Wednesday, June 22, 2011

கொடுமைக்கு ஆளாவது மருமகள்களா அல்லது முதியோர்களா? ........தொடர்ச்சி

முதியோர்கள் மீது....

வரன் பார்க்கும் போதே மாமியார் இல்லாத வீடு அல்லது பையனை நம்பி அவனது அப்பா அம்மா வாழ்தாலும் அவர்கள் தனியாக இருந்தால் நல்லது என கணக்குப் போடும் பெண்வீட்டாரும் இருக்கத்தானே செய்கிறார்கள். முன்கூட்டியே தீர்மானிக்க முடியவில்லை என்றாலும் பிறகு என்ன செய்கிறார்கள்? மாமனாரையும் மாமியாரையும் வீட்டை விட்டு துரத்துவது அல்லது தனிக்குடித்தனம் செல்வது இதில் எது சாத்தியமோ அதற்காக மருமகள்கள் புகுந்த வீட்டில் தொடுக்கும் முதல் யுத்தம் இதுதான். இந்த யுத்தத்திற்கு இடைவிடாது தூபம் போடுவது மருமகளின் தாய்தான். இதில் வெற்றி பெறுவது என்னவோ மருமகள்தான். இந்த வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுவது மருமகள் கொண்டு வந்த நகை, பணம், சொத்து, சீர்-செனத்தைதான்.

மாமனாரும் மாமியாரும் கைநிறைய சம்பாதிக்கிறார்கள், கனிசமாக 'பென்சன்' வாங்குகிறார்கள் என்றால் வீட்டின் ஒரு ஓரத்தில் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் சம்பாத்தியம் கணவனின் கைக்கு வந்தால் மட்டுமே இந்தச் சலுகை. அதே நேரத்தில் மாமனாருக்கு புதிய வேலைகளும் தீர்மானிக்கப்படும். மளிகைக் கடை, ரேஷன் கடை, காய்கறி மார்க்கெட், கரண்ட் பில், போன் பில் என வெளிப் பணிகள் அனைத்தும் பி.பி.ஓ ( BPO) செய்யப்படும். மாமனாரும் மாமியாரும் தண்டச் சோறு என்றால் வெளிப்பணிகளும் இல்லை, வீட்டில் தங்க இடமும் இல்லை.

மருமகள் கர்ப்பமாகி வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டிற்குச் சென்று விடுவார். அம்மா வீட்டில்தான் குழந்தை பிறக்கும். மகப்பேறு செலவுகள் அனைத்தையும் இப்போது பெண்வீட்டார்தான் சுமக்க வேண்டும். புதிதாய் குழந்தை பெற்ற தாய்க்கு குழந்தையை பராமரிக்கத் தெரியாதாம். அதனால் அம்மா வீட்டிற்குச் சென்றால் நன்றாக கவனித்துக் கொள்வார்களாம். தனது தாயைப்போல மாமியாரும் குழந்தை பெற்று வளர்த்த அனுபவசாலிதானே. ஏன் மாமியார் பார்த்துக் கொள்ளக்கூடாது? இதற்கு மாமியாரும் தயாரில்லை,  மருமகளும் தயாரில்லை.

குழந்தை பிறந்து ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து மருமகள் புகுந்த வீடு திரும்புவார். குழந்தையை பார்த்துக் கொள்ள தனது தாயை உடன் அழைத்து வரலாம். ஆனால எத்தனை நாளுக்குத்தான் மகள் வீட்டில் தாயால் இருக்க முடியும்? அவருக்கும் கணவனும் குடும்பமும் உண்டே! மாமியாரும் மாமனாரும் குறிப்பாக மாமியார் இருந்தால் ஒத்தாசையாக இருக்கும். என்ன செய்ய? அவர்களைத்தான் ஏற்கனவே விரட்டியாச்சே!

இப்பொழுது மருமகளின் பாடு திண்டாட்டம்தான். "ஏங்க மாமாவும் அத்தையும் தனியா எதுக்காக கஷ்டப்படனும். அவங்களும் நம்ம கூடவே இருந்துட்டுப் போவட்டுமே"என கணவனிடம் நைச்சியம் பேசி மாமனாரையும் மாமியாரையும் வரவழைப்பதில் மருமகள் வெண்புறாவாக மாறிவிடுவார். குழந்தை ஆய் போனால் கழுவுவது, பத்து பாத்திரம் தேய்ப்பது என வீட்டு வேலைக்கார ஆயாவுக்கு உரிய உட்பணிகள் அனைத்தும் மாமியாரிடம் ஒப்படைக்கப்படும். மாமனாருக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட வெளிப் பணிகளோடு குழந்தைகளை காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் மாலையில் அழைத்து வருவது என கூடுதலான வெளிப்பணி சேர்க்கப்படும்.

காலம் வெகுவேகமாக உருண்டோடிவிடும். பிள்ளைகள் வளர்ந்து தனியாக பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விடுவார்கள். மாமனார் மாமியார் இருவருக்கும் வயதாகிவிட்டது.ஒதுக்கப்பட்ட உள்பணி மற்றும் வெளிப் பணிகளை அவர்களால் சரிவரச் செய்ய முடிவதில்லை. குறிப்பாக மாமனார் அடிக்கடி நோய்வாய்படுவது அதிகரித்து விட்டது. எப்பொழுதும் இருமலும் காருவதுமாக இருப்பது தொல்லையாக மாறிவிட்டது. குறிப்பாக பிள்ளைகளுககு நோய் தொற்றிவிடும்.

