Monday, April 29, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 5


பார்ப்பனியம் பிறவிக் குணமா?

இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது. முதலில் பார்ப்பனியம் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டால்தான்  மேற்கண்ட கேள்விக்கான விடையைத் தேடுவது சரியாக இருக்கும்.

பார்ப்பனர்கள் ஐயர், ஐயங்கார் உள்ளிட்ட பல்வேறு சாதிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடங்கி விடுகிறார்கள். இவர்களிடையே நிலவும் உணவுப் பழக்க வழங்கங்கள், உடை உள்ளிட்ட இதர அலங்காரங்கள், பேசும் மொழிநடை, வணங்கும் கடவுள்கள், கொண்டாடும் பண்டிகைகள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளை வைத்து பார்க்கும் போது பிற சாதி மக்களிடமிருந்து இவர்களை நாம் மிக எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். தற்போது ஒரு சில இடங்களில் சில பார்ப்பனர்களை அவ்வாறு அடையாளம் காண்பதில் சற்று சிரமம் இருந்தாலும் தங்களது நடத்தையால் விரைவிலேயே அவர்களும் அம்பலப்பட்டுப் போகிறார்கள்.

இவர்களின் மூதாதையர்கள் வகுத்து, வகைப்படுத்தி, நடைமுறைப்படுத்திய வர்ண சாதி அமைப்பு முறையில் இவர்களே பிற சாதி மக்களைவிட பிறப்பால் உயர்ந்தவர்கள் என்கிற நினைப்பும், கல்வி அறிவிலும், திறமையிலும் இவர்களே முதன்மையானவர்கள் என்கிற திமிரும் இவர்களை விட்டு இன்னமும் அகன்று விடவில்லை. மன்னர் காலம் தொட்டு இன்றைய உலகமய காலம் வரை அதிகாரமுள்ள அதி உயர் அரசுப் பதவிகளில் பார்ப்பனர்கள் அமர்ந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்ற அதே நேரத்தில் மற்றவர்களை எப்பொழுதும் தங்களுக்குக் கீழாக வைத்துக் கொள்வதற்க்காக சட்டங்களை வகுப்பதிலும், பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிப்பதிலும், இவற்றிற்குக் குறுக்காக வரும் எவரையும் அடக்கி ஒடுக்குவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். தங்களது நிலையை தக்கவைத்துக் கொள்வதற்காக இவர்கள்   மாயாவதி முதல் மோடி வரை, மூப்பனார் முதல் அம்பானி வரை உள்ள ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கங்களோடு கூட்டு சேர்வதற்குத் தயங்குவதே இல்லை.

ஒடுக்குமுறையின் மூலமாக மட்டும் பிறரை எப்போதும் அடக்கி வைக்க முடியாது என்பதால்தான் கருத்தியல் ரீதியாக முடக்குவதற்கு ரிக், யஜுர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேதங்கள், விஷ்ணு புராணம் உள்ளிட்ட பதினெட்டு வகை புராணங்கள், ஆறு வகை சாஸ்திரங்கள், மனுஸ்மிருதி உள்ளிட்டு பத்து வகை ஸ்மிருதிகள், ராமாயணம் - மகாபாரதம் என இரண்டு இதிகாசங்கள், சங்கரனின் அத்வைதம் உள்ளிட்டு ஆறு வகை தத்துவங்கள், பத்து வகையான உபநிடதங்கள் மற்றும் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை என ஏராளமானவற்றை உருவாக்கி வைத்துள்ளனர். இது தவிர மச்ச அவதாரம் முதல் கல்கி அவதாரம் என பத்து அவதாரப் புருஷர்களும், பொய்கை ஆழ்வார் முதல் திருமங்கையாழ்வார் வரை பனிரெண்டு ஆழ்வார்களும், கண்ணப்ப நாயனார் – திருமூலர் உள்ளிட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களும் என ஏராளமானோர் தோன்றி சனாதன தர்மத்திற்கு வலு சேர்த்துவிட்டுச் சென்றுள்ளனர்.

பார்ப்பனர்கள் போதிக்கின்ற தத்துவத்திற்குப் பெயர் சனாதன தர்மம். அதாவது நால்வர்ண தர்மம்.

பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன். தோளிலிருந்து பிறந்தவன் சத்திரியன். தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன். கால் பாதத்திலிருந்து பிறந்தவன் சூத்திரன். இவைதான் நான்கு வர்ணங்கள். மனிதர்களை நான்கு பிரிவுகளாக்கிவிட்டனர் பார்ப்பனர்கள். இந்த நான்கு பிரிவினரின் உரிமைகளையும் கடமைகளையும் பற்றிக் கூறுவதுதான் நால் வர்ண தர்மம். அதுவேதான் சனாதன தர்மம் அல்லது பார்ப்பன தர்மம். அவர்களுக்காக வகுத்த தர்மத்தைத்தான் அனைவருக்குமான தர்மமாக்கி அதை இந்து தர்மம் என அழைக்கின்றனர்.

தற்போதுள்ள சாதிகளை வைத்து இந்த நான்கு வர்ணங்களை எப்படி அடையாளம் காண்பது?

ஐயர், ஐயங்கார் போன்ற பார்ப்பனர்கள்தான் முதல் வர்ணமாகிய பிராமணர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் குருமார்கள்.

சம்புவராயர் போன்ற வன்னியர்கள், தீரன் சின்னமலை போன்ற கொங்கு வேளாளக் கவுண்டர்கள், பெரும்பிடுகு முத்தரையர் போன்ற முத்தரையர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற நாய்க்கர்கள் இவர்களெல்லாம் இரண்டாம் வர்ணமாகிய சத்திரியர்களில் அடங்குவர். இவர்கள் மன்னர்கள் மற்றும் போர் வீரர்களாக இருந்தவர்கள். இன்றைய காலகட்டத்தில் இவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டாலும் இவர்களை சத்திரியர்களாகத்தான் கொள்ள முடியும்.

வணிகத்தில் ஈடுபடும் செட்டியார்கள் மற்றும் முதலியார்கள் போன்ற பிரிவினர் வைசியர்களாவார்கள். இன்றைய காலகட்டத்தில் இவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டாலும் இவர்களை வைசியர்களாகத்தான் கொள்ள முடியும்.

நாவிதர், வண்ணார், தோட்டி போன்றோர் நான்காம் வகையைச் சேர்ந்த சூத்திரர்கள். மேற்கண்ட மூன்று வர்ணத்தாருக்கும் இலவசமாக சேவை செய்வதுதான் இவர்களது தொழில்.

மேற்கண்ட நான்கு வர்ணத்தாரிடையே கலப்பு ஏற்பட்டதன் விளைவாக நான்கு வர்ணத்தாரிடமிருந்து விலக்கி வைக்கபட்ட பிரிவினரை பஞ்சமர்கள் என்று அழைத்தார்கள். இவர்களே இன்று தாழ்த்தப்பட்டவர்களாக அறியப்படுகின்றனர். உரிமைகள் எதுவும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவர்களுக்குத்தான் அரிஜனங்கள் என நாமகரணம் சூட்டினார் காந்தி.

உற்பத்திக் கருவிகளின் கண்டுபிடிப்பு அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழில் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு தொழில்களைச் செய்பவர்கள் எல்லா சாதிகளிலும் இருந்தாலும் சாதிய முறையிலும் சாதிகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளிலும் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.

சாதிக்கும் நால்வர்ண தர்மத்துக்கும் தொடர்பேதுமில்லை; சாதியை பார்ப்பனர்கள் தோற்றுவிக்கவில்லை என வாதிடுவோரும் உண்டு. அப்படியானால் இந்து மதத்தில் இத்தனை வகையான சாதிகள் எங்கிருந்து வந்தன? எப்போது வந்தன? இந்தச் சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் எப்படி தோன்றின? இதற்கெல்லாம் மனுஸ்மிருதியிலேயே மனு பதிலளித்துவிட்டான்.

‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ (கீதை:4:13) மூன்று வேதங்களும் நானே (கீதை:9:17) என தாங்கள் படைத்ததை கிருஷ்ணன் படைத்ததாகக்கூறி நம்ப வைக்கின்றனர் பார்ப்பனர்கள். ஆண்டவனைக் கைகாட்டிவிட்டால் இவர்கள் உருவாக்கியதை கேள்விக்குள்ளாக்குவதே தெய்வக் குற்றமாகிவிடுமே! உலகில் உள்ள அனைத்து மதவாதிகளும் தங்களின் தத்துபித்துகளை ஆண்டவனைக் காட்டிதான் ஏய்த்து வருகின்றனர்.

