Monday, October 17, 2011

"குவார்ட்டர் கட்டிங்"

இது பருவ மழைக்காலம். இந்நேரம் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியிருக்கவேண்டும். பருவ மழை ஏன் தாமதமாகிறது என்பதைக் கண்டறிய சென்னை வானிலை ஆய்வுமைய விஞ்ஞானிகள் ரமணன் தலைமையில் தீவிர ஆய்வில் ஈடுபட்டிருப்பதாகக் கேள்வி.

கடந்த பத்து நாட்களாக வேறு ஒரு புயல் தமிழகத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருக்கிறது. இந்தப்புயல் நீடிக்கும் வரை வங்கக்கடலில் வேறு ஒரு புயல் உருவாக முடியாது என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இது வருகிற பத்தொன்பதாம் தேதி மாலைவரை நீடிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுவரை தமிழகத்தில் மிகப் பரவலாக அடிதடி இடியுடன் கூடிய கனமழை மற்றும் வெட்டுக் குத்துடன் கூடிய சூறாவளியாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாகப் புயல் மழை என்றால் ஏரி குளங்கள் நிறையும்; இந்தப்புயல் தண்ணீரை வானத்திலிருந்து நேரடியாகக் கொட்டாமல் பாட்டில்களில் அடைத்துக் கொடுப்பதால் தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக ஒருசிலருக்கு மட்டுமே கிடைத்துவந்த புயல் தண்ணி இன்று ஆண்மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பரவலாக பாட்டில்களாக வீசப்பட்டு வருகிறது. 

பாட்டில்களில் இருக்கும் இந்தத் தண்ணியை பெண்கள் விரும்புவதில்லை. அதனால்தான் என்னவோ அதை ஈடுகட்டும் வகையில் தேர்தல் பகவான் கருணையால் இந்தப்புயலில் நோட்டுக் கட்டுகளும், பரிசுப் பொருட்களும் சூறாவளிக் காற்றில் அடித்துவரப்பட்டு வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் தாய்மார்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதாக மாவட்டங்களிலிருந்து வரும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இது பற்றி வேலூரிலிருந்து நமது நிருபர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம். 

மகிழ்ச்சியில் மக்கள்

”வணக்கம் ஊரான் அவர்களே! புயல் பலமாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் வீசி வருகிறது. குடம்-குடை-தட்டு-மூக்குத்தி-சேலை-ஜாக்கெட் என வகை வகையான பொருட்கள் ஒருபுறம்;   ஐம்பது, நூறு, ஐநூறு, ஆயிரம் என காதித நோட்டுகள்-அதுவும் 'கவர்களில்' அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வீட்டுக்கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. பெண்கள் ஏக 'குஷியில்' இருக்கிறார்கள். இவை எல்லாம் வீட்டுக்குள்ளேயே விழுவதால் வெளியில் இருக்கும் ஆண்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. ஆண்கள் வெளியில் ஏக்கத்ததோடு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஏக்கத்தோடு காத்திருக்கும் ஆண்களுக்காவே நேற்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூபாய் ஒன்பது கோடி மதிப்பிலான பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணி,புயலில் அடித்துவரப்பட்டு ஆங்காங்கே வீசப்பட்டுள்ளதாக பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தத்தில் இந்தப் புயல் ஆண்-பெண் இருபாலரையும் மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊரான் செய்திகளுக்காக வேலூரிலிருந்து சம்புவராயன்."

"நன்றி சம்புவராயன் அவர்களே!"

இனி புயலின் சேதாரம் குறித்து பார்ப்போம்.

பொதுவாகப் புயல் என்றால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். வீடுகளுக்கும் பயிர்களுக்கும் சேதாரம் ஏற்படும்; ஆடுமாடுகள அடித்துச் செல்லப்படுவதோடு மனித உயிர் இழப்புகளும் ஏற்படும். 

புயல் நிதானமாக இருக்கும் அதே வேளையில் பலமாக இருப்பதால் ஒருசில இடங்களில் சேதாரங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சேதாரத்தின் விவரங்கள் முழுமையாகக் கிடக்கவில்லை என்றாலும் பாட்டில்களை கைப்பற்றும் போது ஏற்பட்ட மோதல்களால் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாவும், பாட்டில் தண்ணியை வயிறுமுட்டக் குடித்ததால் நிலை தடுமாறி கீழு விழுந்து மண்டை உடைபட்டு சிலர் படுகாயம் அடைந்ததாகவும், மண்டையில் அடிபட்ட ஒருசிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரியாணி பொட்டலங்களும் புயலில் அடித்துவரப்பட்டதால் புயல் மழையில் சிக்கியோருக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலம் வீச வேண்டிய தேவை இம்முறை ஏற்படவில்லை என்பது அரசாங்கத்துக்கு ஆறுதலான செய்தி.

