சி 1915 இல்  நடைபெற்றது.

தூய ஆடை அணியக்கோரி போராட்டம்
 
கற்கள் மற்றும் மரத்தினால் ஆன ஆடைகளைக் தவிர துணி உள்ளிட்ட வேறு ஆடைகளை புலையர் பெண்கள் அணியக்கூடாது என்றிருந்த தடையை உடைக்க, அவற்றையும் தூக்கி வீசுங்கள் என ஒரு கூட்டத்தில் அறைகூவல் விடுக்கிறார் ஐயங்காளி. இதை அறிந்த ஆதிக்கச் சாதியினர் புலையர்கள் நடத்திய கூட்டத்தில் தாக்குதல் நடத்தியதோடு, புலையர்களின் வீடுகளையும் தீயிட்டு எரிக்கின்றனர். இதற்கு எதிராக, பேரணிகள், வேலை நிறுத்தங்கள், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொள்கிறார் ஐயங்காளி.

மகாத்மா ஐயங்காளி
 
மகாத்மா காந்தி கேரள மண்ணில் கால் பதிப்பதற்கு முன்பாகவே, ஒடுக்கப்பட்ட சாதி மக்களை விழிப்புணர்வு செய்ததில் ஒரு அழியாத் தடத்தை ஏற்படுத்தியதால்தான், ஐயங்காளி, மகாத்மா ஐயங்காளிஎன அழைக்கப்படுகிறார். அதன்பிறகுதான் காந்தி மகாத்மாவாகிறார்.
 
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1911 முதல் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் திருவிதாங்கூர் அசெம்ளிக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் ஐயங்காளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
ஐயங்காளியை தவிர்த்துவிட்டு கேரள வரலாற்றை எழுத முடியாது. அதனால்தான் திருவனந்தபுரத்திலுள்ள பழை விக்டோரியா ஜூப்ளி டவுன் ஹால்பெயர், மகாத்மா ஐயங்காளி ஹால்என 2019 முதல் அழைக்கப்படுகிறது. கேரள ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம், 2010 முதல் ஐயங்காளி பெயரில் அழைக்கப்படுகிறது. 1980 இல் ஐயங்காளி அவர்களின் சிலையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
 
எந்த சனாதன சக்திகள் ஐயங்காளிகளை அன்று அடக்கி ஒடுக்க முனைந்ததோ, அதே சனாதன சக்திகளின் பிரதிநிதியான நரேந்திர மோடி, இன்று, ஐயங்காளிகளுக்குப் புகழாரம் சூட்டுகிறார். எச்சரிக்கை! சனாதன மீட்டுருவாக்கம் நடைபெறும் இன்றைய சூழலில் ஓராயிரம் ஐயங்காளிகள் இன்று தேவைப்படுகிறார்கள்! சனாதனிகளை வீழ்த்த!
 
ஊரான்
 
THE PRINT ஆங்கில ஏட்டில் Keshav Padmanabhan அவர்கள் எழுதிய‌ ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை.

https://theprint.in/theprint-profile/ayyankalis-bullock-cart-ride-changed-caste-dynamics-in-kerala/1734496/?amp

Sunday, August 27, 2023

வன்னியர் சாதி உழைக்கும் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்!

வன்னியர் சாதி உழைக்கும் மக்களே!

ஒரு சில வன்னியச் சாதித் தலைவர்களால்
ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டு, பொதுச் சமூகத்திலிருந்து விலகி, திசைமாறி அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். இதனால்  கல்வியில் பின்தங்கி இருப்பதோடு, உரிய விகிதாச்சார அடிப்படையில் அரசு வேலைகளையும் பெறமுடிவதில்லை.

கல்வியில் நீங்கள் பின்தங்கி இருப்பதால், தனியார் நிறுவனங்களில்கூட உங்களால் ஒரு உத்தரவாதமான நல்ல வேலையைப் பெறமுடிவதில்லை. வேளாண்மையிலும் போதிய வருவாய் இல்லாததால், கல்வியில் பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டமுடியாத சூழலில், உங்களில் பலர் கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு உதிரி வேலைகளில் எடுபிடிகளாக மட்டும்தான் செயல்பட முடிகிறது. உங்களில் பலர் தினக்கூலிகளாக இருப்பதால், எளிதில் சாராய போதைக்கு அடிமையாகி சீரழிந்து, நீங்கள் மட்டையாவதோடு உங்கள் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்துகிறீர்கள்.

உங்களில் பலர் படித்திருந்தாலும், இதர பிற்பட்டோருக்கான (MBC) இட ஒதுக்கீடு இருந்தும், பிறசாதியினரோடு போட்டி போட்டு மாநில அரசின் வேலை வாய்ப்பினை பெறுகின்ற ஆற்றல் அற்றவர்களாக இருக்கின்றீர்கள். மாநில அரசு இட ஒதுக்கீட்டிலேயே உங்களால் ஒரு வேலையைப் பெறமுடியாத போது, மத்திய அரசின் இதர பிற்படடோரின் (OBC) இட ஒதுக்கீட்டின்கீழ், மத்திய அரசு நிறுவனங்களில் நீங்கள் ஒரு வேலையைப் பெறுவது குதிரைக் கொம்பாகத்தானே இருக்க முடியும்.

மத்திய, மாநில அரசு வேலைகளைப் பெறுவதற்கேற்ப, உங்கள் திறமைகளை வளர்ப்பதற்கு பிற சாதியினர் செய்வதைப் போல, அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், ஏற்பாடுகள், கட்டமைப்புகள் எதையும் நீங்கள் ஏற்றிச் போற்றுகின்ற உங்களின் சாதித் தலைவர்கள் செய்வதில்லை. மாறாக, ஆண்ட பரம்பரை, சத்ரிய குலம் என பெருமை பேச வைத்து உங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதை என்றைக்கு நீங்கள் உணர்கிறீர்களோ, அன்றைக்குத்தான் உங்களுக்கான விடிவு காலம் தொடங்கும்.

