Sunday, September 21, 2014

அறுக்கமாட்டாதவளுக்கு இடுப்பில் ஆயிரத்தெட்டு அருவாளாம்!

முதல் நாள் காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதி நோக்கி சில கி.மீ தூரம் நடப்பது. அதாவது திருப்பதிக்கு பாத யாத்திரை மேற்கொள்வது. பிறகு அங்கிருந்து காஞ்சிபுரத்திற்கு காரில் திரும்புவது.

இரண்டாம் நாள் காஞ்சிபுரத்திலிருந்து முதல் நாள் விட்ட இடத்திற்கு காரில் செல்வது. பிறகு அங்கிருந்து மேலும் சில கி.மீ தூரம் திருப்பதி நோக்கி நடப்பது. ஆக இரண்டு நாளில் திருப்பதி நோக்கி நடந்த தூரம் ஒரு சில கி.மீ.தான் இங்கிருந்து மீண்டும் காஞ்சிபுரத்திற்கே காரில் திரும்புவது.

மூன்றாம் நாள் காஞ்சிபுரத்திலிருந்து இரண்டாம் நாள் விட்ட இடத்திற்கு காரில் செல்வது. பிறகு அங்கிருந்து மேலும் சில கி.மீ தூரம் திருப்பதி நோக்கி நடப்பது.. ஆக மூன்றாம் நாளில் நடந்த தூரம் மேலும் சில கி.மீ.தான் இங்கிருந்து மீண்டும் காஞ்சிபுரத்திற்கே காரில் திரும்புவது.

இப்படி ஒரு வினோத பாத யாத்திரையை அதாவது ‘இன்கிரிமென்ட்டல்’ பாதயாத்திரையை காஞ்சி சங்கர மடத்து இளைய தளபதி சமீபத்தில் மேற்கொண்டுள்ளார். ஏன் இந்த வினோத பாதயாத்திரை என்று யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக தினமும் மடத்தில் நடைபெறும் ஸ்ரீசந்திர மௌலீஸ்வர பூஜையில் பங்கேற்பதற்காக அவர் திரும்புவதாக கதை அளக்கிறார்கள்.

“அறுக்கமாட்டாதவளுக்கு இடுப்பில் ஆயிரத்தெட்டு அருவாளாம்”! என்கிற கிராமத்து பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.

Sunday, September 14, 2014

சங்கரராமன் கொலை வழக்கு: அப்பீலுக்கு ஆப்பு!

2004 ம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரரராமன் கொலை வழக்கில் எதிரிகள் குற்றமற்றவர்கள் என புதுச்சேரி நீதிமன்றத்தால் நவம்பர் 23, 2013 ல் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய விரும்பாததால், மேல்முறையீடு செய்யாமல் விட்டுவிட்டது. 

அதைத் தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் மேல்முறையீடு செய்ய பரிந்துரைத்ததையடுத்து இந்தப் பரிந்துரையை நடுவண் அரசின் அட்வகேட் ஜெனரலின் கருத்தை அறிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் அனுப்பி வைத்தது பதுச்சேரி அரசு. இவ்வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்த வழக்கு அல்லவென்றும், மீறி மேல்முறையீடு செய்தால் உயர்நீதி மன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாவோம் என்பதனால் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என அட்வகேட் ஜெனரல் கருத்து தெரிவித்திருந்தார்.
 
தற்போது புதுச்சேரி அரசு அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு  சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வதில்லை என முடிவு செய்துவிட்டதால் இவ்வழக்கு ஒரேயடியாக ஊத்திமூடப்பட்டுவிட்டது என்பது உறுதியாவிவிட்டது.
சங்கரராமன் இப்போது உயிரோடு இல்லை; செத்துப் போனது என்னவோ உண்மை. அதுவும் கொலை செய்யப்பட்டு செத்துப் போனார் என்பது உலகத்துக்கே வெளிச்சம். இவ்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் கொலையாளிகள் இல்லை என்பது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேல்முறையீட்டுக்கான கதவும் மூடப்பட்டு விட்டதால் கீழமை நீதி மன்றம் தவறான தீர்ப்பு வழங்கியிருக்குமோ என்பதற்கான கேள்விக்கும் இனி இடமில்லை.

சங்கரராமன் கொலை வழக்கில் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. அப்படியானால் உண்மையான கொலையாளிகளை கண்டுபிடிக்கின்ற திறனை இழந்துவிட்டதா நமது காவல் துறை? உலகிலேயே ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அடுத்து மிகவும் திறமை வாய்ந்தது நமது காவல்துறைதான் என்பதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்தானா? அப்படி எல்லாம் நமது காவல் துறையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

சாதி – மத அடிப்படையிலும், ஏழை - பணக்காரன் என்கிற வர்க்க அடிப்படையிலும் மக்கள் வேறுபட்டு இருக்கும் ஒரு சமுதாயத்தில் பொதுவான நீதிக்கு வாய்ப்பே கிடையாது. இந்த வழக்கில் மட்டுமல்ல, பல்வேறு வழக்குகளிலும் பொதுவான நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பதை மறுக்க முடியாது. சாதி – மதம் மற்றும் ஏழை – பணக்காரன் என்கிற அம்சங்களை கணக்கில் கொண்டே தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இப்பொழுது மட்டுமல்ல, வரலாறு நெடுகிலும் இதுதான் நடைமுறையாக இருந்துள்ளது; இருந்தும் வருகிறது.

”பிராமணன் சட்டம் தெரிந்தவனாகையால், எந்தக் குற்றங்களையும் அரசன் பார்வைக்கு கொண்டு வரவேண்டியதில்லை; மாறாக தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு தன்னைக் காயப்படுத்தியவனை தண்டிக்கலாம்” (மனு: 11-31).

“தனக்குள்ள அதிகாரம், அரசனின் அதிகாரத்தைவிட வலுவானதாகையால், ஒரு பிராமணன் தனது எதிரிகளை தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டே தண்டிக்கலாம்” (மனு: 11-32).

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள், சங்கரராமனை மேற்குறிப்பிட்ட மனுதர்ம சட்டப்பிரிவுகளின் கீழ் கொலை செய்து தண்டித்திருக்கலாம். அப்படி தண்டித்திருந்தால் மனுதர்ம சட்டப்படி எதிரிகள் குற்றம் செய்ததாகக் கருத முடியாதே!

“ஒரு பிராமணன் குற்றம் செய்து விட்டால் அதற்குத் தண்டனையாக அவனது தலையை மழித்தாலே போதும்; அதுவே, அவனை தூக்கிலேற்றியதற்கு ஈடான தண்டனையாகும். ஆனால் மற்ற சாதியினர் குற்றம் செய்துவிட்டால் அவர்களை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டும்” (மனு: 8-379).

ஒரு வேளை சங்கரராமன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் தாங்கள் செய்த குற்றத்திற்காக தங்களது தலையை மழித்துக் கொண்டிருக்கலாம். அப்படி அவர்கள் மழித்துக் கொண்டிருந்தால் அதுவே, அவர்களை தூக்கிலேற்றியதற்கு ஈடான தண்டனையாகிவிடுகிறதே! பிறகு மீண்டும் எப்படி தண்டனை கொடுக்க முடியும்? இதையும் மீறி தண்டிப்பது ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டனை கொடுக்கின்ற பாபத்திற்கு நீதித்துறை ஆளாகிவிடக் கூடாதல்லவா? இக்கூற்றின்படிகூட  இவ்வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்ததல்லதானே!

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. சங்ரராமனை வேறு சாதியினர் எவரும் கொன்றிருந்தால் அவர்களுக்கு தூக்கு நிச்சயம் கிடைத்திருக்கும்.

சொத்து குவிப்பு வழக்கில் என்ன நடக்கிறது என செப்டம்பர் 20 அன்று பார்ப்போம்! இவ்வழக்கிலும் ‘எதிரி’ விடுவிக்கப்பட்டுவிட்டால் மனுதர்ம சட்டம் அமுலுக்கு வந்து விட்டது; தொகாடியாக்கள் சொல்வது போல இந்தியா 'ஹிந்து' நாடுதான் என உறுதியாக நம்பலாம்.

Sunday, September 7, 2014

திருமலையில் மொட்டைக்கு மூடு விழா!

பிரச்சனைகள் ஒன்றா! இரண்டா! பட்டியலிடுவதற்கு? குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்; பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வேண்டும், அதன் பிறகு நல்லதொரு வேலை கிடைக்க வேண்டும்; வேலை கிடைத்தால் மட்டும் போதாது, காலா காலத்தில் திருமணம் நடக்க வேண்டும்; சொந்த வீடு வேண்டும் என பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை-ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பிரச்னைகளோ ஏராளம்.

இன்றைய மாறி வரும் உலகமயச்சூழல், பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. என்ன செய்ய? பிரச்சனைகள் தீர வேண்டாமா? காணிக்கை செலுத்தினால் பிரச்சனைகள் தீரும் என்கிற நம்பிக்கையை மக்களிடையே விதைத்து அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுகிறது ஒரு கூட்டம். காணிக்கை செலுத்தினால்தான் காரியம் நிறைவேறும் என கட்டாயப்படுத்துகிறது மற்றொரு கூட்டம்.

காணிக்கைகள்தான் எத்தனை? எத்தனை?

பிறப்புச் சான்றிதழ் தொடங்கி இறப்புச் சான்றிதழ் வரை நமது வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில் நமக்கு தேவைப்படும் சான்றிதழ்களையும் உரிமங்களையும் பெற அரசு ஊழியர்களுக்கு செலுத்துவது ‘கவர்’ காணிக்கை.

விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்க கல்லூரி தாளாளர்களுக்கு செலுத்துவது நன்கொடை காணிக்கை.