நடுத்தர வர்க்கம் என்றால் முதியோர் இல்லத்தில் தள்ளி விடுவதும் ஏழைகளாயிருந்தால் மாட்டுக் கொட்டகையோ அல்லது வீட்டுத் தாழ்வாரமோ ஒதுக்கப்படும். உயிர் மட்டும் ஒட்டியிருப்பதற்குத் தேவையான கூழோ கஞ்சியோ ஊத்தப்படும். அவைகூட அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட டொக்கு விழுந்த ஒரு பாத்திரத்தில் கொட்டப் படும். 'கஞ்சி ஊத்திட்டாங்க போல' என அவர்களே தெரிந்து கொண்டு குடித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் படுபாவி பட்டினி போட்டே கொன்று விட்டாளே என்ற பழி வந்து விடுமே! காலையிலும் மாலையிலும் கமழும் தேனீர் மற்றும் காஃபியின் மணம் நாசித்துவாரங்களைத் துளைக்கும் போது நாவில் எச்சில் ஊறும். சிறிது நேரத்தில் காற்றில் மிதந்து வந்த மணமும் மறையும்.  நாவில் ஊறிய எச்சிலும் வறண்டு போகும்.வாசத்திலேயே தொண்டையை நனைக்கும் முதியோர்கள்தான் எத்தனை பேர்!   

முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பட்டியலிட்டால் வலைப்பூக்கள்கூட கருகிவிடும். இத்தகைய கொடுமைகளுக்கு மருமகள்களே முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இப்படி மாமியார் மாமனார்கள் ஒருபுறமும், மருமகள்கள் மற்றொரு புறமும் என மாறி மாறி ஒருவரை ஒருவர் துன்புறுத்துகிறார்கள். சொந்த உறவுகளையே துன்புறுத்தும் இவர்களுக்கு சமூகத்தில் நிலவும் பிறரின் துன்ப துயரங்கள் மட்டும் எப்படிப் புரியும்? அதனால்தான் சமூக உணர்வு என்பது இத்தகையோருக்கு சுட்டுப் போட்டாலும் வருவதில்லை.  

மருமகள்களும் முதியோர்களும் துன்புறுத்தப்பட்டு இந்தியாவெங்கும் பிண வாடைதான் வீசுகிறது. இதுதான் இன்றைய இந்தியா.  ஏதோ ஒரு சிலர் மட்டும் இப்படி நடந்து கொண்டால் உபதேசம் செய்து திருத்திவிடலாம். ஆனால் விதிவிலக்காக ஒருசிலரைத் தவிர ஒட்டு மொத்த சமூகமும் இப்படி இருந்தால் எப்படித் திருத்த முடியும்?

இந்து, முஸ்லீம், கிருத்துவ மதத்தினரும், பார்ப்பனர், ரெட்டியார், பிள்ளைமார், கள்ளர், தேவர், மறவர், நாடார், முத்தரையர், செட்டியார், வன்னிய-வெள்ளாள-வேட்டுவ-ஊராளி-குரும்ப கவுண்டர்கள், நாயுடு, பள்ளர், பறையர், சக்கிலியர், வண்ணார், வாணியர், நாவிதர், செங்குந்த-துளுவ வேளாள-அகமுடைய முதலியார் என சகல சாதி மக்களும் இதில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். தேசம் நெடுக இழையோடும் நமது பண்பாடு இதுதான்.

பணமும் பொருளுமே வாழ்க்கை என முன்னிறுத்தப்பட்டு இவற்றை அடைவதே வாழ்க்கையில் வெற்றியாக கருதப்படுகிறது. அதற்காக எத்தகைய பஞ்சமா பாதகங்களையும் செய்வது தவறில்லை என்கிற போக்கு நிலவுகிறது. குறிப்பாக இன்றைய உலக மயம் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற எதிர்காலம் இவற்றை மேலும் தீவிரப்படுத்திவருகிறது. அதனால்தான் சமீப காலங்களில் வரதட்சணைக் கொடுமைகள் அதிகரித்துள்ளன. முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன.

மருமகள்களும், மாமனார்-மாமியார்களும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இன்று நேற்றல்ல, காலம் காலமாக இத்தகையக் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறுவது எதனால்?  இது தனிநபர் சார்ந்த விவகாரமா அல்லது சமூகம் சார்ந்த பிரச்சனையா? கொடுமை செய்யும் தனி நபர்களுக்கு எதிராக போராடுகிற அதே வேளையில் இவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் இச்சமூகக் கட்டமைப்பை என்ன செய்யப் போகிறோம?

பணம் எனும் பிணத்தின் மீது கட்டப்பட்டுள்ள இச்சமூகக் கோட்டையிலிருந்து பிணவாடைதான் வரும். இத்துப்போன பழங்கோட்டையை தகர்க்காமல் பிண வாடை ஒரு போதும் அகலாது.
..................முற்றும்

Monday, June 20, 2011

கொடுமைக்கு ஆளாவது மருமகள்களா அல்லது முதியோர்களா?

