Sunday, May 22, 2011

இதுவரை.....ஊரான்!

வலைப்பூக்களின் வாசத்தை எனக்குத் தெரியப் படுத்தியது வினவு. வினவு படைப்புகளைப் படிக்கத் தொடங்கியபோது நான் ஒரு சாதாரண வாசகனாகத்தான் அறிமுகமானேன். ஏற்கனவே எனக்கு இரசிகப்பிரியா தமிழ் எழுத்துக்களை தட்டுவதற்கு அனுபவம் இருந்தாலும்,  வினவின் கட்டுரைகளின் மீதான விவாதங்களில் பங்கேற்க முடியாமல் இருந்தேன். ஒரு தோழரின் உதவியால் சந்தன முல்லை அவர்களின் " உலகின் அழகிய மணமக்கள்" கட்டுரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டேன்.  பிறகு தொடர்ந்து விவாதங்களில் பங்கேற்று வருகிறேன்.

விவாதங்களில் பின்னூட்டம் போடுவதன் மூலம் மட்டுமே சமூக நடப்புகள் குறித்த நமது எண்ணங்களை முழுமையாகப் பகிர்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேன். வாசகர்கள், வலைப்பூ தொடங்குவதற்கு வினவு வெளியிட்ட கட்டுரையின் வழிகாட்டுதலில் ஊரான் வலைப்பூவை கடந்த ஆண்டு (2010)அக்டோபரில் தொடங்கினேன். "விளையாட்டு இரசனைக்கானதா?" என்ற தபை்பில் எனது முதல் படைப்பை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து இதுவரை 50 படைப்புகளை வெளியிட்டுள்ளேன். இதில் ஒன்று மொழி பெயர்ப்புக் கட்டுரை, மற்றொன்று பதிவர் சரவணன் அவர்களின் படைப்பு. 

இன்றைய தேதி வரை எனது வலைப்பூவை 46 பேர் பின்பற்றுகிறார்கள். இதில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எனக்கு நேரடியாக அறிமுகம் இல்லாதவர்கள். கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் மட்டுமே அறிமுகமானவர்கள். இது தவிர இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் தொடர்ந்து ஊரானைப் படித்து வருகிறார்கள். தொடர்ந்து ஆதரவளித்தும் உற்சாகமூட்டியும் வருகிறார்கள். உறவால், நட்பால் ஏற்படும் பிணைப்பைவிட ஒத்த கருத்தால் ஏற்படும் பிணைப்பு தன்னலமற்றது,  வலுவானது, உறுதியானது. நாம் எண்ணுகிற மாற்றத்திற்கு கருத்தொற்றுமை மிகவும் அவசிமானது. இத்தகைய கருத்தொற்றுமையை நோக்கி பயணிப்போம். பயணம் எல்லையற்றதுதான் என்றாலும் பயணம் தொடரும்.

இதுவரை ஊரானில் வெளியான படைப்புகள்:
தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?
எது தொழில் தர்மம்?
சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? ...
சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா?
முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...
முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...
முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...
பாட்டுக் கச்சேரிகள் படுத்தும்பாடு!
எதார்த்தத்தை நோக்கி....
விளையாட்டு இரசனைக்கானதா?

Saturday, May 14, 2011

தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?


தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக வினர் ஆங்காங்கே பட்டாசுகளைக் கொளுத்தினர். இன்று காலை பல அலுவலக வாயில்களில் பட்டாசு கொளுத்தியதோடு 'சாக்லெட்' உள்ளிட்ட இனிப்புகளையும் வழங்கினர். ஒரு சிலர் மிகவும் நெருங்கிய தங்கள் நண்பர்களுக்கு, அவர்கள் மாற்றுக் கட்சியினராய் இருந்தாலும்கூட இலட்டு, மக்கன் பேடா, ஜிலேபி, மைசூர்பாகு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். இப்படி இனிப்பு வழங்கியவர்களுக்கு அரசியலால் சொந்த ஆதாயம் எதுவும் இல்லை என்றாலும் தங்கள் சொந்தக் காசிலேயே இவற்றைச் செய்கின்றனர்.

எதற்காக இதெல்லாம் என்று கேட்ட போது "குடும்ப ஆதிக்கம், குடும்ப அரசியல் ஒழிஞ்சிச்சில்ல" இதுதான் அவர்களின் பதில். கருணாநிதி குடும்பம் நுழையாத இடமே கிடையாது. எல்லா இடங்களிலும் நுழைந்து கொள்ளையடித்தார்கள். "குடும்பமே கொள்ளையடிப்பதை எப்படி சகித்துக் கொள்ள முடியும?" இதுதான் இவர்களிடம் கோபமாக வெளிப்பட்ட பதில். இதே உணர்வுதான் மக்களிடமும் இருந்துள்ளது என்பது தேர்தல் முடிவுகளில் பிரதி பலித்தது.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல் கொள்ளை, இலங்கை பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை, அலைக்கற்றை ஊழல் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதில் திமுக கூட்டணி மண்ணைக் கவ்வியதற்கு முக்கிய காரணம் குடும்ப அரசியல்தான். 

எல்லை பிரித்துக் கொள்ளையடிப்பார்கள்:

கருணாநிதி குடும்பம் இலட்சம் கோடிகளில் கொள்ளையடித்தால் மந்திரிகள், மாவட்டங்கள் சில கோடிகளையும் வட்டங்கள், கவுன்சிலர்கள், அல்லக்கைகள் சில இலட்சங்களையும் வாரிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் அலைக்கற்றையில் அள்ளினால் இவர்கள் மணற் கொள்ளையில் வாரினார்கள். அள்ளுவதற்கும் வாருவதற்கும் வாய்ப்பு ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் என்பதுதானே நமது நாட்டு நடைமுறை. பொருளாசை கொண்ட எவர்க்கும் இதைப் பார்க்கின்ற போது பொறாமையும் கோபமும் வருவது சொத்துடைமைச் சிந்தனையின் இயல்புதானே.

நேர்மையான முறையில் பொருள் ஈட்டி, ஒரு நிலம் வீடு மனை வாங்கினாலோ, பிள்ளைகளை படிக்க வைத்தாலோ, சற்றே ஆடம்பரமாக திருமணம் செய்தாலோ அங்காளிக்கும் - பங்காளிக்கும், எதிர் வீட்டுக்காரனுக்கும் - அக்கம் பக்கத்து வீட்டுக் காரனுக்கும் பொருத்துக் கொள்ள முடிவதில்லை. பொறாமையால் பொருமுகிறான். இதுதானே சொத்துடைமைச் சமுதாயம் நம்மிடம் தோற்றுவித்துள்ள மன நிலை. அப்படி இருக்கும் போது கருணாநிதி குடும்பத்தைப் பார்த்து யாருக்குத்தான கோபம் வராது. 

தற்போதைய ஆட்சி மாற்றத்தால் ஒரே ஒரு மாற்றம்தான் நடக்கும். கருணாநிதி குடும்பம் தொடர்ந்து ஏகபோகமாக எல்லாத் தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஏற்கனவே அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் நடுத் தெருவுக்கு வரப்போவதில்லை. அல்லது எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் திவாலாகவும் போவதில்லை. கருணாநிதி குடும்பம் ஒன்றும் சாதாரணக் குடும்பம் இல்லை நடுத் தெருவில் வந்து நிற்பதற்கு. அவர்கள் பெரு முதலாளிகளாக வளர்ந்திருப்பவர்கள்.  முதலாளித்துவ ஆட்சி அமைப்பில் முதலாளிகளுக்கிடையில் போட்டி நிலவும், ஒருவரை ஒருவர் காலை வாரிவிட முயற்சிப்பார்கள். முடியாத போது கைகோர்த்துக் கொண்டு எல்லை பிரித்துக் கொள்ளையடிப்பார்கள்.

தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா?:

தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா? இது அண்ணா கால திமுக வினர் ஊழலுக்கு போட்ட சப்பைக் கட்டு. முன்பெல்லாம் புறங்கையை நக்கியதற்கே வீட்டிற்கு அனுப்பினார்கள். இன்று தேன் கூடு கட்டும் மரத்தையே பேர்த்து எடுத்துச் சென்றால் அடுத்து தேன் எடுக்கக் காத்துக் கிடக்கும் எதிர்கோஷ்டியினர் சும்மா விடுவார்களா? கூட்டணி அமைத்தார்கள் கூச்சல் போட்டார்கள் எதிரியை விரட்டியடித்து விட்டார்கள். எதிரிகள் ஓடினாலும் தேன் கூடு கட்டுவதற்கு ஒரு சில மரங்களை விட்டுவைத்துதான் சென்றுள்ளார்கள். ஒரு சில இடங்களில் மரங்கள் இல்லை என்றாலும் ஆற்றுப் படுகைகளிலும், பாலங்களிலும், சாலை ஓரங்களிலும், அலுவலக கட்டடங்களிலும் தேன் கூடு கட்டும் வாய்ப்புகள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன.  தேன் எடுக்க புதிய ஆட்கள் தெம்போடு, இளமைத் துடிப்போடு, கைகளில் தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வரத்தான் போகிறார்கள். சற்று வலுவான முகமூடியோடு வருவார்கள். எல்லாம் ஒரு எச்சரிக்கைக்குத்தான் தேனீக்கள் கொட்டிவிடக்கூடாதல்லவா!.

ஆற்றுப் படுகையில் கிடைக்கும் தேனுக்குத்தான் அதிக மவுசாம். பாலாறு, தென்பெண்ணை, காவிரி, தாமிரவருணி ஆற்றுப்படுகைகளில் ஏராளமாக தேன் கிடைக்கிறது. சென்னை மட்டுமல்ல. கேரளாவுக்கும் போகிறதாம். கடல் கடந்து மொரிசியசுக்கும் ஏற்றுமதியாகிறதாம் அதுவும் சென்னை துறைமுகம் வழியாகத்தான் போகிறதாம்.

ஆற்று மணற்கொள்ளை:

கட்டடத் தொழில் வளர வேண்டுமானால் மணல் தேவை. மணலை ஆற்றிலிருந்துதான் எடுத்தாக வேண்டும். மணல் கொள்ளையை தடுத்துவிட்டால் கட்டடத் தொழிலுக்கு மூடுவிழாதான் நடத்தவேண்டும். ஆறா? கட்டடமா? எதைப்பாதுகாப்பது? வீடு கட்டுபவருக்கு ஆற்றைப்பற்றி கவலையில்லை. வீடுதான் முக்கியம். விவசாயிக்கு வீடு கட்டுபவனைப்பற்றிக் கவலையில்லை. அவருக்கு நீர்தான் முக்கியம். இருவரையும் காக்க வேண்டுமானால் கட்டடம் கட்ட மணலுக்குப் பதிலாக மாற்று தொழில் நுட்பம் தேவை. அது இப்போதைக்கு யாரிடமும் இல்லை. இந்தச் சூழலில் ஆளும் கட்சியின் மணல் கொள்ளை பற்றி எதிர்கட்சிகள் பேசுவது 'அவன் மட்டும் சம்பாதிக்கிறானே' என்கிற ஆதங்கம் தானோயொழிய ஆற்றைப் பாதுகாக்க அல்ல.

வெற்றியைக் கொண்டாடிய அதிமுகவினரிடம் இது பற்றி பேசிய போது திரு திருவென முழித்தார்கள். வேறென்ன செய்வார்கள் அவர்கள்? அதற்கு மேல் அவர்களுக்கு சிந்திக்கத் தெரியாது. இதுதான் ஜெயா - விஜயகாந்த் போன்ற அரசியலவாதிகளின் பலம்.

இதுவரை மணல் கொள்ளை பற்றி கூப்பாடு போட்ட அதிமுக இனி மணல் கொள்ளையை தடுத்துவிடப் போகிறதா? திமுக காரன் கொள்ளையடிப்பதை வேண்டுமானால் தடுக்கலாம். மணல் கொள்ளையையே முழுவதுமாக தடுத்துவிட்டால் கட்டடத் தொழிலை இழுத்து மூடவேண்டியதுதான். இது நடக்கப் போவதில்லை. மணலுக்கு மாற்று காணாத வரை மணல் கொள்ளை தொடரத்தான் போகிறது. ஆற்று நீர் வளம் வற்றத்தான் போகிறது. மணல் கொள்ளை கைமாறுமேயொழிய அது ஒருக்காலும் நிற்கப் போவதில்லை.

ஆற்றுப் படுகைகளிலும், பாலங்களிலும், சாலை ஓரங்களிலும், அலுவலக கட்டடங்களிலும் தேன் எடுக்க வருவார்கள். முடிந்த மட்டும் குடிப்பார்கள். தேன் குடித்தவன் புரை ஏறித் தும்மும் போது தெறிக்கும் எச்சில் துளிகள் காற்றில் மிதந்து வந்து வாய் பிளந்து நிற்கும் மக்கள் நாவில் பட்டு இனிக்கும் போது எல்லாம் மறந்து போகும். என்ன இருந்தாலும் இலவசத்திற்கு மயங்காதோர் உண்டோ?

Monday, May 9, 2011

எது தொழில் தர்மம்?

அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையவர் எனக் கருதப்படுவதால் கனிமொழி மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்கு எடுத்த அரசியல் முயற்சிகள் பலனளிக்காததால் கடைசியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியிடம் தஞ்சம் புகுங்துவிட்டார் கனிமொழி.

குற்றச்சாட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவருமே தங்கள் வசதியைப் பொருத்து மிகச் சிறந்த வழக்கறிஞரை நாடுவது வாடிக்கையான ஒன்றுதான். குற்றம் சுமத்தப்பட்டதனாலேயே ஒருவர் குற்றவாளி என்று முன்கூட்டியே சொல்லமுடியாதுதான்.குற்றம் எதுவாக இருப்பினும்,குற்றம் சுமத்தப்பட்டவருக்கு முன்னிலையாவது நியாய அநியாயம் பற்றிக் கவலைப்படாத வழக்கறிஞர்களைப் பொருத்தவரை அது தொழில் தர்மம்தான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியலை ஏற்றுக் கொண்டுள்ள ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒரு வழக்கறிஞர் தனது கட்சி எதற்காகப் போராடுகிறதோ அதற்கு எதிராகச் செயல்பட்டால் அது கட்சிக்கு எதிரான நடவடிக்கையாகாதா?அதன்படி அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையவர்களைத் தண்டிக்க வேண்டும் என பாரதிய ஜனதாகட்சி போராடும் போது அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானி கனிமொழிக்காக முன்னிலையாவது கட்சியின் தர்மத்துக்கு எதிரானதாகாதா?

தொழில் தர்மப்படி நடந்து கொண்டால் இலட்சங்களும் கோடிகளும் கொட்டும். கட்சி தர்மப்படி நடந்து கொண்டால் சுண்டலுக்கே திண்டாட்டம் வந்துவிடும். ஆகையினால்தான் தொழில் தர்மம் என்ற போர்வையில் இவை நியாயப் படுத்தப்படுகின்றன. பாரதிய ஜனதாக்கட்சியின் இல.கணேசனிடம் கேட்டால் அது அவருடைய தொழில் தர்மம் என்று மழுப்புகிறார்.  "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" என்பார்களே, அதுபோல தொழில் தர்மத்தையும் பேசுகிறார்; ஊழலுக்கு எதிரான கட்சியின் கொள்கையையும் பேசுகிறார். கசாப்புக்காக வாதாடினாலும் இல.கணேசன் இப்படித்தான் பதில் அளிப்பாரோ! 'பாரத மாதாவையே' அம்மனமாக்கிவிட்டார்கள். பிறகென்ன தொழில் தர்மம் வேண்டிக்கிடக்கு?


வழக்கறிஞராகிவிட்டால் ஒருவருக்கு நியாய அநியாயங்களில் சொந்தக்கருத்து இருக்காதா? இருக்கக்கூடாதா? கண்டிப்பாக இருக்கும்; இருக்க வேண்டும். தனது வீட்டில் கொள்ளையடித்த ஒரு திருடனுக்கு ஒரு வழக்கறிஞர் வாதாட முன்வருவாரா? தனது மகனைக் கொலை செய்த ஒரு கொலைகாரனுக்கு ஒரு வழக்கறிஞர் வாதாட முன்வருவாரா? தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு காமுகனுக்கு ஒரு வழக்கறிஞர் வாதாட முன்வருவாதா? திருடனும், கொலைகாரனும், காமுகனும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழக்கறிஞரைத்தானே நாடுவான். அது அவனது தேவை. பணம் வந்தால் போதும் என நினைக்கின்ற வழக்கறிஞர் வேண்டுமானால் தொழி தர்மம் என்ற போர்வையில் இக்கயவர்களுக்கு வாதாடலாம். அப்படி ஒருவர் வாதாடினால் அது வேசித்தனம் இல்லையா?