Sunday, January 30, 2011

வணிகமயமாகும் நாட்டுப்புற கலைகள்!

சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் போது வெளியிடுவதற்காக இந்தக் கட்டுரையை எழுதினேன். ஸ்பெக்ட்ரம் ஊழலையொட்டி மத்திய புலனாய்வுத் துறையினரால் தமிழ் மைய அலுவலகம் சோதனையிடப்பட்டதாலும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ் மையத்தின் பெயர் இடம் பெறக்கூடாது என்பதாலும் இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி பிசுபிசுத்துப் போனது. 

சில காரணங்களால் அப்போது இக்கட்டுரையை வெளியிட முடியவில்லை. பொழுது போக்குக்கான ஒன்றாக நாட்டுப்புற கலைகள் மாற்றப்பட்டு வரும் இன்றைய சூழலில் அது குறித்த ஒரு விவாதம் வலைப்பூ வாசகர்களிடையே நடத்தப்பட வேண்டும் என்பதற்காகக இக்கட்டுரையை வெளியிடுகிறேன்.

***
கலைகளும் இலக்கியங்களும் ஒரு சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார்கள். மனித இனம் தோன்றிய காலம் தொட்டு இன்றைய காலம் வரை எண்ணற்ற கலைகளும், இலக்கியங்களும் தோன்றியுள்ளன. அந்தந்த கால கட்டத்தில் நிலவிய அரசியல் பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்ட மக்களின் போராட்டத்தினூடாக அவைகள் தோன்றின. சில திட்டமிட்டே உருவாக்கப்படன. சில மறைந்து போயின. சில மறைக்கப்பட்டன.

ஆதி கால மனிதன், தான் வாழ்வதற்காக இயற்கையை எதிர்த்துப் போராடினான். இயற்கையை முழுதுமாக புரிந்து கொள்ளாத காரணத்தால் பல தோல்விகளை சந்தித்தான். தோல்வியிலிருந்து மீள்வதற்கும், இயற்கையை எதிர்கொண்டு வெல்வதற்கும் அவனுக்கு தெம்பு தேவைப்பட்டது. இயற்கைச் சக்திகளை முழுக்க முழுக்க கற்பனையிலேயே கீழ்படுத்தியும், கட்டுப் படுத்தியும் அவற்றை மாற்றியமைக்கவும் எண்ணினான். இவை கதைகளாகவும் பாடல்களாகவும் உருப்பெற்றன. இயற்கை சக்திகள் மீது உண்மையிலேயே கட்டுப்பாடு ஏற்பட்டவுடன் அவை மறைந்து விடுகின்றன. 

இத்தகைய கதைகள், மக்களை உண்மையிலேயே மகிழ்வித்தன. அதற்குக் காரணம் இயற்கைச் சக்திகள் மீது மனிதன் வெற்றி கொள்வதைப் பற்றிய கற்பனைச் சித்திரங்களாக அவை இருப்பதுதான்.

கலைகள் சமூக எதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.அதே நேரத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இடையூறுகளை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவதற்கும், இடையூறுகளை வெல்வதற்கும் பயன்பட வேண்டும். அதற்காகவே கலைகள் படைக்கப்பட வேண்டும். இதுவே சமுகத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் செல்லும்.

கலை இரசனைக்கானது, அதற்காகத்தான் கலைகள் படைக்கப்பட வேண்டும் என ஒருசாரார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான கலைகளை உருவாக்கியும் வருகின்றனர். இதில் அவர்கள் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளனர். 

இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் பல இடையூறுகளை எதிர் கொண்ட மனித சமூகம் அறிவியலின் துணைகொண்டு அவைகளை தகர்த்தெறிந்து மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.  ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூகச் சீரழிவுகளால் நமது அன்றாட வாழ்க்கையில் எண்ணற்ற இடையூறுகளை எதிர்கொள்கிறோம்.இன்றோ இத்தகைய இடையூறுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை இழந்து மனச்சோர்வுக்கும் கவலைகளுக்கும் உள்ளாகிறோம். மனச்சோர்விலிருந்து மனிதனை மீட்பதற்குப் பதிலாக, கன நேரம் தனது கவலைகளை மறப்பதற்காக இன்று கலைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இக்கலைகளில் திட்டமிட்டே சீரழிவுகளை புகுத்தி வருகின்றனர். இறுதியில் கலையை வியாபாரமாக்கி காசாக்கி வருகின்றனர். 
இன்றைய கதைகள், நாடகங்கள், தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள் இதைத்தான் செய்கின்றன. தங்களின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள மக்களின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் கதைகளையும், அநீதிக்கு எதிராகப் போராடும் கதாநாயகர்களையும் அவ்வப்போது உருவாக்கவும் செய்கின்றனர்.

இந்தப் புரிதலோடு இன்றைய 'நாட்டுப்புற' கலைகளைப் பார்ப்போம். தப்பாட்டம், ஒயிலாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், தேவராட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், தெருக்கூத்து போன்ற பல்வேறு வடிவங்களிலான கலைகள் கிராமப்புற மக்களால் நிகழ்த்தப்படுகின்றன. கிராப்புற மக்களால் நிகழ்த்தப்படுவதால் இவை நாட்டுப்புற கலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. நாட்டுப்புற கலைகள் என அழைக்கக்கூடாது, மக்கள் கலைகள் என அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இன்று பலமாக எழுந்துள்ளது. நாட்டுப்புறம் என்றால் அது தங்களை இழிவுபடுத்தவதாக உள்ளது என்பதால் இக்கோரிக்கை எழுந்திருக்கலாம்.

பழைய சமுதாயத்தில் தோன்றிய இதுபோன்ற எண்ணற்ற கலைககள் அன்றைய சமூக உற்பத்தி முறையிலிருந்தும் உற்பத்தி உறவுகளிலிருந்தும் தோன்றியவை. மாறிய, முன்னேறிய இன்றைய உற்பத்தி முறை - உறவுகளில் பழைய கலை வடிவங்கள் மற்றும் அதன் உள்ளடக்கம் பொருந்துவதாயில்லை. அதனாலேயே அக்கலைகள் மக்களிடையே செல்வாக்கிழப்பதும், மறைவதும், அழிவதுமான சூழல் ஏற்படுகிறது. 

இன்றை உற்பத்தி முறை மற்றும் உறவுகளுக்கேற்ற கலை வடிவங்களே இன்றைய சமூகத்தில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எடுபடுகிறது. வரவேற்பைப் பெறுகிறது. இன்றைய சூழலுக்கேற்ப உள்ளடக்கத்தை மாற்றியமைத்து வடிவத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க முடியும். மீட்டெடுக்கமுடியும்.

இன்றைய உலகமயமும், தாராளமயமும் அனைத்தையும் நுகர்வுக்கானதாக மாற்றிவருகின்றன. கலைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. நாட்டுப்புற கலைகளை நுகர்வுக்கானதாக மாற்றும் அதேவேளையில் அவற்றை வணிகமயமாக்கும் வேலையையும் சென்னை சங்கமம் செய்கிறது. கலை வணிகமயமானால் என்னவாகும்? வைரமுத்துக்களும், இளையராஜாக்கள் - கங்கை அமரன்களும் இன்றைய சின்னப்பொண்ணுகளும் என்னவானார்கள் என்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

நாட்டுப்புற பாடல்களால் நவநீதகிருஷ்ணன்களும் புஷ்பவனம் குப்புசாமிகளும் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டார்கள். தலித் மக்களின் உள்ளக்குமுறல்களை பாடிக்கொண்டிருந்த சின்னப்பொண்ணு இன்று குத்துப்பாட்டுக்கு கும்மாளம் போடுகிறார். எனக்குத் தெரிந்து கே.ஏ. குணசேகரன் அவர்களும் கோவன் அவர்களும் நாட்டுப்புற பாடல் வடிவங்களை தற்கால நிலைமைகளுக்கேற்ப ஒழுங்கமைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மிகச்சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்கள். 

கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஜெகத் கஸ்பார் போன்றவர்கள் தங்கள் கோடிகளை வெள்ளையாக்கிக் கொள்ளலாம் அதற்காக நாட்டுப்புற கலைஞர்கள் பயன்படலாம். ஆண்டுக்கு ஒருமுறை கை நிறைய பணம் கிடைக்கும் என்ற ஏக்கத்தை இக்கலைஞர்களிடையே ஏற்படுத்தலாம். பற்களை இறுக்கும் மார்கழிக் குளிரில் சென்னை நகர மக்களுக்கு ஒரு மாலை நேர நொறுக்குத் தீனியாக அமையலாம். இதற்கும் அப்பால் தமிழ் பாரம்பரியக் கலைகளை சங்கமம் ஒருக்காலும் மீட்டெடுக்கமுடியாது.

அறிவியல் வளர்ச்சியால் உற்பத்தி சக்திகள் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளன. அதே நேரத்தில் உலக மயம், தாராள மயம், தனியார் மயத்தினால் மக்களின் துன்பங்களும் துயரங்களும் அதிகரித்து வருகின்றன. இதிலிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். தங்களது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்த முடியாமல் மனதுக்குள்ளேயே உள்ளமுக்கி வைப்பதால் மனச்சோர்வுக்குள்ளாகி போராடும் ஆற்றலை இழந்து வருகின்றனர்.

அன்று இயற்கையை எதிர்த்துப் போராட கலைகள் படைக்கப்பட்டன. இன்று பொழுது போக்கிற்காக, இரசனைக்காக கலைகள் படைக்கப்படுகின்றன. ஆனால் நமக்குத் தேவையோ சுரண்டலுக்கெதிராய் போராடும் ஆற்றலை வளர்க்கும் கலைகளே!

விலங்கினத்திற்கே (animal kingdom) உரிய "உயிர் வாழ்வதற்காகப் போராடும்" (struggle for survival) ஆற்றலை வளர்ப்பதற்காக வேண்டி இன்றைய சமூக உள்ளடக்கத்திற்கேற்ப புதிய கலைகளை உருவாக்க வேண்டும். இதற்காகப் பழைய கலை வடிவங்களையும் - நாட்டுப்புற கலைகள் உட்பட-பயன் படுத்திக் கொள்ளலாம். 

Thursday, January 27, 2011

எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்!
"வாங்க முடியாத உயரத்தில் மல்லிகை!"  என்ற தலைப்பில் இன்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. முன்பெல்லாம் எடைக்கு விற்கப்பட்ட மல்லிகை தற்போது நூறு பூக்கள் ரூ 35 முதல் ரூ40 வரை என எண்ணிக்கையில் விற்கப்படுகிறது. அதாவது ஒரு மொட்டு 40 பைசா. ஒரு கிலோ ஆயிரம் ரூபாயிலிருந்து இன்னும் விலை குறையவில்லை. எடைக்குப் பதிலாக தற்போது எண்ணிக்கையில் விற்கப்படுகிறது.

பூக்களின் 'அவசியம்' குறித்து "மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!" என்ற தலைப்பில் 30.12.2010 அன்று வினவு தளத்தில் எனது கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. தேவை கருதி அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

வினவுக்கு நன்றி!

ஊரான்
----------------------------------------------------------------------------------------------
தொடர் மழையை காரணமாகச் சொல்லி வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு முருங்கைக்காயின் விலை பதினைந்து ரூபாய். முந்தானை முடிச்சு படமா ஓடுகிறது இந்த விலை விற்பதற்கு? சந்தையில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். சந்தையை ஒரு சுற்று சற்றிவிட்டு அப்பாடா என ஒரு பெருமூச்சுவிட்டபடி என்னிடம் வந்தார்.
“என்ன பை காலியா இருக்கு. எதுவும் வாங்கலியா?” என்றேன்.
“வெலயக் கேட்டா பயமா இருக்கு. நான் ஏதோ அப்பிடி இப்பிடி எதையாவது வாங்கிக்கிட்டு போயிடுவேன். ஆனா சாதாரண ஜனங்க,  அதுவும் மாசம் மூவாயிரம்,  நாலாயிரம் சம்பாதிக்கிறவங்க என்ன செய்வாங்க பாவம்?” என்றார்.
கை நிறைய சம்பளம் வாங்குபவரையே மிரள வைத்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.
விலைவாசி உயர்வு, உயிர்வாழும் உரிமையைப் பறித்துவருகிறது. இதே நிலை நீடித்தால், ஒன்று பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் அல்லது ஊட்டச்சத்துக் குறைவால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்படுவதும், தொடர் மரணமும் அன்றாட நிகழ்வாகிவிடும்.
மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரசித்திப் பெற்ற மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாயாம். சென்ற வாரம் மல்லி என்றால் இந்த வாரம் கனகாம்பரம். கனகாம்பரமும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாயாம்.
சமீபத்திய தொடர் மழை காரணமாகவும், கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாகவும் விளைச்சல் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். நூறு கிலோ கிடைத்த ஒரு ஏக்கரில் இப்போது ஒரு கிலோதான் கிடைக்கிறதாம்.
விளைச்சல் குறைந்துவிட்டதே என விவசாயிகள் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. நம்பி மல்லியைப் பயிர் செய்துவிட்டார்கள். விளைச்சல் இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
பூ பயிரிடும் விவசாயிகள் மட்டுமல்ல இத்தொழிலையே நம்பி வாழும் பூக்களைக் கொய்வோர்,  பூக்களைக் கொள்முதல் செய்வோர்,  பூக்களை மொத்தமாக வாங்கி உதிரியாக விற்பனை செய்வோர், பூக்களைக் கோர்த்து முழம்போட்டு விற்பனை செய்வோர் என ஒரு பெரும் கூட்டமே பூக்களின் விலை உயர்வால் பாதிக்கப்படுவர்.
விளைச்சல் குறைவாலும், விலை உயர்வாலும் நுகர்வோருக்கு பாதிப்பில்லாமலா? பூக்களின் விலை உயர்வைக் கண்டு அங்கலாய்த்தாலும், கொத்துக் கொத்தாகக் கொண்டையில் பூச்சூடிக்கொள்ளும் மகளிர் பூச்சூடாமல் நிறுத்திக் கொள்வார்களா? இன்று மல்லி முழம் ஐம்பது ரூபாய். ஐம்பது  ரூபாய் என்ன, நூறு ரூபாயானாலும் பெண்ணுக்கு அழகு பூச்சூடுவதுதானே! விடுவார்களா என்ன? பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தானே நமது மகளிர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் காலையிலும், வீட்டோடு இருக்கும் பெண்கள் மாலையிலும் பூச்சூடிக்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். கொண்டையில் சூடியப் பூக்கள் வாடி வதங்கி இறுதியில் குப்பைக்குத்தான் செல்கின்றன. யாருக்காகப் பெண்கள் கொண்டையில் பூக்களை சுமக்கிறார்கள்?
கோயிலுக்கோ அல்லது திருமணத்திற்கோ பூச்சூடாமல் சென்றுவிட்டால் இச்சமூகம் சும்மா விடுவதில்லை. சமூகத்திற்குப் பயந்தே பெரும்பாலான பெண்கள் பூச்சூடிக்கொள்கிறார்கள். பெண்களைப் போகப் பொருளாக மாற்றுகின்ற வேலையைத்தான் பூக்கள் செய்கின்றன. பிறரைக் கவருவதற்காகத்தான் நாம் பூச்சூடுகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இதை ஒரு பண்பாடாகக் கருதி செய்து வருகிறார்கள். இன்று நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்களிடம் வளர்ந்து வரும் குட்டைக்கூந்தல் கலாச்சாரம் பூக்களை சற்றே ஓரம் கட்டி வருவது ஒருவித முன்னேற்றம்தான்.
நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு ஆகிய விசேட நாட்கள் என்றால் பூக்களுக்கு ஏக கிராக்கிதான்.
ஆட்டோக்களிலும், லாரிகளிலும், பேருந்துகளிலும், அலுவலகங்களிலும், வீட்டுப் பூசை அறைகளிலும், கோயில்களிலும் உறையும் கடவுள் சிலைகளுக்கும், படங்களுக்கும் பூ அபிஷேகம் செய்து, பூ மாலைகள் சூடுவதை கிலோ ஆயிரம் ரூபாய் என்பதற்காக பக்தர்கள் நிறுத்தவா போகிறார்கள்? அறியாமையும் இயலாமையும் குடி கொண்டிருக்கும் நம் மக்களிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதான்.
எவ்வளவுதான் விலை ஏறினாலும் சந்தனக்கூடுகளிலும், பூச்சொறிதல்களிலும், பாடைகளிலும், மணமேடைகளிலும், தலைவர்களுக்காக வைக்கப்படும் அலங்கார வளைவுகளிலும்-மலர்ப்பாதைகளிலும்-வரவேற்பு மேடைகளிலும் கொட்டப்படும் பூக்கள் குறையவா போகிறது?
பிறந்த நாள் பொக்கேக்கள், பிரபல தலைவர்களின் சிலைகளுக்கும்-இறந்தவர்களின் உடலுக்கும்  மலர் மாலை-மலரஞ்சலி என மலர்களின் பயன்பாடோ விரிந்து செல்கிறது.
மேற்கண்டவைகள் அவசியமான அடிப்படைத் தேவைகள் இல்லை என்றாலும், மக்களிடையே நிலவும் அறியாமையின் காரணமாகவும் அற்ப பந்தாவுக்காகவும்தானே பூக்கள் இவ்வாறு கொட்டப்படுகின்றன.
நமது மண் வளமும், நீர் வளமும் நம் சொந்தங்களின் உழைப்பும் இது போன்ற அவசியமற்ற, அர்த்தமற்ற தேவைகளுக்காக வீணடிக்கப்பட வேண்டுமா?  மருந்துகளுக்காவும் உணவுக்காவும் பயன்படும் மலர்களை மட்டும் பயிர் செய்வது அவசியமானது. மற்ற தேவைகளுக்காக மலர்களை உற்பத்தி செய்வது அர்த்தமற்றது; அவசியமற்றது.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் காலத்திலிருந்து நமது விவசாயம் என்பது சுதேசித் தேவையை விடுத்து பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக மாற்றப்பட்டும் அந்த விதத்தில் அழிக்கப்பட்டும் வருகிறது. சுயதேவைக்காக இருந்த உணவுப் பயிர்களின் இடத்தில் பணப்பயிர்கள் ஆக்கிரமித்துவிட்டன. அதுவும் கூட விவசாயிகளை வாழவைப்பதாக இல்லை. பூக்களின் விலை உயர்வின் பின்னே உள்ள காரணம் இதுதான். மேலும் அழகு, நுகர்வு என்ற பெயரில் பூக்களை வைத்து மிகப்பெரிய நுகர்பொருள் சந்தை உருவாக்கப்பட்டிருக்கிறது.
அர்த்தமற்ற முறையில் இயற்கை வளமும், மனித வளமும் விரயமாக்கப்படுவதற்கு பூக்கள் ஒரு எடுப்பான உதாரணம். இந்தப் பொருளாதாப் பின்னணியோடு பெண்களை அழகு சாதனமாகவும், துய்த்தெறியும் பொருளாகவும் பார்க்கும் பண்பாட்டு காரணமும் இணைந்திருக்கிறது. அந்த வகையில் பூக்களின் மாய உலகிலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும்.
____________________
- ஊரான்