"முதியோரை கொடுமைப்படுத்துவதில் மருமகள்களுக்கே முதலிடம்!
கொல்கத்தா, ஜூன் 15: வீட்டிலுள்ள முதியோர்களுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கு பெரும்பாலும் அவர்களுடைய மருமகள்களே காரணம் என்பது ஹெல்பேஜ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 கோடி பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய மருமகள் அல்லது மகன்களால் கொடுமைக்கு ஆளாகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் தங்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்திருப்பதாக 41 சதவீத முதியோர் தெரிவித்துள்ளனர். தாங்கள் மென்மையான இலக்காக இருப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் கொடுமைக்கு ஆளான முதியோர்களில் 98 சதவீதம் பேர் போலீஸிலோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ புகார் செய்வதில்லை. இதன் மூலம் அவர்கள் கொடுமையை அனுபவித்தபடி வேறு வழி தெரியாமல் தங்கள் மனதுக்குள்ளேயே அழுகிறார்கள் என்பதை அறியலாம் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
முதியோர்களைக் கொடுமைப்படுத்துவது 63 சதவீதம் அவர்களின் மருமகள் தான். அதே நேரம் 44 சதவீத மகன்களும் அவர்களைக் கொடுமைப் படுத்துகின்றனர்.நாட்டின் தலைநகரான புதுதில்லியில் அனைத்து முதியவர்களும் தங்கள் மருமகளின் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வின் போது தெரிவித்தனர். அதாவது 100 சதவீதம் பேர் தங்கள் மருமகள்களால் கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளனர். கொடுமைக்கு ஆளாகும் முதியோர்களில் 52 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 66 சதவீதம் பேர் பொருளாதார ரீதியாக தங்கள் குடும்பத்தினரைச் சார்ந்து வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் தங்கள் அன்றாட செயல்பாடுகளுக்கு மருமகள்களையே நம்பியுள்ளனர். 85 சதவீதம் பேர் மருத்துவச் செலவுகளுக்கு மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
முதியோருக்கு எதிரான கொடுமை என்பது மனதைக் காயப்படுத்தும் விதமாகப் பேசுவது மட்டுமின்றி உடல் ரீதியாகக் காயப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முதியோர்களை சமூக, பொருளாதார, உடல்நல ரீதியாகக் காப்பாற்றுவது அவசியம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஹெல்பேஜ் இந்தியா, முதியோர் நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளாக செயல்படும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்."
இது 16.06.2011 அன்றைய தினமணி நாளேட்டில் வந்த செய்தி.

வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்திரவதை

”...கோவை: வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை. 


திருமணம்
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சந்தியாவிற்கும், செளரிபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரனுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாஸ்கரன் செளரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.
திருமணத்தின் போதே 25 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் மணமகனுக்கு பைக் ஆகியன சந்தியாவின் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது.
கருவை அழி
திருமணம் ஆன சில நாட்களிலேயே பாஸ்கரனின் தாயும், தந்தையும் மருமகள் சந்தியாவை கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இந்நிலையில் சந்தியா கர்ப்பம் தரித்தார்.
அவரது கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட இருவரும் கருவைக் கலைக்கச் சொல்லி தொடர்ந்து இம்சை செய்துள்ளனர். இதனால் கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார் சந்தியா. அங்கேயே தங்கி பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கணவரோடு சேர்ந்து வாழ சந்தியா கூடுதலாக ரூ. 2 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என பாஸ்கரனின் வீட்டிலிருந்து தொடர்ந்து துன்புறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததால், சந்தியா கோவை மாநகர போலீசில் புகார் செய்தார்...”.

மருமகள்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு வகை மாதிரிதான்.

மேலே கண்ட எதிரெதிரான இரு செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன? இவை பற்றி பரிசீலிக்கின்ற அதே வேளையில் இவைகளைக் களைய முடியுமா? என்பதையும் பரிசீலிக்க வேண்டும். 

மருமகள்கள் மீது.... 

மாமியார் கொடுமை தாங்காமல் மருமகள் தற்கொலை, வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டதால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை, வரதட்சணை கேட்டு மருமகள் சித்திர வதை-தீயிட்டுக் கொலை, மருமகளிடம் மாமனார் சிலுமிசம், நாத்தனார் கொடுமை என புகுந்தவீட்டில் மருமகள்கள் மீது ஏவப்படும் வன் கொடுமைகளை பட்டியலிட்டு மாளாது.

இத்தகைய துன்புறுத்தல்களின் போது கட்டிய மனைவியை காக்கின்ற கணவன்மார்கள் எத்தனை பேர்?  இங்கே மருமகள்களை துன்புறுத்துகிற நிகழ்வுகள் பெரும்பாலும் பொருள் மற்றும் பணம் சார்ந்ததாகவே இருக்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு நகையும் பணமும் பொருளும் (சீர் - செனத்தை) கொண்டு வருகிறார்களோ அதைப்பொருத்தே சித்திரவதைகள் தீர்மானிக்கப் படுகின்றன.

