Saturday, December 1, 2012

தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்!

பெற்றோர் சம்மதமின்றி திருமணம் கூடாது! - ராமதாஸ்
(தினமணி-30.11.2012)
தருமபுரி அருகே உள்ள நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பாக தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக ராமதாஸ் பேசியதும் நாம் சொல்ல நினைப்பதும்:
ராமதாஸ் சொன்னது
“தமிழகத்தில் ஜாதிய மோதல்களைத் தடுக்கவும், வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் ஆண், பெண் இருபாலருக்கும் 21 வயது வரை பெற்றோர் சம்மதமின்றி திருமணம் நடத்தக் கூடாது”
நாம் சொல்ல நினைப்பது
அப்படினால் ஆண் பெண் இருபாலருக்கும் வயது 21 க்கு மேல் ஆனபிறகு பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டால் சாதி மோதல்களும் வன்முறை நிகழ்வுகளும் நிகழாதா?
ராமதாஸ் சொன்னது
“ "ஈவ்-டீசிங்' தடுப்புக்குத் தமிழக காவல் துறையில் தலித் அல்லாத போலீஸாரைக் கொண்டு தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்”
நாம் சொல்ல நினைப்பது
பொது இடங்களில் தலித் பையன்களைத்தவிர பிறசாதிப் பையன்கள்  ‘ஈவ்-டீசிங்' செய்வதில்லையா? பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், கூட்ட நெரிசல் மிக்க ரயில்கள்-பேருந்துகளில் நடைபெறும் ‘ஈவ்-டீசிங்கை'த் தடுக்க உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டும் நெறிகளை  சமீபத்திய வழக்கு ஒன்றில் வகுத்துள்ளது அய்யாவுக்குத் தெரியுமா? எல்லா சாதிகளையும் சார்ந்த பையன்கள் செய்யும் இத்தகைய  ‘குலோபல்’ ‘ஈவ்-டீசிங்'கைத் தடுக்க எந்த சாதிப் போலீசைக் கொண்டு தனிப் பிரிவு ஏற்படுத்துவது?
ராமதாஸ் சொன்னது
“சமூக நல்லிணக்கத்துக்காகவும், ஒற்றுமைக்காகவும் 14 மாவட்டங்களில் மாநாடு நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும்தான். வாழ்நாளில் இதுவரை தலித்களுக்கு எதிராகப் பேசியதும் இல்லை. எழுதியதும் இல்லை”
நாம் சொல்ல நினைப்பது
அப்படியாவது முதல்வர் நாற்காலி தேறுமா என பார்த்தீர்கள். ஆனா பப்பு வேகலயே!
ராமதாஸ் சொன்னது
“தங்களது இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தவறான பாதைக்கு வழி நடத்திச் செல்லும் திருமாவளவன், பாமக மீதும் அதன் தலைவர்கள் மீது குறை கூறி பேசுகிறார். இத்தகைய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது”
நாம் சொல்ல நினைப்பது
காதலித்தால் வெட்டு! குத்து! தீ வைப்பு! வன்முறை!.... ஓ!.... இதெல்லாம்தான் நீங்கள் வன்னிய இளைஞர்களை வழி நடத்திச் செல்லும் சரியான பாதையோ!
 ராமதாஸ் சொன்னது
“நாயக்கன்கொட்டாய் வன்முறைக்கு காதல் திருமணமோ, பெண்ணின் தந்தை தற்கொலையோ, பாமகவோ, வன்னியர் சங்கமோ காரணமில்லை.
அந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பெண்களை கேலி செய்யும் பழக்கமும், இளம்பெண்கள் மீதான தொடர் அத்துமீறல்களும்தான் இத்தகைய வன்முறைக்குக் காரணமாக அமைந்துவிட்டது”
நாம் சொல்ல நினைப்பது
மைனர் கல்யாணம்’ என்றீர்கள்! ‘செட்டப் கல்யாணம்’ என்றீர்கள்! இப்போது "ஈவ்-டீசிங்' என்கிறீர்கள்! இன்னும் எத்தனை காரணங்கள் கைவசம் வைத்திருக்கிறீர்களோ!
ராமதாஸ் சொன்னது
“காதல் திருமணம், கலப்புத் திருமணங்களால் தமிழ் தேசியம் மலரும் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை”
நாம் சொல்ல நினைப்பது
இப்போதைக்கு சாத்தியமில்லை என்றால்  பிறகு  எப்போதாவது  கலப்புத் திருமணங்களால் தமிழ் தேசியம் மலரும் என்ற நினைப்பு அய்யாகிட்ட ஒட்டிக்கிட்டு இருக்கு போல!
ராமதாஸ் சொன்னது
“தலித் இளைஞர்கள் படித்து பட்டம் பெறவும், வேலை தேடவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் திருமாவளவன் அறிவுறுத்த வேண்டும்”
நாம் சொல்ல நினைப்பது
தலித் இளைஞர்கள் படித்து பட்டம் பெறவும், வேலை தேடவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் திருமாவளவன் அறிவுறுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். கிட்டத்தட்ட தலித் இளைஞர்களைப் போல பெரும்பான்மையாக உள்ள வன்னிய இளைஞர்கள் படித்து பட்டம் பெறவும், வேலை தேடவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் நீங்க எப்ப அறிவுறுத்தப் போறீங்க?
ராமதாஸ் சொன்னது
“தமிழகத்தில் தலித் அல்லாத சமூகத்தினர் மீது வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதனால்தான், இந்தச் சட்டத்துக்கு எதிராகவும், காதல் நாடக திருமணங்களுக்கு எதிராகவும் 81 சதம் பேர் ஓரணியில் திரண்டுள்ளனர்”
நாம் சொல்ல நினைப்பது
அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இதற பிற்படுத்தப்பட்டோர் OBC என்ற போர்வையில் ஏற்கனவே ஓரணியில் திரண்டுள்ளதைச் சொல்கிறாரோ! 


ஊரான்.



9 comments:

 1. http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

   மேற்கண்ட வலைப்பூவில் தருமபுரி நாயக்கன் கொட்டாய் குறித்து விரிவானதொரு பதிவை எழுதியுள்ளார். அப்பதிவிற்கு நான் கொடுத்த பின்னூட்டதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

   ----------------------

   விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைப்பு நடத்துகின்றனர் என்பது தமிழகமெங்கும் தெரிந்த ஒன்றுதான். மற்ற கட்சிக்காரர்களும் இதையேதான் செய்து வருகின்றனர். இவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை தனிமைப்படுத்திப் போராடும் துணிச்சல் எந்தக்கட்சிக்கும் கிடையாது. எந்தச் சாதிக்கும் கிடையாது. ஓட்டுச்சீட்டு அரசியலின் தன்மையும் சாதிய பிழைப்புவாதிகளின் தன்மையும் ஒன்றிப்போவதால் பாதிக்கப்படுவது எல்லா சாதிகளிலும் உள்ள அப்பாவி மக்கள்தான். இங்கே தலித் பிழைப்புவாதிகளை மட்டும் சொல்லியிருப்பது ஒருதலைபட்சமானது.

   திட்டமிட்டு காதலிப்பது, பிறகு பணம் கறப்பது - நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல இது ஒரு தொடர் நிகழ்வாக நடக்கிறது என்றால் - அங்குள்ள காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றால்- இதை வெளி உலகுக்குக் கொண்டுவர அப்பகுதியில் உள்ள பிற சாதித்தலைவர்களையும் பாமக உள்ளிட்ட கட்சிகளையும் தடுத்தது எது? இவர்களெல்லாம் ஒடுக்கப்பட்டப் பிரிவினரா? பிற மாவட்டங்களில்-தமிழகத்தின் பிற பகுதிகளில் இக்கட்சிக்காரர்களோ-சாதித்தலைவர்களோ இல்லையா? ஏன் எடுத்துச் செல்லவில்லை? அவ்வாறு எடுத்துச் சென்றிருந்தால் இங்கே நீங்கள் குறிப்பிடும் பல்வேறு சம்பவங்களின் உண்மை நிலை தெரிந்திருக்கும்.

   இந்தக் கலியுகத்திலும் உயர் சாதிப் பெண்ணொருத்தி தலித் இளைஞனின் வலையில் தன்னையும் அறியாமல் வீழ்கிறாள் என்பது நகைப்புக்குரியதே! ஒருவன் திட்டமிட்டுக் காதலிக்கிறான் அதுவும் தாழ்த்தப்பட்டவன் என்பதுகூட தெரியாத அப்பாவிகளாகவா பட்டம் படிக்கும் பெண்கள் இருக்கிறார்கள்? நகரம் என்றால்கூட சாதி தெரியாது எனலாம். நாயக்கன்கொட்டாய் போன்ற கிராமங்களில் சாதி தெரியாமலா காதலிக்கிறார்கள்? இயல்பாக எழும் காதலையும்கூட திட்டமிட்ட காதலாக சித்தரிக்கிற போக்கிலேதான் இங்கே சம்பவங்கள் தொகுக்கபபட்டிருக்கின்றன.

   ஒரு குறிப்பிட்ட சாரார் (தலித் அல்லாதவர்களில் ஒரு சிலர்) குறிப்பிட்ட மற்றொரு சாராரால் (தலித் பிரிவில் உள்ள ஒரு சிலரால்) பாதிக்கப்படும் போது அதற்குப் பழிவாங்கும் முகமாக சம்பவங்களுக்கு தொடர்பில்லாதவர்களையும் தாக்குவது வன்கொடுமை இல்லையா? ஒருவன் செய்துள்ளது தவறே என்று எடுத்துக் கொண்டாலும் அவனை தாக்குவததற்கான அதிகாரத்தை மற்றொருவனுக்கு கொடுத்தது யார்? அவ்வாறு தாக்குவதற்கான அதிகாரத்தை தானே எடுத்துக்கொள்வது இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் பொருந்துமா? இல்லை எல்லா பிரச்சனைகளுக்கும் பொருந்துமா?

   ஒரு பக்கத்து ‘நியாயத்தை’ மட்டுமே பட்டியலிட்டுவிட்டு மறுபக்கத்தின் பாதிப்பை மிகச்சாதாரண ஒன்றாக சொல்லியிருப்பதன் மூலம் அப்பாவி தலித்துகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்த முயற்சித்திருக்கிறீர்கள்.

   Delete
  2. தாக்குதலை நியாயம் என்று சொல்லவில்லை. அவர்கள் கிராமத்து மக்கள், நீண்ட காலம் பொருத்து பார்த்து, ஆவேசப்பட்டு விட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் எல்லா சாதியிலும் உள்ளனர்.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. நீண்டகாலம் ஏன் பொருத்திருக்க வேண்டும்? குறிப்பான தவறுகள் நடக்கும் போது அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதுதானே சரியானது. அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் நியாயத்துக்காக தலித்துகள் உட்பட அனைத்து சாதி மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதே எனது கேள்வி?

   காதல் திருமணங்கள் சகல சாதிகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. முதலியார் பையன் ஐயர் பெண்ணைக் காதலிக்கலாம் வன்னியர் பையன் வெள்ளாளப் பெண்ணைக் காதலிக்கலாம். கள்ளர் பையன் பிள்ளைமார் பெண்ணைக் காதலிக்கலாம் தேவர் பையன் நாயுடு பெண்ணைக் காதலிக்கலாம். இங்கே எல்லாம் காதலுக்கு எதிராக அனைத்து சாதிகளும் ஒன்றிணைவதில்லை. ஆனால் தலித் பையன் வன்னியப் பெண்ணையோ அல்லது பிற சாதிப் பெண்களையோ காதலிக்கக்கூடாது. அதுதான் இங்கே பிரச்சனை. அதற்காகத்தான் தாக்குதல். அதற்காகத்தான் அனைத்து சாதிகளும் ஒன்றிணைகின்றன. இது அப்பட்டமான தீண்டாமை என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

   இதை எல்லாம் மூடிமறைத்துவிட்டு "ஆவேசப்பட்டு விட்டார்கள்" என்று சொல்வதன் மூலம் தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்கத்தான் முயற்சிக்கிறீர்கள்.

   Delete
 2. ஜாதி வெறி முற்றி காதலே கூடாது என்கின்ற நிலைக்கு வந்திட்டாங்க.

  ReplyDelete
  Replies
  1. பிழைப்புவாதிகளின் ஒரே புகலிடம் ஜாதிதானே!

   Delete
 3. நாயக்கன்கொட்டாயில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று (03.12.2012) சென்னையில் வி.சி.க-CPI-CPM சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவனோ-நல்லக்கண்ணுவோ-ராமகிருஷ்ணனோ, சாதிக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வன்னியர்கள்தான் என்று சொல்லக்கூட திராணி இன்றி வன்முறையாளர்கள் என பொத்தாம் பொதுவாக பேசி உள்ளனர். இவர்களின் பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் தோலுரிப்பதற்கு இது ஒன்று போதுமே.

  ReplyDelete
 4. //இந்தக் கலியுகத்திலும் உயர் சாதிப் பெண்ணொருத்தி தலித் இளைஞனின் வலையில் தன்னையும் அறியாமல் வீழ்கிறாள் என்பது நகைப்புக்குரியதே!//
  சரியாக சொன்னீர்கள். இயற்கையான காதலை கூட ஜாதி வெறி வேறுவிதமாக பிரசாரம் செய்கிறது.

  ReplyDelete