சாதித் தலைவர்களால் ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டது போதாது என்று தற்போது, "அகில பாரதிய சத்ரிய மகா சபா யுவா" என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரக் கும்பல், வன்னியர் சாதி மக்களிடையே ஊடுருவி, பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்மப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. 

சாதி வெறியை ஊட்டி பிறசாதி மக்களுக்கு எதிராக உங்களைக் கொம்பு சீவி விடும் உன்மத்தர்களை அடையாளம் கண்டு, அவர்களை பீச்சாங்கையால் புறந்தள்ளி முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களை நோக்கி வாருங்கள். புதியவைகளை நீங்கள் கற்றுணரும்போதுதான், உங்களின் பின்தங்கிய நிலையை உங்களால் உணர முடியும். இன்றைய காலகட்டத்தில் இது ஒன்றுதான் உங்களுக்கான மாற்று வழி! 

ஊரான்

Wednesday, August 23, 2023

மலக்குழியும் சந்திரயானும்!

மலக்குழியும் சந்திரயானும்!

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பொறியாளர்கள், அறிவியலாளர்களின் கூட்டு முயற்சியே சந்திரயான் வெற்றி. அணித்தலைவர் சிறப்பாக அமையும் பொழுது கூட்டுழைப்பு மேலும் பலப்படுகிறது. அனைவரையும் வாழ்த்துவோம். 

ஒரு பக்கம் மலக்குழியில் மனிதன், மறுபக்கம் நிலவில் சந்திரயான். இந்த முரணை வைத்து அறிவியல் சாதனையை கொச்சைப்படுத்துவது அழகல்ல.

அறிவியல் சாதனைகள் இல்லை என்றால் உலகையே உள்ளங்கையில் கொண்டு வந்து உங்களோடு உறவாட மூடியுமா?

மலக்குழியில் மனிதன் உள்ளிட்ட பிற அம்சங்களில் நவீனத்துவத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதே அறிவுடைமை. வெற்றுப் புலம்பல்களால் மலக்குழியிலிருந்து மனிதனை மீட்க முடியாது.

நிலவிலும் சாதியா?

வாட்ஸ்அப் குழுக்களில் சந்திரயான் - 3 அணித்தலைவர் தங்கள் சாதி என உரிமை கொண்டாடி அறிவியலையே அசிங்கப்படுத்துகின்றனர் சில சாதி வெறியர்கள். 

அவர் யாரா இருந்தா என்ன? நாட்டுக்கு நல்லது நடந்ததா என்பதைத்தான் பார்க்க வேண்டும். எதற்கு இதில் சாதியக் கண்ணோட்டம். 

அவர் இன்ன சாதி என்பதனால் இந்த வாய்ப்பை அவர் பெறவில்லை. மாறாக, அவரது தகுதி திறமையை வைத்துதான் தீர்மானிப்பார்களே ஒழிய சாதியை வைத்து அல்ல. 

அணித்தலைவர் தங்கள் சாதி என உரிமை கோரி, பெருமை பேசும் சாதி வெறியர்களே! தயவு செய்து சாதிய வெறியிலிருந்து வெளியே வாருங்கள். தகுதியை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பிறருக்கும் அவ்வாறு வழிகாட்டுவதுதான் அறிவுடைமை.

ஊரான்


Monday, August 14, 2023

வெட்டிப் பய, சண்டாளப் பாவி என ஒருவரை திட்டலாமா?

ஒரு வாட்ஸ்அப் குழுவில் சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். அதில் வெட்டி என்று சொல்லுக்கான அரியதொரு விளக்கத்தைக் கூறுகிறார் ஒருவர். இதைப் பார்த்த வெட்டி என்பதற்கு சரியான விளக்கம் தந்திருப்பதாக ஒருவர் பதில் எழுதுகிறார்.


அவர் கொடுத்த விளக்கம் எப்படித் தவறானது என்பது குறித்தும், வெட்டி என்ற சொல்லுக்கு சரியான பொருள் குறித்தும் அந்த வாட்ஸ்அப் குழுவில் நான் எழுதிய எனது கருத்துக்களை இங்கே உங்களோடு பகிர்கிறேன்.

*****
வெட்டி என்பதற்கு இவர் கொடுக்கின்ற விளக்கம் தவறானது. குளங்களை வெட்டியவர்கள் எல்லா சாதியினரும் அல்ல. மாறாக சேரியிலே வாழ்ந்த ஒரு பிரிவினர். அவர்கள்தான் குளங்களை வெட்டுவது மட்டுமல்லால் ஊரில் இருக்கிற எல்லா எடுபிடி வேலைகளையும் காசு வாங்காமல் வெறும் கஞ்சிக்காக இலவசமாக செய்தவர்கள். 

இன்று ஒரு வேலையை செய்துவிட்டு வெறுங்கையோடு வந்தால் என்ன மதிப்பு இருக்கும் வீட்டில்?  மக்கள் மொழியில் சொன்னால் வெட்டியான் வேலை என்பது தம்பிடிக்கு பிரயோஜனம் இல்லாத வேலை என்று பொருள். அதனால்தான் சும்மா இருப்பவர்களைப் பார்த்து வெட்டிப்பய என்று வசை பாடுகிறார்கள். எனவே, வெட்டி என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்டு சாதியினரை இழிவுபடுத்துகின்ற ஒரு சொல். தயவுசெய்து யாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்பதே எனது கருத்து.

*****

சவக்குழி தோண்டுபவரை / பிணத்தை எரிப்பவரை வெட்டியான் என்று அழைப்பார்கள். இவர்கள் பட்டியல் சாதிப் பிரிவைச் சேர்ந்த சேரி மக்கள்‌. சுருக்கமாகச் சொன்னால் இவர்கள் சுடு / இடுகாட்டைக் காப்பவர்கள். இவர்களை 
அந்தியாவசாயி என்கிறான் மனு.