நகை-பணம்-பொருள் இவற்றில் திருப்தியடைந்தாலும் மருமகள் பெண்குழந்தை ஒன்றைப் பெற்றுவிட்டால் அவள் சுடுகாடு செல்லும் வரை கொத்திக் குதறி விடுகிறார்கள். குழந்தைப்பேரில் ஆணா பெண்ணா என தீர்மானிப்பது ஆண்களின் விந்தணுவில் உள்ள செயல்பாடே காரணம் என மருத்துவ உலகம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் இவர்களின் காதுகளை அது எட்டுவதில்லை. ஆண் வாரிசுக்காக கட்டிய மனைவியை துரத்திவிட்டு மற்றொருத்திய கூட்டிக் கொள்ளும் கணவன்மார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இதற்கு தூபம் போட்டு உசுப்பேத்துபவர்கள் மாமியாரும் நாத்தனார்களும்தானே.

சமைக்கத் தெரியாததால் சில சமயம் சிறிதளவு பொருள் வீணாகிவிட்டால் அதற்காக மருமகளைக் கடித்துக் குதறி அமர்க்களப் படுத்திவிடுவார்கள். மருமகள்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதற்கு மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்கிற பழமொழி ஒன்று போதுமே. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?   

வேலைக்குப் போகும் மருமகள் என்றால் சம்பளப் பணத்தை கணவனிடமோ அல்லது மாமியாரிடமோ கொடுத்துவிட வேண்டும். மறுக்கின்ற மருமகள்கள் வாழ்நாள் முழுக்க தூக்கத்தை தொலைக்க வேண்டும். மன உலைச்சலில் தூக்கம் மட்டும் எப்படி வரும்?

அங்கே உட்காராதே-இங்கே உட்காரதே, அங்க என்ன வேடிக்கை-இங்க என்ன வேடிக்கை, அங்க என்ன பேச்சு, யாருகிட்ட போன்ல பேசின, தலை வாருவதற்கு இதுவா இடம்? இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு மிகச்சாதாரண உரிமைகளைக்கூட தரமறுப்பது புகுந்த வீடுகளில் அன்றாடம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. மொத்தத்தில் மருமகள்கள் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழ்கிறார்கள்.
மருமகள் என்பவள் புதிதாக அமர்த்தப்படும் ஒரு வைலைக்காரி. ஊதியம் இல்லாத இந்த வேலைக்கு இலட்சக் கணக்கில் இலஞ்சம் கொடுக்க வேண்டும். இந்த இலஞ்சத்தில் நகை, பணம், பொருள், சொத்து-பத்து, சீர்-செனத்தை எல்லாம் அடங்கும். பெண் மற்றும் ஆண் இருவரின் படிப்புக்கு ஏற்ப இலஞ்சத் தொகை மாறுடும்.இலட்சக் கணக்கில் அள்ளித் தரும் பன்னாட்டுக் கம்பெனிகள்கூட 'கேம்பஸ் இன்டர்வியூவ்' மூலம் ஒருசில மணி நேரத்தில் தங்களுக்குத் தேவையான வேலைக்காரர்களை கல்லூரிகளுக்குச் சென்றே தேர்வு செய்துவிடுகிறார்கள்.ஆனால் ஊதியமே இல்லாத மருமகள் வேலைக்கு ஆள் எடுக்க மிக நீண்ட நெடிய சிக்கலான 'புராசஸ்' கையாளப்படுகிறது. இங்கே ஆள் எடுக்க குறைந்தபட்சம் சில மாதங்களாவது தேவைப்படும். ஆண்டுக் கணக்கில் தேடுவோரும் உண்டு. பணியில் அமர்த்துவதற்கு முன்பு ஐயரின் 'கன்கரன்ஸ்' கட்டாயம் தேவை. இல்லை என்றால் 'அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டர்' கிடைக்காது.

வேலைக்காரிகள்கூட உடல் நிலை சரியில்லை என்றால் ஒன்றிரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். வேலை பிடிக்கவில்லை என்றால்  வேலையை விட்டு நின்று விடலாம்.ஆனால் மருமகள் என்கிற வேலைக்காரிக்கு விடுப்பு என்பதே வாழ் நாளிலேயே கிடையாது. வேலையை விட்டு நிற்கவும் முடியாது. இது இறக்கும் வரை 'ரிட்டையர்மெண்ட்டே' இல்லாத நிரந்தர வேலை.

மருமகள் என்கிற வேலைக்காரிக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி மருத்துவம் பார்க்கும் நிலைக்கு ஆளாகி, பிறர் உதவி கண்டிப்பாக தேவைப்படும் என்றால் அவளது தாய்வீட்டுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்படும். தாய்வீட்டார் வந்து அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து சரிசெய்து குணமான பிறகு மீண்டும் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டும். மருத்துவ செலவுக்கு எம்ளாயரிடமிருந்து 'ரீஇம்ர்ஸ்மெண்ட்' எல்லாம் கிடைக்காது.  'டிலாவலிங் அலவன்சும்' கிடையாது. இதெல்லாம் எழுதப்படாத 'செர்வீஸ் ரூல்ஸ்'. குணப்படுத்த முடியாது, இனி நிரந்தர சீக்காளி என்றால் 'வித்தவுட் நோட்டீஸ் டிஸ்மிஸ்தான்'.