தொடரும்.....Saturday, April 27, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 4


பூணூல்

பார்ப்பனியப் பழக்கவழக்கங்கள் ஆண் பெண் இருபாலருக்கும் சிறு வயது முதலே பார்ப்பனக் குடும்பங்களில் புகுத்தப்பட்டு வருகிறது. பார்ப்பனிய ஆண் குழந்தைகளுக்கு நடத்தப்படும் பூணூல் கல்யாணம் அவர்களது வாழ்க்கையில் மிக முக்கியமானது. பூணூல் அணிவது ஏதோ அவர்களது சொந்த விவகாரம் என்று கருதிவிட முடியாது. தனது பெயருக்குப் பின்னால் ஒருவன் தனது சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதன் மூலம் எப்படி தனது சாதிப் பெருமையை பறைசாற்றிக் கொள்கிற அதே வேளையில் தனக்குக்கீழே ஒருவன் இருக்கிறான் என்று கருதிக் கொள்கிறானோ அதைப் போல பூணூல் போட்டுக் கொள்வதன் மூலம் மற்றெல்லோரையும்விட தானே உயர்ந்தவன் என்பதை பறை சாற்றிக் கொள்கிறான் ஒரு பார்ப்பனன்.

பூணூல் போட்டுக் கொண்டிருப்பவனை உயர்ந்தவனாக சமூகம்  கருதுவதால்தான் பார்ப்பனரல்லாத செட்டியார் முதல் விஸ்வகர்மா வரை பலரும் பூணூல் அணிந்து கொண்டு தங்களை மேன்மையானவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதனால்தான்  ஒரு சில கருத்த சூத்திரர்கள்கூட பூணூல் அணிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இது பார்ப்பனியமயமாதலின் ஒரு வகைப்பாடு. வரைமுறையின்றி எல்லோரும் பூணூலை அணிந்து கொண்டுவிட்டால் எங்கே தங்களுக்கான மரியாதை கிடைக்காமல் போய்விடுமோ என்பதால், தங்களைத் தவிர வேறுசாதியினர் யாரும் பூணூல் அணியக்கூடாது என விஸ்வகர்மாக்களுக்கு எதிராக நீதிமன்றம்வரை சென்று பார்ப்பனர்கள் போராடியிருக்கிறார்கள். ஏனோ அவர்களால் அதில் வெற்றி பெறமுடியவில்லை. என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு பார்ப்பனனின் வெள்ளை மேனியில் உள்ள பூணூல் அழுக்கேறி கருத்திருந்தாலும் அதற்குரிய மரியாதை கருமேனியில் பளிச்செனத் தெரியும் விஸ்வகர்மாவின் பூணூலுக்குக் கிடைப்பதில்லை.

இடஒதுக்கீடும் திறமையும்!

இப்படியாக வளர்க்கப்படும் பார்ப்பனர்கள் கல்வி, வேலைவாயப்பு, பதவி உயர்வு என வரும் போது இட ஒதுக்கீட்டு முறையால் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகக் குமுறுகிறார்கள். இட ஒதுக்கீட்டினால் திறமையற்றவர்கள் பதவிக்கு வந்துவிடுவதால் நாட்டின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படுவதாகக் கூக்குரலிடுகிறார்கள். இடஒதுக்கீடு வருவதற்கு முன்னர் இவர்கள் மட்டுமே அரசின் அனைத்துப் பதவிகளையும் ஆக்கிரமித்திருந்த போது பாலாறும் தேனாறும் ஓடியதைப்போல ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்கள் அரசின் பெரும்பான்மையான பதவிகளை ஆக்கிரமித்திருந்தபோது இன்றைய பாலாறு போலத்தான் இருந்தது அன்றைய மக்களின் வாழ்வும் என்பதுதானே வரலாற்று உண்மை!

