Sunday, June 19, 2016

அவுத்து வுடறதுக்கு அளவே இல்லையா?

"தமிழ், சமஸ்கிருதம் இவ்விரு மொழிகளும் சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்தவையாகும்." - இது இல.க மலர்ந்த முத்து.

மொழிய பத்தின இவங்க காமெடி தாங்க முடியல!

இவங்க சிலாகிக்கும் சமஸ்கிருதத்தின் இன்றைய நிலை அறிய......கல்யாணம் முதல் கருமாதி வரை விடாது துரத்தும் சமஸ்கிருதம்!

Saturday, March 26, 2016

“பாரத் மாதா கீ ஜே!” சொல்லலாமா? கூடாதா?

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் ‘பாரத் மாதா கீ ஜே!’ எனச் சொல்ல மறுத்ததற்காக ஆல் இண்டியா மஜ்லிஸ்-ஏ-இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான் என்னும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

‘பாரத் மாதா கீ ஜே!’யில்தான் தேசப்பற்று இருக்கிறதாம். ‘பாரத் மாதா கீ ஜே’ என ஒருவன் சொல்லிவிட்டால் அவன் தேசப்பற்று உள்ளவனாம். சொல்லாதவனெல்லாம் தேசத்துரோகியாம். அதனாலே, `இந்தியாவில், ‘பாரத் மாதா கீ ஜே’ என்று சொல்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம்’’ என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொல்கிறார்.

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் தற்போது "நாங்கள் ஜெய் ஹிந்த் அல்லது பாரத் மாதா கீ ஜே!” என்ற கோஷத்தை எழுப்புவோம்' என்று கூறத் தொடங்கிவிட்டார்களாம். அதனாலே தேசியம் குறித்த விவாதத்தில் பாஜகவுக்கு சித்தாந்த ரீதியிலான வெற்றி கிடைத்துவிட்டதாம். இப்படி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவிக்கிறார்.

ஆனால் தேசியம் குறித்தும் ‘பாரத் மாதா கீ ஜே!’ குறித்தும் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

“இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மதித்து நடப்பதும், இந்திய நாட்டிற்காக உழைப்பதும், நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதும்தான் தேசப்பற்று” என்கிறார் ஒரு தொழில் முனைவோர்.

“ஒருவன் தான் அணிந்திருக்கும் டி-சட்டையில் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என எனக் குத்திக் கொள்வதில் இல்லை தேசப்பற்று. மாறாக சாதி-மத-இன வேறுபாடுகளை மறந்து இந்தியர்கள் அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதிலும், ஊழல் மற்றும் மதவாதத்திற்கு எதிராக குரல்கொடுப்பதிலும் இருக்கிறது தேசப்பற்று” என்கிறார்  ஒரு டாஸ்மாக் ஊழியர்.

“கடல்தான் எனக்கு சோறு போடுகிறது; உடை தருகிறது; எனது குழந்தைகளுக்கு படிப்புத் தருகிறது. எனது குடும்பத்தையே வழி நடத்துகிறது; எனவே கடல்தான் எனக்குத் தாய். கடல் தாய்க்குப் பிறகுதான் ‘பாரத மாதா’, சாமிகள், கோவில்கள் இன்ன பிற.,இன்ன பிறவெல்லாம். என்னைப் பொருத்தவரை கடல்தான் தேசத்தைவிடப் பெரியது” என்கிறார் ஒரு மீனவர்.

“தெருக்களையும், கழிவறைகளையும் சுத்தம் செய்யும் ஒரு துப்புறவுத் தொழிலாளிக்கு, தன்மானத்திற்காகப் போராடும் ஒரு தலித்துக்கு, ”‘பாரத் மாதா கீ ஜே!’” என்பது பொருளற்ற ஒன்று. பல நூற்றாண்டுகளாக ஆதிக்கச் சாதியினரின் வன்கொடுமைகளுக்கு ஆட்பட்டுவரும் தலித்துகளுக்கு ‘பாரத் மாதா கீ ஜே!’ என்கிற முழக்கம் ஒரு இழிவான முழக்கமாகும். தலித்துகள் மீது அநீதியையும், தீண்டாமையையும் கடைபிடிக்கும் சாதி அமைப்பு முறை தொடர வேண்டும் என விரும்புகின்றவர்கள்தான் ‘பாரத மாதா’ பற்றி பேசுகின்றனர். என்னைப் பொருத்தவரை தேசப்பற்று என்பது இந்த நாட்டில் வாழ்பவர்களைப் பற்றி பேசுவதும், சமத்துவம், சமூக நீதி, சுதந்திரம் மற்றும் ஊழலற்ற தம்மை பற்றி பேசுவதுமாகும். இடை நீக்கம் செய்யப்பட்ட MLA வாரிஸ் பதான் மட்டுமல்ல நான்கூட ‘பாரத் மாதா கீ ஜே!’ சொல்ல மாட்டேன் என்கிறார் ஒரு துப்புறவுத் தொழிலாளி.