இப்படி வேலையை பறிகொடுத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கும் மருமகள்களை மீண்டும் அதே வேலையில் அமர்த்துவதற்கு உறவினர்கள் நடத்தும் கட்டப் பஞசாயத்துக்கள் ஒருபுறம். பஞ்சாயத்து 'ஒர்க்அவுட்' ஆகவில்லை என்றால் காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் மனு மேல் மனு போட்டு அல்லாடும் அவலம் மறுபுறம். இவற்றையெல்லாம் 'எம்ளாயர்கள்' பொருட்படுத்துவதே கிடையாது. வெகு விரைவிலேயே வேறு ஒரு வேலைக்காரியை மருமகளாக வேலைக்கு அமர்த்திக் கொள்வார்கள். ஆனால் வேலையிலிருந்து விரட்டப்பட்ட மருமகளுக்கு வேறு வேலை கிடைத்து விடுமா என்ன? கையறு நிலையில் அவள் என்ன செய்வாள்? அதுவும் பிள்ளை குட்டிகளோடு விரட்டப் பட்டு விட்டால் குளமோ-குட்டையோ, ஆறோ-ஏரியோ, பாலிடாலோ-பாயிசனோ, தாம்புக் கயிரோ-கெரெசினோதான் இவளை அணைத்துக் கொள்ளும்.

போதும். இதோடு நிறுத்திக் கொள்கிறேன். இதற்கு மேலேயும் எமுத வேண்டுமா என்ன? 

இப்படி நசுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட மருமகள்களா முதியோர்களை துன்புறுத்துகிறார்கள்?
...................தொடரும்

Friday, June 17, 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?....தொடர்ச்சி

எனது உடல் உருவத்தையும் கரிய நிறத்தையும் வைத்து இவன் நமது சாதிக்காரனாய் இருப்பானோ என கருதிக் கொண்டு வணக்கம் வைப்போரும் அல்லது இவன் அந்த சாதிக்காரனோ எனக் கருதி, கண்டு கொள்ளாமல் இருப்பதும் என இரு வேறு மக்கள் பிரிவினரை நான் அன்றாடம் பார்க்கிறேன். நான் யாருடைய ஆளு எனத் தெரியாமலேயே 'நம்ம ஆளுதான்' என எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு நபரைப் பற்றி என்னிடம் அறிய வைக்க ஒரு சிலர் முயலவும் செய்கிறார்கள். இரு வேறு சாதிகளைச் சார்ந்தவர்கள் அச்சாதிப் பெண்களுக்கு வரன் பார்க்கவேறு சொல்வார்கள். மேற்கண்ட இரு தரப்பாருமே அவ்வாறு முயல்கிறார்கள்.  நான் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. நான் அவர்களின் சாதிக்காரனா என்பதே அவர்களுக்குக் கவலை.

இதுவரை வணக்கம் வைத்தவன் நான் அவனது சாதிக்காரன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு வணக்கத்தை நிறுத்திவிடுகிறான். இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தவன் நான் அவனது சாதிக்காரன் எனத் தெரிந்து கொண்ட பிறகு வணக்கம் வைக்கத் தொடங்குகிறான்.முன் பின் அறிமுகமே இல்லாதவன் தனது மகனுக்குத் திருமணம் என அழைப்பிதழ் கொடுக்கிறான். நான் குழம்பிப் போகிறேன். நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இதைப் பகிர்ந்த போது, தெரியவில்லை என்றாலும் தங்களது சாதிக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுப்பது என முடிவெடுத்து அவ்வாறு ஒவ்வொரு சாதிச் சங்கத்தினரும் திட்டமிட்டு செய்வதாகச் சொன்னார்.

ஒருவர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்தால் உறவினர்கள்கூட ஒரு சிலர் சில காரணங்களுக்காக கோபித்துக் கொண்டு வராமல் இருப்பார்கள். ஆனால் தனது அலுவலகத்தில் ஆயிரக் கணக்கானோர் பணிபுரிந்தாலும் அதில் தனது சாதிக்காரர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இதுதான் இன்று அலுவலகங்களில் நடுத்தர வர்க்க மக்களிடம் காணப்படும் சாதித் தீட்டு. படித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். இச்சாதியத் தீட்டுதான் அலுவலக ஊழியர்களிடம் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பனர்களில் ஐயர், ஐயங்கார், பட்டர், தீட்சிதர் என்றும்; முதலியார்களில் செங்குந்தர், துளுவ வேளாளர், அகமுடையர் என்றும்; நாயுடுகளில் கவரா, கம்மவா என்றும்;  முக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையர் என்றும் உட்பிரிவுகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரும் எந்த உட்சாதிப் பிரிவும் பிற உட்சாதிக்குள் குடும்ப உறவு எதையும் வைத்துக் கொள்வதில்லை.  அதாவது ஒரு செங்குந்த முதலியார் அகமுடைய முதலியாரிடம் சம்பந்தம் செந்து கொள்ள மாட்டார். குடும்ப உறவுகளில் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்றாலும் அலுவலகங்களில் "நம்ம ஆளு" என்கிற கருத்தியலில் ஒன்றுபடுகிறார்கள்.

