Tuesday, October 28, 2014

தொடப்பக் கட்டையும் தூய்மை இந்தியாவும்!விரைந்து செல்லும் வாகனங்களால் சட்டெனப் பறந்து மறையும் இலைச் சரகுகள் அக்டோபர் 2 அன்று மட்டும் எப்பொழுதும் தூய்மையாக காணப்படும் டெல்லி பாராளுமன்ற வளாக சாலைகளிலும், சென்னையின் ராஜ்பவன் சாலைகளிலும் அகல மறுத்து அடம் பிடித்தன. காய்ந்த பின் உதிரவேண்டிய பச்சை இலைகள்கூட அன்று சரகாய் மாறி சாலைகளை அலங்கறித்தன. மோடியின் துடைப்பம் மயிலிரகாய் சரகுகளை இதமாய் வருடியபோது “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என முணுமுணுத்தவாறு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி மெய்சிலிர்த்து குதூகலித்தன சரகுகள்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தி,  மக்களிடம் கொள்ளை நோயை உண்டு பண்ணும் பாலிதின் பைகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும், ஆலைகளின் இரசாயணக் கழிவுகளும், ஊராட்சி - நகராட்சிகளின் கக்கூசு – சாக்கடைக் கழிவுகளும் மலை மலையாய்க் குவிந்து கோபுரம் கட்டி வாழும் போது அவைகளைச் சீண்டுவதற்கு திராணி இன்றி, செடி - கொடி - மரங்களுக்கு எருவாய், பயிர்களுக்கு உரமாய், ஏன் எதிர்கால சந்ததிக்கு நிலக்கறியாய் மாறி பன்முகப் பயன்பாட்டைத் தரும் தம்மை, ஏன் இவர்கள் ஊர்கூடி ஒழிக்க நினைக்கிறார்கள் என்கிற ஐயம் மட்டும் சரகுகளுக்குள் எழுந்த வண்ணம் இருந்தன.

வீட்டுக் குப்பையைக் கூட்டுவதற்கே வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளும் கோமான்களும் சீமாட்டிகளும் தெருவைக்குகூட்ட துடைப்பம் ஏந்தி  “வாருங்கள்! பாரதத்தை தூய்மைப்படுத்துவோம்!” என வானதியாய்-லட்சுமியாய் வடிவெடுத்து மெரினாவை மென்மையாய் வருடுவதைப் பார்க்கும் போது இவர்கள் “சொல்வதெல்லாம் உண்மை” தானா என்கிற ஐயம் உயிரற்ற சரக்குகளுக்கே எழும் போது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் எழாதா என்ன?

இந்த பேஷன் ஷோ பெரேடில் ஒய்யாரம் காட்ட தேச பக்தர்கள் துடைப்பக் கட்டையோடு பூங்காக்களை மொய்க்கிறார்கள்; பீச்சுகளை மேய்கிறார்கள். வேலூர் கோட்டைப் பூங்காவில்  வி.ஐ.டி யின் இளவலும், ஐதராபாத் சினிமா ஸ்டுடியோவில் சிரஞ்சீவியும் இதில் முந்திக் கொண்டனர்.

இதே நிலை நீடித்து பேஷன் ஷோவில் எதிர்க்கட்சிக்காரன் பரிசு பெற்றுவிட்டால் அது முதலுக்கே மோசம் என்பதால் இது குறித்து நடுவண் அரசின் அமைச்சரவை உடனடியாகக்கூடி ஆலோசித்ததாம். குப்பை கூட்டுபவர்களுக்கு படிப்பறிவும் போதாது; திறமையும் போதாது எனவே குறைந்த பட்ச கல்வித்தகுதியுடைய திறமையானவர்களைக் கொண்டு குப்பை கூட்டினால் மட்டுமே இந்தியாவைத் தூய்மைப்படுத்த முடியும் என முடிவெடுத்து குப்பை மேலாண்மை குறித்த படிப்பை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவில் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் இந்தப்பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுமாம்.

மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவில் ஒவ்வொரு சாதியிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் பெறும் போதே வேலையில் சேருவதற்கான ஆணையும் கையோடு வழங்கப்படுமாம். பாரத தேசத்தை குப்பையற்ற தேசமாக மாற்றும் வல்லமை 60 லட்சம் இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது என ராஜ்நாத் சிங் கண்டறிந்துள்ளதால்தான் இந்த வேலையை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதோடு அதைக் கட்டாயப் பணியாகவும் அறிவித்துள்ளார்களாம். மீறுவோர் நாடற்றவர்கள்களாக அறிவிக்கப்பட்டு பாரதத்தை விட்டே விரட்டப்படுவார்களாம்.

இந்த வேலை வாய்ப்பில் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை என நடுவண் அரசு அறிவித்த போது அதற்கு இதர பிற்பட்ட வகுப்பினரிமிருந்து (OBC) கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாலும் குப்பை கூட்டும் இந்தப் பணி புனிதமானது என்பதாலும் விகிதாச்சார அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் வேலை வாய்ப்புகள்  பகிர்ந்து அளிக்கப்படும் என நடுவண் அரசு தெளிவு படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனவாம். அனைத்து சாதிகளிலும் உள்ள பெண்களுக்கும் இந்த வேலை வாய்ப்பில் 50 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒருவர்  இந்த வேலை வாய்ப்பினை பெறுவதற்கு ஏற்ப சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படுமாம். இளைஞர்கள் இல்லாத குடும்பங்களிலிருந்தும் ஒருவர் கட்டாயமாக இந்தப் பணியை செய்ய வேண்டுமாம். அவர்கள் பிற பணிகளில் இருந்தாலும்கூட டெப்புடேஷனில் வந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டுமாம்.