செய்தி ஆதாரம்: THE HINDU 27.03.2016. நன்றி!

Sunday, February 28, 2016

ரூ.8 கோடியை விழுங்கிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி!

மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியைச் சுற்றியுள்ள பருத்தி விவசாயிகள்  400 பேர் தாங்கள் உற்பத்தி செய்த 20 ஆயிரம் குவிண்டால் பருத்தியை 2014 ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணா ஆலையின் நிர்வாகி சுனில் பிரபாகர் தலாதுலேவுக்கு விற்பனை செய்துள்ளனர். அதற்கான தொகை ரூ.8 கோடியை சுனில் பிரபாகர் தலாதுலே இதுவரை விவசாயிகளுக்குத் தரவில்லை. சுனில் பிரபாகர் தலாதுலே மீது வார்தா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அந்த நபரும் கைது செய்யப்பட்டார். ஆனால் பணம் மட்டும் இதுவரை விவசாயிகளுக்குப் போய்ச் சேரவில்லை. 

இதில் சராசரியாக ஒரு விவசாயிக்குச் சேர வேண்டிய தொகை ரூ2 லட்சம். இது ஒரு குடும்பத்தின் ஓராண்டு உழைப்பு மட்டுமல்ல அவர்கள் வாங்கிய கடனும் இதில் அடங்கும்.

உழைப்பின் பலன் தங்களுக்கு கிட்டவில்லை; அதனை ஒருவன் அபகரித்துவிட்டால் அவர்கள் எப்படி வாழ முடியும்? இது குறித்து மாநில - மத்திய அமைச்சர்களிடம் முறையிட்டும் பலன் ஏதும் இல்லை. கடைசியில் நாகபுரியிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் முன்பு இந்த 400 விவசாயிகளும் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகளின் போராட்டக் குழுத் தலைரவர் ராம் நாராயண் பாடக் அறிவித்துள்ளார்.

ரூ.8 கோடியை அபகரித்தவன் அந்த ஆலையின் நிர்வாகி மட்டுமல்ல. அவன் ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி. அதனால்தான் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் முன்பு  போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

விவசாயிகளோடு விவசாயிகளாக இவர்களும் தற்கொலை செய்து கொள்ளாமல் சுனில் பிரபாகர் தலாதுலே ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகியாக இருந்த போதும்,  மகாராஷ்டிரா மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க ஆட்சிகள் நடந்தபோதும் சுனில் பிரபாகர் தலாதுலே வுக்கு எதிரான விவசாயிகளின் இந்தப் போராட்ட நடவடிக்கை பாராட்டக் கூடியது.

இப்பொழுது புரிகிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் விவசாயிகளின் தற்கொலைகள் ஏன் அதிகமாக நடக்கிறது என்று! ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகமும் அங்கேதானே இருக்கிறது!

ஆர்எஸ்எஸ் இருக்கும் வரை  சுனில் பிரபாகர் தலாதுலேக்கள் இருப்பார்கள்.  சுனில் பிரபாகர் தலாதுலேக்கள் இருக்கும் வரை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.

(செய்தி ஆதாரம்: தினமணி 28.02.2016)

தொடர்புடைய பதிவுகள்:

பிகார்: ‘பிலிக்கா பொலோனிக்கா’வை என்ன செய்ய?

Monday, February 8, 2016

சீக்காளியும் லேகியக்காரனும்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. திராவிடம் - தமிழியம் - தேசியம் - சாதியம் என வித விதமான லேகியங்களை கிண்டத் தொடங்கிவிட்டனர். 