சண்டாள சாதி ஆணுக்கும், நிஷாத ஜாதி பெண்ணுக்கும் அந்தியாவசாயி பிறக்கிறான். இவனுக்கு சண்டாளன் தொழிலை விட கெட்டதான சுடுகாட்டைக் காப்பது தொழில். (மனு: 10-39)

சூத்திர ஆணுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்தவன்தான் சண்டாளன். ( மனு-10-44).

இன்று பறையர்கள் என்று அழைக்கப்படுபவர் கள்தான் சண்டாளர்கள் என்கிறது மனுதர்மம்.

பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவன்தான் நிஷாதன். (மனு 10-8)

எனவே ஒருவரை வெட்டிப்பய என்றோ, சண்டாளப் பாவி என்றோ வைவதும் திட்டுவதும் சேரி மக்களை இழிவு படுத்துகின்ற சொற்களாகும். சட்டப்படியாகப் பார்த்தால் இச்சொற்களைப் பயன்படுத்துவோரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

பல்வேறு சாதிகளின் தோற்றம் குறித்து மனுதர்மத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. வேறு ஒரு சமயத்தில் அது குறித்துப் பார்க்கலாம்.

நன்றி

ஊரான்

கவிஞரின் கபாலத்தில் கரிசல் மண்!

இன்றைய முகநூல் பதிவுகள்:

"சாதியை உருவாக்கினவனும் அதற்கு பெருமை சேர்த்தவனும் ஒருவன்தான் என்பதை யாராவது எடுத்துச் சொல்லுங்களேன். சாதி மாறும் உரிமை கேட்கிறார் வைரமுத்து. என்னத்தச் சொல்ல? கவிஞரின் கபாலத்தில் கரிசல் மண்!"

*****

"திருப்பதி: புலியை விரட்ட பிரம்பு. afterall மரத்த வெட்டின மனுசன சுட்டுத் தள்ளத் தெரியுது. மனுசனக் கொல்லும் புலியை சுட்டு தள்றதுக்கு என்னடா தயக்கம்?"

*****

"சசிகலாவுக்கெல்லாம் எதுக்குப்பா அரசியல்? யாராவது கொஞ்சம் சொல்லுங்கப்பா! இம்ச தாங்க முடியல."

"தாயே! உன்ன கையெழுத்து கும்பிட்றோம். தயவு செஞ்சு அரசியல் பேசாத. நீ பேசுனா நாங்கல்லாம் ஹார்ட் பேஷண்டாயிடுவோம்."

*****

"ஒரு நடிகை நாடகம் நடிக்கிறாள். அன்று ஜெயலலிதா, இன்று ஸ்மிருதி இராணி. இதற்குத் தமிழிசை போன்ற ஒப்பனைக் கலைஞர்கள்."

ஊரான்

Friday, August 11, 2023

நாங்குநேரியும் நடிகர் யோகி பாபுவும்!

நடிகர் யோகி பாபு கைகுலுக்கச் சென்ற போது 'கிட்ட வராதே!' என்று ஒரு அர்ச்சகர் நடந்து கொண்ட விதமும், நாங்குநேரியில் பள்ளி மாணவனை வீடு புகுந்து வெட்டிய இடைநிலைச் சாதியைச் சேர்ந்த சிறுவர்களின் செயலும் வடிவத்தில்தான் வேறு வேறானவை; ஆனால், தன்மையில் இரண்டிலும் தீண்டாமைதான் அடிப்படையானது.



ஏதோ, தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில்தான் சாதி வெறி தலைவிரித்தாடுவது போலவும், மற்ற இடங்களில் எல்லாம் யாரும் சாதி, தீண்டாமை பார்ப்பதில்லை என்பது போலவும் ஒரு கருத்து நிலவுகிறது.

கிராமமோ நகரமோ ஒருவன் இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு இந்துவாக வாழ்கின்ற போது அவன் உள்ளத்தில் தீண்டாமை தவிர்க்க முடியாமல் குடி கொண்டிருக்கும். சாதி மத சடங்கு சம்பிரதாயங்களை ஒரு இந்து தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் வரை,  இந்து மத உணர்வும், சாதி-தீண்டாமை உணர்வும் ஒருக்காலும் மறையாது. மாறாக மேற்கண்ட சடங்கு சம்பிரதாயங்களைத் தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்காமல், அதிலிருந்து மாறுபட்டு வேறொரு பண்பாட்டு வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் போது சாதி, மத உணர்வும், தீண்டாமை உணர்வும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும். எனது நடைமுறை அனுபவமும் அதுதான். இத்தகையோரை அரிதிலும் அரிதாகத்தான் காண முடியும்.

இந்து மதம் இருக்கும் வரை சாதியும் இருக்கும். சாதி இருக்கும் வரை தீண்டாமையும் இருக்கும். தீண்டாமை என்பது மேலிருந்து கீழாக, ஒவ்வொரு சாதியப் படிநிலையிலும் கடைபிடிக்கப்படுகிறது. அது கீழே செல்லச் செல்ல மிகவும் கொடூரமாக வெளிப்படுகிறது. இந்து மத-சாதி-தீண்டாமை ஒழிப்பு என்பது  அவ்வளவு எளிதானதல்ல; அது ஒரு நீண்ட நெடியப் போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் உள்ளடக்கியது. 

தீண்டாமை ஒரு சாதி இந்துவிடம் எவ்வாறெல்லாம் வெளிப்படுகிறது என்பது குறித்து 2011 இல் எழுதிய இரண்டு கட்டுரைகளையும் தொகுத்து உங்கள் முன் வைக்கிறேன்.

ஊரான்

*****

Wednesday, June 15, 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?


காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது 'இப்பவெல்லாம் படிச்சவங்கதான் அதிகமா சாதி பாக்கிறாங்க' என்றார் உடன் வந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். படித்தவர்,  நல்ல ஊதியத்துடன் நடுத்தர வர்க்க வாழ்க்கையை நடத்துபவர். பொருளாதாரத்தில் அவருக்கு குறையேதும் இல்லை. பிறகு ஏன் இத்தகைய சலிப்பு!

இந்தக் கேள்வியைத் தொடர்ந்து பள்ளிப் பருவத்தில் எனக்கு நேர்ந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்தது என்பதைவிட எப்பொழுதும் எனது நினைவில் நிலைத்திருப்பது.

என்னுடன் படித்த மாணவ நண்பன் என்ன சாதி என்று தெரியாது. ஆனால் சைவப்பழக்கம் உள்ள உயர்சாதி என்பது பிறகு தெரிய வந்தது. பகல் நேரத்தில் அவனுடன் அவனது வீட்டிற்குச் சென்றேன். அவனது தாயார்தான் வீட்டில் இருந்தார். முன் பின் தெரியாத ஒருவனை தனது மகன் அழைத்து வந்துவிட்டால் அவனை உடனடியாக வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்கள். இது கிராமப்பகுதிகளில் அன்று நிலவிய நடைமுறை. ஒரு பித்தளை செம்பில் தண்ணீர் கொண்டு வந்து திண்ணையில் வைத்தார் அவனது தாயார். கையில் கொடுக்கமாட்டார்கள். தீட்டுப் பட்டுவிடுமாம். இருந்தாலும் வந்தவர்களுக்கு தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடுக்க மட்டும் மறுக்கமாட்டார்கள். கேட்கவில்லை என்றாலும் அவர்களாகவேத் தருவார்கள். இது தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடு என்கிறார்கள் சிலர். ஆனால் இந்த சிறந்த விருந்தோம்பலில் இருக்கும் தீண்டாமை,தாகம் தீர்க்கும் தண்ணீரைக்கூட கொடிய நஞ்சாகவல்லவா மாற்றிவிடுகிறது. இது அந்தத் தண்ணீரைக் குடிப்பவனுக்குத்தான் உரைக்கும்; கொடுப்பவர்களுக்கு அது ஒரு நடைமுறைப் பண்பாடு. சமூகம் அப்படித்தான் மக்களை பயிற்றுவித்திருக்கிறது. எனது கருப்புத்தோலும் ஏழ்மையின் உருவத்தோற்றமும் நான் என்ன சாதியாயிருக்குமோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இந்த நிகழ்வு எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இது நடந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இடைப்பட்ட காலத்தில் ஏராளமான நண்பர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என பலதரப்பட்ட மக்களோடு பழகியிருக்கிறேன், பழகி வருகிறேன். இதில் பட்டியலின மக்கள் முதல் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் என கசல தரப்பு மக்களும் அடங்குவர். படிக்கிற காலத்தில் பார்ப்பன மாணவர்களைத் தவிர பிற மாணவர்கள் என்ன சாதி என்பதை கண்டுபிடிப்பது கடினம். சாதிகளைக் கடந்து சக மாணவன் என்கிற உணர்வு மட்டுமே நிலவியது. ஆண்டுக் கணக்கில் ஒரே அறையில் தங்கிய நண்பர்கள்கூட என்ன சாதி என்பதை தெரிந்து கொள்ளவில்லை. அவர்களும் காட்டிக்கொள்ளவில்லை. இதுதான் அன்றைய இளைஞர்களின் மனநிலை.

தீண்டாமை என்பது எத்துனை கொடியது என்பது சாதியப் படிநிலையில் தனக்கு மேலே உள்ள சாதிக்காரர்களால் ஒருமுறையேனும் அனுபவப்பட்டவர்கள் மறக்க முடியாது. சாதியப் படிநிலையில் ஆகக் கடைகோடியாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே தீண்டாமைக் கொடுமையை அதிகம் அனுபவிப்பவர்கள்.
கிராமங்களில் பல்வேறு சாதிப் பிரிவு மக்களுக்கிடையில் கூலி விவசாயி, சிறு விவசாயி, பணக்கார விவசாயி என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்தாக வேண்டும். ஒருவரின் உழைப்பு இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது. சாதியால் வேறுபட்டாலும் உழைப்பால் ஒன்றிணைவதால் மனதில் காழ்ப்புணர்ச்சி ஏதும் இன்றி 'அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான்களாகப்' பழகுகிறார்கள்.  கிராமப்புற தீண்டாமை என்பது தனிப்பட்ட நபர்களின் எண்ணத்தினால் கடைபிடிக்கப்படுவதல்ல. மாறாக கிராமப்புற தீண்டாமை என்பது தான் சார்ந்த சாதிய சமூகத்திற்குப் பயந்து கடைபிடிக்கப்படும் ஒருவித 'சமூக ஒழுங்கு'. தனிநபர்கள் மனம் மாறினாலும் சமூகக் கட்டமைப்பை மீறி அவர்களால் நடந்து கொள்ள முடியாது. கோவில் திருவிழாக்கள் மற்றும் காதல் போன்ற விவகாரங்கள் தோன்றும் போது உயர் சாதி பணக்காரர்களாலும், நாட்டாமைகளாலும்தான் தங்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் தேவைகளுக்காக பெரும்பாலான சாதிக்கலவரங்கள் கிராமப்புறங்களில் உருவாக்கப்படுகின்றன.

திருச்சி உறையூரில் குழுமாயி-குழுந்தலாயி அம்மன் திருவிழா மிகவும் பிரபலம். அறிவியல் வளர்ந்தாலும் கிராமங்கள் மாநகரங்களாக வளர்ச்சி பெற்றாலும், இதுபோன்னற திருவிழாக்களின் போது அவை குக்கிராமங்களாக மாறிவிடுவதும், மக்கள் காட்டுமிராண்டிக் காலத்திற்குத் தங்களை ஆளாக்கிக் கொள்வதையும் காணமுடியும். ஆடுகளின் கழுத்தை அறுத்து அதிலிருந்து கொட்டும் இரத்தத்தை சளைக்காமல் குடித்து பிரமிப்பூட்டும் நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.  இரத்தம் குடிப்பதில் மட்டுமல்ல சாதிய ஒடுக்குமுறையிலும் தாங்கள் காட்டுமிராண்டிகள்தான் என்பதையும் ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகின்றார்கள்.

தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெருவிலில் இருக்கிறது குழுமாயி அம்மன் கோவில். அலங்கரிக்கப்ட்ட அம்மன் இங்கிருந்து புறப்பட்டு பறையர்கள் வாழும் காந்திபுரம் வழியாக உறையூர் செட்டித் தெருவை சென்றடையும். பூசைக்காக அம்மன் காந்திபுரத்தில் நிற்காது. படையாச்சி,வெள்ளாளர்,  செட்டியார், முத்தரையர் என பிற உயர்சாதி தெருக்களில் நாள் வாரியாக உலா வரும் அம்மன் அங்குள்ள மக்களுக்கு அலங்காரத்துடன் காட்சியளிப்பாள். உலா முடித்து மீண்டும் அம்மன் தில்லைநகருக்கு வரவேண்டும். அப்படி வரும் போது காந்திபுரத்திற்குள் நுழையும் முன்பு செட்டித் தெருவில் நிறுத்தப்படும். அம்மனின் மொத்த அலங்காரமும் அங்கே உருவப்பட்டு அம்மனமான அம்மன் மட்டுமே காந்திபுரத்திற்குள் நுழையும். உருவப்பட்ட இந்த அம்மனைத்தான் காந்திபுரம் பறையர்கள் பூசை செய்து வழிபட வேண்டும். இரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டித் தனத்தைவிட இது மிகக் கொடிய காட்டுமிராண்டித்தனம்.

இக்கொடுமையை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திபுரம் மக்கள் ம.க.இ.க தலைமையில் போராடினார்கள். அரசு சார்பில் ஒரு பஞ்சாயத்தும் கூட்டப்பட்டது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர். அம்மனின் அலங்காரத்தை கலைக்காமல் அப்படியே அனுப்பி வையுங்கள் என்பதுதான் காந்திபுரம் மக்களின் கோரிக்கை. காலம் காலமாக உள்ள முறையை மாற்ற முடியாது என பிற உயர் சாதியினர் அனைவரும் ஒரே குரலில் பேசினர். காந்திபுரம் மக்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் கோவில் சாவியை நீந்களே வைத்துக் கொண்டு திருவிழாவையும் நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு அம்மனும் வேண்டாம்; திருவிழாவும் வேண்டாம் என பிற உயர் சாதியினர் அனைவரும் ஏகக் குரலில்  பேசினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றிணைவதில் மட்டும் பிற சாதிக்காரர்களுக்குள் அப்படி ஒரு பிணைப்பு.

காந்திபுரம் மட்டுமல்ல விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் கோவிலில் வழிபாட்டு உரிமை கேட்ட போது கோவில் சாவியைக் கொடுத்துவிட்டார்கள் வன்னியர்கள், ரெட்டியார்கள் உள்ளிட்ட பிற உயர் சாதியினர். இன்றைய உத்தபுரங்கள் வரை இதுதான் நிலைமை.

படிக்காதவர்கள்தான் சாதி பார்க்கிறார்கள். படித்தவர்கள் யாரும் சாதி பார்ப்பதில்லை என்கின்றனர் சிலர்.

ஆனால் இன்று...... அரசு அலுவுலகங்களில்... பொதுத்துறை நிறுவனங்களில்.... நகரங்களில்.....

தொடரும்

ஊரான்

*****

Friday, June 17, 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?....

தொடர்ச்சி

எனது உடல் உருவத்தையும் கரிய நிறத்தையும் வைத்து இவன் நமது சாதிக்காரனாய் இருப்பானோ என கருதிக் கொண்டு வணக்கம் வைப்போரும் அல்லது இவன் அந்த சாதிக்காரனோ எனக் கருதி, கண்டு கொள்ளாமல் இருப்பதும் என இரு வேறு மக்கள் பிரிவினரை நான் அன்றாடம் பார்க்கிறேன். நான் யாருடைய ஆளு எனத் தெரியாமலேயே 'நம்ம ஆளுதான்' என எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு நபரைப் பற்றி என்னிடம் அறிய வைக்க ஒரு சிலர் முயலவும் செய்கிறார்கள். இரு வேறு சாதிகளைச் சார்ந்தவர்கள் அச்சாதிப் பெண்களுக்கு வரன் பார்க்கவேறு சொல்வார்கள். மேற்கண்ட இரு தரப்பாருமே அவ்வாறு முயல்கிறார்கள்.  நான் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. நான் அவர்களின் சாதிக்காரனா என்பதே அவர்களுக்குக் கவலை.

இதுவரை வணக்கம் வைத்தவன் நான் அவனது சாதிக்காரன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு வணக்கத்தை நிறுத்திவிடுகிறான். இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தவன் நான் அவனது சாதிக்காரன் எனத் தெரிந்து கொண்ட பிறகு வணக்கம் வைக்கத் தொடங்குகிறான்.முன் பின் அறிமுகமே இல்லாதவன் தனது மகனுக்குத் திருமணம் என அழைப்பிதழ் கொடுக்கிறான். நான் குழம்பிப் போகிறேன். நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இதைப் பகிர்ந்த போது, தெரியவில்லை என்றாலும் தங்களது சாதிக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுப்பது என முடிவெடுத்து அவ்வாறு ஒவ்வொரு சாதிச் சங்கத்தினரும் திட்டமிட்டு செய்வதாகச் சொன்னார்.