நேர்த்திக்கடன்

பொதுவாக புயல் மழையால் ஏரி குளங்கள் நிரம்பி நிலத்தடி நீரும் உயர்ந்தால் அனைவருக்கும் நல்லதுதானே. அதனால் வருணபகவானுக்கு படையல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது நம் மக்களின் வழக்கம். அதே போன்று நேற்று இரவு கொட்டித் தீர்த்த பரிசு மழை நல்ல பலனைக் கொடுத்ததால் இன்று காலை முதல் மக்கள் சாரி சாரியாகச் சென்று மழைக்குக் காரணமான கடவுள்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றர்.  

மழையைக் கொடுத்தது ஒரே ஒரு கடவுளாய் இருந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதில் போட்டி இருக்காது. ஆனால் தற்போதைய மழைக்கு சூரிய பகவான், இரட்டையிலையம்மன், மாங்கனிச்சாமி, முரசையாண்டி, தாமரைக் கண்ணன், பம்பரக் கிருஷ்ணன், அருவாச்சாமி என பிரபல சாமிகளும்; கத்தரிக்கோலன், சாவி முண்டேஸ்வரி, பூட்டு எல்லம்மா, சீப்புவேலன் என பல நூறு வட்டார தெய்வங்களும் இந்த மழைக்குக் காரணமாய் இருப்பதால் நேர்த்திக்கடன் செலுத்தும் இடங்களில் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சலசலப்புக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினாலும் நேர்த்திக்கடன் என்னமோ பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்று வருகிறது.

இந்தப் புயல் மேலும் நீடிக்கும் என்பதால் தமிழகத்தின் வேறு சில இடங்களில் நாளை இரவும் பரிசு மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசு மழைக்கான நேர்த்திக்கடன் நாளை மறுநாள் செலுத்தப்படும். புயல் கொடுத்த பரிசு மழையில் மெய்மறந்து நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர்கள் ஏனோ பின்கதவை மூடி தாழ்ப்பால் போட மறந்துவிட்டார்கள். இன்று வாரிக் கொடுத்த தெய்வங்கள் நாளை வாரிச் செல்ல இதுதான் வழியோ!

பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் இந்தப் புயலுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணனைக் கேட்டபோது இந்தப் புயலுக்கு "குவார்ட்டர் கட்டிங்” என பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Sunday, October 16, 2011

மீண்டும் பன்றிகளின் படையெடுப்பு!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடைசி நேரத்தில் இந்த இடுகையை எழுதுகிறேன். மிக விரிவாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு தேர்தல். உறவினரின் உடல் நலக் குறைவு; அதற்காக கடந்த பத்து நாட்களாக மருத்துவமனையிலேயே உழன்று கொண்டிருந்ததால் இத்தேர்தல் குறித்து மக்களின் கருத்துக்களையும் வேட்பாளர்களின் வாக்குறுதி மற்றும் நடவடிக்கைகளையும் அதிகமாக கவனிக்க முடியவில்லை. எனினும் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன்.
**********************************************************************************
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நடைபெற்ற எமது கிராமத் தலைவருக்கான தேர்தல்தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது இரண்டு கிராமங்களும் ஒரே ஊராட்சியின் கீழ் இருந்ததால் ஒரே தலைவர்தான். முதன் முதலில் இருவேறு சாதிகள் மோதிக்கொண்ட அந்த நிகழ்வு எனது நினைவிலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை. வாக்கு எண்ணிய கிராமத்திலிருந்த தோற்றுப்போன வேட்பாளரின் சாதியினர் வெற்றிபெற்ற வேட்பாளரின் சாதியினரை விரட்டி விரட்டி அடித்தனர். சாதி பலத்தை நிறுவுவதற்கான ஒரு தேர்தல்தான் உள்ளாட்சித் தேர்தல் என்றால் அது மிகையாகாது என்றே கருதுகிறேன். இன்றும் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. அதே சாதி வெறியோடுதான் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும் களம் காண்கிறார்கள் வேட்பாளர்கள்.