சத்துணவு ஆயா முதல் நீதி காக்கும் நீதியரசர் வரை கவர்மெண்ட் வேலைக்காக அரசியல்வாதிகளுக்கு செலுத்துவது அன்பளிப்பு காணிக்கை. சாலை போடவும், பாலம் கட்டவும் காண்ட்ராக்ட் எடுத்தால் சதவீத கணக்கில் அதிகாரிகளுக்கு செலுத்துவது ‘கமிஷன்’ காணிக்கை. ஆட்சிகளையே கவிழ்க்கும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது இந்த ‘கமிஷன்’ காணிக்கை.

ஒன்வேயோ, ஓவர் ஸ்பீடோ! இன்சூரன்சோ, ஆர்.சி.புக்கோ! எதுவாய் இருந்தால் என்ன? மாட்டிக்கொண்டால் ஒயிட் சர்ட்டிடம் செலுத்துவது ‘டிராபிக்’ காணிக்கை.

எக்குத் தப்பாய் ஏதாவது செய்துவிட்டு ஏட்டுவிடம் மாட்டிக் கொண்டால் ஸ்டேசனுக்கு செலுத்துவது ‘ஜாமின்’ காணிக்கை.

காலையில் எழுந்து வேலைக்குச் சென்று நல்லபடியாய் மாலையில் வீடு திரும்ப மரத்தடி பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டால் அதற்காக ஐயரிடம் செலுத்துவது அர்ச்சனை காணிக்கை.

காரியவாத காணிக்கை!

மேற்சொன்ன காணிக்கைகள் எல்லாம் பெரும்பாலும் நிர்பந்தத்தினாலோ அல்லது கட்டாயத்தினாலோ செலுத்தப்படுபவை. இந்த காணிக்கைகள் - செலுத்தியதுகூட பிறருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நினைத்த காரியம் கைகூடினால், தானே முன்வந்து ஏழுமலையானுக்கு விரும்பி செலுத்துவது முடி காணிக்கை. முடி காணிக்கை - மனமுவந்து செலுத்துவது; வெளிப்படையானது; மறைக்கமுடியாதது.

மற்ற காணிக்கைகளில், காணிக்கை செலுத்தினாலும் காரியம் கைகூடாமல்கூட போகலாம்; ஏமாற வாய்ப்புகள் அதிகம். ஆனால் முடி காணிக்கை, காரியம் கைகூடினால் மட்டுமே செலுத்தப்படும். இது ஒரு காரியவாத காணிக்கை! மற்ற காணிக்கைகள் ஃப்ரீ பெய்டு என்றால் முடி காணிக்கை போஸ்ட் ஃப்பெய்டாக்கும்!


இந்த முடி காணிக்கைக்கும் இப்போது கேடு வந்தவிட்டது. திருமலையில் மொட்டையடிக்க ஆள் பற்றாக் குறையாம். முடி காணிக்கை செலுத்த திருமலையில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுவதால் இனி பக்தர்கள் தாங்கள் வசிக்கும் ஊரிலேயே மொட்டையடித்து, அந்த முடியை திருமலையில் உள்ள உண்டியலில் சேர்ப்பிக்கும் புதிய நடைமுறையை   கொண்டுவரப் போவதாக அறிவித்தள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

நினைத்த காரியம் கைகூட வேண்டும் என்பதற்காகத்தான் திருப்பதியில் மொட்டை போட வேண்டிக் கொள்கிறான் பக்தன். ஊரிலேயே மொட்டை போட்டு முடியை மட்டும் எடுத்து வா என்றால் அது அவனது உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாகாதா?

இதுநாள்வரை மொட்டைகளைப் பார்த்தால் “என்ன திருப்பதியா?” எனக் கேட்போம். இனி மொட்டைகளைப் பார்த்தால் “என்ன திருப்பதிக்கா?” என்றுதான் கேட்க வேண்டும்.


சரி! அப்படியே மொட்டை அடித்து முடியை எடுத்து வருவதாக வைத்துக் கொண்டாலும் ஒரு குடும்பமே மொட்டை போட்டு முடியை மட்டும் மூட்டை கட்டி எடுத்துச் சென்றால் அதற்கான லக்கேஜை யார் தருவார்கள்? வரும் வழியில் முடி மூட்டை திருடு போனால் வெறுங்கையோடு ஏழுமலையானை தரிசிப்பது நியாயமாகுமா?

அதைப்பற்றி எல்லாம் ஏழுமலையானுக்கே கவலை இல்லை. முடியை நேரடியாகக் கொண்டவர முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இனி டிமாண்ட் டிராப்டோடு முடியை பார்சலில் அனுப்பி வை என்பான். கட்டணம் இன்றி காணிக்கை செலுத்த முடியாதே! முடியிலேயே கோடிகளைப் பார்ப்பவனால் வேறு எப்படி யோசிக்க முடியும்!