ஒருவர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்தால் உறவினர்கள்கூட ஒரு சிலர் சில காரணங்களுக்காக கோபித்துக் கொண்டு வராமல் இருப்பார்கள். ஆனால் தனது அலுவலகத்தில் ஆயிரக் கணக்கானோர் பணிபுரிந்தாலும் அதில் தனது சாதிக்காரர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இதுதான் இன்று அலுவலகங்களில் நடுத்தர வர்க்க மக்களிடம் காணப்படும் சாதித் தீட்டு. படித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். இச்சாதியத் தீட்டுதான் அலுவலக ஊழியர்களிடம் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பனர்களில் ஐயர், ஐயங்கார், பட்டர், தீட்சிதர் என்றும்; முதலியார்களில் செங்குந்தர், துளுவ வேளாளர், அகமுடையர் என்றும்; நாயுடுகளில் கவரா, கம்மவா என்றும்;  முக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையர் என்றும் உட்பிரிவுகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரும் எந்த உட்சாதிப் பிரிவும் பிற உட்சாதிக்குள் குடும்ப உறவு எதையும் வைத்துக் கொள்வதில்லை.  அதாவது ஒரு செங்குந்த முதலியார் அகமுடைய முதலியாரிடம் சம்பந்தம் செந்து கொள்ள மாட்டார். குடும்ப உறவுகளில் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்றாலும் அலுவலகங்களில் "நம்ம ஆளு" என்கிற கருத்தியலில் ஒன்றுபடுகிறார்கள்.

இவர்களுக்கிடையில் குடும்ப உறவு கிடையாது.பிறகு எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? படிநிலையில் தங்களின் சாதிக்கு மேலே இருக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராக பிற சாதியினர் ஒன்றுபட்டால் அதில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். ஆனால் பார்ப்பனர்கள் எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? தங்களுக்கு மேலே யாரும் வந்துவிடக்கூடாது என்பது பார்ப்பனர்களின் கவலை. இதே கவலைதான் ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் ஒரு சிலர் சில இடங்களில் ஆளுமைக்கு வந்துள்ளனர். இந்த ஆளுமையைத்தான் பிற உயர் சாதியினரால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் தனது வாய்ப்பை தாழ்த்தப்பட்டவன் தட்டிப் பறித்துவிட்டதாகத்தான் பிற உயர் சாதிக்காரன் நினைக்கிறான். அரசு வகுத்திருக்கிற கொள்கை மற்றும் சட்டங்களின்படிதான் ஒரு தாழ்த்தப்பட்டவன் கல்வியைப் பெறுகிறான்; வேலைவாய்ப்பைப் பெறுகிறான்; பதவி உயர்வு பெறுகிறான். இதற்கு சம்பந்தப்பட்ட தாழ்த்தப்பட்டவன் எப்படி பொறுப்பாக முடியும்? தனிப்பட்ட முறையில் அவன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வது எந்த வகையில் நியாயமாகும்? அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாயப்பு என்பதை உத்தரவாதப் படுத்தாத அரசின் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது கோபம் கொள்வது கோழைத்தனமல்லவா!

பார்ப்பனர் உள்ளிட்ட பிற ஒடுக்கும் சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து வகையான சதி வேலைகளையும் அரங்கேற்றுகின்றனர். துறைத் தலைவராகவோ, நிறுவனத் தலைவராகவோ, தொழிற்சங்கத் தலைமைக்கோ தாழ்த்தப்பட்டவர்கள் வந்துவிடக்கூடாது என்பதே இவர்களின் கவலை. உயர் சாதியினர் அனைவரும் ஒன்றாகக்கூடி தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கேவலமாகப் பேசி அவர்களுக்குள்ளேயே கிண்டலடித்துக் கொள்வார்கள். 'கவர்மெண்ட் ஐயர்' என்றும் 'கோட்டா' என்றும் 'மேற்படி' என்றும் பேசும் இவர்களது பேச்சு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுப்பதற்கு ஏதுவானது.

தரமான கல்வி கிடைக்காத கிராமப்புற மாணவனின் திறமை, நகர்ப்புற மாணவனைவிட குறைவாகத்தானே இருக்கும்.  இதை ஏற்றுக் கொள்ளும் உயர் சாதியினர் காலம் காலமாக கல்வி மறுக்கப்ட்ட தாழ்த்தப்பட்ட முதல் தலைமுறை மாணவர்கள் சற்றே திறமை குறைவானவர்களாக இருப்பது மட்டும் எப்படி குற்றமாகும்? இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட ஊழியர்களை 'ஜீரோ ' என்றும் 'வேஸ்ட்' என்றும் மிகக் கேவலமாகப் பேசுவது அன்றாடம் அலுவலகங்களில் நடக்கிறது.  இப்படி தாழ்த்தப்பட்டவர்களை இழிவு படுத்தும் செயல் அவர்களை எட்டாமல் இல்லை.

இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை தண்டணையிலிருந்து காப்பாற்ற தங்களுக்கு வேண்டிய உயர் அதிகாரிகளின் தயவை நாடுகின்றனர் சாதிச் சங்கத்தினர். என்ன இருந்தாலும் "நம்ம ஆளு" இல்லையா என சப்பைக் கட்டு கட்டுகின்றனர். தனது சாதிக்காரன் என்றால் தாராளவாதமும், பிற சாதிக்காரன் என்றால் கறார் தன்மையும் என்பது இன்று அலுவலகங்களில் காணக்கூடிய ஒரு கேடு கெட்ட நடைமுறை. இத்தகைய சாதிப் பற்றுதான் அலுவலகங்களில் நடைபெறும் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை ஒழிப்பதற்கு மிகப் பெரிய தடையாக நிற்கிறது. ஐம்பது ரூபாய் கையூட்டு வாங்கிய கடை நிலை ஊழியன் பிற சாதிக்காரன் என்றால் கையும் களவுமாக பிடிபடுகிறான். ஆனால் இலட்சக் கணக்கில் கையூட்டு பெற்ற தனது சாதிக்காரனை காப்பாற்றுவதற்கு சென்னை முதல் டெல்லி வரை படை எடுக்கிறார்கள்.

கற்பழிக்கும் காமுகனைக்கூட காப்பாற்ற சாதி எனும் ஆயுதத்தை இவர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

நீதியும் நியாமும் இந்கே சாதியச் சாக்கடையில் மூழ்கடிக்கப்படுகிறது. இந்தச் சாதியப் போர்வையை பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் முதல் தாழ்த்தப்பட்ட சாதியனர் வரை அனைவருமே பயன்படுத்துகின்றனர். பிற உயர் சாதியினர் பயன்படுத்தும் போது கண்ணுக்குத் தெரியாத சாதியப் போர்வை, தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தும் போது மட்டும் பிற சாதியனரின் கண்களுக்கு 'பவர்' கண்ணாடி போடாமலேயே தெரிகிறது. உயர்சாதிக்காரன் தவறு செய்யலாம், தாழ்ந்த சாதிக்காரன் செய்யக்கூடாது என்கிற நால்வர்ணக் கோட்பாடுதான் இங்கே கோலோச்சுகிறது. இப்படிச் சொல்வதனால் தாழ்த்தப்பட்டவர்களின் தவறுகளுக்கு நான் சப்பைக்கட்டு கட்டுவதாக நினைக்க வேண்டாம். தவறுகளைக் காண்பதில்கூட சாதியப் பார்வை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே இதைக் கூறுகிறேன். மற்றபடி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனபதே எனது கருத்தும்.

கிராமமோ நகரமோ தீண்டாமை இன்னும் அகலவில்லை. தன்மையில்தான் மாறுபடுகிறது.

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

முற்றும்

ஊரான்

Saturday, August 5, 2023

'அக்கா'வின் ஆட்டுக் குட்டி தலையாட்டுமா?

ஆடு வளர்த்தாவது பெரியாளாகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் அந்தத் தாடிக்காரன். சீமைக்குட்டியே சிறந்த குட்டி என்று கணக்குப் போட்டு தேடிப் பிடித்து ஓட்டி வந்தான். இலை கிடைக்கும் இடமாய்ப் பார்த்து வளர்க்கத் தொடங்கினான். 

ஆடு குட்டியாய் இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாய்த்தானே இருக்கும். அதனால் போவோர் வருவோரெல்லாம் குட்டியை கொஞ்சத் தொடங்கினர். 

பலமுறை, பிடறியால் தன்மொகரையைப் பேர்த்தபோதும்,  பாவம் குட்டிதானே' என்று பொறுத்துக் கொண்டான் இலை கொடுத்தவன்.

கொங்கக்காவின் பராமரிப்பில் பக்குவமாய் வளர்ந்து வந்தது ஆட்டுக் குட்டி. குட்டிக்குப் பசி எடுக்கும் போதெல்லாம், அது வேலி தாண்டக்கூடத் தயங்கியதில்லை. அக்கம் பக்கம் சண்டைக்கு வந்த போதும், அவள் பொருமை காத்தாள். எப்படியாவது எதையாவது தின்று குட்டி பெருத்தால் சரி என்பது அவள் கணக்கு.

குட்டி இப்பொழுது கொழுகொழுவென வளர்ந்து கிடாவாகி விட்டது. கோவிலுக்கு நேர்ந்து விட்டாற்போல அது ஊரெங்கும் திரியத் தொடங்கியது. 

தூர விரட்ட நினைத்தோரை அது முன்னங்கால்களால் எட்டி உதைத்தும், குட்டைக் கொம்புகளால் முட்டப்பார்த்தும் துரத்த முனைந்தது. அது பாவ்லாதான் எனப் புரிந்து கொண்டோர் துரத்தி விரட்டினர்; பயந்து நடுங்கியோர் ஒதுங்கிச் சென்றனர்.

மாதங்கள் உருண்டோடின. ஆடியும் வந்தது. சீமையிலே மழை சரியாய்ப் பொழியாததால் ஆற்றிலும் நீர் பெருக்கெடுக்கவில்லை. இருந்தாலும் என்ன? கசியும் நீரிலாவது கடமையை முடிக்க வேண்டுமல்லவா?

இதோ பதினெட்டும் வந்து விட்டது. கிடாவைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, பூ மாலையிட்டு, வீதி வழியாக ஆற்றை நோக்கி ஓட்டலானாள் கொங்கக்கா. போகும் வழி நெடுக, மாலைநேர கறிவிருந்தை நினைத்து நாக்கில் எச்சில் ஊற, ஆட்டுக்குக் கட்டுக் கட்டாய் புல்' கொடுத்து குதூகலித்தது உடன் சென்ற கூட்டம்.

ஆறும் நெருங்கியது. அங்கேயும் ஒரு பெருங்கூட்டம் ஆட்டுக்காகக் காத்திருந்தது. பூஜைகள் கனஜோராய் நடக்கத் தொடங்கின. பூஜை முடிந்து மேடைநோக்கி ஆட்டை ஓட்டிச் சென்றனர். பூசாரி தீர்த்தச் செம்போடு மேடையை நெருங்கினான். 

உள்ளூர் கிடாவென்றால் தீர்த்தம் தலையில் பட்டவுடன் தலையாட்டிவிடும். ஆனால், இது சீமைக்காய் கிடாவாச்சே! தலையை ஆட்டுமா ஆட்டாதா என்ற பதட்டத்தில்  கொங்கக்கா!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Wednesday, August 2, 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "விவசாயிகளுக்கு விடிவே இல்லையா?" இறுதிப் பகுதி!

வேளாண்மையில் இன்று உழவுக்கும், சில இடங்களில் விதைப்புக்கும், அறுவடைக்கும் டிராக்டர்கள் மற்றும் எந்திரங்கள்  பயன்படுத்தப்படுகின்றன. மற்ற வேலைகள் பெரும்பாலும் இன்னமும் மனிதர்களைத்தான் நம்பி இருக்கின்றன. 