ஒரு ஊரில், ஒரேசாதியினர் இருந்தாலும் அங்கேயும் கடுமையான போட்டி நிலவுகிறது. அதற்குக் காரணம் 'நீயா? நானா?' என்கிற பதவிப் போட்டிதான். இருநூறு வாக்குகளை மட்டுமே கொண்ட ஒரு ஊராட்சி உறுப்பினருக்கானத் தேர்தலில் எனது தங்கை மகள் போட்டியிடுகிறார். அதே பதவிக்கு அவருடைய பங்காளி ஒருவரும் நிற்கிறார். வெற்றி பெறமுடியாது எனத் தெரிந்த பிறகு எனது தங்கை மகளிடம் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளச் சொல்லி அழுது மன்றாடுகிறார்களாம் அவரது பங்காளிகள். எனது தங்கை மருமகனோ வசதி குறைவு என்றாலும் தனது மனைவியை வார்டு உறுப்பினராக்கியேத் தீரவேண்டும் என்பதற்காக தலைக்கு ரூபாய் ஐம்பது வீதம் ரூபாய் பத்தாயிரம் வரை செலவு செய்யவும் தயாராய் இருக்கிறாராம். இப்படித் தங்களது கௌரவத்தை நிலைநாட்டுவதற்காகவும் சிலர் களத்தில் நிற்கின்றனர்.

சாதிபலம் மற்றும் கௌரவத்தை நிலைநாட்டத்தான் போட்டியிடுகிறோம் என்று எந்த வேட்பாளரும் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்வதில்லை. மாறாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எதைச் சொன்னார்களோ அதைத்தான் இப்பொழுதும் சொல்கிறார்கள். குடிநீர், சுகாதாரம், சாலை- போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும்; குடும்ப அட்டை, முதியோர் பென்சன், சாதி - பிறப்பு - இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட வசதிகளை சுலபமாகப் பெறவும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிக்கின்றர்.

எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் நானே நிர்வாகம் செய்வேன். எனது கணவர் எனது நிர்வாகத்தில் தலையிட மாட்டார் என சில பெண் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். பெண்களுக்கென இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் ஆண்களின் ஆதிக்கம்தான் நிலவுகிறது என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

புரட்டாசியில் 'பொன் உருகக்காயும் மண் உருகப் பெய்யும்' என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு பொன் உருகக் காய்கிறது. ஆனால் மண் உருகப் பெய்யத்தான் காணோம். வார்டு உறுப்பினர், ஊராட்சித்தலைவர், ஒன்றியக்கவுன்சிலர், மாவட்டக்கவுன்சிலர், நகராட்சி - மாநகராட்சி உறுப்பினர்கள், மேயர்கள் என பதவிகளோ ஏராளம். கட்சிகள் தனித்தனியாக நிற்பதால் வேட்பாளர்களும் ஏராளம். எனவே மக்கள் காட்டில் ஒரே பண மழையும் பரிசு மழையும் மாறி மாறிப் பொழிகிறதே. பிறகு புரட்டாசியில் பெய்தால் என்ன? பொய்த்தால் என்ன?

இந்த உள்ளாட்சித் தேர்தல்களால் பெரிதாக எதுவும் மாறிவிடப்போவதில்லை என்பதை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால்தான் கொடுப்பதை வாங்கிக் கொள்வோம் என தாங்கள் கறைபடிகிறோம் என்பதை அறிந்தே கூசாமல் கை நீட்டுகிறார்கள். அனைவரையும் ஊழல்படுத்துவதைத் தவிர இந்தத் தேர்தல் வேறெதையும் சாதிக்கப் போவதில்லை.

வாசகர்கள் அவசியம் மறுவாசிப்புச் செய்ய வேண்டிய பதிவுகள்:

Tuesday, October 11, 2011

ஜனனி ஐயரும் ஆண்டாள் முதலியாரும்!

”என்ன மொதலியார, பாத்து ரொம்ப நாளாச்சு!”,

”என்ன கவுண்டரே, எப்ப வந்த?”,

”என்ன நாயுடு, எங்க கிளம்பிட்ட?”

அலுவலகங்களிலும் மற்ற பல இடங்களிலும் மிகவும் நெருக்கமானவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சாதிப் பெயரைச் சொல்லி அழைத்துக் கொள்வதைப் பார்க்க முடியும்.  தனது சொந்தப் பெயரைச் சொல்லி அழைப்பதைவிட தனது சாதிப் பெயரைச் சொல்லி அழைக்கும் போது ‘தான் சாதியில் உயர்ந்தவனாக்கும்’ என தனக்குள் பெருமைப்பட்டுக் கொள்கிறான்; மனதுக்குள் மகிழ்ச்சியடைகிறான். சொல்லப்போனால் ஒருவித கிளர்ச்சிக்குள்ளாகிறான். தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தவிர சாதி பாராட்டுகிற பிற சாதியினர் அனைவரும் இத்தகைய மனநிலையில்தான் உள்ளனர்.

சாதியப் படி நிலையில் மேல் நிலையில் இருக்கும் ஐயர், ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களை பொதுவாக ஐயர் என்றே பிற சாதியினர் அழைப்பதுண்டு. மிகவும் நெருக்கம் இருந்தால் மட்டுமே ‘என்ன ஐயரே, சௌக்கியமா?’ எனக் கேட்க முடியும். மற்றபடி தங்களை “சாமி” என்று அழைப்பதையே பார்ப்பனர்கள் விரும்புறார்கள்.

ரகு ‘சாமி’ இருக்காரா?

‘ரகு இருக்காரா என அவரது துணைவியாரிடம் ஒருவர் கேட்க, என்ன “ரகு இருக்காரா” என மொட்டையா கேக்கிறீங்க! “ரகுசாமி இருக்காரானு கேளுங்க” எனக் கடிந்து கொண்டார். கேட்டவருக்கு வயது ஐம்பது; ஐயருக்கோ வயது முப்பதுக்குள். தனது வீட்டு விசேசத்திற்கு மங்திரம் ஓத ஐயரை அழைக்க வந்தவருக்குத்தான் இந்தப் பாடம்.

சாதி பாராட்டுகின்றவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொண்டு பெருமைப் பட்டுக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை. தாங்கள் செய்கிற தொழிலுக்கும் இச்சாதியை இழுத்துப் போட்டுக் கொண்டு அதிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என பறைசாற்றிக் கொள்கிறார்கள்.
பிராமணாள் ஓட்டல்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. முதலியார் திருமண மண்டபங்களும், நாடார் கல்வி நிறுவனங்களும் என தங்களது சாதியின் பெயரால் அடையாளப் படுத்திக் கொள்வதையே பலர் பெரிதும் விரும்புகின்றனர்.

செத்தபிறகும் இவர்கள் சாதியை விடுவதில்லை. “முருகேச முதலியார் காலமானார்” என்றுதான் சுவரொட்டி அடிக்கிறார்கள். சுடுகாடுவரைக்கும் இவர்கள் சாதியை விடுவதில்லை.

ஜனனி ஐயர்!

”பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் நடித்த ஜனனி ஐயரும், நடிக்க வருவதற்கு முன்பு வாரம் தவறாமல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் செல்வது வழக்கமாம். ………..”

இதென்ன ஜனனி ஐயர்? பெண்கள் தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாமா? இது சரிதானா? இதற்கு முன் பெண்கள் இப்படி சாதிப்பெயரை சேர்த்துக் கொண்டதுண்டா? எனக்குத் தெரிந்து ஐயர் பெண்கள் மட்டுமே இவ்வாறு சாதிப் பெயரை தங்களது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டதுண்டு.

பிரபல ஆங்கில செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படித் தங்களை ஐயராக அடையாளப் படுத்திக் கொள்ளும் பலநூறு பார்ப்பனப் பெண்கள் இருக்கவே செய்கின்றனர். 

ஜனனி ஐயரைப் பார்க்க முடிந்த நமக்கு ஆண்டாள் முதலியாரைப் பார்க்க முடியவில்லையே? திரை உலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் மீனா நாயுடுவைப் பார்க்க முடியவில்லையே! ஆக, சாதி விசயத்தில் பார்ப்பனர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்துள்ளார்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

ஜனனி ஐயரோ - முருகேச முதலியாரோ - நடேச ஐயரோ இப்படி தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விம்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விரும்புகிறான் என்பதுதான் இதன் பொருள். ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

ஒருவனின் பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவன் அடையாளப் படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக சாதியின் மதிப்பு பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. உயர்வு தாழ்வை மட்டுமே கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

சாதியைச் சேர்த்துக் கொள்வது வெறும் அடையாளத்துக்கானது மட்டுமே என யாரும் வாதிட முடியாது. ஏன் என்றால் கந்தசாமி என பெயர் வைத்துக்கொண்டாலும் தாழ்த்தப்பட்டவன் கந்தசாமிப் பறையன் என்றோ கந்தசாமிப் பள்ளன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம்.

ஜனனி தன்னை ஐயராக அடையாளப்படுத்திக் கொள்வதன் பொருள் இதுதான்.

தொடர்புடைய பதிவுகள்:

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?


சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?....தொடர்ச்சி