இலையில் மை தடவி மயக்கும் காரிகை ஒருத்தி 'என் பச்சிலை லேகியத்துக்கு ஈடு இணை ஏது?' என எக்காளத்துடன் இருமாந்து இருக்கிறாள். இவள் மென்று துப்பும் எச்சத்தைக் கவ்வ சிலர் நாய் போல காத்துக் கிடக்கின்றனர்.

ஏற்கனவே லேகியத்தைக் கிண்டி  கண்ணாடிக்  குடுவையில் போட்டு வெயிலில் வைத்து 'லேகியம் கைகூடுமா!' என சூரியனையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் ஒரு இளம் காளை.

இவர்கள் இருவரும் மொத்த வியாபாரிகள் என்பதால் தனியாக கடைவிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். 

அவர்களில்...

மஞ்சள் சட்டைக்காரன் தனியாக 'மாங்கனி' லேகியம் கிண்ட முயற்சிக்கிறான். ஆளாளுக்கு கூவினால் கூட்டம் கலைந்து விடுமோ என இவன் எண்ணினானோ என்னவோ ஒருவனை மட்டுமே லேகியம் விற்க நியமித்துள்ளான். இவன் கிண்டும் லேகியத்தை இவன் வீட்டில் உள்ளவனே வாங்குவானா என்பதுகூட தெரியாமலேயே இவன் கடைவிரித்திருக்கிறான் பாவம்!

மோடி மஸ்தான் வித்தை எல்லாம் இங்கே எடுபடாது என உணர்ந்த காவி வேட்டிக்காரன், 'கேனவாயன் எவனாவது கிடைக்கமாட்டானா!' என அலைந்து கொண்டிருக்கிறான். எவனும் கிடைக்கவில்லை எனில் இவன் முதலுக்கு மோசம்தான். 

நீலச்சட்டையும்,  சிவப்புச் சட்டைகளும், பட்டா பட்டியோடு சேர்ந்து ஊர் ஊராய் லேகியம் விற்கத் தொடங்கி விட்டனர். சீக்காளிகள் பெருத்த நாடல்லவா இது! லேகியம் என்றால் கூட்டம் கூடத்தானே செய்யும். ஆனால் வேடிக்கை பார்ப்பவன் எல்லாம் லேகியம் வாங்குவானா என்பதைக்கூட அறியாமலேயே இப்பொழுதே கல்லாப் பெட்டி நிறைந்து விட்டதாக எண்ணி குதூகலிக்கத் தொடங்கிட்டனர் இவர்கள்.

போன முறை காரிகையோடு சேர்ந்து லேகியம் விற்றதில் கேப்டனுக்கு கொஞ்சம் சில்லரை சேர்ந்தது. சில சேல்ஸ்மேன்கள் கல்லாப் பெட்டியை லவட்டிக் கொண்டு இவரை விட்டு ஆத்தா வீட்டுக்கே ஓட்டம் பிடித்ததால் இம்முறை கடைவிரிப்பது பற்றி சேல்மேன்களோடு இன்னமும் ஆலோசித்து வருகிறார். 

அகில இந்திய அளவில் லேகியம் விற்பவர்களுக்கு இங்கே காலனாகூட பேறாது என்பதால் ஏதாவது ஒரு கடையில் லேகியம் மடிக்கவாவது வாய்ப்பு கிடைக்குமா என 'கை' ஏந்தி நிற்கின்றனர்.

முதல் போட வாய்ப்பில்லாத பலர் சில்லரை விற்பனைக்காக முண்டியடிக்கின்றனர். 

லேகியங்களுக்கான லேபில்கள் பல வண்ணங்களில் தயாராகிவிட்டன. 

சந்துக்கு சந்து - தெருவுக்கு தெரு - ஊருக்கு ஊரு என முச்சந்திகளில் லேகியக்காரர்கள் கடைவிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த லேகியக் கடைகள் திறந்திருக்கும் என்பதால் முச்சந்திகளில் கூட்டம் அலைமோதுகிறது. 

ஆசை காட்டியும், அச்சமூட்டியும் எப்படியாவது லேகியத்தை நம் தலையில் தலையில் கட்டுவதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். எச்சரிக்கை!