திறமை அடிப்படையில் பொதுப்பிரிவில் வேலைக்கு வந்தவர்களிலும், இடஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு வந்தவர்களிலும் திறமைசாலிகளும் இருக்கிறார்கள்; மொக்கைகளும் இருக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் ஒருவனின் திறமையை பெரும்பாலும் கையூட்டுகளே தீர்மானிக்கின்ற இன்றைய காலகட்டத்தில் எவன் மொக்கை? எவன் திறமைசாலி? என்பதைக் கண்டறிவது அவ்வளவு சுலபமானதல்ல. பதவி உயர்வுகளும் இவர்களின் திறமையை தீர்மானிக்கிற மற்றொரு முக்கிய காரணியாகவும் இருக்கிறது. கல்வித் தகுதி ஒன்றுதான் இங்கே வேலையில் நுழைவதற்கான தகுதியாக வரையறுக்கப்படுகிறது. அது மட்டுமே வேலையை உத்தரவாதம் செய்துவிடுவதில்லை. சத்துணவு ஆயா முதல் ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் வரை பொதுப்பிரிவு – இடஒதுக்கீடு அது எதுவாக இருந்தாலும் வேலையை உத்தரவாதம் செய்வது இலட்சங்களும் கோடிகளுமாய் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் திறமை பற்றிப் பேசுவது பொருளற்றதாகிவிட்டது.

இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு வந்தவர்களை – பிற்படுத்தப்பட்டவர் முதல் தாழ்த்தப்பட்டவர் வரை - ‘கோட்டா’ என கிண்டல் செய்கின்றனர் பார்ப்பனர்கள். அதே ‘கோட்டாவில்’ வேலைக்கு வந்த பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்தும் ‘கோட்டா’ எனக் கிண்டல் செய்கின்றனர். இத்தகைய மனோநிலை தீண்டாமை மற்றும் ஆதிக்க மனப்பான்மையின் ஒரு வகை வெளிப்பாடேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்? இதுதான் பார்ப்பனியத்தின் நீட்சியோ?.

தொடரும்......


தொடர்புடைய பதிவுகள்
Wednesday, April 24, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 3

உணவுத் தீண்டாமை

முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, பூண்டு, டர்னிப் போன்ற காய்கறி உணவுகள் மீதும்; வாழைப்பழம், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் மீதும்; பால், தேநீர், மோர், ஊறுகாய், உப்பு, சர்க்கரை, இனிப்பு, தேன், ஐஸ்கிரீம் போன்ற உணவு வகைகள் மீதும்; மாட்டுக்கறி, பன்றிக்கறி, கோழிக்கறி, மீன், முட்டை போன்ற மாமிச உணவுகள் மீதும் ஒருவருக்கு விருப்பமும்-வெறுப்பும் இருப்பது அவரின் தனிப்பட்ட பொதுத் தன்மைகளாக (generalities) வரையறுக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட வகை உணவை ஒருவர் விரும்புவதும் (desire) அல்லது வெறுப்பதும் (aversion) அல்லது ஒரு குறிப்பிட்ட வகை உணவை உட்கொண்டால் அது அவருக்கு உடல் ரீதியிலான தொந்தரவுகளை அதிகப்படுத்துவதும் (aggravation) அல்லது தொந்தரவுகளை மட்டுப்படுத்துவதும் (amelioration) அந்த தனிப்பட்ட நபருக்கானதாக மட்டுமே பார்க்க வேண்டும். அதையே எல்லோருக்கும் பொதுமைப்படுத்த முடியாது. அந்த நபரைப் பொருத்தவரையில் இங்கே உணவில் உயர்ந்தது – தாழ்ந்தது என்கிற ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது.

ஒரு பகுதியின் தட்ப வெட்ப நிலைக்கேற்ப அங்கே விளையும் காய்கறிகள் தானியங்கள் பழங்கள் போன்ற பயிர் வகைகளைப் பொருத்தும், வாழும் – வளர்க்கப்படும் பறவைகள் விலங்குகளைப் பொருத்தும் அவ்வட்டார மக்களின் உணவு முறை தீர்மானிக்கப்படுகிறது. பஞ்சம் ஏற்படும் காலங்களில் உணவுக்கு இவர்கள் வேறு பகுதிகளை நாட வேண்டி இருப்பதால் அதற்கேற்ப உணவு முறையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றது. இது போன்ற காலங்களில் உணவில் இது பிடிக்கும் அது பிடிக்காது என்கிற பேச்சுக்கே இடமில்லை. கிடைத்ததை உட்கொண்டால்தான் உயிர் வாழ முடியும். எனவே உணவு முறையை திர்மானிப்பதில் இயற்கை பெறும் பங்காற்றுகிறது.