____________________

Tuesday, January 25, 2011

கால் செருப்பு ஏ.சி.யிலே! கத்தரிக்காய் சாலையிலே!

நான் இந்த கட்டுரையை பேனாவைக் கொண்டு எழுதியிருந்தால் பேனாவின் அவசியமும் அதன் தரமும் முக்கியமானதாய் இருந்திருக்கும். பொத்தான்களை அழுத்தியே கட்டுரையை முடிக்கும் காலம் இது. ஆனாலும் பேனாவின் பயன்பாட்டைத் தவிர்த்தவிட முடியாது.

நாம் பயன்படுத்தும் பேனா சிறந்த பேனாவாக இருக்குமேயானால் நமக்கு எரிச்சல் வராது. எனவேதான் சிறந்த பேனாவைத் தேடுகிறோம். சிறந்த பேனா எது என எப்படி கண்டுபிடிப்பது? மத்திய அரசின் ஐ.எஸ்.ஐ (I.S.I) முத்திரை பெற்றிருந்தால் அது சிறந்த பேனாவாக இருக்கும் என்பதால் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளதா என பார்த்துவிட்டுத்தான் வாங்குவோம். முன்பு ஐ.எஸ்.ஐ என்றிருந்த முத்திரை இன்று பி.ஐ.எஸ்.(B.I.S) ஆக பெயர் மாற்றம் அடைந்துள்ளது.

ஆனால் இன்று பொருள் வாங்கும் போது பி.ஐ.எஸ் மட்டுமல்ல அந்த பொருளை தயாரிக்கும் நிறுவனம் ஐ.எஸ்.ஓ-9001 (I.S.O-9001) தரச்சான்று பெற்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதற்காகவே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஐ.எஸ்.ஓ-9001 தரச்சான்று பெறுவதோடு "இது ஒரு ஐ.எஸ்.ஓ-9001 தரச்சான்று பெற்ற நிறுவனம்" என பெருமையாக அறிவித்துக் கொள்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த முதலாளித்துவ அறிஞர் டெமிங் என்பவர் ஜப்பானில் இருந்தபோது உருவாக்கிய திட்டமிடு-செய்-ஆராய்-நிறைவேற்று (Plan-Do-Check-Act/PDCA Cycle) என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து ஒரு நிறுவனம் சிறப்பாக செயல்படுவதற்கான முறைமையை (system), விதி முறைகளாக வகுத்திருக்கிறது ஐ.எஸ்.ஓ (I.S.O) என்கிற பன்னாட்டு அமைப்பு. இந்த விதிமுறைகளுக்கு ஐ.எஸ்.ஓ-9001 என்று பெயர்.  இந்த விதிமுறைகளின்படி ஒரு நிறுவனம் செயல்படும் பட்சத்தில் பி.வி.கியூ.ஐ (B.V.Q.I)  என்ற நிறுவனம் தனது தணிக்கையாளர்களை (auditors) அனுப்பி சோதித்தறிந்து ஐ.எஸ்.ஓ-9001 தரச்சான்றிதழை வழங்குகிறது.  ஒரு முறை பெற்றால் மட்டும் போதாது ஆண்டுக்கு ஒருமுறை கவனக் கண்காணிப்பின் மூலமும் (surveillance) இரண்டாண்டுக்கு ஒருமுறை மறு ஆய்வுக்கு உட்படுத்தி மறு சான்றிதழுக்கு (re-certification) உறுதி செய்து கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஓ-9001 என்று குறிப்பிட்டாலும், ஐ.எஸ்.ஓ-9001-2008 என்பதுதான் அதன் தற்போதைய தர மேலான்மை முறைமைகள் (Quality Management Systems-QMS) குறித்த ஆவணம்.

எனவே பொருளுக்கான தரச்சான்று மட்டுமல்ல, நிறுவனத்துக்கான தரச்சான்றும் இன்று முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

பொருள் உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல,சேவைத்துறையில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

ஐ.எஸ்.ஓ-9001 விதிமுறைகளை அவ்வப்பொழுது மாற்றியவண்ணம் உள்ளனர். வெளிப் பணிகள் (out sourcing) குறித்த விதிகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதால் வெளிப்பணிகள் குறித்த விவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப் படுகின்றன. 

இதுவரை தொழிற்சாலைகள் மட்டுமே பெற்று வந்த இந்தச் தரச்சான்று இன்று ஜவுளிக்கடைகள், பள்ளிகள்,கல்லூரிகள்,காவல் நிலையங்கள் என பல்துறையினரும் பெறுவதற்கானதாக மாறி வருகிறது. அனைத்து வகையான மோடி மஸ்தான் வேலைகளைச் செய்துதான் பல நிறுவனங்கள் இத்தரச் சான்றை பெறுகின்றனர்.சுருங்கச் சொன்னால் வாடிக்கையாளார்களின் உவகையே (delight) எங்களது இலட்சியம் எனக் கூறிக்கொண்டு ஒரு நிறுவனம் புகழடையவும், லாபமீட்டவும்தான் இத்தகைய பீடிகைகள். 

சமீபத்தில் ஒரு நிறுவனத்திற்கு தணிக்கையாளராகச் (auditor) சென்ற ஒருவர் தனது வீட்டிற்கு ஐ.எஸ்.ஓ-9001 தரச்சான்று பெறப் போவதாகக் கூறியுள்ளாராம்.  ஒருவர் வீடு கட்டும் போது பின்பற்ற வேண்டிய முறைமைகளை (system) ஐ.எஸ்.ஓ நிறுவனம் விரைவில் வகுக்கும் என எதிர்பார்க்கலாம்.  பிறகென்ன? இனி 'இது ஒரு ஐ.எஸ்.ஓ தரக்சான்று பெற்ற அடுக்குமாடி குடியிருப்பு' என 'புரமோட்டர்கள்', விளம்பரம் செய்து கோடிகளை சுருட்டுவார்கள். ஆக இனி இலட்சங்களைக் கொட்டி வீடு வாங்க முடியாது என குடிசை போட்டால் ஐ.எஸ்.ஓ-9001 தரச்சான்று இருக்கிறதா? எனக்கேட்டு இடித்துத் தள்ள ஊராட்சி-நகராட்சி நிர்வாகிகள் வருவார்கள் என்பதை முன்கூட்டியே எச்சரிக்கையாகச் சொல்லி வைப்போம்!

'தரமான வீடு' நல்லதுதானே என ஒருசிலர் வாதிடலாம்.தரம் என்ற போர்வையில் இலாபத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும் முதலாளித்துவ கோட்பாடு இருக்கும் வரை இந்த அக்கப் போர்களை நாம் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

வழக்குக்காக காவல் நிலையம் செல்வோரின் உவகையையும், நகராட்சி மற்றும் பேருந்து நிலைய கக்கூசுகளைப் பயன்படுத்துவோரின் உவகையையும் "வாடிக்கையாளார்களின் உவகையே (delight) எங்களது இலட்சியம்" என பறைசாற்றுவார்களா?

ஐ.எஸ்.ஓ தரச்சான்று குறித்து ஆய்வு செய்ய வந்த அயல் நாட்டு அறிஞன் ஒருவன் கேட்டானாம்,  "காலில் போடும் செருப்பை ஏ.சி அறைகளில் வைத்து விற்கிறீர்கள், உணவாக உட்கொள்ளும் காய்கறிகளையும் பழங்களையும் ரோட்டோரத்தில் விற்கிறீர்களே?" என்று.




தொழிலாளர்களைச் சுரண்டவும், வாடிக்கையாளர்களைக் கவரவும், பொதுவில் மக்களை ஏய்க்கவுமான ஒரு யுக்கிதான் ஐ.ஒஸ்.ஓ தரச்சான்று. இதற்கு மேல் இதில் வாடிக்கையாளரின் உவகையும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை. விஜய்களும், விஜய்காந்த்துக்களும் "டாக்டர்" பட்டம் வாங்கிக் கழுத்தில் மாட்டிக்கொள்வதைப் போலத்தான் இதுவும்.  

Saturday, January 22, 2011

பார்த்திபன் கனவு!

பார்த்திபனுக்கோ பக்தியில் அதிக ஈடுபாடு. அவர் பார்ப்பனர் இல்லை என்றாலும் மீசையை வழித்துக் கொண்டு பூணூலை மாட்டிக்கொண்டு நெற்றியில் ஒற்றை நாமத்தோடு எப்பொழுதும் காட்சியளிப்பார். மார்கழி மாதத்தில் ஐந்து மணிக்கெல்லாம் குளித்து முடித்து காலைக் குளிரையும் பொருட்படுத்தாமல் வெற்றுடம்போடு பூணூல் தெரிய அவர் கோயிலுக்குச் செல்லும் காட்சி பார்ப்பனர்களையே அசர வைக்கும். பொறாமை கொள்ளச் செய்யும். புரோகிதம் செய்யும் ஒரு சில பார்ப்பனர்கள்கூட காலையில் எழுந்து குளிக்காமலேயே பட்டையை மட்டும் போட்டுக் கொண்டு கோயிலுக்குச் சென்று பூசை செய்யும் கண்றாவிகளையும் நான் பார்ப்பதுண்டு. என்னைக் கேட்டால் பார்த்திபன்தான் 'அக்மார்க்' அய்யர் என்பேன்.

பார்த்திபனுக்கு சுமார் 45 வயது. மகளை எப்படியாவது மருத்துவராக்கிவிட வேண்டும் என்பது அவரது கனவு. அதற்காக தனது மகளைத் தயார் படுத்தினார். அன்று மருத்தவக் கல்லூரியில் யார் யாருக்கு இடம் என்கிற முடிவு சொல்லப்படும் தேதி. காலை எட்டு மணிக்குத்தான் அலுவலகம் என்றாலும் ஏழரை மணக்கெல்லாம் அலுவலகத்திற்குச் சென்று கணிப் பொறி முன் காத்திருக்கிறார் முடிவை அறிய. ஒன்பது மணிக்கு முடிவு வெளியாகிறது. அவரது செல்ல மகளுக்கு மருத்தவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. ஆனந்தக் கண்ணீர். அவரால் இருக்கையிலிருந்து எழ முடியவில்லை. ஐந்து நிமிடம் அசைவற்று இருந்துவிட்டு அலுவலகம் என்பதையும் மறந்து உற்சாக மிகுதியில் துள்ளிக் குதிக்கிறார். முதலில் தனது மகளுக்கு செய்தியை சொல்லிவிட்டு பிறகு மகிழ்ச்சியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறார். இந்த மகிழ்ச்சி கிட்டத்தட்ட அவரை ஒரு பரவச நிலையில் ஆழ்த்துகிறது.

கல்லூரியில் சேர்ப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய திட்டமிடுகிறார். மத்தியக் கல்வித் திட்டத்தில் படித்தவர்கள் மாநில அரசின் கீழ வரும் கல்வலூரிகளில் சேர வேண்டும் எனில் அதற்கு ஒரு பத்திரத்தாளில் தடையில்லாச் சான்று பெறவேண்டும். அதற்கான பத்திரத்தாளை வாங்குவதற்கு அருகில் உள்ள நகரத்திற்கு காலை பத்து மணிக்கு தனது ஸ்கூட்டரில் செல்கிறார்.

அது ஒரு தேசிய நெடுஞ்சாலை. காலை நேரமானதால் போக்குவரத்து அதிகம். குறிப்பாக லாரிகள். சுமார் நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் அவர் சென்று கொண்டிருக்கிறார். மகளுக்கு மருத்துக் கல்லூரியில் இடம் கிடைத்த அதீத மகிழ்ச்சியிலேயே அவர் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இடதுபக்கம் ஒரு கிளைச் சாலை பிரியும் இடத்தை நெருங்குகிறார். அது ஒரு குறுக்குச் சாலை. பிரதான சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த ஒரு ட்ரெயிலர் லாரி குறுக்கச் சாலையில் திரும்புவது இவரது கண்களில் பட்டாலும் அச்செய்தி இவரது மூளைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. ஸ்கூட்டர் நேராக லாரிக்கு அடியில் புகுந்து சிதைந்து நொருங்குகிறது... அவரது கனவுகளோடு...

இது கற்பனையல்ல. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம்.

பரவச (ecstasy) நிலையில் ஒரு மனிதன் இருக்கும் போது உணர்ச்சியற்ற நிலையில்தான் இருப்பான். அதாவது தன்னை மறந்த நிலையில் (absorbed) இருப்பான். அவனுக்கு மெய்யுணர்வு மறத்துப் போயிருக்கும். மூளைக்கும் மெய்யுக்குமான தொடர்பு சரிவர இருக்காது.புலனறிவு முளைக்கு முழுமையாக எடுத்துச் செல்லப்படாது. அப்பொழுது அவனை தொட்டாலும், தீண்டினாலும், கிள்ளினாலும், அடித்தாலும், உதைத்தாலும், ஏன் சூடு வைத்தாலும்கூட எதுவும் தெரியாது; உரைக்காது.  

இந்த பரவச நிலை மன ரீதியாக ஏற்படும் ஒரு வகை மன உலைவு (distraction). எளிமையாகச் சொன்னால் இது ஒரு பித்துப் பிடித்த நிலை. ஒரு வகை மன நோய். அதனால்தான் ஆவியை விரட்டுகிறேன், சைத்தானைத் துரத்துகிறேன், பேயை ஓட்டுகிறேன் என்ற பெயரில் மனநோயாளிகளை மிக மோசமாக துன்புறுத்துகிறார்கள்.  

இத்தகைய பரவச நிலைக்கு ஆட்படுத்தித்தான் பெண்களை தங்கள் விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் காம வெறிபிடித்த சாமியார்கள். சாமியார்களை நாடிச் சென்றால் பக்தர்கள் மட்டும் பரவசமடைவார்கள். ஆனால் சாமியார்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள். பக்தர்களோ பரவசத்தில், சாமியார்களோ பேரானந்தத்தில். அதாவது பக்தை பரவசத்தில் இருப்பாள். சாமியார் ஆனந்தத்தில் இருப்பார். இதைத்தான் ஆனந்தப் பரவசம் அல்லது பேரானந்தம் என்கிறார்களோ!.

மூளை தெளிவாக இருக்கும் போது மட்டுமே நம் உடலில் நிகழும் மாற்றங்களை தெளிவாக உணர முடியும்.  மனம் என்பது மூளையின் வெளிப்பாடு. (mind is the product of brain).  மனமானது பரவச நிலையை அடையும் போது உங்களது முளையின் இரசாயனக் கலவையில் (brain chemistry) மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பொருள். இத்தகைய மன நிலையில்தான் மெய்யுணர்வு குறைந்துபோகும் அல்லது அற்றுப்போகும். இது ஒரு மாறுபட்ட, இயற்கைக்கு மாறான மனநிலை.

மெய்யுக்கும் மூளைக்குமான தொடர்பு முழுமையாக இல்லை என்றால் உங்களால் எதையும் சரியாக கணிக்க முடியாது. உணர முடியாது. அப்படிப்பட்ட சூழலில்தான் பார்த்திபன்கள் மாண்டு போகிறார்கள். சாமியார்கள் மகளிரைச் சூரையாடுகிறார்கள். 

Wednesday, January 19, 2011

ஏலச் சீட்டு மோசடி! ஏய்ப்பவர்கள் யார்?

"தீபாவளிக்கு ஸ்வீட் தருவதாக சீட்டு மோசடி எஸ்.பி., ஆஃபீஸில் குவிந்த பொதுமக்கள்!


ஈரோடு: தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் மோசடி புகாரின் முன்னோடியாக  மூன்று ரூபாய் கட்டினால் பாத்திரம் தருவதாக கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்தவர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மனு கொடுத்தனர்.

தீபாவளி பண்டிகையை மையமாக வைத்து, வாரந்தோறும் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சீட்டு கட்டுவது, இனிப்பு மற்றும் கார வகை சீட்டு, தங்கக்காசு சீட்டு, வீட்டு உபயோகப் பொருட்கள் சீட்டு என பல்வேறு வகையான சீட்டுகள் சேர்க்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பணம் கட்டும் மக்கள், சரியாக தீபவாளி சமயத்தில் பணமோ, பொருளோ கிடைக்காமல் மோசம் போகின்றனர்.ஈரோடு நகரில் நூதன முறையில் சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த சம்பவம் நடந்தது.முதல் நாள் மூன்று ரூபாய் கட்ட வேண்டும். மறுநாள் 3.50 ரூபாய், மூன்றாவது நாள் நான்கு ரூபாய் என ஒவ்வொரு நாளும் 50 பைசா வீதம் உயர்த்தி சீட்டு கட்ட வேண்டும். தினமும் குலுக்கல் மூலம் ஒருவருக்கு பொருட்கள் பரிசு வழங்கப்படும்.

ஈரோடு நகரில் புதுமை காலனி, வி.வி.சி.ஆர்., நகர், வளையக்கார வீதி, சூளை, சூரம்பட்டி, எம்.ஜி.ஆர்., காலனி, அய்யனாரப்பன்கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களிடம் இவ்வாறு சீட்டுப்பணம் வசூலித்து, லட்சக்கணக்கான ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று எஸ்.பி., ஜெயசந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர்.

பொதுமக்கள் கூறியதாவது:வி.வி.ஆர்.சி., நகரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீட்டு வசூலித்தார். 110 ரூபாய், 540 ரூபாய் என இரு வகையான சீட்டு நடத்தினார்.அவருக்கு 50 வயது இருக்கும். அவருடன் 40 வயது மதிக்கத்தக்கவரும் பணம் வசூலிக்க வருவார். மூன்று ரூபாய் என்பதால் ஒருவரே நான்கு, ஐந்து சீட்டுகள் கட்டினர்.தினமும் ஒருவருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். குலுக்கலில் விழாதவர்கள், அடுத்த நாள் 3.50 ரூபாய், அதற்கு அடுத்த நாள் நான்கு ரூபாய் என படிப்படியாக உயர்த்தி கட்ட வேண்டும். இதுவரை 31 நாட்கள் 430 ரூபாய் வரை கட்டி விட்டோம். ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை கட்டியுள்ளனர். சீட்டு நடத்தியவர் திடீரென மாயமாகி விட்டார். வீட்டையும் காலி செய்து விட்டார். பொருட்கள் தருவதாக கூறி ஏமாற்றியவரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்"  தினமலர், 18.01.2010

இது ஒரு வகை மாதிரிதான். இது போன்ற மோசடிகள் பலப் பல...

"தீபாவளி சீட்டு மோசடி: போலீசில் புகார். அதிகம் ....

"சீட்டு மோசடி: தம்பதி கைது.... 

"கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தீபாவளி பரிசு சீட்டு நடத்தி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவான கணவன்,...

"சீட்டு மோசடி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு, ... புகார் மனுவை கொடுத்துவிட்டு திரும்பினார்கள் இந்த மோசடி குறித்து ...

"தீபாவளி சீட்டு மோசடி: கணவன் மனைவி கைது.....

"அரக்கோணத்தில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்த நபரை, பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ...

"தொடர்கிறது சீட்டு மோசடி; பறிகொடுத்தவர்கள் புகார் ... திருப்பூர் : சீட்டு என்ற பெயரில் மோசடி செய்பவர்களிடம் ஏமாறும் ...

"தேவகி கூறும்போது, ரோஜாபாய் தீபாவளி- பொங்கல் சீட்டுநடத்துவதில் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். ..

"வியாசர்பாடியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி; முன்னாள் பெண் அதிகாரி கைது.

"நாகர்கோவில்: ஏலச்சீட்டு நடத்தி 10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ஏலச்சீட்டு ... 

"சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி அளவுக்கு மோசடிசெய்த பலசரக்குக் கடை வியாபாரிகள் திடீர்மாயமாகி விட்டனர். ...

"சென்னை : சீட்டு, பண்டு மற்றும் பண இரட்டிப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பணம் பல கோடி ரூபாயை ஏமாற்றிய மூவர் மீது ...

"ஊரப்பாக்கத்தில் சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி....

"விழுப்புரத்தில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.9 லட்சம் மோசடி: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் கைது.....

சீட்டு மோசடிகளை பட்டியலிட்டால் இணையத்தின் பக்கங்கள் போதாது!

இப்படி தமிழகமெங்கும் ஆண்டு முழுக்க நடைபெறும் ஒரு மோசடித் தொழில்தான் இந்த சீட்டு நடத்தும் தொழில். இச்செய்திகள் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் வராத நாளே கிடையாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த மோசடித் தொழில் நடந்துகொண்டுதான் வருகிறது. முன்பெல்லாம் ஆயிரக்கணக்கில் இருந்த மோசடி இப்பொழுதெல்லாம் பல லட்சங்களிலிருந்து கோடிகளை எட்டி உள்ளது. காமன்வெல்த்,  ஸ்பெக்ட்ரம் ஊழல்களெல்லாம் ஆயிரக்கணக்கான கோடி முதல் இலட்சக்கணக்கான கோடிகளை எட்டும் போது ஏலச்சீட்டு மோசடி மட்டும் ஆயிரங்களில் இருந்தால் நியாயமா? அதனால்தான் இவர்களும் இலட்சங்களையும் கோடிகளையும் தொடுகிறார்கள்.

இத்தனை மோசடிகள் நடந்த பிறகும் நம் மக்கள், சாதாரண ஏழைகளிலிருந்து நடுத்தர மற்றும் மேட்டுக் குடி வரைக்கும் திரும்பத் திரும்ப ஏன் ஏலச்சீட்டில் சேருகிறார்கள்? ஏமாற்றப்படுவோம் என்று தெரிந்தே இத்தகைய திட்டங்களில் சேருவதன் சூட்சமம் என்ன?

இத்தகைய ஏலச்சீட்டுகள் நடத்தப்படாத இடங்களே கிடையாது. குக்கிராமம் தொடங்கி சிறு நகரங்கள், பெரு நகரங்கள், அலுவலகங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என எங்கும் நீக்கமற வியாபித்திருக்கும் ஒரு தொழில்தான் இந்த சீட்டுத் தொழில்.

பட்டாசு பண்டு, ஸ்வீட் பண்டு, சபரி மலைச் சீட்டு, அண்டா-குண்டா-பாத்திரம் என சிறு தேவைகளுக்காக நடத்தப்படும் சாதாரண சீட்டுகளிலிருந்து பிள்ளைகளின் உயர் கல்வி, சொந்த பிளாட் - வீடு, மகளின் திருமணம் என மிக முக்கிய தேவைகளுக்காக நடத்தப்படும் ஏலச்சீட்டுகள் என பல வகையான சீட்டுகளில் மக்கள் சேருகிறார்கள்.

சீட்டில் சேர்ந்துள்ள ஒருவருக்கு முதல் மாதத்திலேயே திடீர் பணத் தேவை ஏற்பட்டுவிடும். அதனால் என்ன செய்கிறார்? முதல் சீட்டை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். இதைத் தெரிந்து கொள்ளும் பிறர் வேண்டும் என்றே தள்ளுத்தொகையை அதிகமாக்கி ஒரு இலட்ச ரூபாய் சீட்டை, ரூ.60 000 தள்ளுத் தொகை போக மீதி ரூ 40000 த்துக்கு சீட்டை எடுக்க வைக்கிறார்கள். அடுத்த மாதம் இன்னொருவருக்கு நெருக்கடி வரும். அந்த சீட்டையும் அதே போல ஏற்றிவிடுவார்கள். இது ஒவ்வொரு மாதமும் நடக்கும் கூத்து. கடைசி ஒன்றிரண்டு சீட்டுக்காரர்கள் அதிக ஆதாயம் அடைவார்கள். ஒரே ஆண்டில் போட்ட பணம் இரட்டிப்பாகும். 

அடுத்தவனின் துன்பத்தையும்,துயரத்தையும் காசாக்கும் கயமைத்தனத்தைவிட இதில் வேறென்ன பார்க்க முடிகிறது? 

பொருளுக்காக நடத்தப்படும் சீட்டுகளிலும் இதே கதைதான். வெளி மார்க்கெட்டில் ரூ1000 த்துக்குக் கிடைக்கும் ஒரு பொருள் இத்தகைய சீட்டுகளில் சேர்ந்தால் ரூ 100 க்கு கிடைகிறதே! அவனால் எப்படி இந்த விலைக்குத் தரமுடிகிறது என்று யோசிக்கிறார்களா? அப்படியே யோசித்து தெரிந்து கொண்டாலும் எங்கே யாரை ஏமாற்றினால் நமக்கென்ன? நமக்கு 100 ரூபாய்க்கு கிடைத்தால் சரி என்ற மன நிலைதான் மேலோங்கி இருக்கிறது. 

இப்பொழுது சொல்லுங்கள். சீட்டு நடத்துபவன் மட்டுமா மோசடிக்காரன்? 

பணம் சேமிக்க அஞ்சலகங்களிலும் அரசு வங்கிகளிலும் எத்தனையோ திட்டங்கள் இருக்கும் போது ஏலச்சீட்டுக்காரர்களை நோக்கிச் செல்வதே அங்கே ஆதாயம் அதிகம் என்பதால்தான். அஞ்சலகங்களிலும் மோசடி நடக்கத்தான் செய்கிறது. இங்கே முதல் போட்டவன் கண்டிப்பாக பணத்தைத் திரும்பப் பெற வழிகள் உண்டு. ஆனால் தனியார் சீட்டுகளில் மோசடி நடந்தால் பட்டை நாமம்தான்.

இது ஒரு ஊழல் மனப் பாங்கு.  a corrupted mind.  அதனால் சீட்டு மோசடியில் ஏமாந்தவர்கள் பேட்டி கொடுக்கும் போது இவர்கள் மீது எனக்கு பரிவு ஏற்படுவதில்லை. அதற்காக ஏமாற்றியவன் மீது கோபம் ஏற்படாமல் இல்லை. சீட்டு நடத்துபவன் தெரிந்தே போசடி செய்கிறான். ஆனால் ஏமாறுகிறவர்களோ தாம் ஒரு வகையில் பிறரை ஏய்க்கிறோம் என்று தெரியாமலேயே மோசடி செய்கிறார்கள்.

சீட்டு நடத்துவதை ஒழிக்காமல் இத்தகைய மோசடிகளை ஒருக்காலும் ஒழிக்க முடியாது. சட்டங்களாலும் காவல்துறையின் கெடுபிடிகளாலும் சீட்டு நடத்துவதையும், சீட்டு மோசடிகளையும் ஒழித்துவிட முடியாது. பொது மக்களின் முயற்ச்சியே இத்தகைய தொழிலையும் மோசடிகளையும் ஒழித்துக் கட்டும். 

Saturday, January 15, 2011

அறிவும் நாணயமுமே மனிதனுக்கு அழகு!

தலை மயிரைப் பாதுகாக்க தவியாய் தவிக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். தலை முடி என்று எழுதாமல் தலை மயிர் என்று நாகரிகமில்லாமல் எழுதுவதாக யாரும் தவராகக் கருதி விடாதீர்கள். சாதம் என்று சொன்னால் நாகரிகம். சோறு என்று சொன்னால் நாட்டுப்புறம். இப்படித்தானே நாம் பழகிப் போயிருக்கிறோம். அதனால்தான் மயிர் என்று படித்தவுடனே சற்றே நாம் நெளிகிறோம். கேசம் என்றோ, முடி என்றோ எழுதலாமே எனத் தோன்றுகிறதல்லவா?

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் hair  க்கு முதல் சொல்லாக மயிர் என்றுதான் பொருள் சொல்லப்பட்டுள்ளது. எனவே மயிர் என்று சொல்வது தமிழுக்குரிய மரியாதைதானேயொழிய அசிங்கம் அல்ல. 'மயிரைழையில் தப்பினேன்' என்றுதான் சொல்கிறோம். இங்கே மயிர் அசிங்கமாகப் பார்க்கப்படுவதில்லையே!

இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா இல்லையா போன்ற பல 'மயிர் பிளக்கும்' வாதங்களைக் கண்டவர்கள் நாம். நெஞ்சில் மயிர் அதிகமானால் அது ஆண்மைக்கு அடையாளம் என மார்தட்டும் காளைகளையும் பார்த்திருக்கிறோம். அதே மயிர் நரைத்துப்போனாலும் 'வயதானாலும் வாலிபம் குறையவில்லை' என வசீகரிக்கும் 'முது வாலிபர்களையும்' பார்த்து வருகிறோம்.

மயிரின் வனப்பு மரபுக் கூறுகளாலும், உணவு ஊட்டத்தாலும், செய்யும் தொழிலாலும், வாழும் புறச்சூழலாலுமே தீர்மானிக்படுகிறது. தலை மயிர்தான் நம் உடலில் அதிகமாக கவனிக்கப்படும் ஒரு பகுதி. தலை மயிரில் ஒரு குறை என்றால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடைந்துதான் போகிறார்கள். ஆம்! உடைந்துதான் போக வேண்டும். அந்த அளவுக்கு மயிர் நம் உடல் நலத்தோடு தொடர்புடையது.  நம் உடலியக்கத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது தலை மயிரில் குறிகளாக (symptoms) வெளிப்படும்.

இளவயது வழுக்கை (baldness), மயிர் கொட்டுதல் (hair falling) அதுவும் கொத்துக் கொத்தாக கையளவுக்குக் கொட்டுதல் (falling: handfuls, in), மயிர்ப்பிளவு (bristling), வெளிறிய மயிர் (gray, becomes), வறண்ட மயிர் (dryness), மயிர் உடைதல் (brittleness), பிசுபிசுப்பான மயிர் (greasy), சடைப்பிடிப்பு மயிர் (plica polonica),  ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் மயிர் (sticks together), சிக்கலுக்குல்லாகும் மயிர் (tangles easily), மெல்லிதான மயிர் (thin)  என மயிரில் ஏற்படும் இம்மாற்றங்கள் நாம் நோய்வாய்ப்பட்டுள்ளோம் என்பதைக் காட்டும் குறிகளே என ஹோமியோபதி மருத்துவம் உணர்த்துகிறது.

இவற்றிற்கு முறையாக மருத்துவம் பார்த்து சரிசெய்து கொண்டால் நம் மொத்த உடல் நலமும் பாதுகாக்கப்படும். மயிரும் அதற்குரிய பொலிவோடு மிளிரும். தலை மயிருக்கு வண்ணச் சாயம் பூசி மைனராக இருக்கத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள். என்னதான் நரையை மறைத்தாலும் வெளி உலகுக்கு வேண்டுமானால் மைனராக காட்சியளிக்கலாம். ஆனால் பேரப்பிள்ளைகள் "தாத்தா" என்றழைப்பதை தடுக்க முடியுமா? அப்படி அழைப்பதில்தான் ஒரு சுகம் இருக்கிறதே. பிறகேன் இந்த மைனர் வேஷம்? வண்ணச் சாயம் பூசும் பாட்டிகளும் இப்படித்தான. வீட்டில் வேண்டுமானால் "ஆயா" என்றழைக்கலாம். ஆனால் வெளியில் பிறர் மத்தியில் "ஆண்ட்டி" என்றுதான் அழைக்க வேண்டும்.

பொதுவாக மனைவிமாரைவிட கணவன்மார்களுக்கே முதலில் நரை ஏற்படுகிறது. மீசைதான் முதலில் நரைக்கும். கணவன் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் மனைவி விடுவதாயில்லை. "டை அடி, டை அடி" என நச்சரித்து, படாத பாடுபடுத்தி ஒரு வழியாக கணவன் மயிரை கருப்பாக்கி விடுகிறார்கள். இதற்காக இவர்கள் பிரில் கிரீமிலிருந்து மருதாணி வரை எதையும் விடுவதில்லை. "உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணு" என்கிற கதையாக பெரும்பாலான சமயங்களில் நம் தமிழர்கள் செவ்விந்தியர்களாக சிறிது காலம் காட்சியளிக்கிறார்கள். நரகலைத் தேய்த்தால் நரை போகும் என்றால் அதையும் விட மாட்டார்கள் போலும். எதைச் செய்தாவது தனது கணவனை இளைஞனாக்க வேண்டும். பிறர் கண்ணுக்கு தனது கணவன் கிழவனாக தோற்றமளித்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் சில மனைவிமார்கள். இது மனைவிமார்களின் மனநிலை.

உடல் நலிவால், ஏதோ ஒன்றிரண்டு மயிர் வெள்ளையாகிப் போனால் தன்னை ஏமாற்றி கிழவியை தலையில் கட்டிவிட்டார்கள் என கணவன்மார்களும்; கிழவனுக்குத் தன்னை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாகப் புலம்பும் மனைவிமார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். மயிருக்காக விவாகரத்து வரை செல்லும் அவலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வயோதிகர்களுக்கு வெள்ளை மயிர் ஒரு பிரச்சனை என்றால் வாலிபர்களுக்கோ 'ஹேர் ஸ்டைல்' ஒரு பிரச்சனை. இதற்காக சலூன்களைத் தேடி அலைகிறார்கள். இவர்களுக்காகத்தான் சலூன்களெல்லாம் இன்று 'பியூட்டி பார்லர்களாக' பெயர் மாற்றம் பெருகின்றன. ரஜினி ஸ்டைல், அஜித் ஸ்டைல், விஜய் ஸ்டைல், என சினிமாக்காரனைப் பார்த்து மயிரில் 'ஸ்டைல்' காட்டும் அவலத்திற்கு நம் இளைஞர்கள் ஆளாகி வருகிறார்கள்.

சுக போகங்களைத் துறந்த சாமியார்களுக்கோ மயிர்தான் மூலதனம். மயிர் போனால் இவர்களின் தொழிலும் போச்சு. அதனால்தான் கிழச் சாமியார்கள்கூட தலை மயிருக்கு வண்ணச் சாயம் பூசி வெண்தாடிக் கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். ஒரு வேளை இதுதான் பெண்களை வசியம் செய்யும் மையோ!

அரசியல் வாதியிலிருந்து அட்வகேட் வரை இதற்கு மயங்காதவர்கள் உண்டோ! "கரு கரு" மயிரோடு பவணி வரும் இவ்விளம் முதியோர்கள் ஒரே ஒரு நாள் அசந்தாலும் சாயம் வெளுத்துவிடும். பல் துளக்க மறந்தாலும் மறக்கலாம். ஆனால் மயிருக்கு சாயமடிக்க மட்டும் மறந்து விடக்கூடாது. திரைப்பட நடிகைகள் முதல் அலுவலகப் பெண்கள் வரை மாதர்களையும் இந்தச் சாயம் விட்டு வைக்கவில்லை.

கூந்தல் மயிர் உரசலில் 12 வோல்ட் மின்சாரத்தின் சுகத்தைக் காணும் காளையர்கள் அதே மயிர் சாப்பாட்டில் இருந்துவிட்டால் 230 வோல்ட் மின்சாரத்தின் ஷாக்குக்குள்ளாகி தட்டை முகத்தில் வீசியெறிவதும் நடக்கத்தானே செய்கிறது. இங்கே கூந்தல்தான் வேறுபடுகிறது. மயிரென்னவோ அதேதான்.

வேண்டுதலுக்காக மயிர் வளர்ப்போரும் உண்டு. இந்த மயிரை வைத்து கோடிகளைச் சுருட்டுகிறான் ஏழுமலையான். பறி கொடுத்த பக்தனோ பட்டை நாமத்தோடு திரும்புகிறான். பயிர் நடுவது குறைந்து வருவது பற்றி கவலையில்லை. ஆனால் மயிர் நடுவது பற்றிய கவலையில் மூழ்கியிருக்கிறது ஒரு கூட்டம். இதற்கான ஆராய்ச்சிகள்கூட அதிகரித்துவிட்டனவாம். வயல்கள் காய்ந்தால் என்ன? இனி வழுக்கைகள் காயாதல்லவா!

