Wednesday, September 5, 2012

சிவகாசி: குட்டி ஜப்பானா? இல்லை ஹிரோஷிமா கொலைக்களமா?

மாலை 5 மணிக்கு வழக்கம் போல வீட்டிற்கு வந்தேன். தொலைக்காட்சி பார்க்கலாம் என ஸ்விட்ச்ஆன் செய்த போது சிஎன்என்-ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிதான் வந்தது. அதில் சிவகாசி பட்டாசு ஆலை விபத்து பற்றி செய்தி ஓடிக்கொண்டிருந்தது. உடனடியாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சேனலை மாற்றினேன். அதில் வெளியான காட்சிகளைக் கண்டு நிலைகுலைந்து போனேன்.

கட்டடங்கள் கொளுந்துவிட்டு எறிகின்றன; இடிந்து சிதறி நொறுங்கி தரைமட்டமாகிக் கிடக்கின்றன. இடிபாடுகளிலும் அருகாமை முட்புதர்களிலும் பிய்த்து எறியப்பட்ட மனித உடல்களும் உறுப்புகளும் சிதறிக்கிடக்கின்றன. தீயில் கருகி உயிருக்குப் போராடும் ஒரு தொழிலாளியை நான்கு பேர் சேர்ந்து அவரது கைகளையும் கால்களையும் மட்டும் பிடித்து தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். உடல் வெந்த நிலையில் ஒரு தொழிலாளியை தூக்கிச் செல்ல முடியாத நிலையில்  மண் தரையில் போடப்பட்டுள்ள ஒரு அட்டையின் மேல் உட்கார வைத்துள்ளார்கள். நான் பிழைப்பேனா என்கிற அவரது ஏக்கத்தை பார்க்கும் போது என் கண்கள் குளமாகின. ஒரு தொழிலாளியை இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து வண்டியிலிருந்து அவர் விழாமல் இருக்க அவரை மற்றொருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு மெல்லச் செல்கின்றனர். ஒரு போலீஸ் வேனில் காயமடைந்தவரை ஏற்றிச் செல்கின்றனர். இப்படி நெஞ்சை உறுக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.

எங்கோ காட்டுக்குள்ளிருந்து வெளியே வருவதைப்போலத்தான் இருந்தது அந்தப் பகுதி. ஒற்றறையடிப்பாதையும் கரடுமுரடான மண்சாலைகளுமே அங்கு தென்பட்டன. தீயணைப்பு வண்டி ஒன்றை பார்க்க முடிந்தது. மற்றபடி ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்ததா எனத் தெரியவில்லை.

இந்த பட்டாசு ஆலையில் மொத்தம் 42 அறைகள் உண்டு. நான்கு பேர் மட்டுமே ஒரு அறையில் வேலை செய்ய வேண்டும். 3 கிலோவுக்கு மேல் ஒரு அறையில் வெடி மருந்துகளை வைத்திருக்கக்கூடாது. ஆனால் விபத்து நடந்த அன்று ஒரு அறையில் 7 பேரும் சுமார் 400 லிருந்து 500 கிலோ வரையிலான  வெடிமருந்துகளும் வைக்கப்பட்டிருந்தன. இன்று 260 பேர் வேலை செய்துகொண்டிருதனர். 42 அறைகளில் 40 அறைகள் தரைமட்டமாகியுள்ளன. அதனால்தான் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  
தமிழ் நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகில் முதலிப்பட்டி என்ற ஊரில் இன்று (0பிற்பகல் 12.15 மணிக்கு ஓம்சக்தி ஃபயர் ஒர்க்ஸ் என்கிற பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 54 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 50 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இதே இடத்தில் சென்ற ஆண்டு வேறு ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலர் பலியாகியுள்ளனர். 2006 க்குப் பிறகு சிவகாசி பகுதியில் ஏற்பட்ட விபத்துகளில் 10 லிருந்து 12 பேர் வரை பலியாகி உள்ளனர். கடந்த 34 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் விபத்துகள் நடந்துள்ளதாக ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி நவநீதகிருஷ்ணன் கூறுகிறார். ஆண்டு தோறும் விபத்துகள் நடந்தாலும் இதுவே மிகக் கோரமான விபத்து.
ஒரு தொடர் நிகழ்வாக இத்தகைய விபத்துகள் நடந்த போதும் இவைககைளை கட்டுப் படுத்த யாருமே முன்வரவில்லையே ஏன்? தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் 2 இலட்சம் பேர் நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். 5 இலட்சம் பேர் மறைமுகமாக  - விநியோகம் விற்பனை உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகையதொரு பெரிய தொழிலை கண்காணிப்பதற்காக ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் ஒரே ஒரு வட்டாட்சியர் மட்டும்தான் இருக்கிறாராம் அவரக்கு கீழே ஒரு தனி உதவியாளர் ஒரு தட்டச்சர் ஒரு வாகன ஓட்டுநர்.  இந்த நான்கு பேர் என்ன செய்வார்கள்? நேர்மையாளர்களாக இருந்தால்கூட – அவ்வாறு இருக்கமாட்டார்கள் என்பதே எதார்த்தம் - பட்டாசு ஆலைகளை அனைத்தையும் இரவு பகலாக ஆய்வு செய்தாலும் எதையும் கட்டுப்படுத்திவிட முடியாது.

வெடிமருந்துகளை கட்டுப் படுத்தவும் கையாளவும் ஆயிரம் சட்டங்கள் இருந்தாலும் அவைகளை மயிரளவுக்குக்கூட மதிப்பதில்லை முதலாளிகள். முதலாளிகளின் ஒரே நோக்கம் இலாபம் மட்டுமே. இந்த இலாபத்தில் ஒரு பகுதியை அதிகாரிகளுக்கு வெட்டிவிட்டால் போதும் – ஆலையின் உற்பத்தி தடையின்றி நடக்கும். சீனாவிலிருந்து பட்டாசுகள் அதிகளவு இறக்குமதியாவதால் போட்டி கடுமையாக உள்ளதாம். அதனால் முதலாளிகள் சீனாவுக்கே சென்று அங்குள்ள தொழில் நுட்பத்தை அறைகுறையாக கற்றுக் கொண்டு புதிய ரக பட்டாசுகளை அறிமுகம் செய்ய இங்கே  சோதனையில் ஈடுபடுகிறார்களாம். இதுவும் எதிர்பாராத விபத்து நடப்பதற்கு காரணமாக அமைகின்றன.

மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் ஆலைகள் அமைக்கக்கூடாது என விதி இருப்பதால் சுமார் 7 கி.மீ தள்ளி அலைகளை அமைக்கிறார்களாம். அவ்வாறு அமைக்கப்படும் அலைகளுக்கு சாலை வசதிகள் இருப்பதில்லை. மண்சாலை மட்டுமே இருக்கும். இச்சாலைகளை வண்டிப்பாதை என்றுதான் அழைப்பது வழக்கம். அதாவது மாண்டு வண்டிகள் மட்டுமே செல்லும் சாலைகள். இச்சாலைகளில் சைக்கிளில்கூட வேகமாகச் செல்ல முடியாது.இருந்தாலும்கூட இந்த ஆலைகளுக்கும் உரிமம் வழங்கப்படுகிறது.

தொழிற்சாலைக்கு தோல் செருப்புகூட அணிந்து செல்லக்கூடாது. தோல் செருப்பு தரையில் உராயும் போது ஏற்படும் சிறு தீப்பொறிகூட மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தும் இலாபம் மட்டுமே நோக்கம் என்பதால் பாதுகாப்பு விதிகள் எதையும் முதலாளிகள் மதிப்பதில்லை; பாதுகாப்பு வசதிகள் எதையும் செய்வதில்லை. ஆலைகள் இருக்கும் இடங்களில் தண்ணீர் வசதி துளியும் கிடையாது. தொழிலாளிகள் வாட்டர் பாட்டிலில் எடுத்துச் செல்லும் ஒரு லிட்டர் தண்ணீர்தான் அன்றைக்கு முழுக்க அவர்களுக்கு தாகம் தீர்க்க வேண்டும். சிறு நீர் கழிக்க மலம் கழிக்கவென அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. ஓய்வெடுக்க ஓய்வறைகளும் கிடையாது. கிட்டத்தட்ட அடிமைச்சமூகத்தில் நிலவிய ஒரு சூழல்தான் இங்கே நிலவுகிறது. தொழிலாளார்கள் கொத்தடிமைகளைப் போல வேலை செய்கிறார்கள்.

எந்நேரத்திலும் மரணம் நிகழலாம் என்று தெரிந்தேதான் வேறு வழியின்றி இத்தகைய சூழலில் அவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் காரணம் அப்பகுதியல் நிலவும் வேலையின்மை. வானம் பார்த்த பூமி என்பதால் மழை பெய்தாலே பெரிதாக எதுவும் விளைந்துவிடாது. மழை பொய்த்துப் போனால் -  அடிக்கடி பொய்த்துப் போவதுதானே நாம் காணும் காட்சி – வேறு எங்கே செல்வார்கள் அப்பகுதி மக்கள்? வயிற்றைக் கழுவ வேண்டுமே! வேறென்ன செய்ய?

இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. அவசரத்திற்கு சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கு எதுவும் செயல்படுவதில்லை. அதனால்தான் 80 கி.மீ தொலைவில் உள்ள மதுரை இராஜாஜி அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க சிவகாசி அரசு மருத்துவ மனையில் ஏசி அறை அமைக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து நவீன கருவிகள் வாங்கி நிறுவப்பட்டன. ஆனால் மருத்துவ மனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவை எதுவுமே இன்று செயல்படுவதில்லை. மருத்துவ மனையை முறைாயக பராமறித்தால் பலி எண்ணிக்கையையாவது குறைக்கலாம்.

இந்த விபத்துகளுக்குக் காரணம் யார்? யாரைக் குற்றவாளியாக்குவது? பாதுகாப்பு விதிகளைப் பற்றி ஏதுமறியாத தொழிலாளிகளா? அல்லது பாதுகாப்பு விதிகளை காற்றிலே பறக்கவிட்டு இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிகளா? அல்லது முதலாளிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு தங்கள் பைகளை மட்டுமே நிரப்பிக் கொள்ளும் அரசு அதிகாரிகளா? அல்லது ஆபத்தில்கூட உதவாத மருத்துவர்களா? அல்லது இவை எல்லாம் தெரிந்த பிறகும் அலட்சியமாய் நடந்து கொள்ளும் அரசாங்கமா?

இறந்தவர்களுக்கு ஒரு இலட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு 25000 ரூயாயும் இலேசான காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 10000 பணமும் நிவாரணமாகக் கொடுத்துவிட்டால் பரிகாரமாகிவிடுமா? இது விபத்தல்ல. ஆட்சியாளர்கள் – அதிகாரிகள் - முதலாளிகளின் அலட்சியத்தால் நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை. இவர்களை முச்சந்தியிலே நிற்க வைத்து தண்டிக்கும் நாள் எந்நாளோ - அந்நாளே அப்பாவி தொழிலாளிகளை மரணப்பிடியிலிருந்து மீட்கும் நாள்!

நன்றி: புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்திகளை பகிர்ந்து கொண்ட திரு.நவநீதகிருஷ்ணன்,  வருவாய் ஆய்வாளர் (ஓய்வு) மற்றும் துரித கதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட திரு.பாண்டியன்.