சீக்காளிகள் இருக்கும் வரை லேகியக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்.


தொடர்படைய பதிவுகள்:

டம்மி பீசு!
தேர்தல் களம்-4: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

Wednesday, February 3, 2016

தலை தெறிக்க ஓட்டம் பிடித்த ராகு!

இனிய மாலைப் பொழுதை நோக்கி நன்பகல் மெல்ல நகர நகர, சாமியானா பந்தலில் இருந்த இருக்கைகள் நிரம்பத் தொடங்கின. இருக்கைகள் போதாது என்பதை உணர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் மேலும் இருக்கைகளை வரவழைக்க சாமியானாப் பந்தலைத் தாண்டியும் இருக்கைகள் விரிந்தன. அங்கே கூடியிருந்தோர் ஐநூறுக்கும் மேலே. சலசலப்பில்லை: ஆர்க்கெஸ்ட்ரா அலம்பல் இல்லை. அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் குசலம் விசாரித்துக் கொள்ள இடையூறில்லை.

சாமியானா பந்தலின் ஒரு முனையில் எளிய மேடை. நிகழவிருக்கும் விழா குறித்து 3x4 அடி அளவில் ஒரு சிறிய விளம்பரம், பார்வையாளர்களோடு உறவாட ஒலிபெருக்கி  என எல்லாம் கச்சிதமாய் அமைந்திருந்தன.

பிற்பகல் மூன்று மணிக்கு விழாத்தலைவர் மேடை ஏறினார். விழா நாயகர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வாழ்த்துரை – சிறப்புரை வழங்கவிருக்கும் பேச்சாளர்களையும் மேடைக்கு அழைத்தார்.

முகப்பூச்சும், நெற்றிப் பொட்டும் அவளை ஒட்டவில்லை. சீவி சிங்காரித்து மல்லி-முல்லையால் அவள் தன்னை மூடிக்கொள்ளவில்லை. தோடும் தொங்கட்டானும் அவளைத் தொடவில்லை. ஒட்டியானமும் அட்டியானமும் அவளை அண்டவில்லை. கை வளையல் - கொலுசுகள் எப்போதோ ஓரங்கட்டப்பட்டதால் அவைகளையும் இவளிடம் பார்க்க முடியவில்லை. எளிய உடை, கழுத்துகூட காலியாகத்தான் இருந்தது. மாமிகளும்-தோழிகளும் மேக்கப்பில் மணமகளையே விஞ்சும் காலமிது. ஆனால் இங்கே அலங்கோலம் ஏதுமின்றி அவள் அவளாகவே இருந்ததால் அவள்தான மணமகள் என அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

இதுவரை உணவுப் பந்தலில் உணவு பரிமாறிய கையோடு எடுப்பான நடையுடன் மேடை ஏறினாள் மணப் பெண். அவளோடு மணமகனும் இயல்பான உடையோடு மேடை ஏற, எங்கும் ஒரே கரவொலி. வாழ்க்கைத் துணையராய் இணையவிருக்கும் இவர்கள்தான் இன்றைய கதாநாயகர்கள்.

மேடையில் எல்லோருக்கும் ஒரே மாதியான பிளாஸ்டிக் நாற்காலிகள்தான்.  

வரவேற்புரை, தலைவர் உரை, வாழ்த்துரை, சிறப்புரை என விழா தொடர்ந்தது.

மாலை மணி ஐந்து. ஊரையே மிரள வைக்கும் ராகுவின் ஞாயிறு நேரமிது! கோழைகள் வேண்டுமானால் இந்த ராகுவுக்கு அஞ்சி நடுங்கலாம். ஆனால் இங்கே செஞ்சூரியன்கள் சிம்மாசனம் ஏறியதால் சிம்மாசனக் கால்களில் கிரகச் சக்கரம் சிக்கி சுக்கு நூறாய் நொறுங்கியதால் விட்டால் போதும் என தலை தெறிக்க ஓட்டம் பிடித்தான் ராகு.

மணமக்கள் மாலையை எடுத்து ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டு, “இத்தருணம் முதல் இனி நாங்கள் வாழ்க்கை இணையர்கள்!” என உறுதி ஏற்க மீண்டும் ஒரு முறை கரவொலி.  “வாழ்க மணமக்கள்”! எனும் வாழ்த்தொலி விண்ணை முட்ட வாழ்க்கை இணை ஏற்பு இனிதாய் நிறைவேறியது.