'நான் கேப்பக் கூழ், களி எல்லாம் சாப்பிடுவதில்லை. ஏன்! ரேசன் அரிசியைக்கூட வாங்குவது கிடையாது' என ஒருவன் சொல்லும் போது 'நான் என்ன கஞ்சிக்குச் செத்தவனா?' என்கிற எகத்தாளம் வந்து விடுகிறது. பின்பு அவன் வறியவனாகிவிட்டால் கேப்பக் கூழும், களியும், ரேசன் அரிசியும் அவனது அன்றாட அத்தியாவசிய உணவாகிவிடுகிறது. வசதி வந்தால் கூழ் கேவலமானதாகவும் வறுமை தொற்றிக் கொண்டால் அதே கூழ் அமிர்தமாகவும் மாறிவிடுகிறது.

'நான் அசைவம் சாப்பிட மாட்டேன்’ என்று ஒருவன் சொல்வதற்கும் ‘நாங்க கவிச்சியே சாப்பிட மாட்டோம்’ என்று மற்றொருவன் சொல்வதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. நான் என்பது ஒரு தனிப்பட்ட நபரோடு முடிந்து போகிறது. ஆனால் நாங்க என்று வரும்போது அது தங்களது சாதியை பிரதானப்படுத்துகிறது. சாதியைப் பிரதானப்படுத்தும் போது, ஒரு சைவ உணவுக்காரன் தன்னை உயர்ந்தவனாகவும், அசைவம் உண்பவனை இழிவானவனாகவும் பார்க்கிறான். பார்ப்பனர்கள் அவ்வாறு தங்களைக் கருதிக் கொள்வதால்தான் அக்கம் பக்கத்தில் பார்ப்பனர்கள் யாரும் வசிக்கவில்லை என்றாலும்கூட தங்களது வீட்டை வாடகைக்கு விடும் போது ‘சைவம் உண்போர் மட்டுமே அணுகவும்’ என விளம்பரப் படுத்துகிறார்கள்.

கறி சாப்பிடும் பிற சாதிக்காரர்களை பார்ப்பனர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ அதைவிட சற்றுக்  கூடுதலாகவே மாட்டுக்கறி உண்ணும் தாம்த்தப்பட்டவர்களை பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் பார்க்கின்றனர். அதனால்தான் உண்ணும் போது என்னவென்று தெரியாமல் உண்டுவிட்டு பிறகு தெரியவரும் போது உடனே வாந்தி எடுக்கிறான் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரன். உணவுத் தீண்டாமையின் உச்ச வடிவம் இதுதான்.

மொழித் தீண்டாமை

சென்னையிலிருந்து கன்யாகுமரி வரை வாழும் தழிர்களுக்குத் தாய் மொழி ஒன்றுதான். ஆனால் வட்டார வழக்கிற்கேற்ப சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் என பேசும் தொணியில் மட்டும்தான் வேறுபாடு இருக்கும்; சொற்கள் என்னவோ ஒன்றுதான். ஆனால் பார்ப்பனர்கள் தமிழகத்தின் - ஏன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அவர்களது பேச்சுத்தமிழ் வட்டாரத் தொணிக்கேற்ப இருக்காது. மாறாக அவர்களுக்கான அவாள் லேங்குவேஜில்தான் இருக்கும்.

அதனால்தான் ‘ஜலம்’, ‘சாதம்’, ‘ஆத்து’ போன்ற சொற்களை ‘எங்க லேங்குவேஜ்’ என்று பெருமையாகச் சொல்கிறாள் அந்தப் பார்ப்பனச் சிறுமி. இந்த அவாள் மொழி, வழக்கிழந்து போன சமஸ்கிருதத்தின் நீட்சியாகக்கூட இருக்கலாம். உங்க லேங்குவேஜைவிட எங்க லேங்குவேஜ் உயர்ந்தது என்கிற மொழித் தீண்டாமை இங்கே ஒளிந்திருக்கிறது. அக்கிரகாரத் தெருக்களில் தொடங்கும் இத்தகைய மொழித் தீண்டாமை கோவில் கருவறை வரை நீள்கிறது. அதனால்தான் தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது.