இவர்களுக்கிடையில் குடும்ப உறவு கிடையாது.பிறகு எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? படிநிலையில் தங்களின் சாதிக்கு மேலே இருக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராக பிற சாதியினர் ஒன்றுபட்டால் அதில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். ஆனால் பார்ப்பனர்கள் எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? தங்களுக்கு மேலே யாரும் வந்துவிடக்கூடாது என்பது பார்ப்பனர்களின் கவலை. இதே கவலைதான் ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் ஒரு சிலர் சில இடங்களில் ஆளுமைக்கு வந்துள்ளனர். இந்த ஆளுமையைத்தான் பிற உயர் சாதியினரால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் தனது வாய்ப்பை தாழ்த்தப்பட்டவன் தட்டிப் பறித்துவிட்டதாகத்தான் பிற உயர் சாதிக்காரன் நினைக்கிறான். அரசு வகுத்திருக்கிற கொள்கை மற்றும் சட்டங்களின்படிதான் ஒரு தாழ்த்தப்பட்டவன் கல்வியைப் பெறுகிறான்; வேலைவாய்ப்பைப் பெறுகிறான்; பதவி உயர்வு பெறுகிறான். இதற்கு சம்பந்தப்பட்ட தாழ்த்தப்பட்டவன் எப்படி பொறுப்பாக முடியும்? தனிப்பட்ட முறையில் அவன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வது எந்த வகையில் நியாயமாகும்? அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாயப்பு என்பதை உத்தரவாதப் படுத்தாத அரசின் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது கோபம் கொள்வது கோழைத்தனமல்லவா!

பார்ப்பனர் உள்ளிட்ட பிற ஒடுக்கும் சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து வகையான சதி வேலைகளையும் அரங்கேற்றுகின்றனர். துறைத் தலைவராகவோ, நிறுவனத் தலைவராகவோ, தொழிற்சங்கத் தலைமைக்கோ தாழ்த்தப்பட்டவர்கள் வந்துவிடக்கூடாது என்பதே இவர்களின் கவலை. உயர் சாதியினர் அனைவரும் ஒன்றாகக்கூடி தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கேவலமாகப் பேசி அவர்களுக்குள்ளேயே கிண்டலடித்துக் கொள்வார்கள். 'கவர்மெண்ட் ஐயர்' என்றும் 'கோட்டா' என்றும் 'மேற்படி' என்றும் பேசும் இவர்களது பேச்சு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுப்பதற்கு ஏதுவானது.

தரமான கல்வி கிடைக்காத கிராமப்புற மாணவனின் திறமை, நகர்ப்புற மாணவனைவிட குறைவாகத்தானே இருக்கும்.  இதை ஏற்றுக் கொள்ளும் உயர் சாதியினர் காலம் காலமாக கல்வி மறுக்கப்ட்ட தாழ்த்தப்பட்ட முதல் தலைமுறை மாணவர்கள் சற்றே திறமை குறைவானவர்களாக இருப்பது மட்டும் எப்படி குற்றமாகும்? இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட ஊழியர்களை 'ஜீரோ ' என்றும் 'வேஸ்ட்' என்றும் மிகக் கேவலமாகப் பேசுவது அன்றாடம் அலுவலகங்களில் நடக்கிறது.  இப்படி தாழ்த்தப்பட்டவர்களை இழிவு படுத்தும் செயல் அவர்களை எட்டாமல் இல்லை.

இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை தண்டணையிலிருந்து காப்பாற்ற தங்களுக்கு வேண்டிய உயர் அதிகாரிகளின் தயவை நாடுகின்றனர் சாதிச் சங்கத்தினர். என்ன இருந்தாலும் "நம்ம ஆளு" இல்லையா என சப்பைக் கட்டு கட்டுகின்றனர். தனது சாதிக்காரன் என்றால் தாராளவாதமும், பிற சாதிக்காரன் என்றால் கறார் தன்மையும் என்பது இன்று அலுவலகங்களில் காணக்கூடிய ஒரு கேடு கெட்ட நடைமுறை. இத்தகைய சாதிப் பற்றுதான் அலுவலகங்களில் நடைபெறும் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை ஒழிப்பதற்கு மிகப் பெரிய தடையாக நிற்கிறது. ஐம்பது ரூபாய் கையூட்டு வாங்கிய கடை நிலை ஊழியன் பிற சாதிக்காரன் என்றால் கையும் களவுமாக பிடிபடுகிறான். ஆனால் இலட்சக் கணக்கில் கையூட்டு பெற்ற தனது சாதிக்காரனை காப்பாற்றுவதற்கு சென்னை முதல் டெல்லி வரை படை எடுக்கிறார்கள்.

கற்பழிக்கும் காமுகனைக்கூட காப்பாற்ற சாதி எனும் ஆயுதத்தை இவர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

நீதியும் நியாமும் இந்கே சாதியச் சாக்கடையில் மூழ்கடிக்கப்படுகிறது. இந்தச் சாதியப் போர்வையை பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் முதல் தாழ்த்தப்பட்ட சாதியனர் வரை அனைவருமே பயன்படுத்துகின்றனர். பிற உயர் சாதியினர் பயன்படுத்தும் போது கண்ணுக்குத் தெரியாத சாதியப் போர்வை, தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தும் போது மட்டும் பிற சாதியனரின் கண்களுக்கு 'பவர்' கண்ணாடி போடாமலேயே தெரிகிறது. உயர்சாதிக்காரன் தவறு செய்யலாம், தாழ்ந்த சாதிக்காரன் செய்யக்கூடாது என்கிற நால்வர்ணக் கோட்பாடுதான் இங்கே கோலோச்சுகிறது. இப்படிச் சொல்வதனால் தாழ்த்தப்பட்டவர்களின் தவறுகளுக்கு நான் சப்பைக்கட்டு கட்டுவதாக நினைக்க வேண்டாம். தவறுகளைக் காண்பதில்கூட சாதியப் பார்வை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே இதைக் கூறுகிறேன். மற்றபடி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனபதே எனது கருத்தும்.

கிராமமோ நகரமோ தீண்டாமை இன்னும் அகலவில்லை. தன்மையில்தான் மாறுபடுகிறது.

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
.............................முற்றும்

Wednesday, June 15, 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?


காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது 'இப்பவெல்லாம் படிச்சவங்கதான் அதிகமா சாதி பாக்கிறாங்க' என்றார் உடன் வந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். படித்தவர்,  நல்ல ஊதியத்துடன் நடுத்தர வர்க்க வாழ்க்கையை நடத்துபவர். பொருளாதாரத்தில் அவருக்கு குறையேதும் இல்லை. பிறகு ஏன் இத்தகைய சலிப்பு!

இந்தக் கேள்வியைத் தொடர்ந்து பள்ளிப் பருவத்தில் எனக்கு நேர்ந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்தது என்பதைவிட எப்பொழுதும் எனது நினைவில் நிலைத்திருப்பது.

என்னுடன் படித்த மாணவ நண்பன் என்ன சாதி என்று தெரியாது. ஆனால் சைவப்பழக்கம் உள்ள உயர்சாதி என்பது பிறகு தெரிய வந்தது. பகல் நேரத்தில் அவனுடன் அவனது வீட்டிற்குச் சென்றேன். அவனது தாயார்தான் வீட்டில் இருந்தார். முன் பின் தெரியாத ஒருவனை தனது மகன் அழைத்து வந்துவிட்டால் அவனை உடனடியாக வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்கள். இது கிராமப்பகுதிகளில் அன்று நிலவிய நடைமுறை. ஒரு பித்தளை செம்பில் தண்ணீர் கொண்டு வந்து திண்ணையில் வைத்தார் அவனது தாயார். கையில் கொடுக்கமாட்டார்கள். தீட்டுப் பட்டுவிடுமாம். இருந்தாலும் வந்தவர்களுக்கு தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடுக்க மட்டும் மறுக்கமாட்டார்கள். கேட்கவில்லை என்றாலும் அவர்களாகவேத் தருவார்கள். இது தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடு என்கிறார்கள் சிலர். ஆனால் இந்த சிறந்த விருந்தோம்பலில் இருக்கும் தீண்டாமை,தாகம் தீர்க்கும் தண்ணீரைக்கூட கொடிய நஞ்சாகவல்லவா மாற்றிவிடுகிறது. இது அந்தத் தண்ணீரைக் குடிப்பவனுக்குத்தான் உரைக்கும்; கொடுப்பவர்களுக்கு அது ஒரு நடைமுறைப் பண்பாடு. சமூகம் அப்படித்தான் மக்களை பயிற்றுவித்திருக்கிறது. எனது கருப்புத்தோலும் ஏழ்மையின் உருவத்தோற்றமும் நான் என்ன சாதியாயிருக்குமோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இந்த நிகழ்வு எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இது நடந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இடைப்பட்ட காலத்தில் ஏராளமான நண்பர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என பலதரப்பட்ட மக்களோடு பழகியிருக்கிறேன், பழகி வருகிறேன். இதில் பட்டியலின மக்கள் முதல் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் என கசல தரப்பு மக்களும் அடங்குவர். படிக்கிற காலத்தில் பார்ப்பன மாணவர்களைத் தவிர பிற மாணவர்கள் என்ன சாதி என்பதை கண்டுபிடிப்பது கடினம். சாதிகளைக் கடந்து சக மாணவன் என்கிற உணர்வு மட்டுமே நிலவியது. ஆண்டுக் கணக்கில் ஒரே அறையில் தங்கிய நண்பர்கள்கூட என்ன சாதி என்பதை தெரிந்து கொள்ளவில்லை. அவர்களும் காட்டிக்கொள்ளவில்லை. இதுதான் அன்றைய இளைஞர்களின் மனநிலை.

தீண்டாமை என்பது எத்துனை கொடியது என்பது சாதியப் படிநிலையில் தனக்கு மேலே உள்ள சாதிக்காரர்களால் ஒருமுறையேனும் அனுபவப்பட்டவர்கள் மறக்க முடியாது. சாதியப் படிநிலையில் ஆகக் கடைகோடியாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே தீண்டாமைக் கொடுமையை அதிகம் அனுபவிப்பவர்கள்.
கிராமங்களில் பல்வேறு சாதிப் பிரிவு மக்களுக்கிடையில் கூலி விவசாயி, சிறு விவசாயி, பணக்கார விவசாயி என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்தாக வேண்டும். ஒருவரின் உழைப்பு இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது. சாதியால் வேறுபட்டாலும் உழைப்பால் ஒன்றிணைவதால் மனதில் காழ்ப்புணர்ச்சி ஏதும் இன்றி 'அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான்களாகப்' பழகுகிறார்கள்.  கிராமப்புற தீண்டாமை என்பது தனிப்பட்ட நபர்களின் எண்ணத்தினால் கடைபிடிக்கப்படுவதல்ல. மாறாக கிராமப்புற தீண்டாமை என்பது தான் சார்ந்த சாதிய சமூகத்திற்குப் பயந்து கடைபிடிக்கப்படும் ஒருவித 'சமூக ஒழுங்கு'. தனிநபர்கள் மனம் மாறினாலும் சமூகக் கட்டமைப்பை மீறி அவர்களால் நடந்து கொள்ள முடியாது. கோவில் திருவிழாக்கள் மற்றும் காதல் போன்ற விவகாரங்கள் தோன்றும் போது உயர் சாதி பணக்காரர்களாலும், நாட்டாமைகளாலும்தான் தங்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் தேவைகளுக்காக பெரும்பாலான சாதிக்கலவரங்கள் கிராமப்புறங்களில் உருவாக்கப்படுகின்றன.

திருச்சி உறையூரில் குழுமாயி-குழுந்தலாயி அம்மன் திருவிழா மிகவும் பிரபலம். அறிவியல் வளர்ந்தாலும் கிராமங்கள் மாநகரங்களாக வளர்ச்சி பெற்றாலும், இதுபோன்னற திருவிழாக்களின் போது அவை குக்கிராமங்களாக மாறிவிடுவதும், மக்கள் காட்டுமிராண்டிக் காலத்திற்குத் தங்களை ஆளாக்கிக் கொள்வதையும் காணமுடியும். ஆடுகளின் கழுத்தை அறுத்து அதிலிருந்து கொட்டும் இரத்தத்தை சளைக்காமல் குடித்து பிரமிப்பூட்டும் நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.  இரத்தம் குடிப்பதில் மட்டுமல்ல சாதிய ஒடுக்குமுறையிலும் தாங்கள் காட்டுமிராண்டிகள்தான் என்பதையும் ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகின்றார்கள்.

தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெருவிலில் இருக்கிறது குழுமாயி அம்மன் கோவில். அலங்கரிக்கப்ட்ட அம்மன் இங்கிருந்து புறப்பட்டு பறையர்கள் வாழும் காந்திபுரம் வழியாக உறையூர் செட்டித் தெருவை சென்றடையும். பூசைக்காக அம்மன் காந்திபுரத்தில் நிற்காது. படையாச்சி,வெள்ளாளர்,  செட்டியார், முத்தரையர் என பிற உயர்சாதி தெருக்களில் நாள் வாரியாக உலா வரும் அம்மன் அங்குள்ள மக்களுக்கு அலங்காரத்துடன் காட்சியளிப்பாள். உலா முடித்து மீண்டும் அம்மன் தில்லைநகருக்கு வரவேண்டும். அப்படி வரும் போது காந்திபுரத்திற்குள் நுழையும் முன்பு செட்டித் தெருவில் நிறுத்தப்படும். அம்மனின் மொத்த அலங்காரமும் அங்கே உருவப்பட்டு அம்மனமான அம்மன் மட்டுமே காந்திபுரத்திற்குள் நுழையும். உருவப்பட்ட இந்த அம்மனைத்தான் காந்திபுரம் பறையர்கள் பூசை செய்து வழிபட வேண்டும். இரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டித் தனத்தைவிட இது மிகக் கொடிய காட்டுமிராண்டித்தனம்.

இக்கொடுமையை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திபுரம் மக்கள் ம.க.இ.க தலைமையில் போராடினார்கள். அரசு சார்பில் ஒரு பஞ்சாயத்தும் கூட்டப்பட்டது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர். அம்மனின் அலங்காரத்தை கலைக்காமல் அப்படியே அனுப்பி வையுங்கள் என்பதுதான் காந்திபுரம் மக்களின் கோரிக்கை. காலம் காலமாக உள்ள முறையை மாற்ற முடியாது என பிற உயர் சாதியினர் அனைவரும் ஒரே குரலில் பேசினர். காந்திபுரம் மக்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் கோவில் சாவியை நீந்களே வைத்துக் கொண்டு திருவிழாவையும் நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு அம்மனும் வேண்டாம்; திருவிழாவும் வேண்டாம் என பிற உயர் சாதியினர் அனைவரும் ஏகக் குரலில்  பேசினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றிணைவதில் மட்டும் பிற சாதிக்காரர்களுக்குள் அப்படி ஒரு பிணைப்பு.

காந்திபுரம் மட்டுமல்ல விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் கோவிலில் வழிபாட்டு உரிமை கேட்ட போது கோவில் சாவியைக் கொடுத்துவிட்டார்கள் வன்னியர்கள், ரெட்டியார்கள் உள்ளிட்ட பிற உயர் சாதியினர். இன்றைய உத்தபுரங்கள் வரை இதுதான் நிலைமை.

படிக்காதவர்கள்தான் சாதி பார்க்கிறார்கள். படித்தவர்கள் யாரும் சாதி பார்ப்பதில்லை என்கின்றனர் சிலர்.

ஆனால் இன்று...... அரசு அலுவுலகங்களில்... பொதுத்துறை நிறுவனங்களில்.... நகரங்களில்.....

.................தொடரும்