உள்ளப் பொருத்தம் இங்கே ஐய்க்கியமாதனால் ஜாதகப் பொருத்தம் சாக்கடையில் வீசப்பட்டது., முகூர்த்த நாளையும் முகூர்த்த நேரத்தையும் பிடித்துக் கொண்டு இவர்கள் அடுத்தவர்களை அலைகழிக்கவில்லை. ‘ஐய்யோ ஒரே நாளில் இத்தனை முகூர்த்தமா? எதற்குச் செல்வது? எவ்வளவு மொய் அழுவது?’ என இங்கே யாரும் அங்கலாய்க்கவில்லை. மாலை நேர வரவேற்பா, காலை நேர முகூர்த்தமா! எதற்குச் செல்வது என்கிற பதட்டம் இல்லை. அறக்க பறக்க ஓடி திரும்ப வேண்டிய அவசரமில்லை.

கால்கடுக்க நின்று போட்டோ ஷோவுக்கு போஸ் கொடுத்து வருகையைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை.

அரைமணி நேர கலைநிகழ்ச்சிக்குப் பிறகு இனிதாய் விழா முடிந்தது. வாங்கிய கடனுக்கும், வாங்கப் போகும் கடனுக்கும் கவர் தேடும் காலமிது. மனித உறவுகளை பண உறவால் முடிச்சுப்போடும் அவலம் இங்கே அரங்கேறவில்லை. உறவுகளும் தோழமைகளும் இங்கே ஒருங்கே சங்கமித்திருந்ததால் மொய் எழுதும் வேலையுமில்லை. அறிவுப் பசிக்கு நூல்கள் மட்டுமே பரிமாறப்பட்டன.

புளுகு மூட்டையை சுமந்து கொண்டு காசு யாசிக்கும் புரோகிதனுக்கு இங்கே வேலையில்லை. கெட்டி மேளமில்லை. பெண்ணைக் கட்டிப்போடும் தாலிக் கயறும் இல்லை. தலை குனிய மெட்டியுமில்லை. நகையில்லை. நட்டில்லை. தட்சணையும் சீரும் இல்லை. இரு உள்ளங்கள் இணைவதற்கு இவை ஏதும் தேவையில்லை என பொட்டில் அடித்தாற்போல பதியவைத்த நிகழ்வு இது.

சாவகாசமாய் காலையில் புறப்பட்டுச் சென்று, பிற்பகல் விழாவில் பங்கெடுத்துக் கொண்டு  அதே சாவகாசத்தோடு ஊர் திரும்ப உதவிய விழா இது.

கதிரவனின் செங்கதிர் மணமக்களைத் தழுவி மேற்கு நோக்கி மறைய முப்பதாண்டுகளுக்கு முன் நடந்த எம் இணை ஏற்பின் நினைவுகளும் இவ்விழாவில் சங்கமிக்க எம் இல்லம் நோக்கி மெல்லிருளில் மறைந்தோம்!

தொடர்புடைய பதிவுகள்:

Monday, February 1, 2016

பசிக்குதான் உணவே தவிர பகட்டுக்கு அல்ல!

31.01.2016 ஞாயிறு அன்று நன்பகல் நகரப் பேருந்துக்காக நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள ஒரு கிராமப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அருகாமை நகரிலிருந்து 12.45 மணிக்கு வரவேண்டிய நகரப் பேருந்து உரிய நேரத்தில் வரவில்லை. நான் செல்லுகின்ற அதே ஊருக்கு வரவேண்டிய நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சென்று விட்டீர்களா? என்றார்.

நான் எந்தப் பேருந்துக்காக காத்திருந்தேனோ அந்தப் பேருந்து -  நிலையத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்ததாகவும் தற்போது அவர் அந்தப் பேருந்தில் உட்கார்ந்திருப்பதாகவும் பேருந்து சற்று நேரத்தில் புறப்பட்டுவிடும் என்றும் கூறினார்.

ஒரு பதினைந்து நிமிடத்தில் பேருந்து வந்தது. பேருந்தில் ஏறி எட்டு ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு பயணித்தேன். செல்ல வேண்டிய இடம் 14 கி.மீட்டர் தூரம்தான் என்றாலும் அரைமணி நெரம் ஆகிவிட்டது. தமிழகத்தின் தொலைதூர கிராமங்களுக்கு – அதாவது குக்கிராமங்களுக்கு – தமிழக போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணிப்பவர்களுக்குத் தெரியும் ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று!

சமீபத்திய மழை தமிழகத்தை புரட்டிப் போட்டிருந்தாலும் நான் பயணித்த சாலையையொட்டி இருந்த பகுதிகளில் நெற்பயிர்கள் அரிதாக இருந்ததைக் கண்டு இப்பகுதியில் இயல்பைவிட குறைவான மழைதான் பெய்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன். ஆனாலும் மாந்தோப்புகள் பூக்கத்  தொடங்கியிருந்தன. தென்னைகள் புத்துயிர் பெற்றிருந்தன. இவைதான் இப்பகுதியில் முக்கிய விவசாயம் என்பது புரிந்தது. முல்லைக்குத் தேர் கொடுத்த மண் என்பதால் இங்கு மல்லிக்குக் குறைச்சல் இல்லை. சில இடங்களில் மங்கையரை மகிழ்வித்த மல்லிகைக் கட்டைகள் பூவிழந்து அடுப்படிக்குத் தயாராகிக் கொண்டிருந்தன.

பொதுவாக கிராமச் சாலைகளின் இருமருங்கிலும் கிராமத்திற்குள் நுழையும் இடங்களில் நரகல் அப்பியிருக்கும். ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லை. மாறாக மிளகாய்ச் செடி நடுவதற்கு செப்பனிடப்பட்ட புழுதிக் கொல்லையைப் போல சுத்தமாய் காட்சியளித்தன சாலை ஓரங்கள்.  

நாங்கள் இறங்க வேண்டிய கிராமம் வந்தது. பேருந்தில் இருந்து இறங்கியபோது ஒரு சிலரை நிச்சயம் சந்திப்போம் என கருதி வந்தத் தலைகளைக் கண்டதில் அகமகிழ்ச்சி. நாங்கள் செல்ல வேண்டிய இடம் இன்னும் ஒரு கி.மீ தூரம் என்பதால் குறுக்குச் சாலையில் பாதங்களில் அம்மண்ணின் பொடி படிய நடந்தோம்.

மண்சாலை முடிந்து மீண்டும் தார்ச்சாலை. அதில் ஒரு அரை கி.மீ தூரம் நடந்தோம். அழுக்குச் சட்டைக்கு பழகிப்போன காளை ஒன்று என்முடன் வந்த உஜாலாவாய் வந்தவரை முட்ட முயன்ற போது காளைக்குச் சொந்தக்காரர் அதன் தாம்புக் கயிரை கெட்டியாய் இழுத்துப் பிடித்ததால் அவர் தப்பித்தார்.

இன்னும் குளிர் காலம் முடியவில்லை என்றாலும் உச்சி வெயில் உரைக்கத் தொடங்கியது. நாங்கள் செல்லும் இடம் குறித்த ஏக்கம் எம்மை ஆக்கிரமித்திருந்ததால் உச்சி வெயில்கூட உரைந்து போனது. கதிரவனின் உரைபனி எம் நெஞ்சை ஈரமாக்கியதால் களைப்பும் அலுப்பும் எம்மை அண்டவில்லை.

கண் எட்டும் தூரத்தில் ஒரு பேருந்தும் ஒரு சிற்றுந்தும் தொலைதூரம் பயணித்த களைப்பில் சாலையின் ஓரம் ஓய்வை நாடியிருந்தன. மாலையில் ஒளிக்கதிர்களை வீசுவதற்காக குழல்விளக்குகள் சாலைஓரம் நின்று கொண்டு கதிரவனின் ஒளிகீற்றுகளை உள்வாங்கிக் கொண்டிருந்தன.

கதிரவனின் ஒளிக்கற்றைகள் கண்களை கூசச் செய்தாலும் வண்ணத் தோரணங்கள் சாலையின் ஓரமாய் ஒதுங்கி நின்று லேசான காற்றில் அசைந்தாடி கூசும் கண்களுக்கு நாங்கள் செல்ல வேண்டிய திசையைக் காட்டின.