இளமையில் முடி வளர்வதும், முதுமையில் நரைப்பதும், வழுக்கை விழுவதும் அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப நடைபெறும் ஒரு இயற்கை நிகழ்வே. ஒரு உயிரியல் நிகழ்வே. இதில் செயற்கையாய் செய்யப்படும் செயல்கள் யாவும் மனப்பிறழ்வின் விளைவுகளே.

இந்த மனப்பிறழ்வே நமது பலவீனம். இதுவே முதலாளிகளின் மூலதனம். வித விதமான கிரீம்கள், ஷாம்புகள், சோப்புகள், கேசவர்த்தினி தைலங்கள், வண்ணச்சாயங்கள் (dye) என மயிர் காக்கும் சரக்குகளால் கொழுக்கிறார்கள் முதலாளிகள். இந்தச் சரக்குகளின் பக்க விளைவுகளாலும் மயிரின் தன்மையை மறைத்ததாலும் பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள் மக்கள்.

நாம் அழகாய்த் தோன்றினால் அது நமக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று சொல்லலாம். அந்த வகையில் மயிரை அழகுபடுத்திக் கொள்வது சரிதானே என்று தோன்றலாம். தோற்றத்தில் அழகைத் தேடினால்,  அதற்கு எல்லை ஏது? ஒருவரைப் போல மற்றொருவர் இருப்பதில்லையே! இருக்கவும் முடியாது. ஆகவும் முடியாது. தோற்றப் பொலிவு ஒரு கானல் நீர்.

அறிவும் நாணயமுமே மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார். அதுவே சமூகத்திற்கும் அழகு சேர்க்கும்.

Sunday, January 9, 2011

இளம் பெண்களே அச்சப்படாதீர்கள்!

மாலை ஐந்து மணி. பேருந்து நிறுத்தம். பேருந்தில் ஏறுவதற்காக வேகமாகச் சென்று கொண்டிருந்தவர்கள், பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்குச் செல்பவர்கள் என பேருந்து நிறுத்தமே கலை கட்டியிருந்தது. நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினர் வாழும் பகுதிக்கான பேருந்து நிறுத்தம் அது. கல்லூரி மாணவர்களே அதிகமாகப் பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரே கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் குடியிருப்புப் பகுதியின் நுழைவு வாயிலருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். 

"ஏ வாப்பா இப்டியே போலாம்".  முழங்கால் வரையிலான ஜீன்ஸ் பேண்ட்டும், டி சர்ட்டும் அணிந்திருந்த மாணவி, சுடிதார் போட்ட மாணவியைப் பார்த்து அழைக்கிறார். 

"நான் உங்கூட வரலப்பா,  பயமா இருக்கு!" என்று சத்தமாகச் சொல்லிவிட்டு  சேலை உடுத்திய மற்றோரு மாணவி முயற்சி செய்தும் அதை பொருட்படுத்தாமல் சுடிதார் போட்ட அம்மாணவி மற்றொரு தெரு வழியாக நடக்கத் தொடங்கினார். 

அனைவருமே ஒரே குடியிருப்பைச் (township) சேர்ந்தவர்கள். இதுவரை பேருந்தில் ஒன்றாக வந்தவர்கள் தற்போது வீட்டிற்குத் தனியாப் பிரிந்து செல்லக் காரணம் என்ன? 

ஒருவருக்கொருவர் அறிமுகமான குடியிருப்புப் பகுதி. ஐந்திலிருந்த பத்து நிமிடங்களில் நடந்தே வீட்டிற்க்குச் சென்றுவிடலாம். மாலை ஐந்து மணி, இருட்டுப் பயமும் கிடையாது. பிறகு பயமேன்? இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் என்னைத் துளைத்தெடுத்தது.

ஒரு நல்ல வேலைக்கு வந்து பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் முதல் தலைமுறையினர் வாழும் பகுதி அது. இத்தலைமுறையினரின் வாரிசுகள்தான் இம்மாணவிகள். கல்வியில் மட்டுமல்ல, நடை உடை நாகரிக ரீதியாகவும் நகர்ப்புறத்தில் உள்ளவர்கயோடு போட்டிப்போட வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் சுதந்திரமாக முடிவெடுக்கும் தைரியத்தைப் பெறாதவர்கள். அதனாலேயே வீட்டில் உள்ளவர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் என்ன சொல்வார்களோ என அஞ்சுபவர்கள்.

"அவ டிரஸ்சப் பாரு அசிங்கமா, நீ அவளோட சேராதே"  என வீட்டில் உள்ளவர்கள் சொல்லிவிட்டால் என்ன செய்வது?. அவளோடு சென்றால் மற்றவர்களும் நம்மைத் தவறாகப் பார்த்துவிட்டால் அசிங்கமாகிவிடாதா? இதுவே பயத்திற்கு அடிப்படை. இந்தப் பயமே அவரைத் தனியாக வீட்டிற்கு விரட்டுகிறது.

அந்த மாணவி அணிந்திருந்த உடை அப்படி ஒன்றும் அசிங்கமாகவோ ஆபாசமாகவோ இல்லை. வட இந்தியாவில் சிறு நகரங்கள் மற்றும் டெல்லி, மும்பய் உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான இளம் பெண்களின் உடை அதுதான். அங்கு ஆண்கள் உள்ளிட்ட யாரும் இதை அசிங்கமானதாகக் கருதுவதில்லை. ஏன் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உயர் கல்வி பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் கனிசமானப் பெண்கள் அணியும் உடையாகப் பேண்ட் - டி சர்ட் உருவெடுத்துள்ளது.

முதலில் நாகரிகம்-பேஷன் என அறிமுமானாலும் இத்தகைய உடை மாற்றங்கள் பிறகு சாதாரணமாகிவிடுகின்றன. இப்படித்தான் சுடிதார் நுழைந்தது. அப்போதும் சுடிதார் போட்டவர்களை அசிங்கமாகப் பார்க்கும் மன நிலை இருந்தது. இன்று கிராமப்புறம் வரை சுடிதார் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதாரண உடையாக அமைந்துவிட்டது. தாவணிகள் 'ஏனை'களாகிவிட்டன.

தாவணிக் கனவு கண்டவர்கள் பதறிப்போனார்கள். தமிழ்ப்பண்பாடு அழிவதாகக் கூச்சலிட்டார்கள். ஆனால் பெண்கள் இக்கூச்சலை பொருட்படுத்தவில்லை. தங்களின் வாழ்க்கைச் சூழலுக்கு எந்த உடை பொருத்தமாக இருக்கிறதோ, அது ஆபாசமாக இல்லாத பட்சத்தில் அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஆபாசமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் பெண்களுக்குரியதேயொழிய ஆண்களுக்கானதல்ல. காரணம் எந்த உடையை அணிந்தாலும் அதில் ஆபாசத்தைத் தேடுவது ஆணாதிக்கக் குணமாயிற்றே. 

உடையில் ஏற்படும் மாற்றம் என்பது பண்பாட்டளவில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அது தவிர்க்கமுடியாதது. அந்தந்த சமூகச்சூழலுக்கு ஏற்ப, தாங்கள் மேற்க்கொள்ளும் தொழில் மற்றும் வேலை நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்தமான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுடையது. மத, இனப் பண்பாட்டை காக்கிறேன் என்ற பேரில் இதில் மூக்கை நுழைப்பது அர்த்தமற்றது. 

ஆபாசமான உடைகளை விதவிதமான வகைகளில் புகுத்த முயல்பவர்கள் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ள அலையும் திரைத்துறையினரும், வியாபாரிகளும், பேஷன் டிசைனர்களும்தான். இல்லை என்றால் இவர்களில் பலர் கல்லா கட்ட முடியாது. இவர்களே ஆபாசத்தின் ஊற்றுக்கண்களாகவும் இருக்கிறார்கள். இன்றைய உலக மயமும், தாராள மயமும் ஏற்படுத்தி வரும் லாப வெறி இவற்றை மேலும் விரிவுபடுத்துகிறது.