“நாங்க பிராமிண், கறி எல்லாம் சாப்பிட மாட்டோம்”, என்பதும் “எங்க லேங்குவேஜ்”, என்பதும் பிற சாதிகளைவிட நாங்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற ஒரு உயர் சாதி மனப்பான்மையின் வெளிப்பாடு. இதை ஒரு பார்ப்பனச் சிறுமி தானாக வளர்த்துக் கொள்ளவில்லை. மாறாக அவளது குடும்பம் மற்றும் பார்ப்பனச் சாதி உறவுகள் மூலமாக அவளுக்குச் சொல்லப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட ஒன்று.

இப்படித்தான் குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் மெல்ல மெல்ல சாதி ரீதியிலான பழக்க வழக்கங்களும் பண்பாட்டுக் கூறுகளும் அவர்களது மனதில் விதைக்கப்படுகின்றன.

தொடரும்.....
தொடர்புடைய பதிவுகள்

Sunday, April 21, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் - 2

ஒரு வயதிலிருந்து இன்று வரையிலும் அவளுக்குப் பெரும்பாலும் மாலை நேரத் தேநீர் எங்களது வீட்டில்தான். தேநீரோடு பிஸ்கட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும். சில நேரங்களில் பிஸ்கட் இல்லை என்றால் “ஆண்ட்டி! அறிவிருக்கா? பிஸ்கட்கூட வாங்கி வைக்காம இருக்க! பிஸ்கட் இல்லாம எப்படி டீ குடிக்கறது?” என எனது துணைவியாரிடம் கடிந்து கொள்வாள்.

“அடியேய்! உங்கள மாதிரி எங்களுக்கு வசதி கிடையாது! நாங்க வாடகை வீட்லதானே குடி இருக்கோம். நாங்க என்ன உங்கள மாதிரி காரு வச்சிருக்கோமா? நீ போய் உங்க வீட்ல இருந்து எடுத்துட்டு வா!” என செல்லமாக பதில் கூறும் போது “எங்க அப்பா மாதிரி அங்க்கிள கோயிலுக்குப் போகச் சொல்லு. நெறய காசு வரும். எங்கள மாதிரி நீங்களும் காரு வாங்கலாம். சொந்தமா வீடு வாங்கிக்கலாம்” என ஆலோசனை கூறுவாள்.

நாங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பதையும், அவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் அதே வீட்டை ஓரிரு ஆண்டுகளில் விலை கொடுத்து வாங்கி சொந்த வீடாக்கிக் கொண்டதையும், அடுத்த ஆண்டிலேயே அவர்கள் புதிதாகச் சொந்தக் கார் வாங்கியதையும் புரிந்து கொண்டுதான் அவள் அவ்வாறு கூறினாள். கோவிலுக்குச் சென்று பூசை செய்தால் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு இவற்றை எல்லாம் பெறலாம் என்பது அவளது புரிதல்.

அவளது அப்பா ஆகமவிதிகளின் கீழ் வரும் கோவிலுக்கும் செல்கிறார்; சாதாரணக் கோவிலுக்கும் செல்கிறார். இது அன்றாடம் அவர் செய்யும் அர்ச்சகர்த் தொழில். இது தவிர திருமணம், புதுமனைப் புகுவிழா, காரியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார். அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை முடக்கித் தங்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகராகக் கூடாது என்பதற்காக உச்சநீதி மன்றம் வரை சென்று இன்று வரை தங்களது ஆதிக்கத்தை பார்ப்பனர்கள் நிலைநாட்டி வருகிறார்கள் என்பது தெரியாத வயது அவளுக்கு. அதனால்தான் வெள்ளந்திரியாய் அவள் என்னிடம் அர்ச்சகர் வேலைக்குச் செல்லச் சொல்கிறாள்.