தார்ச்சாலையிலிருந்து வலதுபக்கமாக வண்ணத் தோரணங்கள் காட்டிய வழியில் மெல்ல நடந்த போது அங்கே வண்ணமயமாய் அமைக்கப்பட்டிருந்த சாமியானா நாங்கள் வந்து சேர வேண்டிய இடத்தை உறுதி செய்தது.

மேடையை ஒட்டி அமைந்திருந்த சாமியானா பந்தலின் நிழலில் சிலர் உட்கார்ந்திருந்தனர். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கடையை சிலர் மொய்த்துக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தனர். புழுதியைப் புரட்டிப் போடும் இடத்தில் புத்தகங்களைப் புரட்டியது ஓர் அரிய நிகழ்வுதானே!

என்னதான் உள்ளம் மகிழ்ந்திருந்தாலும் உணவு நேரம் என்றால் உடல் வாடித்தானே போகிறது. மணி பிற்பகல் இரண்டை நெருங்கிவிட்டதால் நேராகப் பந்திக்குச் சென்றோம். மற்றொரு சாமியானா பந்தலுக்கீழே வாடகைக்கு எடுத்துவரப்பட்ட நாற்காலி – மடிப்பு மேசை என எளிய திறந்தவெளி டைனிங் எம்மை ஈர்த்தது. பந்தியில் இலை விரித்தோம். கொஞ்சம் கேசரி, ஒரு போண்டா, தேவையான அளவு பிரிஞ்சி சோறு, அதற்கு பொருத்தமாக வெங்காய பச்சடியும் சாம்பாரும் என பகல் விருந்து எளிமையாய், அதே நேரத்தில் திருப்தியாய் முடிந்தது. ஒவ்வோரு இலையிலும் ஒரு பருக்கைகூட வீணாகவில்லை. பசிக்குதான் உணவே தவிர பகட்டுக்கு அல்ல என்பதை உணரவைத்த விருந்து.


தொடரும்….

Sunday, January 10, 2016

ஜல்லிக்கட்டு: காளையும் கடிகாரமும்!

ஜல்லிக்கட்டு தடை நீக்கம். இங்கே தமிழர்களுக்குக் கொண்டாட்டம். அங்கே எச்.எம்.டி கடிகாரத் தொழிற்சாலைக்கு மூடுவிழா! தொழிலாளர்கள் திண்டாட்டம்.  (Govt. approves closure of HMT Watches - The Hindu)

இங்கே தமிழனின் ‘பாரம்பிரியம்’ மீட்கப்பட்டது. அங்கே இந்தியாவின் “பெருமிதம்” புதைக்கப்பட்டது.  


கடிகாரத்தின் குரல்வலை நெறிக்கப்பட்ட பிறகு இனி காளைகள் மட்டும் ஓடி என்ன பயன்? 

இன்று கடிகாரத்தின் குரல்வலை…..

நாளை துங்கபத்ரா ஸ்டீலுக்கு சம்மட்டியும், இந்துஸ்தான் கேபில்சுக்கு தூக்கும் தயாராக இருக்கின்றன.  இவை எல்லாம் உனது கோவில்கள். 

அடித்து நொறுக்கப்படவிருக்கும் கோவில்களின் பட்டியல் தயாராகி விட்டன. 

கடப்பாரை கோடறிகளோடு அடித்து நொறுக்குவதற்கு காவிப்படை தயாராகி விட்டது. இந்தக் கோவில்களில் நீ இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் கோவில் பிரசாதம் மட்டும் உன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதை நீ மறுக்க முடியாது. 

அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தாய். நட்பாய் இருந்தவர்கள் பிணக்காய் மாறியதால் அமைதியை இழந்தோம். இன்று உனது பொதுத்துறை கோவில்கள் ஒவ்வொன்றாக நொறுக்கப்படுவதை நீ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நொறுங்கி விழும் கோவில் இடிபாடுகளில் நீயும் புதைந்து போவாய். 

ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டுவதைவிட உனது புல்லுக்கட்டை உருவும் காக்கிகளுக்கு எதிராய் மல்லுக்கட்டு; உனது வீரம் போற்றப்படும்; வரலாறு நெடுக!