விவசாய வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் 100 நாள் வேலைக்குச் சென்று விடுவதால் விவசாயம் அழிந்து வருவதாக ஒரு பக்கம் அறியாமையில் சிலர் பிதற்றி வருகின்றனர். 100 நாள் வேலை வருவதற்கு முன்பு ஏதோ விவசாயம் செழித்தோங்கி இருந்தது போலவும் இவர்கள் கதைக்கின்றனர். ஓராண்டில் 100 நாள் போக மீதி 265 நாட்கள் மனித சக்தியை வேளாண்மையில் ஈடுபடுத்தினால் விவசாயம் வளர்ச்சி அடைந்து விடுமா?

தற்போதைய சூழலில் அரசு அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டே விவசாயம் செய்பவர்கள், ஆயிரக் கணக்கில் அரசிடமிருந்து மாதஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வேளாண்மையில் ஈடுபடுபவர்கள், கள்ளச்சாராயம்-கந்துவட்டி உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு விவசாயம் செய்பவர்கள் என விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான் தங்களுடைய வசதிகளை பெருக்கிக் கொள்ள முடியும். ஏனைய பெரும்பான்மை வேளாண் குடிகளின் வாழ்க்கையில் கடந்த ஆண்டுகளில் பாரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவுமில்லை; இனி நிகழப் போவதுமில்லை.

உலக அளவில் வேளாண் உற்பத்திக் கருவிகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் பங்கு-பாகப்பிரிவினைகளால் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலங்கள் துண்டு துண்டாக விரவிக் கிடப்பதனால்  ஒரே நேரத்தில் ஒரே வகையான பயிர்களை நவீனக் கருவிகளைக் கொண்டு சாகுபடி செய்யவதில் சிரமங்கள் இருக்கின்றன. 

சிறுவீத உற்பத்தியிலிருந்து பெருவீத உற்பத்திக்கு வேளாண்மை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்குத் துண்டு துக்காணி நிலங்களை எல்லாம் ஒருங்கிணைத்து சமன்படுத்தி பெரும் பண்ணைகளாகக் கட்டமைக்கப்பட வேண்டும். உற்பத்திக் கருவிகள் மற்றும் வேளாண் இடு பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். நீர்ப்பாசன வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வேளாண்மை ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு அதில் பணிபுரிபவர்கள் தொழிலாளர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். இன்றைய கிராமப்புற குடியிருப்புகள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் வரவு செலவு, இலாப-நட்டக் கணக்குப் பார்க்கப்படுவதைப் போல வேளாண்மையிலும் பார்க்கப்பட வேண்டும். இலாபம் இல்லாத வேளாண் பண்ணைகளை மேம்படுத்துவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். 

அனைத்து வகை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே உள்ள சம்பள வேறுபாட்டைக் குறைத்து, கிட்டத்தட்ட உழைப்புக்கேற்ற ஊதியம் அல்லது சமமான ஊதியம் பெறுகின்ற வகையில் ஊதியக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். 

இத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்கவும் அதற்கு இசைவான ஒரு அரசை நிறுவவும் முயற்சிப்பது ஒன்றுதான் வேளாண் குடிகளின் விடுதலைக்கு வழி வகுக்கும்.

*****

வாலாஜாவில் அடுத்த சில வேலைகள்  எனக்காகக் காத்திருந்ததால், நான் ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பனம்பழத்தை ருசி பார்க்கும் ஆசை என்னைத் துரத்தியதால், தொடர் சாரல் மழை காரணமாக இரண்டு நாள் முயற்சித்து பழத்தைச் சுடமுடியாமல்,  கடைசி நாளில் அது கைகூடியதால் ஒரே நேரத்தில் மூன்று கொட்டைகளைக் கொண்ட ஒரு முழு பழத்தையும் சுவைத்து முடித்தேன்.

இத்தனை நாள் இருந்தும் காட்டுக்குள் போகாமலா ஊர் திரும்புவது என உள்ளம் துள்ளியதால், கணுக்காலில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்திக் கொண்டு மாலை வேளையில் மெல்ல நடந்து காட்டுக்குள் சென்றேன். கலாக்காயைத் தேடிச் சென்ற போது, எலந்தை, சூரை, காரை, பூலாச் செடிகள் கண்ணில் பட்டன. பழங்கள் கிடைக்கும் பருவம் இது இல்லை என்றாலும் ஒரு பூலாச்செடியில் மட்டும் சில பழங்கள் பளிச்சிட்டன. இனிப்பு கசப்பும் புளிப்பும் துவர்ப்பும் கொண்ட சில பூலாப்பழங்களை வாயில் போட்டு அதக்கியவாறு காட்டுக்குள் நீண்ட தூரம் சென்றேன். கலாச்செடி மட்டும் கண்ணில் படவேயில்லை. ஆனால் கண்ணில் பட்டவையோ காலி பாட்டில்களே!

கண்ணாடிக் காடுகளை வளர்க்கும் அரசை நம்பினால் வேளாண் குடிகளுக்கு இனி விடுதலை இல்லை; வேறு வழியைத்தான் நாடு வேண்டும் என எண்ணியவாறு காட்டை விட்டு வெளியேறினேன்.

எட்டி நின்று பார்த்தால் கிராமங்கள் பசுமையாகத்தான் தெரியும். நெருங்கினால்தான் அதன் துயரம் புரியும். 

பச்சை வேர்க்கடலைகளை கொஞ்சம் பையிலே திணித்ததனால் முதுகுப் பாரம் சற்று கூடியதே ஒழிய, இந்த ஒரு வாரத்தில் மனசு லேசாகி உறவுகளிடம் விடைபெற்றுக் கொண்டு மறுநாள் ஊர் திரும்பினேன்.

முற்றும்.

ஊரான்

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உழைத்துப் பார்! தெரியும் களைப்பு!" தொடர் - 5