நாட்கள் வேகமாக உருண்டோடுகின்றன. மழலையர் பள்ளிப்படிப்பை முடித்து, முதல் வகுப்பிற்குச் செல்கிறாள். அவள் வளர வளர, அவளது பேச்சில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு நாள் எங்களது வீட்டில் இரவு உணவின் போது குழந்தை என்பதால் அவளுக்கு கொஞ்சமாகச் சோறு போடுகிறார் எனது துணைவியார். தட்டில் உள்ள சோறு தீர்ந்தவுடன் “ஆண்ட்டி சாதம் போடு” என்கிறாள். “சாதம் இல்லடி, சோறுனு கேளு!” என்ற போது “சோறுனு சொல்லக்கூடாது, சாதம்னுதான் சொல்லனும்” என பதில் கூறினாள்.

“நாங்கள்லாம் உங்கள மாதிரி பேசமாட்டோம். வீட்டை ‘ஆத்து’னுதான் சொல்லுவோம். தண்ணிய ‘ஜலம்’னுதான் சொல்லுவோம்.” என மேலும் சில உதாரணங்களை எடுத்தியம்புகிறாள்.

“ஏய்!‘ஆத்து’னா தண்ணி போற ஆறு! நீங்க என்ன அங்கேயா குடியிருக்கீங்க?” என கிண்டல் செய்த போதும் “அய்யோ ஆண்ட்டி! தண்ணி போறதுக்குப் பேரு ஆறு! இது ‘ஆத்து!’...‘ஆத்து!’ வீட்டை நாங்க அப்படித்தான் சொல்லுவோம்” என மிகப் பொருமையாக ஒரு ஆசிரியரைப் போல விளக்கமளித்தாள்.

“நாங்க பிராமிண். இப்படித்தான் பேசுவோம். எங்க லேங்குவேஜ் இதுதான்” என பெருமைவேறு பட்டுக்கொண்டாள்.

எங்களது உறவினர்கள் பலரும் இவளுக்கு உற்ற நண்பர்கள். எல்லோரும் இவளோடு கிண்டலும் கேலியுமாய் இருக்கும் போது, அவளும் எங்களை கிண்டலும் கேலியும் செய்வாள். சென்ற வாரம் இவளது குடும்பம் சென்னைக்குக் குடிமாறிச் செல்ல ஆயத்தமாகிக்  கொண்டிருந்தபோது ஒரு நாள் நானும் எனது துணைவியாரின் அக்கா பேத்தியும் “என்ன ஆத்த காலிபண்ணிட்டு சென்னைக்குப் போறீங்களாமே?” எனக் கிண்டலாய் கேட்டபோது “எங்க லேங்வேஜ கிண்டல் பண்றீங்காளா? இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்?” என கோபத்தோடு எழுந்து சென்றுவிட்டாள். "டீ போட்டாச்சு, குடிச்சிட்டுப் போ" என வலியுருத்திய போதும் அன்றைய மாலை நேரத் தேநீரை அவள் புறக்கணித்துவிட்டாள்.

தொடரும்.....

தொடர்புடைய பதிவு: 

பார்ப்பனியம் பிறவிக் குணமா? ... பகுதி-1

Friday, April 19, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?....தொடர்-1

இது 'ஊரும்' அல்ல; சேரியும் அல்ல; அதற்கும் கீழே! அருந்ததியரின் குடியிருப்புப் பகுதி. இங்குதான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வருகிறேன். அருகாமையில் பள்ளிக்கூடம், வெளியூர் சென்று வரப் பேருந்து மற்றும் தொடர் வண்டி வசதி, வற்றாத நல்ல நிலத்தடி நீர் என சில அடிப்படையான வசதிகள் இங்கு இருப்பதனால்தான் அருந்ததியர் காலனி என்றாலும் பிற சாதியினரும் அதிக அளவில் குடியிருக்கின்றனர்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இளம் பார்ப்பன புரோகிதர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகைக்கு எதிர் வீட்டில் குடியேறினார். இரண்டாவது குழந்தை ஒரு வயதே நிரம்பிய பெண்குழந்தை. முதல் குழந்தை மூன்று வயது நிரம்பிய ஆண் குழந்தை. குடியேறிய ஒரு சில நாட்களிலேயே இவ்விருவரும் எங்கள் தெருவில் உள்ள அனைவரையும் கவர்ந்து விட்டார்கள். தெருவில் உள்ள எல்லோருடைய வீடுகளுக்கும் செல்வார்கள். அருந்ததியர் வீட்டுக் குழந்தைகளே இவர்களின் சக நண்பர்கள்.