தெருவோர சாக்கடைகளை சுத்தம் செய்தல், ஊராட்சி – நகராட்சி, ரயில் நிலைய – பேருந்து நிலைய கழிவறைகளை கழுவுதல், பாதாள சாக்கடை கழிவு நீர்த்தொட்டிகளில் மூழ்கி அடைப்புகளை அகற்றுதல் போன்ற வேலைகளைச் செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மூன்று மாதம் முறையான பயிற்சி அளிக்கப்படுமாம். ஓராண்டு வேலை செய்த பிறகு இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்களாம். இவர்கள் விட்டுச் சென்ற பிறகு, இப்பணியை தொடர மேற்கண்டவாறு புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்களாம்.

விலைவாசி உயர்வும் வெண்டைய்க்காயும்!பதிவெழுதி ஒரு மாதகாலத்திற்கு மேல் ஆகிவிட்டது. கடந்த ஒரு மாத காலத்தில் தட்ப வெட்ப நிலைகளில், அரசியல் தளங்களில், ஆட்சியாளர்களின் கொள்கைகளில், சமூக நடப்புகளில் இமயம் முதல் குமரி வரை பல்வேறு பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. மேற்கண்ட மாற்றங்கள் குறித்து அன்றாடம் ஒரு பதிவு எழுதி இருந்தால்கூட குறைந்தது ஒரு முப்பது பதிவுகளாவது எழுதி இருக்க முடியும். என்ன செய்ய! கணினிக் கோளாறு என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.

கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால்  கடந்த ஆண்டு உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட சேதாரம் அதைத் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட மீட்புப் பணிகளைப் போல கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீரத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் போது முடுக்கிவிடப்பட்டதா என்கிற கேள்வி என்னுள் மட்டுமள்ள காஷ்மீரத்தின் சேதாரத்தை உற்று நோக்கியவர்கள் அனைவருக்குள்ளும் எழுந்திருக்கும் என்றே கருதுகிறேன். காஷ்மீர் சேதாரத்திற்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்க முனைந்த பல்கலைக்கழக பேராசியர்கள் மீது பீகாரில் சங்பரிவார ‘தேசபக்தர்கள்’கள் தொடுத்த தாக்குதலின் போது இந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது மட்டுமல்ல ‘பாரதத்தின்’ ‘சகோரத்துவ’ லட்சணமும் பளிச்சென வெளிப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோவிலுக்குச் சென்று காணிக்கை செலுத்தும் செல்வந்தன் வெளியே வரும் போது வாசலில் தட்டேந்தும் பிச்சைக்காரர்களின் தட்டில் வீசப்படும் சில்லரைகள் போலத்தான் சியாச்சின் சென்று திரும்பிய குஜராத்தின் முன்னாள் கோமகனும் பாரதத்தின் இந்நாள் பிதாமகனும் கொஞ்சம் சில்லரைகளை பனிமலையின் வாசலிலும் வீசிவிட்டு வந்துள்ளார்.

வடக்கே பனிமலை மட்டுமல்ல; சுனாமியால் கொத்துக் கொத்தாய் மக்கள் தென் கோடியில் அன்று மாண்ட போதும், அதைத் தொடர்ந்து தானே புயல் சீற்றத்தால் தமிழகத்தின் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு தலைமுறை சேதாரம் ஏற்பட்டபோதும்கூட ‘இந்தியாவின்’ லட்சணமும் இப்படித்தான் இருந்தது.

அக்டோபர் மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை முடிவுக்கு வந்து, வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விட்டது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை குறைவாகப் பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதும் இந்த மழை குறைவு வரும் காலங்களில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது பற்றி ஆட்சியாளர்கள் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இடையே “வூட் வூட்“ புயலும் வந்தது; விசாகப்படடிணத்தை புரட்டிப் போட்டது. வழக்கத்தைப் போலவே நட்டக் கணக்கும் போடப்பட்டு அடுத்த புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆயத்தமாகிவிட்டனர் ஆட்சியாளர்கள்.

வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய சில நாட்களிலேயே தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கூடுதல் மழை என ரமணன் வாசிக்கும் அறிக்கை மட்டுமே நமக்கு மழை பற்றிய மதிப்பீடைத் தருகிறது. ஆனால் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போதிய மழை இன்மையால் விவசாய வேலைகள் முடங்கிப் போய் விவசாயிகள் மாடுகளை மேய்த்துக் கொண்டு எஞ்சிய நேரத்தில் தாயம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியப் போகிறது? வரும் நவம்பரிலும் மழை பொய்த்துப் போனால் இம்மாவட்டங்கள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது.

‘அக்கினி பகவானும்’, ‘வருண பகவானும்’ குடியானவனின் வயிற்றில் நெருப்பையும் மண்ணையும் வறட்சியாய்-புயலாய் மாறி மாறி கொட்டும் போது அவன் எரிந்து போனானா இல்லை புதைந்து போனானா என எட்டிப் பார்க்கக்கூட நாதி இல்லை.

அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தால் அதற்கு பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டுவார்கள் ஆட்சியாளர்கள். இப்போது பெட்ரோல் - டீசல் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலைதான் இதற்குக் காரணம் என்றாலும் விலை குறைப்புக்கு நாங்கள்தான் காரணம் என ஒரு பக்கம் மார் தட்டுகிறார்களே; பெட்ரோல் - டீசல் விலை குறைந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைய வேண்டுமே என கேள்வி கேட்டால் கள்ள மௌனத்தையே பதிலாகத் தருகிறார்கள் தமிழிசைகள். என்ன செய்ய? ”மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்” என சண்ட மாருதம் செய்யும் தமிழிசைளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!