எங்கள் வீட்டின் செல்லக் குழ்ந்தையானாள் அப்பெண்குழந்தை. மூன்று வயதுவரை பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் இருப்பாள். மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியது முதல் தற்போது முதல் வகுப்பு வரை பள்ளி செல்லும் நேரம் மற்றும் இரவில் அவர்கள் வீட்டில் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எங்கள் வீட்டில்தான் அதிக நேரம் இருப்பாள். சிறுநீர் - மலம் கழித்தால் சுத்தப்படுத்துவது, குளிக்க வைப்பது, தலை வாரி விடுவது, தேநீர் மற்றும் உணவு கொடுப்பது, கொஞ்சிக் குலாவுவது, விளையாடுவது என சொந்தக் குழந்தையை வளர்க்கும் போது கிடைக்கும் அனுபவத்தில் ஒரு பாதி அனுபவத்தையாவது இக்குழந்தையின் மூலம் பெற்றிருப்போம். இதனால் ஒரு பார்ப்பனக் குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் கருத்தியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை மிக நுணுக்கமாக உணர முடிந்துள்ளது.

ஒரு வயதாய் இருந்த போது சாம்பாரோ – இரசமோ, மோரோ – தயிரோ, அவித்த முட்டையோ – ஆம்லெட்டோ, உருளைக்கிழங்கு வறுவலோ - வறுத்த கோழிக்கறியோ, விராலோ - இறாலோ இவை எல்லாம் நாம் உண்ணும் உணவு என்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது இந்தக் குழந்தைக்கு.

திண்பது எதுவானாலும் “எனக்கு” எனக் கேட்பதும், “இந்தா” எனக் கொடுப்பதும்தானே குழந்தைகளின் இயல்பு. நாம் எதையாவது நமது குழந்தைகளுக்குத் திண்ணக் கொடுத்தால் “சாப்பிட்டுவிட்டு அப்புறமா வெளியில போ” என நாம்தானே குழந்தைகளின் பகிர்ந்துண்ணும் பண்பை முளையிலேயே கருக்கி விடுகிறோம்.

பார்ப்பனர்கள் அசைவ உணவை சாப்பிட மாட்டார்கள் என்பதெல்லாம் தெரியாத வயதில் நாங்கள் ருசித்து சாப்பிடும் போது அதைப்பார்க்கும் பார்ப்பனக் குழந்தைக்கு மட்டும் நாக்கில் எச்சில் ஊறாதா என்ன? அப்போது “எனக்கு” எனக் கேட்ட போதும் சைவ உணவைத் தவிர முட்டை உள்ளிட்ட மாமிச உணவு எதையும் நாங்கள் அவளுக்குக் கொடுத்ததில்லை. பகிர்ந்துண்ணும் பண்பைவிட அவர்களின் குடும்ப உணவு முறையில் நாம் குறுக்கிட வேண்டாம் என்பதால்தான் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் மூன்று வயதைத் தொட்டபோது முட்டையும் கோழிக்கறியும் தங்களுக்கான உணவு இல்லை என்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

ஒரு சமயம் நான் கோழிக்கறியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “ஐய்யய்ய.. நீங்க கறி சாப்பிடுறீங்க” என்றாள். “இது கோழிக்கறியில்ல, உருளைக்கிழங்கு, இந்தா சாப்பிடு என நான் கிண்டலுக்குச் சொன்னபோது”, “நாங்க பிராமிண், கறி எல்லாம் சாப்பிட மாட்டோம்” என பதிலுரைத்தது மட்டுமல்ல “அப்ப நீங்க பிராமிண் கிடையாதா?” எனக் கேள்வி வேறு எழுப்பினாள்.

தொடரும்.....

Thursday, April 4, 2013

ஈழம்: அரசியல் பிழைப்புவாதிகளும் மக்கள் விரோதிகளும் - ஒரு நகைச்சுவை!

இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் தொகுப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்துக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்துவோரையும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படும் மக்கள் விரோதிகளையும் அம்பலப்படுத்த ஆயிரம் பக்கங்கள் தேவையில்லை. ஒரு சில கார்ட்டூன்களே போதும்.


மின்னஞ்சல் மூலம் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி!